சிலியின் போலி-இடது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காப்ரியல் போரிக் தீவிர வலதுசாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளிக்கின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போலி-இடது முன்னாள் மாணவர் போராட்டத் தலைவரும், Frente Amplio (பரந்த முன்னணி) தேர்தல் கூட்டணியின் வேட்பாளருமான காப்ரியல் போரிக் தீவிர வலதுசாரி வேட்பாளரான கிறிஸ்தவ சமூக முன்னணியின் ஜோஸே அன்டோனியோ காஸ்ட்டை பரந்த வித்தியாசத்தில் தோற்கடித்ததிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி சிலி முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன.

போலி-இடது-ஸ்ராலினிச தேர்தல் முன்னணியின் காப்ரியல் போரிக் (புகைப்படம்: Twitter / @ fotoencampana)

99.9 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 4.62 மில்லியன் (அல்லது 55.8 சதவீதம்) போரிக்கிற்குச் சென்றது. 1990ல் சிவில் ஆட்சிக்குத் திரும்பியதில் இருந்து ஒரு வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச வாக்குகள் இதுவாகும். அவர் நாட்டின் 16 மாவட்டங்களில் 11ல் முதல் இடத்தைப் பிடித்தார். La Pintana, Puento Alto, San Ramon, La Granja போன்ற சாண்டியாகோவின் தொழிலாள வர்க்க கம்யூன்களில், போரிக்கிற்கு கிடைத்த வாக்குகள், வாக்காளர்களில் 70 சதவீதத்தைத் தாண்டியது. கிறிஸ்துவ சமூக முன்னணியின் பாசிச ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் 3.65 மில்லியன் வாக்குகள் அல்லது 44.15 சதவீதம் பெற்றார்.

நவம்பரில் காஸ்ட் முதலிடத்தையும் போரிக் இரண்டாமிடத்தையும் பெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவுடன் ஒப்பிடும்போது வாக்களிக்கத்தகுதியான வாக்காளர்களின் பங்கெடுப்பு 1.2 மில்லியன் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சுற்று தேர்தல் மற்றொரு சாதனையை நிறுவியது. குடியரசின் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாக 8.63 மில்லியன், அல்லது தகுதியான வாக்காளர்களில் 55.65 சதவீதம் பதிவானது.

சாண்டியாகோவின் முக்கிய தெருவான லா அலமேடாவில் திரண்ட திரளான மக்களும் மற்றும் நாடு முழுவதும் தெருக்களில் இறங்கிய நூறாயிரக்கணக்கான மக்கள் பாசிசத்திற்கு எதிரான வெற்றியாகவும், 2019 இல் மில்லியன் கணக்கானவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்த சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுப்பதாகவும் உணர்ந்து இதனை கொண்டாடினர்.

கூட்டத்தினர் “ஐக்கியப்பட்ட மக்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டார்கள்!” (“El Pueblo Unido Jamás Será Vencido!”) என்று கோஷமிட்டனர். இது 1970ல் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச புரட்சிகர அலையின் ஒரு பகுதியாக அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு, செப்டம்பர் 11, 1973இல் அமெரிக்க ஆதரவு சதியால் வீழ்த்தப்பட்ட சால்வடார் அலெண்டேயின் மக்கள் ஐக்கிய அரசாங்கத்தின் கீதமாகும்.

சிலியின் சோகமான அனுபவம் அந்த முழக்கத்தின் பொய்யை அம்பலப்படுத்தியது. முதலாளித்துவத்தின் கீழ் சமரசம் செய்ய முடியாத வர்க்க நலன்களின் புறநிலை இருப்பின் காரணமாக சிலியின் அனைத்து சமூக வர்க்கங்கள் என்று பொருள்படும் இந்த மக்கள், அப்போதும், இப்போதும் ஐக்கியப்பட முடியாது. அந்த ஆபத்தான கட்டுக்கதை, தேசிய சீர்திருத்தவாத அலெண்டே அரசாங்கத்தின் அடித்தளமாக இருந்தது. இது, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை புதைப்பதற்கான வழிமுறையாக 'மக்கள்' என்ற சொல்லைப் பயன்படுத்தியது.

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்வதற்கு தீவிரமாக குரல் கொடுத்தது. ஆயுதப் படைகளும் காராபினெரோக்கள் என்றழைக்கப்படும் எல்லைக் காவல் பொலிஸாரும் உள்ளடங்கிய 'சீருடை அணிந்த மக்கள்', நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற அடுக்குகள் மற்றும் முற்போக்கான முதலாளித்துவம் என்று அழைக்கப்படுபவர்கள் கூட 'மக்களின்' பகுதியாக இருந்தனர். இந்த பிற்போக்குத்தனமான தத்துவம் இரண்டு கட்டப் புரட்சி மற்றும் மக்கள் முன்னணிகள் மூலம் 'சோசலிசத்திற்கான அமைதியான பாராளுமன்றப் பாதை' என்ற திவாலான கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து, பாசிச-இராணுவ சதி மூலம் வெடித்து அலெண்டேயின் ஐக்கிய மக்கள் அரசாங்கத்தை தூக்கியெறிந்து, பல்லாயிரக்கணக்கானோரின் கொலை, காணாமல் போதல் மற்றும் சித்திரவதைக்கு வழிவகுத்தது என்ற உண்மை, இன்று அதே சக்திகள் இந்த மதிப்பிழந்த மற்றும் பிற்போக்குத்தனமான கருத்துக்களை ஊக்குவிப்பதை தடுத்து நிறுத்தவில்லை.

ஒற்றுமைக்கு அப்பால், போரிக் அரசாங்கத்தின் கீழ் சமூக மற்றும் வர்க்க பதட்டங்கள் ஒரு உயர் மட்டத்திற்கு உயர்த்தப்படும்.

போலி-இடது Frente Amplio மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வருவது பெருகிய முறையில் தீவிரமயமாக்கப்பட்ட தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 2019 இல் தொடங்கி, சிலி முழுவதும் முதலாளித்துவ எதிர்ப்பு அணிவகுப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இதில் நாட்டின் மக்கள்தொகையில் ஒரு கட்டத்தில் பாதியளவானோர் கலந்துகொண்டதுடன் மற்றும் பல மாதங்கள் நீடித்தது.

இந்த உருமாற்ற அனுபவம், பல தசாப்தங்களாக வேரூன்றிய சமூக சமத்துவமின்மை, வறுமை ஊதியங்கள் மற்றும் பட்டினி ஓய்வூதியங்கள், முடமான பொது சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்பு, பெருகிவரும் மாணவர் மற்றும் வீட்டுக் கடன், பெருகிவரும் பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறை, சமூக போராட்டங்களை குற்றவியல்மயமாக்கல், பூர்வீகக்குடிமக்களின் கோரிக்கைகளை நசுக்குதல் மற்றும் மாநிலத்தின் அனைத்து மட்டங்களிலும் உறவுமுறை, ஊழல் மற்றும் உறவினருக்கான தனிச்சலுகை ஆகியவற்றிற்கு எதிராக வெளிப்படுத்தும் நனவான முயற்சியை வெளிப்படுத்தியது.

மக்கள் எதிர்பார்ப்புகளை விரைவில் வரவிருக்கும் அரசாங்கம் ஏமாற்றிவிடும். போரிக் ஏற்கனவே பிரச்சாரத்தின் போது தனது தளத்தின் அச்சை வலதுபுறமாக மாற்றினார். 'பாதுகாப்பு' மற்றும் பிற பிரச்சினைகள் பற்றிய பேச்சுப் புள்ளிகளை அவரது பாசிச எதிர்ப்பாளரின் புத்தகங்களிலிருந்து எடுத்தார். மேலும், சிலி மீதான தங்கள் கட்டுப்பாட்டை பாதிக்கும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டால், பெருநிறுவன மற்றும் நிதிய மூலதனம் 'பொருளாதாரத்தை பாதிக்கச்செய்யும்'. ஏற்கனவே, சமூகத்தின் உயர்மட்டத்தினர் தங்களுடைய தனிப்பட்ட சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றி வருகின்றனர்.

மத்திய வங்கி அதிகாரியின் கூற்றுப்படி, “அக்டோபர் 2019 முதல் சிலியில் இருந்து 50 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன,” என பைனான்சியல் டைம்ஸ் கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளது. 'ஓய்வூதியம் திரும்பப் பெறுதல் மற்றும் தனியார் ஓய்வூதிய முறையை அகற்றுவதற்கான போரிக் உறுதிமொழிக்குப் பின்னர் உள்ளூர் சந்தைகளில் பங்குப்பத்திர வெளியீடுகள் அனைத்தும் வறண்டு போயுள்ளன. இந்த ஆண்டு சர்வதேச சந்தைகளில் இலத்தீன் அமெரிக்காவில் கடன் ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நாடுகளில் சிலியும் ஒன்றாகும்.'

ஞாயிற்றுக்கிழமை சாண்டியாகோ பங்குச் சந்தை 6.8 சதவிகிதம் சரிந்தது, அதே நேரத்தில் டாலர் சாதனை அளவுகளுக்கு உயர்ந்தது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கியான ஜேபி மோர்கன் தேர்தலுக்கு பதிலளித்து, 'ஆபத்தை குறைப்பதற்கான உண்மையான மிதமான நடவடிக்கைகளின் சமிக்ஞைகள் சந்தைக்கு வேகமாக தேவைப்படும்' என்று அறிவித்தது. அதேபோன்று, வோல் ஸ்ட்ரீட் தரமதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் பின்வருமாறு அறிவித்தது. 'வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் அரசாங்கக் கொள்கைகள் திடமான தனியார் முதலீட்டின் ஆதரவுடன் திடமான வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும்' என்று கூறியது. 'நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க போரிக் தனது செலவீட்டு திட்டங்களின் முன்மொழிவின் தொனியைக் குறைக்க வேண்டும்' என்று முன்கூட்டிக் கூறியது.'

நிதிச் சந்தைகள் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களைச் சமாதானப்படுத்த, செலவீட்டை உருவாக்ககூடிய சமூக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான எந்தவொரு பாசாங்குத்தனத்தையும் போரிக் விரைவில் கைவிட வேண்டும். மற்றும் வணிக சார்பு திட்டத்தைத் தொடர வேண்டும். அவரது அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெகுஜனங்களின் நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புகளுடன் மோதும்போது அவர் தவிர்க்க முடியாமல் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட நிர்ப்பந்திக்கப்படுவார். இது தீவிர வலதுசாரிகளை மட்டுமே தைரியப்படுத்தக்கூடிய ஒரு நடவடிக்கையாகும்.

ஞாயிறு இரவு சாண்டியாகோவில் வெகுஜன பேரணிக்கு முன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உரையில் அவர் தனது வலதுசாரி போக்கை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

'சிலியின் எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் மக்களின் பக்கம் இருக்க வேண்டும், மேலும் எனது அரசாங்கத்தைத் தொடங்குவதற்கான [வலதுசாரி எதிர்க் கட்சிகளின்] யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை கருத்திலெடுக்கும் நம்பும் பக்குவம் எங்களிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன்,' என்று அவர் தனது பார்வையாளர்களிடம் கூறினார். 'குறிப்பாக ஜோஸ் அன்டோனியோ காஸ்டுடன் எங்களுக்குள்ள வேறுபாடுகளுக்கு அப்பால், எங்கள் நாட்டு மக்கள் சிறப்பாக வாழ பாலங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதை நான் அறிவேன்.'

பினோசேயின் 17 ஆண்டுகால பாசிச இராணுவ சர்வாதிகாரத்தின் குற்றங்களின் தீவிர வலதுசாரி பாதுகாவலரும், முன்னாள் நாஜி வேர்மாஹ்ட் அதிகாரியின் மகனுமான அவரது எதிரியின் பெயரை போரிக் குறிப்பிட்டது, கூட்டத்தில் இருந்து பலத்த கூச்சலைத் தூண்டியது. அதற்கு ஜனநாயகத்தை கட்டமைக்க 'ஆம், ஜோஸ் அன்டோனியோ காஸ்டும் கூட! [எங்களுக்குத் தேவை]' என அவர் பதிலளித்தார். அன்று மாலை சாண்டியாகோ விடுதி அறையில் அவர் தீவிர வலதுசாரிகளுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.

வலதுசாரிகளுடன் உரிமையுடன் பணிபுரிவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். அதை அவர் ஒரு அழைகப்பாகவும் ஒரு கலந்துரையாடலுக்கான கடமைப்பாடாகவும் கருதுகிறார். இது மீண்டும் சந்திப்பதற்கும், பரந்த மற்றும் நீடித்த உடன்படிக்கைகளை அடைய நமது நாட்டின் நலனுக்காக சிறந்த செயல்களில் ஒன்றுபடுவதற்கும் ஒரு வாய்ப்பாக நான் நேர்மையாகப் பார்க்கிறேன்…' எந்த மாற்றமும் 'படிப்படியாக, படிப்படியாக' இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தனியார் சொத்து உறவுகளைப் பாதுகாத்து முதலாளித்துவ சந்தையை நிலைநிறுத்துவதில் போரிக் ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளார். 2011 கல்வித்துறைப் போராட்டங்களில் தீவிர பல்கலைக்கழக மாணவர் தலைவராக, அவர் 2014 முதல் சிலி காங்கிரஸின் கீழ் சபையில் அமர்ந்து, முக்கியமான தருணங்களில் அன்றைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார்.

2019 ஆம் ஆண்டில் அவர் பில்லியனர் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவின் வலதுசாரி அரசாங்கத்துடன் பாரிய முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடிவிற்கு கொண்டுவர தேசிய ஐக்கிய பேச்சுவார்த்தைகளில் இழிவான முறையில் ஈடுபட்டார். பின்னர் அவர் அனைத்துவிதமான ஆர்ப்பாட்டங்களையும் குற்றவியலாக்கும் 'பொதுவாக' கடுமையான மற்றும் ஜனநாயக விரோத சட்டங்களை ஆதரித்தார்.

பதவிவெளியேறும் பினேரா ஆதரவைத் திரும்பத் தரத் தயாராக இல்லை. ஞாயிற்றுக்கிழமை தேர்தலில், தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியினரின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் பினேரா அரசாங்கத்தின் விகாரமான முயற்சிகளால் குறிக்கப்பட்டன. நாளின் ஆரம்பத்தில் சுதந்திர ஊடகங்கள், அரசாங்கம் பொது போக்குவரத்து அமைப்பை 50 சதவீத திறனில் மட்டுமே இயக்குகிறது என்று தெரிவித்தது. 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெருநகரப் பகுதி முழுவதிலும் உள்ள குடிமக்கள், தேர்தலை சீர்குலைத்ததற்காக அரசாங்கத்தைக் கண்டிக்க சமூக ஊடகங்களை நோக்கித் திரும்பினர். ஏனெனில் நாடு முழுவதும் உள்ள டஜன் கணக்கான தொழிலாள வர்க்க குடியிருப்புக்கள் தேர்தலுக்குச் செல்வதற்கு தங்கள் சொந்த வழிகளைத் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அளவுதெரியாத எண்ணிக்கையில் வாக்களிக்கும் உரிமையைப் பலரால் பயன்படுத்த முடியவில்லை.

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர், குளோரியா கூட் அரசாங்கத்தின் தலையீட்டை மறுத்தார். ஆனால் பேருந்து ஓட்டுநர்கள் ஊடகங்களுக்கு தனியார் வணிக பேருந்து நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் 50 சதவீதம் அல்லது ஒரு வழக்கமான வேலை நாட்களில் செயல்படுவதற்கும் குறைவான எண்ணிக்கையில் வாகனங்களை பயன்படுத்தியதை வெளிப்படுத்தினர்.

இந்த முற்றிலும் ஜனநாயக விரோதத் தலையீட்டால் தேர்தல் செயல்பாட்டில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அரசியல் போக்குகளான போலி-இடது Frente Amplio மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தை விமர்சிப்பதுடன் மட்டும் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டன. போரிக்கின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்க மருத்துவ சங்கத்தின் தலைவர் பதவியை விட்டு வெளியேறிய Izkia Siches பின்வருமாறு ட்வீட் செய்துள்ளார். '@GobiernodeChile அதன் வேட்பாளருக்கு ஆதரவாக பொது போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு முன், நாங்கள் வாக்காளர்களை கொண்டு செல்ல வண்டிகள், பேருந்துகள் மற்றும் பகிரப்பட்ட வாகனங்களை ஏற்பாடு செய்ய அழைக்கிறோம்.'

வாக்குப்பதிவு முடிவடைந்த அரை மணி நேரத்திற்குள் போரிக் அமோக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்பது தெளிவாகிவிட்டதால், வாக்களிக்கும் ஜனநாயக உரிமையின் மீதான குறிப்பிடத்தக்க தாக்குதலை அவர்கள் மறைத்துவிட்டனர்.

போரிக்கின் அரசாங்கம் ஸ்பெயினின் பொடெமோஸ்-ஸ்பானிஷ் சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) கூட்டணியை கூடிய அளவில் முன்மாதிரியாக கொண்டிருக்கும். இந்தக் கூட்டு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நிலைகுலையவைக்க இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடத் தயாராக இருக்கும் முழுக்க முழுக்க ஊழல்மிக்க, முதலாளித்துவ சார்பு கைக்கூலிகளால் ஆனது. கடந்த வாரம்தான் அவர்கள் காடிஸ் நகரில் வேலைநிறுத்தம் செய்யும் உலோகத் தொழிலாளர்களுக்கு எதிராக கலகப் பொலிஸைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

சிலி கூட்டணியைப் போலவே, போரிக் நெருங்கிய அரசியல் உறவுகளைப் பேணும் பொடெமோஸ் 'இடது' என்று விளம்பரப்படுத்தப்படுகிறது, ஆனால் அதில் இடதுசாரி என்ற எதுவும் இல்லை. மாறாக, இது ஒரு போலி-இடது அமைப்பாகும். இது சுயநலன்களை கொண்ட மேல்-நடுத்தர வர்க்க அடுக்குகளின் சார்பாக பேசுகிறது. அவர்கள் சமூகத்தின் மேல்மட்ட 10 சதவீதத்தினரின் செல்வத்தை அதிக அளவில் தமக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் மற்றும் அரசுபதவிகளையும் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றை மட்டுமே விரும்புகிறார்கள்.

போரிக் உடனான தேனிலவு குறுகிய காலமாகவே இருக்கும். அவர் லா மோனேடா அரண்மனைக்குள் நுழையும் தருணத்திலிருந்து சிலி தொழிலாள வர்க்கம் அவரது வலதுசாரிக் கொள்கைகளுடன் பெருகிய முறையில் முரண்படும்.

Loading