அதிவலது "Freedom Convoy” இயக்கம் கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது: கனேடிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு திருப்புமுனை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கனடாவின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தூண்டிவிட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஓர் அதிவலது இயக்கம் இப்போது அச்சுறுத்தும் விதமாக தேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கேயே தங்கியிருக்க சூளுரைத்துள்ளது.

கனேடிய தலைநகரில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. நேற்றுடன் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக, இந்த அதிவலது Freedom Convoy (சுதந்திர தொடரணி) இயக்கத்தின் கட்டுக்கடங்கா ஆதரவாளர்களும் அதன் வாகனங்களும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதுடன், ஒட்டாவா நகர் பகுதிகளின் இயல்பு வாழ்க்கையைத் தொந்தரவுக்கு உட்படுத்தினர். நேற்று மதியம், ஒட்டாவா பொலிஸ்துறை தலைவர் பீட்டர் ஸ்லொலி கூறுகையில் 'கலகம் ஏற்படுத்தும் நடவடிக்கை' மற்றும் 'தேசிய தலைநகர் பிரதேசத்திற்குள் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை கொண்டு' வருவதற்காக தொடர்ந்து தூண்டுதல்கள் நடந்து வருவதாக எச்சரித்தார்.

வரவிருக்கும் நாட்களில் இந்த நெருக்கடியின் விளைவு எதுவாக இருந்தாலும் சரி, இது நெருக்கடியில் ஒரு திருப்புமுனை என்பதோடு, வரலாற்று ரீதியில் மிகவும் தனிச்சலுகை கொண்ட ஏகாதிபத்திய நாடுகளில் ஒன்றாக இருந்துள்ள ஒரு நாட்டின் ஜனநாயக-அரசியலமைப்பு ஆட்சி வடிவங்களது வீழ்ச்சி இது என்று நிச்சயமாக கூற முடியும்.

ஜனவரி 27, 2022, வியாழன் அன்று வாகனில் கனேடிய அரசாங்கத்தின் COVID-19 தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக ஒட்டாவாவிற்குச் செல்லும் டிரக் ஓட்டுநர்களின் சுதந்திரத் தொடரணிக்கு எதிர்ப்பாளர்கள் தங்கள் ஆதரவைக் காட்டுகின்றனர். (Photo by Arthur Mola/Invision/AP)

எல்லை கடந்து செல்லும் ட்ரக் ஒட்டுனர்களுக்குத் தடுப்பூசி கட்டாயம் என்று புதிதாக அறிமுகப்படுத்திய நடவடிக்கையை நீக்குமாறு கூட்டாட்சி தாராளவாத அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிப்பதற்காக என்ற சாக்குபோக்கில் தொடங்கப்பட்ட Freedom Convoy இயக்கம், அதிவலது மற்றும் முழுவதும் பாசிச கூறுபாடுகளால் வழி நடத்தப்படுகிறது, இது பரந்த பெரும்பான்மை கனேடியர்களுக்கு ஒவ்வாத நச்சார்ந்த ஜனநாயக விரோத கண்ணோட்டங்களை ஏற்றுள்ளது. கனடாவின் ட்ரக் ஒட்டுனர்களில் ஏறக்குறைய 90 சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

பழமைவாத உத்தியோகபூர்வ எதிர்கட்சி, பெருவணிக தரகு குழுக்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் பெரும்பான்மையும் எஞ்சியுள்ள கோவிட்-19 தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் அனைத்தையும் நீக்குமாறு செய்ய, இந்த இயக்கத்தை ஒரு தாக்குமுகப்பாக பயன்படுத்தும் உடனடி நோக்கில், “உழைக்கும் நல்லுள்ளங்களின்' உண்மையான குரலாக, Convoy இயக்கத்தை அடிமட்ட மக்களின் இயக்கமாக ஊக்குவித்துள்ளன.

மேற்கு கனடாவில் இருந்து வரும் வழியில் வாகனத் தொடரணியை விளம்பரப்படுத்துவதற்காக வாரத்தின் பெரும்பாலான நாட்கள் சுவருக்கு சுவர் விளம்பரங்களை ஒட்டிய போதும், கடந்த வார இறுதியில் 20,000 க்கும் அதிகமான மக்கள் ஒட்டாவாவின் வீதிகளுக்கு வரவில்லை. அதாவது, Convoy இயக்கம் ஒரு பாசிச அணித்திரள்வு என்பது உணரப்படுகிறது. வாரயிறுதி வாக்கில், Convoy இயக்க ஆதரவாளர்கள், இவர்களில் சிலர் உள்ளாட்சி பிராந்திய கொடிகள் மற்றும் நாஜி சுவாஸ்திகா சின்னங்களைக் அசைத்துக் காட்டிய நிலையில், பொது சுகாதார நடவடிக்கைகளை ஏற்க மறுத்தனர், வீடற்ற நிராதரவான மக்களைத் தாக்கினர், மருத்துவப் பணியாளர்கள் மீது கற்களை வீசினர், மற்றும் நினைவுச்சின்னங்களைச் சேதப்படுத்தினர். ஒரு பாசிச துப்பாக்கிதாரியால் ஆறு வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்ட கியூபெக் நகர மசூதி துப்பாக்கிச் சூட்டின் ஐந்தாவது நினைவுதினத்தைக் குறிக்கும் ஒரு நினைவு கூட்டம், வன்முறை அச்சுறுத்தல்கள் காரணமாக இரத்து செய்ய வேண்டியிருந்தது.

Convoy இயக்கத்தைத் தொடங்கிய அதிவலது குழுவான Canada Unity அமைப்பு, அந்த போராட்டத்தை பொலிஸ் நிறுத்த முயன்றால் அந்த சம்பவத்திற்காக தன்னிடம் ஓர் 'உடனடி திட்டம்' இருப்பதாக பெருமைபீற்றுவதுடன், ஒரு பதவிக் கவிழ்ப்புச் சதியைப் பகிரங்கமாக தூண்டிவிட்டு வருகிறது. அது 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த ஆவணம் கனடாவின் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றவும் மற்றும் Freedom Convoy தலைவர்கள், நாடாளுமன்றத்தின் மேல்சபையான தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படாத செனட் சபை உறுப்பினர்கள், ஒட்டாவா மகாராணியின் பிரதிநிதியான கவர்னர் ஜெனரல் ஆகியோரை உள்ளடக்கிய 'கனடா குடிமக்களின் குழுவுக்கு' இடையே கூட்டு நடவடிக்கை மூலமாக எஞ்சியுள்ள எல்லா கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை நீக்கவும் வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறது. 90 நாட்களுக்கு, “குடிமக்களின் குழு' எல்லா அரசு அறிக்கைகள் மீதும் ஒரு தடுப்பதிகாரத்துடன் நடைமுறையளவில் ஓர் இராணுவ ஆட்சிக்குழுவாக ஆட்சி செலுத்தும் என்று அந்த புரிந்துணர்வு விவரிக்கிறது.

ஊடகங்களின் சில பிரிவுகள் பின்வாங்கி உள்ளன என்றாலும், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான பழமைவாதிகள் இந்த அதிவலது கும்பலுக்கான அவர்களின் ஆதரவை இரட்டிப்பாக்கி உள்ளனர். பொதுச் சபையில் திங்களன்று, டோரி துணை தலைவர் கான்டிஸ் பேர்கன் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை 'தேசப்பற்று மிக்க, அமைதி நாடும் கனேடியர்கள்' என்று விவரித்தார். அப்பெண்மணியும் சரி பழமைவாத கட்சி தலைவர் எரின் ஓ'டூல்லும் சரி இருவருமே, Toronto Sun மற்றும் National Post போன்ற வலதுசாரி ஊடக அமைப்புகளால் ஆதரிக்கப்படும் இவர்கள், பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ “தேச ஒற்றுமைக்காக' செயல்பட Freedom Convoy இயக்க தலைவர்களைச் சந்திக்குமாறு அவரைக் கோரி வருகின்றனர்.

2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் தலைமையில் ட்ரம்பை நியமிக்கும் நோக்கில், ஜனவரி 6, 2021 இல் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை ஒழுங்கமைத்த டொனால்ட் ட்ரம்பில் தொடங்கி, முக்கிய பிரமுகர்கள் இந்த Freedom Convoy இயக்கத்தைப் புகழ்ந்துரைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை ஒரு பேரணியில் பேசுகையில் அமெரிக்க தலைமைச் செயலகக் கட்டிடத்தை நொறுக்கிய பாசிசவாதிகளை மன்னிக்க உறுதியளித்த ட்ரம்ப், இந்த Convoy இயக்கத்தை முன்மாதிரியாக கொள்ள வேண்டுமென சுட்டிக் காட்டினார்.

பாசிச சிந்தனை கொண்ட அந்த முன்னாள் ஜனாதிபதியின் இந்த ஆதரவு வெறும் வார்த்தையளவிலான அறிவிப்புகளோடு நின்றுவிடாது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கனடாவின் பழமைவாதிகள் சமீபத்திய தசாப்தங்களில் அதிவலது குடியரசுக் கட்சியினருடன் நெருக்கமான அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளனர், அவ்விரு கட்சிகளுமே அப்பட்டமாக பாசிச சக்திகளுக்கான விளைநிலங்களாக உருவெடுத்து வருகின்றன. அதிவலது Convoy இயக்கத்திற்கு அவர்கள் ஆதரவளிப்பது மற்றும் நடைமுறையளவில் அரசியல் வன்முறையில் சரணடைவது ஆகியவற்றுடன் சேர்ந்து, பழமைவாதத் தலைமை ட்ரம்ப் கையேட்டின் பக்கங்களைப் புரட்டி வருகிறது.

அதிவலது நடவடிக்கையாளர்கள் தேசிய தலைநகரின் இதயதானத்தை முற்றுகையிட்டிருப்பது, இவர்களில் பலர் ட்ரூடோ மீது வன்முறை நோக்கத்துடன் குரூரமாக வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், ஆத்திரமூட்டலும் அச்சுறுத்தலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது எப்படி முடிவடையும் என்று நிச்சயமாக எதுவும் கூற முடியாது என்றாலும், ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவுகள் அரசியலைக் கூர்மையாக வலது நோக்கி நகர்த்தும் நோக்கில் நாடாளுமன்றத்திற்குப் புறம்பான ஒரு அதிவலது இயக்கத்தைக் கொண்டு வந்துள்ளன என்பதும், சிறுபான்மை தாராளவாத அரசாங்கத்தை முடிந்தால் வெளியேற்ற முயற்சித்து வருகின்றன என்பதும் வெளிப்படையாகவே தெளிவாக உள்ளது.

கோவிட்-19 க்கான எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்குவதே அவர்களின் உடனடி நோக்கமாக உள்ளது, இது இன்னும் மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய்தொற்று ஏற்படவும் இன்னும் ஆயிரக் கணக்கானவர்கள் தேவையின்றி இறப்பதற்கும் வழிவகுக்கும். அவர்கள் 'பெருந்தொற்றுக்குப் பிந்தைய' சிக்கன நடவடிக்கை மற்றும் முதலீட்டாளர் சார்பு 'வளர்ச்சி திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்கும்; ரஷ்யாவுக்கு எதிரான வாஷிங்டனின் பொறுப்பற்ற போர் முனைவில் அதற்கான ஒரு வேட்டை நாயாக கனேடிய ஏகாதிபத்தியம் இன்னும் அதிக ஆக்ரோஷமான பாத்திரம் வகிக்கவும் வேகமாக முன்னிலைக்கு வர கோருகின்றனர். Freedom Convoy இயக்கத்தை ட்ரூடோ 'கொடுங்கோன்மைக்கு' கொடுக்கப்பட்ட அடியாக புகழ்ந்துரைக்கும் இதே அரசியல்வாதிகள் தான், உக்ரேனுக்கு பயங்கர ஆயுதங்களை அனுப்பத் தவறியதற்காக அவரது அரசாங்கத்தைக் கண்டித்தவர்களாவர்.

பொலிஸ் மற்றும் அதிவலது போராட்டக்காரர்களுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டால், Convoy இயக்கத்தை ஊக்குவித்த ஆளும் வர்க்கத்திற்குள் இருப்பவர்கள் அந்த பழியை அரசாங்கத்தின் மீதே சுமத்துவார்கள். போராட்டக்காரர்களுடன் 'பேச்சுவார்த்தை நடத்தி', அதாவது அவர்களின் பாசிசவாத கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுப்புகள் வழங்குவதன் மூலம், ட்ரூடோ 'வன்முறையைத் தடுக்க' தவறிவிட்டதாக அவர் கண்டிக்கப்படுவார். பின்னர் இது ஒரு நிறைவேற்று சாதனமாக ஆகிவிடும் இதன் மூலம் பழமைவாதிகளும், ஸ்தாபகத்தின் பிற பிரிவுகளும் மற்றும் அவர்களின் அதிவலது கூட்டாளிகளும் கொள்கையில் மேற்கொண்டு மாற்றங்களைத் திணிக்கவோ அல்லது அரசாங்கத்தை வீழ்த்த உபாயங்களைச் செய்யவோ அழுத்தமளிப்பார்கள்.

கனடாவின் ஆளும் உயரடுக்குப் பாரம்பரியமாக சமூக பதட்டங்களைத் தணிக்கவும் மற்றும் அதன் வர்க்க ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வ காப்பரணை வழங்கவும் பயன்படுத்திய ஜனநாயக ஆட்சி வடிவங்களை அது அதிகரித்தளவில் இப்போது ஒரு முட்டுக்கட்டையாக பார்க்கிறது. வேலைநிறுத்தங்கள் வழமையாக சட்டவிரோதமாக ஆக்கப்படுகின்றன, தேசிய-பாதுகாப்பு எந்திரங்களின் அதிகாரங்களும் வீச்செல்லையும் பரந்தளவில் விரிவாக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய நிதிய பொறிவுக்கு வெறும் ஒரு சில வாரங்களுக்குப் பின்னர், டிசம்பர் 2008 இல், அப்போதைய பழமைவாதக் கட்சி பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்பர் அவரின் சிறுபான்மை அரசாங்கத்தை எதிர்கட்சிகள் பதவியிலிருந்து வெளியேற்ற வாக்களிப்பதைத் தடுப்பதற்காக அவரின் பரந்த எதேச்சதிகார அதிகாரங்களைப் பயன்படுத்தும் பொருட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர்-ஜெனரலின் செல்வாக்கைப் பெற்றிருந்தார். ஆளும் வர்க்கம் பெருவாரியாக ஹார்பரின் 'அரசியலமைப்பு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை' ஆதரித்து, தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுக்க தகைமை கொண்ட ஒரு 'பலமான அரசாங்கம்' பதவியில் இருப்பதை உறுதிப்படுத்த மிகவும் அடிப்படை ஜனநாயக வழிமுறைகளைக் கூட மிதித்து நசுக்க அது தயாராக இருப்பதை எடுத்துக் காட்டியது.

2008 இல் இருந்ததை விட வர்க்க பதட்டங்கள் இன்று எவ்வளவோ அதிகமாக அதிகரித்துள்ளன. உயிராபத்தான வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவ அனுமதிப்பதன் மூலம் கனடாவின் ஆளும் வர்க்கம் தன்னை செழிப்பாக்கிக் கொள்ள இந்த பெருந்தொற்றைக் கைப்பற்றி உள்ளது. தொழிலாளர்கள் தீவிரமயப்பட்டு வருகிறார்கள், அவர்கள் கோவிட்-19 பாதுகாப்புகளைக் கோரியும் மற்றும் தசாப்தங்களாக சலுகைகள் பறிக்கப்பட்டு வருவதை நிறுத்தி சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி தொடர்ச்சியாக போர்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலமாக திருப்பிப் போராட தொடங்கி உள்ளனர்.

ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கம் வேலைக்குத் திரும்ப செய்யும்/ பள்ளிக்குத் திரும்ப செய்யும் உயிர்களை விட இலாபங்களுக்கான ஆளும் வர்க்கத்தின் பெருந்தொற்று கொள்கைக்கு முன்னிலை கொடுத்துள்ளார், இது தொடர்ந்து ஐந்து பாரிய நோய்தொற்று அலைகளுக்கு இட்டுச் சென்றதுடன் இன்று வரையில் 33,800 க்கும் அதிகமானவர்கள் இறக்க வழிவகுத்தது. அது இலாபங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் செல்வவளத்துக்கு முட்டுக்கொடுக்க நூறு பில்லியன் கணக்கான பணத்தைப் பங்குச் சந்தை மற்றும் பெருவணிக கஜானாக்களுக்குப் பாய்ச்சி உள்ளது. கடந்த செப்டம்பர் தேர்தலில் இரண்டாவது முறையாக சிறுபான்மை ஆணையுடன் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து ட்ரூடோவும் அவரின் தாராளவாதிகளும் மேற்கொண்டு கூடுதலாக வலதுக்கு நகர்ந்து, உழைக்கும் மக்களுக்கான அனைத்து விதமான பெருந்தொற்று நிவாரணங்களையும் நடைமுறையளவில் நீக்கி, கனடாவைக் கூடுதலாக ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாய தாக்குதல்களுக்குள் நகர்த்தினர் மற்றும் காட்டுத் தீ போல ஓமிக்ரோன் பரவ அனுமதித்தனர்.

இருந்தாலும் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் கோபமடைந்துள்ளன, நிலைகுலைந்துள்ளன, அச்சத்தில் உள்ளன. அவை, சமூக அடைப்புகள் உட்பட பொது சுகாதார நடைமுறைகளுக்கு மக்களிடையே தொடர்ந்து பலமான ஆதரவு இருப்பதாலும், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அவர்களின் போர்வெறிக்கு எதிராக ஆழமாக வேரூன்றிய எதிர்ப்பு இருப்பதாலும் அவை கோபமடைந்துள்ளதுடன், நிலைகுலைந்துள்ளன. அவர்களின் பயம் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பால் உந்தப்படுகிறது. ட்ரூடோ அரசாங்கம் வர்க்க போராட்டத்தை நசுக்க பெருநிறுவன தொழிற்சங்கங்களுடனான ஒரு நெருக்கமான பங்காண்மையைச் சார்ந்துள்ளது, ஆனால் தொழிற்சங்கங்களோ அதிகரித்தளவில் மதிப்பிழந்துள்ளதுடன், சாமானிய தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பை முகங்கொடுக்கின்றன. இதற்கு விடையிறுப்பாக, ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் முன்கூட்டியே தாக்கும் நடவடிக்கையை ஆதரிக்கின்றன. தொழிலாள வர்க்கத்துடனான ஒரு நேருக்கு நேர் மோதலுக்கு கனேடிய முதலாளித்துவத்தை ஆயத்தப்படுத்த, அவை பாரம்பரிய ஜனநாயக கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாத ஓர் உறுதியான பிற்போக்குத்தன அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றன மற்றும் பாசிசவாத குண்டர்களைத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிரடி படைகளாக விதைக்க விரும்புகின்றன. முதலாளித்துவ ஜனநாயகத்தின் முறிவு ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்காக இருப்பதை கனடாவின் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. முன்பில்லாத மட்டங்களில் சமூக சமத்துவமின்மை, வல்லரசு மோதல் மற்றும் ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக நோயெதிர்ப்பு சக்திக்காக வைரஸ் பரப்பும் கொலைபாதகக் கொள்கை ஆகியவை ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குப் பொருத்தமற்று உள்ளன.

இதனால் தான் பிரதான முதலாளித்துவ நாடுகள் அனைத்தினதும் ஆளும் உயரடுக்குகள் திட்டமிட்டு அதிவலது மற்றும் முற்றுமுதலான பாசிச சக்திகளை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன. ஜேர்மனியில், நவபாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தால் கட்டமைக்கப்பட்டது, அகதிகள் சம்பந்தமான அரசு கொள்கையை நடைமுறையளவில் கட்டளையிட்ட அது, கோவிட்-19 அடைப்புகளை முடிவுக்குக் கொண்டு வர கோர அதிவலது போராட்டங்களை அணித்திரட்டுவதில் முன்னணி பாத்திரம் வகித்தது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளுக்கான முன்மொழிவுகள், ஐரோப்பாவில் முதலாளித்துவ ஜனநாயகம் மரண வாயிலில் இருப்பதை அடிக்கோடிடுகிறது. உலக முதலாளித்துவ நெருக்கடியின் மையமான அமெரிக்காவில், ட்ரம்பும் மற்றும் குடியரசுக் கட்சி தலைமையில் உள்ள பலரும் ஒரு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு மூலமாக ஜனாதிபதி தேர்தலைக் கவிழ்த்து வெள்ளை மாளிகையில் ஹிட்லர் பாணியிலான தலைவரை (Führer) அமர்த்த முயன்று ஓராண்டுக்குப் பின்னர், அவர் ஆயிரக் கணக்கான வலதுசாரி ஆதரவாளர்கள் திரண்ட பேரணிகளில் இன்னும் சுதந்திரமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

உலகெங்கிலும் போலவே கனடாவிலும், அதிவலது முன்னிறுத்தும் அபாயமானது, அதிவலது ஆளும் உயரடுக்கின் குறிப்பிடத்தக்க பிரிவுகள் மூலமாக, உயர்மட்டத்திலிருந்து ஊக்குவிக்கப்படுகிறது என்ற உண்மையிலிருந்து வருகிறது. Freedom Convoy இயக்கத்திற்குத் தலைமை வகிப்பவர்களைப் போன்ற பாசிசவாத குண்டர்களுக்கு மக்களிடையே நடைமுறையளவில் எந்த ஆதரவும் இல்லை. தொழிலாளர்களின் பரந்த பெரும்பான்மையினர் ஒட்டாவாவில் கட்டவிழ்ந்து வரும் சம்பவங்களை அருவருப்பும் சீற்றமும் கலந்து பார்க்கிறார்கள்.

இத்தகைய முற்றிலும் ஆரோக்கியமான உணர்வுகள் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக-ஜனநாயக கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (NDP) ஆகியவற்றில் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. உண்மையில் சொல்லப் போனால், இத்தகைய அழுகிய, முதலாளித்துவ சார்பு அமைப்புகளால் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் வாயடைத்து வைத்திருக்க முடிகிறது என்பதே ஆளும் உயரடுக்கும் அதன் பாசிசவாத கூட்டாளிகளும் இந்த தாக்குதல்களுக்குச் செல்ல உதவுகிறது. உயிர்களை விட இலாபத்திற்கான பெருந்தொற்று கொள்கைக்காக தொழிற்சங்கங்கள் தொழிலாளர் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் நாசப்படுத்தி உள்ளன, அதேவேளையில் இந்த புதிய ஜனநாயகக் கட்சி, வங்கிகள் மற்றும் பெருவணிகங்களுக்கான சிறுபான்மை தராளாவாத அரசாங்கத்தின் பிணையெடுப்புகள், தொழிலாளர்களுக்கான பெருந்தொற்று நிவாரணங்கள் மீதான வெட்டுகள் மற்றும் இராணுவச் செலவுகளின் அதிகரிப்புகளுக்கு வாக்களித்து, 2019 இல் இருந்து நாடாளுமன்றத்தில் தாராளவாத அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துள்ளது.

ஆளும் உயரடுக்கின் பாரிய நோய்தொற்று மற்றும் மரணக் கொள்கை, போர் முனைவு, பாசிச அதிவலது அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்க்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதையே அனைத்தும் சார்ந்துள்ளது. சமூக மற்றும் அரசியல் வாழ்வின் எல்லா அம்சங்கள் மீதும் நிதியியல் தன்னலக் குழுக்களின் இரும்புப்பிடியை உடைப்பதற்கான போராட்டத்தில் இருந்து ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு பிரிக்கவியலாததாகும், இதற்கு சமூகத்தில் சோசலிச மாற்றம் தேவைப்படுகிறது. கனடாவில் உள்ள தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்துவதன் மூலம் ஒரு சர்வதேச அடித்தளத்தில் இந்த போராட்டத்தைத் தொடுக்க வேண்டும், இவர்கள் அனைவருமே சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் ஏகாதிபத்திய போர் ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்திற்காக போராட தயாராக உள்ள ஒவ்வொருவரும் கனடா சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் சகோதரத்துவ கட்சிகளில் இணையுமாறு நாங்கள் பலமாக முறையீடு செய்கிறோம்.

Loading