வாசிலி குரோஸ்மானின் ஸ்ராலின்கிராட் : இரண்டாம் உலகப் போரைப் பற்றிய ஒரு தலைசிறந்த சோவியத் படைப்பு முதன்முறையாக ஆங்கிலத்தில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாசிலி குரோஸ்மானின் ஸ்ராலின்கிராட். ரொபேர்ட் மற்றும் எலிசபெத் ஷன்டரால் மொழிபெயர்க்கப்பட்டது, New York Review of Books, 2019

2019 ஆம் ஆண்டில், வாசிலி குரோஸ்மானின் நாவலான ஸ்ராலின்கிராட் (ரஷ்ய மொழியில்: Za pravoe delo அல்லது For a Just Cause), 1952 ஆம் ஆண்டில் முதல் வெளியீட்டிற்கு ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் முதல் முறையாக ஒரு முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. குரோஸ்மானின் இந்த நூல், நன்கு அறியப்பட்ட நாவலான வாழ்வும் விதியும் (Life and Fate - 1959) என்பதன் முற்கதையாகும். எழுத்தாளர், உண்மையில், இரண்டையும் ஒரு ஒருங்கிணைந்த முழுமையாகக் கருதினார். இந்த தலைசிறந்த படைப்பின் வெளியீடு கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலாச்சார நிகழ்வு ஆகும்.

Stalingrad cover

ஏப்ரல் 29, 1942 அன்று பாசிச சர்வாதிகாரிகளான அடோல்ஃப் ஹிட்லருக்கும் பெனிட்டோ முசோலினிக்கும் இடையிலான சந்திப்புடன் இந்த நாவல் தொடங்குகிறது. அதில் அவர்கள் போரின் போக்கு குறித்து விவாதிக்கின்றனர். ஒரு வருடம் முன்னதாக, ஜூன் 22, 1941 அன்று, நாஜிக்கள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்து, மனிதகுல வரலாற்றில் இரத்தக்களரிமிக்க மோதலைத் தொடங்கினர். போரின் முடிவில் 1945 இல், 1.5 மில்லியன் சோவியத் யூதர்கள் உட்பட குறைந்தது 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் இறக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவு மற்றும் 1936-38 பாரிய பயங்கரம் இருந்தபோதிலும், சோவியத் மக்கள் பாசிசப் படையெடுப்பாளர்களுக்கு எதிராக அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாக்க எழுந்தனர்.

ஒரு பகுதியளவுதான் என்றாலும் குறிப்பிடத்தக்க வகையில், புரட்சியைப் பாதுகாக்க லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகள் உருவாக்கிய செம்படையின் ஆரம்ப ஆண்டுகளின் புத்துயிர்ப்பை மீண்டும் பெற்றது. இதே புத்துணர்ச்சிதான் குரோஸ்மானின் நாவலை ஊடுருவிச் செல்கிறது.

ஸ்ராலின்கிராட் இன் சதி முழுமையாக விவரிக்க முடியாத அளவுக்கு சிக்கலானது. பல கதாநாயகர்கள், குறிப்பாக இயற்பியலாளர் விக்டர் ஷ்ட்ரம் மற்றும் ஷபோஷ்னிகோவ் குடும்பத்தினர் பற்றி வாழ்வும் விதியும் வாசகர்கள் நன்கு தெரிந்திருப்பார்கள். குரோஸ்மான் போரின்போது சோவியத் சமுதாயத்தினை பற்றிய பரந்த பார்வையை வழங்குகின்றார். அவர் தொழில்நுட்ப புத்திஜீவிகள், போர் உற்பத்தியில் பணிபுரியும் சைபீரியாவில் சுரங்கத் தொழிலாளர்கள், போரினால் அனாதையான குழந்தைகள், ஜெனரல் ஆண்ட்ரி யெரியோமென்கோ போன்ற வரலாற்று நபர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலின்கிராட்டில் உள்ள சோவியத் பொதுமக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திடமும் விவசாயிகளிடமிருந்தும் திரட்டப்பட்ட மற்றும் படைவீரர்களின் பிரிவுகளை பற்றி சித்தரிக்கிறார்.

நூலின் கடைசிப் பகுதி, தெற்கு ரஷ்யாவில் ஒரு முக்கியமான தொழில்துறை மற்றும் போக்குவரத்து மையமான ஸ்ராலின்கிராட் மீதான நாஜி தாக்குதலின்போது 1942 செப்டம்பர் முதல் இரண்டு வாரங்களில் நகரத்தின் சோவியத் பாதுகாப்பு ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்துகிறது. இந்த 'ரஷ்யாவின் இதயத்தில்' வோல்காவின் மேற்குக் கரையில் அமைந்த ஸ்ராலின்கிராட் போர், (ஆகஸ்ட் 23, 1942 முதல் பிப்ரவரி 2, 1943 வரை) போரின் முடிவை திறம்பட தீர்மானிக்க உதவியதுடன் மற்றும் நாஜிக்களின் மூன்றாம் குடியரசின் தலைவிதியை முடிவிற்குகொண்டுவந்தது. இதனை அந்த நேரத்தில், மாஸ்கோ முதல் பேர்லின், லண்டன் மற்றும் வாஷிங்டன் வரை அனைவரும் புரிந்துகொண்டிருந்தனர்.

1939 ஆம் ஆண்டின் குற்றவியல்தன்மையான ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கை மற்றும் ஸ்ராலினின் பாரிய பயங்கரத்தினால் இராணுவத் தலைமையின் தலை துண்டிக்கப்படுதல் ஆகியவற்றின் காரணமாக, நாஜி படையெடுப்பால் செம்படை ஆச்சரியமடைந்தது. 1942 இலையுதிர் காலம் வரை, மில்லியன் கணக்கான உயிர்களின் இழப்புடன் சோவியத் ரஷ்யாவிற்குள் ஆழமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. எவ்வாறாயினும், எந்தளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் மற்றும் அதிகாரத்துவத்தால் சிதைக்கப்பட்டிருந்தாலும் அந்த ஆண்டு முழுவதும் திட்டமிடப்பட்ட கொள்கைகளாலும் சோவியத் மக்களால் செய்யப்பட்ட மகத்தான தியாகங்களாலும் சோவியத் ஒன்றியத்தால் போர் முயற்சிகளுக்காக அபரிமிதமான பொருளாதார வளங்களை திரட்ட முடிந்தது.

ஸ்ராலின்கிராட் போர்

ஆரம்பத்தில் வேர்மாக்ட் (ஜேர்மன் ஆயுதப்படைகள்) இன் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், செம்படை ஸ்ராலின்கிராட்டை பாதுகாக்க முடிந்ததுடன், இறுதியில் தாக்குதலுக்குச் சென்றது. பிப்ரவரி 1943 ஆரம்பத்தில், ஜெனரல் ஃபிரீட்ரிக் பௌலுஸ் (Friedrich Paulus) இன் 6 ஆவது இராணுவப் படை அழிக்கப்பட்டது, இது போரின்போது நாஜிக்கள் சந்தித்த முதல் பெரிய இராணுவ தோல்வியாகும். 1934 இல் லியோன் ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தபடி, “ரஷ்யப் புரட்சி… அதன் நீரோட்டத்தை போரை நோக்கி செலுத்த நிர்பந்திக்கப்பட்டால், அது ஒரு பயங்கர மற்றும் மாபெரும்சக்தியை கட்டவிழ்த்துவிடும்”.

1942 இல் ஜேர்மன் படைகளின் முன்னேற்றம் குறித்த வரைபடம்

போரின் மேல்நோக்கிய அலை பின்னோக்கி திரும்பியது. சோவியத் ஒன்றியம் மற்றும் நாஜி ஆக்கிரமித்த ஐரோப்பா முழுவதும் மக்களின் மன உறுதியை வியத்தகு முறையில் உயர்த்தியது. இந்தப் போர், சோபி மற்றும் ஹான்ஸ் ஷொல் ஆகியோரின் 'வெள்ளை ரோஜா' குழு அடங்கலாக ஜேர்மனியிலும் நாஜிக்களுக்கான எதிர்ப்பை வலுப்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரிலும், உண்மையில் எல்லாவற்றிலும் மனித வரலாற்றில் மிகப்பெரிய போரின் போதான மிருகத்தனம் இன்னும் புரிந்துகொள்ளப்படாமல் உள்ளது. இருபுறமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் போரில் ஈடுபட்டதுடன், அவர்களில் பெரும்பாலோர் அழிந்தனர். சோவியத் தரப்பில், பொதுவான மதிப்பீடுகள் இராணுவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 479,000 ஆகக் கொண்டுள்ளன. ஆனால் அது இரு மடங்கு அதிகமாக இருக்கலாம். வேர்மாக்ட் 295,000 ஆண்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முழு நகரத்தையும் எரியூட்டிய, நகரத்தின் மீதான பயங்கரமான குண்டுத்தாக்குதல் பற்றிய குரோஸ்மானின் விளக்கங்கள் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூன்று நாட்களுக்குள் குறைந்தது 40,000 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. அவர் 308 ஆவது துப்பாக்கி பிரிவில் இருந்த தனிமைப்படுத்தப்பட்ட சோவியத் துருப்புக்கள் நகரின் சிறுபிரிவுகளை பாதுகாத்து வைத்திருக்க தமக்கு வலுவூட்டல் வரும் வரை, வேர்மாக்ட்டின் ஷெல் தாக்குதல்களை எதிர்கொண்ட பாரிய முயற்சிகளைப் பற்றி விரிவாக விபரிக்கிறார். உண்மையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் தங்கள் சொந்த உயிரை விலைகொடுத்து அவ்வாறு செய்கிறார்கள். நல்ல காரணத்திற்காக இந்த நரக அனுபவங்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் மக்கள் நனவில் ஆழமாக பொறிக்கப்பட்டன.

கொடூரமான வன்முறை காட்சிகளைத் தொடர்ந்து நகைச்சுவையான, கவிதைத்தன்மையான மற்றும் மென்மையான காட்சிகள் உள்ளன. சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்து, தெரிந்தே அவர்களின் மரணங்களை நோக்கிச் சென்ற பலரை பற்றிய அவரின் சித்தரிப்புகள் மிகச்சிறந்தவை. இந்த பாரிய வரலாற்றுக் குழப்பங்கள் மற்றும் அதனுடன் ஏற்படும் பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும் மனித உளவியலின் சிக்கலான தன்மை பற்றி குரோஸ்மான் மிகுந்த ஆழமான உணர்வைக் கொண்டுள்ளார்.

ஒரு காட்சியில், இளம் செம்படையின் செவிலியரான லெனா கினோட்யூக் இன் வாழ்க்கையின் கடைசி தருணங்களில், அவளுக்கு ஒரு அமெரிக்க உதவிப் பொதி வழங்கப்படுகின்றது.

லெனா கட்டியிருப்பதை அகற்றி பொதியை அவிழ்க்கத் தொடங்கினாள். அந்த மடிப்புகள் நிறைந்த காகிதம் உலர்ந்து சரசரத்தது. உள்ளே பலவிதமான பொருட்கள் இருந்தது. சில மிகச் சிறியவை, எதுவும் வெளியே விழாமல் தொலைந்து போவதைத் தடுக்க அவள் குனிந்து இருந்தாள். அதனுள் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வடிவத்துடன் பூவேலை செய்யப்பட்ட ஒரு அழகான கம்பளி ரவிக்கை, தொப்பி உள்ள ஒரு பஞ்சுபோன்ற குளியல் உடை, சிறிய ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட பொருத்தமான சட்டைகளுடன் இரண்டு ஜோடி கால்சட்டை, மூன்று ஜோடி பட்டு காலுறைகள், சில சிறிய சரிகை-பூவேலையுடனான கைக்குட்டைகள்; சரிகைகள் வைக்கப்பட்ட நேர்த்தியான பருத்தியில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வெள்ளை உடை, சில நறுமணமான திரவத்துடனான ஒரு ஜாடி மற்றும் ஒரு பரந்த நாடாவுடன் கட்டப்பட்ட வாசனை திரவியம் ஆகியவை இருந்தன.

லெனா இரண்டு தளபதிகளையும் பார்த்தாள். அணிநயத்தையும் மெல்லுணர்வையும் அவள் வெளிப்படுத்துவதை குழப்பும் எதையும் தடுப்பது போல, அந்த நிலையத்தைச் சுற்றி ஒரு கணம் மௌனம் நிலவியது. அவளுடைய பார்வை ஒரு பெரிய விஷயத்தைச் சொன்னது. அவள் ஒருபோதும் ஒரு தாயாக மாட்டாள் என்று அவளுக்குத் தெரியும் என்பது மட்டுமல்லாமல், அவளுடைய கடுமையான தலைவிதி பற்றி அவள் ஒரு குறிப்பிட்டளவு பெருமை கொள்வதும் தெரிந்தது. இந்த அழகிய பரிசுகளை மறுக்க, அந்த குழியில் தனது சிப்பாயின் காலணிகளுடனும், மோசமாக பொருந்திய சீருடையிலும் அவள் அங்கே நின்றபோது, லெனா கினோட்டியுக் மிகவும் பெண்மைத்தன்மையுடன் நின்றாள். 'இவை அனைத்தும் என்ன பயன்?', 'நான் அதை விரும்பவில்லை' என்று அவள் சொன்னாள். இரண்டு பேரும் கலக்கமடைந்தார்கள். அந்த இளம் பெண்ணின் உணர்வுகளில் ஏதேனும் ஒன்றை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவளுடைய பெருமை மற்றும் அவளுக்கு கிடைத்த துரதிர்ஷ்டவசமான நிலை மற்றும் அவள் தான் இடர்பாடாகவும் அசிங்கமாகவும் காணப்படுகின்றாள் என்ற தவறான நம்பிக்கையும் புரிந்துகொண்டனர்.

சில மணி நேரத்தில், இந்த அனைவரும் இறந்துவிடுவார்கள்.

ஜேர்மன் துருப்புக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் முக்கியமானவை. ஜேர்மனியின் குட்டி முதலாளித்துவத்தைச் சேர்ந்த ஸ்டம்ஃப (Stumpfe), ஒரு தொழில்முறை வேர்மாக்ட் சிப்பாயின் கூர்மையான மற்றும் மோசமான உருவப்படத்தை குரோஸ்மான் கொடுக்கிறார். ஸ்டம்ஃப தனது சொந்த குடும்பத்தை மிகவும் நேசிக்கிறார், ஆனால் சோவியத் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களிலும் கொள்ளையடிப்பதிலும் ஈடுபடுகிறார். தனது கெஸ்டபோ பிரிவின் பிரதிநிதிக்காக ஹிட்லரை விமர்சித்த சக சிப்பாயை அவர் கண்டிப்பதுடன், மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் யூதர்களுக்கான 'மரண தொழிற்சாலைகளில்' ஒன்றில் பணியாற்ற 'பதவி உயர்வு' பெற முற்படுகிறார். இது அவருக்கு சுய செல்வந்தமயமாதலுக்கு அதிக வாய்ப்பை அளிக்கும் என்று நம்புகிறார்.

அக்டோபர் 1942 இல் ஸ்ராலின்கிராட்டின் தொழிற்துறை பிராந்தியத்தில் போர். Photographer/ Georgy Samsonov

இதற்கு மாறாக, ஷிமிட் ஒரு முன்னாள் தொழிற்சங்கவாதி ஆவார். அவர் புரட்சிகர சோசலிச தலைவர் கார்ல் லிப்னெக்டுடன் பணியாற்றியவர். ஸ்டம்ப்பினாலும் மற்றவர்களாலும் அவருக்கு ஏற்பட்ட ஏளனம் மற்றும் அவமானம் குறித்து அலட்சியமாக இருந்தாலும், அவர் போரினாலும் நாஜி ஆட்சியினாலும் வெறுப்படைகிறார். ஆனால் தன்னைப்போல் ஒத்த எண்ணம் கொண்ட வீரர்களுடன் எவ்வாறு இணைவது என்று அவருக்குத் தெரியவில்லை. 1933 இல் ஹிட்லர் பதவிக்கு வந்த பேரழிவிற்கு ஸ்ராலினிஸ்டுகளின் சொந்தப் பொறுப்பை மூடிமறைக்கும் முயற்சியில் ஒட்டுமொத்த ஜேர்மனிய மக்களும் ஹிட்லரை (“கூட்டு குற்றத்தின் கோட்பாடு) விருப்பத்துடன் பின்பற்றினார்கள் என்ற ஸ்ராலினிச பொய்யை குரோஸ்மான் தெளிவாக நிராகரித்தார்.

குரோஸ்மான் தனது கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துவது விவேகமானது மற்றும் சில சமயங்களில் கடுமையான ஆனால் ஒருபோதும் மதிப்பிடமுடியாதது. இவை அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது இரத்தக்களரிப் போரில் மட்டுமல்ல, 1930 களின் ஸ்ராலினிச மாபெரும் பயங்கரத்திலும் அவர்களின் துன்பங்கள் மற்றும் சோவியத் சமூகம் கடந்து வந்த பாரிய அதிர்ச்சிகளுக்கு ஆழமாக உணர்ந்த அனுதாபமாகும். மேலும், இவை அனைத்திற்கும் மத்தியில், மக்கள் வாழ்ந்து, குழந்தைகளை வளர்த்து, ஒரு உன்னதமான உறவுகளை மனிதாபிமானமாக பராமரித்தார்கள் மற்றும் உறவுகளை முறித்துக் கொண்டனர். சில நேரங்களில் ஒரு சிறிய மற்றும் வெறுக்கத்தக்க அல்லது அற்பமாக, ஆனால் பெரும்பாலும் செயல்படுவார்கள் என்பதை எழுத்தாளர் புரிந்துகொண்டார். அவர் ஒருபோதும் தனிநபரை சமுதாயத்திலிருந்தும் வரலாற்று செயல்முறையிலிருந்தும் தனிமைப்படுத்துவதில்லை. மாறாக அந்தக் காலத்தின் தீர்க்கமான சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கும் தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான ஆழமான, ஆனால் சிக்கலான மற்றும் எப்போதும் நேரடியல்லதா, இடைத்தொடர்பைக் காட்டுகிறார்.

கிரிமோவ் மற்றும் அவரது இளம் மற்றும் அழகான முன்னாள் மனைவியான ஷென்யா ஷபோஷ்னிகோவாவின் கதாபாத்திரங்கள், இந்த விஷயத்தில் மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமானவையாக இருக்கலாம். கிரிமோவ் ஒரு உறுதியான ஸ்ராலினிசவாதி, ஆனால் புரட்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர். கம்யூனிச அகிலத்தின் ஒரு முன்னாள் அதிகாரியான இவர், தனது நண்பர்கள் மற்றும் தோழர்கள் பலரை 1936-38 கால களையெடுப்பில் இழந்துவிட்டார். கிரிமோவ் மட்டுமே தப்பிப்பிழைக்கிறார். ஆனாலும் ஸ்ராலின் மீதான அவரது நம்பிக்கை மாறாமல் உள்ளது. ஷென்யா, பயங்கரத்தின்போது அவரை விட்டு வெளியேறுகிறாள், இது அவளுடைய சொந்த விதியை பற்றிய அக்கறையினாலோ அல்லது கணவனின் வீழ்ச்சியடைந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றத்தினாலோ அல்ல, ஆனால் அவள் வெறுமனே மேலும் காதலிக்காததாலாகும்.

ஸ்ராலின்கிராட், வாழ்வும் தலைவிதியும் உடன் குரோஸ்மான் லெவ் டால்ஸ்டாய் (Lev Tolstoy) இன் போரும் சமாதானத்தின் 20 ஆம் நூற்றாண்டின் பதிப்பை உருவாக்க விரும்பினார் என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும், டால்ஸ்டாயை போலல்லாமல், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நெப்போலிய போர்களைப் பற்றிய அவரது நிலைபேறான எடுத்துக்காட்டலில், சோவியத் எழுத்தாளர் பிரபுக்கள் அல்லது அவர்களின் சமகால சமமானவர்கள் அல்லது தளபதிகளை தனது கதாநாயகர்களாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது முதன்மை அக்கறை, அதன் வெவ்வேறு பிரிவினரிலும், எண்ணற்றவகைப்பட்ட மற்றும் குணாதியங்கள் தனித்துவமான தன்மை கொண்ட மக்களின் உடலுடன், அதன் அனைத்து சமூக, அரசியல் மற்றும் உளவியல் முரண்பாடுகளையும் பற்றியதாகும்.

தேசியவாத பிரிவுகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், மனிதகுலத்தின் பாரியளவிலான மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகின்றனர் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக சமூக சமத்துவம் மற்றும் அனைத்து வகையான ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை ஆகிய 1917 அக்டோபர் புரட்சியின் கொள்கைகள், நாஜிகளை எதிர்ப்பதில் சோவியத் மக்களின் வீர முயற்சிகளுக்கு ஊக்கமளித்தன என்பதையும் விளங்கிக்கொண்டார். அவர் தனது படைப்பை, அவர்களின் வீரம் மற்றும் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நினைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ரஷ்ய சோசலிச புத்திஜீவிகளின் மரபுகளில், குரோஸ்மான் கலையை இடைவிடாமல் நேர்மையானதாகவும், மக்களுக்கு பங்களிக்கும் வழிமுறையாகவும் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான பாதையாகவும் மேலும் பரந்தளவில் கருதினார்.

தணிக்கைக்கு எதிரான குரோஸ்மானின் போராட்டம்

அவர் 1943 ஆம் ஆண்டில், போரின் நடுவே நாவலை எழுதத் தொடங்கி 1949 இல் அதை நிறைவு செய்தார். போரைப் பற்றிய அவரது ஆழமான விளக்கம் அவரது சொந்த அனுபவங்களில் வேரூன்றியது. உத்தியோகபூர்வ இராணுவ செய்தித்தாளான கிராஸ்னயா ஸ்வெஸ்டா (Red Star) பத்திரிகையாளராக, மோதலின் மிக முக்கியமான போர்களில் பலவற்றில் அவர் செம்படையுடன் சென்றார். செப்டம்பர் 1942 முதல் ஜனவரி 1943 வரை ஸ்ராலின்கிராட் போரையும், உக்ரேனை சோவியத் விடுதலை செய்ததையும், போலந்து மற்றும் ஜேர்மனியின் சில பகுதிகளையும் அவர் கண்டார். பல ஆண்டுகளாக, அகழிகளில் படையினருடன் பேசினார். அவர் அவர்களின் வாழ்க்கையையும் அனுபவங்களையும் பற்றி எழுதினார், மேலும் 'போரின் இரக்கமற்ற உண்மை' என்று அவர் எழுதிய கட்டுரைகள் பலத்த தணிக்கைக்கு பின்னர்தான் வெளிவந்தது. முன்னணியில் இருந்த அவரது நன்கு அறியப்பட்ட தைரியம், போரின் போது சோவியத் மக்களின் அனுபவத்தை அவர் வெளிப்படுத்திய அவரது நேர்மை மற்றும் விவரம் ஆகியவற்றின் அன்பு அவரை சோவியத் ஒன்றியத்தில், குறிப்பாக செம்படையினருக்குள் மிகவும் பிரபலமான மற்றும் மரியாதைக்குரிய நபர்களில் ஒருவராக ஆக்கியது.

1942 இல் ஸ்ராலின்கிராட்டில் வாசிலி குரோஸ்மான்

ஐரோப்பிய யூதர்கள் மீதான நாஜி இனப்படுகொலையின் முதல் தகவல்களில் சிலவற்றை குரோஸ்மான் எழுதியுள்ளார். அவர் முதல் ரஷ்ய புரட்சியின் ஆண்டான 1905 ஆம் ஆண்டில், சிறிய உக்ரேனிய ஷெட்டில் பெர்டிச்சிவ் என்ற இடத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் முதல் மாதங்களில், 30,000 க்கும் அதிகமான மொத்த யூத மக்கள் தொகையை கொண்ட நகர் மீதான SS தாக்குதல் குழுவின் ஒரு முழு அளவிலான படுகொலையில் அவரது தாயாரும் கொல்லப்பட்டார். நாஜி ஆக்கிரமித்த போலந்தில் உள்ள ஆறு மரண முகாம்களில் ஒன்றான ட்ரெப்ளிங்கா பற்றிய குரோஸ்மானின் கட்டுரை பின்னர் நூரம்பேர்க் விசாரணைகளில் ஆதாரமாக இருந்தது. இலியா ஏரென்பேர்க் (Ilya Ehrenburg) உடன் இணைந்து, சோவியத் ஒன்றியத்தில் நடந்த படுகொலையின் விரிவான ஆவணமான சோவியத் யூதர்கள் தொடர்பான கறுப்பு நூல்-1944 (The Black Book of Soviet Jewry-1944) இனை தொகுத்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்ராலின்கிராட்டிலும் யூதப்படுகொலை (Holocaust) பற்றி இடம்பெறுகிறது. விக்டர் ஷ்ட்ரமின் கதாபாத்திரத்தின் மூலம், குரோஸ்மானைப் போலவே அவரது தாயும் உக்ரேனில் நடந்த படுகொலையில் கொல்லப்படுகிறார். உண்மையில், ஷ்ட்ரம் என்ற கதாபாத்திரம் தணிக்கையாளர்களுடன் முரண்படும் புள்ளிகளில் ஒன்றாகும். 1949 ஆம் ஆண்டில், குரோஸ்மான் தனது நாவலை முடித்துக்கொண்டிருந்தபோது, ஸ்ராலினின் புத்திஜீவிகள் மற்றும் அதிகாரத்துவத்தின் பிரிவுகளில் யூத-விரோத சுத்திகரிப்புகள் நடந்து கொண்டிருந்தன. யூத இனப்படுகொலை ஒரு தடைசெய்யப்பட்ட தலைப்பாக மாறியது, மேலும் பல ஆண்டுகளாக அது அப்படியே இருந்தது. ஏரென்பேர்க் மற்றும் குரோஸ்மானின் கறுப்பு புத்தகம் ஆகியவற்றின் பிரதிகள் வெட்டப்பட்டன. மேலும் ஸ்ராலின்கிராட்டில் இருந்து ஷ்ட்ரமின் பாத்திரத்தை அகற்றுமாறு குரோஸ்மானை நம்பவைப்பதில் தணிக்கையாளர்கள் தோல்வியுற்றனர்.

நூலின் பிற பிரிவுகளும் ஸ்ராலினிச கண்ணோட்டத்தில் இந்நூலை “ஆபத்தானதாக்கியது”. 1932 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றி முற்றிலும் சாத்தியமற்றது என்பதை 'நிச்சயமாக' 'எல்லா வகையான புள்ளிவிவரங்களுடனும்' 1932 ஆம் ஆண்டில் கிரிமோ தனக்கும் ஏனையோருக்கும் கூறியதை ஒரு சிவப்பு இராணுவ சிப்பாய் கேலி செய்யும் விதமாக கிரிமோவிற்கு நினைவூட்டுவது பற்றிய காட்சி தணிக்கையாளர்களை கோபப்படுத்தியது. ஸ்ராலினின் பயங்கரத்தைப் பற்றிய தொடர்ச்சியான குறிப்புகள் இந்நூலை தணிக்கை செய்யும் அபாயத்திற்கு உள்ளாக்கின. மாற்றமுடியாத ஸ்ராலினிஸ்டுகளால் மட்டுமே ஸ்ராலின் ஒரு போற்றத்தக்க நபராக மேற்கோள் காட்டப்படுகிறார், மற்றும்படி அவரைப்பற்றி குறிப்பிடப்படவில்லை.

'அதிகாரத்துவம்' என்பது ஸ்ராலின்கிராட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் படையினர்கள் பயன்படுத்தும் தொடர்ச்சியான மற்றும் இழிவான சொல்லாகின்றது. நகரத்தின் குண்டுவெடிப்பின் போது ஒரு காட்சியில், ஒரு மருத்துவமனையை நடத்தும் அதிகாரத்துவ அதிகாரிகள், நோயாளிகளைக் காப்பாற்றாததைப் பற்றி யாரும் ஆச்சரியப்படவில்லை, அதே நேரத்தில் முழு ஊழியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வெடிகுண்டு வீசப்பட்ட மற்றும் எரியும் கட்டிடத்திற்குள் ஓடுகையில் விலகியிருக்குமாறு கூறப்படுகின்றார்கள், மேலும் அதிகாரிகள் ஆபத்து முடிந்தபின்னர் மட்டுமே தங்கள் துணை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கட்டளையிடுவதற்காக திரும்பி வருகிறார்கள். குரோஸ்மான் அதிகாரத்துவ விரோத உணர்வுகளை பரவலாக மட்டுமல்லாமல், போரின்போது பகிரங்கமாகவும் காட்டுகின்றார். இந்த உணர்வுகள், ஹிட்லருடன் கணக்கு தீர்த்த பின்னர், சோவியத் மக்கள் ஸ்ராலினை அகற்றவும் கூடும் என்ற பயத்தில் அதிகாரத்துவ சாதியினர் போருக்குப் பின்னர் மற்றொரு சுற்று களையெடுப்பில் ஈடுபட்டதற்கும், 1950களில் எதிர்ப்பில் உள்ள இளைஞர்களின் குழுவை கொலைகாரத்தனமாக அடக்குவதற்கும் ஒரு முக்கிய காரணமானது.

மார்ச் 1943 ஸ்ராலின்கிராட்டிற்கு திரும்பிய பின்னர், அகதிகள் ஒரு காலத்தில் தங்கள் வீடு இருந்த இடிபாடுகளில் அமர்ந்திருக்கிறார்கள். Photographer/ N. Sitnikov

இதனைவிட, இரண்டாம் மட்டத்திலான போரின் யதார்த்தங்களின் சித்தரிப்புகள் தடைசெய்யப்பட்ட விடயங்கள் மற்றும் கருப்பொருள்களையும் தொட்டன: ஸ்ராலின்கிராட்டை எரிக்கும்போது குழப்பமான பாரிய வெளியேற்றங்கள், பாரிய தோல்விகள் மற்றும் பின்வாங்கல்கள் மற்றும் தமது கிராமத்தை நாஜிக்கள் வந்து ஆக்கிரமிப்பார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கும் ஒரு சில கசப்பான கையளவிலான கம்யூனிச விரோத விவசாயிகள் பற்றிய சித்தரிப்புகள். பொதுமக்களின் அவலநிலை மற்றும் சோவியத் மக்களிடையே நாஜி-சார்பு அனுதாபங்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்கள் பற்றிய இவை அனைத்தும் ஸ்ராலினிஸ்டுகளின் வரலாற்று புத்தகங்களிலிருந்து அழிக்கப்பட்டன. இராணுவத் தளபதிகளின் வீரம் குறைந்தளவானதாக சித்தரிக்கப்படுவது, அவர்களின் குட்டி பொறாமைகள் மற்றும் போட்டிகளை உள்ளடக்கியது, தணிக்கை மற்றும் இராணுவத் தலைமையின் பிரிவுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது, இந்நூல் பற்றிய விவாதங்களில் ஈடுபட்ட செய்தது. 'சோசலிச யதார்த்தவாதத்தின்' குறுகிய எண்ணம் கொண்ட, மார்க்சிச எதிர்ப்பு கருத்தாக்கங்களின் விளைவாக பிற கட்டளையிடப்பட்ட மாற்றங்களும், வெட்டப்பட்ட பத்திகளும் இந்நூலில் இருந்தன.

அரசு மற்றும் இராணுவ தணிக்கையாளர்களுடனான இந்த போராட்டம் பல ஆண்டுகள் நீடித்தது. இந்த நாவல் இறுதியில் 1952 இல் நோவி மிர் (Novy Mir) இதழில் வெளியிடப்பட்டது. இருப்பினும், இது குரோஸ்மான் விரும்பிய பதிப்பு அல்ல. உண்மையில், இந்த நூலின் 11 வகைப்பட்ட பதிப்புகள் உள்ளன. பெரும்பாலான வெளியீடுகள் இதுவரை 1956 பதிப்பை ஒத்திருக்கின்றன. மூன்று பதிப்புகள் மற்றும் குரோஸ்மானின் காப்பகங்களின் அடிப்படையில் யூரி பிட்-யுனான் உடன் இணைந்து முதன்மை மொழிபெயர்ப்பாளர் ராபர்ட் சாண்ட்லரால் வெளியிட்ட இந்த பதிப்பு, எந்த மொழியிலும் மிக முழுமையான பதிப்பாகும். ஆசிரியர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் முடிவுகளை கவனமாக குறிப்புகளில் விளக்கினர். இது வாசகருக்கு கையெழுத்துப் பிரதிகளின் வரலாற்றைக் கண்டறிய அனுமதிக்கிறது. அவர்கள் செய்த பணிக்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டும்.

1932 இல் கோபன்ஹேகனில் பேசிய லியோன் ட்ரொட்ஸ்கி, “புரட்சியின் மிக ஆழமான பொருளை, ஆனால் உடனடி மதிப்பீட்டிற்கு உள்ளாக்குவது கடினமாக இருப்பதற்கு காரணம், இது மக்களின் தன்மையை வடிவமைப்பதுடன் உறுதிப்படுத்துகின்றது என்பதாலாகும்”. சோவியத் மக்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அபிலாஷைகளில் அக்டோபர் புரட்சியின் தாக்கத்தை வேறு எந்த சோவியத் எழுத்தாளரை விடவும் குரோஸ்மான் துல்லியமாக உணர்ந்தார். மேலும் ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு நாவலாசிரியராக அவர் அதை தனது எழுத்தில் உள்ளடக்க முடிந்தது. அவரது வாழ்வும் விதியும் அதிகரித்துவரும் ஏமாற்றத்தையும் அவநம்பிக்கையையும் குறிக்கிறது என்றாலும், அவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை ஒரு உறுதியான சோசலிஸ்டாக இருந்தார். ஒரு ரஷ்ய ஆவணப்படத்தில், ஒவ்வொரு ஆண்டும் மே 9 வெற்றி தினத்தில், குரோஸ்மான் தனது செம்படை சீருடையை அணிந்து போர் பாடல்களை எவ்வாறு பாடுவார் என்பதை அவரது மகன் நினைவு கூர்ந்தார். போரின் எழுத்தாளராகக் கருதப்படுவதில் பெருமிதம் அடைந்த அவர், பாசிசத்திற்கு எதிரான செம்படையின் போராட்டம் மனிதகுலத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கு ஒரு வரலாற்று பங்களிப்பு என்ற அவரது நம்பிக்கையிலிருந்து ஒருபோதும் தடுமாறவில்லை.

தனது பார்வையாளர்களுடனான தொடர்புகளை மிகவும் வலுவாக நம்பியிருந்த ஒரு கலைஞரான குரோஸ்மானைப் பொறுத்தவரை, இந்த வாழ்வும் விதியும் அவர் விரும்பிய பதிப்பில் தோன்றுவதை அவரது வாழ்நாளில் அவர் ஒருபோதும் பார்த்ததில்லை என்பது ஒரு பெரிய துன்பகரமானது என்பதில் சந்தேகமில்லை. (அவரது மரணத்திற்குப் பின்னரும் பல தசாப்தங்களாக வாழ்வும் விதியும் வெளியிடப்படவில்லை.) 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, முதலாளித்துவத்தை மறுசீரமைத்ததன் மூலம் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களால் நிறைவேற்ற முடியாமல் போனதை நிறைவேற்றியது.

இன்று, மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ஸ்ராலின்கிராட் இன் ஆங்கில மொழிபெயர்ப்பு, இறுதியாக உலக இலக்கியத்தின் ஒரு தலைசிறந்த படைப்புக்கு ஒரு பரந்த வாசகர்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாது, இது புதிய தலைமுறையினருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, அக்டோபர் புரட்சியின் மகத்தான தாக்கத்தை புரிந்து கொள்ளவும், இந்த முக்கிய வரலாற்றுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளவும் உதவும்.

மேலதிக வாசிப்பிற்கு: Recommended further reading:

Antony Beevor and Luba Vinogradova (editors): A Writer at War. Vasily Grossman with the Red Army, 1941-1945, Pimlico 2006.

Jochen Hellbeck, Stalingrad. The City that Defeated the Third Reich, Public Affairs 2015.

David North, Introduction to Leon Trotsky’s The Revolution Betrayed

David North, The Russian Revolution and the Unfinished Twentieth Century, Mehring Books 2014. https://www.wsws.org/en/special/library/russian-revolution-unfinished-twentieth-century/00.html

John G. Wright, The Soviet Union at War (1941).

WSWS Topic page on the 1917 Russian Revolution

Loading