உலகளாவிய தடுப்பூசி சமத்துவமின்மை: "பணக்கார நாடுகளால் எடுக்கப்பட்ட ஒரு கொள்கை தீர்மானம்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அனுமதிக்கப்பட்ட பல கோவிட் தடுப்பூசிகளின் 8.07 பில்லியன் அலகு மருந்துகளில் பெரும்பாலானவை பணக்கார நாடுகளுக்குச் சென்றுள்ளன.

வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் சுமார் 60-70 சதவீத வயதானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, பலர் இப்போது மூன்றாவது தடுப்பூசியைப் பெறுகின்றனர். குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 6 சதவீத மக்கள் மட்டுமே ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், கிட்டத்தட்ட உலக மக்கள்தொகையில் பாதி பேர், தங்கள் முதல் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) COVAX திட்டத்தை நம்பியுள்ள ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகள் ஒரு நபருக்கு 16 மடங்கு என்ற விகிதத்தில் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன. பைனான்சியல் டைம்ஸ் மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் ஒவ்வொரு 100 பேருக்கும் வெறும் 9.3 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் COVAX மூலம் 7.1 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இது அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 100 பேருக்கு 155 ஆக உள்ளது. இதில் 115 பேர் அறியப்பட்ட இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுக்கொண்டர். பல குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், சுகாதாரப் பணியாளர்களுக்கு கூட இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

தென்னாபிரிக்காவில் உள்ள ஆரஞ்சு பண்ணையில், பல்நோக்கு மையத்தில் வெள்ளிக்கிழமை டிச. 3, 2021 அன்று கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், தங்கள் தடுப்பூசி அட்டை பதியப்படும் வரை காத்திருக்கிறார்கள். (AP Photo/Jerome Delay)

உலகின் சில பணக்கார நாடுகளில் அவர்களின் தேவையை விட 1.9 பில்லியன் தடுப்பூசிகளை அதிகமாக கொண்டிருப்பபதால் நன்கொடைகள் மற்றும் தடுப்பூசி மாற்றிக்கொள்ள செய்ய உலக சுகாதார அமைப்பின் மற்றொரு பரிதாபகரமான அழைப்பை தூண்டியுள்ளது.

இவை எதுவும் தற்செயலானவை அல்ல. பைனான்சியல் டைம்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், மொடேர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல், தடுப்பூசியை உலகளவில் விநியோகிக்க போதுமான அளவு உற்பத்திசெய்யவில்லை என்று விமர்சித்தவர்களுக்கு பதிலளித்து, உண்மையை வெளியே விடுங்கள். 'இது பெரும்பாலும் பணக்கார நாடுகளின் ஒரு கொள்கை முடிவு,' என்று அவர் கூறினார். 'அமெரிக்காவில், எங்கள் உற்பத்தியில் 60 சதவீதத்தை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.'

இதே நாடுகள், பாரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சார்பாக, தடுப்பூசி தயாரிப்பில் அறிவுசார் சொத்துரிமைகளை தள்ளுபடி செய்வதை நிராகரித்தன. அதே நேரத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கூடுதல் உற்பத்தி திறன் மற்றும் COVAX மூலம் அதிக விநியோகம் மூலம் தடுப்பூசிகளுக்கான அதிக அணுகலை வழங்குவதில் முட்டுக்கட்டை போடுகின்றன. COVAX தடுப்பூசிகளை உலகளவில் குறைந்த செலவில் பகிர்ந்து கொள்ள ஐக்கிய நாடுகளின் ஆதரவுடைய பொது-தனியார் முன்முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஏழை மற்றும் பணக்கார நாடுகளுக்கு ஒரே மாதிரியாக பேரழிவை ஏற்படுத்துகின்றன. பரவலான தடுப்பூசி, சமூக விலகல், அத்தியாவசியமற்ற பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுதல் உள்ளிட்ட உலகளாவிய வைரஸ்-அழிப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் செயற்படுத்தப்படாமல் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும். இது ஓமிக்ரோன் மற்றும் பிற கடுமையான விகாரங்களை உருவாக்க உதவுகிறது.

வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் இல்லாமல், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் 2025 வரை 12 டிரில்லியன் டாலர்கள் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையானது பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிதியளிப்பாளர்களின் இலாபத்தை அதிகரிப்பதன் அடிப்படையில் உள்ள முதலாளித்துவ உற்பத்தி மற்றும் விநியோக முறையின் செயல்பாட்டிலிருந்து தவிர்க்கமுடியாமல் உருவாகின்றது.

உலக வர்த்தக அமைப்பில் (WTO), தடுப்பூசி காப்புரிமைகளை வைத்திருக்கும் மற்றும் அவற்றின் வளர்ச்சிக்கு பெருமளவில் அரசு நிதியளிக்கப்பட்ட சில மாபெரும் மருந்து நிறுவனங்களுக்கு தாயகமாக இருக்கும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், ஏற்கனவே உள்ள உச்சக்கட்ட இலாபத்தை இன்னும் உயர்த்துவதற்காக செயல்படுகின்றன.

100க்கும் மேற்பட்ட நாடுகள், 100 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் ஒக்ஸ்பாம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைக் குழுக்களின் ஆதரவுடன் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அறிவுசார் சொத்துரிமை (intellectual property - IP) உரிமைகளைத் தள்ளுபடி செய்து உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மற்றும் மலிவான மரபியல்ரீதியான பதிப்புகளை இறக்குமதி செய்வதையும் அவர்கள் நிராகரித்தனர். வாஷிங்டன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களை நிவர்த்தி செய்ய அல்லது மருந்து நிறுவனங்களை எதிர்கொள்ள எதுவும் செய்யவில்லை.

உலக வர்த்தக அமைப்பில் இயக்குநரான முன்னாள் நைஜீரிய நிதி மந்திரியும் மற்றும் உலக வங்கியின் இரண்டாவது தலைவருமான ஜெனரல் Ngozi Okonjo-Iweala சுட்டிக் காட்டியது போல், 'உலக வர்த்தக அமைப்பின் பணி, அறிவுசார் சொத்துரிமை உரிமைகள் விட்டுக்கொடுப்பால் மட்டும் வரையறுக்கப்படவில்லை. நீங்கள் விட்டுக்கொடுப்பை பெற்றாலும், உங்களிடம் உற்பத்தி செய்யும் திறன் இல்லை என்றால், நீங்கள் அதைப் பயன்படுத்த முடியாது. உங்களிடம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தாலும், தொழில்நுட்ப பரிமாற்றம் இல்லை என்றாலும் நீங்கள் அதைப் பயன்படுத்த முடியாது”.

பெரும் மருத்துவ நிறுவனங்களுக்கு விலைகளைக் குறைக்கும் தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிப்பதிலோ அல்லது அவர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கமாக நிரூபிக்கப்பட்ட வைரஸை ஒழிப்பதிலோ ஆர்வம் இல்லை. ஆபிரிக்காவில் வெறும் ஏழு நாடுகளில் தடுப்பூசி உற்பத்தி வசதிகள் உள்ளன. அவை உரிமத்தின் கீழ் மேற்கத்திய தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான உரிமை பெரும்பாலும் மறுக்கப்பட்டுள்ளன. மொராக்கோ மற்றும் எகிப்து ஆகியவை சீனாவின் சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத் தொடங்குவதாக அறிவித்துள்ளன. ருவண்டா தனது தடுப்பூசி உற்பத்தி திறன்களை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தென்னாபிரிக்கா சமீபத்தில் 500 மில்லியன் ஜோன்சன்&ஜோன்சன் தடுப்பூசிகளை 2022 இறுதியில் தயாரிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் 700 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஃபைசரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி WTO இன் உலகளாவிய காப்புரிமை ஒப்பந்தத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார், இது TRIPS என அழைக்கப்படுகிறது, இது பெரிய மருந்து நிறுவனங்களின் இலாபத்தை ஆதரிக்கிறது. மேலும் உலக வர்த்தக அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்ப அணுகல் பொதுச்சேர்மமான CTAP ஐ புறக்கணிக்கும் பிரச்சாரத்தில் ஃபைசர் முன்னணியில் உள்ளதுடன் அதனை 'முட்டாள்தனம்' என்று அழைக்கின்றது. CTAP திட்டம் மே 2020 இல் கோவிட்-19 சிகிச்சைகள், நோயறிதல்கள், தடுப்பூசிகள் மற்றும் பிற சுகாதாரப் பொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கவும், பொதுச் சுகாதாரம் சார்ந்த தன்னார்வ, விலைகுறைந்த மற்றும் வெளிப்படையான உரிமங்கள் மூலம் சரியான நேரத்தில், சமமான மற்றும் மலிவு அணுகலை செயல்படுத்தவும் உருவாக்கப்பட்டது.

ஏகாதிபத்திய சக்திகள் மருந்துக் கூட்டுத்தாபனங்களின் தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்ள மறுத்து, அவற்றின் தடுப்பூசிகள் சில நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் அந்நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன. தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக் கட்டமான நிரப்பப்பட்டு முடிக்கப்பட்டாலும் கூட ஒற்றை தடவை ஏற்றப்படும் ஜோன்சன்&ஜோன்சனை போலவே, தென்னாபிரிக்கா போன்ற ஏழ்மையான நாடுகளுக்கு கொடுக்காமல் பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. தடுப்பூசி ஏற்றுமதியை மட்டுமின்றி தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உற்பத்தியை மேலும் கட்டுப்படுத்தியுள்ளன.

தடுப்பூசி தேசியவாதம் மற்றும் இலாபவெறியின் விளைவாக, பணக்கார நாடுகளிடம் தங்கள் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கெஞ்சியபோதிலும் COVAX திட்டம் அதன் அனைத்து இலக்குகளில் இருந்தும் தவறவிட்டது. பணக்கார நாடுகள் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட விரைந்ததால் COVAX முற்றாக கைவிடப்பட்டது. உற்பத்தியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை மதிக்கும்படி வழக்குகள் மூலம் கட்டாயப்படுத்திய போதும் நன்கொடைகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தத் திட்டம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்தியாவிடமிருந்து விநியோகங்களைப் பெறுகிறது. ஆனால் மார்ச் மாதத்திலிருந்து எந்த மருந்தையும் பெறவில்லை. இதற்குக் காரணம், ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் Serum Institute ஏற்றுமதியை இந்தியா தடைசெய்தது. மேலும் தொற்றுக்கள் பாரியளவில் அதிகரித்த நிலையில் தனது உள்சந்தைக்கு வழங்குவதற்காக மேலும் 600 மில்லியன் தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் செய்தது.

இது ஏழை நாடுகளை உற்பத்தியாளர்களுடன் தங்கள் சொந்த ஒப்பந்தங்களைச் செய்ய கட்டாயப்படுத்தியது. இது மேலும் சில நாடுகளின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த COVAX இற்கு பொறுப்புக்கொடுக்கப்பட்டதால் திட்டத்தின் பேச்சுவார்த்தை சக்தியை மேலும் பலவீனப்படுத்தியது. இந்த ஆண்டு தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 10.9 பில்லியன் தடுப்பூசிகளில் பெரும்பாலானவை ஏற்கனவே விற்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 950 மில்லியன் விநியோகத்தில் பெரும்பாலானவை சீன தடுப்பூசிகள் மற்றும் இந்திய தடுப்பூசியான கோவாக்சின் ஆகியவை அடங்கும்.

இதன் விளைவாக, COVAX இதுவரை 582 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே வழங்கியுள்ளது. ஏற்கனவே 1.4 பில்லியனாக குறைக்கப்பட்ட ஆண்டு இலக்கை விட, இப்போது ஆண்டு இறுதிக்குள் மீதியை வழங்கும் சாத்தியமற்ற பணியை எதிர்கொள்கிறது. ஆபிரிக்க யூனியன் அதிகாரிகள், இத்திட்டம் டிசம்பரின் இறுதிக்குள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெறும் 470 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் என்று மதிப்பிட்டுள்ளது, அதன் முழு வயதுவந்த மக்களுக்கும் இரண்டு தடவைகள் வழங்குவதற்கு தேவையான 2 பில்லியனில் கால் பகுதிக்கும் குறைவாகவே உள்ளது. உலக சுகாதார சபையின் ஆபிரிக்க பிராந்திய இயக்குனர் Matshidiso Moeti 'இந்த விகிதத்தில், மார்ச் 2022 இறுதிக்குள் கண்டம் 40 சதவீத இலக்கை மட்டுமே அடைய முடியும்' எனக்கூறினார்,

தடுப்பூசிகளின் விலை மற்றும் வழங்கல் வரம்புகள் பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் குளிரூட்டிகளில் சேமிப்பு, உள்கட்டமைப்பு அல்லது சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல் விநியோகம் மற்றும் நிர்வாகத்தின் மிக அதிகமான மற்றும் பெரும்பாலும் சமாளிக்க முடியாத செலவினங்களை எதிர்கொள்கின்றன. கொங்கோ ஜனநாயகக் குடியரசு அதன் COVAX வழங்கிய 1.7 மில்லியன் AstraZeneca டோஸ்களில் 1.3 மில்லியனை மட்டுமே கொடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவை காலாவதியாகும் முன் அவற்றை நிர்வகிக்க முடியவில்லை. துணை-சஹாரா ஆபிரிக்காவில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளில் 28 சதவிகிதம் மட்டுமே நம்பகரமான மின்சாரத்தைக் கொண்டுள்ள நிலையில், COVAX உடன் இணைந்து செயல்படும் பொது-தனியார் கூட்டு நிறுவனமான GAVI, குறைந்த வருமானம் உள்ள 71 நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான குளிரூட்டப்பட்ட பெட்டிகள், தடுப்பூசி காவிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை வழங்க முயல்கிறது.

பிரதான சக்திகள் தங்கள் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதற்காக தடுப்பூசிகளை 'மென்மையான பலத்திற்கான' கருவியாகப் பயன்படுத்துகின்றன. செப்டம்பரில் ஐ.நா பொதுச் சபையின் தொடக்க அமர்வின் போது நடைபெற்ற கோவிட் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கூடுதலாக 500 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்தார். இதனால் அமெரிக்காவின் மொத்த உலகளாவிய நன்கொடை 1.1 பில்லியனுக்கும் அதிகமாகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 1.1 பில்லியன் தடுப்பூசி மருந்துகளை வழங்கியதாக முந்தைய வாரம் சீனா அறிவித்த பின்னர், வாஷிங்டனின் நிலையை உயர்த்துவதற்கான முயற்சியாக இது பரவலாகக் பார்க்கப்பட்டது. ஐரோப்பா தனது 70 மில்லியன் தடுப்பூசிகளை COVAX க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

எல்லா ஆதாரங்களும் காட்டுவது போல, தடுப்பூசி ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுவதற்கு ஆளும் உயரடுக்கினரிடம் வைக்கும் எந்த வேண்டுகோளும், அவை வைரஸை அகற்றுவது ஒருபுறம் இருக்க, தோல்வியிலேயே சென்றடையும்.

இலாபத்தை விட உயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விஞ்ஞானரீதியான கொரோனா வைரஸ் கொள்கைக்கு, மருந்துவ மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிதியாளர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி வைரஸை அகற்ற தேவையான நடவடிக்கைகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதைவிட மாபெரும் மருந்து நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமைகளை இரத்து செய்தல், தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உலகளாவிய ஒத்துழைப்பு, அதற்கான வசதிகள் உள்ள அனைத்து நாடுகளும் சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைப்புகள் மூலம் விரிவான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு நாட்டிற்கும் பாரிய நிதியுதவி வழங்குதல், அவர்களின் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள விநியோகம் மற்றும் நிர்வாகத்தை உறுதி செய்யப்படவும் வேண்டும்.

தொழிலாள வர்க்கம் போராட்டத்தை தன் கைகளில் எடுக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இதை அடைவதற்கு, அந்தப் போராட்டத்தை வழிநடத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதும் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) முன்முயற்சியை விளம்பரப்படுத்துவதும் அவசியமாகும்.

Loading