“ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு": ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக பைடென் ஜனநாயக-விரோத சக்திகளை ஒன்று திரட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பைடென் நிர்வாகம் இரண்டு நாள் 'ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டின்' முதல் நாளை வியாழக்கிழமை நடத்தியது. 80 உலகத் தலைவர்கள் ஒன்று கூடியிருந்த அந்த இணையவழி நிகழ்வின் அமர்வுகள் வாஷிங்டனின் அசாதாரண இறுமாப்பை வெளிப்படுத்திய அதேவேளையில், அதன் குழு விவாதங்கள் ஏகாதிபத்திய சதியாலோசனைகளால் நிரம்பி இருந்தன. 'வல்லாட்சிக்கு' எதிராக 'ஜனநாயகத்தை' பாதுகாப்பதற்காக என்ற போர்வையில், ரஷ்யா மற்றும் சீனா மீது உலகளாவிய அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதே பைடெனின் இந்த உச்சிமாநாட்டு செயல்பாடாக இருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் டிசம்பர் 9 ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் சவுத் கோர்ட் ஆடிட்டோரியத்தில் ஜனநாயக உச்சி மாநாட்டின் தொடக்கத்தில் உரை நிகழ்த்துகிறார். வலதுபக்கம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் (AP Photo/Susan Walsh)

அங்கே கூடியிருந்த ஒவ்வொரு தலைவர்களின் முகத்தைக் காட்டிய மிகப்பெரிய காணொளி குழுவில் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனுடன் அமர்ந்திருந்த ஜனாதிபதி ஜோ பைடென் அந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார். உலக முதலாளித்துவத்தின் ஒரு மாநாட்டுக்கு நிகராக இருந்த அதில் உரையாற்றி அவர், “உலகெங்கிலும் … ஜனநாயகத்திற்கும், உலகெங்கிலுமான மனித உரிமைகளுக்குமான நீடித்த எச்சரிக்கையூட்டும் சவால்களின்' காரணமாக இந்த உச்சி மாநாட்டை அவர் கூட்டியிருப்பதாக அறிவித்தார்.

பைடெனின் உரையும், அதைத் தொடர்ந்து நடந்த ஒட்டுமொத்த அமர்வும், ஆழ்ந்த கேலிக்கூத்தான தன்மையைக் கொண்டிருந்ததுடன், அமெரிக்க பேரரசின் தனிப்பெரும் முத்திரையான பகட்டாராவார பாசாங்குத்தனத்தால் குறிக்கப்பட்டிருந்தன.

பைடென் தனது வார்த்தைகளை ஜனநாயக சொற்றொடர்களைக் கொண்டு அலங்காரப்படுத்தி இருந்தார், அந்த வார்த்தைகள் வரலாற்று அர்த்தத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் அதிக காலப்போக்கில் அமெரிக்க பேரரசு மற்றும் முதலாளித்துவ ஆட்சியால் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. அவர் 'நீதி,” “பேச்சு சுதந்திரம்,” “ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்,” “மதச் சுதந்திரம்,” “பத்திரிகை சுதந்திரம்' மற்றும் 'ஒவ்வொரு தனிமனிதருக்குமான உள்ளார்ந்த மனித உரிமைகள்' குறித்து பேசினார்.

அவர் முன்னால் திரையில் தோன்றிய முகங்களில் ஜனநாயக-விரோத பாசிச பிரமுகர்களின் ஒரு கும்பல் உட்கார்ந்திருந்தது, இவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்டரீதியில் வெள்ளை மாளிகையால் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதில் கலந்து கொண்டவர்களில், பிலிப்பினோ ஏழைகளைப் படுகொலை செய்துள்ளவரும், கடந்த ஐந்தாண்டுகளில் 30,000 க்கும் அதிகமானவர்களைப் பொலிஸினதும் சட்டத்தைத் தம் கையிலெடுக்கும் குழுவினரதும் படுகொலைக்கு நேரடி பொறுப்பானவருமான ரொட்ரிகோ டுரேற்றவும் இருந்தார். “உட்பொதிந்த மனித உரிமைகள்' பற்றி பைடென் பேசுவதைக் கேட்டவாறு டுரேற்ற அமர்ந்திருந்திருக்கையில், பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம் அவரின் பயங்கரவாத-தடுப்பு சட்டத்தில் பெரும்பான்மையானவை அரசியலமைப்புக்கு உட்பட்டது என தீர்ப்பளித்திருந்தது. பிலிப்பைன்ஸ் இராணுவமும் பொலிசும் இப்போது உத்தரவாணை இல்லாமலேயே ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகள் மற்றும் உளவுபார்ப்புகளை நடத்தவும், 24 நாட்களுக்கு எந்தவித குற்றப்பதிவும் இல்லாமலேயே ஒரு கம்யூனிஸ்ட் அல்லது பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் எவரொருவரையும் கைது செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளன. மனிதகுலத்திற்கு எதிராக குற்றங்கள் இழைத்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் டுரேற்ற மீது குற்றச்சசாட்டுகள் உள்ளன.

டுரேற்ற உடன் ஜயர் போல்சொனாரோவும் இருந்தார். பிரேசிலின் இந்த பாசிசவாத ஜனாதிபதி இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுப்பாக மேற்கொண்ட சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் மனிதப்படுகொலை மூலோபாயம் மூலமாக பிரேசிலிய மக்களின் 'பாரிய படுகொலைக்காக' மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுடன் பிரேசிலிய செனட்டின் விசாரணை ஆணைக்குழுவால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அதில் கலந்து கொண்ட மற்ற ஒவ்வொரு தலைவரைப் போலவே டுரேற்ற மற்றும் போல்சொனாரோவும், பைடெனின் கையெழுத்து தாங்கிய ஒரு கடிதத்தைப் பெற்றிருந்தனர், “குடிமக்கள் அனைவரையும் செழிப்பாக்கும் சமூகங்களை மதித்து—ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைக் கட்டமைக்க பணியாற்றுவதில் உங்களின் பங்காண்மையை நாங்கள் அங்கீகரித்து பாராட்டுகிறோம்,” என்றந்த கடிதம் குறிப்பிட்டது. “இன்னும் அதிக ஜனநாயகரீதியான, சமத்துவமான, உள்ளார்ந்த மற்றும் நீடித்த உலகை நாம் எப்படி பேணுவது' என்பதற்கான அவர்களின் கருத்துக்களைக் கேட்க பைடென் எதிர்நோக்கி இருந்ததாக அந்த கடிதம் டுரேற்ற மற்றும் போல்சொனாரோவுக்குக் கூறிச் சென்றது.

பைடென் மீண்டும் மீண்டும் 'பேச்சு சுதந்திரம்' மற்றும் 'சுதந்திர ஊடகம்' ஆகியவற்றின் தேவை குறித்து பேசினார். ஜனநாயகத்திற்கான பைடெனின் இந்த உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில் ஜூலியன் அசான்ஜை நாடுகடத்துவதற்கான அமெரிக்காவின் முறையீடு மீது ஒரு பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அசான்ஜ் வாஷிங்டனுக்கு எதிராக அவர் உயிருக்காக போராடி வருகிறார், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை இட்டுக்கட்டி, வாஷிங்டன் அவரை வழங்கில் இழுத்து வேட்டையாடி உள்ளதுடன், அமெரிக்க பேரரசின் குற்றங்களை அவர் பதிப்பிக்க துணிந்ததால் அவரை சிறையில் அடைத்து வைத்துப் பார்க்கிறது. பத்திரிகை சுதந்திரத்தின் தலைவிதி அசான்ஜைப் பாதுகாப்பதைச் சார்ந்துள்ளது, ட்ரம்ப் மற்றும் ஒபாமாவின் கொள்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பைடெனின் வெள்ளை மாளிகை உலகில் பத்திரிகை சுதந்திரத்திற்கான மிகப் பெரிய ஒரே எதிரியாகும்.

ஜனநாயகம் குறித்து யாருக்கும் உபதேசிக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை. உலகெங்கிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அரசாங்கங்களை நிலைகுலைய செய்து பதவியிலிருந்து தூக்கிவீசியதை வாஷிங்டன் அளவுக்கு வேறெந்த சக்தியும் செய்திருக்கவில்லை. உலக பிற்போக்குத்தனத்தின் மையமாக அமெரிக்காவை விட அதிகமாக ஜனநாயகத்தின் சீரழிவு வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை. குடியரசுக் கட்சி அமெரிக்க பாசிசத்தின் கட்சியாக மாற்றப்பட்டு வருகிறது, ஜனநாயகக் கட்சி அதனுடன் சமரசம் கொண்டு, தோமஸ் ஜெபர்சனின் சிலைகளைக் கூட மறைக்கிறது.

ஓராண்டுக்கும் குறைந்த நாட்களுக்கு முன்னர் ஜனவரி 6 இல், மிகவும் கவனமாக முடுக்கிவிட்ட பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தைத் தக்க வைக்க முயன்றார். பைடென் நிர்வாகம் இந்த ஜனவரி 6 சம்பவங்களைக் குறைத்துக் காட்ட சாத்தியமான அனைத்தையும் செய்துள்ளது. அமெரிக்க ஜனநாயகத்திற்கு எதிரான இந்த சதித்திட்டத்திற்குப் பொறுப்பான சதிகாரர்கள் சுதந்திரமாக விட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அதிகாரத்தில் இருந்தவாறு அடிப்படை ஜனநாயக நடைமுறைகள் மீது தினந்தோறும் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களில் உள்ளடங்கி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மூடிமறைத்த பைடென், ஜயர் போல்சொனாரோ மற்றும் ரொட்ரிகோ டுரேற்ற ஆகியோருடன் கலந்தாலோசிக்கிறார். இந்த உச்சி மாநாட்டின் உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும், அவை சொல்லப் போனால் உண்மையில் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு சதிக்கு நிகராக உள்ளது.

இந்த உச்சி மாநாட்டின் சாராம்சம் பின்னர் பைடெனின் கருத்துக்களிலேயே வெளிப்பட்டது. “வல்லாட்சியாளர்களின் வெளிப்புற அழுத்தங்கள்' காரணமாக, ஜனநாயகம் சரிந்து வருகிறது என்றவர் கூறினார். 'உலகெங்கிலுமான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தவறுவதாக உணரும் ஜனநாயக அரசாங்கங்கள் மீதிருக்கும் அந்த மக்களின் அதிருப்தியை' அதிகரிக்க, அத்தகைய வல்லாட்சியாளர்கள் இணையத்தையும் மற்றும் குளறுபடிகளின் ஏனைய வடிவங்களையும் பயன்படுத்துகிறார்கள் என்றவர் வாதிட்டார்.

இந்த வரி அமெரிக்க தேர்தல்களில் ரஷ்யா தலை நுழைத்தது என்ற பொய்யை உள்ளிழுக்கிறது, இது மீண்டும் மீண்டும் ஆதாரமின்றி ஜனநாயகக் கட்சி மற்றும் நியூ யோர்க் டைம்ஸால் வலியுறுத்தப்பட்டது. இந்த வாதம் பைடென் வெள்ளை மாளிகையால் இப்போது ஓர் உலகளாவிய சதியாக விவரிக்கப்பட்டு வருகிறது. யாரென்று குறிப்பிடப்படாத 'வல்லாட்சியாளர்கள்,” இங்கே சூசகமாக குறிப்பிடப்படும் மாஸ்கோ மற்றும் பெய்ஜிங், மக்களிடையே அதிருப்தியை விளைவிப்பதன் மூலம் உலகெங்கிலும் ஜனநாயகத்தைக் கவிழ்த்திக் கொண்டிருக்கிறார்களாம்.

சமூக அதிருப்தி வெளிப்புற சூழ்ச்சிகளின் விளைவு என்ற கருத்து அபத்தமானது. ஏறக்குறைய 800,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர், அதேவேளையில் மக்கள்தொகையில் நான்கு மடங்கு அதிகமாக கொண்ட ஒரு தேசமான சீனாவில் 6,000 க்கும் குறைவானவர்களே இறந்துள்ளனர். உலகெங்கிலுமான தொழிலாளர்கள், பாரிய மரணத்தை எதிர்கொண்டுள்ளனர், விலைகளோ விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கின்றன, கூலிகள் தேக்கமடைந்துள்ளன, மற்றும் தடையற்ற வேலைக்கான கோரிக்கையை எதிர்கொள்கின்றனர்.

உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர்கள் வெளிப்புறத் தகர்ப்பால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படாவிட்டால், செழித்து வளரும் ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்லர். அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள், பெரும் சமூக வெடிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்கள், அதை அவர்கள் நசுக்க முயன்று வருகிறார்கள்.

யாரென்று குறிப்பிடப்படாத இந்த வல்லாட்சியாளர்கள் 'அவர்களின் சொந்த அதிகாரத்தை முன்னெடுக்கவும், உலகெங்கிலும் அவர்களின் செல்வாக்கை ஏற்றுமதி செய்து விரிவாக்கவும், அவர்களின் ஒடுக்குமுறை கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நியாயப்படுத்தவும் முயன்று' வருவதாக தொடர்ந்து பைடென் அறிவித்தார். உண்மையில் சொல்லப் போனால் வாஷிங்டன் நடவடிக்கைகளாக இருந்த இந்த துல்லியமான விவரிப்புகளை அவர் வழங்கிக் கொண்டிருந்த போது, அவர் வெள்ளை மாளிகை பணி அறிக்கையை வாசித்துக் கொண்டிருப்பதாக இருந்தது.

தலைநுழைக்கும் வல்லாட்சியாளர்களுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பாசங்குத்தனத்திற்குப் பின்னால், வாஷிங்டனின் உலகளாவிய பொருளாதார மேலாதிக்கத்தைப் பேணுவதற்கான அதன் முனைவு தங்கியுள்ளது.

இதற்காக அழைக்கப்பட்டிருந்த மற்றும் நிராகரிக்கப்பட்டிருந்த நாடுகளின் பட்டியலே தெளிவான புவிசார் அரசியல் நடவடிக்கையைக் கொண்டிருந்தது. தாய்வானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஒரே சீனா கொள்கையின் கீழ், வாஷிங்டன் தாய்வானை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனநாயகத்திற்கான ஒரு கலந்துரையாடலில் பங்கெடுக்க தைப்பெய்க்கு அழைப்பு விடுத்திருப்பதும் பெய்ஜிங்கை புறக்கணித்திருப்பதும் ஒரு கூர்மையான ஆத்திரமூட்டலாகும்.

“வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி' எனன் கூறப்படும் குவான் குவைடோவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வின் மற்ற ஒவ்வொரு பகுதியைப் போலவே, அவரின் பிரசன்னமும் 'ஜனநாயகம்' என்ற வார்த்தைப் பயன்பாட்டிற்கு முரணானது. குவைடோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கைப்பாவை, இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக நிக்கோலா மதுரோவை வெளியேற்றி வாஷிங்டன் இவரை வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக நியமிக்க முயன்றுள்ளது.

“எதேச்சதிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளவும்' மற்றும் 'ஆயுதங்களை முடக்கவும்' அங்கே கூடியிருந்தவர்களுக்கு —டுரேற்ற, போல்சொனாரோ, குவைடோ மற்றும் கூட்டாளிகளுக்கு— அழைப்பு விடுத்து பைடென் தனது கருத்துக்களை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரண்டு விரிவான அமர்வுகள் நடந்தன. முதலாவது பைடெனால் நடத்தப்பட்டது, இரண்டாவது ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து அதிவலதின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதிலும் உலக அரங்கில் ஜேர்மன் இராணுவவாதத்தை முடக்கி விடுவதிலும் கருவியாக இருந்த ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயெனால் நடத்தப்பட்டது.

அந்த விரிவான அமர்வுகளைச் சுற்றி குழு விவாதங்கள் இருந்தன, இவை அமெரிக்க உளவுத்துறை மற்றும் தொழில்துறைக்கு இடையிலான பங்காண்மையால் நடத்தப்பட்டன. மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் 'ஜனநாயகத்திற்காக தொழில்நுட்பத்தை' எப்படி பயன்படுத்துவது என்று பேசினார். வெனிசுவேலாவின் கடனில் கணிசமான பகுதியை வைத்திருக்கும் பில்லியனிய முதலீட்டு நிறுவனம் T. Rowe Price இன் தலைவர் ஜோன் பிரதர்ஸ் 'பொறுப்பான முதலீடு' மீதான விவாதத்தை நெறிப்படுத்தினார். உலக சோசலிச வலைத் தளத்தை தணிக்கை செய்திருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கூகுளின் உலகளாவிய விவகாரங்களுக்கான துறைத் தலைவர் கென்ட் வால்கர் தனியார் நிறுவனங்கள் எப்படி 'ஜனநாயகத்திற்கு' உதவ முடியும் என்பதைக் குறித்து பேசினார்.

நடைமுறையளவில் சிஐஏ நிதியுதவி வழங்கும் அங்கமாக விளங்கும் ஓர் அமைப்பான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவி அமைப்பின் (USAID) தலைவர் சமந்தா பவர் கூறுகையில், பத்திரிக்கையாளர்களின் அறிக்கைக்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டால், அவர்களின் சட்டக் கட்டணத்தைச் செலுத்த உலகளாவிய அவதூறு பாதுகாப்பு நிதியத்தை உருவாக்குவதாக அறிவித்தார். ஜூலியன் அசான்ஜ் சிறையில் துன்புறுத்தப்படும் அதேவேளையில், வாஷிங்டனின் போட்டியாளர்களுக்கு எதிராக எழுதும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவை வழங்கும், இந்த நிதியத்தின் இலக்கு வைக்கப்பட்ட பயன்பாடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு பிரச்சார கருவியாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வெள்ளை மாளிகை ஊழலை எதிர்க்க ஒரு மூலோபாயத்தை வெளியிடும் என்பதும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது, இது 'இந்த அச்சுறுத்தலின் பன்னாட்டு பரிமாணங்கள்' மீது ஒருமுனைப்பட்டிருக்கும். இத்தகைய பன்னாட்டு ஊழலை USAID கண்காணித்து இலக்கில் வைத்திருக்கும் என்று கூறப்பட்டது. “தலைநுழைக்கும் வல்லாட்சியாளர்கள்' என்று குறியீடாக கூறப்பட்ட ரஷ்யா மற்றும் சீனா மீதான அதன் கண்டனங்களுடன் சேர்ந்து, இந்த உச்சி மாநாட்டுக்கு வெளியே, இந்த முனைவானது மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்த வாஷிங்டன் எடுத்த மற்றொரு உறுதியான நடவடிக்கையாகும்.

சீனா 'மனிதப் படுகொலை' புரிந்து வருவதாக குற்றஞ்சாட்டி, இதற்கான ஒரேயொரு ஆதாரத் துணுக்கு கூட வழங்காமல், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை உத்தியோகபூர்வமாக புறக்கணிப்பதாக வாஷிங்டன் இவ்வார தொடக்கத்தில் அறிவித்தது. மூன்று நாட்களுக்குப் பின்னர், பைடென் “ஜனநாயகத்தைப் பாதுகாக்க' எதேச்சதிகார அயோக்கியர்கள் மற்றும் பாரிய படுகொலைகாரர்கள் உட்பட, பல சக்திகளை ஒன்றுதிரட்டினார்.

'மனித உரிமைகள்', 'ஜனநாயகம்' என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவரான ஜோ பிடனின் வாயிலிருந்து வரும் அர்த்தமற்ற வார்த்தைகளாகும். இவை இப்போது வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வரும் வாஷிங்டனின் போர் தயாரிப்புகளை நியாயப்படுத்த முடிவின்றி மீண்டும் மீண்டும் கூறப்படும் பொய்களாகும்.

Loading