ஜேர்மனியில் "போக்குவரத்து விளக்கு" கூட்டணியின் தலைமையில் சமூக ஜனநாயக சான்சிலர் ஷொல்ஸ் பதவி ஏற்றுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமூக ஜனநாயகக் கட்சி (SPD), சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) மற்றும் பசுமைக் கட்சியினரின் வாக்குகளுடன் ஓலாவ் ஷொல்ஸ் ஜேர்மனியின் புதிய சான்சிலராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் பலத்த கரகோஷத்துடன் மரியாதை செலுத்தப்பட்ட 2005 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) அங்கேலா மேர்க்கலுக்குப் பின் அவர் பதவியேற்றுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், இடது கட்சி நாடாளுமன்றக் குழுவும் மேர்க்கலுக்குப் பாராட்டுத் தெரிவித்தது. கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் உள்ள மற்ற அனைத்து கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களைப் போலவே, இடது கட்சியும் மேர்க்கலின் வலதுசாரி அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு விசுவாசமாக ஆதரவளித்தது.

ஷொல்ஸ் உம் மற்றும் போக்குவரத்து விளக்கு கூட்டணியும் (சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று கட்சிகளின் நிறங்களால் பெயரிடப்பட்டது) சமூக செலவின வெட்டுக்கள், வெளிநாட்டில் மறுஆயுதமாக்கல் மற்றும் உள்நாட்டில் ஒரு பொலிஸ் அரசு எந்திரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் தொற்றுநோயை பாரியளவில் பரப்பும் கொள்கை போன்ற ஒரு திட்டத்தை தீவிரமாக தொடரும். ஷொல்ஸ் மற்றும் இடது கட்சிக்கு கொடுக்கப்பட்ட மலர்களோ அல்லது 'முற்போக்கு அரசாங்கம்' அல்லது 'ஐரோப்பாவில் இடதுகளின் மறுமலர்ச்சி' (நியூ யோர்க் டைம்ஸ்) பற்றிய சொற்றொடர்களோ இந்த யதார்த்தத்தை மறைக்க முடியாது.

டிசம்பர் 8, 2021புதன்கிழமை, பேர்லினில் உள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தில் புதிய ஜேர்மன் சான்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஓலாஃப் ஷொல்ஸ் அங்கத்தவர்களிடமிருந்து கைதட்டல்களைப் பெறுகிறார் (Photo/Stefanie Loos)

ஓலாவ் ஷொல்ஸ் ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதியும் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் தொழிலாள வர்க்க விரோத மற்றும் இராணுவவாத நிகழ்ச்சி நிரலை வேறு எவரையும் விட வெளிப்படுத்துகிறார். மேர்க்கெல் தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி-சமூக ஜனநாயககட்சி கூட்டணியில் நிதியமைச்சராக இருந்த அவரது மேற்பார்வையின் கீழ், இராணுவ வரவு-செலவுத் திட்டம் சுமார் 10 பில்லியன் யூரோக்களால் அதிகரிக்கப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் பெரும் பணக்காரர்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு கொரோனா வைரஸ் கொடுப்பனவுகள் என்று அழைக்கப்படுவதன் மூலம் ஒப்படைக்கப்பட்டன. அவசர பிணை எடுப்பு, ஜேர்மனியில் மட்டும் 100,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டுள்ள 'வாழ்க்கையை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கையில் அவரது கையொப்பம் உள்ளது.

சமூக மற்றும் உள்நாட்டு அரசியலில், ஷொல்ஸ் எப்போதும் ஒரு கடுமையான சட்டம்-ஒழுங்கு நிகழ்ச்சி நிரலுக்காக நிற்கிறார். 2001 ஆம் ஆண்டு ஹாம்பேர்க் மாகாணத்தின் உள்துறைக்கான செனட்டராக, சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து ஆதாரங்களைப் பெறுவதற்காக அவர்களுக்கு வாந்தி எடுக்கும் மருந்துகளை கட்டாயமாக கொடுக்கும் முறையை அவர் அறிமுகப்படுத்தினார். இந்த நடவடிக்கையை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் பின்னர் ஒரு சித்திரவதை முறையாகக் கண்டித்தது. எனவே இது மனித உரிமைகள் மீறலாகும்.

2002ல் இருந்து, சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராக, ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோத நிகழ்ச்சி நிரலில் ஷொல்ஸ் முக்கிய பங்கு வகித்தார். இது மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் பெரும் வறுமையில் தள்ளியது. அதைத் தொடர்ந்து, மேர்க்கலின் முதல் அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சராக இருந்த அவர், முன்னர் இருந்த ஓய்வு பெறும் வயதை 65லிருந்து 67 ஆக உயர்த்த ஏற்பாடு செய்தார்.

2017 கோடையில் G20 ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக ஹாம்பேர்க் மேயராக இருந்தபோது அவரது மிருகத்தனமான நடவடிக்கை குறிப்பாக இழிவானது. போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் மிகப்பெரிய பொலிஸ் நடவடிக்கைகளில் ஒன்றில், அவர் நாடு முழுவதிலும் இருந்து 20,000 காவல்துறை அதிகாரிகளை அணிதிரட்டினார். அவர்கள் ஹன்சீயாடிக் நகரத்தை ஒரு பொலிஸ் அரசாக மாற்றி, பெரும்பாலான அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமாக தாக்கினர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான தங்கள் உரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் செய்யாத ஐரோப்பா முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்றுவரை வழக்குத் தொடரப்படுகின்றதுடன் மற்றும் சிலர் கடுமையான தண்டனைகளைப் பெற்றுள்ளனர்.

திங்களன்று போக்குவரத்து விளக்குக் கட்சிகளால் கையெழுத்திடப்பட்ட கூட்டணி ஒப்பந்தமும், ஷொல்ஸின் அமைச்சரவையும் இந்த பிற்போக்குத்தனமான வரலாற்றுடன் ஒத்துப்போகின்றன. உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே முந்தைய கட்டுரைகளில் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சியின் கூட்டணி பற்றி இதனை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு அரச, நிதி மூலதன, பணக்கார மத்தியதர வர்க்கங்களின் கூட்டணி எனக் குறிப்பிட்டிருந்தது. ஜனாதிபதி பிராங் வால்ட்டர் ஸ்ரைன்மைரால் (SPD) ஆல் நேற்று நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் இந்த பிற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (FDP) தலைவரான கிறிஸ்டியான் லிண்ட்னர் முன்பு ஷொல்ஸ் வகித்த பதவியான நிதியமைச்சராக இருப்பார். பெருவணிகங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் ஊதுகுழலாகச் செயல்படும் வெறுக்கப்படும் நவதாராளவாதக் கட்சியின் தலைவர், ஒரு புதிய சுற்று சமூக சிக்கன கொள்கைகளை மேற்பார்வையிடும் பணியை மேற்கொள்கிறார். அவர்களது கூட்டணி ஒப்பந்தத்தில், போக்குவரத்து விளக்கு கூட்டணி உறுப்பினர்கள் 'ஒரு வணிகத்திற்கான இடமாக ஜேர்மனியின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும்' மற்றும் அரசாங்கம் மேலும் கடன்பெறுவதை தடுக்கும் கடன் தடையை மீண்டும் செயல்படுத்துவதற்கு தங்களை அர்ப்பணித்தனர்.

அவ்வாறு செய்வதன் மூலம், லிண்ட்னரும் மற்றும் அவரது கூட்டணி பங்காளிகளும் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவார்கள். ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) கூட்டணி ஒப்பந்தத்தை உருவாக்குவதில் நேரடியாக ஈடுபட்டது. DGB தலைவர் ரெய்னர் ஹாஃப்மேன் ஏற்கனவே அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆய்வுப் பேச்சுக்களின் போது லிண்ட்னரையும் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி பற்றி புகழ் பாடிக்கொண்டிருந்தார். 'கிறிஸ்டியான் லிண்ட்னருடன் தாராளவாத ஜனநாயகக் கட்சி என்பது அவருக்கு முன்னைய கீடோ வெஸ்டர்வெல மற்றும் பிலிப் றோஸ்னருடைய தாராளவாத ஜனநாயகக் கட்சியிலிருந்து வேறுபட்டது' என்று அவர் முந்தைய கட்சித் தலைமையைக் குறிப்பிட்டு கூறினார். ஒரு 'மத்திய மந்திரி கிறிஸ்டியன் லிண்ட்னர் 'ஜேர்மனி பாதுகாப்பான ஒரு தொழில்துறை இடமாக இருப்பதற்கு அனைத்தையும் செய்வார்' என்றார்.

மற்றொரு வலதுசாரி தாராளவாத ஜனநாயகக் கட்சி பிரதிநிதி மார்க்கோ புஷ்மான் நீதி அமைச்சகத்தை எடுத்துக்கொள்கிறார். அவர் நோய்த்தொற்றின்போது பாரியளவில் தொற்றுநோய் பரப்பும் கொள்கையைப் பற்றி வெளிப்படையாகப் ஆதரித்து பேசுபவராவார். நவம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக 'தொற்றுநோய் அவசரகாலநிலை' முடிவுக்கு வந்தபோது, அவர் அதை ட்விட்டரில் உற்சாகப்படுத்தினார். 'நாங்கள் பூட்டுதல், பொது பள்ளி மற்றும் நிறுவன மூடல்கள் அல்லது ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகளை சட்டத்தில் இருந்து நீக்கியுள்ளோம். இவற்றை இனி பயன்படுத்த முடியாது” என்றார்.

தொழில்உரிமம் பெற்ற மருத்துவரும் மற்றும் தொற்றுநோயியல் நிபுணரான புதிய சுகாதார அமைச்சராக நியமனம் பெற்ற கார்ல் லவுட்டர்பாஹ் (SPD) 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' கொள்கைக்கான மூடு திரையாகும். இவர் கோவிட்-19 பற்றி பலமுறை பகிரங்கமாக எச்சரித்தாலும், இக்கொள்கையை லவுட்டர்பாஹ் முழுமையாக ஆதரிக்கின்றார். நவம்பரில், அவர் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் 'தொற்றுநோய் அவசரகாலநிலை' முடிவுக்கு கொண்டுவர வாக்களித்தார். அமைச்சராக அவர் நியமிக்கப்பட்ட பின்னர், எந்தவொரு பூட்டுதல் நடவடிக்கைகளும் உடனடியாக அவசியமில்லை என்று அவர் வெளிப்படையாக நிராகரித்தார்.

முந்தைய நீதி அமைச்சரும், சமூக ஜனநாயகவாதியுமான கிறிஸ்டியான லம்பிறைக்ட் ஷொல்ஸின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருப்பார். திங்களன்று ஷொல்ஸால் அவர் முன்வைக்கப்பட்டபோது, ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள் வருகை அவரது வழிகாட்டுதலின் கீழ் தொடரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. 'ஜேர்மன் படையினர், நாங்கள் பாராட்டுதலுடனும், மரியாதையுடனும் நடத்துவதற்குத் தகுதியானவர்கள். மேலும் சேமப்படையிருக்கும் நான் இதனை தெரிவிக்க விரும்புகிறேன்' என்று அவர் கூறினார். பொருத்தமான ஆயுதத்தளபாடங்கள் முக்கியம், அதனால்தான் கொள்முதல் முறையை நவீனமயமாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பசுமைக் கட்சியின் இரு கட்சி இணைத் தலைவர்களான ரோபேர்ட் ஹாபெக் (துணை சான்சிலர் மற்றும் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலைப் பாதுகாப்பு அமைச்சர்) மற்றும் அன்னலெனா பெயபொக் (வெளியுறவு அமைச்சர்) ஆகியோர் புதிய அரசாங்கத்தின் வலதுசாரி மற்றும் இராணுவவாத நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதில் ஒரு மையப் பாத்திரத்தை வகிப்பார்கள். பசுமை கட்சியின் தலைமையின் கீழ் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலுக்கு முழுமையாக ஆதரவளிக்கும் என்று பெயபொக் ஏற்கனவே taz செய்தி நிறுவனத்துடனான ஒரு நேர்காணலில் தனது நியமனத்திற்கு முன் தெளிவுபடுத்தினார். அவர் அணுசக்தி பயன்படுத்தலை வெளிப்படையாக ஆதரித்து மற்றும் ஜேர்மன் ஆயுதப்படைகளுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் கொண்ட புதிய போர் விமானங்கள் வாங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மீதமுள்ள அமைச்சர்களான தொழிலாளர் மற்றும் சமூக விவகாரத்துறை - ஹூபேர்டுஸ் ஹெல் (SPD), உள்துறை மற்றும் குடியிருப்பு - நான்சி ஃபேசர் (SPD), விவசாயம் - செம் ஒஸ்டிமிர் (Green), குடும்பம், மூத்தவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் - அன்னே ஸ்பீகல் (Green), டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து - Volker Wissing (FDP), சுற்றுச்சூழல், பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு -ஸ்டெஃபி லெம்கே (Green), கல்வி மற்றும் ஆராய்ச்சி -பெற்றினா ஸ்டார்க்-வாட்ஸிங்கர் (FDP), பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு - ஷிவென்யா ஷூல்ஸ (SPD), வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் கட்டுமானம் - கிளாரா கெய்விட்ஸ் (SPD), மற்றும் சிறப்புப் பணிகளுக்கான மத்திய அமைச்சராகவும், அதிபர் மாளிகையின் தலைவராகவும் வொல்ப்காங் ஷ்மிட் (SPD) ஆகியோர் ஒரே கொள்கையை கொண்டவர்கள். உலக சோசலிச வலைத் தளம் அடுத்த சில நாட்களில் அரசாங்கத்தின் மேலும் பல விபரங்களை வெளியிடும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பெரும் கூட்டணியானது ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டை (AfD) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியாக மாற்றியது. பின்னர் அது வலதுசாரி தீவிரவாதக் கட்சியின் வேலைத்திட்டத்தை பெருமளவில் ஏற்றுக்கொண்டதுடன் மற்றும் பாராளுமன்ற வேலைகளில் அதை ஒருங்கிணைத்தது. இந்த செயல்முறை போக்குவரத்து விளக்கு கூட்டணியின் கீழ் தொடர்கிறது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி இப்போது உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக மாறும்போது, ஸ்தாபக கட்சிகள் முக்கியமான உள்துறைக் குழு மற்றும் சுகாதாரக் குழு உட்பட AfD இன் தலைமையில் நான்கு நாடாளுமன்றக் குழுக்களை விட்டுச் சென்றன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாரிய தொற்றுநோய் கொள்கையை தொடர்வதற்கும், வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்கும், போக்குவரத்து விளக்கு கூட்டணி வேண்டுமென்றே வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளை வலுப்படுத்துகிறது. அவ்வாறு செய்யும்போது, அது இடது கட்சியின் ஆதரவையும் நம்பலாம். இடது கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் டீட்மார் பார்ட்ச், ஷொல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மலர்களை வழங்கி ட்விட்டரில், “அதிபர் ஓலாவ் ஷொல்ஸும் அவரது அமைச்சரவையும் நம் நாட்டில் உள்ள மக்களுக்காக புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என எழுதினார்.

சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இடதுபுறத்தில் இருந்து போக்குவரத்து விளக்குக் கூட்டணியை எதிர்க்கும் ஒரே கட்சியாகும். நவம்பர் இறுதியில், அது தனது கட்சி மாநாட்டை நடத்தி ஒரு முக்கியமான முன்னோக்கு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த ஆவணம் பின்வருமாறு கூறுகிறது:

தொழிலாள வர்க்கம் தவிர்க்க முடியாமல் புதிய கூட்டணி மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் மோதலுக்கு வரும். இந்த மோதலுக்கு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக தயார்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டணியை நாங்கள் உறுதியாக எதிர்த்தோம் மற்றும் சர்வதேச, சோசலிச வேலைத்திட்டத்திற்காக ஒரேயொரு கட்சியாக போராடினோம். எங்கள் தேர்தல் கோரிக்கையில்: “வங்கிகள் மற்றும் பெரிய பெருநிறுவனங்களை அபகரித்து தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் எந்த சமூகப் பிரச்சனையும் தீர்க்கப்பட முடியாது. அவர்களின் இலாபம் மற்றும் செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். மேலும் கடந்த ஆண்டில் அவர்களுக்கு வழங்கப்பட்ட டிரில்லியன்கள் திரும்பப்பெறப்பட வேண்டும். விஞ்ஞானரீதியான, பகுத்தறிவான திட்டத்தின் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட வேண்டும்” என நாங்கள் வலியுறுத்தினோம்.

ஷொல்ஸ் மற்றும் போக்குவரத்து விளக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வேலைத்திட்டம் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

Loading