முன்னோக்கு

போலாந்து-பெலாருஷ்ய எல்லையில் அகதிகள் நெருக்கடியும், போர் அபாயமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போலந்து, லித்துவேனியா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகள் பெலாருஸ் எல்லையில் அவை தடுத்து வைத்துள்ள ஒரு சில ஆயிர அகதிகளுக்கு அனுமதி மறுக்க முடிவு செய்ததால் ஏற்பட்ட நெருக்கடி ஓர் ஆபத்தான புதிய கட்டத்தை எட்டி வருகிறது. பெலாருஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லூக்காஷென்கோ ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஒரு 'கலப்பினப் போரில்' (hybrid war) அகதிகளை ஆயுதங்களாக பயன்படுத்துவதாக ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பல நாட்களாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இப்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகள் துருப்புக்களை அணிதிரட்டி, அதிவலது விஷமப் பிரச்சாரத்தைத் தூண்டி விட்டு வருவதுடன், சொல்லப் போனால் பெலாருஸ் மற்றும் ரஷ்யாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ஜேர்மனிய சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி), ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (சமூக ஜனநாயகக் கட்சி) மற்றும் இன்னும் பல முன்னணி அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே, பெலாருஸூம் அதன் கூட்டாளி ரஷ்யாவும் 'ஜனநாயக அண்டை நாடுகளை நிலைகுலைக்க' நேட்டோ எல்லைகளில் ஒரு 'கலப்பினத் தாக்குதலுக்கு' தலைமை தாங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நவம்பர் 10, 2021 புதன்கிழமை அன்று பெலாருஸ் குடியரசின் State Border Committee வெளியிட்ட இந்தக் கையேடு புகைப்படத்தில், பெலாருஸின் க்ரோட்னோவிற்கு அருகிலுள்ள பெலாருஸ்-போலந்து எல்லையில் மத்திய கிழக்கு மற்றும் பிற இடங்களில் இருந்து குடியேறியவர்கள் கூடாரம் அமைத்துள்ள காட்சி. (State Border Committee of the Republic of Belarus via AP)

எஸ்தோனிய பாதுகாப்புதுறை மந்திரி கல்லே லானெட் (Kalle Laanet), பெலாருஸ் அரசாங்கத்தின் 'கலப்பினத் தாக்குதலை' '30 ஆண்டுகளில் அப்பிராந்தியத்திற்கான மிகப்பெரிய பாதுகாப்பு அபாயமாக' விவரித்தார். போலந்தின் பிரதம மந்திரி மத்தேயுஸ் மொராவிஜெஸ்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் ஆபத்தில் இருப்பதாகக் கூறினார். போலந்து எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் தலைவருமான டொனால்ட் டஸ்க், ஒரு தாக்குதல் சம்பவத்தில் நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போருக்குள் இறங்க அவசியப்படும் சட்டபூர்வ இயங்குமுறையின் முதல் கட்டமான நேட்டோ உடன்படிக்கையின் நான்காம் ஷரத்தைச் செயல்படுத்த அழைப்பு விடுத்தார்.

போலந்து அதன் மிகப் பெரிய பொலிஸ் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அப்பாற்பட்டு, பெலாருஸ் எல்லையில் 20,000 கனரக ஆயுதமேந்திய துருப்புக்களை நிறுத்தியுள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனமான Tass தகவல்படி, போலந்து கவசப் படைப்பிரிவுகள் எல்லைக்கு அருகே நகர்த்தப்பட்டுள்ளன. பேர்லினில் உள்ள போலந்து தூதர் Andrzej Przylebsni வலதுசாரி தீவிரவாத இதழான Junge Freiheit க்கு கூறுகையில், 'விரைவிலேயே முதல் குண்டு வீசப்படலாம்,” என்றார்.

உக்ரேனும் பெலாருஸை ஒட்டிய அதன் 1,000 கிலோமீட்டர் எல்லைக்கு 8,500 சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளையும், அத்துடன் 15 ஹெலிகாப்டர்களையும் நகர்த்தி வருகிறது, 560 மில்லியன் யூரோவில் எல்லை அரண்களைக் கட்ட அது திட்டமிடுகிறது.

போலந்தும் லித்துவேனியாவும் பெலாருஸை ஒட்டிய அவற்றின் 1,100 கிலோமீட்டர் எல்லையை முட்கம்பி வேலி கொண்டு அடைத்து, அவசரகால நிலையை அறிவித்துள்ளன. பத்திரிகையாளர்கள், தொண்டு அமைப்புகள், மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் கூட ஒரு மூன்று கிலோமீட்டர் அகல நிலப்பரப்பில் நுழைவதற்குக் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் இழந்துள்ள அகதிகள், வன்முறையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதுடன், உணவோ அல்லது தங்குமிடமோ இல்லாமல் பட்டினியிலும் குளிரிலும் சாக விடப்படுகின்ற நிலையில், அவற்றை நேரில் கண்டறிவதற்கோ அல்லது தொண்டு அமைப்பு தொழிலாளர்களோ கூட அங்கே இல்லை.

போலந்து எல்லைக்கு அருகே அகதிகள்

ஐரோப்பிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பெலாருஸுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து முடிவு செய்ய அடுத்த வாரம் ஒன்று கூடுகிறார்கள். பெலாருஸூக்கு அகதிகளைக் கொண்டு வரும் விமானச் சேவை நிறுவனங்களுக்குத் தடைவிதிக்கப்பட உள்ளது, பெலாருஸ் விமானச் சேவை நிறுவனங்கள் மட்டுமல்ல ரஷ்ய மற்றும் துருக்கிய விமானச் சேவை நிறுவனங்களும் இதில் உள்ளடங்கும்.

இது அமெரிக்காவுடன் கருத்தொன்றி செய்யப்படுகிறது. புதன்கிழமை வொன் டெர் லெயனுக்கும் பைடெனுக்கும் இடையே நடந்த ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, நிலைமை பற்றி அவர்களிடைய ஒரு பொதுவான மதிப்பீடு இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் அறிவித்தார், மேலும் பெலாருஸ் மீது அதிக தடையாணைகளுக்கு அமெரிக்காவும் தயாரிப்பு செய்து வருவதாகவும், “அவை டிசம்பர் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும்' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பெலாருஸிற்கு எதிரான விஷமப் பிரச்சாரம் மற்றும் எல்லையில் அகதிகள் மீதான மிருகத்தனமாக துஷ்பிரயோகம் என இவற்றுக்குப் பின்னால் உள்ள காரணங்களுக்கும் 'ஸ்திரமின்மை' மற்றும் 'பாதுகாப்பு' அச்சுறுத்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மேற்கத்திய பொருளாதாரத் தடையாணைகளுக்குப் பயந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் பாதுகாவலராக சேவையாற்ற ஜனாதிபதி லூக்காஷென்கோ மறுத்த பின்னர், பெலாருஸின் 12,000 என்று மதிப்பிடப்பட்ட அகதிகளில் ஒரு சில ஆயிரம் பேர் போலாந்து எல்லையை அடைந்துள்ளனர், அவர்களில் ஏறக்குறைய எல்லோருமே ஜேர்மனிக்குச் செல்ல விரும்பினார்கள். போலந்து அரசாங்கம் எந்த சுதந்திர ஆய்வுக்கும் தடை விதிப்பதால், சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஜேர்மன் எல்லை அதிகாரிகள் செப்டம்பரில் 5,300 அகதிகளையும், அக்டோபரில் கூடுதலாக 1,900 அகதிகளையும் பதிவு செய்தனர், இவர்கள் பெலாருஸ் வழியாக ஜேர்மனியை அடைந்தவர்கள், இது இரண்டு மாதங்களில் 7,000 க்கும் சற்று அதிகமாக உள்ளது.

ஒப்பிட்டுப் பார்த்தால், 2015 அகதிகள் நகர்வின் உச்சத்தில் நாளொன்றுக்கு 10,000 அகதிகள் ஜேர்மனிக்கு சென்றனர், அவர்கள் அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டு கவனித்துக் கொள்ளப்பட்டனர்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஜேர்மன் ஐக்கியம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்குப் பின்னர் ஒருபோதும் இல்லாதளவுக்கு, நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. முன்னாள் வார்சோ உடன்படிக்கையின் அனைத்து ஐரோப்பிய உறுப்பு நாடுகளும், அத்துடன் பால்டிக் நாடுகளில் உள்ள மூன்று முன்னாள் சோவியத் குடியரசுகளும் இப்போது நேட்டோவில் இணைந்துள்ளன, நேட்டோ பல ஆண்டுகளாக ரஷ்ய எல்லைகளில் அதன் துருப்புக்களின் இருப்பைப் பாரியளவில் விரிவுபடுத்தி வருகிறது. பதட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று வெளிப்படையான இராணுவ மோதலாக மாறும் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெலாருஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Vladimir Makeï புதனன்று அவரின் ரஷ்ய சமதரப்பான செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார், அதன் பின்னர் லாவ்ரோவ் கூறுகையில் இரு நாடுகளும் 'வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் சர்வதேச அமைப்புகளுக்குள் தூண்டிவிடும் பெலாருஸ்க்கு எதிரான பிரச்சாரத்தை எதிர்கொள்ள' அவற்றின் ஒத்துழைப்பை மீளவலுப்படுத்தும் என்றார். இராணுவக் கூட்டணி 'நம் கூட்டாளிகளுக்குக் கூடுதலாக உதவும், அப்பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பேணவும் தயாராக உள்ளது' என்று நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் Daily Telegraph கூறிய மறுநாள், ரஷ்யா புதனன்று இரண்டு Tu-22M3 ரக மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை பெலாருஸ் மீது பறக்க விட்டது.

லூக்காஷென்கோவின் நடவடிக்கைகளை விட ரஷ்யாவை நோக்கிய கோபங்களின் சமீபத்திய இந்த தீவிரப்பாட்டுக்கு இன்னும் அதிக அடிப்படையான காரணம், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சமூக பதட்டங்கள் மிகப் பெரியளவில் தீவிரமடைந்து வருவதாகும்.

கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா இரண்டினது பொருளாதார வாழ்வையும் ஒரு சில தன்னலக்குழுக்கள் இப்போது கட்டுப்படுத்துகின்றன. சிறிய எண்ணிக்கையிலான பில்லியனர்கள் இந்த பெருந்தொற்றில் இருந்து மிகப் பெரியளவில் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ள அதேவேளையில் ஐரோப்பாவில் 1.4 மில்லியன் பேர் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர். முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள இந்த சமீபத்திய அலை இறப்பு எண்ணிக்கையை இருமடங்காக்க அச்சுறுத்துகிறது.

இலாபத்திற்காக மனித உயிரை ஈவிரக்கமின்றி தியாகம் செய்யும், ஐரோப்பிய அரசாங்கங்களது கொலைபாதகக் கொள்கைக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி மேலும் மேலும் உறுதிப்பட்டு வருகிறது. இது தாங்க முடியாத வேலை நிலைமைகளுக்கு எதிரான மற்றும் அதிக சம்பளங்களுக்கான வேலைநிறுத்த அலையுடன் பொருந்தி வருகிறது.

தேசியவாதம், போர் பிரச்சாரம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தை ஊதிவிடுவதன் மூலம் ஆளும் வர்க்கம் சமூக பதட்டங்களைத் திசைதிருப்பும் முயற்சிக்கப்பட்ட மற்றும் பரிசோதிக்கப்பட்ட முறையைக் கொண்டு விடையிறுத்து வருகிறது. மில்லியன் கணக்கானவர்களுக்கு அதிர்ச்சியும் திகிலும் ஏற்படுத்தும் வகையில், எல்லையில் அகதிகளைக் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்வது, மக்களை அச்சுறுத்தவும், மரணத்திற்குப் பழக்கப்படுத்தவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை அகற்றவும் மற்றும் சமூகத்தின் பாசிச கழிவுகளைக் கிளறி விடவும் சேவையாற்றுகிறது.

பெண்கள் மற்றும் சிறிய குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அகதிகள் பெலாருஸ் எல்லைப் பகுதியின் காடுகளிலும் சதுப்பு நிலங்களிலும் உணவு, குடிநீர் அல்லது மருத்துவ கவனிப்பு இல்லாமல் சிக்கியுள்ளனர். தங்கும் கூடாரங்கள் மற்றும் போர்வைகள் கூட இல்லாமல் பலர், உறைபனி குளிர் மற்றும் மழைக்கு ஆளாகிறார்கள். இதுவரை குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர். எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரின் நகரசபை தலைவர் உண்மையான இறப்பு எண்ணிக்கையை 70 முதல் 200 வரை இருக்கலாமென மதிப்பிட்டார். காட்டிலும் ஆறுகளிலும் சடங்களைக் கண்டதாக அகதிகள் கூறியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இப்படி இருந்தும் யாரேனும் எல்லையைக் கடந்து விட்டால் அவர் வலுக்கட்டாயமாக மீண்டும் பெலாரஸிற்கு அனுப்பப்படுகிறார். ஆனால் ஜெனீவா அகதிகள் உடன்படிக்கையின்படி, இவ்வாறு மீண்டும் திரும்ப அனுப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பத்தாயிரக் கணக்கானவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறக்க வழிவகுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லா புலம்பெயர்வோரையும் தடுக்கும் பரந்த கொள்கைக்கு இணங்க, போலந்து நாடாளுமன்றம் அவ்விதமாக செயல்பட அதன் ஒப்புதல் முத்திரையை வழங்கியது.

ஆகவே ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜேர்மன் அரசாங்கம், உத்தியோகபூர்வ போலந்து 'எதிர்க்கட்சி' மற்றும் மேற்கத்திய ஊடகத்தின் பெரும் பகுதியிடமிருந்து போலந்து அரசாங்கம் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ளது, அவர்கள் அனைவரும் அகதிகள் மீதான அவர்களின் சட்டவிரோத தாக்குதல்களைப் பாராட்டுகின்றனர்.

ஜேர்மனிய உள்துறை மந்திரி ஹோர்ஸ்ட் சீகோவர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம்) போலந்து அதன் எல்லையைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் உதவ வேண்டுமென அழைப்பு விடுத்தார். 'இதை ஒரு கலப்பின அச்சுறுத்தலாக நாங்கள் குறிப்பிடுகிறோம், ஐரோப்பிய ஒன்றியத்தையும் குறிப்பாக ஜேர்மனியையும் நிலைகுலைய செய்ய இதில் மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் - உலகில் இது மேலோங்கக் கூடாது,' என்று அவர் கூறியதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் 'கடுமையாக இருக்க வேண்டும்,' 'தெளிவான சமிக்ஞைகளை அனுப்ப வேண்டும்', 'கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்' என்று பழமைவாத நாளேடான FAZ கோரியது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அகதிகளைக் கொண்டு வரும் ஒரு 'மனிதாபிமான தீர்வு' என்பது 'தவறான அரசியல் செய்தியாக' உள்ளது.

சுவிட்சர்லாந்து பத்திரிகையான Neue Zürcher Zeitung இன் பேர்லின் ஆசிரியர் குழு எழுதியது: 'ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையாகவும் விளங்கும் தங்களின் வெளி எல்லையை போலந்து மக்கள் இதுவரை தாங்களாகவே பாதுகாத்து வந்துள்ளனர். வார்சோ முறையீடுகள் என்னவாக இருந்தாலும், இங்கே ஜேர்மனி அதன் பொலிஸ் அதிகாரிகள், ஆதாரவளங்களை வழங்கி இரண்டு விதத்தில் உதவ முடியும்,” என்றது.

அகதிகளுக்கு எதிரான பிரச்சாரம் வலதுசாரி தீவிரவாதிகளையும் பாசிசவாதிகளையும் வலுப்படுத்துகிறது, இது தான் அதன் நோக்கமும் கூட. எதிர்காலத்தில் சர்வாதிகாரியாக வந்த ஜோஸப் பில்சுட்ஸ்கி 1919 இல் போலந்து இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தினமான, போலந்தின் 'சுதந்திர தினத்தை' நேற்று அது கொண்டாடியது. பத்தாயிரக் கணக்கான வலதுசாரி தீவிரவாதிகளும் பாசிஸ்டுகளும் வார்சோ வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர். தாராளவாத நகரசபை தலைவர் Rafal Trzaskowski ஆரம்பத்தில் அந்த அணிவகுப்புக்குத் தடை விதித்தார், ஆனால் பின்னர் அதை நடத்த அனுமதிப்பதற்காக PiS தலையீடு செய்தது.

Pro Asyl மற்றும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் போலந்து எல்லையில் அகதிகள் மீதான துஷ்பிரயோகங்களை எதிர்த்துள்ளன என்றாலும், அவற்றின் முறையீடுகள் ஐரோப்பிய அரசாங்கங்கள் அவற்றின் வழிகளை மாற்றுமாறு அறிவுறுத்துவதை நோக்கி உள்ளது. அது நடக்கப் போவதில்லை.

அகதிகளைப் பாதுகாப்பது தொழிலாள வர்க்கத்தின் பணியாகும். முதலாளித்துவப் பிற்போக்குத்தனத்தை எதிர்க்கக்கூடிய மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஒரே சமூக சக்தி இது தான். இந்தப் போராட்டம் தொழிலாளர்களுக்கு மிக முக்கியமானதாகும்.

பெலாருஸ் அகதிகள் மீதான நேட்டோ அதிகாரங்களின் தாக்குதலில் இருந்து ஒரு பாசிசவாத துர்நாற்றம் எழுகிறது. பாசிசவாத கும்பல்களின் நடவடிக்கைகள் இன்று அகதிகளுக்கு எதிரான சட்டவிரோத வன்முறையாக திரும்பியுள்ள நிலையில், மிருகத்தனமான பாதுகாப்புப் படைகளும் பாசிச கும்பல்களும் நாளை தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பையும் தடைகளையும் நசுக்க சேவையாற்றும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் எல்லா தேசிய எல்லைகளையும் கடந்து ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக போராடுகிறது. SGP ஐயும் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான நாடுகளில் ICFI இன் பிரிவுகளையும் கட்டியெழுப்புவது இக்கண்டம் எங்கிலுமான தொழிலாள வர்க்கம் ஏற்க வேண்டிய அவசரப் பணியாகும்.

Loading