முன்னோக்கு

இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது,” என்ற அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கிற்கு டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப கருத்துக்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.

இந்த சர்வதேச இணையவழி கலந்துரையாடலுக்காக உலகெங்கிலும் இருந்து கலந்து கொண்டுள்ள பார்வையாளர்களை நான் வரவேற்க விரும்புகிறேன், இந்த நிகழ்வின் நோக்கம் 'இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது' என்ற அதன் தலைப்பிலேயே தெளிவாக குறிப்பிடப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியும் இதை ஏற்பாடு செய்துள்ளன. என் பெயர் டேவிட் நோர்த். நான் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராக மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவராக உள்ளேன். நான் இந்த நிகழ்வை நெறிப்படுத்த இருக்கிறேன். என் இணை-நெறியாளராக டாக்டர் பெஞ்சமின் மாத்தேயுஸ் இருக்கிறார், இவர் இந்த பெருந்தொற்று குறித்த செய்திகளை வழங்குவதில் WSWS உடன் நெருக்கமாக செயல்பட்டுள்ள ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். ஜனவரி 24, 2020 இல் இந்த விஷயம் குறித்து முதலில் பிரசுரித்ததில் இருந்து, உலக சோசலிச வலைத் தளம் இந்த பெருந்தொற்று குறித்து 4,000 க்கும் அதிகமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. டாக்டர் மாத்தேயுஸ் அவரே தனிப்பட்டரீதியில் இவற்றில் 240 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

உலகளவில் வாராந்திர உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் அளவிடப்பட்டு வந்த இந்த பெருந்தொற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து, கோவிட் என்பது ஒரு பரிட்சயமான வார்த்தையாக ஆவதற்கு முன்னர் இருந்தே, உலக சோசலிச வலைத் தளம், உடனடியாக ஒருங்கிணைந்த ஓர் உலகளாவிய விடையிறுப்பைக் கொண்டு எதிர்நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த பெருந்தொற்று பேரழிவுகரமான எண்ணிக்கையில் மனித உயிர்களைப் பறிக்கும் என்று எச்சரித்து வந்தது. எங்களிடம் மாயஜாலக் கண்ணாடி எதுவும் இருக்கவில்லை. உண்மையில் சொல்லப் போனால், எங்கள் அறிக்கைகளும் பகுப்பாய்வுகளும் சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொற்றுநோய் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நடத்திய விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றிய ஒரு கவனமான ஆய்வின் அடிப்படையில் இருந்தன. உலக சோசலிச வலைத் தளம் யாருடைய வேலைகளை நெருக்கமாக பின்தொடர்ந்ததோ அவர்களில் பலர் இன்று இக்குழு உறுப்பினர்களில் இடம் பெற்றுள்ளனர்.

ஜனவரி 2020 இல் இருந்து இந்த பெருந்தொற்று பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் செய்திகளை இங்கே கவனத்திற்குக் கொண்டு வருவது பெருமை பேசுவதற்காக அல்ல. மாறாக, இந்த பெருந்தொற்றின் விளைவுகளை முன்கணிக்க முடியாது என்றும், இது வரப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது என்றும், அது ஆரம்பித்ததும் அதை தடுக்க என்ன செய்ய வேண்டுமென யாருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்படும் பொய்யை —அனேகமாக அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து வரும் மிகவும் ஆபத்தான பொய்களின் பேரலையை— மறுப்பதற்காக இது கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு பேரழிவுகரமான பெருந்தொற்று ஆபத்து அவசர எச்சரிக்கைகளின் விஷயமாக இருந்துள்ளது. இதை விட, இந்த பெருந்தொற்று தொடங்கிய உடனே, பொது சுகாதாரத் துறையில் செயலூக்கத்துடன் உள்ள தொற்றுநோய் நிபுணர்களும் பிற விஞ்ஞானிகளும் அதை விரைவாக கட்டுப்பாட்டில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மிகவும் தெளிவான புரிதலைக் கொண்டிருந்தார்கள். அந்த எச்சரிக்கை மணியை ஒலித்து பாரியளவில் உயிரிழப்புகளைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகளை அடையாளம் காட்டியவர்களில் இருந்த விஞ்ஞானிகளும் இன்று இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அரசாங்கங்கள் வேண்டுமென்றே விஞ்ஞானிகள் கூறியதைக் கேட்க மறுத்ததற்கு உலகம் ஏற்கனவே பயங்கரமாக விலை கொடுத்துள்ளது.

இந்த பெருந்தொற்றின் இரண்டாம் ஆண்டு முடிய இருக்கின்ற நிலையில், இப்போது நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம்?

இந்த பெருந்தொற்றின் முதலாமாண்டு முடிய இருந்தபோது, அதாவது டிசம்பர் 31, 2020 இன் படி, உத்தியோகபூர்வ உலகளாவிய மரண எண்ணிக்கை வெறும் 1,950,000 ஆக இருந்தது.

நேற்றைய புள்ளிவிபரங்கள்படி, 2021 முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு சற்று அதிக நாட்களே உள்ள நிலையில், மொத்த உத்தியோகபூர்வ மரண எண்ணிக்கை 4,958,947 ஆக உள்ளது.

ஊடகங்கள் அன்றாடம் கூறுவதற்கு மாறாக, இந்த பெருந்தொற்று மங்கி கொண்டிருக்கவில்லை, கோவிட்-19 ஏதோ பொதுவான ஜலதோஷத்திற்கு நிகரான ஒன்றாக மாறிவிடவில்லை. ஆகஸ்ட் 24, 2021 இல் —வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்னர்— உலக சோசலிச வலைத் தளம் இந்த பெருந்தொற்று பற்றிய ஒரு சர்வதேச இணையவழி கருத்தரங்கை நடத்தியது. அதற்குப் பின்னர், உலகளவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 213 மில்லியனில் இருந்து 244 மில்லியனாக அதிகரித்துள்ளது. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை அரை மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

அதிக உயிரிழப்பு எண்ணிக்கை கொண்ட நாடுகளை மட்டுமே பட்டியலிட்டு கூறினால், உலகிலேயே மிகவும் பணக்கார மற்றும் தொழில்நுட்பரீதியில் மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடான அமெரிக்கா உலகிலேயே கோவிட்-19 க்கு பலியானர்களை அதிகமாக கொண்டுள்ளது. அதன் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 756,205. மனிதப்படுகொலை வெறிபிடித்த போல்சொனாரோ தலைமையிலான பிரேசிலில் 605,569 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 459,301 ஆகும். மெக்சிகோ அதன் குடிமக்களில் 286,259 பேரை இழந்துள்ளது. பெருவில், இறப்பு எண்ணிக்கை 200,000. இப்போது மற்றொரு நாசகரமான அதிகரிப்பின் பிடியில் உள்ள ரஷ்யாவில் பலி எண்ணிக்கை 229,528 ஆகும். 'சடலங்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்,' என்று பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்ட பிரிட்டனில், இப்போது வரையில் சுமார் 139,461 பேர் உயிரிழந்துள்ளனர். போரிஸ் ஜோன்சன் அவர் விருப்பம் நிறைவேறுவதைக் காண்கிறார். ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை 125,052 ஆகும்.

ஆனால் இந்த புள்ளிவிவரங்கள், இந்த பெருந்தொற்றின் இறப்பு கணக்கின் முழு அளவிலான கொடூரத்தைக் காட்டவில்லை. Economist பத்திரிகை —யாரும் சோசலிச சார்புடையதென குற்றஞ்சாட்ட முடியாத இந்த பத்திரிகை— 'இந்த பெருந்தொற்றின் உண்மையான இறப்பு எண்ணிக்கை' என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

கோவிட்-19 ஆல் ஏற்பட்ட இறப்புகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை இப்போது 4.9 மில்லியனாக இருந்தாலும், உண்மையான எண்ணிக்கை 16.5 மில்லியன் என்பதே எங்களின் ஒரே சிறந்த மதிப்பீடாகும். உண்மையான எண்ணிக்கை 10.2 மில்லியன் மற்றும் 19.2 மில்லியனுக்கும் கூடுதலான இறப்புகளுக்கு இடையில் இருப்பதற்கு 95% வாய்ப்பிருப்பதை நாங்கள் காண்கிறோம்.

ஒரு போரின் மனிதச் செலவை கணக்கிடுகையில், அந்த புள்ளிவிபரங்களில் உயிரிழந்தவர்கள் மட்டுமல்ல காயப்பட்டவர்களும் அடங்குவர். கோவிட்-19 இன் மனித விலை என்பதில், உயிரிழந்தவர்களை மட்டுமல்ல, மாறாக அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும், குறிப்பாக 'நீண்டகாலம் அதில் அலைக்கழிக்கப்படுபவர்கள், “நீண்டகால கோவிட்' என்றழைக்கப்படும் தொடர்ச்சியான தொற்றுநோய் பாதிப்புகளால் பாதிக்கப்படுவர்களையும் உள்ளடக்குகிறது. பல ஆண்டுகளாக நோயைத் தாங்கிக் கொண்டிருப்பவர்களை பொறுத்த வரையில், கோவிட் போலியோவுக்கு நிகரான கொடூரத்தைக் கொண்டுள்ளது.

கடந்த மாதம், அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சுமார் 1,700 பேர் இறந்துள்ளனர். நாளாந்த இறப்பு எண்ணிக்கை இப்போது குறிப்பிடப்படுவதில்லை. “ஒரு மரணம் என்பது சோகம்; ஒரு மில்லியன் மரணங்கள் என்பது புள்ளிவிபரம்” என்ற பழமொழி உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பேரழிவின் யதார்த்தத்தை எதிர்கொள்கையில், எந்த தருணத்தில் கோவிட் ஒரு 'பெருந்தொற்று' மட்டும் அல்ல, மாறாக அது சமூக 'மனிதப்படுகொலை' வடிவம் என்று குறிப்பிடத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது?

நாம் இந்த பெருந்தொற்றின் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த இணையவழி கருத்தரங்கம், இந்த பெருந்தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற முன்முடிவிற்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த இலக்கை அடைய, பின்வருவதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்:

1. கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் Sars-CoV-2 இன் இலக்கு தனிநபர்கள் அல்ல, மாறாக அது ஒட்டுமொத்த சமூகத்தையும் குறி வைக்கிறது. அந்த வைரஸ் பரவும் விதம் பாரிய நோய்தொற்று ஏற்படுவதை நோக்கி உள்ளது. Sars-CoV-2 பில்லியன் கணக்கானவர்களைத் தாக்க உயிரியல்ரீதியில் பரிணமித்துள்ளது, அவ்விதம் செயல்படுகையில் மில்லியன் கணக்கானவர்களை உயிரிழக்கச் செய்கிறது.

2. எனவே, ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த வைரஸை அகற்றுவதை இலக்காகக் கொண்ட ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயமே ஒரே பயனுள்ள மூலோபாயமாகும். இந்த பெருந்தொற்றுக்குப் பயனுள்ள ஒரு தேசிய தீர்வு எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த மனிதகுலமும் —அனைத்து இனங்களும், இனவழிகளும் மற்றும் அனைத்து தேசியத்தை சார்ந்தவர்களும்— சுயநலமின்றி ஓர் உண்மையான பரந்த உலகளாவிய கூட்டு முயற்சியின் மூலம் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் இதிலிருந்து கடந்து செல்ல வேண்டும்.

3. இந்த பெருந்தொற்று வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் பின்பற்றும் கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். சமூகக் கொள்கையின் கேள்விக்கிடமற்ற முன்னுரிமையாக இருக்க வேண்டியதை, அதாவது மனித உயிர்களின் பாதுகாப்பை, பெருநிறுவன இலாப நலன்கள் மற்றும் தனியார் செல்வக் குவிப்புக்கு அடிபணிய செய்வதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

4. உலகளவில் அகற்றுவதை நோக்கிய ஒரு தீர்க்கமான திருப்பத்தை கொண்டு வரும் முன்முயற்சி, மில்லியன் கணக்கான மக்களின் சமூகரீதியில் நனவான இயக்கத்திலிருந்து வர வேண்டும்.

5. இந்த உலகளாவிய இயக்கம் விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சியை உள்ளீர்த்திருக்க வேண்டும். விஞ்ஞானிகள் பலர் அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களின் உயிரையே கூட ஆபத்தில் வைத்து உழைக்கிறார்கள் என்கின்ற நிலையில், விஞ்ஞானிகளை துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இந்த வைரஸை உலகளவில் அகற்றுவதற்கு சமூகத்தின் மிகப் பரந்த தொழிலாள வர்க்கத்திற்கும் விஞ்ஞான சமூகத்திற்கும் இடையே நெருக்கமான கூட்டுழைப்பு அவசியப்படுகிறது.

அரசாங்கங்கள் விஞ்ஞானிகள் சொல்வதைக் கேட்காது, ஆனால் உழைக்கும் மக்கள் கேட்பார்கள். இன்று, நம் நிபுணர்கள் குழு, நீண்டகால கோவிட் குறித்தும், காற்றில் பரவல் மற்றும் நீர் திவலைகளாக பரவல், தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பூஸ்டர் மருந்துகள், குழந்தைகள் மீது கோவிட் இன் தாக்கம், வைரஸ் பரவலில் பள்ளிகள் வகிக்கும் பாத்திரம், பெருந்தொற்றுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான தொடர்புகள், மக்களிடையே வைரஸ் பரவ அனுமதிப்பதன் மூலம் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கட்டுக்கதையை தகர்ப்பது என பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை முன்வைப்பார்கள். மிகவும் முக்கியமாக, நாம் ஒரு விஞ்ஞானபூர்வ மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டுவோம், இது செயல்படுத்தப்பட்டால், SARS-CoV-2 ஐ உலகளவில் வேகமாக அகற்றுவதற்கு இது வழிவகுக்கும் என்பதோடு, உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இது இந்த பெருந்தொற்றை திறன்பட முடிவுக்குக் கொண்டு வரும்.

இந்த விஷயம் சவாலாக தான் இருக்கும். எங்களின் ஆரம்ப கலந்துரையாடல்களில், பெஞ்சமினும் நானும் என்ன கூற வேண்டும் என்பதைக் குறித்தும், இந்த பெருந்தொற்றைப் புரிந்து கொள்ள இன்றியமையாதவை மற்றும் அதை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதன் மீது முன்வைத்து விளக்க வேண்டிய கருத்துருக்கள் குறித்தும் குழு உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி உள்ளோம்.

Loading