முன்னோக்கு

விஞ்ஞான உச்சிமாநாடு அதிகரித்து வரும் தொற்றுநோய் பேரழிவை எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், உலக சுகாதார வலையமைப்பு (World Health Network - WHN) அதன் இரண்டாவது இணையவழி “தொற்றுநோய்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய உச்சி மாநாட்டை” நடத்தியது. இதில் கலந்துகொண்ட 20 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகள், கோவிட்-19 இன் உலகளாவிய ரீதியில் அகற்றுதலுக்காக (elimination) வாதிட்டனர். உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஆல் நடத்தப்பட்ட 'இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது' என்ற வலையரங்கத்தில் அக்டோபர் 24 அன்று வழங்கப்பட்ட உலகளாவிய ரீதியாக அகற்றுதல் நடவடிக்கைக்கான கூடுதல் ஆதாரத்தை உச்சிமாநாடு வழங்கியது.

உலக சுகாதார வலையமைப்பு உச்சிமாநாட்டில் 22 வெவ்வேறு அமர்வுகள் சுமார் 25 மணிநேரம் நீடித்ததோடு COVID-19 தொற்றுநோயின் மிக முக்கியமான விஞ்ஞான அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. நியூசிலாந்தில் உள்ள ஒட்டாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். மைக்கல் பேக்கர் மற்றும் கனடாவில் உள்ள கல்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். மல்கோர்சாட்டா காஸ்பெரோவிச் ஆகியோர் WSWS வலையரங்கத்தில் வழங்கப்பட்ட ஒரே மாதிரியான விளக்கங்களை அளித்தனர், தொற்றுநோயைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினர்.

தொற்றுநோய்களின் தொடக்கத்தில், கோவிட்-19 ஐ எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து நியூசிலாந்து அரசாங்கத்திற்கு வெற்றிகரமாக ஆலோசனை வழங்கிய டாக்டர். பேக்கர், அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை மாற்றமானது, அவர் உட்பட விஞ்ஞானிகளின் ஆட்சேபனையை தாண்டியது என்பதை தெளிவுபடுத்தினார். அவர் குறிப்பிட்டார், “ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், [நியூசிலாந்து] அரசாங்கம் நாம் அடிப்படையில் உலகின் பிற பகுதிகளுடன் மீண்டும் சேர வேண்டும் என்று முடிவு செய்தது, எனவே நாங்கள் 'இறுக்கமான அடக்குமுறை' என அழைக்கப்படும் அணுகுமுறைக்கு மாறினோம். நியூசிலாந்தில் உள்ள பல விஞ்ஞானிகள் இந்த மாற்றத்தை எதிர்த்தனர், ஆனால் அரசாங்கம் பல்வேறு காரணங்களுக்காக தனக்கு வேறு வழியில்லை என்று உணர்ந்தது.”

மற்ற விஞ்ஞானிகள் காற்றின்வழி பரவுதல், உயர்தர முகக்கவசங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம், உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகள், நீண்டகால கோவிட் பாதிப்புகள், SARS-CoV-2 இன் புதிய வகைகளின் வளர்ச்சி மற்றும் பிற தலைப்புகள் பற்றிய விரிவான அறிக்கைகளை வழங்கினர். நோர்வே, சுவீடன், ஜேர்மனி, பிரேசில், கனடா, அமெரிக்கா, தைவான், கட்டார், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகள் உட்பட உலகின் குறிப்பிட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தொற்றுநோயின் அனுபவம் குறித்த அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

உச்சிமாநாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் நடைபெற்றது. உலகளாவிய தினசரி புதிய COVID-19 தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன, உச்சிமாநாட்டின் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

HelpNow நிறுவனத்தில் பணிபுரியும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இஸ்ஹார் ஹுசைன் ஷேக், மற்றும் பலர் கோவிட்-19 நோயாளியை மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து மே 28, 2020 அன்று எடுத்துச் செல்கின்றனர் [Credit: AP Photo/Rafiq Maqbool]

கடந்த வாரம், உத்தியோகபூர்வ COVID-19 இறப்பு எண்ணிக்கை ஐந்து மில்லியன்களை தாண்டியுள்ளது. அதேசமயம், அதிகப்படியான இறப்புகளின் மதிப்பீடுகள் உண்மையான எண்ணிக்கையை தோராயமாக 17 மில்லியனாகக் காட்டுகின்றன. வெள்ளிக்கிழமை, பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (BMJ) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அகற்றுதல் உத்தியை நிராகரித்த நாடுகளில் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. அமெரிக்க ஆண்கள் 2020 இல் சராசரியாக 2.27 வருட ஆயுளை இழந்துள்ளார்கள், அதே நேரத்தில் '2020 ஆம் ஆண்டில் 31 நாடுகளில் 28 மில்லியனுக்கும் அதிகமான வாழ்க்கை ஆண்டுகள் இழக்கப்பட்டுள்ளன.' பேரழிவுகரமான உலகளாவிய சூழ்நிலை இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முகக்கவச உத்தரவுகளையும் அனைத்து தணிப்பு (mitigation) நடவடிக்கைகளையும் கைவிடுகின்றன.

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் T-cell நோயெதிர்ப்பு நிபுணரான டாக்டர். அந்தோனி லியோனார்டி, நீண்டகால கோவிட் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியைப் பற்றிப் பேசினார், ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பின்னர் அறிகுறிகள் வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும் ஒரு நிலை இது. அவர் நீண்டகால COVID பற்றிய பல ஆய்வுகளை, மேற்கோள்களை காட்டினார் மற்றும் குறிப்பாக வைரஸின் தீங்கு விளைவிக்கும் தன்மையை சுட்டிக்காட்டினார். 'அனைத்து உடலியல் அமைப்புகளுக்கும் பரவக்கூடிய' 50 க்கும் மேற்பட்ட அறிகுறிகளை நீண்டகாலமாக நீடிக்கும் கோவிட்டை உள்ளடக்கியது என்று அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 மூளையழற்சி, நீண்டகால நரம்பியல் பாதிப்பு மற்றும் உடலின் எதிர்ப்பு சக்தி கோளாறுகளின் வளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்துக்களை ஆராய்ச்சி காட்டுகிறது.

டாக்டர். லியோனார்டி பாதுகாப்பற்ற பள்ளிகளை மீண்டும் திறப்பதை எதிர்த்தார் மற்றும் COVID-19 ஆல் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் ஆபத்துகளை கோடிட்டுக் காட்டும் பரவலாக விநியோகிக்கப்பட்ட கடிதத்தை எழுதியுள்ளார். பாதுகாப்பற்ற பள்ளிகள் மீண்டும் திறப்பதன் சாத்தியமான நீண்டகால தாக்கங்கள் பற்றி கேட்கப்பட்டதற்கு, டாக்டர் லியோனார்டி பதிலளித்தார்: 'வெளியீட்டு அறிக்கைகள், குழந்தைகளின் உற்பத்தி ஆயுட்காலம் குறைவதை காட்டுகிறது. மேலும் இந்தக் குறைவு, பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே இது ஒரு மோசமான யோசனை, நாட்பட்ட நோய்களுக்கு குழந்தைகளை உள்ளாக்குகிறோம்.

உலகளாவிய அகற்றுதல் உத்திக்காக போராட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி கருத்து கேட்கப்பட்டபோது டாக்டர். லியோனார்டி, ரீசஸ் குரங்குகள் பற்றிய ஆய்வை மேற்கோள் காட்டினார். COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடமும் அவற்றின் மூளையில் லூயி உடல்களை (Lewy bodies) உருவாக்குகிறது என்று ஆய்வு காட்டுகிறது. லூயி உடல்கள் என்பது, பார்கின்சன் நோய் மற்றும் டிமென்ஷியா (சிந்தனை திறன்களை இழப்பது) உடன் தொடர்புடையது.

இந்த கண்டுபிடிப்பின் தாக்கங்களை எடுத்துக்காட்டி, டாக்டர் லியோனார்டி ஒரு பயங்கரமான காட்சியை முன்வைத்தார்: 'இது மனிதர்களுக்கு நடந்தால், நமக்கு நரம்பியக்கடத்தல் ஏற்படத் தொடங்கினால், அதனால் பாதிக்கப்படும் அனைவரையும் யார் கவனித்துக் கொள்ளப் போகிறார்கள்? மக்கள்தொகையில் உள்ள அனைவரையும் பணயம் வைத்து, இந்த மற்றவர்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய மிகக் குறைந்த அளவிலான மக்களை கொண்டிருக்கவா நாம் உண்மையில் விரும்புகிறோம்? நாம் உண்மையில் முழுமக்கள் தொகைக்கும் ஆபத்தை ஏற்படுத்த விரும்புகிறோமா?

'நிறுவனமயமாக்கப்பட்ட வாழ்க்கையின்-முடிவை நாம் காணக்கூடிய அபாயம் இருப்பதாக நான் நினைக்கிறேன், மக்கள் கவனிக்கப்பட முடியாத இடத்தில், அங்கே அவர்கள் ஒரு மருந்து கொடுக்கப்பட்டு இறக்க விடப்படுவார்கள்.' அவர் மேலும் கூறினார், 'நரம்பியல் சிதைவு (neurodegeneration - நரம்பு சமநிலை, இயக்கம், பேசுதல், சுவாசம் மற்றும் இதய செயல்பாடு போன்ற உங்கள் உடலின் பல செயல்பாடுகளை பாதிக்கின்றன.) மற்றும் பிரச்சனைகள் உள்ள ஒரு பாரிய அளவிலான மக்களுடன் தொடர்புபட்ட இது போன்ற ஒரு பெரிய ஆபத்தை நாங்கள் இயக்குகிறோம் என்று நான் நினைக்கிறேன். எனவே, அகற்றுவதற்கான ஒரு உத்தியைக் கொண்டிருப்பது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.

உச்சிமாநாட்டில் பல அமர்வுகள் SARS-CoV-2 இன் காற்றில் பரவும் விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன, பேச்சாளர்கள் இந்த விஞ்ஞானத்தை மக்களுக்கு கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். உயர்தர முகக்கவசங்களின் உலகளாவிய பயன்பாடு கோரப்பட வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் காற்றோட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் பிற நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

காற்றில் கலக்கும் துகள்கள் (aerosols) பற்றிய ஒரு அமர்வில், தைவானில் உள்ள நேஷனல் சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தின் டாக்டர். சியா வாங், “காற்றில் கலக்கும் துகள்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகளைச் சேர்ப்பதன் மூலம் நோய்க் கட்டுப்பாட்டின் தற்போதைய முன்னுதாரணத்தை மேம்படுத்துவதற்கான நேரம் இது, மேலும் நாம் சுவாசிக்கும் காற்று தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும்'.

மற்றொரு அமர்வில், Boston University School of Public Health இன் ஜூலியா ரைஃப்மன், மே 13, 2021 அன்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) முகக்கவச வழிகாட்டுதல்களில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கம் குறித்து பேசினார். CDC இன் முடிவை, 'ஒரு வரலாற்றுக் கொள்கைப் பிழை, இது பல தசாப்தங்களுக்கு விளைவுகளைக் கொண்டிருக்கும் சாத்தியம் உண்டு' என அவர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டில் 43 மாநிலங்களில் முகக்கவச கொள்கைகள் இருந்தன, ஆனால் மே 2021 க்குப் பின்னர் ஹவாய் மட்டுமே அவற்றைத் பராமரித்தது, அதே நேரத்தில் ஏழு மாநிலங்களும் கொலம்பியா மாவட்டமும் மட்டுமே டெல்டா மாறுபாட்டின் தற்போதைய அலையின் போது முகக்கவச கொள்கைகளை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அதே அமர்வில், விஞ்ஞானி நிக்கோலஸ் ஸ்மித், CDC இன் முகக்கவச பரிந்துரைகளில் செய்யபபட்ட மாற்றமானது, 'காற்றுவழி பரவுதல் நடப்பதாக CDC இறுதியாக ஒப்புக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு நடந்தது' என்று குறிப்பிட்டார்.

'பிக் பார்மா மற்றும் 'தடுப்பூசி நிறவெறி,' என்ற தலைப்பில் ஒரு அமர்வில், அயர்லாந்தில் உள்ள டப்ளின் சிட்டி பல்கலைக்கழகத்தின் டாக்டர். அந்தோனி ஸ்டெயின்ஸ், உலகளாவிய தடுப்பூசி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் இலாபம் ஈட்டும் மருந்து ஏகபோகங்களைக் கண்டித்தார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் ஒரு மிகமோசமான திறமையற்ற, மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் நியாயமற்ற முறையில் உலகெங்கிலும் வளங்களை விநியோகித்துள்ளோம், மேலும் இது நம்மை கணக்கிட முடியாத ஆபத்தில் தள்ளுகிறது. மற்றொரு புதிய மாறுபாடு இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது, மேலும் அந்த புதிய மாறுபாடு தற்போது நம்மிடம் உள்ளதை விட மோசமாக இருக்குமா என்பதும் யாருக்கும் தெரியாது.

உச்சிமாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், COVID-19, தற்போதைய சூழ்நிலையின் மோசமான தன்மை மற்றும் உலகளவில் வைரஸை அகற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான புரிதலை வழங்குகின்றன. இந்நிகழ்ச்சியை இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பார்த்திருக்க வேண்டும். இருப்பினும், நியூ யோர்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அல்லது வேறு எந்த நிறுவனமயப்பட்ட செய்தி நிறுவனத்தாலும் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை, பிரதான ஊடகங்களால் இது இருட்டடிப்பு செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது, தொற்றுநோயைத் தொடர அனுமதிப்பதில் அவற்றின் பங்கை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் இந்தக் கட்டுரைக்கு வெளியே, நிகழ்வு பற்றி எந்தவொரு அறிக்கையும் கிடையாது.

உச்சிமாநாட்டைக் கேட்கும்போது, வழங்கப்பட்ட உள்ளடக்கத்தின் மகத்தான முக்கியத்துவத்திற்கும், ஒவ்வொரு அமர்விலும் குறைவான வருகையை ஏற்படுத்திய ஊடகங்களில் விளம்பரம் இல்லாததற்கும் இடையே உள்ள குழப்பமான இடைவெளியால் ஒருவர் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. அதன் மிக உயர்ந்த கட்டத்தில், தொடக்க அமர்வில் 80 பேர் மட்டுமே கலந்து கொண்டனர், மேலும் ஒவ்வொரு தலைப்பு கூட்ட அமர்விலும் சுமார் 10-30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

முற்றிலும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தில், பங்கேற்பாளர்கள் பாராட்டப்பட வேண்டும், மேலும் அவர்களின் பணி பரவலாக பாராட்டப்பட வேண்டும். அவர்கள் செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தால் தூண்டப்பட்டு, தங்கள் அறிக்கைகளைத் தயாரிப்பதில் அதிக நேரங்களை அர்ப்பணித்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இருப்பினும், உச்சிமாநாட்டில் முன்வைக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கும் அரசியல் முன்னோக்கிற்கும் இடையே தெளிவான வேறுபாடு இருந்தது. தொற்றுநோய்க்கு உணவளிக்கும் மற்றும் தொற்றுநோய்களின் பற்றி பொய்யுரைக்கும் ஊடகங்களால் பரந்தளவிலான பார்வையாளர்களை இழந்து, விஞ்ஞானிகள் தாங்களாகவே தங்கள் கண்டுபிடிப்புகளில் பெரும்பகுதியை, செவிமடுத்து அரசாங்கக் கொள்கையை மாற்றக்கூடிய சக்திகளுக்கு முறையீடு செய்யக்கூடிய வகையில் வடிவமைத்தனர்.

COVID-19 ஐ அகற்ற அரசாங்கங்களை நம்ப வைக்க முடியும், ஏனெனில் அது அவர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தும் என்று வாதமும் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், இது பரிசீலிக்கப்படும் விஷயங்களுடன் தொடர்புடையது அல்ல, மேலும் மனித உயிர்களைக் காப்பாற்றுவது செலவு குறைந்தது என்பதை ஒருவர் நிரூபிக்க வேண்டிய ஒரு சமூகத்தில், ஏதோ ஆழமான தவறு உள்ளது.

ஆனால் தொற்றுநோய்களின் போது டிரில்லியன் கணக்கான டாலர்களை குவித்த இரக்கமற்ற நிதிய உயரடுக்குகளுக்கு இந்த வாதமே அர்த்தமற்றது. அரசியல்வாதிகளின் உதவியுடன், இந்த உயரதிகாரிகள் பொது நிதியை பங்குச் சந்தையில் செலுத்தினர். அமெரிக்காவில் மட்டும், தொற்றுநோய்களின் முதல் 18 மாதங்களில் பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை 1.8 டிரில்லியன் டாலர்கள் அல்லது 62 சதவிகிதம் அதிகரித்தனர். சர்வதேச தொழிலாள வர்க்கம் அளவிட முடியாத இழப்புகளைச் சந்தித்திருக்கும் அதே வேளையில், பங்குச் சந்தைகள் உலகெங்கிலும் தொடர்ந்து உச்சத்தில் உள்ளன.

விஞ்ஞானிகள் அரசியல் மூலோபாயவாதிகள் அல்ல. பெரும் திரளான மக்களைச் சென்றடைவது மற்றும் ஊடகங்களால் துண்டிக்கப்படுவது எப்படி என்று தெரியாமல், அவர்கள் ஒருவித மூடப்பட்ட சமூகமாகவே இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில், WSWS இன் அக்டோபர் 24 வலையரங்கம் அதன் அனைத்து முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்ட இந்த நிகழ்வு, விஞ்ஞானத்துக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு உயிருள்ள இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூன்றரை மணிநேர வலையரங்கம், மதிப்புள்ள விஞ்ஞான அறிக்கைகளையும், தெளிவான அரசியல் முன்னோக்கையும் அளித்தது. தொழிலாள வர்க்கம் மட்டுமே தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி என்பதை வலியுறுத்தியது.

அக்டோபர் 24 வலையரங்கத்தின் முக்கிய படிப்பினைகளில் ஒன்று, தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்திற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் விஞ்ஞான சமூகத்திற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்பதை காட்டியது. வலையரங்கத்தில் கலந்து கொண்ட பல தொழிலாளர்கள், விஞ்ஞானிகளால் தாங்கள் எவ்வளவு ஆழமான கல்வி கற்றுள்ளனர் என WSWS க்கு தெரிவித்தனர். உயிர்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தங்களுக்கு இப்போது தெளிவான யோசனை இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், உலக சுகாதார வலையமைப்பின் உச்சிமாநாட்டில் வழங்கப்பட்ட அறிக்கைகள், SARS-CoV-2 ஐ உலகளாவிய ரீதியில் அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரே சரியான தொற்றுநோய்க் கொள்கை என்பதற்கு மிகப்பெரும் ஆதாரத்தை வழங்குகின்றன. இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கு, தொற்றுநோய் பற்றிய விஞ்ஞானரீதியான புரிதலுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது. கார்ல் மார்க்ஸ் மிகவும் சிறப்பாகச் சொன்னது போல், 'தத்துவம் வெகுஜனங்களைப் பற்றிக் கொண்டவுடன் அது உருவாக்கும் சக்தியாக மாறுகிறது.'

உலக சோசலிச வலைத் தளம், விஞ்ஞானிகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு போராடும் கூட்டணியை உருவாக்குவதற்கான போராட்டத்தைத் தொடரும், மேலும் தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும் அத்தியாவசியமான உலகளாவிய போராட்டத்தை ஒருங்கிணைக்க போராடும்.

Loading