முன்னோக்கு

உலக சோசலிச வலைத் தளத்தின் புத்தாண்டு வேண்டுகோள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2022 புத்தாண்டு கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மனிதகுலம், 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் இரண்டு உலகப் போர்களுக்குப் பிந்தைய மிகப்பெரிய நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. இறப்பு எண்ணிக்கை, உத்தியோகபூர்வமாக, சுமார் 5.5 மில்லியனாக உள்ளது. ஆனால் உயிரிழப்புகளின் கணக்கீடு 'அதிகப்படியான இறப்புகளுடன்' சேர்த்து அளவிடப்பட்டால்—அதாவது, இந்த பெருந்தொற்றுடன் தொடர்புடைய சூழ்நிலைகளால் ஏற்பட்டிருக்கலாம் என்ற எல்லா சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் இறப்பு எண்ணிக்கையின் அதிகரிப்பானது—கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தோராயமாக 19 மில்லியன் ஆகும். அமெரிக்காவுக்குள், கிட்டத்தட்ட 850,000 பேர் உயிரிழந்துள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 100 அமெரிக்கர்களில் ஒருவர் இதில் உள்ளடங்குகிறார்.

இந்த பயங்கர மரண எண்ணிக்கையை வெறுமனே ஒரு நோய் நுண்கிருமியின் உயிரியல்ரீதியான பரவல் என்ற அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. இந்த பெருந்தொற்றைக் குறித்த விஞ்ஞானத்தை உயிரியியல் வல்லுனர்களும், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் நுண்கிருமியியல் வல்லுனர்களும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து உயிர்களைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது, ஒரு நூற்றாண்டுக்கும் அதிக காலமாக பெற்ற அனுபவத்திலிருந்து, பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்துவதும் மற்றும் மனசாட்சியுள்ள பொது சுகாதார வல்லுனர்களின் முயற்சிகளும், பொருளாதார மற்றும் அரசியல் நலன்களின் ஈவிரக்கமற்ற முன்னுரிமைக்கு அடிபணியச் செய்யப்பட்டுள்ளன, இவையே உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த பெருந்தொற்றுக்குக் காட்டும் விடையிறுப்பைத் தீர்மானிக்கின்றன.

SARS-CoV-2 வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டு ஒரு சில வாரங்களுக்குள், சாத்தியமானளவுக்குப் பேரழிவுகரமான பரிமாணத்தில் ஓர் அச்சுறுத்தலை உலகம் எதிர்கொண்டிருக்கிறது என்பதையும், சிக்கலாகவும் ஆழமாகவும் ஒன்றோடொன்று இணைந்த இந்த உலகளாவிய சமூகத்தில், வைரஸ் பரவலைத் தடுக்க அவசரகால நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி, பில்லியன் கணக்கானவர்களைத் தொற்றும், பத்து மில்லியன் கணக்கானவர்களைத் தீவிரமாக நோய்வாய்ப்படுத்தி, கொல்லவும் கூடும், SARS-CoV-2 வைரஸை அகற்றுவது மற்றும் இறுதியில் முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கிய ஒரு பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதையும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் புரிந்து கொண்டார்கள்.

சீனா, நியூசிலாந்து, மற்றும் இன்னும் சில நாடுகள் பிரதானமாக ஆசிய-பசிபிக் நாடுகளில், பயனுள்ள சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்ததுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையோ இரட்டை இலக்கத்தில் குறைவாகவோ அல்லது ஓரிலக்கத்திலோ கூட நிறுத்தப்பட்டது.

ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த முதலாளித்துவ அரசாங்கங்கள், முதலும் முக்கியமுமாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் இருப்பவை, இந்த விஞ்ஞானபூர்வ பகுத்தறிவார்ந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைப் போக்கை நிராகரித்தன.

இரண்டாண்டுகளாக, பொது சுகாதார கொள்கைகளின் அடிப்படை நோக்கமாக இருந்திருக்க வேண்டியது —மனித உயிர்களைக் காப்பாற்றுவது என்பது— குற்றகரமாகவும் நனவுபூர்வமாகவும் மிகப் பெரும் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் தனிப்பட்ட சொத்துக்களைக் குவித்துக் கொள்வதற்கும் மற்றும் பெருநிறுவன இலாபத்திற்கும் அடிபணிய செய்யப்பட்டுள்ளது. அரசு கொள்கைகள் மரண எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கி ஒருமுனைப்பட்டிருக்கவில்லை மாறாக பங்குச் சந்தையின் பங்கு விலைகளை அதிகரிப்பதை நோக்கி இருந்துள்ளன.

கேடுகெட்ட சுயநலம் தேசிய பேரினவாதத்துடன் சேர்ந்துள்ளது. இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ஓர் உலகளாவிய மூலோபாயம் தேவைப்படுகிறது. ஆனால் ஏகாதிபத்திய மற்றும் பெருநிறுவன நலன்களின் நச்சார்ந்த கூட்டணியோ விஞ்ஞானபூர்வமாக வழிநடத்தப்படும் உலகளாவிய விடையிறுப்பை எதிர்த்தது. பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்து, புவியில் ஒவ்வொருவருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால் பிரமாண்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் இலாபங்களைப் பாதுகாப்பதால் அது பாதையின் குறுக்கே நிற்கிறது.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர், நுண்கிருமியியல் நிபுணர் ஜோனஸ் சால்க் —1950 களின் தொடக்கத்தில் போலியோ தடுப்பூசி கண்டு பிடிப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த இவரிடம்— அதன் காப்புரிமை அவருக்குச் சொந்தமா என்று தேசிய தொலைக்காட்சியில் கேட்கப்பட்டார். சால்க் இவ்வாறு பதிலளித்தார், “காப்புரிமை எதுவும் இல்லை. சூரியனுக்கு நீங்கள் காப்புரிமை பெற முடியுமா?” என்றார்.

மருந்து தயாரிப்புத் துறை நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே பொது சுகாதாரத்தின் இதுபோன்ற பொதுநல வெளிப்பாடுகளைச் சாத்தியமற்றதாக்கி விட்டது. ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறது — குறிப்பாக மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான உரிமைக்கும். அவசரமாக தேவைப்படும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளைத் தனியார் சொத்துடைமையாக மாற்றி, பில்லியன் கணக்கான உயிர்களை இந்த துறை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியையும், அசுரத்தனமான பணக்கார ஆளும் உயரடுக்குக்கும் பெருந்திரளான உலக மக்களுக்கும் இடையிலான சமரசப்படுத்தவியலா மோதலையும், நவீன வரலாற்றில் வேறெந்த சம்பவமும் எடுத்துக்காட்டியிராத விதத்தில், இந்த உலகளாவிய பெருந்தொற்று அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த பெருந்தொற்றை மருத்துவ நடவடிக்கைகள் மூலமாக மட்டும் தடுத்து விட முடியாது. இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டம் வர்க்கங்களுக்கு இடையிலான ஒரு போராட்ட வடிவத்தை ஏற்றுள்ளது.

முதலாளித்துவ வர்க்கம், முதலும் முக்கியமுமாக, இந்த பெருந்தொற்றை அதன் செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறது. வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகள் முன்பில்லாதளவில் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்தி உள்ள கொள்கைகள் உலக மக்களில் ஒரு மிகச் சிறிய கன்னைப் பிரமாண்டமான அளவில் தன்னைச் செழிப்பாக்கிக் கொள்ள உதவியுள்ளன. அதே கொள்கைகள் மில்லியன் கணக்கானவர்கள் இறப்பதற்கு வழிவகுத்துள்ளன.

கடந்த இரண்டாண்டுகளாக தங்களுக்குள் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டுள்ள பெருநிறுவன-நிதிய உயரடுக்கும் அவை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அரசாங்கங்களும் இவ்வாறு விழுங்கி ஏப்பம் இடுவதைத் தொடரத் தீர்மானகரமாக உள்ளன. இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருக்கின்ற போதினும், குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் மற்றும் தொழிலாளர்கள் தங்களின் வேலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டுமென அரசாங்கங்கள் கோருகின்றன.

நோய்தொற்று உள்ள வகுப்பறைகளுக்குள் குழந்தைகளை அனுப்புவது கல்வி கற்பிப்பதற்காக அல்ல. அது பெருநிறுவனங்களுக்கு உழைப்பு சக்தியை வழங்குவதற்காக ஆகும், இது இல்லாமல் பெருநிறுவன வருவாய்கள் மற்றும் இலாபங்களை உருவாக்க முடியாதே. ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் மற்றும் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கேட்கும் போது, சமூகம் செயல்பட தொழிலாள வர்க்கம் இன்றியமையாதது என்பதை முதலாளித்துவவாதிகள் ஒப்புக் கொண்டு விடுகிறார்கள்.

SARS-CoV-2 பரவலைத் தடுப்பதற்கான எல்லா பாசாங்குத்தனங்களும் கூட கைவிடப்பட்டுள்ளது. ஊடகப் பிரச்சாரத்திற்கும் கண்கூடான யதார்த்தத்திற்கும் இடையே ஒரு மிகப்பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரோன் வகையோ 'மிதமானது' என்றும் 'கடுமை குறைந்தது' என்றும் பெருநிறுவன ஊடகங்களால் ஆசிர்வதிக்கப்படுகிறது. பள்ளிகளில் குழந்தைகள், ஏதோ மாயமந்திரத்தின் மூலமாக, நோய்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதைப் போல, அவை 'பாதுகாப்பான இடங்களாக' அறிவிக்கப்படுகின்றன. ஆனால் 141,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் மருத்துவமனையில் இருப்பதாகவும் 18 வயதுக்குக் குறைந்த 580,000 க்கும் அதிகமான குழந்தைகள் கடந்த வாரத்தில் மட்டும் இந்த வைரஸால் நோய்தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் ஜனவரி 10 இல் அறிவிக்கப்பட்டது. இந்த 'மிதமான' ஓமிக்ரோன் வகை என்று கூறப்படும் வைரஸால் முன்பில்லாத எண்ணிக்கையில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் கோவிட்-19 ஆல் ஏற்கனவே 1,000 க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இந்த எண்ணிக்கை ஓமிக்ரோன் அதிகரிப்பால் வரவிருக்கும் வாரங்களில் இன்னும் வேகமாக அதிகரிக்கும்.

ஆனால் சமூகம் 'கோவிட் உடன் வாழ பழகிக் கொள்ள' வேண்டும் என்பதே, அன்றாட கோஷமாக, மீண்டும் மீண்டும் ஊடகங்களால் கூறப்படுகிறது. இதன் அர்த்தம் என்ன? கிறிஸ்மஸில் இருந்து, வெறும் இரண்டு வாரம் மற்றும் சில நாட்களுக்கு முன்னர், 20,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இந்த வைரஸால் இறந்தனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் இந்த வைரஸூடன் வாழ முடியாது. ஆனால் அரசாங்கமும் ஊடகங்களும் மனிதகுல நல்வாழ்வை விட நியூ யோர்க் நகரசபைத் தலைவர் எரிக் ஆதம்ஸ் சமீபத்தில் தொடங்கி வைத்த 'நிதிய சூழல்' (financial ecosystem) என்பதை முன்னிலைப் படுத்த, இறப்புகளையும் துயரையும் தொடர்ந்து வழமையாக்குகின்றன.

இதுதான் காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு சமூக வர்க்கத்தின் கண்ணோட்டமாக உள்ளது. முதலாளித்துவ அரசாங்கங்கள் எத்தனை இறப்புகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது என்பதில் எந்த வரம்பும் இல்லை. மக்களிடையே இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி பரவச் செய்யும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைக்குப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கங்கள் அவற்றின் நாடுகளில் உழைக்கும் மக்கள் மீது ஓர் அரக்கத்தனமான பரிசோதனையைச் செய்து வருகின்றன. இதை தான் பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், “சடலங்கள் மலைபோல் குவியட்டும்,” என்று ஈனத்தனமாக குறிப்பிட்டார்.

மனித உயிர்கள் மீது காட்டப்படும் இந்த மனிதாபிமானமற்ற அலட்சியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் இப்போது போராடத் தொடங்கி உள்ளது. இது தான், குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உயிர்களை ஆபத்தில் நிறுத்தும் நிலைமைகளில் வகுப்புகளை நடத்த மறுத்து வரும் ஆசிரியர் போராட்டத்தின் முக்கியத்துவம் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் மற்றும் மாணவ இளைஞர்களும் இந்த போராட்டத்தில் இணைந்து வருகிறார்கள்.

ஆனால் இந்த பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு சக்தி வாய்ந்த பாரிய இயக்கம் அபிவிருத்தி காண ஓர் அரசியல்ரீதியான, சமூக மற்றும் வரலாற்று முன்னோக்கு அவசியமாகும்: அதாவது, தொழிலாளர்கள் யாரை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள் மற்றும் எதற்காக போராடுகிறார்கள் என்பதைக் குறித்து அவர்களுக்கு ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலகெங்கிலும் உள்ள அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளின் பிரசுரமான உலக சோசலிச வலைத் தளம் இந்த முன்னோக்கிற்காக போராடுவதில் பிரிவிக்கவியலாத தீர்க்கமான ஆயுதமாகும்.

இந்த 2022 ஆண்டு WSWS அதன் தினசரி பிரசுரத்தைத் தொடங்கி இருப்பத்தைந்தாம் ஆண்டைக் குறிக்கிறது. இந்த பல ஆண்டுகளில், அது சோசலிசம் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமைக்கான உத்தியோகபூர்வ மற்றும் சமரசத்திற்கிடமற்ற குரலாக தன்னை ஸ்தாபித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலக சோசலிச வலைத் தளம் இந்த பெருந்தொற்றின் இயல்பையும் முக்கியத்துவத்தையும் பகுப்பாய்வு செய்து பிரசுரித்துள்ளது. அது இந்த பெருந்தொற்று சம்பந்தப்பட்ட விஞ்ஞானத்தையும் அரசியலையும் இரண்டையும் விளங்கப்படுத்தி உள்ளது. ஜனவரி 24, 2020 இல் புதிய கொரோனா வைரஸ் உருவெடுத்திருப்பது குறித்து அறிவித்த அதன் முதல் கட்டுரையைப் பிரசுரித்ததில் இருந்து, உலக சோசலிச வலைத் தளம் இந்த பெருந்தொற்று சம்பந்தமாக 4,000 க்கும் அதிகமான கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளது.

இந்த நெருக்கடியின் ஆரம்பக் கட்டங்களில் இருந்தே, ஓர் உலகளாவிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த பெருந்தொற்றைத் தடுக்க முடியும் என்பதை WSWS வலியுறுத்தி வருகிறது. மார்ச் 6, 2020 இல், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 3,500 க்கு குறைவாகவும், அமெரிக்காவில் அப்போது மொத்த இறப்புகள் 20 க்குக் கீழ் இருந்த போதே, WSWS பின்வருமாறு எச்சரித்தது:

“அவசரகால தலையீடு இல்லையென்றால், இந்த பெருந்தொற்று மக்களிடையே கட்டுப்பாடின்றி பரவி, அதிர்ச்சியூட்டும் அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.…

“இந்த சமூக பேரழிவு தடுக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் எல்லா பிரிவுகளும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்கவும் மற்றும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவசியமான சிகிச்சை வழங்கவும் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கங்களைக் கோர வேண்டும்.”

“இலாப நலன்களை விட சமூகத் தேவைகள் முன்நிறுத்தப்படுவதே விடையிறுப்பை வழிநடத்தும் கொள்கையாக இருக்க வேண்டும். பங்கு மதிப்புகள் மற்றும் இலாபங்கள் மீதான முதலாளித்துவக் கணக்கீடுகள் இந்த நோயை எதிர்த்து போராடுவதை மட்டுப்படுத்தவோ, பலவீனப்படுத்தவோ, அல்லது தடுக்கவோ அனுமதிக்கக் கூடாது.”

வேறெந்த அரசியல் கட்சி அல்லது பிரசுரங்களின் ஆவணங்களையும் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்துடன் ஒப்பிட முடியாது. WSWS இன் எச்சரிக்கைகளும், அது முன்னெடுத்த கொள்கைகளும், நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஆனால் வெறுமனே செய்திகளை வழங்கி எச்சரிப்பதோடு WSWS இன் பணி மட்டுப்பட்டதல்ல. எங்கள் முயற்சிகள் அனைத்தும் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர தொழிலாள வர்க்க நடவடிக்கைக்கு அடித்தளம் அமைப்பதை நோக்கி வழிநடத்தப்படுகின்றன.

கடந்தாண்டில், தொழிலாள வர்க்க போராட்டங்களை ஒழுங்கமைப்பதிலும் மற்றும் அரசியல் திசையை வழங்குவதிலும் WSWS குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்துள்ளது.

சாமானிய குழுக்களின் சர்வதேச கூட்டணியை ஏற்படுத்துவற்காக மே 1, 2021 இல் விடுக்கப்பட்ட அழைப்பு அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் அபிவிருத்தி கண்ட பிரதான பல தொழில்துறை வேலைநிறுத்தங்களில் தொழிலாளர்களின் போராட்டங்களைப் பரந்தளவில் பலப்படுத்தியது.

ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் 2021 இல் WSWS ஏற்பாடு செய்த சர்வதேச இணைய கருத்தரங்கங்கள், மிகவும் கொள்கைப் பிடிப்பான விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் சேர்ந்து, இந்த SARS-CoV-2 வைரஸை அகற்றி முற்றிலுமாக ஒழிப்பதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஓர் உலகளாவிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய பங்களிப்பு செய்தது.

கோவிட்-19 பெருந்தொற்று சம்பந்தமாக நவம்பரில் தொடங்கப்பட்ட WSWS இன் உலகளாவிய தொழிலாளர் விசாரணை இந்த பாரியளவிலான இறப்புகளுக்கு முதலாளித்துவ அமைப்புமுறையின் குற்றகரமான பொறுப்பை அம்பலப்படுத்த ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது.

உலக சோசலிச வலைத் தளம் இந்த புத்தாண்டிலும் அதன் பணியைத் தொடரவும் மற்றும் விரிவாக்கவும் தீர்மானமாக உள்ளது.

தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் இயக்கம் எங்களுக்கு வாய்ப்புகளையும் மற்றும் சவால்களையும் இரண்டையும் முன்நிறுத்துகிறது. அத்தகைய சவால்களில் ஆதாரவளங்களைத் திரட்டுவதும் உள்ளடங்கும்.

இதனால் தான் முடிந்த வரை அதிகமாக இன்றே உலக சோசலிச வலைத் தளத்திற்கு நன்கொடைகள் வழங்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் தொடர்ச்சியான நிதி உதவி WSWS இன் பணியைத் தொடர்வதற்கு மட்டுமின்றி, மாறாக இந்த மனிதாபிமானமற்ற, பயங்கர சமநிலையற்ற, இராணுவரீதியான மற்றும் தார்மீகரீதியில் திவாலான சமூகத்திற்கு ஒரு மாற்றீட்டைத் தேடி வரும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைச் சென்றடையும் அளவுக்குப் பரந்தளவில் விரிவாக்க இன்றியமையா விதத்தில் முக்கியமாகும்.

ஆனால் நிதியுதவிகளைக் கோருவதுடன் சேர்ந்து, கடந்த இரண்டாண்டு கால அனுபவத்திலிருந்து அவசியமான பாடங்களைப் பெறுமாறு உங்களை நான் வலியுறுத்துகிறேன்: அதாவது, ஒரு சோசலிச எதிர்காலத்திற்காகவும், இந்த பெருந்தொற்றை, முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையை, போர் மற்றும் பாசிசத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் போராட நனவுபூர்வமாக முடிவெடுங்கள். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்து அதைக் கட்டியெழுப்ப முடிவெடுங்கள்.

Loading