அமெரிக்காவின் ஒப்படைப்பு மேல்முறையீடு தொடர்பான பிரிட்டனின் உயர் நீதிமன்ற தீர்ப்பு: அசாஞ்ச் அவரது கொலையாளிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை உளவு பார்த்தல் சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க அரசு நாடு கடத்தலாம் என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அசாஞ்ச் தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் அதிகமாக இருப்பதால், அவரை அமெரிக்காவிற்கு அனுப்பக் கூடாது என்று அப்போதைய மாவட்ட நீதிபதி வனேசா பரைட்ஸர் ஜனவரி மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அதிகாரிகள் உயர் நீதிமன்ற எதிர்மனுவை வெற்றிகரமாகக் கொண்டு வந்தனர்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், மே 1, 2019 அன்று நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுகிறார் (AP Photo/Matt Dunham, File)

லோர்ட் பார்னெட், லோர்ட் ஜஸ்டிஸ் ஹோல்ராய்டுடன் அமர்ந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு தனது கடமையைச் செய்தார். வெள்ளிக்கிழமையன்று, அசாஞ்ச் மிகவும் அடக்குமுறையான சிறைச்சாலையின் கீழ் தடுத்து வைக்கப்பட மாட்டார் என அமெரிக்கா 'உறுதிமொழி' வழங்கியதால், தற்கொலைக்கு எந்த ஆபத்தும் இல்லை என அவர் அறிவித்தார்.

அரசாங்கமும் பாதுகாப்பு சேவைகளும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ள ஒரு நாட்டிற்கு அசாஞ்ச் அனுப்பப்படுகிறார். அக்டோபரில் நடந்த இரண்டு நாள் மேல்முறையீட்டு விசாரணையில், இலண்டனில் அசாஞ்ஜிற்கு விஷம் கொடுத்தல், கடத்தல் மற்றும் சுட்டுக்கொல்ல CIA முயன்ற சதித்திட்டங்கள் பற்றிய ஆதாரத்தை பாதுகாப்பு தரப்பிலிருந்து உயர்நீதிமன்றம் கேட்டறிந்தது.

இன்றைய தீர்ப்பில் நீதிபதிகளால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அமெரிக்க இராஜதந்திர உறுதிமொழிகள் ஒரு இழிந்த மோசடியாகும். எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஒரு அதிகபட்ச பாதுகாப்பு தனிமைச் சிறையில் அசாஞ்ச் ஏதாவது செய்தால், எல்லா உறுதிமொழியும் சவால்களும் நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கை அவர்களின் வார்த்தைகளில் அடங்கியுள்ளது.

அமெரிக்க நீதித்துறை, பென்டகன் மற்றும் சிஐஏ ஆகியவை தங்கள் குற்றங்களை வெளிப்படுத்தியதற்காக அசாஞ்ச் சிறையில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் ஆயிரக்கணக்கான இரகசிய கோப்புகள் மற்றும் தூதரக தகவல்களை 2010 இல் வெளியிட்டதற்காக அசாஞ்ச் 18 குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அசாஞ்ச் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அக்டோபரில் நடந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது, ஜேம்ஸ் லூயிஸ் QC, வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனில் உள்ள குண்டர்களுக்காகப் பேசுகையில், அமெரிக்கா வழங்கிய 'கடமைப்பாடுள்ள' இராஜதந்திர உத்தரவாதங்கள் ஒரு 'பெருந்தன்மையான விஷயம்' மற்றும் அவை 'இனிப்புப் பண்டங்களைப்போல் பங்கிட முடியாதவை' என்று கூறினார்.

பெப்ரவரி 5, 2021 தேதியிட்ட தூதரகக் குறிப்பில் அனுப்பப்பட்ட நான்கு உறுதிமொழிகளில், அசாஞ்ச் சிறப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு (SAMs) சமர்ப்பிக்கப்பட மாட்டார் என்றும், ADX புளோரன்ஸ் சூப்பர்மேக்ஸ் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்றும் மற்றும் அமெரிக்காவில் காவலில் இருக்கும்போது 'பொருத்தமான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை” அவருக்கு வழங்கப்படும் என்றும் எந்த சிறைத்தண்டனையையும் அனுபவிக்க அசாஞ்ச் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்படுவதற்கு அமெரிக்கா சம்மதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து மருத்துவ ஆதாரங்களுக்கும் எதிராக, அசாஞ்சின் மனநோய், நாடுகடத்தலை நிராகரிக்கும் அளவுக்கு கடுமையானதாக இருப்பதற்கு 'அருகில் கூட வரவில்லை' என்று அமெரிக்காவும் வலியுறுத்தியது.

இந்தப் பொய்ப் பொதிக்கு, பார்னெட், “அந்த [தற்கொலை] ஆபத்து, இப்போது வழங்கப்படும் உத்தரவாதங்களால், எங்கள் தீர்ப்பில் விலக்கப்பட்ட உள்ளது என்றார். நீதிபதி பரைட்சருக்கு இந்த உறுதிமொழிகள் கிடைத்திருந்திருந்தால், சம்பந்தப்பட்ட கேள்விக்கு அவர் வேறுவிதமாக பதிலளித்திருப்பார் என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம் என்றார்.

அசாஞ்சின் வழக்கறிஞர்கள் அமெரிக்க உத்தரவாதங்களை 'அர்த்தமற்றவை' மற்றும் 'தெளிவற்றவை' என துல்லியமாக விவரித்தனர். அவை 'நிர்வாகரீதியாகத் தனிமைப்படுத்தலின்' அபாயத்தை அகற்றவில்லை என்று விளக்கினர். 'சிறப்பு நிர்வாகரீதியான நடவடிக்கைகள்' அசாஞ்சின் மன ஆரோக்கியத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தீர்ப்பளித்தபோது, அசாஞ்சின் மனநிலை தொடர்பான நிபுணத்துவ மருத்துவ சான்றுகளின்படி பரைட்சர் செயல்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிட்டபோது, தங்கள் தரப்பினருக்கு எதிரான 'கண்காணிப்புக்கான தீவிர நடவடிக்கைகள்' குறித்து இரண்டு நாள் முறையீட்டில் அசாஞ்சின் சட்டக் குழு ஆதாரங்களை சமர்ப்பித்தது. அதே காலகட்டத்திலான CIA திட்டங்களைப் பற்றிய சமீபத்திய வெளிப்பாடுகள் ஜூலியனை கடுமையாக சேதப்படுத்தும் என்பதை வலியுறுத்தினர். ஆனால் அசாஞ்சின் வருங்கால மனைவி ஸ்டெல்லா மொரிஸ் 'நீதியின் கடுமையான கருச்சிதைவு' என்று விவரிக்கப்பட்ட முன்னரே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பாக இது, செவிடன் காதில் விழுந்த ஒன்றானது.

இரண்டு மூத்த நீதிபதிகள் வழக்கை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒரு மாவட்ட நீதிபதி வழக்கை அசாஞ்சின் தலைக்கு குறிவைக்கும் ஒரு தீய வலதுசாரி இங்கிலாந்து உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலுக்கு அனுப்ப வேண்டும் என்ற பொதுவான அறிவித்தலுடன் உத்தரவிட்டனர்.

இந்த வரலாற்றின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் அசாஞ்சின் மேல்முறையீடு அனுமதிக்கப்படும் என்பது எந்த வகையிலும் உறுதியாகத் தெரியவில்லை.

இதுதான் பரைட்ஸரின் முந்தைய தீர்ப்பின் நோக்கமாக இருந்தது. இது அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கான வழக்கை முழுவதுமாக பாதுகாத்து, அதே நேரத்தில் தற்கொலைக்கான 'உண்மையான' ஆபத்தையும் மற்றும் மருத்துவ அடிப்படையில் மட்டுமே நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதை ஏற்றுக்கொண்டது.

ஹோல்ராய்ட் தனது 'தற்காலிக' முடிவை அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவிக்காததற்காக பரைட்சரை தாக்கினார். அதன் மூலம் இப்போது வழங்கப்பட்ட உத்தரவாதங்களை வழங்குவதற்கான அவர்களின் திறனைத் தடுக்கிறார் என்றார்.

அக்டோபர் 27 அன்று உலக சோசலிச வலைத் தளம், பரைட்சரின் தீர்ப்பை சவால் செய்யும் அமெரிக்க மேல்முறையீட்டை 'ஒரு கொடூரமான குற்றத்தைத் தொடரும் சட்டபூர்வ வெறுப்பு எனக் குறிப்பிட்டு பின்வருமாறு எழுதியது:

“அவரும் மற்றும் விக்கிலீக்ஸும் போர்க்குற்றங்கள், சித்திரவதைகள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள், பரந்துபட்ட கண்காணிப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் மற்றும் அரசு ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக அசாஞ்ச் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றங்களின் சிற்பிகளான அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய அரசாங்கங்கள், அசாஞ்சின் ஆயுள் சிறைத்தண்டனை மற்றும் அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அழிப்பதன் மூலமாகவோ அல்லது அவரது கொலை மூலமாகவோ இதற்கான இரத்தம்தோய்ந்த விலையைப் பெறுவதில் உறுதியாக உள்ளன”.

செப்டம்பரில், Yahoo! News 30க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடனான உரையாடல்களின் அடிப்படையில், அசாஞ்சின் கடத்தல் அல்லது கொலைக்கான திட்டங்கள் சிஐஏ இன் 'உயர் மட்டங்களில்' விவாதிக்கப்பட்டதாக அறிவித்தது. முன்னாள் சிஐஏ இயக்குநரும் வெளியுறவுத்துறை செயலாளருமான மைக் பொம்பியோ விவாதங்களுக்கு தலைமை தாங்கினார் என்பதை ஒரு முன்னாள் அதிகாரி ஒப்புக்கொண்டார். அவ்வாறு செய்ததற்காக 'எந்தவொரு மன்னிப்பும் கேட்கவில்லை' என்று அவர் பின்னர் கூறினார்.

நேற்றைய தீர்ப்பு, சுவீடன் மற்றும் ஈக்வடாரின் உதவியோடு அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களை உள்ளடக்கிய அசாஞ்சை மௌனமாக்க ஒரு தசாப்த கால முயற்சியின் உச்சகட்டமாகும்.

சுவீடன் ஆகஸ்ட் 2010 இல் ஒரு மறைமுக நடவடிக்கையை ஏற்பாடு செய்ய உதவி, தவறான மற்றும் முற்றிலும் மதிப்பிழந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி அசாஞ்சை நாடு கடத்தக் கோரியது. அங்கிருந்து அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டிருப்பார். ஈக்வடோர் ஏப்ரல் 2019 இல் அசாஞ்சின் இராஜதந்திர பாதுகாப்பை விலக்கிக் கொண்டபோது, ஒரு பிரிட்டிஷ் பொலிஸ் குழு அவரைக் கைப்பற்றி அவர் இருக்கும் பெல்மார்ஷ் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் அடைக்க அனுமதித்தது.

வாஷிங்டனும் இலண்டனும் ஆண்டுதோறும் மோசமாகி வரும் இழிவான மற்றும் அவதூற்று பிரச்சாரத்தை முன்னெடுத்த கார்டியன், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் உலகின் பிற ஊடகங்களின் செயலூக்கமான கூட்டுறவை முழுவதுமாக நம்பியிருக்கலாம். அவர் மீதான வழக்குத் தொடுத்தலாலும், நாடு கடத்தப்படுவதாலும் ஏற்பட்ட பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான கடுமையான தாக்கங்களை அவர்கள் தாமதமாகக் கண்டுபிடித்த போதிலும், அதற்கு அவர்கள் வழி வகுத்தனர்.

தொழிற் கட்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கும் இது பொருந்தும். ஜெரமி கோர்பின் போன்ற 'இடதுகள்' உட்பட, கொள்கைரீதியான பரிசீலனைகளுக்கு அப்பால் தங்கள் கட்சியை ஏகாதிபத்தியத்திற்கும் வலதுசாரி சக்திகளுக்கும் விசுவாசமாக வைத்தனர். அசாஞ்சை கைப்பற்றுவதற்கான ஏகாதிபத்திய பிரச்சாரத்தை ஆதரிப்பதற்கான ஒரு சாக்காக, போலியான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாலின அரசியலைப் பயன்படுத்தி அசாஞ்சை அரக்கத்தனமானவராக காட்டுவதற்கான சிஐஏ இன் முயற்சிகளில் எண்ணற்ற போலி-இடது போக்குகள் இணைந்துகொண்டன.

இன்றைய இழிந்த நீதிமன்றத் தீர்ப்பு, சர்வதேச அளவில் மில்லியன் கணக்கானவர்களால் ஒரு சட்டபூர்வ கேலிக்கூத்தாகவும் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றமாகவும் பார்க்கப்படும். ஏகாதிபத்திய போர்வெறியர்களை பொறுப்பேற்க செய்வதற்கான அசாஞ்சின் போராட்டத்திற்காக அவரை ஒரு வீரனாகக் கருதும் மற்றும் ஜூலியன் அசாஞ்சை உண்மையாக விடுவிக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான அடிப்படையை இது உருவாக்கும்.

Loading