முன்னோக்கு

அமெரிக்க முதலாளித்துவம் மரணத்திலிருந்து எவ்வாறு இலாபமடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, அமெரிக்காவில் ஒரு மில்லியன் கோவிட்-19 தொற்றுக்கள் முந்தைய அலைகளின் உச்சத்தை விட மூன்று மடங்கு அதிகமாகி பதிவாகியிருக்கையில் டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 400 புள்ளிகளை அடைந்து புதிய அனைத்துக் காலத்திற்குமான சாதனையை உருவாக்கியது.

நிர்வாகிகளும் விருந்தினர்களும் மேடையில் இருந்து தொப்பிகளை மேலே வீசும்போது, Harbor Capital ஆலோசகர்களின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகியுமான கிறிஸ்கோவ் கிளைஸ் (வலதுபுறம்) நியூயோர்க் பங்குச் சந்தையின் தொடக்க மணியை அடிக்கிறார். டிசம்பர் 2, 2021. (AP Photo/Richard Drew)

செவ்வாயன்று இந்நிகழ்வு தொடர்ந்து, அமெரிக்கா மற்றொரு கடுமையான மைல்கல்லைக் கடந்தது. தொற்றுநோய் ஆரம்பித்ததிலிருந்து 100,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டமையானது கோடையில் எழுச்சியின் அளவைக் கடந்துவிட்டன. குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

2021 முழுவதும், 478,000 அமெரிக்கர்கள் இறந்ததால், டோவ் ஜோன்ஸ் அதன் மூன்றாவது தொடர்ச்சியான வருடாந்த இரட்டை இலக்க அதிகரிப்புகளில் 70ஆவது இறுதி அதிகரிப்பை பதிவு செய்தது. 'கடந்த ஆண்டு புதிய அனைத்து கால உயர்வையும் நீங்கள் பார்த்திருந்தால்,' 'அந்த இரண்டு தசாப்தங்களில் 70களினதையும் மற்றும் 2000இனதையும் விட, உண்மையில் அதிக புதிய அனைத்துக்காலத்திற்குமான உயர்வு இருந்தது' என ஒரு வர்த்தகர் யாஹூ ஃபைனான்ஸிடம் கூறினார்.

2020 ஐ விட 2021 இல் இறப்புகள் அதிகமாக இருந்ததைப் போலவே, பங்குச் சந்தையில் வருமானமும் இருந்தது. டோவ் ஜோன்ஸ் 2020 இல் 7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2021 இல் 18 சதவீதம் உயர்ந்தது.

கோவிட்-19 தொற்றுநோய் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாரிய நோய்தொற்றுக்கும் பங்கு விலைகளுக்கும் இடையிலான தொடர்பு நன்கு நிறுவப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சந்தேகிக்கும்போது சந்தைகள் வீழ்ச்சியடைகின்றன, மேலும் நோய் கட்டுப்படுத்தப்படாமல் பரவ அனுமதிக்கப்படும் என்னும்போது அவை உயருகின்றன.

கடந்த மாதம் இதற்கான மிகவும் உறுதியான உதாரணமாகும். டிசம்பரின் தொடக்கத்தில், புதிய, மிகவும் தொற்றக்கூடிய ஒமிக்ரோன் மாறுபாடு அவசர பள்ளி மற்றும் வணிக மூடல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அந்த வீழ்ச்சி டிசம்பர் 21 அன்று முடிவடைந்தது, வர்த்தக நாள் முடிவதற்குள் முன்னர் அமெரிக்க ஜனாதிபதி பைடென் தேசிய தொலைக்காட்சியில் பேசுகையில், தனது நிர்வாகம், 'கோவிட்-19 ஆல் இனி வணிகங்கள் அல்லது பள்ளிகளை மூடாது என்பதை உறுதிசெய்கிறது' என அறிவித்தார்.

அப்போதிருந்து, டோவ் ஜோன்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்தாலும் கூட, அது சாதனைக்குப் பின் சாதனையை படைத்தது.

வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளுக்கு பொது சுகாதாரத்தை அடிபணியச் செய்வது என்பது தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்க அரசாங்கக் கொள்கையின் ஒரே நிலையான கூறுபாடாக இருந்தது.

கோவிட்-19 பரவிய ஆரம்ப வாரங்களில், ட்ரம்ப் பின்னர் பத்திரிகையாளர் பொப் வூட்வார்டிடம் கூறியது போல் 'அதைக் குறைத்துக்காட்ட' முயன்றார். 'நான் இன்னும் அதை குறைத்துக்காட்ட விரும்புகிறேன், ஏனென்றால் நான் ஒரு பீதியை உருவாக்க விரும்பவில்லை.' என்றார். ட்ரம்ப் கவலைப்பட்ட 'பீதி' வோல் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட பீதியாகும். வெள்ளை மாளிகையின் தொற்றுநோய்க்கு பொறுப்பான ஜாரெட் குஷ்னர், பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, 'அதிகமானவர்களை பரிசோதிப்பது அல்லது அதிகமான காற்றாடிகளை வாங்க உத்தரவிடுவது சந்தைகளை அச்சுறுத்தும், எனவே நாங்கள் அதைச் செய்யக்கூடாது' என்று வாதிட்டார்.

ஆனால் ட்ரம்ப் தொற்றுநோயை 'குறைத்து காட்டிக்கொண்டிருக்கையில்', உண்மையை மறைப்பது தவிர்க்க முடியாமல்போகையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் சொந்த சொத்துக்களின் மீதான தாக்கத்தை குறைக்க தங்கள் சொந்த பங்குகளில் திருத்தங்களை செய்துகொண்டனர். அந்த நேரத்தில், மார்ச் 2020 இன் CARES சட்டத்தின் வடிவத்தில் ஒரு பெரிய பிணை எடுப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டது.

CARES சட்டத்தில் ஒதுக்கப்பட்ட 2.3 டிரில்லியன் டாலர்களில் 1.4 டிரில்லியனுக்கும் அதிகமானவை வணிகத்திற்கான பிணையெடுப்புகளைக் கொண்டிருந்தது. இதில் பெரும்பகுதி பெரிய மற்றும் நன்கு இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் செல்கிறது. CARES சட்டம் மத்திய வங்கி மூலம் 4 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பண முதலீட்டை எளிதாக்கியது. இதன் விளைவாக, மத்திய வங்கியின் இருப்புநிலை கணக்கு பிப்ரவரி 2020 இல் 4.1 டிரில்லியன் டாலர்களில் இருந்து இன்று 8.7 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதில் 1.4 டிரில்லியன் டாலர்கள் பைடென் பதவியேற்றதிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

பிணையெடுப்பு உறுதிசெய்யப்பட்டவுடன், தொற்றுநோய்களின் ஆரம்ப அலையில் இடப்பட்ட வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. கோவிட்-19 இனை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுதல் மற்றும் நேரில் கற்றலுக்கு பள்ளிகளை மூடுதல் சந்தையின் நலன்களைக் குறைக்கின்றன என்று கூறப்பட்டது. எப்படியாவது இந்த நடவடிக்கைகள் தேவையில்லை என்றும், குறிப்பாக பைடெனின் கீழ், தடுப்பூசிகளால் தாங்களாகவே தொற்றுநோயைத் தடுக்கலாம் என்றும் ஊடகங்களின் உதவியுடன் முற்றிலும் தவறான கட்டுக்கதை உருவாக்கப்பட்டது.

இதன் முடிவுகள் ஊகிக்கக்கூடியவை. ஒருபுறம் பாரிய மரணமும், மறுபுறம் தன்னலக்குழுவின் பாரிய செறிவூட்டலுமாகும். நூறாயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். மேலும் அமெரிக்காவில் உள்ள பில்லியனர்கள் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 2.1 டிரில்லியன் டாலர்கள் செல்வந்தர்களாக உள்ளனர்.

2008 நிதி நெருக்கடிக்கு ஒபாமா மற்றும் புஷ் நிர்வாகங்களின் பிரதிபலிப்பின் அடிப்படையில் ட்ரம்ப் மற்றும் பைடென் இருவரின் தொற்றுநோய்களுக்கான பிரதிபலிப்பு கட்டமைக்கப்பட்டது. சற்றே சிறிய அளவில் என்றாலும், அப்போதும் வோல் ஸ்ட்ரீட்டின் இதேபோன்ற பிணை எடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. 10 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்தாலும், அமெரிக்காவின் பில்லியனர்கள் நெருக்கடியிலிருந்து முன்பை விட செல்வந்தர்களாக வெளிப்பட்டனர்.

பொருளாதார வல்லுனர்களான Raphaële Chappe மற்றும் Mark Blyth ஆகியோர் கடந்த ஆண்டின் இறுதியில் Foreign Affairs இல் எழுதியபடி, “நிதிச் சந்தைகளுக்கும் உண்மையான பொருளாதாரத்துக்கும் இடையே எஞ்சியிருந்த உறவுகளை” அமெரிக்கா துண்டித்துவிட்டது. அமெரிக்கா 'ஒரு நிதிய அரசியல் அமைப்பு முறையை உருவாக்கியுள்ளது. இது தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை அரசால் பாதுகாக்கப்பட்ட நிதி சொத்துக்களிலிருந்து பெறும் பொருளாதார உயரடுக்கின் தலைவிதியை, குறைந்த மற்றும் ஆபத்தான ஊதியத்தை நம்பியுள்ள சாதாரண மக்களிடமிருந்து பிரித்துள்ளது. இத்தகைய அமைப்புமுறையானது நிதிச் சொத்துக்களிலிருந்து அதிக வருமானம் பெறுபவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை வழங்குகிறது. (“Hocus Pocus?: Debating the Age of Magic Money”).

என்ன நடந்தாலும் அரசாங்கமும் மத்திய வங்கியும் பங்கு மதிப்புகளில் எந்தக் குறைவும் இல்லை என்பதை உறுதி செய்யும் என்பது அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கிற்கு தெரியும். ஆனால் இதில் மற்றொரு காரணியும் உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆயுட்காலம் அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சனையாக அடையாளம் காணப்பட்டது என்பது அமெரிக்க அரசியலின் அழுக்கான இரகசியமாக உள்ளது.

2020 ஆம் ஆண்டில், 373,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் இறந்த ஆண்டில், அமெரிக்காவில் ஆயுட்காலம் 1.8 ஆண்டுகளால் குறைந்து, 78.8 இருந்து 77.0 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய அரசு இறப்பு தரவுகளின்படி 2020 இல் மட்டும், கோவிட்-19 தொற்றுநோய் 1995 முதல் அமெரிக்க ஆயுட்கால அதிகரிப்பு முழுவதையும் நீக்கியுள்ளது. அதாவது கால் நூற்றாண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.

ஆயுட்காலம் குறைவது கணிசமான மக்கள்தொகை மாற்றங்களை உருவாக்குகிறது. முதியவர்களுடன் ஒப்பிடுகையில் உழைக்கும் வயது மக்கள் தொகையின் பங்கு அதிகரித்து வருகிறது. இறந்தவர்களில் எழுபத்தைந்து சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்றோரும், 93 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுமாகும்.

ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், இந்த பாரிய இறப்பு எண்ணிக்கையில் ஒரு 'தெளிவான விளக்கம்' உள்ளது. பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் மூலோபாயவாதிகள் பல தசாப்தங்களாக 'இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்தவர்கள்' ஓய்வு பெறத் தொடங்கியவுடன், உபரி மதிப்பை உருவாக்கும் உழைக்கும் வயது மக்களுக்கும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் இடையிலான சமநிலை மாறி, இலாபத்தில் குறையும் என்று கவலைப்பட்டு வருகின்றனர். இது, 'விலையுயர்ந்த' மருத்துவ நடைமுறைகளைக் குறைப்பதற்கும் Medicare மற்றும் Medicaid திட்டங்களை குறைப்பதற்கான கோரிக்கைகளைத் தூண்டியது.

Center for Strategic and International Studies (CSIS) இன் வாஷிங்டன் சிந்தனைக்குழாமின் அன்டனி கோர்டெஸ்மானின் 2013 ஆய்வுக் கட்டுரை, அமெரிக்க முதலாளித்துவத்தின் முக்கிய மூலோபாயப் பிரச்சனையாக சாதாரண அமெரிக்கர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

'அமெரிக்கா மத்திய அரசாங்க செலவினங்களை கட்டுப்படுத்த முடியாதிருப்பதை விட எந்த வெளிநாட்டு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை. கடன் நெருக்கடியானது, 'பெரும்பாலும் பிரத்தியேகமாக பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் கடனுக்கான நிகர வட்டிச் செலவு ஆகியவற்றின் அதிகரிப்பால்' உந்தப்பட்டது என கோர்ட்ஸ்மான் எழுதினார்.

மைக்கேல் பேக்லியால் Foreign Affairs இல்அக்டோபர் 2020 கட்டுரை அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயத்தில் மக்கள்தொகையியல் வகிக்கும் பாரிய பங்கைச் சுட்டிக்காட்டியது. 'ரஷ்யாவும் சீனாவும் விரைவில் தங்கள் இராணுவங்களுக்கு துப்பாக்கிகளை வாங்குவதற்கும், அதிகரித்துவரும் முதியவர்களுக்கு ஊண்டுகோல்களை வாங்குவதற்கும் இடையே கடுமையான தேர்வுகளை எதிர்கொள்ளும்' என்றும் உள்நாட்டில் அமைதியின்மையை தடுப்பதற்கு இரண்டாவதை தெரிவுசெய்வதற்கே முன்னுரிமை வழங்கவேண்டியிருக்கும் என்பதை வரலாறு காட்டுகின்றது என்றும்” அவர் எழுதினார்.

இந்த வாதத்தின் உட்பொருள் என்னவென்றால், 'ஊண்டுகோல்களை வாங்குவதை' விட 'துப்பாக்கிகளை வாங்குவதற்கு' முன்னுரிமை அளிப்பதன் மூலம் அமெரிக்கா உலகளாவிய ஒழுங்கில் தனது இடத்தைப் பாதுகாக்க முடியும் என்பதே. 'உள்நாட்டு அமைதியின்மை' பற்றிய கவலைகள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களைக் குறைக்கும் முயற்சிகளில் அதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பேக்லி குறிப்பிடுகிறார்.

எசேக்கியேல் ஜே. இமானுவல் 2014 இல் ஒரு கட்டுரையை வெளியிட்டார். 'இயற்கை அதன் போக்கை விரைவாகவும் உடனடியாகவும் எடுத்தால் 'சமூகம்' சிறப்பாக இருக்கும்' என்று வாதிட்டார்.

ஆயுட்காலம் குறைவதைப் பிரபலப்படுத்துவதற்கான முயற்சியை டாக்டர். எசேக்கியேல் இமானுவல் 2014 ஆம் ஆண்டு The Atlantic இல் எழுதிய '75 வயதில் நான் ஏன் இறக்க வேண்டும் என்று நம்புகிறேன்' என்ற தலைப்பில் 'இயற்கை அதன் போக்கை விரைவாகவும் உடனடியாகவும் எடுத்தால் சமூகம் நன்றாக இருக்கும்' என்று வாதிடுகிறது. இமானுவல், ஒபாமா நிர்வாகத்தின் கட்டுப்படியாகக்கூடிய பராமரிப்புச் சட்டத்தினை உருவாக்கியதில் முன்னணியில் இருந்தவராவார்.

இந்த இரண்டு பிரிவுகளும் தொற்றுநோய்க்கான 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்' என்ற பிரதிபலிப்பை காட்ட கட்டளையிடுகின்றன. ஒருபுறம், மிகைப்படுத்தப்பட்ட கடனை கொண்டுள்ள முதலாளித்துவ அமைப்பு முறையானது, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரித்தெடுக்கப்படும் உபரி மதிப்பின் பாய்ச்சலில் எந்தக் குறைப்பையும் ஏற்காது. மறுபுறம், ஆயுட்காலம் குறைவது என்பது இலாபத்தை நோக்கிய சமூக வளங்களின் பங்கை மேலும் விரிவாக்குவதைக் குறிக்கும்.

இந்தக் காரணங்களுக்காக, வோல் ஸ்ட்ரீட் கோவிட்-19 நிரந்தமாவதிலிருந்து இலாபமடைவதை பார்க்கிறது. நோயானது மக்கள்தொகைக்குள் நிரந்தரமாகச் சுற்றிவருவது, முதியவர்களைக் கொன்று குவிப்பதோடு முதியவர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மருத்துவச் சேவை வழங்குவதற்கான மொத்தச் செலவைக் குறைக்கலாம் எனக் கருதுகின்றது.

தொற்றுநோய்கள் மற்றும் நோய்க்களுக்கான அடிப்படை பதில், நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிந்து அகற்றுவதாகும். தொற்றுநோயைப் பொறுத்தவரை, கோவிட்-19 வைரஸே உடனடிக் காரணமாகும். ஆனால் ஆழ்ந்த சமூகக் காரணம் முதலாளித்துவ சமூக மற்றும் பொருளாதார அமைப்பாகும். இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனை இல்லாதொழிப்பதும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டை மூடுவதும் பொது சுகாதாரத்திற்கான முக்கியமான கேள்விகளாகும்.

Loading