சோவியத் எழுத்தாளர் வாசிலி குரோஸ்மானின் இறுதி படைப்பு, ஒரு ஆர்மேனிய வரைபடம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ராபேர்ட் மற்றும் எலிசபெத் சாண்ட்லரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆர்மேனிய வரைபடம், நியூ யோர்க் புத்தக விமர்சனம், 133 பக்கங்கள்.

சோவியத் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாசிலி குரோஸ்மான் (1905-1964), ஸ்ராலின்கிராட் (1952) மற்றும் வாழ்வும் விதியும் (1960) ஆகிய இரண்டு பாரிய நாவல்களுக்காக எல்லாவற்றிற்கும் மேலாக அறியப்படுகிறார். அவர் ஒரு சிறந்த போர் பத்திரிகையாளராக இருந்தார். கிழக்கு ஐரோப்பிய யூதர்களின் நாஜி இனப்படுகொலையை ஆவணப்படுத்தியதுடன், பாசிசத்தை தோற்கடிப்பதில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்த செம்படையின் அனைத்து முக்கிய போர்களையும் ஆவணப்படுத்தினார்.

அவரது ஸ்டாலின்கிராட் இன் சமீபத்திய மொழிபெயர்ப்பானது, முதன்முதலில் குரோஸ்மானின் மற்றொரு படைப்பை நினைவு கூர்ந்தது. அது 2013 ல் மட்டுமே ஆங்கிலம் பேசும் பார்வையாளர்களுக்கு கிடைத்தது. ஆர்மீனியவரைபடம், 1962 ஆம் ஆண்டிலிருந்து வந்த முந்தைய போர் நாவல்களை விட மிகவும் வித்தியாசமான புத்தகம். தலைப்பு குறிப்பிடுவது போல, 1961 இல் குரோஸ்மான் சிறிய சோவியத் குடியரசிற்கு பயணம் செய்து பற்றிய இந்த சிறிய தொகுதி, ஒரு முறைசாரா மற்றும் சில நேரங்களில் நகைச்சுவையான மற்றும் கிட்டத்தட்ட இலகுவான விபரணங்களைக் கொண்டுள்ளது. அங்கு அவர் ஒரு நீண்ட ஆர்மீனிய போர் நாவலை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். வாசகரின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும் பல விஷயங்கள் இங்கே உள்ளன.

ஒரு ஆர்மேனிய வரைபடம்

ஆனால் இந்த புத்தகமும் அதன் மெல்லிய வடிவத்தில், குராஸ்மானின் முந்தைய படைப்புகளைப் போலவே ஆழமாக நகர்கிறது. 12 சுருக்கமான அத்தியாயங்களில், ஆர்மீனிய வாழ்க்கையை பாரிய ஈர்ப்புடன் அம்சங்களை விவரிக்கும் அதே வேளையில், ரஷ்யப் புரட்சி, நாஜி காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக சோவியத் மக்களின் முன்னோடியில்லாத போராட்டம் மற்றும் ஸ்ராலினிச பயங்கரம் மற்றும் சர்வாதிகாரத்தின் கசப்பான அனுபவங்களுடன் ஆழமாக பிணைக்கப்பட்ட உள்பார்வைகளை ஆசிரியர் கலைத்துவத்துடனும் மற்றும் இயல்பாகவும் பின்னிப் பிணைக்கிறார்.

ஆர்மீனியாவின் இந்த நினைவுபடுத்தலுக்கும் வாழ்வும் விதிக்கும் ஒரு தொடர்பு உள்ளது. மொழிபெயர்ப்பாளர் ராபேர்ட் சாண்ட்லர் தனது அறிமுகத்தில் விளக்குவது போல், சோவியத் அதிகாரிகள் அவரது ஸ்ராலின்கிராட் இற்கானதனது மிகப்பெரிய தொடர்ச்சியை 1960 இல் வெளியிடுவதற்கு சமர்ப்பித்தபோது அதை அச்சிட அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதை விட, கையெழுத்து பறிமுதல் செய்யப்பட்டதுடன் மற்றும் பதிவெடுக்கும் தாள் மற்றும் தட்டச்சு நாடாக்களை அகற்றும் அளவுக்கு ஆட்சி சென்றது. குரோஸ்மானால் 'கைது' என்று அழைக்கப்பட்ட தனது பல வருட போராட்டத்திற்கு அர்ப்பணித்த வேலை தடுக்கப்பட்டதால் நொருங்கிப்போனார். எழுத்தாளரின் மரணத்திற்குப் பின்னர், 1980 இல் சுவிட்சர்லாந்தில் அதன் வெளியீடு வரை வாழ்வும் விதியும் தோன்றவில்லை. ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு 1985 இல் வெளிவந்தது.

1961 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஒருவேளை அவரது நாவலின் தணிக்கையின் தாக்கத்தை மென்மையாக்கும் முயற்சியாகவும், மற்றொரு நோக்கத்திற்காக 'அவரை வாங்கவும்', இலக்கிய அதிகாரிகள் குரோஸ்மானை ஆர்மீனிய பயணத்தை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். அவருக்கு ஆர்மீனிய மொழி தெரியாது என்றாலும், அவர் ஒரு நீண்ட நாவலின் நகல் திருத்தும்படி (அந்த தேரத்தில் மொழிபெயர்ப்பு என்றழைக்கப்பட்டது) கேட்கப்பட்டார்.

குரோஸ்மான், புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் அதன் அசல் மொழிபெயர்ப்பாளர் இருவரையும் கலந்தாலோசிப்பதற்காக, ஆர்மீனியாவில் இந்த மறுமொழிபெயர்ப்புக்கான கடினமான வேலைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கு அவருக்கு சில மாதங்கள் தேவையாக இருந்தது.

1962 ஆம் ஆண்டின் முதல் பாதியில், அவரது மொழிபெயர்ப்பு பணிகள் முடிந்த பின்னர், குரோஸ்மான் பயணத்தின் நினைவுகளை எழுதி முடித்தார். மீண்டும் அவர் உத்தியோகபூர்வ அழுத்தத்தையும் தணிக்கையையும் எதிர்கொண்டார். ஸ்ராலினின் பங்கைக் கையாளும் ஒரு அத்தியாயத்தால் இலக்கிய அதிகாரிகள் குறிப்பாக கவலைப்பட்டனர். குரோஸ்மான், இந்த நேரத்தில் பல வருட தொல்லை மற்றும் அதிகாரத்துவத்துடன் சிக்கல்களால் கோபமடைந்து புத்தக வெளியீட்டை அனுமதிக்க மறுத்துவிட்டார். எழுத்தாளர் இறந்த சுமார் எட்டு மாதங்களுக்குப் பின்னர், 1965 இல் ஆர்மேனிய வரைபடம் முழு அத்தியாயங்களும் தவிர்க்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தில் வெளிவந்தது.

1960களின் முற்பகுதியில் இந்த காலம் கட்டுப்பாடுகள் தளர்வுறும்காலப் பகுதியின் உச்சகட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஸ்ராலினிச தலைவர் நிகிதா குருஷ்சேவ், பிப்ரவரி 1956 இல் ஸ்ராலினின் சில கொடூரமான குற்றங்களை அம்பலப்படுத்தி 'இரகசிய உரையை' நிகழ்த்தினார். அரசியல் கைதிகள் கடும் உழைப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர், தணிக்கை ஓரளவு தளர்த்தப்பட்டது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஸ்ராலினிச பயங்கரத்திற்கு விளக்கத்தை நாடினர். பலர் 'மீண்டும் லெனினுக்கு' என்ற முழக்கத்தை எழுப்பினர்.

குரோஸ்மானின் சிறிய புத்தகம் இந்த காலத்தின் உணர்வை பிரதிபலிக்கிறது. அப்போதும் கூட, ஒட்டுண்ணி ஸ்ராலினிச அதிகாரத்துவம் குரோஸ்மானின் சொந்த அணுகுமுறையால் வெளிப்படுத்தப்பட்டபடி, என்ன சொல்லலாம் அல்லது எழுதலாம் என்பதற்கு கடுமையான வரம்புகளை அமுல்படுத்தியது.

காணாமல் போன பத்திகள் மற்றும் அத்தியாயங்கள் மீட்டெடுக்கப்பட்ட ஒரு ஆர்மீனிய வரைபட புத்தகத்தின் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு சிறிய இரத்தினமாகும். குரோஸ்மான் தனது அனுபவங்களைப் பற்றிய விளக்கங்கள் சுருக்கமாக இருப்பதால் அவற்றின் செயல்திறனை இழக்கவில்லை. அவர் ஆர்மீனிய கிராமங்கள், கடுமையான மலைகள், தூரகிழக்கு துருக்கியில் உள்ள அராரத் மலையின் காட்சி மற்றும் மக்களின் மத மற்றும் பழக்கவழக்கங்களை வேறுவிதமாக சித்தரிக்கிறார். அதிலிருக்கும் ஒரு சில எடுத்துக்காட்டுகளால் குரோஸ்மானின் உரைநடையின் அழகு மற்றும் புலனுணர்வை ஈடுசெய்ய முடியாது.

அவர் எழுதுகிறார், 'யெரெவன் [தலைநகரம்] மற்றும் மலைகளிலும் சமவெளிகளிலும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில், நான் எல்லா வகையான மக்களையும் சந்தித்தேன். நான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டிடக்காரர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், கட்சி ஆர்வலர்கள் மற்றும் பழைய புரட்சியாளர்களை சந்தித்தேன். ... நான் உழவர்களையும், வைன் உற்பத்தியாளர்களையும், மேய்ப்பார்களையும் பார்த்தேன்; நான் கட்டிட தொழிலாளிகளைப் பார்த்தேன்; கொலைகாரர்கள், நாகரீகமான இளம் 'நவீனமானவர்கள்,' விளையாட்டு வீரர்கள், தீவிர இடதுசாரிகள் மற்றும் தந்திரமான சந்தர்ப்பவாதிகள் ஆகியவற்றை நான் பார்த்தேன்; நான் உதவியற்ற முட்டாள்கள், இராணுவ தளபதிகள் மற்றும் செவான் ஏரி மீனவர்களைப் பார்த்தேன்”.

குரோஸ்மான் ஆர்மீனிய மக்களுக்கு மிகவும் நெருக்கமானவராக உணர்கிறார். அவர் கூர்மையாகவும் உறுதியாகவும் கவனிக்கிறார், தூரத்திலிருந்து பார்க்க உள்ளடக்கம் இல்லை. அவரது உணர்வுகள் மேலெழுந்தவாரியானதாகவோ அமைதியானதாகவோ இல்லை. மனிதகுலத்தின் திறமை பற்றிய நம்பிக்கையுடன் இணைந்து அவர்களின் துன்பத்திற்கான உணர்வோடு அவர் மக்களுடன் நெருக்கமாக இருக்கிறார்.

உதாரணமாக, சார்கிசியன் என்ற பெயரில் ஒரு இனிமையான, ஆஸ்துமா முதியவரை சந்திப்பது பற்றி அவர் எழுதுகிறார். அவர் இளமையாக இருந்தபோது, அவர் கட்சியில் ஒரு முக்கிய நபராக இருந்தார்; அவர் புலம்பெயர்ந்த ஆண்டுகளில் லெனினை அறிந்திருந்தார். பின்னர் அவர் துருக்கிய உளவாளி என்று கண்டனம் செய்யப்பட்டார், கிட்டத்தட்ட இறக்கும்வரை அடிக்கப்பட்டு சைபீரியாவில் உள்ள ஒரு முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் 19 ஆண்டுகள் இருந்தார்.

'பின்னர் அவர் வீடு திரும்பினார். கசப்புணர்வு இல்லாமல், ஆனால் மக்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று உறுதியாக நம்பினார். ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே, சாதாரண ரஷ்ய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் உரையாடல் மூலம் தனது இதயத்தை வளப்படுத்தியதிலும், ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் அறிவுஜீவிகளுடன் உரையாடல்கள் மூலம் அவரது மனதை வளப்படுத்தியதில் மகிழ்ச்சியடைந்திருந்தார்”.

குரோஸ்மான் 20 ஆம் நூற்றாண்டில் தேசியவாதத்தின் பிரச்சினை குறித்து இந்தப் பக்கங்களில் அடிக்கடி எழுதுகிறார். அக்டோபர் புரட்சியின் ஆழமான தாக்கத்தை அவரது உரைநடையில் காணலாம் மற்றும் உணரலாம். குறுகிய தேசியவாதம் குறித்த அவரது கருத்துக்கள் கடந்த நூற்றாண்டைப் போலவே இன்றும் பொருத்தமானது.

'இப்போது, ஹிட்லருக்குப் பிறகு, தேசியவாதம் —தேசிய அவமதிப்பு மற்றும் தேசிய ஆணவம் பற்றிய கேள்வியைப் பார்ப்பது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது' என்று அவர் எழுதுகிறார்.

'எங்கள் ரஷ்ய புத்திஜீவிகள், எங்கள் கிராமங்களில் உள்ள கனிவான, மகிழ்ச்சியான, உணரும் வயதான பெண்கள், எங்கள் வயதான தொழிலாளர்கள், எங்கள் இளைஞர்கள், எங்கள் சிறுமிகள் வட மற்றும் தென் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பிரிட்டன் மற்றும் காங்கோ மக்களுடன் சாதாரண மனித உறவில் இணையும் பாத்திரத்தில் சுதந்திரமாக நுழைவதை கற்பனை செய்து பாருங்கள்.

'எத்தனை வகையான பழக்கவழக்கங்கள், நாகரீகம், உணவு வகைகள் மற்றும் உழைப்பு ஆகியவை அப்போது வெளிப்படும்! … பிச்சை, குருட்டுத்தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற குறுகிய தேசியவாதம் மற்றும் அரசுகளுக்கிடையேயான விரோதம் ஆகியவை தெளிவாக எடுத்துக்காட்டப்படும்.

அவர் தொடர்கிறார், 'ஒரு பெரிய மற்றும் வலிமையான தேசம், பெரிய படைகள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன், அதன் மேன்மையை அறிவித்து போர் மற்றும் அடிமைத்தனத்தால் மற்ற நாடுகளை அச்சுறுத்துகிறது. மறுபுறம், சிறிய ஒடுக்கப்பட்ட நாடுகளின் தேசியவாத வெளிப்பாடு, அவர்களின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்திலிருந்து எழுகிறது. இன்னும், அவர்களின் வேறுபாடுகள் எவ்வாறு இருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களின் தேசியவாதமும் ஒடுக்கப்பட்டவர்களின் தேசியவாதமும் மிகவும் பொதுவான தன்மையை கொண்டுள்ளன.

ஸ்ராலினிச ஆட்சியின் மோசமான வக்கிரங்கள் இருந்தபோதிலும், சோசலிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பொய்யாகக் கூறி, மார்க்சிசத்தை அதன் எதிர்மாறானதாகவும், தேசியவாதம் மற்றும் அதிகாரத்துவத்தினை பாதுகாப்பாகவும் மாற்றியமைத்த போதிலும், குரோஸ்மான் பல்வேறு விடயங்களை அணுகும் விதத்தில் மார்க்சிசத்தின் செல்வாக்கு தனது வெளிப்பாட்டைக் காண்கிறது.

உதாரணமாக, உலகப் புகழ்பெற்ற செவன் ஏரிக்குச் சென்றபோது, அவர் புறநிலைக்கும் அகநிலைக்கும் இடையிலான உறவைப் பற்றி ஆழமான புரிதலுடன் எழுதுகிறார். அவர் 'அமைதியான சூரிய அஸ்தமனத்தால் எரியும் ஒரு சிறிய மேகம்' மற்றும் 'கோடைகால மழை அல்லது ஒரு இளம் நிலவு ஏப்ரல் மாதத்தில் ஒரு காட்டு நீரோடையின் அம்மை தளும்புபோன்ற மேற்பரப்பில் பிரதிபலிக்கிறது.' அவர் தொடர்கிறார்: “ஒரு குறிப்பிட்ட காட்சி ஒரு நபருக்குள் நுழைந்து அவர்களின் ஆத்மாவின் ஒரு பகுதியாக மாற, காட்சி மட்டும் அழகாக இருப்பது போதாது. அந்த நபருக்குள்ளும் ஏதாவது தெளிவான மற்றும் அழகானது இருக்க வேண்டும். இது ஒரு பகிரங்ப்பட்டுத்தப்பட்ட காதல் தருணத்தையும், பொதுவான, ஒரு மனிதனுக்கும் வெளி உலகத்துக்கும் இடையிலான உண்மையான சந்திப்பு போன்றது.”

மார்க்சிசத்தின் இதேபோன்ற புரிதல் கலை மீதான பின்வரும் விலகலால் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஸ்ராலினிச ஆட்சியின் ஒப்புதலளிக்கப்பட்ட ஒரே பணியான 'சோசலிச யதார்த்தத்தின்' அசுரத்தனத்தை காட்டுமிராண்டித்தனமாக சித்தரிக்கிறது: '... வியக்கத்தக்க வகையில், அதிகாரத்துவத்தால் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து இணக்கமான உலகங்களையும் விட மிகவும் விசித்திரமான படத்தில் மிக சுருக்கமான அகநிலைவாத, கோடுகள், புள்ளிகள் மற்றும் புள்ளிகளின் மிகச்சிறந்த கலவையில் ஒரு உண்மையான யதார்த்தம் உள்ளது. ஒரு விசித்திரமான, வேடிக்கையான, பைத்தியக்காரத்தனமான படம், எல்லாவற்றிற்கும் மேலாக, குறைந்தபட்சம் ஒரு உயிருள்ள மனித ஆன்மாவின் உண்மையான வெளிப்பாடாக உள்ளது. ஆனால் வெளிப்படையான இயற்கையான விவரங்கள் நிறைந்த உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இந்த உலகில், கோதுமை மற்றும் ஓக் காடுகளின் அடர்த்தியான உலகில் நாம் உயிருள்ள ஆன்மாவை உணரமுடியுமா? யாரும் இல்லை — ஒரு அரசாங்க அலுவலகத்திலும் ஆன்மா இல்லை”.

இறுதி அத்தியாயத்தில், குரோஸ்மான் தனக்கு அழைப்புவிடப்பட்ட ஒரு ஆர்மீனிய திருமணத்தின் விரிவான விவரத்தை வழங்குகின்றார். மணிநேர கொண்டாட்டத்திற்கு பின்னர், ஒரு கூட்டுப்பண்ணையின் தச்சுத் தொழிலாளி குரோஸ்மானை நோக்கி நேரடியாக உரையாற்றுகிறார். அவரது வார்த்தைகள் ரஷ்ய யூத விருந்தினருக்காக மொழிபெயர்க்கப்பட்டன.

'தச்சுத் தொழிலாளி யூதர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். போரின் போது அவர் சிறைபிடிக்கப்பட்டபோது யூதர்கள் அனைவரும் தனித்தனியாக எங்காவது அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டேன் என்று கூறினார். அவருடைய யூதத் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அவுஷ்விட்சின் எரிவாயு அறைகளில் மறைந்த யூதப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அவர் கருணை மற்றும் அன்பைப் பற்றி பேசினார். அவர் போரைப் பற்றிய எனது கட்டுரைகளை ஆர்மீனியர்களின் சித்தரிப்புகளுடன் படித்தாக கூறினார். மேலும் பாரியளவில் பாதிக்கப்படாத ஒரு தேசத்தைச் சேராத இந்த மனிதன் ஆர்மீனியர்களைப் பற்றி எவ்வாறு எழுதமுடிந்தது என்று அவர் நினைத்தாக கூறினார். ஆர்மீனிய விவசாயிகள் உண்மையில் யூத தேசத்தின் மீது இரக்கத்தை உணர்ந்தனர் என்பதை காட்டும்வகையில் நீண்ட, இடி முழக்கம் போன்ற கைதட்டல் உறுதி செய்தது.

யூத-விரோதத்தைப் பற்றி விவாதிக்கையில், குரோஸ்மான் மறைமுகமாக ஆட்சியை யூத-விரோதத்தை சகித்துக்கொள்ளவதையும், மற்றும் ஊக்குவிப்பதையும் கூட உறுதியாகக் கண்டிக்கின்றார்: “நாஜி ஆக்கிரமிப்பின் போது யூதர்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களை பற்றி ரஷ்ய அறிவுஜீவிகள் மற்றும் சாதாரண மக்கள் இரக்கத்துடன் பேசுவதை நான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்டிருக்கிறேன், என்றார்.

'ஆனால் நான் கறுப்பு நூற்றுவர்களின் (Black Hundreds) மோசமான மனநிலையையும் சந்தித்தேன். இந்த வெறுப்பை நான் சுயமாகவே உணர்ந்தேன். பேருந்துகளில் குடிபோதையிலிருப்பவர்களில் இருந்து, உணவகங்களில் சாப்பிடும் அல்லது வரிசையில் நிற்பவர்களிடமிருந்து, ஹிட்லரால் தியாகிகளாக்கப்பட்ட தேசத்தைப் பற்றிய கறுப்பு வார்த்தைகளை நான் கேட்டிருக்கிறேன். எங்கள் சோவியத் விரிவுரையாளர்கள், பிரச்சாரகர்கள் மற்றும் கருத்தியலை வடிவமைப்பவர்கள் கொரோலென்கோ, கோர்க்கி, லெனினை போல யூத-விரோதத்திற்கு எதிராக பேசவில்லை என்பது எனக்கு எப்போதுமே வேதனை அளிக்கிறது.

ஜேர்மனியின் ஸ்வேறின் நகரில் செம்படைகளுடன் குரோஸ்மான் (Wikipedia)

சோவியத் புத்திஜீவிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சிறந்த பிரிவுகளின் மத்தியிலிருந்த அக்டோபர் புரட்சியின் நீடித்த தாக்கத்தை இந்த சிறிய தொகுதியின் வரிகளிலும் காணலாம். பங்கேற்பாளர்களின் சொந்த புரிதல் இல்லாமலும் மற்றும் ஸ்ராலினிச கொடூரங்கள் இருந்தபோதிலும் இது நடந்தது. புரட்சியின் சீரழிவின் முன்னால் குரோஸ்மான் சற்றே ஊக்கமிழந்து நிலைகுழம்பியிருந்த போதிலும் அவர் மனித முன்னேற்றத்தின் மீதான ஆழமான நம்பிக்கையை கைவிடவில்லை. இது, அவர் கண்ட அனைத்தினதும் மத்தியிலும், ஒரு மகத்தான புறநிலை முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த புத்தகம் எழுதி ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பின்னரும், சோசலிசத்திற்கான பாதை முற்றிலும் உயிருடன் உள்ளது.

இந்த விஷேடமான விஜயம் அவரை ஆழமாகப் பாதித்திருந்தாலும், குரோஸ்மானின் இறுதி வரிகள் அவர் ஆர்மீனியாவைப் பற்றி மட்டும் எழுதவில்லை என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: மலைகள் வெறும் எலும்புக்கூடுகளாகக் குறைக்கப்பட்டாலும், மனிதகுலம் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். ... அநேகமாக நான் செயல் நயமற்ற மற்றும் தவறானவற்றை கூறியிருக்கலாம். ஆனால் அவை செயல் நயமற்றவையாகவும் மற்றும் தவறானவையாக இருந்தாலும், நான் அன்போடு கூறியிருந்தேன்.

“Barev dzez — ஆர்மேனியர்களுக்கும் ஆர்மேனியரல்லாதவர்களுக்கும் நல்லதே நடக்கட்டும்”

Loading