தென்னாபிரிக்காவின் ஓமிக்ரோன் மாறுபாட்டின் எழுச்சியை எதிர்கொள்வதற்கான புதிய நடவடிக்கைகளை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நிராகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா, ஓமிக்ரோன் மாறுபாட்டினால் தூண்டப்பட்ட தொற்றுநோயின் புதிய அலையை எதிர்கொண்டு உயிர்களைப் பாதுகாக்க எந்தவித புதிய நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்த மறுத்துவிட்டார். தென்னாபிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் நோய்தொற்று பரிசோதனை நேர்மறை விகிதம் 1 சதவீதத்தில் இருந்து அண்ணளவாக 10 சதவீதமாக திடீரென அதிகரித்துள்ளது பற்றி பரவலாக கவலைகள் இருந்தாலும் இது நடக்கிறது.

1994 இல் நிறவெறியின் முடிவில் இருந்து நாட்டை ஆட்சி செய்து வரும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) தலைவருமான இந்த கோடீஸ்வரர், தனது சர்வதேச சகாக்களைப் போல, தனது ஒரே அக்கறையும் நிதிய உயரடுக்கின் இலாபங்களை பராமரிப்பது தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

நவம்பர் 11 அன்று நான்கு வெளிநாட்டு தூதர்கள் போட்ஸ்வானாவை விட்டு வெளியேறியபோது பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு ஓமிக்ரோன் மாறுபாட்டின் நோய்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, மேலும் நவம்பர் 24 அன்று இந்த மாறுபாட்டின் மரபணு வரிசைப்படுத்துதலும் செய்யப்பட்ட பின்னர், கண்டத்திலேயே அதிநவீன மரபணு வரிசைப்படுத்துதல் வசதிகளைக் கொண்டுள்ள தென்னாபிரிக்காவில் விஞ்ஞானிகளால் புதிய ஓமிக்ரோன் மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தென்னாபிரிக்காவுக்கும் மற்றும் பிற தென்னாபிரிக்க நாடுகளுக்கும் சர்வதேச பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ராமபோசா குற்றம்சாட்டினார். கொரோனா மரபணுவில் முன்நிகழ்ந்திராத எண்ணிக்கையில் பிறழ்வுகள் உருவானதால் ஏற்பட்ட கொரோனா வைரஸின் குறிப்பிடத்தக்க மற்றும் திடீர் பரிணாம எழுச்சி, நாட்டின் பரிதாபகரமான போதிய வசதிகள் இல்லாத சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை மூழ்கடிக்கவும், விவரிக்க முடியாத துன்பத்தை விளைவிக்கவும் அச்சுறுத்துகிறது.

டிசம்பர் 1, 2021, புதன்கிழமை, தென்னாபிரிக்காவின் ஜோஹனஸ்பேர்க்கின் தெற்கே உள்ள லாலியில் கோவிட்-19 தடுப்பூசி போட மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். (AP Photo/Shiraaz Mohamed)

குறைந்தது 20 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கோவிட்-19 இன் புதிய மாறுபாடு ஒரு “அக்கறை கொள்ள வேண்டிய மாறுபாடு” (“variant of concern”) என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளமை, அது அதிக ஆபத்துள்ள வகையைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கிறது, அதன் பிறழ்வுகள் அதை வேகமாகப் பரவ அனுமதிக்கின்றன, மிகக் கடுமையான நோயை ஏற்படுத்துகின்றன அல்லது தடுப்பூசி பாதுகாப்பைத் தடுக்கின்றன. இன்றுவரை அடையாளம் காணப்பட்ட ஆரம்ப நோய்தொற்று அக்டோபர் மாதம் நைஜீரியாவில் இருந்தது.

ஏதேனும் கூடுதல் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர், அதிலும் குறிப்பாக சுற்றுலாத் துறையில் ஏற்படுத்துவதற்கு முன்னர், தடைகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ராமபோசா அழைப்பு விடுத்துள்ளார். தென்னாபிரிக்காவின் சுற்றுலாத்துறை மக்கள்தொகையில் 4.5 சதவீதத்தைப் பயன்படுத்துவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இது, 2020 இல் சுற்றுலா முன்பதிவுகளில் 10 பில்லியன் டாலரை இழந்தது, மேலும் முக்கிய சந்தைகளில் இருந்து வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதால் பிரதி வாரம் 10 மில்லியன் டாலரை இது இழக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளது.

பயணத் தடைகள் உட்பட எடுக்கப்பட்ட பல கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக வைரஸால் ஏற்பட்ட இறப்புக்களை 6,000 க்கும் குறைவாக கட்டுப்படுத்தி வைத்துள்ள சீனாவின் அனுபவத்திற்கு முரண்பட்டதாக, “இந்த கட்டுப்பாடுகளை வைத்திருப்பதற்கு எந்த விஞ்ஞான நியாயமும் இல்லை. எல்லா வைரஸ்களையும் போல, இந்த வைரஸூம் பிறழ்வடைந்து புதிய மாறுபாடுகளை உருவாக்குகிறது என்பதை நாம் அறிவோம்” என்று அவர் கூறினார்.

தென்னாபிரிக்கா மிகக் குறைந்த மட்டத்தில் கொரோனா வைரஸ் எச்சரிக்கை நிலை 1 இல் தொடர்ந்து இருக்கும். ராமபோசா இன்னும் மேலதிக பூட்டுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மாறாக, அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுத்தார். தடுப்பூசி அனுமதிச் சீட்டு இல்லாமல் பொது நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது பற்றிய யோசனையை முன்னரே வெளியிட்டு, குறிப்பிட்ட இடங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது பற்றி மட்டும் அவர் பரிசீலித்து வந்தார். நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு உட்பட, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மீளத்திறக்கும் முனைப்பில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் போதியளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தாததன் விளைவாக நாட்டின் மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. அந்த மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகள் கூட ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ராமபோசா இப்போது அறிவிக்கிறார். பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான ஒரே பொது நடவடிக்கை தடுப்பூசி மட்டும் தான் என்று அவர் வலியுறுத்துவதானது, பெரும் வல்லரசுகள் தடுப்பூசிகளை வாங்கி பதுக்கிக்கொண்டுள்ள, காப்புரிமைகள் மீதான விதிகளை தளர்த்துவதை உலக வர்த்தக அமைப்பு நிறுத்திக் கொண்டுள்ள, மேலும் ஐக்கிய நாடுகளின் CAVAX திட்டத்திற்கு நிதி மற்றும் விநியோக ஏற்பாட்டை வழங்கத் தவறிய சூழ்நிலைகளில், உலக மக்கள்தொகையில் பெரும்பகுதியினருக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் ஏற்பட்ட குற்றவியல் தோல்விக்கு முற்றிலும் முரணாக உள்ளது. இதன் விளைவாக, ஆபிரிக்காவின் மக்கள்தொகையில் வெறும் 7 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில், இந்த ஆண்டு இறுதிக்குள் 70 சதவீத வயது வந்தோருக்கு முழுமையாக தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்திருந்தாலும், மக்கள் தொகையில் வெறும் 24 சதவீதத்தினருக்கு மட்டுமே, அதாவது 16 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அல்லது வயது வந்தோரில் 36 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விநியோகங்கள் இப்போது பாதுகாப்பாக நடந்தாலும், தடுப்பூசி வழங்கும் அளவு வாராந்திர இலக்கில் பாதியாக உள்ளது.

72 சதவீத மக்கள் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக அல்லது ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது என்றாலும், தடுப்பூசி விகிதம் பெரும்பாலும் வர்க்கம் மற்றும் இனத்தை சார்ந்துள்ளது, அதாவது வெள்ளையினத்தவருக்கு, அவர்களின் பெரும் செல்வம், மருத்துவக் காப்பீடு மற்றும் கார் உரிமை ஆகிய வசதிகளால் தடுப்பூசி மையங்களை பெரிதும் அணுகுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேவேளை, நான்கு மில்லியன் பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர், மற்றும் துன்புறுத்தல் மற்றும் நாடுகடத்தப்படுதல் பற்றிய நிலையான அச்சத்தில் வாழும் 2 முதல் 5 மில்லியன் வரையிலான ஆவணமற்ற தொழிலாளர்கள் உட்பட, ஏராளமான ஏழைத் தொழிலாளர்களோ, ஒழுங்கற்ற பொது போக்குவரத்தையே நம்பியிருக்கின்றனர் என்பதுடன், அரை நாள் ஊதியத்தை இழக்க வேண்டிய நிலையிலும் மற்றும் பொது மருத்துவமனைகளில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையிலும் இருக்கிறார்கள்.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனத்தின்படி, தென்னாபிரிக்காவில் புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் போக்கு சராசரி கடந்த வாரம் 4,717 இல் இருந்து 19,292 ஆக நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. புதன்கிழமை, மேலும் 8,561 புதிய நோய்தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது வரிசைப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களில் முழுமையாக 75 சதவீத நோய்தொற்றுக்கள் சமீபத்திய மாறுபாட்டால் உருவாகியுள்ளன, இது விரைவில் 100 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் வைரஸின் மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட விகாரமாக இருக்கும் என்றும், அதன் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் காரணமாக தடுப்பூசி பாதுகாப்பைத் தவிர்க்கலாம் என்றும் அச்சம் நிலவுகிறது. மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சில நோய்தொற்றுக்கள் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதுதான்.

ஏறக்குறைய அனைத்து மாகாணங்களிலும் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டாலும், தென்னாபிரிக்காவின் வணிக மற்றும் நிர்வாக தலைநகரங்களான யோஹன்னஸ்பேர்க் மற்றும் பிரிட்டோரியா விற்கு தாயகமான மற்றும் மக்கள்தொகையில் கால் பகுதியைக் கொண்ட Gauteng இல் தொற்றுக்கள் வெடித்துப் பரவி வருகின்றன. Gauteng இல் இந்த வாரம் 580 கோவிட் தொடர்புபட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், இது 300 சதவீதத்திற்கும் அதிகமாகும். இந்த மாகாணத்தின் 12 மில்லியன் குடியிருப்பாளர்களில் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் குறைந்தபட்சம் முதல் அளவு தடுப்பூசியை பெற்றுள்ளனர், இது 12 மாகாணங்களில் மூன்றாவது மிகக் குறைந்த தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாகாணமாகும்.

தென்னாபிரிக்கா அண்ணளவாக 3 மில்லியன் நோய்தொற்றுக்களையும், சுமார் 90,000 இறப்புக்களையும் பதிவு செய்துள்ளது, இருப்பினும் அதிகப்படியான இறப்புக்களின் புள்ளிவிபரங்கள், இதைப்போல மூன்று மடங்கு வரையிலான இறப்புக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொற்றுநோயால் ஏற்பட்டிருக்கும் என்று கூறுகின்றன. புதிய விகாரங்களின் எழுச்சியானது, நாட்டின் உச்சபட்ச எச்ஐவி-பரவல் விகிதம் கொரோனா வைரஸ் பிறழ்வுகளின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கும் அதிகரித்து வரும் ஆதாரங்களை வழங்குவதால் குறிப்பாக கவலைக்குரியதாக உள்ளது. KwaZulu-Natal பல்கலைக்கழகத்தின் மரபியல் நிபுணரும், ஓமிக்ரோனைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவின் உறுப்பினருமான, பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா, கோவிட்-பாதிப்புள்ள, நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் தங்களது உடலில் இருந்து வைரஸை அழிக்கப் போராடலாம் மற்றும் காலப்போக்கில் “மாறுபாடுகளின் தொழிற்சாலைகளாக” அவர்கள் மாறலாம் என்று கூறினார்.

நோய்தொற்றின் ஆரம்பகட்ட பதிலிறுப்பின் போது அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்தவரும், தென்னாபிரிக்காவின் KwaZulu-Natal பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சலீம் அப்துல் கரீம், புதிய ஓமிக்ரோன் மாறுபாடு வேகமாக பரவி வருவதால், இந்த வார இறுதிக்குள் நோய்தொற்றுக்கள் மும்மடங்கு அதிகரித்து 10,000 க்கும் அதிகமாக உயரலாம் என்று கூறினார். தற்போதுள்ள தடுப்பூசிகள் கடுமையான நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இந்த கட்டத்தில் நோயறிகுறிகள் இலேசாகத் தோன்றும், அதிலும் இளம் வயதினரிடையே நோய்தொற்றுக்கள் ஏற்பட்டாலும், அதன் அறிகுறிகள் மிகக் குறைவாகவே தெரியும் என்றாலும், தென்னாபிரிக்க மருத்துவமனைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும், ஏனென்றால் நோய்தொற்று பரவும் வேகத்தால் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுமதிப்பை கடுமையாக அதிகரிக்கும்.

ANC அரசாங்கம் பொது சுகாதார அமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் உயரடுக்கிற்கு சேவை செய்யும் சிறிய மற்றும் நன்கு ஆயுதம் தரித்த தனியார் துறையானது மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் செவிலியர்களை அணுகக்கூடியதாக உள்ளது. ஆனால் இதன் மூலம் பொது அமைப்பின் வளங்களை கொள்ளையடிக்கிறது.

நோய்தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொண்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் பொது சுகாதார அமைப்பு சீர்குலைந்து வருவதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ராமபோசாவிற்கு ஏற்பட்டது. ஒரு பெரிய மருத்துவமனையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் பின்னர் அதை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் மற்ற பெரிய மருத்துவமனைகளோ ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை திருப்பியனுப்பின. தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கையை பாதுகாப்பதற்காக மருத்துவர்கள் டஜன் கணக்கான தொலைபேசி அழைப்புகளை செய்ய வேண்டிய நிலை உட்பட, பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறையால் சிலவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது, இந்நிலையில் Gauteng மாகாணத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவவும், சமூக பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் பணிகளைச் செய்யவும் இராணுவத்தின் மருத்துவப் பணியாளர்கள் அனுப்பப்பட்டனர்.

தென்னாபிரிக்காவின் பொது சேவைகளின் மோசமான நிலை, கறுப்பின தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிலாஷைகளை மூன்று தசாப்தங்களாக ANC நசுக்கி வருவதற்கு சாட்சியமளிக்கிறது. இதன் முக்கிய சாதனை, “கறுப்பு பொருளாதார விடுதலை” திட்டங்களின் மூலம் வெள்ளை முதலாளிகளுடன் இணைந்து கறுப்பின முதலாளித்துவ வர்க்கத்தை நிறுவியதாகும். இது, சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டத்திற்கும் முன்னர் நிறவெறியின் சம்பிரதாயமான முடிவை ஒரு அவசியமான ஜனநாயக நிலையாக அறிவித்ததான, தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச இரண்டு கட்டப் புரட்சி தத்துவத்தின் மூலம் அரசியல் ரீதியாக புனிதப்படுத்தப்பட்டது.

இந்த தொற்றுநோய், உள்ளூர புகையும் அனைத்து சமூக மோதல்களையும் தீவிரப்படுத்தி, அவற்றை உச்சநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பெரும் வல்லரசுகளைச் சார்ந்த மற்றும் அடிமட்டத்திலிருந்து எழும் புரட்சிக்கு அஞ்சும் தேசிய முதலாளித்துவத்தால், மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சமூக மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

தொழிலாள வர்க்கம் போராட்டத்தை தன் கைகளில் எடுத்துக் கொள்ளும்போதுதான் உண்மையான விஞ்ஞான அடிப்படையிலான கொரோனா வைரஸ் கொள்கையானது இலாபங்களை விட உயிர்களை முன்னிலைப்படுத்துவது சாத்தியப்படும். இதை அடைவதற்கு, தென்னாபிரிக்காவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (International Committee of the Fourth International-ICFI) கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading