புதிய மேற்குப் பக்கக் கதை: லியோனார்ட் பேர்ன்ஸ்டீன் ஆக்கிய செவ்வியல் படைப்பின் தனக்குள் முரண்படும் ஒரு மீளாக்கம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டோனி குஷ்னரின் திரைக்கதையில் ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் இயக்கிய மேற்குப் பக்கக் கதை (Westside Story) டிசம்பர் 10ஆம் நாள் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படம் 1957ஆம் ஆண்டு பிராட்வே அரங்கேற்றிய இசை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது; இசையமைப்பாளர்: லியோனார்ட் பேர்ன்ஸ்டீன், நூலாசிரியர்: ஆர்தர் லோரன்ட்ஸ்; பாடலாசிரியர்: ஸ்டீபன் சொந்தீம்; நடன அமைப்பாளர்: ஜெரோம் ராபின்ஸ். அடுத்து நத்தாலி வூட், ரிச்சார்ட் பேய்மர், ரஸ் டாம்ப்ளின், ஜோர்ஜ் சாகிரிஸ், ரீட்டா மோரேனோ ஆகியோரை வைத்து ராபர்ட் வைஸ் இயக்கிய 1961 திரைப்பட வடிவம் திறனாய்வு நோக்கிலும் வணிக நோக்கிலும் வெற்றி பெற்றது, மேற்குப் பக்கக் கதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் துன்பியல் காதல் கதையான ரோமியோ ஜூலியட்டை அடிப்படையாகக் கொண்டது, 1950களின் நியூ யோர்க் நகரத்தைக் கதைக்களமாகக் கொண்டது.

புதிய வடிவத்தின் தோற்றம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாகும். பல்லாண்டு காலப் பணிகளில் ஸ்பீல்பேர்க்கின் படம் 2019இல் படமாக்கப்பட்டு சீர்மை செய்யப்பட்டது, ஆனால் அதன் திரையரங்க வெளியீடு பெருந்தொற்றினால் ஓராண்டு தாமதமாயிற்று.

ரோமியோ ஜூலியட்டை போலவே, மேற்குப் பக்கக் கதையும் கூட சமூகமும், குடும்பமும் பழங்குடியும் காட்டும் மூர்க்கமான எதிர்ப்புக்கு முகங்கொடுத்து இரண்டு இளம் உள்ளங்கள் ஒன்றுக்கொன்று தீவிரமாகக் கொண்ட காதலைச் சுற்றிச் சுழல்வதாகும். பேர்ன்ஸ்டீனும், லோரன்ட்சும் (Bernstein and Laurents) மன்ஹாட்டன் மேற்குப் பக்கத்தின் மேற்புறத்தில் ஒன்றுக்கொன்று போட்டியான இனக்குழு சார்ந்த பதின்ம வயதுக் கும்பல்களிடையிலான மோதல்களுக்கு நடுவில் தங்கள் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் மொண்டேகுகள், கப்புலெட்டுகளின் (Montagues and Capulets) இடத்தில் வளரிளம் பருவ (போலந்து, ஐரிஷ் மற்றும் இத்தாலிய) வெள்ளையர்களான ஜெட்டுகளும் போர்ட்டோ ரிக்கன் கும்பலான ஷார்க்குகளும் உள்ளனர். புதிய படம் அந்த கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்கிறது.

Ansel Elgort and Rachel Zegler in West Side Story

பேர்ன்ஸ்டீன்-லோரன்ட்சின் ரோமியோ-ஜூலியட் ஆகிய டோனியும் மரியாவும், ஷேக்ஸ்பியர் கதைக் காதலர்களைப் போலவே தங்கள் காதலுக்கும் மகிழ்ச்சிக்குமான வாய்ப்பை சமூகம் அழித்து விடக் காண்கின்றனர். காதலில் சுதந்திரம் காணும் அவர்களின் முயற்சி மனிதத் தன்மைக்கு எதிரான ஆதிக்க நகர்வுகளின் எதிர்ப்புடன் மோதிக் கொள்கிறது. மேற்குப் பக்க கதையில், பேர்ன்ஸ்டீனும் லோரன்ட்சும் விமர்சித்து நிராகரிக்கும் பிற்போக்குத்தனமான சமூக நடத்தையின் ஒரு பகுதியாக இனப்பிளவுபடுத்தல் அமைகிறது.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், பழம்பெரும் அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் இனப்பிளவுபடுத்தல் தனக்குள்ள மையக் கவலைகளில் ஒன்று என வலியுறுத்தி வந்தார். 2016இல் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இந்தத் திரைப்படத் திட்டத்திற்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டதாக திரைப்பட ஆக்குநர் சுட்டுகிறார்.

சந்தேகத்திற்கு இடமின்றி, இது ஒரு ஆரோக்கியமான தூண்டுதலாகும், இப்படம் இனவெறுப்பையும், யூத-எதிர்ப்பையும், பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் சமூகப் பிற்போக்கையும் இன்னுங்கூட பரந்த அளவில் மறுதலிப்பதற்குச் சான்று பகர்கிறது. குஷ்னர் (முனிச், லிங்கன்) ஓர் இடது தாராளவாதி, பல்வேறு நேர்காணல்களிலும் அறிக்கைகளிலும் அதே விதமான உணர்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

இனப்பித்தும் பாலினப்பித்தும் திரையுலகிலும் இசையுலகிலுமுள்ள முக்கியப் பகுதிகள் உட்பட, வசதியான நடுத்தர வர்க்கத்தின் கணிசமான அடுக்கினைப் பிடித்தாட்டும் நடப்புச் சமூக-கருத்தியல் சூழலைக் கருத்தில் கொண்டால், அடையாள அரசியலின் அழுத்தம் ஸ்பீல்பேர்க்-குஷ்னர் பதிப்பில் தீங்குண்டாகும் படியாகத் தன்னை உணர்த்திக் கொள்வதில் வியப்பில்லை. இது 'இலத்தீன்' கூறுகளை நிர்ணயித்தலாகவும் நடிகர் தேர்வில் அறிவிக்கப்படாத இனவழி ஒதுக்கீடுகளாகவும், குட்டி முதலாளித்துவ அடையாள அரசியலின் தொல்லையாகவும் வடிவெடுக்கிறது. நாம் இந்த பிரச்சினைக்குத் திரும்பி வருவோம்.

West Side Story

மேற்குப் பக்கக் கதையின் ஓட்டம் பற்றிய விவரங்கள் பரவலாகத் தெரிந்துள்ளன. ஆனால் அதன் பொதுவான சுருக்கத்தைச் சுட்டலாம்.

புதிய திரைப்பத்தின் கதைக் காலம் 1950களின் பிற்பகுதியிலோ அல்லது 1960களின் முற்பகுதியிலோ அமைவிக்கப்பட்டுள்ளது. நிகழ்த்து கலைகளுக்கான எதிர்கால லிங்கன் மையத்திற்கு வழிவிடுவதற்காக மேற்குப் பக்கத்தின் மேற்புறத்தில் ஒரு பகுதி இடிக்கப்பட்டபொழுது அமைவிக்கப்பட்டுள்ளது. படக் கருவி (camera) 'சேரி அகற்றுதல்' நடந்து கொண்டிருப்பதான அடையாள அறிவிப்பைக் காட்டிக் கடக்கிறது. இலத்தீனியர் ஆனாலும் மற்றவர்கள் ஆனாலும், குடியிருப்பவர்களில் ஒரு பகுதியினர் பின் பக்கம் காணப்படுகின்றனர்.

ஜெட் உறுப்பினர்கள் விரல் சொடுக்கி, விசிலடிக்கும் பிரபலமான காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது. சாய வாளிகளோடு அவர்கள் ஒன்றுகூடி, ஒரு காங்கிரீட் சுவரில் வரையப்பட்ட போர்ட்டோ ரிக்கன் கொடியைச் சிதைக்கத் தொடங்குகிறார்கள். ஷார்க்குகளில் சிலர் வந்து விடுகிறார்கள். ஒரு சலசலப்பு தொடங்குகிறது. மோதலுக்கான பொதுவான தொனியும் கட்டமைப்பம் முன்பே நிறுவப்பட்டாயிற்று.

ஜெட்டுகளின் தலைவர் ரிஃப் (மைக் ஃபைஸ்ட்) ஆவார், அவர் தன் குழந்தைப் பருவ நண்பரான டோனி (ஆன்செல் எல்கார்ட்) உடன் சேர்ந்து கூட்டாக இந்தக் கும்பலை நிறுவினார். ஷார்க்குகளின் தலைவர் பெர்னார்டோ (டேவிட் அல்வாரெஸ்) ஒரு குத்துச்சண்டை வீரர், அவரது தங்கை மரியா (ரேச்சல் ஜெக்லர்) அண்மையில் சான் யுவானிலிருந்து வந்துள்ளார். பெர்னார்டோவின் வருங்கால மனைவி அனிதா (அரியானா டிபோஸ்) மனத்திட்பமிக்கவர். மரியாவை மணக்க விரும்பும் சினோ (ஜோஷ் ஆண்ட்ரேஸ் ரிவேரா) மென்னமையான நடத்தைகொண்ட கணக்காளர், அடுத்தடுத்த நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க அழிவுப் பங்கு வகிக்க இருப்பவர்.

இந்த நகர்ப்புற நாடகக் குற்றக் கதையில், குறுவெறி கொண்ட லெப்டினன்ட் ஷ்ராங்க் (கோரே ஸ்டோல்), அதிகாரி க்ரூப்கே (பிரையன் டி'ஆர்சி ஜேம்ஸ்) ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் தங்கள் செல்வாக்கைக் காட்டுவது தவிர்க்கவியலாததும் பொருத்தமானதுமே. இது இசைநாடகத்தின் மறக்கமுடியாத எள்ளல் சுருதிகளில் ஒன்றாக விளங்கிற்று.

இரு கும்பல்களையும் ஷ்ராங்க் வெறுத்தொதுக்குகிறார். ஜெட்டுகளின் தலைவரிடம் அவர் சீறுகிறார் (குஷ்னரின் உரையாடலில்): 'கையாலாகாத காக்கேசியர்களில் நீங்களே கடைசி ஆள். நீங்கள் சிறையிலிருந்து வெளியே வருவதற்குள், ரிஃப், இங்கே (இந்தப் பேட்டையில்) பணக்காரர்களுக்கான பளபளவென்ற புதிய அடுக்ககக் கட்டடங்கள் நிறைந்திருக்கும். உம்மைப் போன்ற வெள்ளைக் குப்பையை வெளியேற்ற அவர்களுக்கு போர்ட்டோரிக்கன் வாயிற்காவலர்கள் இருப்பார்கள்.”

நிகழ்வுகள் விரைந்து செல்கின்றன. ஜெட்டுகளுக்கும் ஷார்க்குகளுக்குமான பதற்றம் தணிக்கும் நோக்கில், கொடை வள்ளல்கள் ஏற்பாடு செய்த ஒரு நடனத்தில், டோனியும் மரியாவும் சந்திக்கின்றனர். அது காதல், மெய்யாகவே கண்டதும் காதல். பெர்னார்டோவுக்கு உடனே வருத்தம் வருகிறது. என் தங்கையிடமிருந்து விலகியிரு என்கிறார். அந்தப் பெண்ணின் பெயரைச் செவிமடுத்த டோனி, 'மரியா... நான் கேட்டதிலேயே மிக அழகான ஓசை” என்று கூவியபடி தெருக்களில் அலைகிறார்.

போட்டிக்கார இனக் குழுக்களுக்கிடையே உணர்ச்சிகள் பெருகி, ஒரு 'போட்டிச் சண்டை”க்குத் திட்டமிடப்படுகிறது. அந்த ரோமியோவைப் போலவே, டோனி 'பால்கனியில்' (தீயிலிருந்து தப்புவதற்கானது) நிற்கும் மரியாவை இரகசியமாகப் பார்க்கிறார். 'இன்றிரவு' என்று தொடங்கி இனிமையான மெல்லிசையில் அவள் பாடுகிறாள்: 'உலகமெல்லாம் நீயும் நானும் மட்டுமே! ... நான் உன்னைப் பார்த்தேன், உலகம் போய்விட்டது.' காதலர்கள் அடுத்த நாளை ஒன்றாகக் கழிக்கிறார்கள். தாக்குதல் குற்றத்துக்காக ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்த டோனியிடம் தெருச் சண்டையை நிறுத்த இயன்றதனைத்தும் செய்யும்படி மரியா வேண்டுகிறார். இருப்பினும், ரிஃப் அவர் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். டோனி மோதலைத் தடுக்க முன்வந்து நிற்கிறார், ஆனால், நிகழ்ச்சிகளில் ஏற்படும் ஒரு கொடுந்திருப்பத்தால் சண்டை சச்சரவு சாவில் முடிகிறது. இரண்டு இளைஞர்கள் இறந்து கிடக்க, துயரம் மேலும் வரவிருக்கிறது.

ஷேக்ஸ்பியர் தனது நாடகத்தை இயற்றி 425 ஆண்டுகள் ஆயிற்று. அவரது இறுதி வரிகள் இன்றும் நம்மை அழ வைக்கின்றன:

'இந்த ஜூலியட்டும் அவள் ரோமியோவும் போல்

பெருந்துயரக் கதை ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.'

1957 இசைநாடகம் 1961 திரைப்பட வடிவம் ஒவ்வொன்றும் அதற்குரிய அளவில் இதயத்தை நொறுக்கும் 'துயரம்' கொண்டிருந்தன. புதிய ஆக்கமும் அவ்வாறே. முடிவில், இனப் பிரிவுகள் உட்பட அடக்கியொடுக்கும் பல்வேறு சமூக சக்திகள் வென்றுள்ளன. ஓர் உன்னதக் காதல் நசுக்கியழிக்கப்பட்டு விட்டது. இங்கேயும், ஷேக்ஸ்பியரின் கப்புலெட் பற்றாளர் புலம்புவது போல், இளம் இணையர் 'பாவம், எங்கள் பகைமைக்குப் பலிகள்” ஆகிப்போயினர். ஆனால், இதிலிருந்து ஒருவேளை உண்மையான மீளிணக்கம் மலருமோ? வலிசுமந்ததென்றாலும் நம்பிக்கையூட்டும் இந்தத் தருணத்திற்கு உண்மையாய் இருந்தமைக்காக திரைப்பட ஆக்குநர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

Leonard Bernstein, 1950s

மேலும், மேற்குப் பக்கத்தின் மூலக்கதைக்கும் சரி, 1961 திரைப்படத்துக்கும் சரி, பேர்ன்ஸ்டீனின் 'இசைக்கோவை” மிகப் பெரிய வலிமைகளில் ஒன்றாகவே இருந்துள்ளது என்பதில் ஐயமில்லை. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அண்மையில் குறிப்பிட்டது போல், அது 'மலைக்க வைக்கும் ஆழமும் அழகும்' கொண்டது, பிராட்வே இசைநாடகம், ஓபரா ஆகிய இரண்டு வகைகளின் சிறந்த கூறுகளையும் இந்த இசையமைப்பு ஒருங்கிணைக்கிறது. பேர்ன்ஸ்டீன், 'மக்களிசைக்கும் செவ்வியல் இசைக்குமான இடைவெளியை மூட அற்புதமாக வழிகண்டார்” என்று கருத்துரைத்தோம். பாடல்கள் (சொந்தீமின் பாடல் வரிகளுடன்) 'ஏரியாஸ்' என்றும் அழைக்கப்படும் - 'யாருக்குத் தெரியும்,' 'இன்றிரவு,' 'மரியா,' 'ஐ ஃபீல் ப்ரெட்டி,' 'அமெரிக்கா', 'எங்கேயோ' போன்றவை அமெரிக்கப் பாடலோடு, செவ்வியல் இசை இலக்கியம் ஆகிய இரண்டுக்கும் சொந்தமானவை. முற்றிலும் இசைநோக்கில் மேற்குப் பக்கக் கதைஎன்பது ஒரு மேதைமைப் படைப்பாகும், இது இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் -ஒருவேளை அதற்குப் பிறகும் கூட– அரங்கேற்றப்படும்.

எத்தனையோ இசையமைப்பாளர்கள் அரசியல் நோக்கிலும் இசைநோக்கிலும் மக்களைப் புறக்கணித்துக்கொண்டிருந்த நேரத்தில், தீவிர ஜனநாயக உணர்திறன் வாய்ந்த பேர்ன்ஸ்டீன் இயன்ற வரை பரந்துபட்ட பொதுமக்களைச் சென்றடையவும், மகிழ்விக்கவும், அறிவூட்டம் பெறச்செய்யவும் பெருமுயற்சி எடுத்து வந்தார்.

மேற்குப் பக்கக் கதையில் வரும் பாடல்கள், போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் மக்களனுபவத்தில் ஆழப் பதிந்தவை. அமெரிக்காவிலும் உலக அளவிலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான முறை அரங்கேறியவை. நெடுங்காலம் அவை நிலைத்து நிற்பதற்கு விளக்கமளிக்க வந்த இசைவல்லுநர் ஒருவர் சுட்டிக்காட்டுவது போல் இந்த இசைநாடகம் “ஆழ்ந்த சேர்ந்திசை நயமும், அவ்வப்போது பாடல்வழி வளர்த்தெடுக்கப்படும் கதைப்போக்கும், காதல்தோய்ந்த துன்பியலை மையமாக் கொண்ட உரையாடலுமாகிய தனிச்சிறப்பான நாடகப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.” அது “ஜாஸ், இலத்தீன் அமெரிக்க இசை ஆகிய மக்களிசை மணங்களும் கமழ்வதாகும்.”

அதே கருத்தாளரின் பார்வையில், “எங்கோ” பாடல் பீத்தோவனின் எம்பரர் தனியிசையின் எதிரொலிகளைக் கொண்டுள்ளது. “கூல்” பாடல் பன்னிருத்தொனி உருப்படியின் பாணியில் எழுதப்பட்டுள்ளது. … ”ரம்பிள்” பாடல் பெஞ்சமின் பிரிட்டெனின் பீட்டர் குரைம்ஸ் ‘ஸ்டாம் இண்டெர்லூடு’ என்பதன் பளிச்சென்ற சாயலில் உள்ளது. “குவிண்டெட்” “நாடக நோக்கில் விவரமானது, வெர்டியின் ரைகொலெட்டோ மூன்றாம் அரங்கில் வரும் பெல்லா பிஜிலா டெலமோர்’ மரபில் இயற்றப்பட்டது.” 1984இல் ஒரு குறிபிடத்தக்க ஆவணப்படத்தில் நினைவுகொள்ளப்படும் பேர்ன்ஸ்டீன் (இசைநடத்துநராக) மேற்குப் பக்கக் கதையை நாடகப் பாடகர்களை வைத்துப் பதிவு செய்தார்.

ஸ்பீல்பேர்க்கின் திரைப்படத்தில், இசைக்கும் பாடல்களுக்கும் மதிப்பளிக்கும் விதத்தில் அபாரத் திறமை கொண்ட நடிகர்களும் பாடகர்களும் நடனக் கலைஞர்களும் பங்காற்றியுள்ளனர்.. மரியாவாக ஜெக்லரும் டோனியாக எல்கார்ட்டும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் மற்றவர்களுடன் வரும் காட்சிகளிலும் சரி, தமக்குள் நெருக்கமாக இருக்கும் தருணங்களிலும் சரி, நம்பத்தக்கவர்களாகவும் துடிப்புமிக்கவர்களாகவும் பாடிக்களிப்பவர்களாகவும் உள்ளனர், இத்தருணங்களில் ஒன்று மன்ஹாட்டனின் க்ளோய்ஸ்டர்சில் இடம்பெறுகிறது ('ஒரு கை, ஒரு இதயம்'). துடிப்பு மிக்க நடனக்காரராகவும் பாடகராகவும் ”கண்டிக்கத்தக்கோரில்” ஒருவர் என்ற பாவனைக்காராகவும் ஃபெயிஸ்டும் ரிஃப் பாத்திரத்தில் மிளிர்கிறார். ஷ்ராங்க் என்ற பாத்திரத்தில் கோரீ ஸ்டோல் அவரது வழக்கமான திரைத் தோற்றத்தால் ஈர்க்கிறார். சரித்திரப் புகழுடைய 90 வயது மொரெனோ வலண்டினாவாக வருகிறார். 1961 படத்தில் நடித்துவிட்டு இப்போது ஸ்பீல்பேர்க் படத்திலும் இடம் பெறும் ஒரே கலைஞர் அவரே. இவரால் தொடர்ச்சியும் உணர்ச்சியழுத்தமும் கிடைக்கின்றன.

Mike Faist in West Side Story

திரைப்பட ஆக்குநர்கள் புதியமேற்குப் பக்கக் கதையில் நவீனத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர், அதன் காலக்-கட்டமைப்பை சற்றே புதுப்பிக்கவும் செய்கின்றனர். இதன் விளைவுகள் மொத்தத்தில் கலவையானவை. 'சேரியகற்றும்' காலத்தில் கதையைப் பொருத்தும் முடிவு புதிரானது. அது சமூக மற்றும் வர்க்கப் பதற்றங்களை முன்னுக்குக் கொண்டுவர உதவியிருக்கலாம். அது அவ்வளவாக உதவாமற்போனதைக் கெடுவாய்ப்பு எனலாம். மாறாக, காட்சியமைப்பில் அவ்வப்போது எங்குபார்த்தாலும் உடைகல் குவியல்கள் காட்டப்படுகின்றன. அவைகளின் இருப்பு உணரப்பட்டாலும் கதைக்குப் பெரிதாக எதையும் கூட்டவில்லை...

ஆனால், இதை விடவும் சேதம் செய்யும் படியானது இனவாத அரசியலின் கட்டாயச் செல்வாக்குதான். இந்தத் திட்டம் தொடக்கமுதலே ஓரளவுக்குக் கறைபட்டுத்தான் இருந்தது. ஐயமே இல்லை, இந்தத் திரைப்படத்தின் வளர்ச்சி தொடர்பான ஒவ்வொரு சந்திப்பிலும் ஸ்பீல்பேர்க்கும் குஷ்னரும் மிகப்பெரும் அழுத்தத்திற்கு ஆளாயினர் என்பதை நியாயமாகவே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தற்போது திரைப்பட ஆக்குநர்கள் மீது அப்படியே சில முடிவுகள் திணிக்கப்படுகின்றன, வசதி படைத்த அடையாள அரசியல் தொழிற்படுவோரால் சமரசங்கள் கறக்கப்படுகின்றன.

இதனால் ஓரளவுக்கு என்ன நடக்கிறதென்றால், 'அனைத்துக் காதல் கதைகளிலும் ஆகச் சிறந்த கதை' சொல்லும் திரைப்படம் தவிர்க்க முடியாமல் சீர்குலைந்து வலுவிழக்கிறது.

எடுத்துக்காட்டாக, ஸ்பீல்பேர்க் 2018இல் அறிவிப்பின்றி சான் ஜுவான் சென்ற போது, போர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் குழு ஒன்றிடம் கூறினார், 'நாங்கள் இத்தனை போர்ட்டோ ரிக்கன் பாடகர்களையும் நடனக் கலைஞர்களையும் நடிகர்களையும் பணியமர்த்தியதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் உங்களனைவரையும் எங்களனைவரையும் பெருமைப்படுத்தும் விதத்தில் போர்டோ ரிக்கோவைச் சித்திரித்துக் காட்ட எங்களுக்கு வழிகாட்டி உதவுவார்கள் என்பதே.'

எந்தவொரு கலைப் படைப்புக்கும் அது ஒரு மோசமான தொடக்கமே. மேற்குப் பக்கக் கதையில் கரீபியன் தீவுகளிலிருந்து புதிதாக வருபவர்கள் மீதான பாகுபாட்டுக்கும் காவல்துறை வன்முறைக்கும் எதிராகத் தங்களைக் காத்துக் கொள்ள உரிமையனைத்தும் உண்டு. ஆனால் இதுவும் கட்டுக்கடங்காத குலவாதப் பார்வைக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும் ஒன்றல்ல.

லாஸ் எஞ்செல்ஸ் டைம்ஸ் குறிப்பிடுகிறது, “படத்தின் நடிகர்களில் இருபது பேர் போர்ட்டோ ரிக்கர்கள் அல்லது போர்ட்டோ ரிக்கன் வம்சாவளியினர். இவர்களில் எண்மர் சான் ஜுவானில் நடிகர் தேடலில் கிடைத்தவர்கள். இதன் உரையாடலில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி ஸ்பானிய மொழியில் உள்ளது, திரையில் துணைக்குறிப்புகள் இல்லாமலே உரையாடல் உச்சரிக்கப்படுகிறது. புதிதாகச் சேர்க்கப்பட்ட ஒரு காட்சியில் ஷார்க்குகள் ’லா பொரிங்கேனா’ மூலப் பாடலை பாடுகின்றனர். மோதல் தன்மையைக் குறைத்துப் பாடல் வரிகள் திருத்தப்பட்ட பிறகு அது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இந்தப் புலத்துக்கு அதிகாரமுறைப் பண் ஆயிற்று.

West Side Story (1957)

குறிப்பாகச் சொன்னால் அனிதா, பெர்னார்டோ ஆகிய குணச்சித்திரங்களை அதிதீவிர தேசியவாத மூர்க்கத்தனம் பீடித்துள்ளது. 1961 திரைப்படத்தில் மொரெனோவும் கிரேக்க-அமெரிக்க சக்கிரிகளும் இன்னுங்கூட உயிரோட்டமான ஆளுமைகளாக மனங்கவர்ந்தனர்.

என்ன நடக்கிறது இங்கே?

பேர்ன்ஸ்டீன் தனது ரோமியோ-ஜூலியட் புத்தகப் படியின் முதல் பக்கத்தில் இந்த நாடகம் ”முழுக்க முழுக்க இனச் சகிப்புத் தன்மைக்கான அழைப்பு” என்று எழுதி வைத்தார். நடப்புக் கால இன மோதல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஸ்பீல்பேர்க், 'மேலும் அடக்கமான, மேலும் நுண்ணிய வழியில் --- மேடையிலும் மூலப் படைப்பிலும் நடப்பதுதான் ... இந்த நாட்டிலும் உலகைச் சுற்றிலும் நாம் அனைவரும் மிகச் சிறப்பாக அறிந்திருக்கும் பிரிவினையாக இன்று நடத்திக் காட்டப்படுகிறது.' இரண்டு திரைப்பட வடிவங்களும் ஒரே படிமத்தில் முடிவடைகின்றன: போட்டிக் கும்பல்கள் இரண்டும் குருதிதோய்ந்த தங்கள் பூசல் குறித்து வெட்கமுற்று மையமான ஒரு நாயகனின் சடலத்தைத் தூக்கிச் செல்ல இணைகிறார்கள்..

இருப்பினும்… இருப்பினும், இந்த மேற்குப் பக்கக் கதையில் இனக்குழுவாத - இனவாதக் குப்பைக்கு அளவுக்கதிகமான நம்பகத்தன்மையும் சட்டநியாயத் தன்மையும் கொடுக்கப்பட்டுள்ளன. வேடிக்கை என்னவென்றால், ஸ்பீல்பெர்கும் குஷ்னரும் --- கிட்டத்தட்ட மற்ற ஒவ்வொருவரும் கூட --- இந்தக் களேபரம் அனைத்திலும் ஒன்றை மறந்து விடுவது போல் தோன்றுகிறது; அதாவது, டோனியும் மரியாவும் எவ்வகையான இனவாதத்தோடு போராடி, அதற்கே பலிகளாகிப் போகின்றார்களோ திரைப்பட ஆக்குநர்கள் அதே இனவாதத்துக்குத்தான் அளவுக்கதிகமான சலுகைகள் காட்டுகின்றார்கள்.

திருப்புமுனையான ஒரு கட்டத்தில், அனிதா மரியாவை 'உன் வகையறாவுடன் ஒட்டிக் கொள்” என்று ”அவ்வகையில் ஒரு பையன்,' 'உன் சொந்த வகையில் ஒருவன்' என்ற பாடலில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் போதே, மரியா இதற்குப் பதிலளிக்கிறாள் 'இது உண்மையல்ல, எனக்காக அல்ல ... உன் வார்த்தைகள் எனக்குக் கேட்கின்றன... அவர்கள் கெட்டிக்கார்கள் என்று எனக்குத் தெரியும் ... ஆனால் அவர்கள் தவறானவர்கள் என்று என் இதயத்திற்குத் தெரியும்.' இறுதியில், அனிதா மரியாவின் உணர்வுகளின் வலிமைக்கு விட்டுக்கொடுக்கிறாள். இருவரும் இணைந்து பாடுகிறார்கள், 'காதல் இவ்வளவு வலுவாக வரும் போது, சரி தவறு எதுவுமில்லை, உங்கள் காதலே உங்கள் வாழ்க்கை!' இதற்கும் தேசியப் பெருமிதம் போற்றுவதற்கும் என்ன தொடர்பு?! இதைத்தான் தனக்குள் முரண்படும் திரைப்படம் என்கிறோம்.

எடுத்துக்காட்டாக, குஷ்னர் டைம் இதழிடம் சற்றே சப்பைக்கட்டும் தொனியில் சொன்னார்: இசைநாடகம் என்பது 'தன் காலத்தின் ஆக்கமே... மூலவடிவில் இதனை எழுதிய ஓரினச் சேர்க்கையாளர்களான யூதர்கள் நால்வருக்கும் [பேர்ன்ஸ்டீன், லாரன்ட்ஸ், ராபின்ஸ், சோன்ஹெய்ம்] சில வகையான ஒலிப்புகள் கிடைக்கவில்லை. அவர்கள் செய்த அறுதிப் பிழைகளும் உள.”

உண்மையில், ஓரினச்சேர்க்கையாளர்களான அந்த நான்கு இடதுசாரி யூதர்களும் (அவர்களில் மூவர் பேர்ன்ஸ்டீன், லாரன்ஸ், ராபின்ஸ் 1950களில் எஃப்.பி.ஐ புலனாய்வுக் கழகத்தாலும் கம்யூனிச எதிர்ப்பு வேட்டைக்காரர்களாலும் பின்தொடரப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு அல்லலுற்றவர்கள்) நிகழ்காலத்து இனஞ்சார்ந்த அவர்களின் விமர்சகர்கள் அனைவரையும் சேர்த்தாலும் அவர்களைக் காட்டிலும் மிகத் திறமையானவர்கள், உலகத்தைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள். அவர்கள் முழுமையாகத் தங்களுக்காக எழுந்து நின்றால் குஷ்னருக்கும் ஸ்பீல்பேர்க்குக்கும் கூட அது பொருந்தும். கலையையும் கலைஞர்களையும் இனத்தாலும் மதத்தாலும் வகைப்படுத்துவது நச்சுத்தனமானது, அவ்வளவுதான்.

மேலும், 'இலத்தீனிய'ப் பண்புக்கூறுகளின் அழியா முக்கியத்துவம் பற்றிய பெருமைப் பேச்சுகளுக்கெல்லாம் மாறாக, ரோமியோ ஜுலியட் ”ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் எதிர்த்து நின்ற காதல்” என்ற நவீன விளக்கத்துக்கு இனக்குழு அல்லது இனவழிப் பிணக்குடனோ அஃதில்லாமலோ (ஷேக்ஸ்பியரிடம் காணப்படாத கூறுதான் இது) எங்கு வேண்டுமானலும் களம் அமைக்கலாம்: இக்கதையின் எண்ணற்ற தழுவல்களிலும் பாடபேதங்களிலும் பெருமளவுக்கு இப்படித்தான் செய்யப்பட்டுள்ளது. எனவேதான் பேர்ன்ஸ்டீனும் லோரன்ட்சும் முதலில் கத்தோலிக்கர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான ஒரு பிணக்கைப் பற்றியதாகத் தமது எதிர்கால இசைநாடகத்தைக் கற்பனை செய்தனர்.

West Side Story (Steven Spielberg)

குறைந்தது, ஸ்பீல்பேர்க்கும் குஷ்னருமாவது மேற்குப்பக்கக் கதையில் காணப்படும் முரண்பாடான உந்தல்களுக்கு மனநிறைவான தீர்வு காண இயலா விட்டாலும் அவற்றை உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. மறுபுறம், கிட்டத்தட்ட உலகளாவிய முறையில், ஊடகங்களில் உள்ள அறிவிலிகள் இந்தக் கதையின் அவசர அவசியக் கருப்பொருளைக் காணாக் குருடர்களாகவே இருந்து வருகின்றனர். தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினர் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தப்படுவது, இதனால் (சொன்னாலும் சொல்லாவிட்டாலும்) மேலிருப்பவர்கள் ஆதாயமடைவதன் கசப்பும் கேடுமான விளைவுகளே அந்தக் கருப்பொருள். படம் எவ்வளவுதான் சரணடைந்த போதிலும் அடையாள அரசியல் பற்றாளர்களுக்கு மனநிறைவில்லை, அவர்கள் இன்னும்… இன்னும் வேண்டுமென்று அலறுகிறார்கள்.

கேவலமான எடுத்துக்காட்டுகள் 100 சொல்லலாம். ஆனால், கருணையுடன் ஒரு கைப்படி போதும். 'மேற்குப் பக்கக் கதையைக் காப்பாற்ற முடியாது' என்ற தலைப்பே அனைத்தையும் சொல்லி விடுகிறது, இந்தத் தலைப்பில் நியூ யார்க் பத்திரிகையாளர் ஆண்ட்ரியா கோன்சலஸ்-ராமிரெஸ் எழுதுகிறார். ஸ்பீல்பேர்க் படங்களில் 1961 திரைவடிவத்தில் போலவே 'பழுப்பின் மீது வெள்ளையின் வெற்றிகள் என்ற குறியீட்டு முறை உள்ளது, கதைக்கு உண்மையாக இருப்பதை விடவும் நம்பகத்தன்மைக்கு நுணுக்கங்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.… இறுதியில், பல பத்தாண்டுகளாக எங்களுக்கு வழங்கப்பட்ட உடைந்த ஆங்கிலமும், பால்வெறியேறிய அயன்மைப்பட்ட அப்பத் துண்டுகளும் எனக்குப் போதவில்லை என்கிறேன். மரியா ”அந்தப் பையனை மறந்து விட்டு வேறு ஒருவனைத் தேட வேண்டும்” என்று அனிதா விரும்பினாள். கடந்த காலத்துக்குரியதான மேற்குப் பக்கக் கதையைக் கடந்த காலத்திடமே விட்டுவிட்டு நாம் முன்செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.'

இதே போல் மோசமாகவே, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சும் 'ஸ்பீல்பேர்க் 'மேற்குப் பக்கக் கதையைக் காப்பாற்ற முயன்றார்” என்ற தலைப்பில்” ஆஷ்லே லீ எழுதிய விமர்சனத்தை வெளியிட்டது. ஆனால் அதன் வரலாறு அதை மீட்க முடியாததாக்குகிறது' என்று அவர் எழுதுகிறார்: 'எத்தனை நுயோரிக்கன் நடிகர்கள் நடித்தாலும், எத்தனை வரிகள் ஸ்பானிய மொழியில் ஓதப்பட்டாலும், எத்தனை போர்ட்டோ ரிக்கன் ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டாலும் எத்தனை வரலாற்று வல்லுநர் குழுக்களைக் கூலிக்கமர்த்தினாலும், இந்தக் கூட்டு முயற்சியெல்லாம் அந்த இசை நாடகத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த சிக்கல் சேர்க்கையைச் சரிசெய்து விடவில்லை.”

நியூ யோர்க் டைம்ஸின் இரண்டு பக்கச் செய்தியின் தலைப்பு 'மேற்குப் பக்கக் கதை: மாபெரும் விவாதம்” என்பதாகும். இதில் விமர்சகர் கரினா டெல் வால் ஷோர்ஸ்க் சொல்கிறார்: அந்த இசைநாடகம் 'பெருங்கூட்டரசின் நினைவுச்சின்னம்; ஆனால் போர்ட்டோ ரிக்கர்கள் யார் என்ற உரையாடலில் ஆதிக்கம் செலுத்த வெள்ளை அமெரிக்கர்களுக்கிருந்த அதிகாரத்திற்கான நினைவுச்சின்னம். ஒவ்வொரு புத்தாக்கமும் அந்த அதிகாரத்தைப் புதுப்பித்து, ஒரு புதிய தலைமுறைக்கான கதையாடலில் இணைந்து கொள்கிறது.' இப்படிப்பட்டவர்கள் அறிவுத்துறையில் எவ்வளவு அழுக்கானவர்கள்! இனப் பித்தும் குருதிப் பித்தும் ஒரே ஒரு திசையில்தான், தீவிர அரசியல் பிற்போக்கின் திசையில்தான், இட்டுச்செல்லும்.

பேர்ன்ஸ்டீன்-சொந்தீம் படைப்பின் மீதான தாக்குதல் பல்வேறு அவதாரங்கள் எடுத்தாலும் அது எவ்வளவு கேவலமானது என்பதைக் கணிக்க, இறுதி ஆதாரமாகிய ஷேக்ஸ்பியரின் அழியாப் படைப்பிடமே நாம் திரும்பிச் செல்ல வேண்டும். அவர் எழுதிய நாடகங்களிலேயே மக்கள் மிக அதிகமாக விரும்பிய ரோமியோ ஜூலியட் 1590களிலிருந்து தொடர்ச்சியாக மேடையேறி வருகிறது; குறைந்தது 24 இசைநாடகங்களுக்கு அது உந்தியுள்ளது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது கூனாடு, பெல்லினி ஆகியோருடையது. பெர்லியோஸ், சாய்கோவ்ஸ்கி, டெலியஸ், எலிங்டன் கோமகன் போன்ற பலரின் எண்ணற்ற துணைப்படைப்புகளுக்கும் அது வழிவகுத்துள்ளது. புரோகோபீவ் இயற்றிய பாலே நடனம் பல முறை மேடையேறியுள்ளது.ரோமியோ ஜூலியட் எக்காலத்தும் மிக அதிகமாகத் திரைப்படமாக்கப்பட்ட (தொலைக்காட்சியில் காட்டப்பட்ட) நாடகங்களில் ஒன்று. ஜார்ஜ் குகோர், ஃபிராங்கோ ஜெஃபிரெல்லி ஆகியோர் இயக்கிய தழுவல்களும் இதிலடங்கும். உண்மையில், கொந்தளிப்பும் கலகமும் நிறைந்த 1960களில், ஷேக்ஸ்பியரின் படைப்புகளால் மறைமுக ஊக்கம் பெற்ற ஒரு திரைப்படமும் (வைஸ் இயக்கியமேற்குப் பக்கக் கதை) அசல் நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டாம் படமும் (செஃபிரெல்லியின் 1968 திரைவடிவமும்) குறிப்பாக இளம்வயதுப் பார்வையாளர்கள் மீது சக்திமிக்க வகையிலும் உள்ளார்ந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்த நீடித்த ஈர்ப்புக்கும் உணர்ச்சித் தாக்கத்துக்கும் என்ன காரணம்? முதலாவதாக, ரோமியோவும் ஜூலியட்டும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த உடனுக்குடன் வெளிப்படுத்திய ஆழமான எண்ணங்களும், அவற்றை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் கொண்டிருந்த உறுதிப்பாடும் அத்தகையவை. மரபுகளையும், 'பண்டைய வெறுப்பையும்', பழைய தலைமுறைகளின் அனைத்து மடைமைகளையும், பொய்மைகளையும், கரடுதட்டிய பாரம்பரியங்களையும் மீறக் கூடிய காதலின் ஆதர்சத்தையும் நம்பிக்கையையும் வேறெந்தப் படைப்பும் இவ்வளவு சிறப்பாக வரைந்து காட்டியதில்லை. இளம்பெண் ஜூலியட்டுக்கு ஷேக்ஸ்பியர் வழங்கும் வரிகள் இவை:

நான் காட்டும் பேரன்பு கடல் போல் எல்லையற்றது;

என் காதலும் அது போல் ஆழமானது;

உனக்கு நான் இன்னும் கொடுக்கக் கொடுக்க,

என்னிடம் இன்னும் இருக்க இருக்க;

இதனால் இரண்டுமே எல்லையற்றவை.

அடுத்து வருவது தோல்வி. இளம் காதலர்களுக்கு எதிராகச் சதி செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஆற்றல்களும் சேர்ந்து இந்த மகத்துவக் காதலை நசுக்கி விடுகின்றன. அதற்கும் அப்பால், மொத்தத்தில் சண்டையிடும் பிரிவுகள் மீது “என்னமாய் ஒரு கசையடி விழுகிறது! 'அனைவரும் தண்டிக்கப்படுகிறார்கள்.'

இந்தச் சூழலை, மகிழ்ச்சியின் மலர்ச்ச்சியையும் துயரப் பெருக்கையும், மறுமலர்ச்சிக் கால வெரோனா, 16ஆம் நூற்றாண்டின் இலண்டன் ஆகியவற்றின் உடனடி நிலைமைகளைக் கடந்த பேருயரங்களுக்குக் கொண்டுசென்றவர் ஷேக்ஸ்பியர்.

நாடகத்தில் வரும் தற்போக்கான கூறுகள் (எதிர்பாராத ஒரு சந்திப்பு, சேர்ப்பிக்கப்படாத ஒரு கடிதம், சாவென்று தவறாகக் கருதப்படும் ஓர் ஆழ்ந்த தூக்கம்), ஜியோர்ஜி லூகாக்ஸ் குறிப்பிட்டது போல, இங்கே காதலர்களுக்கும் அவர்தம் சமூகச் சூழ்நிலைகளுக்கும் இடைப்பட்ட பிணக்கினால் உருக்கொள்ளும் “நாடகத் தேவையை” குறைத்து விடுவதில்லை. அந்த அடிப்படைப் பிணக்கு அதன் சமூக-வரலாற்றுக் கூறும் சேரத் துல்லியமாகக் காட்டப்படுமானால், “ஒவ்வொரு தனிப்பட்ட தற்செயலும், ரோமியோ ஜூலியட்டின் இறுதியில் நிகழ்வது போல், தேவையின் சூழலில் நிகழ்கிறது, இந்தச் சூழலிலும் அதனூடாகவும் அதன் தற்செயலான பாத்திரம் வியத்தகு முறையில் அழிக்கப்படுகிறது.

நாம் சுட்டிக்காட்டியபடி, மேற்குப் பக்கக் கதையின் புதிய திரை வடிவம், மூல இசைநாடகத்தின் இசைக்கோவை அதன் பொதுவான நாடக உருவரைகள், மனதைப் பிழியும் முடிவு உட்பட பல்வேறு கூறுகளையும் தக்கவைத்துக் கொள்கிறது. ஆனால் அதன் படைப்பாளர்கள் வரலாற்றுத் தன்மையில்லாத ஒழுக்கவாதிகளும் இனமகிமைவாதிகளும் செலுத்தும் கொடுந்தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ள வரை, அந்தத் ”தேவையின் சூழல்” பொருத்தமாக மட்டுமே உள்ளது.

Loading