முன்னோக்கு

ஜூலியன் அசான்ஜ் மீதான கொடூர துன்புறுத்தல் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முயற்சி, அமெரிக்க அரசு முறையீடு மீதான ஒரு விசாரணையுடன் நேற்று மீண்டும் தொடங்கியது. ஓர் அருவருக்கத்தக்க குற்றத்தைப் பின்தொடர்வதில் இதுவொரு சட்டபூர்வ வெறுப்பூட்டலாகும்.

ஜூலியன் அசான்ஜின் துணை ஸ்டெல்லா மோரிஸ், அக்டோபர் 27, 2021 புதன்கிழமை, லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் முன் உரையாற்றுகிறார் (AP Photo/Frank Augstein) [AP Photo/Frank Augstein]

போர்க்குற்றங்கள், சித்திரவதை மற்றும் பிற மனித உரிமைமீறல்கள், பெருந்திரளான மக்கள் மீதான உளவுபார்ப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் மற்றும் அரசு ஊழல் ஆகியவற்றை அசான்ஜூம் விக்கிலீக்ஸூம் அம்பலப்படுத்தியதற்காக அவர் இலக்கில் வைக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றங்களை வடிவமைத்த அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய அரசாங்கங்களும், அசான்ஜை ஆயுள் தண்டனையில் அடைப்பது மூலமாகவோ அல்லது அவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலத்தை சிதைப்பதன் மூலமாகவோ அல்லது அவரைப் படுகொலை செய்வதன் மூலமாகவோ இரத்தத்தை விலையாக பெற தீர்மானமாக உள்ளன.

வெறும் ஒரு மாதத்திற்கு முன்னர் தான், யாஹூ! நியூஸ், 30 க்கும் மேற்பட்ட ஆதாரநபர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில், அசான்ஜைக் கடத்துவது அல்லது கொல்வதற்கான திட்டங்கள் சிஐஏ இன் 'உயர்மட்டங்களில்' நடத்தப்பட்டு இருப்பதாக அறிவித்தது. ஒரு முன்னாள் அதிகாரியின் வார்த்தைகளில், “அங்கே வரம்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.” அந்த விவாதங்களுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் சிஐஏ இயக்குனரும் வெளியுறவுத்துறை செயலருமான மைக் பொம்பியோ அந்த செய்தியை மறுக்கவில்லை, “அதன் சில பகுதிகள் உண்மையே' என்று ஒப்புக் கொண்டதோடு, அதற்காக அவர் 'மன்னிப்புக் கேட்கவில்லை' என்றும் அறிவித்தார்.

ஆனால் நேற்று கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த அசான்ஜ் தான், யாருடைய குற்றங்களை அவர் அம்பலப்படுத்தினாரோ மற்றும் அவரைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாக அம்பலப்பட்டுள்ளதோ அதே அரசால் அந்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் அச்சுறுத்தலில் உள்ளார்.

அவர் ஓர் முன்னுதாரணமாக மட்டுமே 'கூண்டில்' நிறுத்தப்பட்டிருந்தார். அசான்ஜ் அவரின் சொந்த விசாரணையில் கலந்து கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டு, சிறைச்சாலையிலிருந்து காணொளி மூலமாக கலந்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டதாக அந்த நீதிமன்றத்திற்கு வெளியே விக்கிலீக்ஸின் தலைமை பதிப்பாசிரியர் Kristinn Hrafnsson ஆதரவாளர்களுக்குத் தெரிவித்தார். அவர் வினவினார்: “பெல்மார்ஷ் சிறையில் இருந்து எப்படி அவர் வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்? எந்த வடிவத்தில் பார்த்தாலும் இது எப்படி நீதியாக இருக்க முடியும்?”

அந்த விசாரணை தொடங்கிய போது, அசான்ஜின் வழக்கறிஞர் Edward Fitzgerald QC கூறுகையில், காணொளி இணைப்பு மூலமாகக் கூட அவரது கட்சிக்காரரால் கலந்து கொள்ள முடியாதளவுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்தார்.

சில மணி நேரங்களுக்குப் பின்னர் கேமராவில் தோன்றிய அசான்ஜ், கண்கூடாகவே உடல் நலமின்றி இருந்தார் — அவர் இருக்கையில் அமரவோ அல்லது விழித்திருக்கவோ போராடியவாறு தளர்ந்து, வருத்தத்துடன் இருந்தார். அமெரிக்க அரசாங்கத்தின் வழக்கறிஞர் ஜேம்ஸ் லீவிஸ் QC, அசான்ஜின் தற்கொலை குறித்தும், உண்மையிலேயே அது மொத்தத்தில் பெரிய ஆபத்தாக இருக்கிறதா என்பதன் மீதும் ஒரு நீண்ட எரிச்சலூட்டும் உரையை நிகழ்த்துவதைக் கேட்க சரியாக அந்த நேரத்தில் அசான்ஜ் வந்திருந்தார். அசான்ஜ் சிறிது நேரம் காணொளி இணைப்பு அறையிலிருந்து வெளியேறினார், பின்னர் திரும்பி வந்த போது அவர் கேமராவிற்குச் சரியான இடத்தில் உட்காரவில்லை.

அசான்ஜின் வாழ்க்கை துணை ஸ்டெல்லா மோரீஸ் நீதிமன்றத்திற்கு வெளியே பேசுகையில், இந்த நீதிமன்ற விசாரணைகள் 'ஒரு பத்திரிகையாளரைப் படுகொலை செய்ய சதி செய்த நாட்டிடம் அவரை ஒப்படைப்பதா வேண்டாமா' என்பதை தீர்மானிக்கும் என்று துல்லியமாக விவரித்தார்.

முறைப்படி பார்த்தால், இதுபோன்ற நிகழ்வுகள் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை உடனடியாக, நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி உலகெங்கிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கான விஷயமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் உலக மக்களுக்கு எதிரான ஏகாதிபத்திய குற்றங்களை அம்பலப்படுத்த 21 ஆம் நூற்றாண்டில் வேறு எவரொருவரை விடவும் அதிகமாக செய்துள்ள இந்த துணிச்சலான பத்திரிகையாளரைத் தனிமைப்படுத்தி இழிவுபடுத்தும் ஒரு தசாப்தகால பிரச்சாரத்தின் விளைவாக, அதுபோல எதுவும் நடக்கவில்லை.

அரசியல் சூனிய வேட்டையில் அசான்ஜ் பாலின-அடிப்படையிலான அரசியலின் முதலும் முக்கியமுமாக பாதிக்கப்பட்டவர் ஆவார், இதில் பாலியல் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் சவாலுக்கிடமற்ற உண்மை என்ற அந்தஸ்துக்கு மேலுயர்த்தப்பட்டு, உரிய நீதி விசாரணை நிகழ்முறையையும் மற்றும் அப்பாவி என்ற அனுமானத்தை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. பெண் உரிமைகளுக்குச் சார்பாக பேசுவதாக கூறிக் கொண்டு ஆனால் ஏகாதிபத்திய நலன்களையும் மற்றும் செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் நலன்களையும் முன்னெடுப்பவர்களின் கண்டன அலையில், வர்க்க மற்றும் அரசியல் கொள்கை பிரச்சினைகள் மூழ்கடிக்கப்படுகின்றன.

அடுத்தடுத்த விக்கிலீக்ஸ் வெளியீடுகள் உலக ஏகாதிபத்தியத்தை உலுக்கிக் கொண்டிருந்த நிலையில், 2010 ஆகஸ்டில், ஒரு விசாரணை —ஒரு வெளிப்படையான மோசடியும், இப்போது முற்றிலும் மதிப்பிழந்துள்ளதும் மற்றும் சித்திரவதை பற்றிய ஐ.நா. சிறப்பு அறிக்கை தயாரிப்பாளருமான நீல்ஸ் மெல்ஸெர் ஆல் நாசகரமாக சின்னாபின்னமாக்கப்பட்டதுமான அது— இரண்டு பெண்களிடம் அசான்ஜ் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட குற்றங்கள் மீது சுவீடனால் தொடங்கப்பட்டது. அந்த நடவடிக்கை பிரிட்டிஷ் பொலிஸாருக்கு அவரைப் பிடிக்க அடித்தளங்களை வழங்கியதுடன், கிட்டத்தட்ட ஏழாண்டுகள் அவரை இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் எதேச்சதிகாரமாக தடுப்புக் காவலில் வைத்திருக்கப் பயன்படுத்தப்பட்டது.

அசான்ஜிற்கு எதிராக விஷமத்தனமான அவதூறு பிரச்சாரத்தை நடத்துவதற்கும், அவரைப் பாதுகாக்கும் அனைவரையும் மிரட்டுவதற்கும் அடித்தளத்தை வழங்குவதே அதன் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்தது. சுவீடனின் அந்த போலி-விசாரணை, விக்கிலீக்ஸ் உடன் ஆரம்பத்தில் ஒத்துழைத்து அதிலிருந்து கை நிறைய இலாபமீட்டிய ஊடக நிறுவனங்களே அவருக்கு எதிராக மூர்க்கமாக திரும்புவதற்கான ஒரு சாக்குப்போக்கை வழங்கியது.

பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை கொள்கைப்பிடிப்போடு அசான்ஜிற்கு எதிராக அவதூறுகளையும் கடுஞ்சொற்களையும் பிரசுரித்தது, கட்டுரையாளர் மரீனா ஹைய்ட் அவரை 'கற்பழிப்பு குற்றச்சாட்டை முகங்கொடுக்க தவறும் மற்றொருவர்' என்றும், “நைட்பிரிட்ஜ் பகுதியில் உள்ள மிகப் பெரிய அருவருக்கத்தக்க துவாரம்' என்றும் அவரை முத்திரைக் குத்தியது. அந்த பத்திரிகையின் லூக் ஹார்டிங் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸை ரஷ்ய உளவாளிகளாக இருந்து வருவதாக குற்றஞ்சாட்டினார். சூஸன் மூர் New Statesman பத்திரிகையில் அசான்ஜை 'வயோதிகக் கிழவன்' என்றும், “விகாரமான ஏமாற்றுக்காரர்' என்றும் வர்ணித்தார்.

அமெரிக்காவில், Nation பத்திரிகையில் அசான்ஜ் குறித்து எழுதிய கதா பொலிட், “கற்பழிப்பு என்று வரும் போது, இடதுசாரிகள் அதற்குள் நுழைவதில்லை,” என்றார்.

ஏகாதிபத்திய பாதுகாப்பில் பாலினம் மற்றும் பிற அடையாள அரசியலை நிலைநிறுத்தும் நிபுணர்களான போலி-இடதின் சர்வதேச ஒன்றுதிரள்வு, அந்த அரசியல்ரீதியான கண்டன பிரச்சாரத்தை ஆதரித்தது. பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) டோம் வோக்கர் எழுதுகையில், “ஜூலியன் அசான்ஜ் கற்பழிப்பு குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்க வேண்டும்,” என்றார். 'கற்பழிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மறுப்பவர்கள்' என்று அசான்ஜின் பாதுகாவலர்களை Counterfire இன் லிண்ட்சே ஜேர்மன் குற்றஞ்சாட்டினார்.

ஜாகோபின், சோசலிஸ்ட் அல்டர்னேடிவ் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, அசான்ஜின் சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் உள்ள சோசலிஸ்ட் அல்டர்னேடிவ், மற்றும் சர்வதேச அளவில் இன்னும் எண்ணற்றவை இந்த வரிசையில் இணைந்தன அல்லது மெளனம் சாதித்து உடந்தையாய் இருந்தன.

தொழிற்சங்கங்களோ அவர் பாதுகாப்புக்காக அவற்றின் உறுப்பினர்களை அணிதிரட்டவோ அல்லது அவரின் அவலநிலையை அவர்களுக்குத் தெரிவிக்கவோ எதுவும் செய்யவில்லை.

2019 ஏப்ரலில் பிரிட்டிஷ் பொலிஸார் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து அசான்ஜை இழுத்துச் சென்ற போதும் எதுவும் மாறவில்லை. அதற்கு 48 மணி நேரத்திற்குள் கார்டியன், “சுவீடனுக்கு அசான்ஜை அனுப்ப தவறுவது 'கற்பழிப்பு கலாச்சாரத்தை' ஆமோதிப்பதாக இருக்கும், பெண்கள் குழுக்கள் கூறுகின்றன,” என்ற தலைப்பில், 'அசான்ஜால் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு முன்னுரிமை கொடுங்கள்,' என்று எழுதியது.

சோசலிஸ்ட் கட்சி செய்ததைப் போலவே, சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியும் 'சுவீடனில் அசான்ஜ் வழக்கை முகங்கொடுக்க வேண்டும்,” என்பதில் உடன்பட்டதுடன், “அந்த கற்பழிப்பு குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தியது.

மொத்தமாக அந்த தருணம் வரை தொழிற் கட்சித் தலைவராக இருந்து அசான்ஜ் குறித்து மவுனமாக இருந்து வந்த ஜெர்மி கோர்பின் ஓர் அடையாள எதிர்ப்பைக் காட்ட நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார். ஆனால் பிளேயரிச அணியின் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டெல்லா கிரெஸ்சே மற்றும் ஜெஸ் பிலிப்ஸ் ஆகியோர் 'ஜூலியன் அசான்ஜை சுவீடனிடம் ஒப்படைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை' கோரி வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதம் ஒன்றை அனுப்பிய போது, உடனடியாக கோர்பின் பின்வாங்கி கொண்டார். கோர்பின், 2019 பொது தேர்தலின் போது, ஒரேயொரு முறை கூட அசான்ஜ் குறித்து குறிப்பிடவில்லை.

இந்த தனிநபர்களில் சிலரும் மற்றும் இந்த அமைப்புக்களில் சிலவும் இப்போது அமெரிக்காவிடம் அவரை ஒப்படைப்பதற்கு சம்பிரதாய எதிர்ப்பை அறிவிக்கின்றன என்றால், அந்தளவுக்கு அவை அவற்றின் வேலையைச் செய்து முடித்துவிட்டன என்பதை அறிந்தே அதைச் செய்கின்றன. விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தல்கள் யாரிடம் பேசியதோ, யாரைப் பலப்படுத்தியதோ மற்றும் யாரைத் தூண்டிவிட்டதோ அந்த பாரிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் என்ற அந்த சக்தியிடமிருந்து அசான்ஜ் துண்டிக்கப்பட்டுள்ளார், இதுதான் அவரின் பத்திரிகை வேலையைக் கண்டு ஆளும் வர்க்கம் பயப்படும் அளவுக்கு செய்திருந்தது.

இந்த அரசியல் சூழல் மட்டுந்தான், அமெரிக்க அரசாங்கமும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களும் அசான்ஜை இத்தகைய இடைவிடாத துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த எப்படி அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை விளங்கப்படுத்துகிறது. நேற்றைய விசாரணைக்கு முன்னதாக மோரீஸ் கூறுகையில், “ஜூலியன் மரணத்தைக் குறித்து எனக்கு கவலையாக உள்ளது. நான் சனிக்கிழமை அவரைச் சந்தித்தேன். அவர் மிகவும் தளர்ந்து போயிருந்தார். இந்த பயங்கரத்தை நீதிமன்றங்கள் முடிவுக்குக் கொண்டு வருமென நான் நம்புகிறேன்,” என்றார். உண்மையில் சொல்லப் போனால், அவை தான் அதை நீடித்துக் கொண்டிருக்கின்றன.

உயர் நீதிமன்றத்தில் லீவிஸ் கூறுகையில், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டதும் அவரிடம் நியாயமாக நடந்து கொள்வதற்கான உத்தரவாதங்களில் அமெரிக்கா 'நேர்மையின்றி' (bad faith) நடந்து கொள்ளுமென அவர்கள் சந்தேகிக்கக் கூடாது என்றார், “ஒப்படைக்கக் கோரும் அரசு நேர்மையாக (good faith) செயல்படுமென ஓர் அடிப்படை அனுமானம் உள்ளது,” என்றார்.

அசான்ஜின் படுகொலைக்குத் திட்டமிட பணிக்கப்பட்ட மற்றும் தன்னிடம் ஒப்படைக்கச் செய்யும் முயற்சியில் அவரை மரணத்திற்கு அருகில் கொண்டு வந்துள்ள, “படுகொலையை உள்ளிணைத்து வைத்துள்ள' சிஐஏ உளவுத்துறை முகமை உள்ள ஓர் நாட்டில் இருந்து இது கூறப்படுகிறது. சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்தின் இந்த திட்டமிட்ட பிரச்சாரத்தில் அமெரிக்காவின் சிறைக்காவலராக விளங்கும் பிரிட்டன், 'அமெரிக்கா அதன் உத்தரவாதங்களை மதிக்கவில்லை என்று கவலைப்பட்ட' “ஒரேயொரு உதாரணமும்' இல்லை என்பதையும் லீவிஸ் சேர்த்துக் கொண்டார்.

தற்காப்பு நிபுணத்துவ உளவியல் சாட்சியின் ஆதாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியில், ஸ்டெல்லா மோரீஸ் அசான்ஜின் துணை என்ற உண்மையை ஓர் அறிக்கையிலிருந்து நீக்கிவிட்ட லீவிஸ், அப்பெண்மணியின் பாதுகாப்பு குறித்த அச்சத்தாலேயே நல்ல காரணத்திற்காக அவ்வாறு அவர் செய்ததாக பிதற்றினார்.

அசான்ஜின் மனநலம் மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கான ஆபத்து இருக்கிறது என்ற ஒரே அடித்தளத்தில், அதேவேளையில் வாதி தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஏனைய ஒவ்வொரு வாதத்தையும் ஏற்றுக் கொண்டு, அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை முடக்கிய கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் நிஜமாகவே அழுகிய தீர்ப்புகளில் இருந்து ஜனவரியில் அமெரிக்க அரசாங்கம் தான் ஆதாயமடைந்தது. ஆகவே அரசு குற்றங்களை அம்பலப்படுத்திய ஒரு பத்திரிகையாளரைப் பின்தொடர தேசத்துரோக சட்டத்தை பயன்படுத்துவதற்கான தேவையையோ, அவரின் நீதி விசாரணையில் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் துஷ்பிரயோகத்தையோ, அவருக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்துவதையோ, அல்லது அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் முன்வைக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களைக் குறித்தோ விளக்க வேண்டிய அவசியம் லீவிஸ் க்கு ஏற்படவில்லை. இத்தகைய சீற்றங்கள் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அசான்ஜை துன்புறுத்துவதற்கான நிஜமான காரணங்கள், அவரின் ஆரோக்கியம் சம்பந்தமான விவாதங்கள் மற்றும் மற்ற நாட்டிடம் ஒப்படைக்கும் சட்டத்தில் உள்ள சட்ட நுணுக்கங்களுக்குப் பின்னால் மறைக்கப்படுவதால், இந்த நீண்டகால விசாரணைகள் இன்னும் அச்சுறுத்தும் விதத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்து எதிர்ப்பாளர்களின் பொறுப்பும், அசான்ஜின் பாதுகாப்பில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒருங்கிணைக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அவருக்கு உதவ முன்வருவதாகும்.

Loading