அனைத்துக்கும் மேலாக இலாபங்கள்!: நோய்தொற்றுக்கள் கடுமையாக பரவுகையில், ஜேர்மன் ஆளும் வர்க்கம் “தேசிய தொற்றுநோய் நிலைமையை” முடிவுக்குக் கொண்டு வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 10, 2021, புதன்கிழமை, ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள பிரதான கடை வீதியின் காட்சி (AP Photo/Michael Probst)

ஜேர்மன் ஆளும் வர்க்கம், உயிர்களை விட இலாபமே மேலானது என்ற அதன் குற்றவியல் தொற்றுநோய் கொள்கையை பின்பற்றி, இலட்சக்கணக்கானோர் பலியான கடந்த குளிர்காலத்தின் பேரழிவை விஞ்சும் அளவிற்கு கடுமையான நோய்தொற்றுக்களின் வெடிப்பை தற்போது உருவாக்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு 100,000 குடியிருப்பாளர்களில் உருவான நோய்தொற்று நிகழ்வு வீதங்கள், திங்கட்கிழமை 201, செவ்வாய்க்கிழமை 214 மற்றும் புதன்கிழமை 232 என்றளவிற்கு புதிய மட்டங்களில் பதிவாகியுள்ளன. நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையும் புதனன்று 39,676 ஆக புதிய உச்சத்தை எட்டியது. வியாழனன்று, இது 50,196 ஆக மேலும் உயர்ந்துள்ளது.

இறப்பு எண்ணிக்கையும் பாரியளவில் அதிகரித்து வருகிறது, கொரோனா வைரஸூக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் வேகமாக 100,000 ஐ நெருங்குகிறது. புதன்கிழமை 236 மற்றும் வியாழக்கிழமை 235 புதிய இறப்புக்களை ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) பதிவு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையை 97,198 ஆக உயர்த்தியுள்ளது என RKI தெரிவிக்கிறது. ஏனைய நாடுகளைப் போலவே, இந்நாட்டிலும் உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்பதுடன், வரும் மாதங்களில் இது இரட்டிப்பாகும்.

ஒளிபரப்பு நிறுவனம் NDR இன் வலையொளி நிகழ்ச்சியான Coronavirus Update இன் சமீபத்திய அத்தியாயத்தில் பேசுகையில், பேர்லினின் சாரிட்டே மருத்துவமனையின் தலைமை வைராலஜிஸ்ட் கிறிஸ்டியான் ட்ரோஸ்டன், செவ்வாய்க்கிழமை, மற்றொரு பாரிய இறப்பு அலை நிகழவுள்ளது என எச்சரித்தார். உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஜேர்மனியில் இன்னும் 100,000 மரணங்கள் நிகழும் என்று பழமைவாதமாக எதிர்பார்க்கிறார். இதேபோன்ற உயர்ந்தபட்ச தடுப்பூசி விகிதம் கொண்ட இங்கிலாந்தில் சமீபத்திய மாதங்களில் கணிசமாக அதிகமான நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் பதிவான அனுபவத்தை வைத்து அவர் இவ்வாறு முன்கணிப்பு செய்கிறார்.

மருத்துவமனைகளில் நிலைமை ஏற்கனவே வரம்பை எட்டியுள்ளது. RKI தரவின்படி, செவ்வாய்க்கிழமை அன்று, மருத்துவமனைகளில் 1,364 கோவிட்-19 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2,687 கோவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில், தீவிர சிகிச்சைப் படுக்கைகள் ஏற்கனவே காலியாக இல்லை. Divi தீவிர சிகிச்சை பதிவேட்டின் படி, 21 பவேரிய நகராட்சிகளில் உள்ள ஒட்டுமொத்த தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் முழுமையாக நிரம்பிவிட்டன. சாக்சோனி மற்றும் துருங்கியாவின் சில பகுதிகளிலும் இதையொத்த அதிர்ச்சியூட்டும் நிலைமைகள் உள்ளன.

பள்ளிகளைப் பொறுத்தவரை, தேசியளவில் நிலைமை பேரழிவுகரமாக உள்ளது. அந்தந்த மாநில அரசாங்கங்கள், GEW கல்வி தொழிற்சங்கத்தின் ஆதரவுடன், எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்காமல் பள்ளிகளை மீளத்திறந்துள்ளதால், ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். லாண்டரின் (கூட்டாட்சி மாநிலங்கள், KMK) கல்வி மற்றும் கலச்சாரத்துறை அமைச்சர்களின் நிலையான மாநாட்டின் தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, சமீபத்திய வாரங்களில் பள்ளி மாணவர்களிடையே சுமார் 23,000 மற்றும் ஆசிரியர்களிடையே 1,800 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த வாரம் மட்டும், 1,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உட்பட, சுமார் 54,000 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில், இதேபோன்ற அதிர்ச்சியூட்டும் நிலைமைகள் உள்ளன. ஆயினும்கூட, ஜேர்மன் ஆளும் வர்க்கம் நவம்பர் 25 அன்று “தேசிய தொற்றுநோய் நிலைமை” காலாவதியாவதை அனுமதிக்கும் அதன் திட்டத்தில் விடாப்பிடியாக உள்ளது, அதாவது, தேசியளவில் ஒரே மாதிரி செயல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் சட்ட அடிப்படையை அது நீக்கவுள்ளது. மார்ச் 2020 முதல், ஜேர்மன் கூட்டாட்சி நாடாளுமன்றம் (Bundestag) “தொற்றுநோய் நிலைமையை” தொடர்ந்து நீட்டித்தது. அது இப்போது முடிவுக்கு வர உள்ளது.

வியாழக்கிழமை, தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சரும் சான்சிலருமான சமூக ஜனநாயகக் கட்சியைச் (SPD) சேர்ந்த ஓலாஃப் ஷோல்ஸ், முன்னைய விதிகளுக்குப் பதிலாக சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி-தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) கூட்டணி வழங்கும் ஒரு புதிய வரைவுச் சட்டத்தை முன்வைக்கவுள்ளார். ஊடக அறிக்கைகளின்படி, இது, இலவச விரைவு பரிசோதனைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது உட்பட, பணியிடங்களில் (தடுப்பூசி போடப்பட்ட, முன்னர் நோய்தொற்று பாதிப்புக்குள்ளான, அல்லது நோய்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான) 3G விதிகளுக்கான திட்டங்களை உள்ளடக்கியது. இந்த குறைந்தபட்ச நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டாலும், அவை நோய்தொற்றுக்கள் வெடித்துப் பரவுவதைத் தடுக்காது.

67 சதவீதமாகவுள்ள குறைந்த தடுப்பூசி விகிதம் காரணமாக, 12 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் உட்பட சுமார் 27 மில்லியன் மக்கள் வைரஸூக்கு எதிராக முற்றிலும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். இது தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையேயும் நோய்தொற்றுக்கள் வெடித்து பரவக்கூடிய அபாயத்தை அதிகரிக்கும் பிரச்சினையையும் அதிகரிக்கிறது. நவம்பர் 4 அன்று வெளியிடப்பட்ட RKI இன் சமீபத்திய வாராந்திர அறிக்கையின்படி, பிப்ரவரி முதல் 145,185 சாத்தியமுள்ள தடுப்பூசி மூலம் பரவிய நோய்தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2.2 மில்லியன் மக்கள் மட்டுமே மூன்றாவது அளவு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், கோவிட்-19 ஐ ஒழிக்கவும் மற்றும் உயிர்களைக் காப்பாற்றவும் தேவையான நடவடிக்கைகளை தடுப்பதே கூட்டணியின் மசோதாவின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. “முழு அடைப்பு, முழுமையாக பள்ளிகளை மூடுதல், உணவகங்களை மூடுதல், சுற்றுலா பகுதிகளை மூடுதல் போன்ற மிகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இனி எங்கள் பார்வையில் விகிதாசாரமாக இருக்காது,” என்று SPD இன் துணை நாடாளுமன்றக் குழுத் தலைவர்களில் ஒருவரான டிர்க் வைசி விளக்கினார்.

வைசி இவ்வாறு “போக்குவரத்து விளக்கு” கூட்டணியின் நிலைப்பாட்டை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டை சுருக்கமாகக் கூறினார். “தொற்றுநோய் நிலைமையை” முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முனைப்பு முதலில் பெரும் கூட்டணியில் உள்ள தற்போதைய பழமைவாத சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானிடமிருந்து தொடங்கியது. தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் கட்சி (AfD) மற்றும் தற்போது பேர்லின், பிரெமன் மற்றும் துருங்கியாவில் உள்ளது போல எங்கு ஆட்சியில் இருந்தாலும் SPD மற்றும் பசுமைக் கட்சியுடன் இணைந்தே ஆட்சி செய்யும் இடது கட்சி ஆதரவிலான இந்த திட்டம், வீண் பிடிவாதமான பாரிய நோய்தொற்றுக் கொள்கையை தீவிரமாக ஊக்குவிக்கிறது.

“எங்கள் பார்வையில், ஒரு புதிய பூட்டுதல் நடவடிக்கை என்பது மிகவும் அவசரமாக தடுக்கப்பட வேண்டும்,” என்று நாடாளுமன்றத்தில் இடது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டீற்மார் பார்ட்ஷ்ச் புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “புதிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் என்று மட்டுமே அவர் நம்ப முடியும் என்றும், அவற்றில் குறிப்பாக தொழிலாளர் உரிமைகள் தொடர்புபட்ட, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நடவடிக்கைகளைப் பொறுத்தவரை எங்கள் தரப்பில் இருந்தும் அவை வரவேற்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

பார்ட்ஷ்ச் யாரை முட்டாள்களாக்குகிறார்? “போக்குவரத்து விளக்கு” கூட்டணியும் இடது கட்சியைப் போலவே தொழிலாளர்களின் நலன்களை மிகக் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதாவது, அதன் தொற்றுநோய் கொள்கையில் இருந்து இது குறிப்பாக தெளிவாகிறது. “தேசிய தொற்றுநோய் நிலைமையை,” உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தமது முடிவுடன் SPD, FDP மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி, வெளியேறும் பெரும் கூட்டணி முன்னர் செய்ததை விட இன்னும் மிகுந்த இரக்கமற்ற வகையில் நிதிய மூலதனத்தின் நலன்கள் மூலம் அவர்கள் அழுத்தம் கொடுக்கவிருப்பதை ஆளும் வர்க்கத்திற்கு சமிக்ஞை செய்கிறது.

“போக்குவரத்து விளக்கு” கூட்டணி அவர்களின் கொள்கைகளை தீர்மானிக்கும் நலன்களை இரகசியமாக வைத்திருக்கவில்லை. ஆளும் வர்க்கத்தின் போர் முழக்கம்: அனைத்திற்கும் மேலாக இலாபம்! என்பதே.

கூட்டணி அமைப்பது குறித்த அவர்களது ஆய்வு விவாதங்களில், SPD, FDP மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி, கடன் உச்சவரம்பை தீவிரமாக பின்பற்றுவதற்கும், “ஒரு வணிகத் தளமாக ஜேர்மனியின் போட்டியிடும் தன்மையை” அதிகரிப்பதற்கான இலக்கை வகுப்பதற்கும் ஏற்கனவே தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொகுப்பு பிணையெடுப்புக்கள் மூலம் பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு வாரி வழங்கப்பட்ட பெரும் தொகைகளை தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து பிழிந்தெடுக்கும் பணிக்கு “போக்குவரத்து விளக்கு” கூட்டணி இவ்வாறாக திட்டம் வகுக்கிறது.

மேலும், புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார இலக்குகளும் ஆபத்தில் உள்ளன. “போக்குவரத்து விளக்கு” கூட்டணியின் பங்காளிகள் குறிப்பிடுவது போல, பெரியளவிலான மற்றும் நிலையான பொது நிதிகளின் அடிப்படையில் தொற்றுநோய் நிலைமைகளிலிருந்து பொருளாதார ரீதியாக ஐரோப்பா வலுவாக மீண்டெழுவதை உறுதிசெய்ய” அவர்கள் விரும்புகிறார்கள். இதில், “வெளிநாட்டில் ஜேர்மனியின் எதிர்கால பணிகள்,” அத்துடன் “தேசிய ஐரோப்பிய இராணுவங்களுக்கு இடையேயான அதிகரித்த ஒத்துழைப்பு” ஆகியவை அடங்கும்.

நிதிய மூலதன நலன்களையும் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் உலக வல்லரசு அபிலாஷைகளையும் உள்ளடக்கிய இந்த திட்டநிரல், வைரஸைக் கட்டுப்படுத்த அல்லது அகற்றத் தேவையான விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், தடுப்பூசி வழங்கல், பாரிய பரிசோதனை நடவடிக்கை, மற்றும் அனைத்து நோய்தொற்று பாதிப்பாளர்களையும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுடன், முதன்மையாக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவது உள்ளிட்ட விரிவான பூட்டுதல் நடவடிக்கைகளை எடுப்பதாகும்.

உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே ஒரு மருத்துவ பிரச்சினை அல்ல, மாறாக அரசியல் சார்ந்த பிரச்சினை என்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளன. ஏப்ரல் 2020 தொடக்கத்திலேயே, சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei-SGP) ஒரு அறிக்கையில் இவ்வாறு எச்சரித்துள்ளது:

ஆளும் வர்க்கம் தொற்றுநோயை “வழமையான விவகாரம்” ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதாவது, எதிர்காலத்தில் மரணங்கள் தொடரும் என்ற எண்ணத்திற்கு மக்களைப் பழக்கப்படுத்த முனைகிறது. தொழிலாளர்கள் இதை தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது. அதனால்தான் செய்திகளில் தெரிவிக்கப்படும் இறப்பு எண்ணிக்கை பற்றிய அறிக்கைகள் பெரிதும் மூடி மறைக்கப்படுகின்றன.

இந்த முயற்சிகளின் பின்னணியில் ஒரு மோசமான வர்க்க தர்க்கம் உள்ளது. தொழிலாளர்கள் ஒருவகையான செலவழிப்புப் பொருளாகவே கையாளப்படுகிறார்கள். அவர்களின் மரணம் இலாபமீட்டலின் ஒரு சாதாரண பகுதியாக கருதப்படுகிறது. மேலும், வைரஸூக்கு பலியானவர்களின் இடங்களை மற்றவர்களை கொண்டு நிரப்ப முடியும்.

வெகுஜன மரணம் ஒரு சமூகத்தின் “வழமையான விவகாரமாக” ஏற்றுக்கொள்ளப்படுவதை தொழிலாள வர்க்கம் அனுமதிக்காது. உலகெங்கிலும், முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்பு முறையைப் பின்தொடர்ந்து பிணக் குவியல்களின் மீது நடக்கும் ஆளும் வர்க்கத்திற்கு அச்சுறுத்தலும் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோசலிச சமத்துவக் கட்சிகள், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தேவையான விஞ்ஞானம், வரலாறு மற்றும் அரசியல் அறிவுடன் கூட, தற்போது பெருகி வரும் வேலைநிறுத்தங்களையும் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச இயக்கமாக மாற்றுவதற்கு உலகளவில் போராடுகின்றன.

Loading