முன்னோக்கு

கோவிட்-19 பெருந்தொற்று குறித்த உலகளாவிய தொழிலாளர்களின் ஓர் விசாரணை ஆய்வுக்காக

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் இந்த கோவிட்-19 பெருந்தொற்று மீது உலகளாவிய தொழிலாளர்களின் ஓர் விசாரணை ஆய்வைத் தொடங்கி உள்ளது.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி, பொது சுகாதார வல்லுனர்களின் புரிதல், உழைக்கும் மக்கள் மற்றும் மாணவர்களின் நிஜமான உலக அனுபவத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் இந்த விசாரணை ஆய்வு, கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 இன் வெடிப்புக்கு அரசாங்கங்களும், பெருநிறுவனங்களும், ஊடகங்களும் காட்டும் நாசகரமான விடையிறுப்பை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும். இது, கட்டுப்பாடின்றி இந்த வைரஸ் பரவவும் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படும் விதத்தில் ஒரு பேரழிவுகரமான பெருந்தொற்றாக அது அபிவிருத்தி அடையவும் அனுமதித்த கொள்கைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார சக்திகள் மற்றும் நலன்களை அம்பலப்படுத்தும்.

இந்த பெருந்தொற்று அதன் அளவில் ஒரு வரலாற்று சம்பவமாகும். இந்த இருப்பதோராம் நூற்றாண்டின் போக்கில் அது ஏற்படுத்திய தாக்கம் இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்கள் ஏற்படுத்தியதை விட மிகவும் நீண்டு நெடியதாக இருக்கும் என்பது சுலபமாக நிரூபிக்கப்படலாம். ஆகவே, இந்த பெருந்தொற்றின் தோற்றுவாய்கள், காரணங்கள் மற்றும் விளைவுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த பேரிடர் 'கடவுளின் செயலோ' அல்லது சீன ஆய்வகத்தின் தீய சூழ்ச்சியின் விளைவோ அல்ல. அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் கூறும் இந்த பெருந்தொற்றைக் குறித்த சொல்லாடலில் வைக்கப்படும் பொய்களைத் தீர்க்கமாக மறுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

முதன்முதலில் SARS-CoV-2 கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தவிர்த்திருக்கக்கூடிய மில்லியன் கணக்கான மரணங்களுக்குப் பொறுப்பான கொள்கைகளை நியாயப்படுத்த முன்வைக்கப்படுகின்ற மூடிமறைப்புகள், பொய்மைப்படுத்தல்கள் மற்றும் தவறான தகவல்கள் மொத்தத்தையும் தகர்ப்பதற்கு, இந்த விசாரணை தேவைப்படுகிறது. சமூகரீதியில் ஈவிரக்கமின்றி, சொல்லப் போனால் மனித உயிர்களைக் குறித்து குற்றகரமாக அலட்சியமாக இருந்ததற்குப் போதுமான ஆதாரங்களை இந்த விசாரணை ஒன்றுதிரட்டி பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும்.

இந்த விசாரணையைத் தொடங்குவதைத் தாமதப்படுத்த முடியாது. உலகம் இந்த பெருந்தொற்றின் மூன்றாம் ஆண்டில் நுழைகையில், உலகளாவிய நோய்தொற்றோ இன்னும் குறையவில்லை. அது அதிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது. இந்த பெருந்தொற்றின் ஆறாவது உலகளாவிய எழுச்சி வெகுவாக இப்போது நடந்து வருகிறது, வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் நோயாளிகள், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் மரணங்கள் மீண்டுமொருமுறை அதிகரித்து வருகின்றன.

அக்டோபர் 17, 2021 இல் உலகளாவிய நாளாந்த சராசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 402,548 ஐ எட்டிய பின்னர், நாளாந்த சராசரி புதிய நோயாளிகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை நவம்பர் மத்தியில் 500,000 ஐ கடந்தது, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா மொத்தமும் நோயாளிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அனுபவித்து வருகின்றன.

சக்தி வாய்ந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், உலக மக்கள்தொகையில் 41 சதவீதத்தினர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், ஆபிரிக்கர்களில் 7 சதவீதத்திற்கு குறைவானவர்களும், குறைந்த வருவாய் நாடுகளின் 3 சதவீத மக்களும் இதில் உள்ளடங்குவர். உலக மக்கள்தொகையில் வெறும் 2.6 சதவீதத்தினர் மட்டுமே அவசியமான மூன்றாவது தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். தடுப்பூசிகள் மெதுவாக கொடுக்கப்படுவதற்கு மத்தியில் பாரிய நோய்தொற்றுக்கள் தொடர்வது, தடுப்பூசிக்கே மட்டுப்படாத வைரஸ் மாறுபாட்டை உருவாக்க அச்சுறுத்தும் பரிணாம அழுத்தங்களை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ உலகளாவிய இறப்பு எண்ணிக்கை இப்போது ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, பெரிதும் இது குறைத்துக் காட்டப்படும் எண்ணிக்கையாக அறியப்படுகிறது. உலகளவில் கோவிட்-19 இல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அனேகமாக 12.1 மில்லியனாக இருக்கலாம் என்றும், உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் கோவிட்-19 ஆல் சராசரியாக 13,300 பேர் உயிரிழக்கிறார்கள் என்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டுத் துறை (IHME) மதிப்பிடுகிறது. நீண்டகால கோவிட் ஆல் பாதிக்கப்படும் நூறு மில்லியன் கணக்கானவர்களையும் உள்ளடக்கிய நீண்டகால சமூகவியல் தாக்கங்கள் குறித்து இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.

வழமையான நிலைமைகளின் போது ஏதேனும் காரணங்களுக்காக எதிர்பார்க்கக்கூடிய மரணங்களுக்கு அப்பாற்பட்ட இந்த பெருந்தொற்றின்போது ஏற்பட்ட அதிகப்படியான இறப்புகளின் எண்ணிக்கை 17 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாமென Economist பத்திரிகை மதிப்பிடுகிறது. இந்த வைரஸைப் பரவ அனுமதித்த நாடுகளில், குறிப்பாக ரஷ்யா (2.32 ஆண்டுகள்) மற்றும் அமெரிக்காவில் (2 ஆண்டுகள்) ஆயுட்காலம் 2020 இல் கணிசமாக குறைந்துள்ளது.

இந்த பெருந்தொற்று முன்னறிவிக்கப்பட்டது

இந்த பெருந்தொற்று ஓர் எதிர்பாராத மற்றும் தடுக்க முடியாத பேரிடர் என்ற கட்டுக்கதையை இந்த விசாரணை அம்பலப்படுத்தும். சீனாவின் வூஹானில் SARS-CoV-2 முதன்முதலில் வெடித்த போது அதை வல்லுனர்கள் விலங்குகளிடம் இருந்து மிகவும் அனேகமாகவும் இறைச்சி சந்தையில் வௌவாலிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவி இருக்கலாம் என்று கூறிய நிலையில், பல தசாப்தங்களுக்கு முன்னரே, இதுபோன்றவொரு பெருந்தொற்றைக் குறித்து பெருமளவிலான விஞ்ஞான இலக்கியங்களும், நூல்களும், திரைப்படங்களும் கூட வெளியாகி இருந்தன, அவை இதை முன் உணர்த்தி இருந்தன.

2002–2004 SARS வெடிப்பு, 2003 H5N1 “பறவைக் காய்ச்சல்' கொள்ளைநோய், 2009 “பன்றிக் காய்ச்சல்' (swine flu) பெருந்தொற்று, 2012 MERS வெடிப்பு மற்றும் 2013–2016 இபோலா (Ebola) வைரஸ் கொள்ளைநோய் ஆகியவை உலகெங்கிலுமான விஞ்ஞானிகளை ஒரு பெருந்தொற்று வரவிருப்பதைக் குறித்து எச்சரிக்கையூட்டத் தூண்டின.

ஜூலை 2005 இல், தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மைக்கெல் ஓஸ்டர்ஹோம் 'அடுத்த பெருந்தொற்றுக்குக்கான தயாரிப்பு' என்ற தலைப்பில் Foreign Affairs இதழில் ஒரு விரிவான கட்டுரை எழுதினார். சொல்லப் போனால் இந்த ஆய்வறிக்கை ஜனவரி 2020 இல் உலகளவில் தொடங்கிய மோசமான சூழலை எல்லா விதத்திலும் விவரித்திருந்தது.

வரவிருக்கும் ஒரு பெருந்தொற்றை 'தவிர்க்கவியலாது' என்று எச்சரித்த டாக்டர் ஓஸ்டர்ஹோம் ஒவ்வொரு நாடும் 'ஒன்றிலிருந்து மூன்றாண்டு கால பெருந்தொற்று நெடுகிலும் மக்களை எவ்வாறு வழிநடத்துவது என்பதற்கான ஒரு விரிவான செயல்பாட்டு விளக்கம்' தயாரிக்கவும், அத்துடன் 'ஒட்டுமொத்த உலகிற்கும் தடுப்பூசி வழங்கும் ஒரு முன்முயற்சிக்கும்' அழைப்பு விடுத்தார். அடுத்த பெருந்தொற்று அன்றைய இரவே தொடங்கினால், “ஒரு பெருந்தொற்றை உணரும் ஒரு சில நாட்களுக்கு உள்ளேயே நடைமுறையளவில் ஒவ்வொரு மருத்துவச் சாதனமும் அல்லது பாதுகாப்பு உபகரணங்களும் பற்றாக்குறைக்கு உள்ளாகும்,” என்றும் அவர் எச்சரித்தார், அதேவேளையில் உலகளாவிய வினியோக சங்கிலி கடுமையாக தொந்தரவுக்கு உள்ளாகும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “இது வரலாற்றில் ஒரு மிக முக்கிய திருப்புமுனையாகும். அடுத்த பெருந்தொற்றுக்குத் தயாரிப்புகள் செய்வதற்கு நேரம் கடந்து கொண்டிருக்கிறது. நாம் தீர்மானமான நோக்கத்துடன் செயல்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டு அவர் அந்த கட்டுரையை நிறைவு செய்திருந்தார்.

நியூயார்க் நகரில் மார்ச் 2020 எழுச்சியின் போது புரூக்ளினில் உள்ள மைமோனிடிஸ் மருத்துவமனைக்கு வெளியே இறந்த COVID-19 நோயாளிகளின் உடல்கள். இந்தப் படத்தை மருத்துவமனையின் செவிலியர் ஒருவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அதற்கடுத்த 14 ஆண்டுகளில் எழுதப்பட்ட இதுபோன்ற பல கட்டுரைகள், ஆவணங்கள் மற்றும் ஆய்வறிக்கைகள் டாக்டர் ஓஸ்டர்ஹோமின் முன்கணிப்பை ஆமோதித்தன மற்றும் அதனுடன் சேர்ந்து கொண்டன. ஆனால் இந்த எச்சரிக்கைகள் கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்பட்டன, அத்தகைய ஒரு நிகழ்வுக்குச் சமூகம் முற்றிலும் தயாரிப்பு செய்யப்படவில்லை. அந்த ஆபத்தை எதிர்கொள்ள தேவையான நிதி ஆதாரங்கள் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் நிதியச் சந்தைகளிலும், எப்போதும் பெரிதாக்கப்பட்டு வரும் இராணுவ வரவு-செலவுத் திட்டக் கணக்கிலும் பாய்ச்சப்பட்டன. முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புமுறை கட்டுப்பாடின்றி சீரழிக்கப்பட்டதால், சமூகம் அதிகரித்தளவில் விலங்கிலிருந்து பரவும் நோய்களால் பாதிக்க விடப்பட்டது. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் கையிருப்பு பராமரிக்கப்படவில்லை. mRNA தடுப்பூசிகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சிகள் இலாபமற்றவை என்று கருதப்பட்டு அவை நிறுத்தப்பட்டன. மருத்துவமனை அமைப்புகள் குறைவான பணியாளர்களுடன் விடப்பட்டு, அவற்றுக்கு குறைந்த ஆதாரவளங்கள் ஒதுக்கப்பட்டன.

உலகளவில் SARS-CoV-2 இன் பரவலை 2020 தொடக்கத்திலேயே நிறுத்தி இருக்க முடியும்

SARS-CoV-2 பரவத் தொடங்கியவுடன், அதைத் தடுக்க முடியவில்லை என்ற ஏற்கவியலாத வாதத்தை இந்த விசாரணை விமர்சனரீதியாக விசாரித்து, மறுத்தளிக்கும். இந்த வலியுறுத்தல் 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சமூகமான சீனாவின் அனுபவத்துடன் தெளிவாக முரண்படுகிறது, அங்கே எடுக்கப்பட்ட அவசரகால நடவடிக்கைகள் வேகமாக அந்த வைரஸை அகற்றியது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, பரிசோதனை, நோய்தொற்றின் தடம் அறிதல், அத்தியாவசியமற்ற வேலையிடங்களின் மூடல் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனை வசதிகளைக் கட்டமைத்தல் ஆகியவை அதில் உள்ளடங்கி இருந்தன.

பெப்ரவரி 14 இல் சீனாவின் நாளாந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 4,602 ஆக உச்சத்தில் இருந்தது, அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் மார்ச் 14, 2020 வாக்கில், சீனா அதன் நாளாந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை 25 க்கும் குறைவாக கொண்டு வந்திருந்தது. அந்த வைரஸ் விரைவிலேயே அகற்றப்பட்டதுடன், அவ்வபோது மிகச் சிறிய வெடிப்புகளே இருந்தன, அவற்றில் புதிய நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை ஒரேயொரு முறை மட்டுமே 200 க்கு அதிகமாக இருந்தது. இன்று வரையில் சீனாவில் கோவிட்-19 ஆல் 4,636 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஏப்ரல் 17, 2020 க்கு முன்னர் வரை ஏறக்குறைய முழுமையாக நான்கு பேர் மட்டுமே இறந்திருந்தனர். இதே போன்ற நடவடிக்கைகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நியூசிலாந்து, வியட்நாம், தைவான் மற்றும் பிற நாடுகளிலும் மிகப் பெரும் வெற்றியுடன் செயல்படுத்தப்பட்டன.

இந்த வைரஸைத் தடுக்க முடியாது என்ற வலியுறுத்தலை மறுப்பது வெறுமனே முற்றிலும் வரலாற்று ஆர்வம் சம்பந்தப்பட்டதல்ல. இன்று உலகெங்கிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதுடன் சேர்ந்து, கோவிட்-19 ஐ அகற்றுவதையும் மற்றும் முற்றிலும் இல்லாதொழிப்பதையும் நோக்கி வழி நடத்தப்படும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது இப்போதும் சாத்தியமே என்பதுடன், அத்தியாவசியமும் கூட.

“சமூக நோயெதிர்ப்பு சக்தி' பெருக்கத்திற்கு எதிராக அகற்றும் நடைமுறை

இந்த விசாரணை பின்வரும் முக்கிய கேள்வியை எதிர்கொள்ளும்: சீனா, நியூசிலாந்து மற்றும் மற்ற ஆசிய-பசிபிக் நாடுகளில் வெற்றிகரமானதாக நிரூபணமான நடைமுறைகள் அமெரிக்கா, பிரேசில், ஜேர்மனி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? எந்த பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நலன்கள் முற்றிலும் வேறுபட்ட ஒரு விடையிறுப்புக்குக் கட்டளையிட்டன? இந்த பெருந்தொற்றின் உள்ளடக்கத்தில், யார் ஆதாயமடைகிறார்கள்? (cui bono?) என்ற குற்றவியல் சட்டத்தின் பண்டைய கேள்வி முன்வைக்கப்பட வேண்டும்.

மனித உயிர்களைக் காப்பாற்றுவதை விட நிதியச் சந்தைகள் மற்றும் பெருநிறுவன இலாபங்களின் ஓட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க நனவூபூர்வமாக தீர்மானிக்கப்பட்டது என்பது தவிர்க்க முடியாத பதிலாக உள்ளது, இதை இந்த விசாரணை எடுத்துக்காட்டும். உண்மைகள் பேசும். கோவிட்-19 ஆல் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்த அதேவேளையில், பெருநிறுவன தலைமை செயலதிகாரிகள் மற்றும் மிகப்பெரும் பங்குதாரர்களின் செல்வவளமோ பரந்தளவில் அதிகரித்தன. இந்த பெருந்தொற்றின் முதல் 19 மாதங்களில், அமெரிக்க பில்லியனர்களின் செல்வ வளம் மட்டுமே 2.1 ட்ரில்லியன் டாலர், அல்லது 70 சதவீதம் அதிகரித்தது. உலகையே சூறையாடிய ஒரு நோய் அந்த பெருந்தொற்றில் இருந்து இலாபமீட்டியவர்களைப் பரந்தளவில் செழிப்பாக்கியது.

ஜனவரி 2020 இல் SARS-CoV-2 சம்பந்தமான ஓர் உளவுத்துறை அறிக்கைக்காக ஒன்றுகூட்டப்பட்ட காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் குழுவின் செல்வச்செழிப்பான அமெரிக்க செனட்டர்கள், அந்த வைரஸின் ஆபத்துக்கள் குறித்து மவுனமாக இருந்ததோடு மில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பங்குகளை விற்று குவித்துக் கொண்டார்கள். மார்ச் 19, 2020 இல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக பத்திரிகையாளர் பாப் வூட்வார்டிடம் கூறுகையில், சந்தைகள் சரிவதைத் தடுப்பதற்காக அவர் வேண்டுமென்றே மக்களைத் தவறாக வழிநடத்தியதாக கூறினார், “எப்போதுமே அதை நான் குறைத்துக் காட்ட விரும்பினேன். இப்போதும் அதை நான் குறைத்துக் காட்ட விரும்புகிறேன், ஏனென்றால் ஒரு பீதியை உருவாக்க நான் விரும்பவில்லை,” என்றார். உலகெங்கிலுமான நாடுகளில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.

அகற்றும் மூலோபாயம் அல்லது 'பூஜ்ஜிய கோவிட்' மூலோபாயத்திற்கு எதிராக, அரசாங்கங்கள் சமூகரீதியில் குற்றகரமான 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை — அதாவது, பெரும்பான்மை மக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் வரையில் சமூகத்தில் வைரஸைப் பரவ அனுமதிப்பது என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தின. முதலில் சுவீடனில் செயல்படுத்தப்பட்ட இந்தக் கொள்கை, ட்ரம்ப் நிர்வாகத்தாலும் உலகளவில் அவரது சக சிந்தனையாளர்களாலும் ஊக்குவிக்கப்பட்ட நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தாமஸ் ஃப்ரீட்மனால் உத்வேகத்துடன் முன்கொண்டு வரப்பட்டு, கிரேட் பாரிங்டன் (Great Barrington) பிரகடனத்தில் நனவுடன் வெளிப்படுத்தப்பட்டது. வைரஸை அகற்றுவதற்கு எதிராக ஃப்ரீட்மன் முன்நகர்த்திய இந்த 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' வழிகாட்டி மந்திரம் என்னவென்றால், “நோயை விட குணப்படுத்துவது மோசமாக இருந்து விடக்கூடாது,” என்பதாகும், அதாவது பொது சுகாதாரம் பெருநிறுவன இலாபங்களுக்கு அடிபணிய வேண்டும் என்பதாகும்.

'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை நியாயப்படுத்த, கோவிட்-19 பற்றிய அடிப்படை விஞ்ஞான உண்மைகள் மறைக்கப்பட்டு பொய்மைப்படுத்தப்பட்டன. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) உட்பட உத்தியோகபூர்வ அமைப்புகள், ஓராண்டுக்கும் மேலாக இந்த வைரஸின் காற்றில் பரவும் தன்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக அவை காற்றுவழி பரவல் தான் பரவுவதற்கான மேலோங்கிய அம்சமாக இருப்பதை ஒப்புக் கொண்ட பின்னரும், பொதுமக்களுக்கு கல்வியூட்டவோ, கட்டாயம் முகக்கவசம் அணியச் செய்யவோ அல்லது பள்ளிகள் உட்பட பொது இடங்களில் முறையாக காற்றோட்ட வசதிகளை மேம்படுத்தவோ அவை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வகையறாக்களும், அத்துடன் முதலாளித்துவச் சார்பு தொழிற்சங்கங்களும், குழந்தைகள் மீது கோவிட்-19 இன் பாதிப்புகளையும், வைரஸ் பரவலில் பள்ளிகள் வகிக்கும் முக்கிய பங்கையும் பொய்மைப்படுத்தின. அமெரிக்காவில், அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர், பைடென் நிர்வாகத்தின் சார்பாக, குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக பொறுப்பற்ற குற்றகரமான பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கினார். பாசாங்குத்தனமாக மாணவர்களின் மனநலத்தைப் பற்றிய கவலையைக் காரணங்காட்டி, பெருநிறுவனங்களுக்குத் தொடர்ந்து இலாபங்கள் பாய்வதை உறுதிப்படுத்த பெற்றோர்களை வேலைக்குத் திரும்ப செய்வதே எப்போதும் அவர்களின் அடிப்படை நோக்கமாக இருந்துள்ளது.

பரந்த எதிர்ப்பை எதிர்கொண்ட உயரடுக்குகள், ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கொண்டு விடையிறுத்துள்ளன. பிரிட்டனில், பள்ளிகள் பாதுகாப்பின்றி மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்திற்குத் தலைமை வகிக்கும் பெற்றோர், லிசா டியஸ், அபராதம் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டதுடன், பத்திரிகைகளில் அவமதிக்கப்பட்டார். கோவிட்-19 தனது சக-தொழிலாளர்களுக்கு ஆபத்தை முன்னிறுத்துவதாக எச்சரித்த ஓர் இலண்டன் பேருந்து ஓட்டுனர் டேவிட் ஓ'சுல்லிவன் பழிவாங்கும் நடவடிக்கையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

மக்கள் ஆரோக்கியத்திற்கான கொள்கைகளை இழிவுபடுத்தும் இந்த செயல்முறையில், “சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும்' கொள்கைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வலதுசாரி வெறியர்களைத் தூண்டிவிட்டு, பொது முடக்கங்களை நிராகரித்ததுடன், முகக்கவசம் அணிவதையும் தடுப்பூசிகளையும் எதிர்ப்பதை மையமாக கொண்ட தவறான தகவல் பரப்பும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைப் பின்பற்றி, மக்களின் குழப்பத்தை அபாயகரமான மட்டங்களுக்குக் கொண்டு சென்றனர்.

இந்த செப்டம்பர் 2020 புகைப்படத்தில், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் ஆலோசகர் டாக்டர் ஸ்காட் அட்லஸ் தொற்றுநோய் பற்றிய செய்தி மாநாட்டின் போது பேசுவதை அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பார்க்கிறார் (AP Photo/Alex Brandon) [AP Photo/Alex Brandon]

அதே நேரத்தில், SARS-CoV-2 வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று வாதிட்டு, அதன் தோற்றுவாய்கள் குறித்த பொய்கள் இட்டுக்கட்டப்பட்டன. இந்த சதிக் கோட்பாடு அதிவலதுகளால் இட்டுக்கட்டப்பட்டு, பின்னர் ஸ்தாபக ஊடகத்தால், குறிப்பாக வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூ யோர்க் டைம்ஸால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது இந்த பெருந்தொற்றுக்கான உண்மையான காரணங்களைத் திசை திருப்பியது என்பது மட்டுமல்ல, மாறாக சீனாவுக்கு எதிராக திருப்பப்பட்ட ஓர் இராணுவவாத புவிசார் அரசியல் திட்டநிரலை முன்னெடுக்கவும் பயன்படுத்தப்பட்டது.

2021 இல் பணக்கார நாடுகளில் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்ட நிலையில், தடுப்பூசிகளும் முகக்கவசங்கள் அணிவதும் மட்டுமே இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்ற பொய்யான வாதங்களின் அடிப்படையில் 'சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும்' ஒரு துணைக் கொள்கை அபிவிருத்தி செய்யப்பட்டது. இது பைடென் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று மே 13, 2021 இல் அறிவித்த பைடென் நிர்வாகம், இந்த பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைந்து விட்டதாக ஜூலை 4, 2021 இல் காலத்திற்கு முந்தியே அறிவித்தது. அந்த தேதியிலிருந்து, 170,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்திருக்கிறார்கள்.

'சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கம்,' தடுப்பூசிகளும் அத்துடன் சேர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளும் மற்றும் SARS-CoV-2 ஐ உலகளவில் அகற்றுதல் என இந்த பெருந்தொற்றை நோக்கிய மூன்று மூலோபாயங்கள் உருவாகி இருப்பதை உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டுள்ளது. முதல் இரண்டு மூலோபாயங்களும் மக்கள் ஆரோக்கியத்தைத் தனியார் இலாபங்களுக்கு அடிபணியச் செய்வதை அடிப்படையாகக் கொண்டவை, அதே நேரத்தில் கடைசி மூலோபாயம் மட்டுமே இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முன்னோக்கிய பாதையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

இந்த நாசகரமான 'சமூக நோயெதிர்ப்புச் சக்திப் பெருக்கும்' கொள்கைகளுக்குப் பொறுப்பான அதே நிதிய நலன்கள் தான், ஆசிய-பசிபிக் முழுவதிலும் உள்ள நாடுகள் வைரஸை அகற்றும் அவற்றின் மூலோபாயத்தை கைவிடவும் மற்றும் பாரியளவில் நோய்தொற்றுக்கள் ஏற்பட அனுமதிக்கவும் அந்நாடுகளுக்குப் மிகப் பெரியளவில் அழுத்தம் கொடுத்துள்ளன. அண்மித்து 18 மாதங்களாக இந்த வைரஸை வெற்றிகரமாக அடக்கி வைத்திருந்த நியூசிலாந்து அரசாங்கம், இறுதியில் சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்தது. அக்டோபரில் அது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பூஜ்ஜிய கோவிட் (Zero COVID ) கொள்கையைக் கைவிட்டது. இந்த பின்வாங்கலின் விளைவாக கோவிட் நோய்தொற்றுகள் அங்கே வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. சீனா கோவிட் ஐ அகற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டில் இருந்து பின்வாங்க செய்ய அதன் மீதும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்காக பாரிய நோய்தொற்றுக்களை ஏற்குமாறு நாடுகளை நிர்ப்பந்திக்க நோக்கம் கொண்ட இத்தகைய உலகளாவிய சூழ்ச்சிகளும், இந்த விசாரணையால் விசாரிக்கப்படும்.

கோவிட்-19 பெருந்தொற்று மீதான உலகளாவிய தொழிலாளர்கள் விசாரணை ஆய்வின் வாய்ப்பும் நோக்கமும்

கிரிமினல் குற்றச்சாட்டை முன்வைக்காமல் ஒருவரால் மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களைக் குறித்து பேச முடியாது. டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகவே மக்களிடம் பொய் கூறிய அதேவேளையில், போரிஸ் ஜோன்சனோ, 'சடலங்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!' என்று உளறினார், ஜோ பைடென், ஜஸ்டின் ட்ரூடோ, அங்கேலா மேர்க்கெல், இமானுவல் மக்ரோன் மற்றும் உலகின் இன்னும் டஜன் கணக்கான தலைவர்களின் நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் தேவையற்ற துயரங்கள் மற்றும் மரணங்களை விளைவித்தன. ஏப்ரல் 2021 இல், டெல்டா வகை வைரஸால் இந்தியா சூறையாடப்பட்ட போது, இந்திய மக்களை வைரஸிடம் இருந்து அல்ல, 'பொது முடக்கத்திலிருந்து' காப்பாற்ற நரேந்திர மோடி சூளுரைத்தார். இதன் விளைவாக, கோவிட்-19 ஆல் குறைந்தபட்சம் 3 மில்லியன் பேர் அல்லது அனேகமாக 5 மில்லியன் இந்தியர்கள் கொல்லப்பட்டதாக உத்தியோகப்பூர்வ ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் உட்பட அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் சில பிரிவுகள் இந்த பெருந்தொற்றை விசாரிக்க '9/11 பாணியிலான ஆணையம்' அமைக்க அழைப்பு விடுத்துள்ளன. அத்தகைய ஒரு 'விசாரணை' ஏற்கனவே நடந்துள்ள மூடிமறைப்பை ஆழப்படுத்த மட்டுமே சேவையாற்றும். ஒரு அரசாங்கம் கூட எந்த தீவிர விசாரணையையும் பொறுத்துக் கொள்ளாது, ஏனென்றால் இந்த பாரிய சமூக குற்றத்தில் அவர்களே தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

கோவிட்-19 பெருந்தொற்று மீது உலகளாவிய தொழிலாளர்கள் விசாரணைக்கு அரசாங்கங்களின் ஒப்புதலைக் கோர வேண்டியதில்லை அல்லது அதற்கான அவசியமும் இல்லை. உலக சோசலிச வலைத் தளம் அந்த விசாரணையைத் தொடங்க நன்கு ஆயத்தமாக உள்ளது. அது SARS-CoV-2 பற்றிய ஆரம்பக்கட்ட பொது அறிக்கைகள் வந்த போதே ஓர் உலகளாவிய பெருந்தொற்றின் அபாயத்தை உணர்ந்து கொண்டது. ஜனவரி 24, 2020 இல் முதன்முதலில் கொரோனா வைரஸ் வெடிப்பு பற்றிய முதல் செய்தி வந்ததில் இருந்து, WSWS, இந்த விஷயம் மீது 4,000 க்கும் அதிகமான கட்டுரைகள் பிரசுரித்துள்ளது. 2020 தொடக்கத்தில் இருந்து இந்த பெருந்தொற்றைத் தடுக்க ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அது கோரியுள்ளது. அது பாரிய மரணத்திற்குப் பொறுப்பான அரசாங்கக் கொள்கைகளைக் கண்டித்துள்ளது.

பிப்ரவரி 28, 2020 இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் இந்த பெருந்தொற்றைத் தடுக்க உலகளாவிய நடவடிக்கைக்கான அவசியத்தை வலியுறுத்தியது, அது பின்வருமாறு எழுதியது:

கொரோனா வைரஸிற்கான விடையிறுப்பை ஒரு நாடு மாற்றி ஒரு நாடு மட்டத்தில் ஒருங்கிணைத்து செய்ய முடியாது. இந்த வைரஸ் எல்லைகளையோ அல்லது நுழைவனுமதி மற்றும் குடியேற்ற கட்டுப்பாடுகளையோ மதிப்பதில்லை. போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் இந்த உலகளாவிய வலையமைப்பு இந்த வைரஸை ஓர் உலகளாவிய பிரச்சினையாக மாற்றியுள்ளது.

இதற்கான தீர்வு பூகோளமயப்பட்டதாக இருக்க வேண்டும். உலகெங்கிலுமான விஞ்ஞானிகள், அவர்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும், 'தேசிய நலன்கள்' மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் பாதிக்கப்படக் கூடாது, அவை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும், குணப்படுத்தும் மற்றும் இறுதியில் முற்றிலுமாக ஒழிக்கும் பயனுள்ள எதிர்நடவடிக்கைகளின் வளர்ச்சியைத் தாமதப்படுத்த மட்டுமே சேவையாற்றுகின்றன.

மார்ச் 6, 2020 இல், உலக சோசலிச வலைத்தளம் பின்வருமாறு குறிப்பிட்டது: 'மக்களின் ஆரோக்கியம் மீது ட்ரம்ப் நிர்வாகம் கொண்டிருக்கும் அலட்சியம், பண்டைய எகிப்து அடிமைகளை நோக்கிய பரோவாக்களின் (pharaohs – பண்டைய எகிப்திய மன்னர்கள்) அணுகுமுறையை விட சிறந்ததில்லை, அனேகமாக அதை விட மோசமானதாக இருக்கலாம். ஊடகங்களோ மனித உயிரிழப்புகளை விட வோல் ஸ்ட்ரீட்டின் பங்கு மதிப்பு வீழ்ச்சியைப் பற்றி புலம்புவதற்கே அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளன.”

இந்தக் கொள்கைகளை எதிர்த்து, உலக சோசலிச வலைத் தளம் மார்ச் 17, 2020 இல் ஓர் அறிக்கை வெளியிட்டது, அது பின்வருமாறு அறிவித்தது: 'நெருக்கடிக்கான விடையிறுப்பை வழிநடத்த வேண்டிய இன்றியமையா கொள்கை என்னவென்றால், பெருநிறுவன இலாபம் மற்றும் தனிப்பட்ட செல்வவளம் மீதான அனைத்து கவனங்களையும் விட உழைக்கும் மக்களின் தேவைகளுக்கு முழுமையாக மற்றும் நிபந்தனையற்ற முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.'

உலக சோசலிச வலைத் தளம் இந்த பெருந்தொற்றின் பாதிப்பைக் குறித்து அறிவித்தது என்பது மட்டுமல்ல. அது இந்த பெருந்தொற்றைப் பற்றியும், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு விஞ்ஞானபூர்வப் புரிதலை வழங்க முயன்றுள்ளது. இந்த இலக்கை நோக்கி தான், உலக சோசலிச வலைத் தளம் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணி உடன் சேர்ந்து ஆகஸ்ட் 22 மற்றும் அக்டோபர் 24, 2021 இல் இரண்டு உலகளாவிய இணையவழி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தது, அதில் உலகளவில் இந்த வைரஸை அகற்றும் கொள்கைக்காக போராடும் முன்னணி விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கையின் கொழும்பில், அக்டோபர் 8, 2021 வெள்ளிக்கிழமை, வேலைநிறுத்த நடவடிக்கையின் போது, சிறந்த ஊதியம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைக் கோரி இலங்கை சுகாதார ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர். (AP Photo/Eranga Jayawardena)

அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கம், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்திற்கு அடிப்படையாக பின்வருவனவற்றை முன்மொழிந்தது:

1. கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் Sars-CoV-2 இன் இலக்கு தனிநபர்கள் அல்ல, மாறாக அது ஒட்டுமொத்த சமூகத்தையும் குறி வைக்கிறது. அந்த வைரஸ் பரவும் விதம் பாரிய நோய்தொற்று ஏற்படுவதை நோக்கி உள்ளது. Sars-CoV-2 பில்லியன் கணக்கானவர்களைத் தாக்க உயிரியல்ரீதியில் பரிணமித்துள்ளது, அவ்விதம் செயல்படுகையில் மில்லியன் கணக்கானவர்களை உயிரிழக்கச் செய்கிறது.

2. எனவே, ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த வைரஸை அகற்றுவதை இலக்காகக் கொண்ட ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயமே ஒரே பயனுள்ள மூலோபாயமாகும். இந்த பெருந்தொற்றுக்குப் பயனுள்ள தேசிய தீர்வு எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த மனிதகுலமும் —அனைத்து இனங்களும், இனவழிகளும் மற்றும் அனைத்து தேசியத்தை சார்ந்தவர்களும்— சுயநலமின்றி ஓர் உண்மையான பரந்த உலகளாவிய கூட்டு முயற்சியின் மூலம் இந்த சவாலை எதிர்கொண்டு இதைக் கடந்து செல்ல வேண்டும்.

3. இந்த பெருந்தொற்று வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் பின்பற்றும் கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். சமூகக் கொள்கையின் கேள்விக்கிடமற்ற முன்னுரிமையாக இருக்க வேண்டியதை, அதாவது மனித உயிர்களின் பாதுகாப்பை, பெருநிறுவன இலாப நலன்கள் மற்றும் தனிநபர் செல்வக் குவிப்புக்கு அடிபணிய செய்வதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

4. உலகளவில் அகற்றுவதை நோக்கிய ஒரு தீர்க்கமான திருப்பத்தை கொண்டு வரும் முன்முயற்சி, மில்லியன் கணக்கான மக்களின் சமூகரீதியில் நனவான இயக்கத்திலிருந்து வர வேண்டும்.

5. இந்த உலகளாவிய இயக்கம் விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சியை உள்ளீர்த்திருக்க வேண்டும். விஞ்ஞானிகள் பலர் அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களின் உயிரையே கூட ஆபத்தில் வைத்து உழைக்கிறார்கள் என்கின்ற நிலையில், விஞ்ஞானிகளை துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இந்த வைரஸை உலகளவில் அகற்றுவதற்கு சமூகத்தின் மிகப் பரந்த தொழிலாள வர்க்கத்திற்கும் விஞ்ஞான சமூகத்திற்கும் இடையே நெருக்கமான கூட்டுழைப்பு அவசியப்படுகிறது.

இந்தக் கோட்பாடுகள் மற்றும் கடந்த இராண்டு கால பணிகளின் அடிப்படையில், உலக சோசலிச வலைத் தளம் உலகளவில் ஒரு விசாரணை ஆய்வை நடத்தும். அது உலகெங்கிலுமான விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கும் மற்றும் நேர்காணல்கள் செய்யும். இந்த விசாரணை ஆய்வு, உலகின் எல்லா பகுதிகளிலும் இந்த பெருந்தொற்றின் வெடிப்பு, பரவல் மற்றும் நிர்வகிக்கப்பட்ட முறை தொடர்பான பரந்துப்பட்ட முக்கிய பிரச்சினைகளை ஆராயும்.

அது, சாதாரண மக்களின் வாழ்வில் இந்த பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை ஆவணப்படுத்த நிஜ வாழ்க்கையின் தகவல்களைப் பெற தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களைத் தொடர்பு கொள்ளும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், விசாரணை ஆய்வுக்காக ஒழுங்கமைப்புரீதியான ஏற்பாடுகளையும் உந்துதலையும் வழங்கும். ஆனால் இந்த மகத்தான திட்டத்திற்கு இந்த பெருந்தொற்றுக்கு எதிராக போராடும் பல துறை வல்லுனர்களின் செயலூக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

இந்த விசாரணை ஆய்வு நடைமுறைப் பணியில் இந்த ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்யும் முயற்சியாக, உலக சோசலிச வலைத் தளம், எல்லா பங்களிப்பாளர்களும் அது அறிவுறுத்தும் சோசலிச வேலைதிட்டத்துடன் உடன்பட்டிருக்க வேண்டும் எனக் கோரவில்லை. இந்த விசாரணை ஆய்வில் ஈடுபடுபவர்களிடையே எதிர்கால சமூகத்திற்கான சிறந்த அரசியல், சமூக மற்றும் பொருளாதார வடிவங்களைக் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த ஒத்துழைப்புக்கு இதில் பங்கெடுப்பவர்களிடையே விஞ்ஞானபூர்வ உண்மை, கோவிட்-19 ஐ அகற்றி முற்றிலுமாக ஒழிப்பது, மனிதகுலத்தின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றின் மீது ஒரு விட்டுக்கொடுப்பற்ற உறுதிப்பாடு தேவைப்படும்.

இந்த விசாரணை ஆய்வு வேலையில் உதவ விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Loading