முன்னோக்கு

பைடென் பதவிக்கு வந்து ஓராண்டு: பாரிய மரணமும் அரசியல் நெருக்கடியும் நிறைந்த ஒரு அரசாங்கம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி ஜோ பைடென் பதவிக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதைக் குறித்து புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாடு, வெள்ளை மாளிகை, பெருநிறுவன ஊடகங்கள், மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தையும் அமெரிக்க மக்களின் உண்மையான கவலைகளிலிருந்து பிரிக்கும் சமூகப் பிளவின் இரண்டு மணிநேர ஆர்ப்பாட்டமாக இருந்தது.

ஆரம்பத்தில், கேள்விகள் கேட்கப்படுவதற்கு முன்னதாக பைடென் பல நிமிடங்கள் பேசினார். ஓமிக்ரோன் மாறுபாட்டால் தற்போதைய நோய்தொற்று எழுச்சி தொடங்கியதிலிருந்து மோசமான நாட்களில் ஒன்றாக அன்று கூட அதிர்ச்சியூட்டும் வகையில் கோவிட்-19 நோயால் 2,374 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துவிட்டது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இவர்களுக்காக ஒரு நிமிடம் மௌனமாக இருக்க அழைப்புவிடுத்து கூட்டத்தை அவர் ஆரம்பித்திருக்கலாம், ஆனால் அவர் தனது ஆட்சியின் தோல்விக்கான தெளிவான ஆதாரங்களின் மீது கவனத்தை திருப்ப விரும்பவில்லை.

ஏப்ரல் 28, 2021 அன்று, வாஷிங்டனில் அமெரிக்க கேபிடோலில் உள்ள கூட்ட அரங்கில், காங்கிரஸின் கூட்டு அமர்வில் ஜனாதிபதி ஜோ பைடென் உரையாற்றுகையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூம், கலிஃபோர்னியாவின் சபாநாயகர் நான்சி பெலோசியும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். (Melina Mara/The Washington Post via AP)

எந்தளவிற்கு அவர்களிடையே அரசியல் வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியும் மற்றும் அவரது குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர்களும் தற்போதைய பாரியளவிலான மரணம் குறித்து ஒரேமாதிரி அலட்சியத்தையே பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள், முன்நிகழ்ந்திராத அளவிற்கு தங்கள் இலாபத்தையும் செல்வத்தையும் குவிப்பதில் தலையிட அனுமதிக்காத, மனித வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாத அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாக்கின்றனர். அதுதான் ஒரு பயங்கரமான தொற்றுநோய்க்கு மத்தியில் பணியிடங்களையும் பள்ளிகளையும் எப்போதும் திறந்து வைத்திருக்கும் கொள்கையை செயல்படுத்த வைக்கிறது.

பைடென் தனது நிர்வாகத்தின் முதல் ஆண்டில், சாதனை அளவில் புதிய வேலை உருவாக்கங்கள், உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் குறைக்கப்பட்டது, மற்றும் பாரிய தடுப்பூசி பிரச்சாரங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்ற வகையில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள்” எட்டப்பட்டதாக கூறிக் கொண்டார். தங்கள் தாத்தா, பாட்டி, பெற்றோர், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் அதிகரித்தளவில் குழந்தைகளையும் இழக்க வைத்ததான 100 ஆண்டுகளில் தற்போது உருவாகியுள்ள மிகப் பெரிய பொது சுகாதார நெருக்கடியின் விளைவுகளை எதிர்கொண்டு பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் கவலையடைந்துள்ள நிலைமைகளின் கீழ், இந்த விளக்கக்காட்சி சுய-மாயையின் சக்திவாய்ந்த கூறாக இருந்தது.

ஜனவரி 20, 2021 அன்று, தான் பதவியேற்றபோது உயிருடன் இருந்த 475,000 அமெரிக்கர்களைப் பற்றி குறிப்பிடுவதற்கு ஜனாதிபதிக்கு கண்ணியம் இல்லை, ஏனென்றால் அவர்கள் இப்போது கோவிட்-19 நோய்க்கு பலியாகிவிட்டனர். மேலும், தொற்றுநோய்களை அதிர்ச்சியூட்டும் அளவிற்கு அதிகரிக்கச் செய்து, மருத்துவமனை அமைப்பை நோயாளிகளால் மூழ்கடிக்கத் தொடங்கி, அதிலும் விரைவில் பிணவறைகளையும் மூழ்கடிக்கவுள்ள ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலின் விளைவாக இந்த குளிர்காலத்தில் இன்னும் நூறாயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

செய்தியாளர் கூட்டத்தின்போது வெகுஜன மரணம் குறித்து எவரும் கேள்வி எழுப்பவில்லை. அக்டோபர் 22, 2020 அன்று நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சார விவாதத்தில் டொனால்ட் ட்ரம்பை பைடென் விமர்சித்ததை அவர்கள் நினைவு கூர்ந்திருக்கலாம். கொரோனா வைரஸால் அதுவரை 220,000 அமெரிக்கர்கள் இறந்திருந்தது பற்றி அப்போது அவர் சுட்டிக்காட்டி, “ஏராளமான மரணங்களுக்கு பொறுப்பாளியான எவரும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக நீடிக்கக்கூடாது” என்று அறிவித்தார். ஆனால், இன்றைய இறப்பு எண்ணிக்கை அதைவிட நான்கு மடங்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அதே விவாதத்தின்போது, பைடென் தன்னை ஆசிரியர்களின் பாதுகாவலராகக் காட்டிக்கொண்டு, பள்ளிகள் குறித்த ட்ரம்பின் கொள்கையான, “ஆசிரியர்களான நீங்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறீர்கள், உங்களில் பலர் இறக்கப் போவதில்லை, அதனால் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார். இன்று, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இறந்துவிட்ட பின்னரும், மற்றும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் மிகவும் தொற்றக்கூடிய மற்றும் ஆபத்தான புதிய கோவிட்-19 மாறுபாடு உருவாகியுள்ள நிலையிலும், பைடெனின் கொள்கை ட்ரம்பின் கொள்கையாக மாறிவிட்டுள்ளது. மேலும், “நாம் மீண்டும் பூட்டுதலுக்கு திரும்பப் போவதில்லை,” “பள்ளிகளை மூடுவதற்கும் நாம் திரும்பப் போவதில்லை” என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 இன் மிகப்பெரிய எழுச்சிக்கு மத்தியில், நேரடி வகுப்புக்கள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு எதிராக ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வருவது பற்றி கேட்டபோது, 95 சதவீத பள்ளிகள் நேரடி கற்றலுக்காக திறக்கப்பட்டுள்ளன என்று கூறி, அத்தகைய எதிர்ப்புகள் அவ்வளவு குறிப்பிடத்தக்கது அல்ல என்று பைடென் கேலி செய்தார். உழைக்கும் மக்களின் எதிர்ப்பை அவர் இவ்வாறு புறக்கணித்தமை, இரண்டு மணிநேர நிகழ்வில் அவரது உண்மையான உணர்வுகளை எடுத்துக் காட்டும் சில காட்சிகளில் ஒன்றாக இருந்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனை ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளார் என்பது போன்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக இன்னும் போர்வெறிமிக்க அறிக்கைகளை விடுக்கவும், மேலும் அவர் அவ்வாறு செய்தால் உடனடியாகவும் மிகப்பெரிய அளவிலும் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்பதற்கு மிகுந்த உத்தரவாதங்களை வழங்கவும் ஊடக பிரதிநிதிகளால் பைடெனுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்ற நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக பெருகிவரும் அமெரிக்க பிரச்சாரம் தான் செய்தி மாநாட்டின் முதன்மை மையமாக இருந்தது.

புட்டின் படையெடுப்பார் என்று தான் நினைத்ததாக பைடென் கூறினார், ஆனால் இது இன்னும் நிச்சயமற்றது, மாறாக நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உண்மையான போருக்கான ஆபத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டபோது, அவரிடம் கேள்வி கேட்பவர்கள் அதிருப்தி அடைந்ததாகத் தோன்றியது. முழுமையான பொருளாதாரப் போராக, மற்றும் “சிறிய ஊடுருவலாக” அல்லாத உக்ரேன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பை பைடென் வேறுபடுத்த முயன்றபோது எதிர்மறையான எதிர்வினை தீவிரமடைந்தது.

உக்ரேனுக்கு எதிராக புட்டின் படைகளைப் பயன்படுத்த பைடென் “பச்சைக் கொடி” காட்டியதாக கூறப்படும் பைடென் மீதான விமர்சனம், செய்தியாளர் மாநாட்டின் சில நிமிடங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியாகின, அதேவேளை வெள்ளை மாளிகை உதவியாளர்கள், உக்ரேன் மீதான எந்தவொரு ரஷ்ய தாக்குதலுக்கும் அமெரிக்காவின் ஆக்கிரோஷமான பதிலடியை அது எதிர்கொள்ளும் என்று ஏற்கனவே தமது “தெளிவுபடுத்தல்களை” வெளியிட்டு வந்தனர்.

செய்தி மாநாட்டின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், குடியரசுக் கட்சியினர் எந்தளவிற்கு தனது நிர்வாகத்தை குறைமதிப்பிற்குட்படுத்தவும் எதிர்க்கவும் முயல்வார்கள் என்பது பற்றி தான் முன்கணிக்கவில்லை என்பதாக பைடென் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதாவது, “நான் குடியரசுக் கட்சியை முற்றிலும் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்,” என்று அவர் ஒப்புக்கொண்டார்.

“குறைத்து மதிப்பிட” என்ன இருக்கிறது? குடியரசுக் கட்சி தேர்தலை கவிழ்க்க முயன்றது. மக்கள் வாக்குகள் மற்றும் தேர்தல் கல்லூரி ஆகியவற்றில் பைடெனின் தீர்க்கமான வெற்றி இருந்தபோதிலும், தேர்தல் முடிவு சந்தேகத்திற்குரியதாக இருந்தது என பல வாரங்கள் நீடித்த, முழு காங்கிரஸ் தலைமையும் ட்ரம்பின் பாசாங்குடன் உடன்பட்டது.

பணயக்கைதிகளை பிடிப்பது மற்றும் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் இருக்க அனுமதிக்க காங்கிரஸை கட்டாயப்படுத்துவது என்ற இலக்கில், பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு பங்கு குடியரசுக் கட்சியினர் பைடெனின் வெற்றிக்கு சான்றளிப்பதற்கு எதிராக வாக்களித்தனர், பின்னர் பாசிச ட்ரம்பின் ஆதரவாளர்களால் காங்கிரஸ் மீதான தாக்குதல் தோல்வியடைந்தது. இப்போது, குடியரசுக் கட்சியில் ட்ரம்ப் ஆதிக்கம் செலுத்துகிறார், அவர் பைடெனை ஒரு முறைகேடான ஜனாதிபதி என்று கண்டனம் செய்கிறார். அவருடைய கொள்கைகளை எதிர்க்கிறார்கள் என பைடென் எப்படி ஆச்சரியப்பட முடியும்?

ட்ரம்பின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு குடியரசுக் கட்சி எந்த அளவிற்கு அடிபணிந்துள்ளது என்பது பற்றியும், குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களும் செனட்டர்களும் முதலாளித்துவ அரசியலில் வழமையான இருகட்சி போட்டியில் ஈடுபட விரும்பாதது பற்றியும், பைடென் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆனால், முன்னாள் ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தின் கீழ் குடியரசுக் கட்சி ஒரு பாசிச இயக்கமாக மாற்றப்படுவது ஜனநாயகத்திற்கு முன்வைக்கப்படும் ஆபத்து என்பது பற்றி அவர் அமெரிக்க மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.

அதற்கு மாறாக, செய்தியாளர் சந்திப்பு முழுவதும், அவரை தூக்கியெறிய முயன்ற குடியரசுக் கட்சியினரிடம் அவர் முறையிட முயன்றார். அவர் செனட் குடியரசுக் கட்சியினரைப் புகழ்ந்து பேசினார், மிட் ரோம்னியைப் புகழ்ந்தார், சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானலை தனது நண்பராக வர்ணித்தார், போர்வெறி மிக்கவரானாலும் ஜோன் மெக்கெய்னின் பெயரை ஒரு துறவியைப் போல அழைத்தார். பெயர் குறிப்பிட அவர் மறுத்த ஒரே செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் மட்டும் தான். ஃபாக்ஸ் நியூசின் ஆத்திரமூட்டும் கேள்விக்கு பதிலளிக்கையில், “நாட்டை இவ்வளவு தூரம் இடது பக்கம் இழுக்க” அவர் முயற்சித்ததை அவர் மறுத்தார். மேலும் அவர், “நான் ஒரு முக்கிய ஜனநாயகவாதி… நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல, நான் ஒரு முதலாளித்துவவாதி” என்று தொடர்ந்து கூறினார்.

தொழில்நுட்பத்தில் உள்ள புரட்சிகர முன்னேற்றங்களின் தாக்கத்தின் கீழான சமூகத்தின் விரைவான மாற்றத்தை பைடென் சுட்டிக்காட்டியபோது, ஒரு கட்டத்தில் அரசியல் நெருக்கடியின் கூர்மை வெடித்தது. “இன்னும் 10 ஆண்டுகளில் நாம் வேறொரு உலகில் வாழ்வோம்,” என்று கூறினார், அதாவது முந்தைய அரை நூற்றாண்டை விட அடுத்த தசாப்தத்தில் அதிக மாற்றம் ஏற்படும் என்று சேர்த்துக் கூறினார். “இங்கும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நிறுவனங்களை நாம் பராமரிக்க முடியுமா?” என்று அவர் கேட்டார். அதற்கு அவரது பதில்: “அது கடினமாக இருக்கும்” என்பதே.

உலகம் தீவிர மாற்றத்தின் விளிம்பில் உள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி ஒப்புக்கொண்டார். இந்த மாற்றம் அடுத்த 10 ஆண்டுகளில் வெடிக்கும் என அவர் கணித்துள்ளார். ஜனநாயகம் வாழுமா? என்று கேட்டு பைடென் தலையை சொறிந்தார். “யாருக்குத் தெரியும்?” இது அடிப்படையான பதட்டம், ஏன் பயத்தைக் குறிக்கும் குறிப்பிடத்தக்க பேச்சுவழக்காகும். பைடென் சந்தேகத்திற்கு இடமின்றி பாசிச அச்சுறுத்தலுக்கு பயப்படுகிறார். ஆனால், அதன் பெயரை அவரால் சொல்ல முடியாது. அது ஏனென்றால், அவருக்கும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் வகுப்பினருக்கும் இந்த பயம் அதிகம் உள்ளது: அடிமட்டத்தில் இருந்து, அதாவது தொழிலாள வர்க்கத்தின் பெருந்திரளான மக்களிடமிருந்து எழும் ஒரு இயக்கம், வலது பக்கம் அல்லாமல், இடது பக்கமாக நகர்கின்றது.

பிரச்சினை என்னவென்றால், மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாட்டின் தலைவர் “ஜனநாயகம்” என்றழைப்பது உயிரோட்டமாக இருக்குமா என்பதுதான். அவர் உண்மையில், எந்த உண்மையான ஜனநாயகத்திற்கும் முற்றிலும் பொருந்தாத பொருளாதார சமத்துவமின்மை மட்டத்தை உருவாக்கியுள்ள இலாப அமைப்பான முதலாளித்துவத்தை பற்றியே குறிப்பிடுகிறார். மாறாக, அனைத்து ஜனநாயக உரிமைகளையும் அபகரிப்பதையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பணக்காரர்களின் அப்பட்டமான சர்வாதிகாரத்திற்கு கீழ்ப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அது உலகம் முழுவதும் பாசிச இயக்கங்களை உருவாக்கி வருகிறது.

இது சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் பற்றிய பிரச்சினையாகும். தொழிலாள வர்க்கம், ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் உட்பட, முதலாளித்துவ ஆட்சியை ஆதரிக்கும் அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தன்னை முறித்துக் கொண்டு, சர்வதேச அளவில் அதன் படைகளை அணிதிரட்டி, சோசலிசத்திற்கான ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை அது கட்டமைக்க வேண்டும். இதுவே, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் மேற்கொள்ளப்பட்டு வழிநடத்தப்படும் முக்கிய பணியாகும்.

Loading