கோவிட்-19 கொள்கைகள் காரணமாக டெட்ராய்ட் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டெட்ராய்டில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் உயர்நிலைப் பள்ளியில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான நிர்வாகத்தின் பதிலை எதிர்த்து புதன்கிழமை மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பை விட்டு வெளியேறினர்.

இந்த வெளிநடப்பு நண்பகலில் தொடங்கி 20 நிமிடங்கள் நீடித்தது. பள்ளியில் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவும், சமூக இடைவெளி ஒரு தோல்வியுற்ற கொள்கையாகிப் போனது என்றும், மேலும் பள்ளி நல்ல முறையில் சுத்தம் செய்யப்படவில்லை என்றும் மாணவர்களும் ஆசிரியர்களும் புகார் கூறினர்.

டெட்ராய்ட் நகரிலும் மற்றும் மிச்சிகன் மாநிலம் முழுவதும் நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்து வருவதற்கு மத்தியில், சமீபத்திய நாட்களில் பள்ளியில் குறைந்தது ஏழு ஆசிரியர்களுக்கும் பல மாணவர்களுக்கும் நோய்தொற்று ஏற்பட்டு அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மிச்சிகனின் மழலையர் பள்ளிகளில் (K-12 Schools) கோவிட்-19 பரவல் வீதத்தைக் காட்டும் வரைபடம் (Map data © 2021 Google)

டெட்ராய்ட் பொதுப் பள்ளி ஆசிரியர் கேட் என்பவர், கிங் உயர்நிலைப் பள்ளியில் “சரியான தகவல்கள் வழங்கப்படாததால் விரக்தியடைந்து” மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர் என்றும், “ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு தலைமையாசிரியரும் வித்தியாசமாக எதையோ செய்கிறார்கள். நோய்தொற்றுக்கள் பற்றிய உண்மை விபரத்தை அவர்கள் கூறுவதில்லை. எல்லாம் நிசப்தமாக உள்ளது” என்றும் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தார்.

“ஆசிரியர்கள் இன்று மாணவர்களுக்கு பின்னால் நிற்க முடிவு செய்தனர்” என்று கேட் கூறினார்.

ஆசிரியர்கள் முகநூலில் சந்தித்துப் பேசி, கொள்கையை மாற்றக் கோருவதற்கு நோய்வாய்ப்பட்டவர்களை அழைத்து வாக்கெடுப்பு நடத்துகின்றனர். பல பள்ளிகளில் நோயுற்றவர்களுக்கு ஆதரவாக 97 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன, மேலும் இந்த வாரத்தின் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், நோய்வாய்ப்பட்டிருந்த 40 அல்லது 50 ஆசிரியர்கள் இது தொடர்பாக அழைக்கப்பட்டனர்.

“ஆசிரியர்கள் சோர்வடைந்து வெளிநடப்பு செய்யத் தயாராக உள்ளனர். கட்டிடங்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை. இப்போது அவர்கள் அடுத்த மூன்று வெள்ளிக்கிழமைகளில் தங்கள் பள்ளிக் கட்டிடங்களை சுத்தம் செய்ய உள்ளார்கள். ஆனால் எங்கள் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எங்களுக்கு முற்றிலும் வெப்பம் இல்லை. Diane Banks பள்ளியில் கழிப்பறைகள் மோசமாக உள்ளன” என்று காட் மேலும் தெரிவித்தார்.

“மக்கள் தங்கள் உயிருக்கு பயப்படுகிறார்கள். மரணத்துடன் வாழ்வது என்பது ஏற்கத்தக்கது அல்ல.”

வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மாவட்டம் வகுப்புகளை இணையவழியாக நடத்துவதற்கு எடுத்த முடிவானது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை திசைதிருப்பும் முயற்சியாகும். இது வைரஸ் பரவுவதைத் தடுக்க எதையும் செய்யாது, ஏனென்றால் வைரஸ் காற்றுவழி பரவுவதுடன், முதன்மையாக மேற்பரப்புக்களில் பரவாது.

வெளிநடப்பில் பங்கேற்ற கிங் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி லைஃபெர்ரா டர்னர் உடன் Detroit Free Press நாளிதழ் பேசியது. அப்போது, “நீங்கள் வெளியேறி போராடுங்கள், நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும், குறிப்பாக உங்களுக்கு எது பாதுகாப்பு என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதற்காக போராடுங்கள்” என செல்வி. டர்னர் தெரிவித்தார்.

இந்த வாரத்தில் நோய்தொற்றுக்கள் இல்லை என்று பள்ளி அறிவித்துள்ள போதிலும், கோவிட்-19 நோய்தொற்றின் காரணமாக பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என செல்வி. டர்னர் கூறினார்.

கிங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி முதல்வர் டாமியன் பெர்ரி, கோவிட்-19 நோய்தொற்றுக்களின் விபரத்தை துல்லியமாக வழங்கத் தவறியது மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பள்ளியை மூட மறுத்தது ஆகியவை உட்பட பல புகார்களின் பட்டியலை அவர் மீது சுமத்தி, அவரை பதவியிலிருந்து நீக்க அழைப்பு விடுக்கும் ஒரு மனுவை சுற்றுக்கு விட்டுள்ளனர்.

டெட்ராய்டின் Cass தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரின் தாயாருடன் Free Press பேசியது, அவர் தனது மகனின் பள்ளியில் புதிய நோய்தொற்றுக்கள் பரவுவது குறித்து தொடர்ந்து அறிவிப்புக்களை பெறுவதாகக் கூறினார். மெலிசா ரெட்மேன் பள்ளியை குறைந்தபட்சம் தற்காலிகமாக மூடுவதற்கு அழைப்பு விடுத்தார். காரணம் “நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது” என்று அவர் கூறினார். மேலும், “என்னைப் பொறுத்தவரை, ஒரு மாணவருக்கு நோய்தொற்று இருந்தாலும், அந்த ஒரு மாணவர் செல்லும் இடத்தை எல்லாம் உங்களால் சுட்டிக்காட்ட முடியாது” என்றார்.

புதன்கிழமை, டெட்ராய்டின் Renaissance உயர்நிலைப் பள்ளியும் கொரோனா வைரஸ் வெடிப்புக்கு பதிலளிக்கும் விதமாக பள்ளியை மூடுவதாகவும் இணையவழி கற்பித்தலுக்கு திரும்புவதாகவும் அறிவித்தது. இந்த மூடுதல், நன்றி தெரிவிக்கும் விடுமுறை நாட்கள் முழுவதுமாக அமலில் இருக்கும்.

புதன்கிழமை மிச்சிகனில் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 7,353 ஆக இருந்தது, இது 20 மாதங்களுக்கு முன்னர் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உச்சபட்ச எண்ணிக்கையாக இருந்தது, மேலும் சுகாதார நெருக்கடியின் கொடிய மூன்றாவது அலையின் போது ஒரு வருடத்திற்கு முன்பு பதிவான உச்சபட்ச எண்ணிக்கை 7,270 ஐ விஞ்சியது.

நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், டெட்ராய்டிலும் மற்றும் மிச்சிகனின் 83 மாவட்டங்களில் 77 மாவட்டங்களிலும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை, மாநில சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை முதல் வைரஸால் மேலும் 242 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மிச்சிகனில் இளைஞர்கள் மத்தியில் தொற்றுநோய் தீவிரமாக அதிகரித்து வருகிறது, 19 வயதினர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் 201,000 நோய்தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் 12 வயதுக்குட்பட்ட 450 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், மாணவர்களிடையே “பெரியளவில் திடீரென” வெடித்துப் பரவும் காய்ச்சல் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. அக்டோபர் முதல், வளாகத்துக்குள் 77 சதவீத மாணவர்கள் பாதிக்கப்பட்டு தற்போது 528 காய்ச்சல் நோயாளிகள் இருப்பதாக பல்கலைக்கழகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை எதிர்க்கும் எந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பையும் எதிர்த்த டெட்ராய்ட் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் டெரன்ஸ் மார்ட்டின், “பள்ளிக் கட்டிடங்களின் தூய்மை மற்றும் சுகாதாரத்தின்” முக்கியத்துவத்தை வலியுறுத்தி வெளிநடப்புக்கு பதிலிறுத்தார். இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வரும் இந்த சூழலில், காலாவதியான காற்றோட்ட அமைப்புக்களுடன் பள்ளி கட்டிடங்களை சுத்தம் செய்வது அர்த்தமற்றதாகும், ஏனென்றால் தொற்றுநோய் காற்றில் பரவி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் சுவாச அமைப்புகளில் தொற்றிக் கொள்கிறது.

உணவகங்கள் மற்றும் மதுபானகங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது மற்றும் முகக்கவச கட்டுப்பாட்டை நீக்குவது உள்ளிட்ட அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் ஜூன் 22 அன்று ஜனநாயகக் கட்சியின் ஆளுநர் கிரெட்சன் விட்மர் நீக்கியதைத் தொடர்ந்து டெட்ராய்ட் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நேரடி கற்பித்தலுக்கு திரும்பின.

ஆகஸ்ட் 10 அன்று, மிச்சிகனின் கல்விக் குழு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பது குறித்து உள்ளூர் பள்ளி மாவட்டங்கள் “விஞ்ஞான ரீதியாக தெரிவிக்கப்பட்ட முடிவுகளை” எடுக்க அனுமதிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது.

மார்ட்டின் லூதர் கிங் உயர்நிலைப் பள்ளியில் நடந்த வெளிநடப்பு இந்த இலையுதிர் காலத்தில் அமெரிக்காவில் நடந்த முதல் வெளிநடப்பாகும் என்பதுடன், தொற்றுநோய் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கையில் பள்ளிகளை மீளத்திறக்கும் கொள்கைக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரந்த அடிப்படையில் வளர்ந்து வரும் எதிர்ப்பின் ஒரு பகுதியாகும்.

மிச்சிகன் உட்பட உலகளவில் ஆதரவைப் பெற்றதான அக்டோபர் 1 மற்றும் 15 தேதிகளில் லீசா டியஸ் ஏற்பாடு செய்திருந்த #SchoolStrike2021 ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த பள்ளி வெளிநடப்புக்கள் நடக்கின்றன. டெட்ராய்டில் வாகனத் தொழிலாளர்கள் அனைவரும் வேலையில் இருந்தாக வேண்டும் என்று முதலாளிகள் வற்புறுத்தியதற்கு எதிராக அத்தியாவசியமற்ற தொழில்துறைகளை மூட வைப்பதற்கான இயக்கத்தை தூண்டியதான தொற்றுநோயின் ஆரம்ப காலத்தைப் போல, தொற்றுநோயை தோற்கடிக்கும் விவகாரத்தை தொழிலாள வர்க்கம் தனது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிச்சிகனில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் அணிதிரண்டு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது அவர்களை கவனித்துக் கொள்ள அனுமதிக்கும் வகையில் அவர்களுக்கு வளங்களையும் மற்றும் வருமானங்களையும் வழங்கி, நேரடி கற்பித்தலை செயல்படுத்தும் பள்ளிகளை உடனடியாக முழுமையாக மூடுமாறு கோர வேண்டும். நோய்தொற்றுக்களின் பாரிய அதிகரிப்புக்கு மத்தியில் நேரடி கற்பித்தலைத் தொடர்வது நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் மேலும் அதிகரிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இந்த போராட்டத்தை ஒழுங்கமைக்கும் வழிவகையாக, உலக சோசலிச வலைத் தளம், ஒவ்வொரு பள்ளியிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

Loading