“புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் நான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினேன்”

பெருந்தொற்று குறித்த wsws இன் இணையவழி கருத்தரங்கிற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவின் தொழிலாளர்களிடமிருந்து உற்சாகம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை, உலக சோசலிச வலைத் தளமும் (WSWS), சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-RFC) இணைந்து “பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது?” என்ற தலைப்பில் ஒரு இணையவழி கருத்தரங்கை நடத்தின, இதில் கோவிட்-19 நோய்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான கொள்கைகளுக்காக போராடிய தொழிலாளர்கள் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் குழு பங்கேற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பரந்த ஆதரவு கிடைத்தது என்பதுடன், வசிக்கத்தக்க ஒவ்வொரு கண்டத்திலுள்ள டஜன் கணக்கான நாடுகளிலிருந்து கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் உட்பட, இப்போது வரை இது 10,000 க்கும் மேற்பட்ட முறைகள் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் மைய நோக்கம், கோவிட்-19 நோய்தொற்று எவ்வாறு பரவுகிறது, மனிதர்கள் மீதான இதன் தாக்கம் எத்தகையது, மற்றும் வைரஸ் பரவல் சங்கிலியை துண்டிக்கவும் உலகளவில் புதிய நோய்தொற்றுக்களை ஒழிக்கவும் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ஆகியவை உட்பட, தொற்றுநோய் பற்றிய விஞ்ஞானத்தின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதாகும். இந்த நிகழ்வில் பங்கேற்ற மற்றும் இணையவழியாக இதை பார்த்த தொழிலாளர்களுடன் WSWS உரையாடியது, அவர்கள் அனைவரும் தங்கள் மீது இது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் பாதுகாப்பற்ற முறையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை எதிர்த்து செப்டம்பர் இறுதியில் ஒரு தொடர்ச்சியான உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தங்களை தொடங்கிய பிரிட்டிஷ் பெற்றோரான லீசா டியஸூம் கருத்தரங்கு குழுவில் இணைந்து கொண்டார். நாளாந்தம் சுமார் 20,000 குழந்தைகள் வரை கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்படும் இங்கிலாந்து பள்ளிகளின் கொடூரமான நிலைமைகளைப் பற்றி பேசியதன் பின்னர், இந்தக் கொள்கையின் நீண்ட கால தாக்கம் என்னவாக இருக்கும் என்று டாக்டர் தீப்தி குர்தாசினியிடம் அவர் கேட்டார். டாக்டர் குர்தாசினி, லோங் கோவிட் விஞ்ஞானம் மற்றும் குழந்தைகள் மீதான வைரஸின் தாக்கம் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், இங்கிலாந்தின் பள்ளிகளை மீளத்திறக்கும் கொள்கைகளை “குற்றகரமானது” என்று கண்டித்தார்.

17,000 க்கும் மேற்பட்ட முறைகள் பார்க்கப்பட்ட, நிகழ்வைப் பற்றி பதிவிட்ட தனது காணொளி அறிக்கையில், டியஸ், “[கோவிட்-19] தீங்கற்றது, இலேசான நோய் மற்றும் குழந்தைகளுக்கு அது ஏற்படுவது நல்லது என்பது போன்ற கட்டுக்கதைகள் அனைத்தையும் [டாக்டர் குர்தாசினி] முற்றுமுழுதாக நிராகரித்தார். இது, தெளிவாக காய்ச்சல் அல்ல. இதன் நீண்டகால தாக்கங்கள் பயங்கரமானவை, மேலும் … இது பனிப்பாறையின் முனை போன்றது. இது மூளையில் உள்ள சாம்பல் நிறப் புறணியை மெல்லியதாக்குகிறது என்பதை நாம் அறிவோம், மேலும் இது உறுப்பு சேதத்திற்கு வழிவகுக்கிறது என்பதையும், இவையனைத்தும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் டியஸ், “விஞ்ஞான போராட்டம் என்பது அரசியல் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. நாம் புறக்கணிக்கப்படுவதால், விஷயங்களை நமது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும், அதனால்தான் #SchoolStrike2021 உருவானது. எனவே, உண்மையில் இந்த போராட்டத்தைத் நாம் தொடர வேண்டும் என்றே நினைக்கிறேன், மேலும் ‘இல்லை, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று கூறுங்கள். நமது குழந்தைகளுக்கு இது நடக்க அனுமதிக்க முடியாது, எனவே நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இலண்டன் பேருந்து ஓட்டுநரும், இலண்டன் சாமானிய தொழிலாளர்கள் குழுவின் உறுப்பினருமான டேவிட் ஓ சுல்லிவனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழுவில் இணைந்து கொண்டார், இவர் தனது பணியிடத்தில் கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து பேசியதால் பாதிக்கப்பட்டவராவார். தொற்றுநோய் காலத்தின் போதான தனது அனுபவம் பற்றி இவர் பேசியதுடன், தூசுப்படலம் இயற்பியலாளர் டாக்டர் ஜோஸ்-லூயிஸ் ஜிமெனெஸிடம், கோவிட்-19 காற்றுவழி பரவுவது மற்றும் அதனால் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து கேள்வி கேட்டார்.

ஓ சுல்லிவன் நிகழ்வுக்குப் பின்னர் திங்கட்கிழமை அன்று, “இந்த நிகழ்வு உண்மையிலேயே ஒரு தனித்துவமான உலகளாவிய நிகழ்வாகும். விஞ்ஞானிகள் பொதுவாக பேசுகிறார்கள், விரிவுரையாற்றுகிறார்கள், விவாதங்கள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொள்கிறார்கள், ஆனால் அவர்களில் எவருக்கும் உலகளாவிய தொழிலாள வர்க்க பார்வையாளர்களுக்கு விஞ்ஞான கண்ணோட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்க நேரிட்டதில்லை. விஞ்ஞானத்திற்கு எதிரான போர் என்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான போர், மற்றும் அவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை விளக்குவதே இந்த இணையவழி கருத்தரங்கின் முக்கிய அம்சமாக இருந்தது. பாரிய மக்கள் போராட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாட்டிலும் தொற்றுநோயை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும் என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்தியது. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி வழங்கிய இந்த நிகழ்வின் முக்கியத்துவம் இதுவேயாகும்” என்று கருத்து பதிவிட்டார்.

இங்கிலாந்தில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஜூட் ஜாக்சன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, “‘தொற்றுநோயை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது’ என்ற இந்த நிகழ்வு, முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்களும் மற்றும் கொலைகார கோவிட்-19 தொற்றுநோய்க்கு மனித உயிர்கள் விலை கொடுக்கப்படுவதை எதிர்க்கும் தீவிர ஆர்வலர்களும் பங்கேற்ற ஒரு சிறந்த மாநாடாகும். தொழிலாளர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் ஆகியோரால் ட்விட்டரில் பதிவிடப்பட்ட காணொளிகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது என்பதுடன், இணையவழி கருத்தரங்கிற்கு ஒரு போக்கு வழியையும் மையத்தையும் அது ஏற்படுத்திக் கொடுத்தது. விஞ்ஞானிகளின் தனிப்பட்ட விளக்கக்காட்சிகள் தெளிவாகவும், மற்றும் சில சமயங்களில் தீவிர உணர்ச்சி மிக்கதாகவும் இருந்தன, மேலும் அவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பும் தொற்றுநோய் மற்றும் வரலாற்றின் போக்கை மாற்ற நடவடிக்கை எடுக்க அழைக்கப்பட்டவர்களுக்கு ஒரு முக்கியமான ஆதாரமாக இருக்கும்” என்று WSWS இடம் கூறினார்.

இங்கிலாந்து பேருந்து ஓட்டுநரான ஜாசன் என்பவர், “கோவிட்-19 பரவல் தொடர்பான வழிகாட்டியாகவும், வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதற்கான மாதிரியாகவும் விஞ்ஞானத்தைப் பின்பற்றுவது எளிமையானது. அமெரிக்கப் பள்ளி ஆசிரியரான டொன்னாவைப் போல டேவிட் ஓ’ சுல்லிவனும் புத்திசாலியாக உள்ளார். தொழிலாளர்களின் காணொளி சாட்சியங்களில், ஒரு சில நாடுகள் மட்டும் வைரஸை ஒழிக்க தங்களால் முடிந்ததை செய்வதைக் காட்டிலும், கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிக்க ஒரு உலகளாவிய பதில் தேவைப்படுகிறது என்று கூறப்பட்டது உண்மையில் வீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக படுகொலைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு இது அவமானமாகும். டேவிட் நோர்த்தின் முடிவுக்கு நான் 100 சதவீதம் உடன்படுகிறேன். மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள உதவும் இந்த வகை நிகழ்ச்சிகள் ஏன் பொது மக்களுக்கு ஒளிபரப்பப்படவில்லை”? என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த வயது வந்தோருக்கான சமூக பாதுகாப்பு வழக்குரைஞரான ஜேன் என்பவர், “காலநிலை மாற்றத்தைப் போல இதற்கும் ஒரு உலகளாவிய அணுகுமுறை தேவை. அடுத்த தலைமுறையினரான குழந்தைகள் மற்றும் லோங் கோவிட் பற்றி டாக்டர் குர்தாசினி கூறியது மிகவும் கவலையளிக்கிறது. கனடாவில் உள்ள அல்பர்ட்டா மாகாணத்தால் பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்தி கிட்டத்தட்ட வைரஸை முற்றிலும் ஒழிக்க முடிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள பிரிட்டிஷ் வெளிநாட்டு பிரதேசமான செயிண்ட் ஹெலினாவில் நான் பணிபுரிந்தேன். அங்கு வந்த அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். அப்பகுதிக்கு வழமையாக தென்னாபிரிக்காவிலிருந்தும் பயணக் கப்பல்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள், ஆனால் அதை அவர்கள் முற்றிலும் நிறுத்தினர், பின்னர் அங்கு கோவிட் ஒழிக்கப்பட்டது” என்று கூறினார்.

அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும் இந்த இணையவழி கருத்தரங்கு பற்றிய தங்கள் கருத்துக்களை WSWS உடன் பகிர்ந்து கொண்டனர். கலிபோர்னியாவின், சான் லூயிஸ் ஒபிஸ்போவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான மைக்கல் என்பவர், நிகழ்ச்சியின் போது, “நான் ஸ்கிரின்ஷாட்டுகள் எடுத்தேன். இதுவரை சிறப்பாக உள்ளது. நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது! அதன் ஒவ்வொரு பகுதியையும் நான் மிகவும் ரசித்தேன். கடைசி பேச்சாளர் உண்மையில் மனதை தொடும் அளவிற்கு பேசினார். நான் சில இடங்களைத் தவறவிட்டேன், அதனால் நிகழ்ச்சியை மீண்டும் கேட்பேன். ஆனால் நான்… வியந்து போனேன். எனது முடிவுகளை நிபுணர்கள் சுயாதீனமாக வழங்கியதைக் கேட்க நிறைவாக உள்ளது” என்று எழுதினார்.

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான ஸ்டீவ், “நான் இந்த நிகழ்வை கிட்டத்தட்ட முழுமையாகப் பார்த்தேன், முடிவில் புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் அதிலிருந்து வெளியேறினேன். கனேடியர்கள் மிகவும் சாத்தியமுள்ள உத்திகளையும் அனுபவங்களையும் கொண்டுள்ளனர், அவற்றை நாம் அமெரிக்காவில் மாதிரிகளாக பயன்படுத்த முடியும். ஒருவேளை இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் கூட அவை மாதிரிகளாக இருக்கலாம். இது ஒரு பாரிய இயக்கமாக உள்ளது என்றே கூறுவேன்; அல்பர்ட்டாவில் உள்ள டாக்டர் விபோண்டிற்கு வேறு சில சுவாரஸ்யமான அனுபவங்கள் உள்ளன. கோவிட்-19 ஐ ஒழிப்பது அவ்வளவு எளிதானது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அவர்கள் செய்ததை நாம் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம், மேலும் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ மற்றும் பிற நாடுகளுக்கு அதை நாம் விரிவுபடுத்தலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஹவாயில் உள்ள ஒரு கல்வியாளரான லிஸ், “இது புதிய காற்றை சுவாசிப்பது போல உள்ளது. முதலில், ஒரு பெற்றோரும் பள்ளி பேருந்து ஓட்டுநரும் இதில் கலந்து கொண்டதை நான் நேசிக்கிறேன். மேலும், வேறுபட்ட பகுதிகள் சார்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும் போது, பிரச்சினையைப் பற்றிய விரிவான புரிதல் ஏற்பட்டதையும், மற்றும் அதை திறம்பட சமாளிக்க நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதையும் நான் உணர்ந்தேன். மேலும், வைரஸ் காற்றுவழியாக பரவுவதால், மேற்பரப்புகளை துடைத்து சுத்தம் செய்வது நேரத்தையும் வளங்களையும் வீணடிப்பதாக நான் உணர்ந்தேன். எத்தனை வகை திவலை தூவிகளும் எவ்வளவு காகித துடைப்பான்களும் இருந்து என்ன பயன்?! எனவே, ஒழிப்பு உத்திக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன்” என்று WSWS இடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட குழு உறுப்பினர்களில் கனடாவைச் சேர்ந்த டாக்டர் மல்கோர்சாடா காஸ்பெரோவிச் மற்றும் டாக்டர் ஜோ விபோண்ட் ஆகியோர் அடங்குவர், மேலும் பல கனடியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற ஒன்டாரியோவைச் சேர்ந்த பள்ளிக் காப்பாளர் ஒருவர், “ஒரு பராமரிப்பாளராக மேசைகளையும், தொடக்கூடிய அனைத்து மேற்பரப்புகளையும் சுத்தப்படுத்துவது எனது வேலைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், இது பெரும்பாலும் நேரத்தை வீணடிப்பதாகும் என்பதை டாக்டர் ஜிமினெஸ் நிரூபித்தார். இன்றைய இணையவழி கருத்தரங்கை பார்ப்பதற்கு முன்பாக நான் இதுபற்றி சந்தேகித்தேன்” என்று WSWS இடம் தெரிவித்தார்.

கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கு முன்னதாக பள்ளிகளை மீண்டும் திறப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பேசிய டாக்டர் ஹோவார்ட் எர்மானின் விளக்கக்காட்சியின்போது டொராண்டோவைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் கருத்துக்களை அனுப்பினார். அந்த ஆசிரியர், “இந்த விளக்கக்காட்சியில் சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவருகின்றன. ஒன்டாரியோவில் கூட பரிசோதனை பற்றாக்குறை பெரிதும் உள்ளது. (வணிகங்கள் அல்லது வணிகமாக கருதப்படும் தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாது) பொதுப் பள்ளிகளில் விரைவான பரிசோதனை நடவடிக்கைகளை செயல்படுத்த வைப்பதற்கான எங்கள் சண்டைகளுக்கு சமீபத்தில் தான் வெற்றி கிடைத்தது. அறிகுறியின்றி பரிசோதனைக்கு செல்ல முயற்சிப்பது மிகவும் கடினம் என்பதுடன், அதற்கு (பெரிய வணிக மருந்தகங்களில் 30 டாலர் முதல் 40 டாலர் வரை) அதிகம் செலவு செய்ய வேண்டும். திறன் வரம்புகள் நாளை நீக்கப்படுகின்றன. (குழந்தைகளுக்கான தடுப்பூசி தயார்நிலையை சரிபார்ப்பதற்கு முன்னர்) தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் ஜனவரியில் அகற்றப்படுகிறது, மேலும் முகக்கவச கட்டுப்பாடும் மார்ச் மாதம் அகற்றப்படவுள்ளது. பிரதமரின் சமீபத்திய அறிவிப்பு குறித்து தொழிற்சங்கங்கள் இதுவரை மெத்தனமாக உள்ளன, ஆனால் அல்பர்ட்டாவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் விளைவுகள் எப்படி இருந்தது என்பதை நாம் பார்த்தோம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்ட அல்லது நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பிய எங்கள் வாசகர்கள் அனைவரையும் WSWS ஊக்குவிக்கிறது, நாங்கள் இதை வாரம் முழுவதும் வெளியிடுவோம், மேலும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் இன்றே ஈடுபட கேட்டுக்கொள்கிறோம்!

Loading