முன்னோக்கு

ஜூலியன் அசான்ஜின் விடுதலை தொழிலாள வர்க்க அணிதிரட்டலைச் சார்ந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் உச்சபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலையில் சனிக்கிழமை அவரின் 50 ஆவது பிறந்தநாளைச் செலவிட்டார், அங்கே அவர் இரண்டாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தினமும், பிரிட்டனின் குவாண்டனமோ வளைகுடா என்று கூறப்படும் ஓரிடத்தில் ஒரு பத்திரிகையாளர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், பெருநிறுவன பத்திரிகைகளில் வெறுமனே ஒரு முணுமுணுப்புடன் கடந்து சென்றுள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தின் பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை வாழ்த்துகிறார். (AP புகைப்படம் / பிராங்க் ஆக்ஸ்டீன், கோப்பு)

அசான்ஜின் இந்த பிறந்த நாள், அமெரிக்க தலைமையிலான போர்க் குற்றங்கள், உலகளாவிய இராஜாங்க சதிகள் மற்றும் சட்டவிரோத உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக அவரை அழிப்பதற்கான ஏகாதிபத்திய பிரச்சாரத்தில் மற்றொரு அடையாளக் குறியாக உள்ளது. 2011 இல் அவரது 40 வது பிறந்தநாள் பிரிட்டிஷ் வீட்டுக் காவலில் கழிந்தது, 2016 இல் அவரது 45 வது பிறந்தாளில் அவர் ஈக்வடோர் இலண்டன் தூதரகத்தை விட்டு வெளியேற முடியாத ஓர் அரசியல் அகதியாக இருந்தார்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அவை போகும் போக்கில் விடப்பட்டால், அசான்ஜ் ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஜனவரியில் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஒரு பிரிட்டிஷ் மாவட்ட நீதிமன்றம் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக மயிரிழையில் தீர்ப்பளித்திருந்தாலும், முன்தெரியும் எதிர்காலத்தில் அசான்ஜ் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான கால அட்டவணை எதுவும் இல்லை.

அந்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்கா மேல்முறையீடு செய்து வருகிறது. அசான்ஜிற்கு எதிராக குற்றஞ்சாட்ட ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை வழங்கியதை ஒரு முக்கிய அமெரிக்க சாட்சி கடந்த வாரம் ஒப்புக்கொண்டது உட்பட, அந்த வழக்கு ஓர் இட்டுக்கட்டுப்பட்ட வழக்காக மதிப்பிழந்து போயுள்ள போதும், அதுபோன்றவொரு மேல்முறையீடு ஜெயித்துவிடும் என்று சந்தேகிப்பதற்கு அங்கே நிறைய காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும், பிரிட்டிஷ் நீதித்துறை அசான்ஜை துன்புறுத்துவதற்கு வசதியாக சட்டத்தின் ஆட்சியை ஒதுக்கித் தள்ளியுள்ளது.

இந்த நிலைமை, எல்லா தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களும் அசான்ஜ் சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசர முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகிறது.

இந்தப் போராட்டத்தில், மற்ற எல்லாவற்றுக்கும் போலவே, அரசியல் நோக்குநிலையே தீர்மானகரமானது. அசான்ஜ் விடுதலைக்கான போராட்டத்தில் நேர் எதிரெதிரான இரண்டு முன்னோக்குகள் மேலெழுந்துள்ளன.

ஒன்று, அசான்ஜை நாடு கடத்தாதே (DEA) என்ற பிரிட்டனில் உள்ள உத்தியோகபூர்வ குழு போன்றவற்றால் முன்னெடுக்கப்படுகிறது, அசான்ஜ் மீது வழக்கு தொடுத்துள்ளவர் அவருக்கு எதிரான அவர்களின் பிரச்சாரத்தைக் கைவிடுமாறு அவர்களிடமே முடிவின்றி தொடர்ந்து மன்றாடி முறையீடுகளைச் செய்வதும், அரசியல் ஸ்தாபகத்தை நோக்கி ஏனைய ஆதரவு தேடும் முயற்சிகளைச் செய்வதும் இதில் உள்ளடங்குகிறது.

மற்றொன்று, சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் முன்வைக்கப்படுவது, அசான்ஜின் விடுதலையானது ஏகாதிபத்திய போருக்கு எதிரான மற்றும் அரசாங்கங்கள் முன்பினும் அதிகமாக எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதற்கு எதிரான போராட்டத்தின் பாகமாக, பரந்த சமூக மற்றும் அரசியல் அதிகாரத்திற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதை சார்ந்துள்ளது என்று அது வலியுறுத்துகிறது.

DEA குழு, முன்னாள் தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது. தொழிற் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, அசான்ஜின் விடுதலைக்காக கோர்பின் போராடுவது ஒருபுறம் இருக்கட்டும், பொதுவாக அவரைக் குறித்து பேசவும் கூட மறுத்துவிட்டார். அசான்ஜ் மீதான வழக்கைப் பகிரங்கமாக ஆதரிக்கும் பிளேயரிசவாதிகளிடம் கட்சியின் தலைமையை ஒப்படைத்த பின்னர், கோர்பினும் அவரது சகாக்களும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் பாதுகாவலர்களாக அவர்களின் அவ்வப்போதைய தோரணையை மீண்டும் தொடங்கி உள்ளனர்.

கடந்த மாதம், 24 பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதம் இந்த சமீபத்திய ஆதரவின் தன்மையைக் காட்டியது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடென் பதவியேற்றதை வாழ்த்திய அது, “உலகெங்கிலும் எதிரொலிக்கும் விதத்தில் சுதந்திரத்திற்கான ஓர் அறைகூவல் நடவடிக்கையாக' “இந்த வழக்கைக் கைவிட' அவரைக் கேட்டுக் கொண்டது. பைடெனுக்கு எழுதப்பட்ட அந்த கடிதம் குறிப்பிட்டது: “உங்களுக்கு முன் பதவியிலிருந்தவர், உலக புகழ்பெற்ற ஒரு பதிப்பாசிரியருக்கு எதிராக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் ஒரு வழக்கைத் தொடுத்தார், இதன் மீது எங்களைப் போலவே, நீங்களும், ஏமாற்றமடைந்திருக்க வேண்டும்.”

இதேபோன்ற முறையீடு, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் 'அசான்ஜை தாய்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்' நாடாளுமன்ற குழுவின் ஒரு காணொளியில் வெளியிடப்பட்டது. பழமைவாத தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பர்னாபி ஜாய்ஸ் அந்த குழுவிலுள்ள மிக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராவார், ஆனால் அசான்ஜிற்காக ஒரு சுண்டு விரலை கூட உயர்த்த மறுக்கும் ஓர் அரசாங்கத்தின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டதும் அவர் சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டதாக தெரிகிறது.

அந்தக் குழுவின் நடப்பிலுள்ள புதிய தலைவர் பீட்டர் கலீல், ஒரு வலதுசாரி தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், ஈராக் ஆக்கிரமிப்பில் ஒரு 'பாதுகாப்பு பகுப்பாய்வாளராக' ஈடுபட்டிருந்தார், மேலும் விக்கிலீக்ஸ் பிரசுரித்த இராஜாங்க உள்விவகார ஆவணங்களில் அமெரிக்க தூதரகத்தின் 'பாதுகாக்கப்பட்ட ஆதாரநபராக', அதாவது ஓர் அமெரிக்க உளவாளியாக, அம்பலப்படுத்தப்பட்டார். அசான்ஜ் மீதான வழக்கை முன்நகர்த்துவது சீனாவுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான ஆக்ரோஷத்தில் 'மனித உரிமைகளை' கையிலெடுப்பதைக் கீழறுக்கும் என்பதால், அதை கைவிடுவதை பைடென் பரிசீரிக்க வேண்டுமென, பணிவான வார்த்தைகளில், கலீல் அறிவுறுத்தி உள்ளார்.

அப்படிப்பட்ட நண்பர்கள் இருப்பவர்களுக்கு உண்மையில் எதிரிகள் தேவையில்லை.

இதற்கு நேரெதிராக, அசான்ஜ் குடும்பம் மற்றும் அவரது விக்கிலீக்ஸ் சகாக்களின் நேர்மையும், உறுதிப்பாடும் மற்றும் தைரியமும் கேள்விக்கு அப்பாற்பட்டவை. என்றாலும், அசான்ஜ் மீது வழக்குதொடுத்துள்ளவர்களிடமே முறையிடும் அதே அடிப்படை முன்னோக்கு, சமீபத்தில் அமெரிக்க பிரச்சார பயணத்தை நிறைவு செய்த அசான்ஜின் தந்தை மற்றும் சகோதரர், ஜோன் மற்றும் கேப்ரியல் ஷிப்டனிடமும் வெளிப்படையாக இருந்து.

போர்க் குற்றங்களை அசான்ஜ் அம்பலப்படுத்தியமை மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான முக்கிய கருத்துக்களைக் கூறினாலும், அவ்விருவருமே பைடென் அர்த்தமுள்ள முடிவெடுத்து வழக்கைக் கைவிடுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அந்த சுற்றுப்பயணத்தில் நியூ யோர்க், வாஷிங்டன் மற்றும் லோஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் அவர்கள் உரையாற்றினார்கள் என்றாலும், டெட்ராய்ட் போன்ற பல தொழில்துறை மையங்களில் அவர்கள் உரையாற்றவில்லை. ஜனநாயகக் கட்சியின் சுற்றுவட்டத்திலுள்ள நபர்களுடன் தோன்றிய ஷிப்டன்கள், ஆனால் வாகனத் தொழிலாளர்களையோ அல்லது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளையோ சந்திக்கவில்லை.

இந்த திவாலான அரசியல் முன்னோக்கு கடந்த காலத்தின் படிப்பினைகளையோ அல்லது அரசியல் நிலைமையைப் பற்றிய துல்லிய மதிப்பீட்டையோ ஒருபோதும் அடித்தளத்தில் கொண்டிருக்கவில்லை.

ஜோ பைடெனுக்குத் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் அதே முறையீடுகள் சில காலத்திற்கு முன்னர் ட்ரம்பிடம் முன்வைக்கப்பட்டன. ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது, அசான்ஜ் மீதான துன்புறுத்தல் ஒபாமா நிர்வாகத்தின் ஒரு பிடியாக முன்வைக்கப்பட்டது, இப்போது பைடென் பதவியில் இருப்பதால், அது 'ட்ரம்ப்-சகாப்த வழக்கு' என்று குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் முறையீடுகள் மறுத்தளிக்கப்பட்டுள்ளன, DEA போன்ற குழுக்கள் அவற்றின் முந்தைய முயற்சிகள் மீது எந்தவொரு இருப்புநிலைக் குறிப்பும் வரையாமல், சர்வசாதாரணமாக அவற்றின் அடுத்தகட்ட கடிதம்-எழுதும் பிரச்சாரத்திற்கு நகர்கின்றன.

யதார்த்தத்தில், அசான்ஜ் மீதான அமெரிக்க துன்புறுத்தல் முழு அரசியல் ஸ்தாபகத்தாலும் ஆதரிக்கப்படுகிறது. ஒபாமாவின் துணை ஜனாதிபதியாக, பைடென், அசான்ஜை 'உயர்-தொழில்நுட்ப பயங்கரவாதி' என்று அவதூறாக முத்திரை குத்தி, அந்த பிரச்சாரத்தைத் தொடங்குவதில் முக்கிய பங்காற்றினார். அவர் ஜனாதிபதியாக ஆனதில் இருந்து, அவரது நிர்வாக அதிகாரிகள் தங்களுக்கு இந்த வழக்கை கைவிடும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கும் அதன் கூட்டாளிகளும் அசான்ஜைத் தொடர்ந்து துன்புறுத்துவதில் தீர்மானகரமாக இருப்பது அதன் பரந்த முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அது அரசு இட்டுக்கட்டல்களுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களை வெளிச்சமிடுபவர்களைப் பழிவாங்குவதற்கும் ஒரு முன்னுதாரணத்தை நிறுவும் முயற்சியாக உள்ளது. இது கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தீவிரப்படுத்தப்பட்ட உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி மற்றும் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி நிலைமைகளின் கீழ், நடந்து வருகிறது.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுவதைப் போல பைடெனுக்கு 'சுதந்திரம் [மற்றும் ஜனநாயகத்திற்கான] அறைகூவலை' முன்னெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. ஈராக் மற்றும் சிரியா மீது குண்டுவீசுவதும், அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்பு செய்வதும், இந்த பெருந்தொற்றின் போது வோல் ஸ்ட்ரீட் வசம் ஒப்படைக்கப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்களைத் தொழிலாள வர்க்கம் செலுத்துமாறு அதை நிர்பந்திப்பதும், மற்றும் கடந்த 20 ஆண்டுகளில் அவருக்கு முன் பதவியில் இருந்த அனைவராலும் அமைக்கப்பட்ட பொலிஸ்-அரசு எந்திரத்தை வலுப்படுத்துவதுமே அவரது வேலைத்திட்டமாகும்.

இந்தத் தாக்குதலுக்கு எதிரான, மற்றறும் அசான்ஜின் விடுதலைக்கான, ஒரு போராட்டமானது, அமெரிக்க ஆளும் வர்க்கம், அதன் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி, ஊடக எந்திரம், இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளை விட பலமான ஒரு சக்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அந்த சக்தி அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

வேர்ஜீனியாவில் ஏறத்தாழ 3,000 வோல்வோ ட்ரக் தொழிலாளர்கள் அந்த பன்னாட்டு பெருநிறுவனத்தாலும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தாலும் திணிக்கப்பட்ட இரண்டு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தைங்களை நிராகரித்த பின்னர், ஒரு மாதத்திற்கும் மேலாக, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெருந்தொற்றின் போது, ஆசிரியர்களும் மருத்துவத்துறை தொழிலாளர்களும் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு அரசாங்கங்கள் காட்டிய கொலைபாதக, வணிக சார்பு விடையிறுப்புக்கு எதிராக தைரியமாக போராடினர். வேலைகள், சம்பளங்கள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதலுக்கும், சமத்துவமின்மை, மற்றும் முடிவில்லா போர்களுக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கம் முழுவதும் எதிர்ப்பு உள்ளதுடன், அளப்பரிய அரசியல் அதிருப்தியும் உள்ளது.

இதுவரை நடந்த போராட்டங்கள் வரவிருக்கும் இன்னும் மிகப்பெரிய போராட்டங்களுக்கு முன்னறிவிப்பாக உள்ளன. 20 ஆம் நூற்றாண்டைப் போலவே, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு முதலாளித்துவம் திரும்புவதன் விளைவு, தொழிலாள வர்க்கத்தின் பாரிய புரட்சிகர போராட்டமாக உள்ளது.

அசான்ஜின் ஆதாரவாளர்கள் இங்கே தான் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஆதரவு வட்டத்தைக் காண முடியும். ஜூலை 4 இல் கொண்டாடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் உட்பட கடந்த கால போராட்டங்களின் மாபெரும் ஜனநாயக மரபுகள் தொழிலாள வர்க்கத்தில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அசான்ஜின் அவலநிலையைத் தொழிலாள வர்க்கத்திற்கு எடுத்துரைக்கவும், அதை அணிதிரட்டவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். பணிவடக்கத்துடன் முறையீடு செய்தும் பின்அறையில் பேரம்பேசியும் இதற்கான போராட்டத்தை அடிபணிய செய்யும் எந்தவொரு முன்னோக்கையும் நிராகரிப்பதன் மூலமாக மட்டுமே இதை முன்னெடுக்க முடியும். பைடென் வழக்கை கைவிட வேண்டும்; இங்கிலாந்து உடனடியாக அசான்ஜை விடுவிக்க வேண்டும், ஆஸ்திரேலிய அரசாங்கம் துன்புறுத்தப்பட்ட அந்த குடிமகன் மற்றும் பதிப்பாசிரியரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும். இருப்பினும், அடிமட்டத்திலிருந்து எழும் ஒரு பாரிய வெகுஜன இயக்கத்தால் அவர்கள் அவ்வாறு செய்ய நிர்பந்திக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் அதைச் செய்வார்கள் என்பதை அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.

இறுதியாக, அசான்ஜ் வழக்கு நிகழ்காலத்தின் எல்லா முக்கிய கேள்விகளையும் எழுப்புகிறது. முதலாளித்துவ அரசு, ஏகாதிபத்தியப் போர் மற்றும் பண்டைய நாடி தளர்ந்த பிரபுத்துவங்களுக்கு ஒத்த ஒரு பெருநிறுவன தன்னலக்குழு மேலோங்கிய ஒரு சமூகத்தை இல்லாதொழிப்பது என இவற்றுக்கான போராட்டமே அவர் விடுதலைக்கான போராட்டமாகும். அசான்ஜ் இன்னல்படுத்தப்படுவதில் உள்ள ஒவ்வொரு அம்சமும் ஒரு மாற்றீட்டின் அவசியத்தை முன்வைக்கிறது, சமூகத்தைப் புரட்சிகரமாக மறுசீரமைக்கும் போராட்டத்திற்கான, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அதிகாரம் மற்றும் உண்மையான ஜனநாயகத்திற்கான அவசியத்தை முன்வைக்கிறது. இறுதியாக, முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு புரட்சிகரப் போராட்டம் என்பதே இதன் அர்த்தமாகும்.

Loading