ஜேர்மனியின் கொரோனா வைரஸ் நெருக்கடி தீர்வுக் குழுவுக்கு இராணுவ ஜெனரல் தலைமை தாங்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) பிராந்திய பணிகள் கட்டளையகத்தின் தளபதியான, மேஜர் ஜெனரல் கார்ஸ்டன் புரோயர் (Carsten Breuer), வருங்கால ஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் நெருக்கடி தீர்வுக் குழுவிற்கு தலைமை தாங்குவார். சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் “போக்குவரத்து விளக்கு” கூட்டணியின் உறுதிப்பாடும் சத்தியப்பிரமாணமும் அடுத்த வாரம் வரை நடைபெறாது என்றாலும், தீர்வுக் குழு இந்த வாரம் அமைக்கப்பட உள்ளது.

இரண்டு-நட்சத்திர ஜெனரல் கார்ஸ்டன் புரோயர் (Photo: KdoTA Presse/CC BY-SA 4.0)

கோவிட்-19 நெருக்கடிக் குழுவின் தற்காலிக பொறுப்பாளியாக ஜேர்மன் இராணுவ ஜெனரலை நியமிக்கும் தீர்மானம் ஒரேயொரு முடிவை மட்டும் அனுமதிக்கிறது: அதாவது, போக்குவரத்து விளக்கு கூட்டணி தொற்றுநோயை ஒரு மருத்துவப் பிரச்சினையாக பார்க்காமல், பாதுகாப்புப் பிரச்சினையாகவே பார்க்கிறது.

நெருக்கடிக் குழுவின் நோக்கம் வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பது அல்ல, மாறாக மக்களிடமிருந்து அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகும். வரவிருக்கும் ஜேர்மன் அரசாங்கம், இலாபங்களையும் பங்கு விலைகள் அதிகரிப்பையும் உறுதிப்படுத்த, ஏராளமான உயிர்களை தியாகம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட அதன் கொள்கைக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்காக அவசரகால நிலையை பிரகடனப்படுத்த தயாராகி வருகிறது. இது ஒரு முழு தலைமுறை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தில் ரஷ்ய வட்டு (Russian roulette) விளையாட்டு விளையாடும் ஒரு கொள்கையாகும்.

மேஜர் ஜெனரல் புரோயர் சிறிதளவு கூட மருத்துவ அல்லது வைரலாஜிக்கல் நிபுணத்துவம் பெற்றவர் இல்லை. அவர், சர்வதேச போர் பணிகள், மற்றும் ஜேர்மன் இராணுவம், நேட்டோ, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்நாட்டு இராணுவ நடவடிக்கைகளின் முன்னணி கட்டளை அமைப்புகளிலிருந்து பெற்ற பல தாசப்த கால அனுபவத்தைத்தான் இந்த பணிக்கு பயன்படுத்தப்போகிறார்.

1964 இல் பிறந்த புரோயர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற உடனேயே 36 ஆண்டுகளுக்கு முன்பு தனது இராணுவப் பணியைத் தொடங்கினார். அவர் பல்வேறு ஜேர்மன் இராணுவ பயிற்சி நிறுவனங்களிலும், ஹம்பேர்க்கில் உள்ள ஜேர்மன் இராணுவப் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் ஒரு பொதுப் பணியாளர் படிப்பிலும் பயிற்சி பெற்றுள்ளார். அவர் கொசோவா மற்றும் ஆப்கானிஸ்தான் பணிகளின் கட்டளைப் பிரிவுகளுக்குச் சென்றார். மேலும், 2008 முதல் 2010 வரை, அவர் புரூஸெல்ஸ்ஸில் நேட்டோவுடன் முன்னணி கட்டளை பதவியை வகித்தார்.

துருப்புத் தளபதியாக அவரது பல்வேறு பணிகளுக்கு இடையில், புரோயர் மீண்டும் மீண்டும் பாதுகாப்பு அமைச்சக பணிக்கு நியமிக்கப்பட்டார். 2015 இல், ஊர்சுலா வொன் டெர் லெயன் (CDU) தலைமையிலான அமைச்சகத்திற்கான “பாதுகாப்புக் கொள்கை மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் எதிர்காலம் பற்றிய 2016 வெள்ளை அறிக்கையின்” திருத்தத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.

பாரிய மறுஆயுதமயமாக்கத்திற்கும் மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டுப் பணிகளின் விரிவாக்கத்திற்கும் முன்மொழிந்ததற்கு கூடுதலாக, வெள்ளை அறிக்கை உள்நாட்டு நோக்கங்களுக்காக ஜேர்மன் இராணுவத்தைப் பயன்படுத்த பரிந்துரைத்தது. ஜேர்மன் பேரரசு, வைமார் குடியரசு மற்றும் நாஜி சர்வாதிகாரத்தில் இராணுவத்தின் பேரழிவுகரமான பாத்திரத்தின் காரணமாக, உள்நாட்டில் இராணுவத்தை பயன்படுத்த குறுகிய வரம்புகளை நிர்ணயித்தது. திருத்தப்பட்ட வெள்ளை அறிக்கை, உள்நாட்டு பணிகளின் போது “தலையீடு மற்றும் வற்புறுத்தல் அதிகாரங்களைப் பயன்படுத்தி இறையாண்மை பணிகளைச் செய்ய வேண்டும்” என்று கோரியது – அதாவது, காவல்துறையைப் போல இராணுவமும் மக்களைத் தேடி கைது செய்யலாம்.

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, புரோயர் பிராந்திய பணிகள் கட்டளையகத்தின் தளபதியாக, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள ஜேர்மன் இராணுவத்தின் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக இருந்துள்ளார்.

ஜேர்மன் இராணுவத்தின் கூற்றுப்படி, தற்போது கொரோனா வைரஸ் பணிகளுக்கு 8,000 சிப்பாய்கள் தயாராக உள்ளனர், அவர்களில் 3,950 பேர் தற்போது பணியில் உள்ளனர். இந்த துருப்புக்கள் பெரும்பாலும் தளவாட, மருத்துவ அல்லது நிர்வாகப் பணிகளைச் செய்தாலும், இதற்கு பொறுப்பானவர்களின் முக்கிய நோக்கம், சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு மக்களைப் பழக்கப்படுத்துவதாகும்.

தொற்றுநோயின் தொடக்கத்தில் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஏற்கனவே இவ்வாறு எச்சரித்துள்ளது: “இராணுவம் உண்மையில் எவ்வளவு மருத்துவ உதவிகளை வழங்குகிறது என்பது முக்கியமல்ல, மாறாக இந்த இராணுவப் பணியாளர் நியமனம் மற்றொரு இலக்குக்கு உதவுகிறது. அதாவது, மக்கள்தொகை மீது இராணுவ-பொலிஸ் கட்டுப்பாட்டைத் திணித்து முதலாளித்துவ அரசின் நிறுவனங்களைப் பாதுகாப்பது தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்று முன்னணி ஜெனரல்கள் வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.”

அந்த நேரத்தில் டெர் ஸ்பீகல் செய்தியிதழில் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி, பாடன்-வூட்டெம்பேர்க் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பசுமைக் கட்சி-கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி (CDU) கூட்டணி “காவல்துறையில் பேரழிவுகரமான பணியாளர் பற்றாக்குறை இருப்பதால் உத்தியோகபூர்வமாக அவசரகால நிலையை அறிவிக்கவும் இராணுவத்தை அழைக்கவும்” ஏற்கனவே பரிசீலித்துள்ளது.

அடுத்த வாரம் நீதித்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ள சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) அரசியல்வாதி மார்க்கோ புஷ்மான், நோய்தொற்றுக்களின் புரட்சிகர எழுச்சிகளின் போது டெர் ஸ்பீகல் இதழின் விருந்தினர் கட்டுரையில் இவ்வாறு எச்சரித்தார்: “அரசும், சமூகமும், மற்றும் பொருளாதாரமும் பெரும் விலை கொடுத்து வாங்கும் இந்த மிகக் குறுகிய நேரம் விரைவில் கடந்துவிடும். … பின்னர் ஒரு கட்டத்தில் புரட்சி காற்றில் இருக்கும்.”

கொரோனா வைரஸ் நெருக்கடி தீர்வுக் குழுவின் தலைவராக ஜெனரல் புரோயர் நியமிக்கப்பட்டுள்ளமை WSWS இன் எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. சமூக ஜனநாயகவாதிகளும், பசுமைவாதிகளும் மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகளும், முந்தைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற “உயிர்களை விட இலாபங்களுக்கே முன்னுரிமை” கொள்கையைத் தொடரவும், மற்றும் பாரிய எதிர்ப்பை எதிர்கொள்ளவும் உறுதியாக உள்ளனர்.

நவம்பர் 18 அன்று, பாராளுமன்றத்தில் அவர்களது பெரும்பான்மையின் அடிப்படையில், அவர்கள் தொற்றுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Infection Protection Act) புதிய பதிப்பை நிறைவேற்றினர், இது தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பெரிதும் கட்டுப்படுத்துகிறது. கோவிட்-19 பாதிப்பால் ஏற்கனவே 100,000 பேர் இறந்துள்ள போதிலும், நோய்தொற்றின் நான்காவது அலையின் வெடிப்பார்ந்த எழுச்சி தவிர்க்க முடியாதது என்ற நிலையில், பேரழிவு நிகழவிருப்பது பற்றி விஞ்ஞானிகள் அவசரமாக எச்சரித்தனர், அவர்கள் தங்கள் போக்கில் இருந்து விலகவில்லை.

அவர்கள் தற்போதுள்ள “தேசியளவிலான தொற்றுநோய் நிலைமையை” நீட்டிக்க மறுத்ததுடன், புதிய சட்டத்தால் கட்டுப்படுத்தப்படும் மாநில அரசாங்கங்களுக்கு கோவிட்-19 நடவடிக்கைகளுக்கான பொறுப்பை மாற்றினர். வெளியே செல்வதற்கான கட்டுப்பாடுகள், முக்கிய நிகழ்வுகளைத் தடை செய்தல், பயணக் கட்டுப்பாடுகள், பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்களையும் பள்ளிகளையும் மூடுதல், மற்றும் கடந்த காலத்தில் மிகுந்த பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட பிற பூட்டுதல் நடவடிக்கைகள் என அனைத்து கட்டுப்பாடுகளும் இப்போது வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர் தொற்றுநோய் முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. நாளாந்த நோய்தொற்று விகிதங்கள் முன்னைய அலைகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளன, பள்ளிகளில் கிட்டத்தட்ட எந்தவித தடையுமின்றி வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது, ஏராளமான தீவிர சிகிச்சை மருத்துவமனைகள் அவற்றின் திறனின் வரம்பை எட்டியுள்ளன, தடுப்பூசி மையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் உருவாகின்றன, மேலும் ஒரு விமான விபத்திற்கு சமமாக ஒவ்வொரு நாளும் இறப்புக்கள் நிகழ்கின்றன. அதிலும் மிகுந்த தொற்றும் தன்மையுள்ள ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவல், நிலைமையை இன்னும் படுமோசமாக்குகிறது.

இதுவரை தொற்றுநோயால் பயனடைந்து சாதனை உச்சத்தை எட்டிய பங்குச் சந்தைகளும் வெள்ளிக்கிழமை எதிர்வினையாற்றின. சில நேரங்களில், Dax மற்றும் EuroStoxx50 நிறுவனங்களின் பங்குகள் மார்ச் 2020 இல் நோய்தொற்றின் முதல் அலையின் போதான பங்குச்சந்தை வீழ்ச்சியைப் போல கடுமையாக வீழ்ச்சியடைந்தன. Dax 4.2 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டது.

போக்குவரத்து விளக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை, அவர்கள் கொலைகார போக்கில் உறுதியாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். கூட்டணியின் கொரோனா வைரஸ் கொள்கையானது, பெருவணிகங்கள் மற்றும் வங்கிகளின் தனிப்பட்ட நலன்களை பாதுகாக்கவே பயன்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏனைய முதலாளித்துவ அரசாங்கங்களைப் போலவே, இதன் கவலையும் எத்தனை உயிர்கள் இழக்கப்படும் என்பது பற்றி அல்ல, மாறாக அடுத்த நாள் பங்குச்சந்தைகளில் என்ன நடக்கும் என்பது பற்றியும், கிறிஸ்துமஸூக்கான பொருள் வாங்கும் காலம் முடியும் வரை எந்த செயலையும் தாமதப்படுத்துவது எவ்வளவு சிறந்தது என்பது பற்றியும் தான் உள்ளது.

அதனால்தான் புதிய கூட்டணி, 36 ஆண்டுகால இராணுவ அனுபவமுள்ள இரண்டு நட்சத்திர ஜெனரலை சான்சிலர் அலுவலகத்திற்கு நோய்தொற்று நெருக்கடி தீர்வுக் குழுவின் தலைவராக நியமித்துள்ளது.

Loading