ரஷ்யாவில், அதிகாரிகள் போதுமான பொது சுகாதார நடவடிக்கைகளை அறிவிக்காத நிலையில், தொற்றுநோய் பரவல் அங்கு கட்டுப்பாட்டை மீறிவிட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 19, 2021, செவ்வாய்க்கிழமை, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள மாஸ்கோ சிட்டி கிளினிக்கல் மருத்துவமனை 52 இல் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சையளிக்க மற்றவர்கள் தயாராகையில், (இடதுபுறம்,) கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் சிறப்பு உடைகள் அணிகிறார்கள். (AP Photo/Alexander Zemlianichenko)

புதன்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரையிலான வாரத்தை ஊதியத்துடன் கூடிய வேலை இல்லாத வாரமாக அறிவித்தார். கடந்த மாதம் முழுவதும், ரஷ்யாவில் கோவிட்-19 இறப்புக்கள் மற்றும் நோய்தொற்றுக்களின் நாளாந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து உச்சபட்சமாக பதிவாகின. நாளாந்தம் 1,000 க்கும் அதிகமான கொரோனா வைரஸ் இறப்புக்களும், 34,000 புதிய நோய்தொற்றுக்களுடன், ரஷ்யா தினசரி உச்சபட்ச இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் நாளாந்த உச்சபட்ச நோய்தொற்றுக்களைப் பொறுத்தவரை உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த பயங்கரமான எண்ணிக்கைகள் கூட குறைத்து மதிப்பிடப்படுவதாக பரவலாகக் கருதப்படும் நிலையில், புதன்கிழமை அன்று புட்டின், பிராந்தியங்கள் தங்கள் பகுதி நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று வலியுறுத்தினார். நோய்தொற்றின் “மாபெரும் அலை” எழுச்சி பெற்று குறிப்பிடத்தக்க மீட்புக்கு வழியின்றி வசந்த காலம் வரை நீடிக்கும் என ரஷ்ய மருத்துவ விஞ்ஞானிகள் ஏற்கனவே பேசுகிறார்கள்.

எந்தவொரு தீவிரமான பொது சுகாதார நடவடிக்கைகளையும் அமல்படுத்த அரசு நோக்கம் கொள்ளவில்லை என்பதை புட்டின் புதன்கிழமை தெளிவுபடுத்தியதோடு, “இதை சமாளிக்க நமக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன, அதாவது நோய்வாய்ப்படுவது அல்லது தடுப்பூசி போட்டுக் கொள்வது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் நல்லது. மாறாக, ஒரு நோய் தொற்றிக் கொள்ளவும் அதன் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளவும் நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?” என்று அறிவித்தார்.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரையிலான வாரம் ஏற்கனவே நான்கு தேசிய விடுமுறை நாட்களை உள்ளடக்கியது என்ற உண்மை கிரெம்ளின் நடவடிக்கையின் கேவலமான தன்மையை வெளிப்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கம் வார இறுதியில் மற்றொரு மூன்று நாட்களை எளிதாக சேர்த்து ஒரு வார விடுமுறைக்கு அறிவித்துள்ளது. மேலும், “வேலை இல்லாத” காலத்தின் ஆரம்ப தேதி இன்னமும் ஒரு வாரத்திற்கு கூடுதலாக உள்ளது, இது முன்னெப்போதும் இல்லாதளவிற்கு அதிகமாக பலருக்கு பாதிப்பை ஏற்படுத்த மற்றொரு எட்டு நாட்களை வைரஸூக்கு வழங்குகிறது.

கிரெம்ளினால் அறிவிக்கப்பட்ட “வேலை இல்லாத வாரம்” என்றழைக்கப்படுவதில் பல ஓட்டைகள் உள்ளன. பள்ளிகளும் மூடப்படும் என்றாலும், அரசாங்க உத்தரவு அத்தியாவசியமற்ற வணிகங்களை மட்டுமே அவற்றின் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க “ஊக்குவிக்கிறது”. பலர் இந்த பரிந்துரைகளை சாதாரணமாக பின்பற்ற மாட்டார்கள்.

மாஸ்கோவின் மேயர் சேர்ஜி சோபியானின், தலைநகரில் நோய்தொற்றுக்கள் “வரலாற்று உச்சத்தை எட்டியிருப்பதால்” “வேலை இல்லாத” வார நடவடிக்கை அக்டோபர் 28 அன்று முன்னதாகவே தொடங்கும் என்று வியாழக்கிழமை அறிவித்தார். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள 2.5 மில்லியன் தடுப்பூசி போடப்படாத குடியிருப்பாளர்கள், வேலைக்குச் செல்வது, பொருட்கள் வாங்க கடை வீதிக்குச் செல்வது அல்லது நடைப்பயணம் செல்வது தவிர்த்து, அக்டோபர் 25 மற்றும் பிப்ரவரி 25 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வீட்டில் அடைந்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தினருக்கு தொலைதூர வேலையை அறிமுகப்படுத்த வேண்டும். சேவைத் துறையைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 80 சதவீத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். இசை அரங்குகளும், ஏனைய பெரிய பொது நிகழ்விடங்களும் திறந்திருக்கும், என்றாலும் தடுப்பூசி நிலையை உறுதிப்படுத்தும் QR குறியீடு உள்ளவர்கள் மட்டுமே அவற்றை அணுக முடியும்.

ஏனைய பகுதிகளும் தங்கள் சொந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன, மேலும் நாடு முழுவதிலும் இருந்து வரும் அறிக்கைகள், நோய்தொற்றுக்கள் வெடித்து பரவுவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை அல்லது குழந்தைகளை “விடுமுறையில்” அனுப்பியுள்ளதை குறித்துக் காட்டுகின்றன. குறிப்பாக நிலைமை மிக மோசமாக உள்ள பிராந்தியங்கள் கட்டுப்பாடுகளை முன்னதாகவே அறிமுகப்படுத்தலாம் அல்லது நவம்பர் 7 ஆம் தேதிக்கு மேலும் நீட்டிக்கலாம்.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், அதிகபட்சமாக, நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களில் ஒரு தற்காலிக வீழ்ச்சியை மட்டுமே ஏற்படுத்தும்.

கோடைகால நோய்தொற்று எழுச்சியின் காரணமாக ஏற்கனவே நோய்தொற்றுக்கள் எப்போதும் உச்சத்தில் இருந்த காலகட்டமான செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, முக்கியமாக தடுப்பூசி போடப்படாத மக்கள் மத்தியிலும் மற்றும் எந்தவித தீவிரமான தணிப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படாத சூழலிலும் இந்த வைரஸ் முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. தேசியளவில், 87 சதவீத மருத்துவமனை படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளன, என்றாலும் 40 பிராந்தியங்களில் 90 அல்லது 95 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளன. பல மருத்துவ வசதிகளில், நோயாளிகள் ஏற்கனவே நடைபாதைகளில் படுத்திருக்கிறார்கள், மேலும் நாடு முழுவதும் அனைத்து தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் (ICUs) நிரம்பியுள்ளன.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இங்கிலாந்தில் உள்ளது போலவே, இந்த வைரஸ் அலையால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவதாக ரஷ்ய குழந்தை மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர், அதாவது டெல்டா மாறுபாட்டின் தீவிர தொற்றும் தன்மை மற்றும் உண்மையில் பள்ளிகளில் குழந்தைகள் கூட்டமாக கூடுவது ஆகிய இரண்டும் தான் இதற்கு காரணமாகும்.

குழந்தை நோய்தொற்றுக்கள் பற்றிய எந்த புள்ளிவிபரங்களையும் கிரெம்ளின் வெளியிடவில்லை என்றாலும், மாஸ்கோவின் புள்ளிவிபரங்கள் நிலைமையின் தீவிரத்தை குறிப்புணர்த்துகின்றன: அக்டோபர் 19 நிலவரப்படி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 6308 பேரில், 10 சதவீதம் பேர் குழந்தைகளாவர். இவர்களில், 45 சதவீதம் பேர் 7 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள், 19 சதவீதம் பேர் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள், மற்றும் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

ரஷ்யாவில் தடுப்பூசி விகிதம் தொடர்ந்து முற்றிலும் மிகக் குறைவாக உள்ளது. மக்கள்தொகையில் வெறும் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதாவது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினருக்கு முதல் அளவு தடுப்பூசி கூட வழங்கப்படவில்லை. கடந்த வாரம் 400,000 க்கு குறைவான தடுப்பூசி அளவுகள் விநியோகிக்கப்பட்டது. இந்த போக்கு விகிதப்படி பார்த்தால், மற்றொரு 10 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட இரண்டு மாதங்களுக்கும் மேலாக காலம் பிடிக்கும். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள திட்டம் இல்லை என பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டாய முகக்கவச பயன்பாடு, மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தால், அவை பெரும்பாலும் செயல்படுத்தப்படாமல் போகும். மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற பெரிய நகரங்களில், முகக்கவசம் அணியாமல் அல்லது தவறாக அணிந்திருக்கும் ஏராளமான மக்கள் போக்குவரத்துள்ள நெரிசலான சுரங்கப்பாதைகளின் காட்சிகளை பொதுவாக காண முடிகின்றது.

மேலும், டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மோசமான பாதுகாப்பை வழங்குவதாக அறியப்படும் அறுவைசிகிச்சை முகக்கவசங்களை அணிவதற்கு மட்டுமே அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். மிகுந்த பயனுள்ள N95 முகக்கவசங்கள் பற்றி மக்களுக்கு அரிதாகவே தெரிகிறது. அதாவது, ஒரு N95 முகக்கவசத்திற்கு குறைந்தது 100 ரூபிள் (1.40 டாலர்) செலவாகும், பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு அவை மிகவும் விலை உயர்ந்தவை, அதாவது ஒருமுறை கடை வீதிக்குச் செல்கையில் சராசரியாக 698 ரூபிள் (சுமார் 9.80 டாலர்) மட்டுமே அவர்களால் செலவு செய்ய முடியும். பல பொது இடங்களில் கிருமிநாசினிகள் இருப்பதில்லை, மேலும் தொடர்பு தடமறியும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை.

தற்போதைய நோய்தொற்று அலை, ஏற்கனவே அதிர்ச்சியடைந்திருக்கும் மக்கள் தொகை சரிவை மேலும் கணிசமாக அதிகரிக்கும்.

சமீபத்திய மக்கள்தொகை தரவின்படி, செப்டம்பர் 2020 க்கும் ஆகஸ்ட் 2021 க்கும் இடையான காலகட்டத்தில், ரஷ்யாவில் 2.36 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர், அதேவேளையில் 1.4 மில்லியன் குழந்தைகள் மட்டுமே அங்கு பிறந்துள்ளனர் என்பதையும், இதன் விளைவாக, போர்க்காலங்கள் தவிர்த்து முன்நிகழ்ந்திராத வீழ்ச்சியாக, மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வரை குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், இறப்பு வீதம் 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரஷ்ய மக்கள்தொகை இழப்புக்கு கொரோனா வைரஸ் ஒரு முக்கிய உந்துதலாக இருந்தபோதிலும், மோசமான மருத்துவ பராமரிப்பு, விரக்தியில் ஆழ்த்தும் வறுமை, குடிப்பழக்கம், போதை பழக்கம் மற்றும் தீவிர பற்றாக்குறையால் ஏற்படும் பிற சுகாதார நிலைமைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களிடையே ஒரு கொடூரமான எண்ணிக்கையில் இழப்புக்களை ஏற்படுத்திய சமூக வியாதிகளின் நீண்ட பட்டியலில் இது முதல் நிலையில் உள்ளது.

சமீபத்திய வாரங்களில், கிரெம்ளின் அதிகாரிகள், தடுப்பூசி போடப்பட்ட குறைந்த விகிதங்கள் காரணமாவே நோய்தொற்றுக்கள் வேகமெடுத்துப் பரவுவதாக குற்றம்சாட்டி மக்களை பகிரங்கமாக கண்டித்து வருகின்றனர். இந்த அவதூறுகள் நிராகரிக்கப்பட வேண்டும். ஏனெனில், கோவிட்-19 இன் மொத்த இறப்பு எண்ணிக்கை மற்றும் தொற்று விகிதத்திற்கான முழுப் பொறுப்பும் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிஸ்டுக்கள் அழித்ததிலிருந்து வெளிப்பட்ட முதலாளித்துவ தன்னலக் குழுவிடமே உள்ளது. இதுவே தொற்றுநோய்க்கான அதன் பதிலுமாகும்.

அரசாங்கத்தின், மற்றும் கடந்த தசாப்தங்களில் அது பிரதிநிதித்துவப்படுத்தும் தன்னலக்குழுவின் வெளிப்படையான குற்றகரமான மற்றும் நிரந்தரமான பொய்கள், அதிகாரிகளின் பரவலான அவநம்பிக்கைக்கு ஒரு முக்கிய காரணமாகும், இது, பல சந்தர்ப்பங்களில், தடுப்பூசி போட மக்கள் தயங்குவதற்கு பின்னணியாக உள்ளது.

உண்மையில், உலக சுகாதார அமைப்பு (WHO) ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காதது கூட தடுப்பூசி மீதான மக்கள் அவநம்பிக்கையை மேலும் தூண்டுவதாக உள்ளது. அதாவது, மூன்றாம் கட்ட மருந்து சோதனைகள் முடிவதற்கு முன்பாகவே கடந்த கோடைக் காலத்தின் பிற்பகுதியில் தடுப்பூசி வெளியிடப்பட்டது. இன்னும் தெளிவடையாத காரணங்களுக்காக, தடுப்பூசி தொடர்பாக தேவைப்படும் முழு ஆவணங்களை உலக சுகாதார அமைப்புக்கு சமர்ப்பிப்பதை ரஷ்யா பெரிதும் தாமதப்படுத்தியது. இருப்பினும், லான்செட் போன்ற சர்வதேச மருத்துவ இதழ்கள், இந்த தடுப்பூசி மிகுந்த பயனுள்ளதாக இருப்பதையும், இதனால் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பதையும் கண்டறிந்துள்ளன.

அதே நேரத்தில், பைசர், அஸ்ட்ராசெனேகா அல்லது மொடேர்னா போன்ற மேற்கத்திய தயாரிப்பு தடுப்பூசிகள் ரஷ்யாவில் கிடைப்பதில்லை. இந்த தடுப்பூசிகளுக்காக செலவு செய்ய முடிந்த ஒரு சிறு பகுதியினர், ஒரு தடுப்பூசியைப் பெற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகரித்தளவில் பயணிக்கின்றனர்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பது என்பது, சோவியத் ஒன்றியத்தின் மேம்பட்ட பொது சுகாதார அமைப்பை திட்டமிட்டு அழிப்பதைக் குறிக்கிறது. முற்றிலும் காலாவதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதிக வேலைப்பளு இருந்தாலும் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களுடன், முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் இன்று எந்த மருத்துவமனையும் பெரும்பாலும் சீர்குலைந்து போயுள்ளன. கடந்த ஆண்டு தொற்றுநோய் நாட்டை கடுமையாக தாக்கியபோதும், கிரெம்ளின் சுகாதார பாதுகாப்பு செலவினங்களில் மேலும் வெட்டுக்களை விதித்தது.

இந்த சமூக எதிர்ப் புரட்சி, விஞ்ஞானம் மற்றும் பல்வேறு வடிவிலான அரசியல் பின்தங்கிய நிலை மீதான தாக்குதல்களை முறையாக ஊக்குவித்ததுடன் இணைந்து கொண்டது. வரலாற்று ரீதியாக தீவிர வலதுசாரி மற்றும் இருட்டடிப்புக்கான ஒரு அரணாகவுள்ள, ரஷ்ய மரபுவழி தேவாலயம் (Russian Orthodox Church), தேவாலய அதிகாரிகள் (அத்துடன் அரசு அதிகாரிகள்) தொற்றுநோய் காலத்தில், வைரஸை பகிரங்கமாக கேலி செய்து, அதனை கட்டுப்படுத்தும் எந்த முயற்சிகளையும் கண்டித்தபோது பெரிதும் ஊக்குவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் கொடூரமான நிலைமை கிழக்கு ஐரோப்பா முழுவதும் பிரதிபலிக்கிறது, அதாவது ருமேனியா உலகிலேயே மிகஅதிக இறப்பு விகிதத்தையும், உக்ரேன் உலகளவில் நாளொன்றுக்கு மூன்றாவது உச்சபட்ச இறப்பு எண்ணிக்கையையும் (495) மற்றும் நாளாந்தம் ஐந்தாவது உச்சபட்ச புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையையும் பதிவு செய்கின்றன. நோய்தொற்றுக்களின் தீவிர வெடிப்பு போலந்து மற்றும் பால்டிக் நாடுகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெலரூஸில், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பிவழிகின்றன.

Loading