தினசரி அதிகபட்ச எண்ணிக்கை இரண்டு முறை அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன் 24 மணி நேரத்தில் 88,000 கோவிட் நோயாளிகளை அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட் ஓமிக்ரோன் வகை அசாதாரண வேகத்துடன் பிரிட்டன் மக்களிடையே பரவி வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் தினசரி கோவிட் நோயாளிகளின் அதிகபட்ச எண்ணிக்கை இரண்டு முறை கடந்து சென்றுள்ளது.

Prime Minister Boris Johnson (right) holds a Covid-19 press conference alongside Chris Whitty, Chief Medical Officer in the Downing Street media briefing room. 15/12/2021. Picture by Simon Dawson /No 10 Downing Street/FlickR)

நோய்தொற்றுக்கள் இன்னும் ஏறக்குறைய 10,000 அதிகரித்து 88,376 ஆக, இவ்வாரத்தில் 31.4 சதவீதத்திற்கு அதிகரித்த நிலையில், வியாழக்கிழமை ஒரு புதிய அதிகபட்ச எண்ணிக்கை ஏற்பட்டது. கடந்த குளிர்காலத்தின் அதிகபட்ச எண்ணிக்கையான ஜனவரி 8 இல் இருந்த முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை (68,192) விட 10,000 க்கும் அதிகமாக அதிகரித்து, ஏற்கனவே புதன்கிழமை 78,610 ஐ எட்டியிருந்தது.

பிரிட்டன் 11 மில்லியன் கோவிட் நோயாளிகளையும் புதன்கிழமை கடந்தது—இந்த எண்ணிக்கையை எட்டிய உலக நாடுகளில் இது நான்காவது நாடாகும். நவம்பர் 27 இல் பிரிட்டனில் ஓமிக்ரோன் கண்டறியப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பிரிட்டன் அதன் 10 மில்லியனாவது கோவிட் நோய்தொற்றைப் பதிவு செய்தது. வெறும் மூன்றே வாரங்களில் இன்னும் ஒரு மில்லியன் நோய்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன.

ஓமிக்ரோன் நோய்தொற்றுகளின் நிஜமான எண்ணிக்கை அன்றைய தினம் ஏறக்குறைய 200,000 என கணிப்பாளர்கள் மதிப்பிடுவதாக சுகாதார மந்திரி சாஜித் ஜாவிட் திங்கட்கிழமை தெரிவித்தார். பிரிட்டன் விரைவிலேயே தினசரி 1 மில்லியன் வரையிலான நோய்தொற்றுக்களைக் காணக் கூடும் என்று மற்ற முன்கணிப்புகள் கணிக்கின்றன. இவ்வார அதிகரிப்பானது அதுபோன்ற கொடூர சூழல்கள் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் யதார்த்தமாகி விடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பிரிட்டன் மக்கள்தொகையில் 16 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கோவிட் நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர், வெறும் மற்ற மூன்று நாடுகள் தான் இந்தளவுக்கு அதிக நோயாளிகளைக் கொண்டுள்ளன—அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில். பிரிட்டனின் மக்கள்தொகை கணிசமானளவுக்கு மிகவும் குறைவானதே, வெறும் 68.4 மில்லியன் ஆகும். ஒரு மில்லியன் பேருக்கு 160,959 நோயாளிகள் என்பது அந்த மூன்று நாடுகளை விடவும் மிகவும் அதிக விகிதம் என்பதோடு, உலகெங்கிலும் அதிக நோயாளிகளைப் பதிவு செய்துள்ள ஏனைய 18 நாடுகளை விடவும் கூட அதிக விகிதமாகும்.

சுமார் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இலண்டனில் இவ்வார தொடக்கத்தில் மிகவும் மேலோங்கிய கோவிட் திரிபாக ஆகியுள்ள டெல்டாவை விட ஓமிக்ரோன் மேலோங்கி உள்ளது. புதன்கிழமை, அது 3 மில்லியன் மக்கள் வாழும் நகர்புற பகுதியின் மையமான மான்செஸ்டரில் மேலோங்கியது.

ஓமிக்ரோனின் வேகமான பரவல் மற்ற எல்லா திரிபுகளையும் விடவும் மிதமிஞ்சி உள்ளது. இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகமை (UKHSA) உருமாறிய வைரஸின் 11,708 நோயாளிகளை இதுவரை உறுதிப்படுத்தி உள்ளது, புதன்கிழமை 1,691 நோயாளிகளில் இருந்து அதிகரித்திருந்தது, ஒரு வாரத்திற்கு முன்னர் வெறும் 437 நோயாளிகளே இருந்தனர். பிரிட்டனுக்கான R (மறுஉருவாக்க) விகிதம் என்ன என்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினவிய போது, UKHSA தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹோப்கின்ஸ் கூறுகையில், “தற்போது மிகவும் பரந்தளவில் 3 மற்றும் 5 க்கு இடையே மதிப்பிடப்படுகிறது' என்று பதிலளித்தார், அதாவது நோய்தொற்று ஏற்பட்ட ஒவ்வொருவரும் அதை மூன்றில் இருந்து ஐந்து வரையிலான நபர்களுக்குக் கடத்துகிறார் என்பதே இதன் அர்த்தமாகும்.

பிரிட்டன் இப்போதும் தினந்தோறும் 100 க்கு அதிகமான கோவிட் இறப்புக்களைப் பதிவு செய்து வருகிறது. தேசிய புள்ளிவிவர அலுவலக தகவல்படி, உயிரிழந்த 172,695 பேரின் இறப்பு சான்றிதழில் இந்த நோய் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசாங்கம் குறிப்பிடும் 146,937 எண்ணிக்கையை விட குறிப்பிடத்தக்களவில் அதிகமாகும், பரிசோதனையில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு 28 நாட்களுக்குப் பின்னர் ஏற்படும் இறப்புகள் மட்டுமே அரசாங்க எண்ணிக்கையில் உள்ளடக்கப்படுகின்றன. உயிரிழந்தவர்களில் 17 கர்ப்பிணி பெண்களும் உள்ளடங்குவர், இதனால் கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னுரிமை பிரிவில் வைக்கப்பட வேண்டுமென தடுப்பூசி மற்றும் நோயெதிர்ப்பாற்றல் சம்பந்தமான கூட்டுக் குழு வியாழக்கிழமை அறிவித்தது.

பிரிட்டனில் இந்த வாரம் ஓமிக்ரோனால் ஏற்பட்ட உலகின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் பதிவு செய்யப்பட்டது. உயிரிழப்புகளின் அடிப்படையில் ஓமிக்ரோனின் வீரியம் இன்னும் முழுமையாக தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், ஓமிக்ரோனின் பரவல்தன்மை அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனை அனுமதிப்புகளை அர்த்தப்படுத்துகிறது என்பதால் இது தவிர்க்கவியலாமல் கோவிட் இறப்புகளின் ஓர் அதிகரிப்பாக கருத வேண்டும் என்பதில் விஞ்ஞானம் தெளிவாக உள்ளது.

ஹாங்காங் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின்படி, 'முந்தைய டெல்டா வகையுடன் ஒப்பிடுகையில், ஓமிக்ரோன் 70 மடங்கு அதிவேகமாக காற்றுவழி பரவும் திசுக்களில் பெருகுகின்றன, அது ஒருவரிடம் இருந்து ஒருவருக்குப் பரவுவதை எளிதாக்கிவிடும்…' என்று வியாழக்கிழமை ராய்டர்ஸ் அறிவித்தது.

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் அதன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் திட்டநிரலைத் தொடர்வதைத் தவிர ஓமிக்ரோனை எதிர்த்துப் போராட இன்றியமையாத எதையும் செய்வதாக இல்லை. பெருவணிங்களின் இலாபங்களைப் பாதுகாப்பது மட்டுமே அரசாங்கத்தின் ஒரே நோக்கமாக உள்ளது. “ஓமிக்ரோனின் பரவலை மெதுவாக்கவும்' மற்றும் 'நம் மீதான ஓமிக்ரோனின் பாதிப்பைக் குறைக்கவும்' மட்டும் முன்மொழிந்து, ஜோன்சன் புதன்கிழமை ஒவ்வொருவரும் 'இப்போது பூஸ்டர் மருந்து செலுத்திக் கொள்ளுமாறு' கூறி 'நமது தடுப்பூசி பாதுகாப்புகளைக் கட்டமைக்க' அழைப்பு விடுத்தார். திங்கட்கிழமையிலிருந்து வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வழிமுறைகள், உல்லாச கூடங்கள் மற்றும் உணவுவிடுதிகள் தவிர மற்ற எல்லா உள்அரங்கு இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிதல் ஆகியவை உட்பட சில செயல்திறனற்ற 'இரண்டாம் திட்ட' நடவடிக்கைகள் இவ்வாரம் அறிமுகப்படுத்தப்பட்டன. தடுப்பூசிகளையே ஓமிக்ரோன் எதிர்க்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ள நிலைமைகளின் கீழ், இத்தகைய நடவடிக்கைகள் போலவே, பூஸ்டர் பிரச்சாரமும், இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சிறிதே உதவும் அல்லது ஒன்றுக்கும் பயனின்றி போகும், அதேவேளையில் பொது போக்குவரத்து வலையமைப்புகள், பள்ளிகள் ஆகியவற்றுடன் சேர்ந்து பொருளாதாரமோ முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது, பள்ளிகளில் எந்த தணிப்பு நடவடிக்கைகளும் இல்லை.

வியாழக்கிழமை, கென்ட் தடுப்பூசி மையத்தில் பேசிய ஜோன்சன், பொது சமூக முடக்கம் பரிசீலனையிலேயே இல்லை என்றார்—ஆனால் இந்த நடவடிக்கை மட்டுமே ஏனைய அவசியமான தணிப்பு நடவடிக்கைகளுடன் சேர்ந்து, மற்றும் செயலூக்கமான பின்தொடர்வு, தடம் அறிதல் மற்றும் பரிசோதனை முறை, இது பிரிட்டனில் இல்லை, ஆகியவற்றுடன் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். “நீங்கள் ஒரு நிகழ்வுக்கோ அல்லது விருந்துக்கோ செல்ல விரும்பினால், அது முன்னுரிமையாக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய அறிவார்ந்த விஷயம் … பரிசோதனை செய்து கொண்டு, நீங்கள் எச்சரிக்கையாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் விஷயங்களை நிறுத்த விரும்புகிறோம் என்றோ, நாங்கள் விஷயங்களை முடக்க விரும்புகிறோம் என்றோ கூறவில்லை, பூஸ்டர் மருந்து செலுத்திக் கொள்ளுங்கள் அதுவே மீண்டும் வேகமாக வழமைக்கு திரும்புவதற்கான வழியாகும்.”

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பார்க்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவதை உறுதிப்படுத்த அரசாங்கம் அனைத்தும் செய்து வருவதற்கு மத்தியில், அவற்றின் விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஏற்கனவே இந்த வாரயிறுதியில் கால்பந்தாட்ட ப்ரீமியர் லீக்கின் 50 சதவீத விளையாட்டுக்கள் இதனால் இரத்து செய்ய நிர்பந்தித்துள்ளன.

புதன்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி ஓமிக்ரான் பற்றி கூறுகையில், 'இது தற்போது மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்றால்—நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன என்றாலும், நமக்குத் தெரிந்த எல்லா விஷயங்களும் மோசமாகவே உள்ளன.'

அரசாங்கத்தின் குற்றகரத்தன்மையைச் சரியாக தொகுத்தளிக்க வார்த்தைகளே இல்லை. ஓமிக்ரோன் வேறு எவரையும் விட இளைஞர்களையே அதிகமாக பாதித்து வந்த நிலையில், அதனுடனான முதல் 'யதார்த்தம்' “நல்லவண்ணம்' இருப்பதாக கடந்த வாரம் தான் விட்டி ஒவ்வொருவருக்கும் தெரிவித்தார்.

வியாழனன்று ஒரு நாடாளுமன்றக் குழுவுக்கு விட்டி கூறிய கருத்துக்களால் அந்த அறிக்கை எவ்வளவு அதிர்ச்சிகரமானது என்பது உறுதிப்படுகிறது, “விகிதங்கள் தொடர்ந்து உயரும் போது அடுத்த ஒரு சில வாரங்களில் அதிகபட்ச எண்ணிக்கைகள் நிறைய முறை முறிக்கப்படும் என்ற யதார்த்தத்தைக் குறித்து நான் அஞ்சுகிறேன்,” என்றார்.

தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோன் வகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 5 சதவீதத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நன்கு அறிந்திருப்பதாக விட்டி கூறுகிறார். சமீபத்திய நாட்களில், கோவிட் ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வருகையின்மை மற்றும் பள்ளி குழந்தைகளின் மருத்துவமனை அனுமதிப்புகள் அதிகரித்துள்ளதால், பள்ளிகளைத் திறந்து வைக்கும் ஜோன்சனின் கொடூர கொள்கையின் விளைவுகள் தெளிவாகி வருகின்றன.

பிரிட்டனில் கோவிட் ஆல் 119 குழந்தைகள் இறந்துள்ளனர். செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் கோவிட் காரணமாக 65 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்—இது இந்த பெருந்தொற்று தொடங்கியதற்குப் பிந்தைய மிக மோசமான எண்ணிக்கையாகும்.

அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி (Safe Ed for All) பிரச்சாரக் குழு உறுப்பினரான @TigressEllie ட்விட்டரில் தொகுத்து பரப்பிய புள்ளிவிபரங்கள், பள்ளிகளில் நிலவும் பயங்கர நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றன. புதன்கிழமை, Tigress பின்வருமாறு ட்வீட் செய்திருந்தார், 'செப்டம்பர் 1 க்குப் பின்னர் [இங்கிலாந்தில் புதிய கல்விப்பருவம் தொடங்கிய போது] இப்போது 100,068 நோயாளிகள் உள்ளனர். மொத்த குழந்தை நோயாளிகளில் 2/3 பங்குக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இந்த கல்விப் பருவத்தில் இது ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் பாதுகாப்பாக இல்லை.” அதே நாளில் அவர் டிசம்பர் 14 இல் பள்ளிகளின் வருகை குறித்து புள்ளிவிபரங்களை வெளியிட்டார்: 12,000 ஆசிரியர்கள் 'கோவிட் காரணமாக வரவில்லை; கோவிட் காரணமாக 10,500 பிற கல்வி[துறை] பணியாளர்கள் வரவில்லை; கோவிட் காரணமாக 236,000 மாணவர்கள் வரவில்லை.'

தொழிற்கட்சியும் தொழிற்சங்கங்களும் வழங்கிய 'ஆக்கபூர்வமான எதிர்ப்பு' அரசியல் வாழ்வின் ஆதரவு இல்லாமல், டோரிகளால் செயல்படுத்தப்பட்ட இந்த குற்றங்களில் எதுவுமே சாத்தியமில்லை, அவர்கள் ஜோன்சனுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எல்லா எதிர்ப்பையும் நசுக்கியுள்ளனர். ஜோன்சனின் பரிதாபகரமான கோவிட் நடவடிக்கைகளை இந்த வாரம் தொழிற்கட்சி ஆதரித்தது, அதன் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் அவர் 'தேச நலனுக்காக' அவ்வாறு செய்ததாக அறிவித்தார். தொழிற்கட்சி ஒரு 'தேசபற்று மிக்க கட்சி, இந்த நடவடிக்கைகள் நிறைவேறுவதை உறுதிப்படுத்த இவற்றுக்கு வாக்களிப்பது நம் தேசப்பற்று மிக்க கடமையாகும். இவ்வாறு செய்ததன் மூலம், நாங்கள் NHS [தேசிய சுகாதார அமைப்பு] ஐ ஆதரிக்கிறோம் மற்றும் நம் நாட்டை ஆதரிக்கிறோம்,” என்றார், அதாவது முதலாளித்துவ அரசு, பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் நலன்களை ஆதரிக்கிறோம் என்கிறார்.

Loading