முன்னோக்கு

அமெரிக்கா-நேட்டோ ரஷ்யாவுக்கு எதிராக போர் அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்துகின்றன: மூன்றாம் உலகப் போருக்கு நீங்கள் தயாரா?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் வாஷிங்டன் தூண்டிவிட்டு வருகின்ற மோதல், அளவிட முடியாதளவில் ஒரு பேரழிவுடன் உலகை அச்சுறுத்துகிறது. தீர்க்கவியலா உள்நாட்டு நெருக்கடி மற்றும் சூறையாடும் புவிசார் அரசியல் வேட்கையால் உந்தப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் பொறுப்பின்றி மூன்றாம் உலகப் போரின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

உக்ரேன் சம்பந்தமான நெருக்கடி பொய்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் இட்டுக் கட்டப்படுகிறது. ரஷ்யா அதன் சொந்த எல்லைகளுக்குள் துருப்புகளை நகர்த்துவதற்காக பைடென் நிர்வாகம் ரஷ்யாவைக் கண்டிக்கிறது. உக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு நிகழலாம் என்ற வாதம் வெள்ளை மாளிகையால் முடிவின்றி திரும்ப திரும்ப கூறப்படுவதுடன், வெகுஜன ஊடகங்களால் கேள்வியின்றி எதிரொலிக்கப்படுகின்றன.

உக்ரேனிய பிராந்திய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள், ஆயுதப் படைகளின் தன்னார்வ இராணுவப் பிரிவுகள், ஜனவரி 22, 2022 அன்று கியேவில் உள்ள நகர பூங்காவில் பயிற்சி பெற்றனர் (AP Photo/Efrem Lukatsky, File)

இது விஷமத்தனமான போர் பிரச்சாரமாகும். உக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யா ஒருபோதும் அச்சுறுத்தவில்லை. ஆனால் உக்ரேன் நேட்டோவின் பாகமாக ஆவதை சகித்துக் கொள்ள முடியாதென மாஸ்கோ குறிப்பிட்டுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு (நேட்டோ) என்பது “ஜனநாயக' அரசுகளின் புவியியல்ரீதியான ஒரு கூட்டணி அல்ல மாறாக ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடன் போர் நடத்துவதற்கான ஓர் ஏகாதிபத்திய சதிக்கூட்டமாகும். உக்ரேனை நேட்டோவில் இணைப்பதானது, நேட்டோ ஆயுதங்கள் மற்றும் படைகளை ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் கொண்டு செல்லும் என்பதோடு, நவ-நாஜிக்கள் மற்றும் பாசிசவாதிகளுடன் பிணைந்த கியேவின் அதிவலது ஆட்சி மாஸ்கோவுடன் ஒரு மோதலைத் தூண்டும் சம்பவத்தில், நேட்டோ உடன்படிக்கை ஷரத்து 5 இன் கீழ், அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் படைகளை உக்ரேனுக்குச் சார்பாக போரில் இறங்க பிணைத்து வைக்கும்.

ரஷ்யா மற்றும் உக்ரேன் எல்லைகளுக்கு 50,000 துருப்புக்களை அனுப்பும் திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். உக்ரேன் நேட்டோவில் சேர்க்கப்படக்கூடாது என உத்தரவாதங்கள் கோரிய மாஸ்கோவின் எழுத்துபூர்வ கோரிக்கையை நிராகரித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் புதன்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டார். பைடென் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதாக இல்லை. அவர்கள் பதட்டங்களைக் குறைக்க முற்படவில்லை, மாறாக புட்டினை ஆக்கிரமிப்பாளராக காட்ட அவர்கள் புட்டினை ஆயுத மோதலில் ஈடுபட செய்ய முயன்று வருகிறார்கள்.

அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புகள் அணித்திரட்டப்பட்டு வருகின்ற அதேவேளையில், பொருளாதாரப் போர் எந்திரத்தை வாஷிங்டன் இயக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பைடெனும் பிளிங்கெனும் இருவரும் மாஸ்கோவுக்கு எதிராக 'கடுமையான பொருளாதாரத் தடைகளை' கொண்டு அச்சுறுத்தியுள்ளனர், பெரும்பாலான உலகப் பொருளாதாரத்திலிருந்து ரஷ்யாவை ஒதுக்கி வைக்கும் விதத்தில், அமெரிக்க-டாலர் பரிவர்த்தனைகளுக்கான உலகளாவிய SWIFT நிதி பரிவர்த்தனை முறையை ரஷ்யா அணுக முடியாதவாறு வாஷிங்டன் அதைத் துண்டிக்கக் கூடும் என்பதால் ரஷ்யா அதற்கேற்ப தயாராகி வருகிறது.

அமெரிக்கா உலகெங்கிலுமான நாடுகள் மீது படையெடுத்துள்ளது, அதனிடம் தோல்வி அடைந்தால் அவருக்கு என்ன ஏற்படும் என்பது புட்டினுக்குத் தெரியும். மானுவல் நோரிகாவும் (Manuel Noriega) ஸ்லோபோடன் மிலோசெவிக்கும் (Slobodan Milosevic) சிறையில் இறந்து போனார்கள், மௌம்மர் கடாபி கொடூரமாக கொலை செய்யப்பட்டார், சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டார். புட்டின் சாக வேண்டுமென வாஷிங்டன் விரும்புகிறது.

புட்டினும் ரஷ்யாவும் உயிர்பிழைப்புக்கான ஓர் அச்சுறுத்தல் என்பதாக அர்த்தப்படுத்தும் ஒரு சூழலைப் பைடென் நிர்வாகம் உருவாக்கி உள்ளது. முழுமையாக சரணடைவதற்குக் குறைவின்றி, நேட்டோ படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு அங்கே மாஸ்கோவுக்கு எந்த விட்டுக்கொடுப்புகளும் இல்லை. நேட்டோ அதன் வாசலில் நிற்கும் போது, இப்போதே போரா அல்லது அண்மித்த எதிர்காலத்தில் போரா என்ற தேர்வை ரஷ்யா முகங்கொடுக்கிறது.

வெள்ளை மாளிகை பொறுப்பில்லாமல் போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, இருந்தாலும் அதன் தாக்கங்கள் குறித்து யாரும் விவாதிப்பதாக இல்லை. எந்த நிருபரும் பைடெனிடம் படுமோசமான சூழ்நிலை என்னவாக இருக்கும் என்று கேட்கவில்லை, அது அணு ஆயுதப் பயன்பாட்டைக் கொண்டிருக்குமா என்று யாரும் கேட்கவில்லை. வாஷிங்டன் அது தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல், நேர்த்தியாக உக்ரேனின் கிழக்குப் பகுதிகளோடு கட்டுப்படுத்தப்பட்டு, டொன்பாஸிற்குள் அடைக்கப்பட்டு இருக்கும் என்பது போல செயல்படுகிறது.

அமெரிக்கா 1991 இல் இருந்து தொடர்ச்சியாக போர்களை நடத்தி உள்ளது, அவை ஒவ்வொன்றும் பேரழிவில் முடிந்துள்ளன. மில்லியன் கணக்கானவர்கள் இறந்துள்ளனர், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் ஒட்டுமொத்த சமூகங்களும் வெறும் தூசிகளாகவும் இடிபாடுகளாகவும் சின்னாபின்னமாக்கப்பட்டு உள்ளன. முன்னர் அவர்கள் பாரம்பரிய பழமையான ஆயுதங்களை மட்டுமே வைத்திருந்தனர். இப்போதோ வாஷிங்டன் உலகின் இரண்டாவது பெரிய அணு ஆயுதக் கிடங்கைக் கொண்டிருக்கும் நாட்டை அதன் பார்வையில் வைத்துள்ளது.

அமெரிக்காவும் நேட்டோவும் மிகப்பெரும் அணு ஆயுதப் போரை ஏற்படுத்தாமலேயே ரஷ்யாவுக்கு எதிராக உயிர்வாழ்வுக்கான ஓர் அச்சுறுத்தலை அவர்களால் கொண்டு வர முடியும் என்று தங்களை சமாதானப்படுத்திக் கொண்டால், அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றாகும். இந்த சாத்தியக்கூறை அவர்களால் எப்படி தவிர்க்க முடியும்? இந்த ஆபத்தை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் நடவடிக்கைகள் முட்டாள்தனமானதாகும்.

அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போர் பிரச்சாரம் அனைத்தும் புட்டினை ஒரு பித்துப்பிடித்த குற்றவாளியாக சித்தரிக்கிறது; அவர்களின் முழு மூலோபாயமும், அவர்களின் நடத்தையை விட அவரது நடத்தை ஆரோக்கியமானது என்பதில் தங்கியுள்ளது. ரஷ்ய ஆளும் உயரடுக்கு மற்றும் இராணுவ வட்டாரத்திற்குள் அங்கே ஓர் ஆழ்ந்த பிற்போக்குத்தனமான கன்னை உள்ளது, அவர்களில் பலர் அனைத்து விதமான பாசிசவாத கருத்துருக்களில் ஊறிப் போயிருக்கிறார்கள்.

போர் என்பது தவிர்க்கவியலாத அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டுள்ளது; ஓவல் அலுவலகத்தின் தீர்மான மேசைகளில் தீர்மானிக்கப்படும் நேர்த்தியான சதித்திட்டங்களுக்கு அது கட்டுப்பட்டதில்லை. வாஷிங்டன் செயலுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்த இராணுவச் சுழலின் தர்க்கம், வல்லரசுகளை ஓர் உலகளாவிய மோதலுக்குள் இழுக்கும்.

சீனா, அதன் பூஜ்ஜிய கோவிட் கொள்கையைக் கைவிட்டு, இந்த பெருந்தொற்றில் மில்லியன் கணக்கான அதன் மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க வேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கையை எதிர்கொண்டுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் அமெரிக்க போர் முனைவுகள், ஏறக்குறைய ரஷ்யா எதிர்கொண்டுள்ளதைப் போல அதேயளவுக்கு முன்னேறியுள்ள நிலையில், பெய்ஜிங்கிற்கும் இதேபோன்ற உயிர்வாழ்வுக்கான அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது. அமெரிக்கா தாய்வானில் துருப்புகளை நிலைநிறுத்துவதைச் சீனா உக்ரேனின் நிலைநிறுத்தல்களுக்கு நேரடியான சமாந்தரமாக பார்க்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், மீண்டும் அதன் காலனித்துவ தலைக்கவசத்தை (pith helmet) அணிந்தவாறு, இந்த போர் முனைவு சேவையில் அதன் சொந்த பொய்களை உருவாக்குகிறது. 28 மில்லியன் சோவியத் குடிமக்களின் இரத்தத்தை அதன் மனசாட்சியில் கொண்டிருக்கும் ஜேர்மன் முதலாளித்துவம் மீண்டும் கிழக்கு நோக்கி அதன் பார்வையை அமைக்க வாஷிங்டன் அழுத்தமளிக்கிறது.

ரஷ்யாவுடனான ஒரு போரைக் கட்டவிழ்த்துவிடுவது, சில நாட்களுக்குள் இல்லையென்றாலும் சில வாரங்களுக்குள் ஈரான், இஸ்ரேல், சீனா மற்றும் தாய்வானை உள்ளிழுக்கும். முன்பினும் அதிகமாக விரிவடையும் இந்த சர்ச்சை விரைவிலேயே ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவையும் பிடிக்கும். இராணுவ நிர்பந்தங்கள் கட்டுப்பாட்டை எடுக்கும். உலகையே சுற்றி வளைக்கும். தயாரிப்பு செய்யப்பட்டு வரும் இந்த உயிரிழப்புகள் கணக்கிட முடியாதவையாக உள்ளன.

அமெரிக்க ஆளும் வர்க்கம் பாரிய மரணத்திற்குத் தயாராக இல்லை என்பதைப் போல காட்டிக் கொள்கிறது. இரண்டாண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் 900,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர், ஆனால் பைடென் நிர்வாகம் அது குறித்து பேசுவது கூட இல்லை. மாலை நேர செய்தி வாசிப்பாளர்கள் அன்றாட வானிலை அறிக்கையை விவாதிக்கிறார்களே தவிர அன்றாட உயிரிழப்புகளை விவாதிப்பதில்லை. ஒரு பேரழிவுகரமான உலகளாவிய போரைத் தொடங்குவதில் இருந்து வாஷிங்டனைத் தடுக்கும் ஒரு துளி மனச்சாட்சியும் இல்லை.

இந்த கொள்கை பைத்தியக்காரத்தனமானது என்றாலும், இது புறநிலை காரணங்களைக் கொண்ட பைத்தியக்காரத்தனமாகும். இந்த போர் முனைவு ஒன்றோடொன்று கலந்த முழுமையாக புவிசார் அரசியல் வேட்கைகள் மற்றும் தீர்க்கவியலா உள்நெருக்கடியின் நச்சார்ந்த கலவையால் எரியூட்டப்பட்டு வருகிறது.

இந்த மோதல், இராணுவ வழிவகைகள் மூலமாக அமெரிக்கா அதன் புவிசார் அரசியல் மேலாதிக்கத்தை மீட்டமைக்கவும் மற்றும் அதன் பொருளாதார சிக்கல்களைச் சரிக்கட்டவும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய அமெரிக்காவின் பெரும்பிரயத்தன முயற்சிகளில் இருந்து பெருக்கெடுக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்த போது, ஏகாதிபத்திய சக்திகள் அடுத்து நிகழவிருந்த சமூக சீரழிவில் இருந்து எவ்வளவு சிறப்பாக இலாபமீட்டலாம் என்று எடைப் போட்டன.

1992 இல், ஒரு முன்னணி வெளியுறவு கொள்கை பயிலகமான வால்டர் ரூஸ்செல் மீட் World Policy Journal இல் ஒரு முக்கிய கட்டுரை பிரசுரித்தது, அதில் 'பனிப்போருக்குப் பிந்தைய அமெரிக்க கொள்கைக்கான ஒரு பணிவடக்கமான முன்மொழிவு' என்ற துணைத்தலைப்பு இருந்தது. வறுமைப்பட்ட ரஷ்ய தேசத்திடமிருந்து அமெரிக்கா சைபீரியாவை விலைக்கு வாங்க வேண்டுமென்றும், “சைபீரியாவின் பரந்த இயற்கை வளங்களின் கிடங்கைத் தனியார்மயப்படுத்தி' இலாபமீட்ட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

“இந்த பகுதி உலகின் மிகவும் மதிப்புடைய எண்ணெய், எரிவாயு, வைரங்கள், மற்றும் தங்கம் ஆகிய வளங்கள் சிலவற்றைக் கொண்டிருக்கின்றன,” என்று மீட் எழுதினார். “அங்கே நிறைய மர நிலைக்கலன்கள் உள்ளன; மிகப்பெரும் கனிம சேமிப்புகள் உள்ளன. இத்தகைய ஆதாரவளங்கள் அனைத்தும் ரஷ்யாவின் பாகமாக இருப்பதை விட அமெரிக்காவின் பாகமாக இருந்தால் மிகவும் மதிப்புடையதாக இருக்கும்.” “ஆசியாவின் அருமையான துறைமுகங்களில் ஒன்றான' விளாடிவொஸ்டொக்கின் (Vladivostok) மதிப்பைக் குறித்தும், ஜப்பானுக்கு விட்டுக்கொடுப்புகளைக் கொடுப்பதன் மூலம் பங்குவீத உரிமைகளைப் பெறுவது குறித்தும் அவர் எழுதினார்.

மீட் சைபீரியாவை விலைக்கு வாங்க முன்மொழிந்தார். இப்போது வாஷிங்டன் அந்நாட்டைத் தூண்டாடி இராணுவ ஆக்கிரமிப்பு வழிவகைகள் மூலமாக அதைச் செய்ய முயல்கிறது. ஹிட்லர் ரஷ்யாவைப் பெரும் புதையலாக கருதினார். அமெரிக்கா அதை விட அதிகமான திட்டங்களைக் கொண்டுள்ளது.

இவற்றை விட இன்னும் தீர்க்கமாக, இந்த பெருந்தொற்றின் வெடிப்பார்ந்த சமூக நெருக்கடியும் வர்க்க போராட்டமும் பகிரங்கமாக உருவெடுத்து வருவது ஆளும் வர்க்கத்தைப் போருக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. உலகளாவிய பெருந்தொற்றால் சமூக வாழ்வில் உருவாக்கப்பட்ட அளப்பரிய பிளவு அடிப்படையிலேயே எல்லா முதலாளித்துவ ஆட்சிகளையும் நிலைகுலைத்துள்ளது.

நியூ யோர்க் டைம்ஸில் புதன்கிழமை பிரசுரிக்கப்பட்ட தோமஸ் எட்சால் இன் ஒரு கருத்துரை கட்டுரை, ஆழ்ந்த சமூக துருவமுனைப்படல் அமெரிக்காவை 'மிகவும் அபாயகரமாக திசைதெரியா பிரதேசத்தில்' நிறுத்தி இருப்பதாக அறிவித்தது. வெற்றிகரமாக 'துருவமுனைப்படலை நீக்கும் நிகழ்வு' “வெளிப்புற பாதிப்புகள் வெளிப்படையாக அமையும்' ஒரு சம்பவமாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஓர் அரசியல் விஞ்ஞானியை அவர் மேற்கோளிட்டார்.

அனைத்துக்கும் மேலாக இது தான் போர் முனைவை எரியூட்டுகிறது. ரஷ்யாவுடனான போர் சமூகக் கோபத்தை வெளிப்புறமாக திருப்பி தேசியவாதத்திற்காக பயன்படுத்தவும் மற்றும் அதிருப்தியை நசுக்குவதற்கு ஒரு சாக்குபோக்கை வழங்குவதற்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை அனுமதிக்கும். இந்த பெருந்தொற்றால் கத்தி முனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள முதலாளித்துவ நெருக்கடி, முதலாளித்துவ வர்க்கத்தைத் தீர்க்கவியலா குழப்பத்தை எதிர்கொள்ள செய்வதால், அது வெளியேறுவதற்கான ஒரு வழியைக் காணப் போரை நோக்கி திரும்புகிறது.

இப்போது மிகப் பெரிய அபாயமானது, ஆபத்தின் அளவுக்கும் அதைக் குறித்த மக்களின் விழிப்புணர்வுக்கும் இடையில் நிலவும் பரந்த இடைவெளியில் தங்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்திடம் பொய் உரைக்கப்பட்டு, அது இருட்டில் வைக்கப்படுகிறது, இந்த பெருந்தொற்றால் அச்சுறுத்தப்பட்டுள்ள தொழிலாள வர்க்கம் மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்பட்டு வருகிறது.

இந்த பெருந்தொற்று பரவலைத் தடுக்கவும் சமூக சமத்துவமின்மை மற்றும் சுரண்டலின் இடைவிடாத அதிகரிப்பை எதிர்க்கவும் போராடி வரும் தொழிலாள வர்க்கம், இந்த உயரடுக்கின் போர் திட்டங்களைக் குறித்து அரசியல்ரீதியில் விழிப்பூட்டப்பட வேண்டும்.

உக்ரேன் மீதான ஆத்திரமூட்டல்களின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், நிலைமை மிகவும் ஆபத்தாக உள்ளது. தொழிலாள வர்க்கம் இந்த அடிப்படையில் தான் முன்நகர வேண்டும். பயத்தில் அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது அல்ல மாறாக ஒரு சரியான கொள்கைக்காக போராடுவது அவசியமாகும். ஏகாதிபத்தியம் ஒரு பேரழிவுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது, போருக்கு எதிராக போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே அதை தடுக்க முடியும்.

2016 இல், அமெரிக்க ஏகாதிபத்திய போர் முனைவின் தீவிரப்படுத்தலை ஏற்கனவே அங்கீகரித்து, “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்' என்ற அறிக்கையை அனைத்துலகக் குழு பிரசுரித்தது, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டமைக்க அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய கோட்பாடுகளை வரையறுத்திருந்தது:

  • போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முன்நிற்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சோசலிசத்தன்மை உடையதாக இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படை காரணமாக விளங்கும் இந்த பொருளாதார அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்பான போராட்டமும் இருக்க முடியாது.
  • ஆகவே, இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாக, குழப்பத்திற்கிடமின்றி சுயாதீனமானதாக, அவற்றுக்கு எதிராக இருந்தாக வேண்டும்.
  • அனைத்துக்கும் மேலாக, இந்த புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டி இருக்க வேண்டும். தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதும் ஓர் உலக சோசலிசக் கூட்டமைப்பை ஸ்தாபிப்பதையும் அதன் மூலோபாய இலக்காக கொண்ட தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு முதலாளித்துவத்தின் நிரந்தரப் போருக்குப் பதிலளிக்கப்பட வேண்டும். இது, உலகளாவிய வளங்களைப் பகுத்தறிவான, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்வதையும், அந்த அடிப்படையில், வறுமையை ஒழித்து மனித கலாச்சாரம் உயர்ந்த மட்டங்களை எட்டுவதையும் சாத்தியமாக்கும்.

இந்த இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டிய அவசரம் அதிகரித்துள்ளது. தொழிலாள வர்க்கத்தில் இந்த கொள்கைகளுக்காக போராடுவதே மிக முக்கிய கேள்வியாகும். இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைவரும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய வேண்டும்.

Loading