அமெரிக்காவிற்கு முரணாக, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடனடி ரஷ்ய தாக்குதல் இல்லை என்று மறுத்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பல வாரங்களாக, வாஷிங்டனும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ரஷ்யாவுடன் உலகளாவிய போர் நெருக்கடியைத் தூண்டிவிட்டு ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரேனைப் பாதுகாக்க நேட்டோ தயாராக வேண்டும் என்று கூறினர். நேற்று, நேட்டோவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கண்டனம் தெரிவித்த உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கி, உடனடியான ரஷ்ய படையெடுப்பு உள்ளது என்பதை மறுத்து, நேட்டோவின் போர் வார்த்தையாடல்களை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கி (en.kremlin.ru)

நேற்றுக் காலை, மூத்த உக்ரேனிய அதிகாரிகள் ஜெலென்ஸ்கி மற்றும் பைடென் இடையேயான தொலைபேசி உரையாடல் 'நன்றாக நடக்கவில்லை' என்று CNN இடம் கூறினார். CNN இன் கருத்துப்படி, 'ஒரு ரஷ்ய தாக்குதல் உடனடியாக நடக்கலாம், படையெடுப்பு இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது' என்று பைடென் கூறினார். மறுபுறம் ஜெலென்ஸ்கி, 'ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல் 'ஆபத்தானது ஆனால் தெளிவற்றது' என்று தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, மேலும் ஒரு தாக்குதல் நடக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை,' என்றும் 'தகவல்களை அமைதிப்படுத்துமாறு பைடெனை வலியுறுத்தியதாக” CNN செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழு (NSC) முதலில் இந்த தகவலை மறுத்தது. தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன் (Emily Horne) கூறுகையில், 'அநாமதேய ஆதாரங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன. பெப்ரவரியில் ரஷ்யர்கள் உக்ரேன் மீது படையெடுப்பதற்கான ஒரு தெளிவானன சாத்தியம் இருப்பதாக ஜனாதிபதி பைடென் கூறினார். இதை அவர் பகிரங்கமாக கூறி, பல மாதங்களாக எச்சரித்து வருகிறோம். அதை விட அதிகமாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்கும் செய்திகள் முற்றிலும் தவறானவை” என்றார்.

ஜெலென்ஸ்கி பின்னர் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். இருப்பினும், பைடெனிடம் கூறியதை ஹார்ன் (Horne) மறுத்த அறிக்கைகளை பகிரங்கமாக மீண்டும் வலியுறுத்தினார். உக்ரேன் மீது ரஷ்யாவுடனான உடனடி நேட்டோ போரைப் பற்றி பீதியைத் தூண்டும் பேச்சுக்களை நிறுத்துமாறு நேட்டோ நாட்டுத் தலைவர்களை ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். அவர் மேலும் “நாடுகளின் தலைவர்களுடன் நான் பேச ஆரம்பித்தேன். பொருளாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினேன். அவர்கள் ‘நாளை போர்’ என்கிறார்கள். இதன் அர்த்தம் பீதி” என்று கூறினார்.

'தாக்குதல் சாத்தியம் உள்ளதுடன், அது மறைந்துவிடவில்லை மற்றும் 2021 ஆம் ஆண்டை விட குறைவான தீவிரமானதாகவும் இல்லை,' என்று ஜெலென்ஸ்கி கூறினார், ஆனால் 'கடந்த ஆண்டை விட பெரிய மோதலை நாங்கள் காணவில்லை' என்றும் மேலும் அவர் இந்த ஆபத்தை கருத்தில் எடுத்துக்கொள்கிறார். 'உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் இதனுடன் வாழவும், இதன் மூலம் அபிவிருத்தி செய்யவும் நாங்கள் கற்றுக்கொண்டோம்,' என்று அவர் கூறினார். 'நாங்கள் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள கற்றுக்கொண்டோம், நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும். அதுவே நம் வாழ்க்கையை வழிநடத்த வேண்டும்.' உக்ரேன் மீதான ரஷ்யாவின் பாரிய இராணுவ மேலாண்மையின் அடிப்படையில், இந்த அறிக்கை ஜெலென்ஸ்கி ஒரு முற்றுமுழுதான ரஷ்ய படையெடுப்பு பற்றி பயப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பேச்சுவார்த்தைக்கான புட்டினின் அழைப்பை ஜெலென்ஸ்கி ஏற்றுக்கொண்டார்: “நான் எந்த வடிவத்திலான சந்திப்பிற்கும் பயப்படவில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தையானாலும் சரி, எனக்கு கவலையில்லை. நான் தயாராக இருக்கிறேன். … நான் தீவிரமான கலந்துரையாடலை ஆதரிக்கிறேன்' என்றார்.

இதேபோல், உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவும் ரஷ்ய படையெடுப்பின் அபாயத்தை நிராகரித்தார்: “உக்ரேனிய எல்லையில் குவிக்கப்பட்ட ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கை... முழு உக்ரேனிய எல்லையிலும் முழு அளவிலான தாக்குதலுக்கு போதுமானதாக இல்லை. அத்தகைய பெரிய முழு அளவிலான தாக்குதலை நடத்துவதற்கு சில முக்கியமான இராணுவ செயற்பாடுகளும் மற்றும் அமைப்புமுறைகளும் அவர்களிடம் இல்லை. 'உடனடியான படையெடுப்பு என்று ஒரு நாளைக்கு 100 முறை நாம் கூறலாம். ஆனால் இது களநிலைமையை மாற்றாது' என்று முடித்தார்.

நேட்டோ போர் பிரச்சாரம் ஒரு தொகுப்பு பொய்களாக அம்பலமானது. பல வாரங்களாக, வாஷிங்டன் தலைமையில், நேட்டோ சக்திகள் போர்ப் பயிற்சிகளை நடத்தி, கிழக்கு ஐரோப்பாவில் புதிய அணிதிரட்டல்களை அறிவித்து வருகின்றன. உயர்மட்ட அமெரிக்க-உக்ரேனிய பேச்சுக்களில் ஈடுபட்ட MSNBC இன் தளபதி அலெக்சாண்டர் வின்ட்மான் போன்ற எண்ணற்ற பண்டிதர்கள், ரஷ்ய ஆக்கிரமிப்பு என்பது உக்ரேனைப் பாதுகாப்பதற்கான நேட்டோ போரை கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாக்கிவிட்டது என்று வாதிட்டனர்.

நேட்டோ 'கிட்டத்தட்ட ஒரு நடவடிக்கையில் அகப்பட்டுள்ளது' என்று கூறிய விண்ட்மான், ரஷ்யாவை எதிர்த்துப் போராட அமெரிக்கா தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினார்: 'அமெரிக்க மக்களுக்கு இது ஏன் முக்கியமானது? இது முக்கியமானது ஏனென்றால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நாம் சந்திக்கவுள்ளோம். வான் சக்தி, நீண்ட தூர பீரங்கிகள், கப்பல் ஏவுகணைகள் உடன் 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நிலப்பரப்பில் காணப்படாத விஷயங்கள் நிகழவுள்ளன. இது ஒரு சுத்தமான அல்லது நோய் கிருமிகள்ற்ற சூழலாக இருக்கப் போவதில்லை” என்றார்.

இப்போது, உக்ரேனில் உள்ள அமெரிக்க ஆதரவுடைய ஆட்சியே, நேட்டோ போருக்கான அழைப்புகள், ரஷ்ய படையெடுப்பிற்கான தயாரிப்புகளையோ அல்லது உதவிக்கான உக்ரேனிய கோரிக்கைகளையோ பிரதிபலிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. மாறாக, அவை பைடென் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் எதிரொலிக்கப்பட்ட ஒரு ஆத்திரமூட்டல் ஆகும். ஆக்கிரமிப்பாளர் ரஷ்யா அல்ல, ஆனால் நேட்டோ ஆகும்.

யூரேசியாவில் அதன் புவிசார் அரசியல் வேட்கைக்கு அப்பால், 2 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 இறப்புகளை சந்தித்த நேட்டோ சக்திகள் தொற்றுநோயால் ஏற்பட்ட ஆழமான நெருக்கடிக்கு இவ்வாறு பதிலளிக்கின்றன. ஓமிக்ரோன் மாறுபாட்டின் பெரும் புதிய அலைகளுக்கு மத்தியில், நேட்டோ சக்திகள் வைரஸின் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் எஞ்சியுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை அகற்றுவதற்கு நகர்கின்றன. இந்தக் கொள்கை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பெருகிய எதிர்ப்புகளைத் தூண்டும் நிலையில், நேட்டோ சக்திகள் வர்க்கப் பதட்டங்களை வெளிப்புறமாக ரஷ்யாவுடனான போருக்கான முற்றிலும் பொறுப்பற்ற பிரச்சாரமாக திசை திருப்ப முயற்சிக்கின்றன.

நேட்டோ பொய்கள் அம்பலமானது, அணுசக்தி போர் ஆபத்துக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை மிகவும் அவசரமானதாக்குகிறது.

2014 இல் ரஷ்ய சார்பு உக்ரேனிய அரசாங்கத்தை கவிழ்த்து தற்போதைய ஆட்சியை நிறுவிய கியேவில் தீவிர வலதுசாரி சதிக்கு ஆதரவளித்த வாஷிங்டன், ஜெலென்ஸ்கியின் காரணமாக ரஷ்யாவிற்கு எதிரான தனது திட்டங்களை கைவிடாது. உக்ரேனிலும் சர்வதேச அளவிலும் போருக்கான மக்கள் எதிர்ப்பு ஒரு தடையாக மாறும்வரை, வாஷிங்டன் அதன் தீவிர வலதுசாரி போர்கள் மற்றும் சதித்திட்டங்களை தீவிரப்படுத்தும்.

அதே நேரத்தில், கிரெம்ளின் இராணுவச் சுற்றி வளைப்பு மற்றும் நேட்டோவின் நிதிய கழுத்தை நெரிப்பு அச்சத்தினால் இராணுவ நடவடிக்கையை பரிசீலித்து வருவதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. தைவான் அல்லது பிற மோதல் பிராந்தியங்கள் மீது வாஷிங்டன் இதேபோன்ற அழுத்தத்தை கொண்டு வரக்கூடும் என்று அஞ்சும் சீனாவிடமிருந்து அவர்கள் வழக்கத்திற்கு மாறாக பகிரங்க ஆதரவையும் பெறுகின்றனர்.

'அமெரிக்கா, சீனா அல்லது ரஷ்யாவை தூண்டினால், மற்றையது அலட்சியமாக இருக்காது' என்ற தலைப்பில் அதன் முன்னாள் ஆசிரியர் ஹூ ஜியின் எழுதிய கட்டுரையில், சீன இராணுவத்திற்கு நெருக்கமானதாக அறியப்படும் Global Times என்ற பத்திரிகை வாஷிங்டனுக்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

“அமெரிக்கா சீனாவையும் ரஷ்யாவையும் ஒரே நேரத்தில் மூலோபாயமாக அழுத்துகிறது. … இது சீனாவையும் ரஷ்யாவையும் இணைந்து மீண்டும் தாக்குவதற்குத் தள்ளுகிறது,” என்று ஹூ எழுதினார். மேலும், “ஆனால் அமெரிக்க ஒடுக்குமுறையை எதிர்க்கும் போது, ரஷ்யா தனியாக இல்லை. பெரும்பாலான சீன மக்கள் அதை ஆதரிப்பார்கள் மற்றும் சீன அரசாங்கம் இந்த விடயத்தில் ரஷ்யாவிற்கு உதவுவதைப் பார்க்க தயாராக உள்ளனர். ஏனெனில் ரஷ்யாவை அமெரிக்கா நசுக்கினால், அது சீனாவுக்கு எந்த நன்மையையும் தராது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்” எனவும் குறிப்பிட்டார்.

உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் மால்டோவா போன்ற அண்டை நாடுகளை நேட்டோவில் சேரவும் நேட்டோ இராணுவ தளங்களுக்கு இடமளிக்கவும் ரஷ்யா அனுமதிக்க வேண்டும் என்று கோரும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கென் இந்த வாரம் வழங்கிய இறுதி எச்சரிக்கைக்கு கிரெம்ளின் பதிலடி கொடுக்கிறது.

ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் நேற்று பேசியபோது மாஸ்கோ ஒரு இராணுவ பிரதிபலிப்பை பரிசீலித்து வருகிறது என்பதை தெளிவுபடுத்தினார். அவர் “தேர்வை ரஷ்யாவிடம் விட்டுவிட்டால், போர் இருக்காது. நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் நலன்களை கடுமையாக மீறவோ அல்லது புறக்கணிக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.

நேட்டோ சாத்தியமான பொருளாதாரத் தடைகள் மற்றும் ரஷ்ய எரிவாயு ஏற்றுமதியை நிறுத்துவது பற்றி விவாதிக்கையில், லாவ்ரோவ் மேலும் கூறினார்: 'தடைகளின் அச்சுறுத்தலைப் பொறுத்தவரை, நாங்கள் அமெரிக்கர்களிடம், ஜனாதிபதி மட்டத்திலும் கூறினோம் ... மற்றும் மேற்கு நாடுகளால் கட்டுப்படுத்தப்படும் நிதிய, பொருளாதார அமைப்புகளால் ஒரு முற்றான தடையுடன் கூடி வருமானால் இது ரஷ்யாவுடனான உறவுகளை முறிப்பதற்கு சமமாக இருக்கும். இது நடந்தால் கிரெம்ளின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் கூறினார்: “இந்த நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். எங்கள் இராணுவ தலைமை முன்வைக்கும் முன்மொழிவுகளின் அடிப்படையில் நான் முடிவுகளை எடுப்பேன்” என்றார்.

ரஷ்யா ஏற்கனவே தனது கடற்படையின் மிகவும் அசாதாரணமான மொத்த அணிதிரட்டலை அதிகரித்து வருகிறது. வடக்கு கடற்படை, பால்டிக் கடல் கடற்படை, கருங்கடல் கடற்படை மற்றும் பசிபிக் கடற்படை ஆகிய நான்கு ரஷ்ய கடற்படைகளின் சுமார் 140 கப்பல்கள் ஆர்க்டிக், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் மற்றும் மத்தியதரைக் கடல் மற்றும் ஓகோட்ஸ்க் கடல்களில் பயிற்சிகளில் ஒன்றுசேரும்.

Royal Norwegian Naval Academy இன் இனா ஹோல்ஸ்ட்-பேடர்சன் குவாம், இந்தப் பயிற்சிகள் ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் மறைந்திருக்கக் கூடிய கடலின் பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார். அவர் மேலும் 'ஒரு சாத்தியமான மோதலில், இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆர்க்டிக் பெருங்கடலின் பனிக்கு அடியில் உள்ள கோட்டைகள் என்று அழைக்கப்படுபவைகளில் இருந்து செயல்படும். அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற படைகள் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் நடவடிக்கை சுதந்திரத்தைப் பாதுகாக்க 'வாயில் பாதுகாவலர்களாக' செயல்படும்' என்றார்.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளை அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அழித்து, பேரழிவு தரும் மூலோபாயத் தாக்குதலை நடத்தும் திறன் ரஷ்யாவிடம் உள்ளது என்று நேட்டோவை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாக இருக்கும்.

நேட்டோவாலும் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகளாலும் இத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி கருத்தில் கொள்ளப்படுகின்றன என்பது உலக முதலாளித்துவத்தினதும் அதன் தேசிய-அரசு அமைப்புமுறையினதும் மரண நெருக்கடிக்கு சாட்சியமளிக்கிறது. அதிகரித்துவரும் போர் ஆபத்து குறித்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எச்சரிப்பதும், கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராகவும் ஒரு புதிய உலகப் போரின் ஆபத்துக்கு எதிராகவும் ஒரு சர்வதேச இயக்கத்தில் அதை அணிதிரட்டுவது அவசரமானதாக உள்ளது.

Loading