முன்னோக்கு

மரணத்தின் குளிர்காலம்: தொற்றுக்கள் அதிகரிக்கும் போது அரசாங்கங்கள் COVID-19 கட்டுப்பாடுகளைக் குறைக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த ஒரு வாரத்தில், உலகம் இரண்டு பயங்கரமான மைல்கற்களை எட்டியுள்ளது. உத்தியோகபூர்வ உலகளாவிய COVID-19 இறப்பு எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளது, மேலும் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை கால் பில்லியனை தாண்டியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், யதார்த்தத்தை மிகக் குறைவாகக் காட்டுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.'அதிகப்படியான இறப்புகள்' பற்றிய எகனாமிஸ்ட் பத்திரிகைமதிப்பீட்டின்படி, 17 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கெர்கோவ், “இந்த எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு உலகம் இன்னமும் துக்கம் அனுசரிக்கத் தொடங்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். 'அது மிக மிக அதிகமானது என்பதை நாங்கள் அறிவோம்.'

தலைப்பு: நவம்பர் 4, 2021 வியாழன், வியாழன், பொஸ்னியாவின் பன்ஜா லூகாவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ மைய மருத்துவமனையின் COVID-19 பிரிவில் ஒரு நோயாளி முகக்கவசத்தின் மூலம் சுவாசிக்கிறார் (AP புகைப்படம்).

'இப்போது, நாம் அதிகரிக்கக்கூடாத இடங்களில் அதிகரிப்பதைக் காண்கிறோம்,' என்று அவர் மேலும் கூறினார். 'ஐரோப்பாவில் கடந்த நான்கு வாரங்களில் தொற்றுக்களில் 55 சதவிகிதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அங்கு ஏராளமான தடுப்பூசிகள் உள்ளன, அங்கு ஏராளமான கருவிகளும் உள்ளன.'

இந்த வாரம், ரஷ்யா மற்றும் ஜேர்மனியில் COVID-19 தொற்றுக்களின் விகிதங்கள் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான சுலோவேனியா, எஸ்தோனியா, ஜோர்ஜியா மற்றும் லாத்வியாவில் தொற்றுக்கள் காற்றுவழி ரீதியாக அதிகரித்து வருகின்றன, அவை இப்போது தனிநபர் தொற்றுக்களில் உலகளாவிய தரவரிசையில் முன்னணியில் உள்ளது.

கடந்த வாரம், WHO இன் ஐரோப்பிய தலைவர் 'கடுமையான கவலையை' வெளிப்படுத்திய நிலையில், பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் நடந்து வரும் COVID-19 எழுச்சியில் மேலும் அரை மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று WHO எச்சரித்துள்ளது.

உலகளாவிய ரீதியில், மூன்று வாரங்களாக தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன, வல்லுநர்கள் எச்சரிப்பதற்கு முன்னதாக, வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்கும் போது ஒரு பெரிய எழுச்சியாக இருக்கும். பல வாரங்கள் தாமதத்துடன் ஐரோப்பா அமைத்த பாதையை, வரலாற்று ரீதியாகப் பின்பற்றி வரும் அமெரிக்காவில், அதிகரித்து வரும் தடுப்பூசிகளுக்கு மத்தியில் தொற்றுக்கள் குறைவது முடிவுக்கு வந்துள்ளது.

'இன்னும் எத்தனை பேர் இறக்க வேண்டும்?' வான் கெர்கோவ் கேட்டார், 'நாங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன், இன்னும் எத்தனை நாடுகளை மீண்டும் கடுமையான சூழ்நிலைக்கு உட்படுத்த வேண்டும்?' அந்தக் கேள்விக்கான பதிலை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது: 'பல, இன்னும் பல.'

இன்று, நாட்டிற்கு பயணிகள் பெருமளவில் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், சர்வதேச விமானங்கள் மற்றும் தரைப் பயணங்களுக்கான 20 மாத கட்டுப்பாடுகளை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவருகிறது. டெல்டா ஏர்லைன்ஸ் உள்வரும் விமானங்களில் 50 சதவீதம் அதிகரிப்பை எதிர்பார்க்கிறது, இது 'வலுவான தேவை' இருப்பதைக் குறிக்கிறதாம். ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி, 'இது சற்று மந்தமானதாக இருக்கும்' என்று கூறினார்.

அமெரிக்கா முழுவதும், தொற்றுநோய் பரவுவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன. புளோரிடாவின் மிகப்பெரிய மியாமி-டேட் பள்ளி மாவட்டம், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கான தேவையை நீக்குவதாக சமீபத்தில் அறிவித்தது, அது புளோரிடாவின் கடைசி மாவட்டமாக மாறியது. ஜோர்ஜியாவில், அட்லாண்டாவை உள்ளடக்கிய ஃபுல்டன் கவுண்டி உட்பட பல மாவட்டங்கள் விதிமுறைகளை முடித்துவிட்டன, அதே நேரத்தில் மிச்சிகன் பள்ளி மாவட்டங்களும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.

ABC நியூஸ் அறிக்கைகள் கூறியது, “பள்ளிகளில் COVID-19 கொள்கைகளை கண்காணிக்கும் நிறுவனமான பர்பியோவின் கூற்றுப்படி, அமெரிக்காவில் உள்ள 200 பெரிய பள்ளி மாவட்டங்களில் ஒரு டஜனுக்கும் அதிகமானவை சமீபத்திய வாரங்களில் முகக்கவச உத்தரவுகளை கைவிட்டன.”

அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது வெகுஜன மரணத்தின் குளிர்காலமாக இருக்கும். உத்தியோகபூர்வ கணக்கின்படி, 775,000 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 1,200 க்கும் அதிகமாக உள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கைவிடப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறக்கின்றனர்.

வெகுஜன மரணம், பின்னணி இரைச்சலாகக் கருதப்படுவதுபோல், இயல்பாக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள பயங்கரமான இறப்பு எண்ணிக்கை, எல்லா விலையிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு போதனையான உதாரணமாக இருப்பதில் இருந்து வெகு தொலைவில், உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. கடந்த மாதம், நியூசிலாந்து தனது “ஜீரோ கோவிட்” கொள்கையை கைவிட்டது, நூறாயிரக்கணக்கானவர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பியது மற்றும் ஆக்லாந்தில் பள்ளிகளை ஓரளவு மீண்டும் திறந்தது. முடிவுகள் யூகிக்கக்கூடியவை. கடந்த மாதத்தில், நியூசிலாந்தில் தினசரி புதிய COVID-19 தொற்றுக்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகள், COVID-19 ஐ ஒழிப்பதற்கான தங்கள் முயற்சிகளைக் கைவிட்டதால், தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. இந்த மோசமான முன்னுதாரணத்தால் துவண்டு போகாமல், ஜப்பான் மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது, வணிகப் பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களில் இருந்து மூன்று நாட்களாகக் குறைத்துள்ளது.

87 சதவீத மனித மக்கள் வசிக்கும் வடக்கு அரைக்கோளத்திற்கு குளிர்காலம் நெருங்கி வருவதால், உலகம் மீண்டும் தொற்றுநோயின் திருப்புமுனையில் உள்ளது. முற்றிலுமாகத் தடுக்கக்கூடிய தொற்றுநோயிலிருந்து எண்ணற்ற மனிதர்களின் — தாய்மார்கள், தந்தைகள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின்— மரணத்தை அனுமதிக்க முதலாளித்துவம் நோக்கம் கொண்டுள்ளது.

இந்த கொடூரமான, தினசரி படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) இணைந்து ஏற்பாடு செய்திருந்த அக்டோபர் 24 வலையரங்கத்தில் முன்னணி விஞ்ஞானிகள் விளக்கியது போல், உலகளாவிய முற்றிலும் ஒழிப்பு மூலோபாயத்தின் மூலம் தொற்றுநோயை ஒரு சில மாதங்களில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை மனிதகுலம் கொண்டுள்ளது. இதற்கு பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவது, சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றில் பாரிய முதலீடு தேவைப்படுகிறது. [மற்றும் சுகாதார காரணங்களுக்காக மூடப்பட்ட வணிகங்களின் ஊழியர்களுக்கு முழு பொருளாதார ஆதரவு வழங்குவது உட்பட]

எவ்வாறாயினும், இந்தக் கொள்கைகளுக்கான போராட்டத்திற்கு நிதிய தன்னலக்குழுவின் செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீது ஒரு முன்னணித் தாக்குதல் தேவைப்படுகிறது.

இந்த தொற்றுநோய், அதன் அனைத்து பயங்கரங்களுடனும், உலக கோடீஸ்வரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது, அவர்கள் பங்குச் சந்தைகளை ஆதரிக்கும் அரசாங்கத்தின் பாரிய தலையீட்டின் மூலம் பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளனர், அதே நேரத்தில் தொழிலாளர்கள் கோவிட்-19 பரவலின் முக்கிய மையங்களாக உள்ள பாதுகாப்பற்ற பணியிடங்களில் வேலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பில்லியனர்கள் 3.4 டிரில்லியன் டாலர்கள் நிகர மதிப்பைக் கொண்டிருந்தனர், பின்னர் அது 5.3 டிரில்லியன் டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் தன்னை 300 பில்லியன் டாலர்களால் வளப்படுத்திக் கொண்டார். ஜெஃப் பெசோஸ் 75 பில்லியன் டாலர் பணக்காரர் ஆனார். மேலும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி லாரி பேஜ் 64 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகப் பெற்றார்.

பெசோஸின் எண்ணற்ற தொழிலாளர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி, அவரது வேலையிடங்களில் பிடித்த நோய்களால் இறந்ததால் இலாபம் அடைந்தார். கலிபோர்னியா அதிகாரிகளை மீறி, கலிபோர்னியாவில் உள்ள தனது டெஸ்லா ஆலையில் சட்டவிரோதமாக உற்பத்தியை மறுதொடக்கம் செய்தார் மஸ்க், அதற்காக அவர் ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஆளும் வர்க்கம், உண்மையில், ஒரு அகற்றல் கொள்கையை செயல்படுத்துகிறது, அது தொற்றுநோயை அல்ல, ஆனால் மனிதர்களை. தற்போதைய அரசியல் நிலையின் கீழ், தொற்றுநோய் நிரந்தரமாகத் தொடரும், மாதந்தோறும் அதன் கடுமையான அழிவுகளை அறுவடை செய்ய நேரிடும்.

ஆனால், இந்தக் கொலைவெறிக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய, செய்யக்கூடிய சமூக சக்தி ஏற்கனவே களத்தில் உருவாகி வருகிறது. உலகளாவிய வேலைநிறுத்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக சோசலிச வலைத் தளம் இந்த தொழிலாள வர்க்க இயக்கத்தை சோசலிச முன்னோக்குடனும், தொற்றுநோய்க்கு முடிவுகட்ட தேவையான விஞ்ஞான அறிவுடனும் ஆயுதபாணியாக்க போராடுகிறது.

Loading