ஜி ஜின்பிங் மூன்றாவது முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தயாராகி வரும் நிலையில் சீன ஆட்சி வரலாற்றை மாற்றி எழுதுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP), இந்த வாரம் நான்கு-நாள் மத்திய குழுக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளதுடன், ஜி ஜின்பிங்கையும் மற்றும் 2012 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கட்சியின் பணிகளையும் முழுமையாக பாராட்டி நேற்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது.

ஜூன் 28, 2021 அன்று, பெய்ஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதன் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திரையில் தோன்றுகிறார் [Credit: AP Photo/Ng Han Guan]

அடுத்த ஆண்டு 20வது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கான தயாரிப்புக்காக ஜி முகஸ்துதியாக பாராட்டப்பட்டார். அதில் முன்னைய இரு தலைவர்களைப் போலல்லாமல், அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு பதவிக் காலத்திற்கு பொதுச் செயலர் பதவியும், அதனால் நாட்டின் ஜனாதிபதி பதவியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 இல் நடத்தப்பட்ட முன்னைய கட்சி மாநாடு, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கான இரண்டு பதவிக் காலத்திற்கான அரசியலமைப்பு வரம்புகளை நீக்கியது.

அடுத்த ஆண்டின் கட்சி மாநாட்டை பற்றி அறிவிக்கையில், அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “மத்திய குழு, அதன் முக்கிய நோக்கத்தின்படி முழுக் கட்சியையும், இராணுவத்தையும், அனைத்து சீன மக்களையும் தோழர் ஜி ஜின்பிங்குடன் மத்தியக் குழுவைச் சுற்றி மிக நெருக்கமாக அணிதிரளவும், (மேலும்) ஒரு புதிய சகாப்தத்திற்காக சீன சிறப்பியல்புகளுடன் கூடிய சோசலிசம் குறித்த ஜி ஜின்பிங்கின் சிந்தனையை முழுமையாக செயல்படுத்தவும் அழைப்புவிடுக்கிறது.”

ஜி இனை கட்சியின் “மையமாகவும்” அவரது சிந்தனை மூலம் “வழிநடத்துபவராகவும்” குறிப்பிடுவது இப்போது ஒரு கட்டாய உத்தியோகபூர்வ சம்பிரதாயமாக உள்ளது. ஜி முன்வைத்த காரணத்தால் மட்டும் கட்சியின் அரசியல் குழுவின் வேலைகள் தொடர்பான அறிக்கையை இந்த கூட்டம் முழுமையாக ஆதரிக்கவில்லை, மாறாக “கடந்த நூற்றாண்டில் எட்டப்பட்ட கட்சியின் முக்கிய சாதனைகளையும் மற்றும் வரலாற்று அனுபவத்தையும் பற்றிய தீர்மானம்” வழமைக்கு மாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த இரண்டு முன்னைய சந்தர்ப்பங்களில் மட்டுமே ஒரு வரலாற்று தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. முதலாவதாக, மாவோ சேதுங் 1930களின் குழுவாத மோதல்களுக்குப் பின்னர் 1945 இல் தலைமைத்துவத்தில் தனது மேலாதிக்க நிலையை உறுதிப்படுத்திக்காட்ட முயன்றார். இரண்டாவதாக, 1981 இல், டெங் ஜியாவோபிங் 1966 முதல் மாவோவின் தவறாக பெயரிடப்பட்ட கலாச்சாரப் புரட்சியின் (Cultural Revolution) பாரம்பரியத்தை மூடிப் புதைத்து, சந்தை சார்பு மறுசீரமைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்டெடுப்புக்கான வழியை உருவாக்கினார்.

சமீபத்திய வரலாற்றுத் தீர்மானம் ஜி இனை குறைந்தபட்சம் மாவோ மற்றும் டெங்கிற்கு இணையாக வைக்கிறது. அறிக்கையில் உள்ள தீர்மானத்தின் சுருக்கம் மாவோ மற்றும் டெங்கைப் பற்றி குறிப்பிடுவதுடன், ஜி இன் உடனடி முன்னோடிகளான ஜியாங் ஜெமின் மற்றும் ஹூ ஜின்டாவோ பற்றியும் குறிப்பிடுகிறது. ஆனால் அறிக்கையின் 5,400 வார்த்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜி இன் கீழ் கட்சியின் சாதனைகளை பாராட்டுவதற்கே அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.

ஜூலை 1921 ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதன் உத்தியோகபூர்வ நூற்றாண்டு விழாவுடன் இணைந்து தொடங்கப்பட்டதான கட்சியின் புதிய “சுருக்க வரலாற்றில்” கூட இதேபோன்ற வலியுறுத்தல் தெளிவாக உள்ளது. அதன் பக்கங்களில் அநேகமாக மூன்றில் ஒரு பங்கு ஜி இன் ஒன்பது ஆண்டு கால ஆட்சியைப் பற்றி விவரிக்கவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு சொந்தமான ஊடகங்கள், பொதுத் தொடர்பிலுள்ள மக்களின் மனிதராக ஜி இனை பிரபல்யப்படுத்தும் புனிதத்தன்மையானதாக காட்டும் கட்டுரைகளை மக்களுக்கு ஊட்டுகின்றன.

மாவோ மற்றும் டெங்கைப் போலல்லாது, 1949 சீனப் புரட்சிக்கு வழிவகுத்த சமூக மற்றும் அரசியல் எழுச்சிகளை அனுபவிக்காத ஒரு சாதுவான அதிகாரத்துவவாதியான ஜி குறித்த இந்த பிரம்மாண்ட உருவாக்கமும் மற்றும் அவர் மீதான ஆட்சியின் நம்பிக்கையும், அரசியல் பலத்தின் நிலைப்பாட்டில் இருந்து உருவாகாமல், பலவீனத்தால் உருவாகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உட்பிளவுகளுடன் மட்டும் மோதவில்லை, மாறாக, குறிப்பாக மந்தமான பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவுடன் புவி-அரசியல் மோதல்களை எதிர்கொள்வதுடன், அனைத்திற்கும் மேலாக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியால் உருவாகும் கூர்மையான சமூகப்பதட்டங்களையும் எதிர்கொள்கின்றது.

2018 சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை அடுத்து, உலக சோசலிச வலைத் தளம் (WSWS), “மார்க்சிஸ்டுகள் பாரம்பரியமாக போனபார்ட்டிஸ்ட் என்று வரையறுக்கும் ஒரு வடிவமாக” சீனாவின் மறுக்கமுடியாத அரசியல் பலசாலியாக ஜி இனை வகைப்படுத்தியது. அனைத்து தரப்பிலும் ஒரு ஆழமான நெருக்கடியை எதிர்கொள்கையில், உள்நாட்டில் சமூக எழுச்சியை அடக்குவதற்கும். வெளிநாட்டில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு தயார்படுத்துவதற்கும் கட்சி தனது பலத்தை ஒருங்கிணைக்க தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், உட்பூசல்களைத் தணிக்க ஒரு அசாதாரண பெரிய நபராக ஜி முன்வைக்கப்பட்டுள்ளார்.

மறுபுறத்தில் இந்த வார அறிக்கை, “கடந்த ஆண்டில் வெளிப்புற சூழல் அதிகரித்தளவில் சிக்கலானதாகவும் மோசமானதாகவும் வளர்ந்துள்ளது… அதேவேளை சீனா கோவிட்-19 நோய்தொற்றை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த, அத்துடன் உள்நாட்டில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி தொடர்புபட்ட மிகவும் கடினமான பணிகளை எதிர்கொண்டுள்ளது” என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

மறுபுறம், யதார்த்தத்தை தலைகீழாக்கி, அறிக்கை ஜி இன் சாதனையை ஒட்டுமொத்த வெற்றிக்கான சான்றாக முன்வைக்கிறது. அதாவது “சீனாவின் பொருளாதாரம், அதன் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சுயசார்பிலும், மற்றும் முன்னேற்றத்திலும்… சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரத்தை திறந்து வைப்பதிலும்… நல்ல உத்வேகத்தையும், சாத்தியமான முன்னேற்றங்களையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திட்டமிட்டபடி வறுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முழுமையான வெற்றி கண்டுள்ளது… மக்களின் நல்வாழ்வு… மேலும் மேம்பட்ட சமூக ஸ்திரத்தன்மை… பராமரிக்கப்பட்டு ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் ஒரு நிலையான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. மேலும் முக்கிய நாடுகளுடனான சீனாவின் இராஜதந்திரம் எல்லா முனைகளிலிருந்தும் முன்னேறியுள்ளது” என்கிறது.

உண்மையில், கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தினால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாம் காலாண்டில் 5 சதவீதத்திலும் குறைந்துள்ளது. இது குறைந்த மட்டங்களில் வேலையின்மையையும், மேலும் அதனால் சமூக ஸ்திரத்தன்மையையும் பராமரிக்கத் தேவையான அளவீடாக ஆட்சி கருதும் 8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகரிக்கும் காரணிகளாக, உச்சபட்ச கடன் மட்டங்களிலிருந்து உருவாகும் நிதிய ஸ்திரமின்மை தொடர்புபட்ட ஆபத்தும், மற்றும் Evergrande மற்றும் ஏனைய முக்கிய நில-சொத்து அபிவிருத்தியாளர்களின் பணத்தை திருப்பிச் செலுத்தும் நெருக்கடியால் சமிக்ஞை செய்யப்பட்டதான சொத்து சந்தையில் பெருகிவரும் நெருக்கடியும் உள்ளது.

சர்வதேச முன்னணியை வைத்துப் பார்த்தால், “மிகப்பெரிய நாடுகளுடனான இராஜதந்திரத்தில்” எந்தவித முன்னேற்றத்தையும் கண்டறிவது கடினமாக இருக்கும். கடந்த தசாப்தத்தில் பிராந்தியம் முழுவதும் இராணுவத்தை கட்டமைத்தும், இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்தியும், தென் சீன மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் தீவிரமாக இராணுவ ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் இடையறாத விரோதப் போக்கை பெய்ஜிங் எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு பைடெனின் கீழ், வாஷிங்டன் தைவானின் அந்தஸ்து பற்றிய வெடிக்கும் பிரச்சினைகள் குறித்து பெய்ஜிங்குடனான பதட்டங்களைத் தூண்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் அடித்தளத்தை குறைமதிப்பிற்குட்படுத்தியுள்ளது.

ஒற்றுமைக்கான அடையாளம் இருந்தபோதிலும், வெளிநாட்டு மூலதனத்திற்கு பொருளாதாரத்தை மேலும் திறந்து வைக்க முனைவதில் அமெரிக்காவுக்கு சலுகைகள் வழங்கவும் மற்றும் அதனுடன் ஒரு புதிய சமரசத்தை எட்டவும் பரிந்துரைப்பவர்கள், மற்றும் துரிதப்படுத்தப்பட்ட இராணுவ விரிவாக்கத்திற்கும் மற்றும் பெரும் தேசிய பொருளாதார நம்பிக்கைக்கும் வலியுறுத்துபவர்கள் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குள் கூர்மையான பிளவுகள் உள்ளன. ஆயுதப்போட்டியில் ஈடுபடுவதானது பேரழிவுகரமான போருக்கு வழிவகுக்கும் என்றாலும், அமெரிக்கா தனது நலன்களுக்கு முழுமையாக அடிபணிவதைத் தவிர வேறு எதையும் ஏற்காது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என்ற வகையில் எந்த மூலோபாயமும் எந்த வகையிலும் முற்போக்கானது அல்ல.

கட்சிக்குள் நிச்சயமற்ற வகையில் ஜி தன்னை சமன்படுத்திக் கொள்ளும் நிலையில், சமூக ஆதரவின் தளத்தை தக்கவைத்துக் கொள்ள அவரும் தீவிரமாக முயன்று வருகிறார். மார்க்சிசம், சோசலிசம் மற்றும் கம்யூனிசம் மீதான கட்சியின் விசுவாசத்தைப் பற்றி அவர் தொடர்ந்து அறிவிக்கிறார். ஆயினும், “ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற பிற்போக்குத்தனமான ஸ்ராலினிசக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதிலும், மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சந்தை ஆதிக்கம் செலுத்தும் ஒரு வெளிப்படையான முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு தலைமை வகிப்பதிலும் பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டுவிட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் சமூக நலனுக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூறி, முதலாளித்துவ மறுசீரமைப்பை ஏற்றுக்கொண்டதை நியாயப்படுத்தியது. நாட்டின் மலிவு உழைப்பைச் சுரண்டுவதற்காக வெள்ளமென வெளிநாட்டு மூலதனம் நாட்டிற்குள் பாய்ச்சப்பட்டதால், மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அதே நேரத்தில், எவ்வாறாயினும், மக்கள்தொகையின் பெரும்பகுதிக்கும், முதலாளித்துவ மறுசீரமைப்பினால் பயனடைந்த பில்லியனர்கள் மற்றும் பன்முக பில்லியனர்களின் ஒரு சிறிய அடுக்கிற்கும் இடையே ஒரு பெரும் சமூக இடைவெளி உருவானது.

“சீன சிறப்பியல்புகளுடனான சோசலிசம்” அமுல்படுத்தப்பட்டு, முழுமையாக வறுமை முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும், அத்துடன் விஞ்ஞான அடிப்படையிலான கோவிட்-19 ஒழிப்பு மூலோபாயத்தை ஆட்சி செயல்படுத்தும் என்றும் ஜி கூறுவது, இறுதி ஆய்வில், பெருகிவரும் சமூக பதட்டங்களின் அச்சத்தையே பிரதிபலிக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச முன்னோக்கால் உருக்குலைக்கப்பட்ட ஒரு முக்கியமான சமூக எழுச்சியான 1949 சீனப் புரட்சியின் மரபு, ஒரு சிலரின் தனிப்பட்ட இலாபங்களை விட வெகுஜனங்களின் சமூக நலன்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்ற பரவலான மக்கள் நம்பிக்கையினுள் தொடர்ந்தும் உள்ளடங்கியிருக்கின்றது.

குறுகியளவில் வரையறுக்கப்பட்ட முழுமையான வறுமையை திட்டமிட்ட காலத்திற்குள் நீக்கிவிட்டதாக ஜி பெருமை பீற்றினாலும்! 600 மில்லியன் சீனர்கள் பெரும் நகரங்களில் சொத்துக்கள் வாங்குவதற்கு இயலாமல் உள்ளது ஒருபுறம் இருக்க, அவர்களால் வாடகைக்கு கூட வீடுகளை அமர்த்திக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், அமெரிக்காவை விட சீனாவில் தான் ஏராளமான டாலர் பில்லியனர்கள் உள்ளனர். அவர்களில் பலர் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் அல்லது அதன் ஆலோசனை அமைப்புகளில் உள்ளனர். அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற சில பெரிய சீன தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான ஆட்சியின் சமீபத்திய நடவடிக்கைகள், “பொது செழிப்பை” ஊக்குவிப்பதாகக் கூறப்படும் அதன் கூற்றுக்களுக்கு ஏற்ப, பொய்யாக ஒரு ஜனரஞ்சகமான சமத்துவ பிம்பத்தை விளம்பரப்படுத்துவதையும், மற்றும் பெரும் செல்வந்தர்கள் அதிகாரத்தின் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோகத்தை சவால் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை மாற்றி எழுதும் ஜி ஜின்பிங்கின் சிந்தனை என்றழைக்கப்படுவது, சீன தன்னலக்குழுக்களின் நலன்களையே பிரதிபலிக்கிறது. சாராம்சத்தில் இது, சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்தே அதன் நோக்கமாக இருந்ததாக ஜி கூறும் சீனாவின் “தேசிய புத்துயிர்ப்பு”க்கான ஜி இன் “கனவை” நோக்கி செல்வதாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே சீனாவின் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது என்றாலும், அத்தகைய போராட்டத்திற்கு முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து உலகளவில் சோசலிசத்தை நிறுவுவதற்கு சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் சீனத் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவது அவசியம் என்பதை அது அங்கீகரித்திருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய தேசியவாத முன்னோக்கு முற்றிலும் இதற்கு எதிர்மாறாக உள்ளது. அதாவது, தற்போதைய ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பை தூக்கியெறிவதற்கு மாறாக, ஏகாதிபத்திய மேசையில் தற்போது இல்லாத இடத்தை அது விரும்புகிறது.

சீனாவில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் அதிகரித்துவரும் போர் அபாயம், மோசமடைந்துவரும் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமைகளை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவர்களது சகாக்களைப் போல, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபிதத்திற்கு அடித்தளமாக இருந்த சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டம்தான் அவர்களுக்கும் தேவையாகும்.

Loading