WHO எச்சரிக்கிறது: அரசாங்கக் கொள்கைகள் பாதி ஐரோப்பியர்களை கோவிட்-19 தொற்ற வழிவகுக்கும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை, உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு, ஓமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் கோவிட்-19 இன் பாரிய எழுச்சிக்கு மத்தியில், ஐரோப்பிய அரசாங்கங்களின் சுகாதார நெறிமுறைகள் மற்றும் சுய-தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்களைத் தளர்த்தும் கொள்கையின் பேரழிவு தரும் விளைவுகளைப் பற்றி அப்பட்டமாக எச்சரித்தது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பிய இயக்குனர் டாக்டர். ஹான்ஸ் க்ளூக், ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் பரவி வரும் 'ஒரு புதிய மேற்கு-கிழக்கு அலை எழுச்சியை பிரதிபலிக்கிறது' என்றார். 2022 இன் முதல் வாரத்தில், WHO இன் ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளில், பிரிட்டிஷ் தீவுகள், ஸ்காண்டிநேவியா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் 7 மில்லியன் தொற்றுக்கள் காணப்பட்டன. அவர் மேலும் கூறுகையில், “ஜனவரி 10 நிலவரப்படி, 26 நாடுகள், தங்கள் மக்கள்தொகையில் 1 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு வாரமும் கோவிட்-19 ஆல் தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கின்றன. … [ஓமிக்ரோன்] விரைவில் மேற்கு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக மாறி, இப்போது பால்கனில் பரவி வருகிறது.

'இந்த விகிதத்தில், அடுத்த 6 முதல் 8 வாரங்களில் பிராந்தியத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) முன்கணித்துள்ளது' என்று க்ளூக் எச்சரித்தார். WHO இன் ஐரோப்பா பிராந்தியத்தில் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர், இதன் பொருள் ஐரோப்பாவில் மட்டும் திகைக்கவைக்கும் வகையில் 400 மில்லியன் COVID-19 தொற்றுக்கள் உள்ளன.

டிச. 23, 2021 அன்று இலண்டனில், ஐரோப்பாவின் பரபரப்பான ஷாப்பிங் தெருவான ஆக்ஸ்போர்ட் தெருவில் வாங்குபவர்கள் நடந்து செல்கின்றனர். (AP Photo/Frank Augstein, File)

ஒரு பொறுப்பற்ற ஆளும் வர்க்கத்தால் உந்தப்படும் ஒரு பேரழிவு தரும் சுகாதார அவசரகாலநிலையை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது. அது, நோய்தொற்றைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் இலாபத்தின் மீதான சகிக்க முடியாத தடையாக காண்கிறது. ஏற்கெனவே, WHO வின் ஐரோப்பா பிராந்தியத்தில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட்-19 நோய்தொற்றால் இறந்துள்ளனர், மேலும் மில்லியன் கணக்கானவர்கள் நெடுங்கோவிட் (Long COVID) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும்கூட, வெகுஜன மரணத்தின் புதிய அலையுடனும் நோய்த்தொற்றின் முன்னோடியில்லாத எழுச்சியிலிருந்து பாயும் பலவீனப்படுத்தும் நோய் தொற்றுடனும் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரு பேரழிவைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

இன்றுவரை, ஐரோப்பாவில் சுமார் 100 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோய்த்தொற்றுக்கள் உள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில், முழு காலத்தின் நோய்தொற்றுக்களையும் விட நான்கு மடங்கு அதிகமான நோய்த்தொற்றுக்கள் இருக்கும் என இப்போது WHO எச்சரித்திருக்கிறது.

இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் பரந்தவை, அவை இதுவரையான புரிதலை கிட்டத்தட்ட மீறுகின்றன. அதற்குப் பயன்படுத்தப்படும் வரையறையைப் பொறுத்து, கோவிட்-19 நோயாளிகளில் 10 முதல் 50 சதவீதம் பேர் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் பொருள் ஐரோப்பாவில் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறு மில்லியன் கணக்கான மக்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை உழைப்பு தேவைப்படும் பலவீனமான நீண்டகால நோயால் பாதிக்கப்படுவார்கள். நோய் காரணமாக ஏராளமான மக்கள் வேலை செய்ய முடியாத நிலையிலும், பரவலான கடுமையான நோய் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் நிலையிலும் இது சமுதாயத்தை நிலைகுலையச் செய்யும்

நோய்த்தொற்றுகள், கடுமையான நோய் மற்றும் இறப்புகளுக்கு இடையில் பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோனின் வார்த்தைகளில் தடுப்பூசிகள் 'தொடர்பை உடைத்துவிட்டன' என்று ஐரோப்பிய அரசாங்கங்கள் பொய் கூறுகின்றன.

உண்மையில், இவ்வளவு பெரிய ஓமிக்ரோன் அலையானது, ஏற்கனவே உடைந்து போகும் அளவிற்கு நீட்டிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை சதுப்பு நிலமாக்கிவிடும். இப்போது, மிக சமீபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருவதற்கு முன்பே, 3.4 மில்லியன் செயலில் உள்ள நோயாளிகளில் 23,371 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பிரான்சில் 3,969 பேர் உயிர் பாதுகாப்புக் கருவியின் ஆதரவில் உள்ளனர், இது ஒப்பீட்டளவில் 74.9 சதவீதம் அதிக தடுப்பூசி விகிதம் கொண்ட நாடு. இதேபோன்ற விகிதாசாரங்கள் WHO இன் கணிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டால், ஐரோப்பாவில் அடுத்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 3 மில்லியன் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் 500,000 பேர் உயிர் பாதுகாப்புக் கருவியின் ஆதரவைப் பெறவேண்டியவர்களாக இருப்பர்.

கோவிட்-19 அல்லது பிற நோயாளிகள் அதிக வேலைப்பழு உள்ள பகுதிகளில் கவனிப்பைப் பெற முடியாததால் இறப்புகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், இது ஐரோப்பிய மருத்துவமனைகளின் திறனைத் தாண்டியதாக இருக்கும். இருப்பினும், நெருக்கடி உண்மையில் இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதையே அனைத்தும் சுட்டிக்காட்டுகிறது.

போலந்து மருத்துவ ஆலோசகர் Andrzej Horban, Rzeczpospolita செய்தித்தாளில் 'பாதிக்கப்பட்டவர்களின் சுனாமி' என்று எச்சரித்தார். தடுப்பூசி போடப்படாத 12 மில்லியன் போலந்துக்காரர்கள் 'அனைவரும் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள்' என அவர் கூறினார். மேலும் அவர்களில் 5 முதல் 10 சதவிகிதத்தினர் மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படுவதால், போலந்து 'சுமார் 1 மில்லியன் மக்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்'. அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வரவில்லையென்றாலும், 'சில மாதங்களில்,' இது நம்பமுடியாத வகையில் மருத்துவமனைகளுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும். “எங்களுக்கு 50-60,000 கோவிட் படுக்கைகள் தேவைப்படும். மேலும் டாக்டர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களை எங்கு கண்டுபிடிப்போம் என்பது பற்றிக் கூட நான் இன்னமும் பேசவில்லை.

இதேபோல், WHO இன் க்ளூக் எச்சரித்தார்: “இந்த மாறுபாடு கிழக்கு நோக்கி நகரும்போது, தடுப்பூசி எடுத்த அளவு குறைவாக இருக்கும் நாடுகளில், அதன் முழு தாக்கத்தையும் நாம் இன்னும் காணவில்லை, மேலும் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு மிகவும் கடுமையான நோயைக் காண்போம் என்பதில் நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.” சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்கம் குறித்தும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார், 'அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான கூடுதல் ஆதரவை கொடுக்க' அழைப்பு விடுத்தார்.

WHO வின் ஐரோப்பிய மூத்த அவசரநிலை அதிகாரி டாக்டர் காத்தரின் சிமோல்வூட், இப்போது நடந்து கொண்டிருக்கும் சுகாதார நடவடிக்கைகளை தளர்த்துவதற்கு எதிராக எச்சரித்தார். “SARS-CoV-2 க்கு எதிராக [தடுப்பூசி எடுக்கப்படாத] மக்கள் அதிகமாக இருக்கும் ஒரு சூழ்நிலையில் ஓமிக்ரோன் எவ்வாறு வெளியேறும் என்பதை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. அங்குதான் நாம் எமது துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் உத்தியை மாற்றுவது மற்றும் கோவிட் பரவுவதை அனுமதிப்பது பற்றி எந்த முடிவுக்கும் செல்ல வேண்டாம்” என அப்பெண்மணி கூறினார்.

WHO இன் பயங்கரமான கணிப்புகள் நடந்துவிடக் கூடாது. நோய் பரவுவதைத் தடுக்க கடுமையான பூட்டுதல்கள், அதைத் தொடர்ந்து தடுப்பூசிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், வைரஸ் பரவலை ஒழிக்கவும் முடியும். எவ்வாறாயினும், அத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்களின் முற்றிலும் பொறுப்பற்ற கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது.

மில்லியன் கணக்கானவர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை விட முதலாளித்துவ இலாப நலன்களை வெளிப்படையாக முன்வைக்கும் ஆளும் வர்க்கம் அதன் நோய்தொற்றுக் கொள்கையை இரட்டிப்பாக்குவதன் மூலம் ஓமிக்ரோன் வெடித்துப் பரவுவதற்கு விடையிறுக்கிறது.

ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது வெளிப்படும் நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலங்களைக் குறைத்து வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை, பிரெஞ்சு அரசாங்கம் COVID-19 நோயாளிகள் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் நம்பமுடியாத ஆன்டிஜென் சோதனைகளில் அவர்களின் வைரஸ் சுமை கண்டறியப்படாமல் இருந்தால் ஐந்து நாட்களுக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பலாம் என்றும் அறிவித்தது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் முன்பு இதே போன்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

டென்மார்க்கில் நோய்த்தொற்றுக்கு உள்ளான பின்னர் குறைந்தபட்ச தனிமைப்படுத்தப்படும் நாட்களைக் கூட விதிக்கவில்லை. அறிகுறிகள் இல்லாத 48 மணித்தியாலங்களுக்குப் பின்னர், மக்கள் வேலைக்குத் திரும்பலாம். இந்த விஞ்ஞான விரோத கொள்கையின் விளைவாக, ஏராளமான நோய்வாய்ப்பட்ட, நோய்தொற்றாளர்கள் தங்கள் சக ஊழியர்களுக்கு தொற்று ஏற்படுத்துவதற்கு திரும்புகின்றனர்.

வெள்ளிக்கிழமை, ஜேர்மனியில் தனிமைப்படுத்தப்படும் காலத்தை வெறும் 5 தொடக்கம் 7 நாட்களுக்கு (முன்பு 14) குறைப்பதாக ஜேர்மன் அரசாங்கம் அறிவித்தது. பேர்லின் நகரசபை தலைவர் ஃபிரான்சிஸ்கா கிஃபை (SPD) கூறினார்: “பள்ளிகளைத் திறந்து வைக்க நாங்கள் உறுதியளித்துள்ளோம். … மக்கள் தமது வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல குழந்தை பராமரிப்பு தேவை, அதனால்தான் நாங்கள் பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பது முக்கியம்.

வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற கடைசிப் பாசாங்கையும் கூட கைவிடுவதன் மூலம் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒமிக்ரோனுக்கு பதிலளிக்கின்றன. திங்களன்று, பிரெஞ்சு பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் பள்ளி சுகாதார நெறிமுறைகளை எளிதாக்குவதை அறிவித்தார்: ஒரு வகுப்பில் ஒரு நேர்மறையான தொற்று பதிவாகினால், பெற்றோர்கள் இனி குழந்தைகளை நடுப்பகுதியில் அழைத்துச் செல்ல வேண்டியதில்லை, ஆனால் இறுதியில் மட்டுமே. வாழ்க்கையின் விலை என்னவாக இருந்தாலும், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தி திறந்திருக்கும் என காஸ்டெக்ஸ் அப்பட்டமாக கூறினார். 'நாங்கள் பள்ளிகளையோ நாட்டையோ மூடப்போவதில்லை' என்றார்.

ஸ்பெயின் அரசாங்கம், கோவிட்-19 ஐ காய்ச்சல் போல சிகிச்சையளிப்பதற்கு மாற்ற, அறிக்கையிடல் மற்றும் சுய-தனிமைப்படுத்தும் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. 'இது ஒரு அவசியமான விவாதம். நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பதிலை விஞ்ஞானம் நமக்கு அளித்துள்ளது,” என பிரதமர் பெட்ரோ சான்செஸ் செவ்வாயன்று கடேனா செர் வானொலியில் கூறினார். 'கோவிட்-19 இன் பரிணாம வளர்ச்சியை தொற்றுநோயிலிருந்து உள்ளூர் நோயாக நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்' என்றார்.

இத்தகைய அறிக்கைகள் ஆளும் வர்க்கத்தில் நிலவும் ஒரு நச்சு அரசியல் சூழலுக்கு சாட்சியமளிக்கின்றன, அது மில்லியன் கணக்கானவர்களின் மரணம் பற்றி அலட்சியமாக உள்ளது. வைரஸின் பரவலை அகற்றுவதற்கும், உலகப் பொருளாதாரத்தின் வளங்களை பொறுப்பற்ற நிதியப் பிரபுத்துவத்தின் கைகளில் இருந்து கட்டுப்படுத்துவதற்கும் ஒரு விஞ்ஞானக் கொள்கையை திணிப்பதற்கான ஒரு இயக்கத்தில் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பை அணிதிரட்டுவது அவசரம்.

Loading