முன்னோக்கு

ரஷ்யாவுக்கு எதிராக போர் வேண்டாம்!

உக்ரேனில் அமெரிக்கா-நேட்டோ மேற்கொள்ளும் போர்முனைப்பை எதிர்ப்போம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1. உக்ரேனில் ரஷ்யா உடனடியாக படையெடுக்க இருக்கிறது எனும் மோசடியான கூற்றினை சாக்காகப் பயன்படுத்தி அங்கே ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டுவதற்கு வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் முன்னெடுக்கின்ற பொறுப்பற்ற முனைப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) திட்டவட்டமாக எதிர்க்கின்றன. பைடென் நிர்வாகம் வெளிப்படையாக அபத்தமான “ரஷ்யர்கள் வருகிறார்கள்” என்ற கட்டுக்கதையை இட்டுக்கட்டியிருக்கிறது. அதில் நம்பகரமான தரவுகள் ஏதுமில்லாததோடு அனைத்து அரசியல் தர்க்கங்ளையும் மறுதலிப்பதாக அது அமைந்திருக்கிறது.

2. ரஷ்யா உடனடியாக போரில் இறங்கவிருப்பதான கூற்றுகள் பிரத்யேகமாக அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் இருந்து மட்டுமே வருகின்றன. ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின், இவைதான் தனது நோக்கங்கள் என்று சூசகமாகக்கூட எந்தவொரு அறிக்கையும் தந்திருக்கவில்லை. உக்ரேனின் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ரஷ்ய படையெடுப்பு “உடனடியாய் நடக்கவிருக்கிற ஒன்று” என்பதை மறுக்கிறார் என்பதுடன் அமெரிக்காவும் நேட்டோவும் பீதியைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

2022 பிப்.11 வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு ருமேனியாவின் கருங்கடல் துறைமுக நகரமான கான்ஸ்டாண்டா அருகே உள்ள மிகையில் Kogalniceanu வான்தளத்திற்கு நேட்டோ செயலாளர் தளபதி ஜேன்ஸ் ஸ்டோல்டன்பேர்க் மற்றும் ருமேனிய ஜனாதிபதி கிளாஸ் லோஹானிஸ் ஆகியோரின் விஜயத்தின் போது அமெரிக்க படைவீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். (AP Photo/Andreea Alexandru)

3. அமெரிக்க அரசாங்கத்தின் மூளை-மரத்துப் போகச் செய்யும் பிரச்சாரமானது முதுகெலும்பற்ற ஊடகங்களின் வழியாக பொதுமக்களுக்கு பரிமாறப்படுகிறது. அவற்றின் மூளையற்ற நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் இதுபற்றி எந்த கேள்விகளும் கேட்காமல், அமெரிக்க இராணுவத்தாலும் உளவு முகமைகளாலும் தயாரிக்கப்பட்டு அவர்களிடம் வழங்கப்படுகின்ற அன்றாட ஆவணங்களை முழுமுதல் உண்மைகளைப் போல முன்வைக்கின்றனர். நாசகரமான 2003 ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்காய் பயன்படுத்தப்பட்ட “பேரழிவுகரமான ஆயுதங்கள்” என்ற பொய் மறக்கப்பட்டுவிட்டது. ஒரேயொரு விமர்சனபூர்வ கேள்விக்கோ அல்லது போர்-எதிர்ப்பாளர்களின் குரலுக்கோ வெகுஜன ஊடகங்களுக்கான அணுகல் அனுமதிக்கப்படுவதில்லை. குற்றச்சாட்டுக்கான ஆதாரமாக குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தியதொரு செய்தியாளர் சந்திப்பில் பைடென் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிவித்ததைப் போல, ஒரு அரசாங்க அறிக்கைக்கு ஊர்ஜிதப்படுத்தும் சான்று தேவையில்லை. அந்த அறிக்கை, அரசாங்கத்திடமிருந்து வருகிறது என்ற காரணத்தால், அதுவே போதுமான ஆதாரம் தான் என்கிறார்.

4. சிஐஏ-தயாரிப்பு ஊடக கற்பனைக்கதையின் படி, சமாதானத்தை விரும்பும் அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கக் கூடிய திடீர் அச்சுறுத்தலுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதிகரித்துச் செல்லும் மோதலோ அமெரிக்கா மற்றும் நேட்டோவின் பல மாத கால தீவிர தயாரிப்புகளது விளைபொருளாய் இருக்கிறது. கடைசி எட்டு மாத காலத்திற்குள்ளாக மட்டும், வாஷிங்டன் கிரீஸ் நாட்டின் Alexandropoulis இல் இருக்கும் அதன் தளத்தில் 10,000 அமெரிக்கத் துருப்புகளை நிலைநிறுத்தியிருக்கிறது, பால்கன் மற்றும் கருங்கடல் பகுதிகளில் சண்டைக்கான தயாரிப்பாக DEFENDER-Europe 21 ஒத்திகைப்பயிற்சியை நடத்தியிருக்கிறது, அத்துடன் கருங்கடலில் இதுவரை நடத்தியதிலேயே மிகப்பெரிய Sea Breeze நடவடிக்கையை நடத்தியிருக்கிறது.

5. அமெரிக்கா மற்றும் நேட்டோவின் அனைத்துப் போர்களையும் போலவே, உக்ரேன் தொடர்பான மோதலும் பாசாங்குத்தனமான தோரணையுடன் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடயத்தில், 2014 இல் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கான பதிலிறுப்பில் உண்டான கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதும், கிழக்கு உக்ரேனில் பிரிவினைவாத சக்திகளை அது ஆதரிப்பதும், உக்ரேனின் இறையாண்மையை அப்பட்டமாய் மீறிய செயலாக முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

6. அமெரிக்காவும் நேட்டோவும் நாட்டு எல்லைகளது புனிதத் தன்மை குறித்து பிரகடனம் செய்கின்றன. ஆனால் இந்த கோட்பாட்டுக்கான அவர்களது உபதேசம் கடந்த 30 ஆண்டுகளின் போது நாட்டு எல்லைகளை தொடர்ந்து மீறிய மற்றும் புதிதாக வரைந்த அவர்கள் மீது திருப்பி முகத்திலறைவதாக இருக்கிறது. அமெரிக்காவும் நேட்டோவும் யூகோஸ்லாவியாவிலான சுய-நிர்ணயத்திற்கு எந்த மரியாதையும் கொடுக்கவில்லை. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்திய காலத்தில் அது நாசம்செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. குரோஷியாவின் சுதந்திரத்தை அமெரிக்காவும் ஜேர்மனியும் அங்கீகரித்தமை ஒரு தசாப்த கால இனமோதலுக்கு மேடையமைத்துக் கொடுத்து பத்தாயிரக்கணக்கான உயிர்களைக் பலிகொண்டது. 1999 இல், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கொசோவோ மாநிலப் பிரிவினைக்கு ஆதரவாக 78 நாட்கள் தொடர்ந்து சேர்பியா மீது குண்டுவீச்சு நடத்தி, போதைமருந்துக் கூட்டத் தலைவர்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொசோவோவின் சுதந்திரம் ஸ்தாபிக்கப்பட்டது.

7. 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா அதன் அரசாங்கத்தைத் தூக்கிவீசியது. அதனைத் தொடர்ந்து சர்வதேசச் சட்டத்தினை மேலும் அப்பட்டமாக மீறும்வகையில் ஈராக் மீதான படையெடுப்பும் அதன் அரசாங்கம் தூக்கிவீசப்படுவதும் பின்தொடர்ந்தது. ஈராக் மீதான அமெரிக்காவின் இரத்தக்களரியான ஆக்கிரமிப்பின் போது, இப்போது வெளியுறவுச் செயலராக இருக்கும் அந்தோனி பிளிங்கென், அந்நாட்டை மூன்றாகக் கூறுபோடுவதற்கு ஆலோசனையளித்தார். 2011 இல் லிபியா மீதான அமெரிக்கா-நேட்டோ தாக்குதலைத் தொடர்ந்தும் இதேபோன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டன. இத்தாக்குதல் அதன் அரசாங்கம் தூக்கிவீசப்படுவதிலும் அதன் ஜனாதிபதி படுகொலை செய்யப்படுவதிலும் சென்று முடிவடைந்தது. இந்த இரத்தக்களரியான குற்றமானது அப்போதைய வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டனால் நகைச்சுவை மற்றும் சிரிப்புக்கான ஒரு சந்தர்ப்பமாய் வரவேற்கப்பட்டது. இந்தத் தலையீட்டைத் தொடர்ந்து வந்த சிரியா மீதான அமெரிக்காவின் குண்டுவீச்சு, இன்றுவரையிலும் தொடர்கிறது.

8. உக்ரேன் ஜனநாயகத்துக்கான வாஷிங்டனின் பாசாங்கான கவலையானது, ஏமாற்றிலும் கபடவேடத்திலும் உக்ரேனின் சுய-நிர்ணயத்திற்கான அதன் அர்ப்பணிப்புக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை, அமெரிக்க-ஆதரவுடன் தூக்கிவீசியதில் இருந்து பதவிக்கு வந்த கியேவில் இருக்கும் அரசாங்கம், உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு பொறுப்பாயிருக்கும் ஒரு சிலவராட்சி ஊழல்கூட்டத்தின் சார்பாக ஆட்சி செய்கிறது. பல்வேறு துணைஇராணுவ அமைப்புகள் மற்றும் அதி-வலதுசாரி குழுவாக்கங்கள் உள்ளிட ஜெலென்ஸ்கி நம்பியிருக்கும் சமூக சக்திகள் பாசிசத்தின் வரலாற்று துர்நாற்றத்தை கொண்டிருக்கின்றன.

9. வாஷிங்டனின் போர் முனைப்பில் ஒரு வெறித்தனமான அவசரம் இருக்கிறது. பின்விளைவுகளை மதிப்பிடுவதற்கோ அல்லது சாத்தியமாகக் கூடிய ஆகமோசமான நிலை குறித்து பகிரங்கமாக விவாதிப்பதற்கோ அனுமதிக்காத வண்ணமான ஒரு கால அட்டவணையின் அடிப்படையில் அது இயங்குவதாகவே தெரிகிறது. அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவரையொருவர் நோக்கி சுட்டுக் கொள்கிறார்கள் என்றால், ”அது ஒரு உலகப் போர்” என்று பிப்ரவரி 10 அன்று பைடென் ஊடகங்களிடம் தெரிவித்தார். எனினும் அப்படியானதொரு பிரளயமான நிலையை தணிப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்குப் பதிலாய், அமெரிக்கா அதன் ஆத்திரமூட்டல்களையும் குற்றச்சாட்டுகளையும் அழுத்தி முன்தள்ளுகிறது. ரஷ்யா படையெடுக்க நோக்கம் கொண்டுள்ள துல்லியமான தேதி பிப்ரவரி 16 என்பதை, தான் அறிந்திருப்பதாகவும் அறிவிக்கிறது.

10. அமெரிக்கா அதன் நலன்களை முன்னெடுப்பதில் ஒருதலைப்பட்சமான மூலோபாய அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளது போர்-வெறித்தனமானது இரண்டு அடிப்படைக் காரணிகளால் உந்தப்படுகின்ற ஒரு புறநிலை தர்க்கத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது.

11. முதலாவது, அமெரிக்கா 1991 முதலாக, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பினால் திறந்துவிடப்பட்டிருக்கும் கொள்ளை மற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கான சாத்தியங்களை சுரண்டிக் கொள்வதற்கான ஒரு இடைவிடாத முனைப்பில் ஈடுபட்டுள்ளது. 1992 இல் வகுக்கப்பட்ட பென்டகனின் மூலோபாயத் திட்டமானது அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு ஒரு புதிய சவாலை அது அனுமதிக்காது என்று அறிவித்தது. கடந்த மூன்று தசாப்தங்களின் போது, இந்த நோக்கத்துடன் வாஷிங்டனால் இடைவிடாது நடத்தப்பட்ட போர்களின் விளைவாய் பால்கன்கள், மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவிலான நாடுகளும் முழு நாகரிகங்களும் இடிந்த குவியல்களாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தின் வீழ்ச்சி எந்த அளவுக்கு வெளிப்பபடையாகின்றதோ, அந்த அளவுக்கு அதன் போர் இலக்குகளை உலகம் முழுவதும் விரிவாக்குகின்றது. அதன் பார்வை இப்போது ரஷ்யா மற்றும் சீனா மீது பதிந்திருக்கிறது.

12. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2016 பிப்ரவரி 18 அன்றான அதன் ”சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற அறிக்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளது உலகளாவிய மூலோபாயம் குறித்த ஒரு திறமையான பகுப்பாய்வை முன்வைத்தது. போர் முனைப்புக்குப் பின்னால் “1) உலகளாவிய ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒன்றுடன் ஒன்றுதங்கியுள்ள ஒரு பொருளாதாரத்திற்கும், எதிரெதிரான தேசிய அரசுகளுக்கு இடையில் அது பிளவுபட்டு இருப்பதற்கும் இடையிலான முரண்பாடு; மற்றும் 2) உலகளாவிய உற்பத்தியின் சமூகமயப்பட்ட தன்மைக்கும், உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமையின் மூலமாக ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் தனியார் இலாபக் குவிப்பிற்கு அது கீழ்ப்படியச் செய்யப்படுவதற்கும் இடையிலான உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழ வேரூன்றிய முரண்பாடுகள்” அமைந்திருக்கின்றன என்று வலியுறுத்தியது.

13. இந்த அடிப்படை முரண்பாடுகளின் உள்ளடக்கத்திற்குள்ளாக, ICFI விளக்கியது:

போருக்கான முனைப்பு, உலக மேலாதிக்க சக்தியாக தனது நிலையைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு அமெரிக்கா மேற்கொள்கின்ற பிரயத்தனங்களில் மையம் கொண்டிருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது உலகெங்கும் கடிவாளமற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கப்பட்டது. சவால்செய்ய முடியாத அமெரிக்காவின் சக்தியானது வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களில் ஒரு “புதிய உலக ஒழுங்கை” உத்தரவிடுகின்ற நிலையைக் கொண்ட “ஒற்றைத்துருவ காலகட்டத்தை” அந்த “வரலாற்றின் முடிவு” உருவாக்கியதாக ஏகாதிபத்திய பிரச்சாரவாதிகளால் போற்றப்பட்டது. சோவியத் ஒன்றியமானது, ஐரோப்பாவின் கிழக்கு எல்லைகள் தொடங்கி பசிபிக் கடல் வரையிலும் உலகின் ஒரு பரந்து விரிந்த பகுதியை உள்ளடக்கியிருந்தது. இவ்வாறாய், பலம் இழந்திருந்த ரஷ்யாவினால் கட்டுப்பாட்டினுள்கொண்டிருந்த யூரேசியாவின் பரந்த பிராந்தியங்களும் அத்துடன் புதிதாக சுதந்திரமடைந்திருந்த மத்திய ஆசிய அரசுகளும் மீண்டும் “முற்றுமுழுதாக”, பெருநிறுவனச் சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் திறந்து விடப்பட்டது. சீனாவில் ஸ்ராலினிஸ்டுகளால் முதலாளித்துவம் மறுபுனருத்தானம் செய்யப்பட்டமை, 1989 ல் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மீதான அதன் போலிஸ்-அரசு அடக்குமுறை மற்றும் நாடுகடந்த முதலீடுகளுக்கு “சுதந்திர வணிக மண்டலங்கள்” திறந்து விடப்பட்டமை ஆகியவை மலிவு உழைப்பின் ஒரு பரந்த கையிருப்பை கிடைக்கச் செய்தது.

14. உடனடியாக ரஷ்யா படையெடுக்க இருப்பதான கூற்றுகளும் பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் நிலைநிறுத்தமும், நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வந்திருந்த ரஷ்யாவுடனான மோதல் இனியும் தாமதிக்கப்பட முடியாது என்று பெருநிறுவன-நிதிய உயரடுக்கு மற்றும் உளவு முகமைகளின் சக்திவாய்ந்த பிரிவுகள் முடிவு செய்திருப்பதையே குறிப்பதாய் உள்ளது. 2017 முதல் 2020 வரையான காலத்தில், ட்ரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது அரசியல்சட்டத்தின் மீது அவர் தாக்குதல் நடத்தியதும் சர்வாதிகாரத்துக்கு அவர் தயாரிப்புகள் செய்ததும் அல்ல, மாறாக ரஷ்யாவை போதுமான வலுவுடன் எதிர்க்க அவர் தவறியதே இருந்தது. 2019 டிசம்பருக்கும் 2020 பிப்ரவரிக்கும் இடையிலான காலத்தில், ட்ரம்ப்பின் மீதான முதல் கண்டனத் தீர்மானத்துக்கான முன்னெடுப்புகளில், உக்ரேனுக்கு அவர் இராணுவ உதவியை நிறுத்தி வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டே மேலோங்கியதாக இருந்தது. ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சியின் வழக்கமான கண்டனமாய் இருந்தது ட்ரம்ப் ஒரு பாசிசவாதியாக உருவெடுத்து வந்தார் என்பதல்ல மாறாக அவர் “புட்டினின் கைப்பாவை”யாக இருந்தார் என்பதே.

15. இப்போது பைடென் நிர்வாகம் அதிகாரத்தில் உள்ள நிலையில், அது இழந்துவிட்ட நேரத்தினை ஈடுசெய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா-நேட்டோ சூழ்ச்சி வெளிப்படையாக இருக்கும் அதேமட்டத்திற்கு அநாகரிகமானதாகவும் இருக்கிறது. ரஷ்யாவை போருக்குள் இழுப்பதற்கான ஒரு தூண்டிலாக உக்ரேன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் “போலிக் கொடி” நடவடிக்கை குறித்து பைடென் தொடர்ந்து குறிப்பிட்டு வருவது, வழிப்பறித் திருடன் தன் பின்னால் துரத்திக்கொண்டு வரக்கூடியவர்களது கவனத்தைத் திசைதிருப்ப “திருடனைப் பிடியுங்கள்!” என்று கத்திக்கொண்டே ஓடும் ஊரறிந்த தந்திரத்தைத்தான் நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஏதேனும் ஒரு நாடு “போலிக் கொடி” நடவடிக்கைக்குத் திட்டமிடுகிறது என்றால், அது அமெரிக்கா தான்.

16. உக்ரேனிலான எந்தவொரு சம்பவமும், அதற்கான காரணங்கள் எத்தனை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அது நேட்டோ சக்திகளை செயலூக்கமுள்ளதாக்க பயன்படுத்தப்பட்டு, சட்டப்படியான அல்லது அறிவிக்கப்படாத போர் நிலைமையை உருவாக்கும். ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு இயற்கை எரிவாயு விநியோகிக்க இருந்த The Nord Stream II குழாய்த்திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படும். நேட்டோவால் சுற்றிவளைக்கப்படுகின்ற ரஷ்யா, கிரீமியாவை உக்ரேனிடம் நிபந்தனையற்று திரும்ப ஒப்படைப்பதில் தொடங்கி முடிவில்லாது தொடர்ந்து விரிந்து செல்லக் கூடிய கோரிக்கைகளது ஒரு பட்டியலுக்கு முகம்கொடுக்கும். பெலாருஸில் ரஷ்யாவின் செல்வாக்குக்கு முடிவு கட்டப்படும். செசன்யா தொடங்கி சைபீரியா வரையில், ரஷ்யாவிலான பிரிவினைவாத இயக்கங்கள் நேரடியான ஏகாதிபத்திய ஆதரவைப் பெறும். மாஸ்கோவில் ஆட்சியை மாற்றுவதும் ரஷ்யாவைத் துண்டுபோடுவதும் தான் அவர்களது இறுதி இலக்காய் இருக்கும்.

17. நேட்டோவின் ஒரு அங்கத்துநாடாவதற்கு உக்ரேன் கொண்டுள்ள “உரிமை” குறித்த பைடென் நிர்வாகத்தின் வலியுறுத்தமானது ரஷ்யாவை முற்றிலும் கையாலாகாத ஒரு நாடாக குறைப்பதை நோக்கி செலுத்தப்படுகின்ற ஒரு மூலோபாயத்தின் ஒரு அத்தியாவசியக் கூறாய் இருக்கிறது. மறைந்த ஏகாதிபத்திய மூலோபாயவாதியும் போர்விரும்பியுமான Zbigniew Brzezinski, The Grand Chessboard (1997) என்ற அவரது புத்தகத்தில், உக்ரேன் ரஷ்யாவுக்கு “புவியரசியல்ரீதியாக அச்சாணிபோன்றது” அதன் தெற்கு எல்லைகளது பாதுகாப்பையும் வெப்பக் கடல்களுக்கான அதன் அணுகலையும் தீர்மானிப்பதாய் இருப்பது என்று எழுதினார். உக்ரேன், கருங்கடல் மற்றும் காஸ்பியன் ஆகியவை கொண்ட பகுதி கணிப்பிட முடியாத அளவுக்கு புவிமூலோபாய முக்கியத்துவம் கொண்டதாகவும் மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனது திட்டங்களின் மைய அச்சாகவும் அது இருக்கிறது. இந்தப் பிராந்தியத்தின் மூலமே ரஷ்யா மத்திய தரைக்கடலை அணுகுகிறது. அத்துடன் சீனா ஐரோப்பாவிற்கான அதன் ஒரே இணைப்பு ஒரே பாதை (Belt and Road) முன்னெடுப்பின் நிலவழிப் பாதை இதனூடாக விரிந்து செல்கிறது. கருங்கடல் மற்றும் காஸ்பியன் பிராந்தியங்களில் மற்றும் இறுதியாக யூரோசியா அனைத்திலும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக நிற்கும் ரஷ்யாவை அழித்து, மூலவளச் செழிப்பு கொண்ட அந்த நாட்டை அரைக்காலனி அந்தஸ்துக்கு குறைப்பதே வாஷிங்டனின் போர் இலக்காக இருக்கிறது. சீனாவுடனான போருக்கான தயாரிப்பில் இது ஒரு அத்தியாவசிய படியாக பார்க்கப்படுகிறது.

2022 பிப்.11 வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு ரோமானியாவின் கருங்கடல் துறைமுக நகரமான கான்ஸ்டான்டா அருகே உள்ள மிகையில் Kogalniceanu வான்தளத்திற்கு நேட்டோ செயலாளர் தளபதி ஜேன்ஸ் ஸ்டோல்டன்பேர்க் விஜயம் செய்ததை ஒட்டி அமெரிக்க படைவீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். (AP புகைப்படம்/Andreea Alexandru)

18. இரண்டாவதாக, போர் முனைப்பானது தீர்க்கமுடியாத உள்நாட்டு நெருக்கடியின் காரணத்தால் ஒரு உச்சக் கட்டத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் படுதோல்விக்கு உடனடி அடுத்த காலத்திலான போர் முனைப்பு அதிகரிப்பானது, அதனுடன் இணைந்த முன்கண்டிராத அளவுகளிலான சமூக, நிதிய மற்றும் அரசியல் நெருக்கடிகளில் வேரூன்றியிருக்கிறது.

19. இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் பாதையில் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கமானது இருபதாம் நூற்றாண்டின் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப்போல் தாக்கம்மிக்கதாக இருக்கும் என பெருந்தொற்று 2020 ஜனவரியில் வெடித்தது முதலாக அனைத்துலகக் குழு வலியுறுத்தி வந்திருக்கிறது. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஏற்கனவே மிக முன்னேறிய நிலையில் இருந்த முரண்பாடுகளை வெடிப்புப் புள்ளிக்குக் கொண்டுவந்திருக்கிற ஒரு “தூண்டுதல் நிகழ்வு” ஆக இந்த பெருந்தொற்று அமைந்திருக்கிறது.

20. பெருந்தொற்று வெடித்தது முதலான உலகளாவிய உயிர்ச்சேதமானது ஸ்தம்பிக்கச் செய்வதாய் இருக்கிறது. மிகவும் குறைத்துக்காட்டப்படும் மதிப்பீடுகளின் படியே உலகளாவிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆறு மில்லியனை நெருங்கியதாக உள்ளது. கூடுதல் உயிரிழப்புகளது கணக்கீட்டின் அடிப்படையில் மதிப்பிட்டால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தொடக் கூடியதாய் உள்ளது. உலகின் மிக செல்வமிக்கதும் சக்திவாய்ந்ததுமான நாடான அமெரிக்காவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

21. இந்த உலுக்கும் எண்ணிக்கையானது உயிர்களை பாதுகாப்பதை சிலவராட்சியின் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் செல்வத்தை பாதுகாப்பதற்கும் அதிகரிப்பதற்கும் அடிபணியச் செய்கின்ற கொள்கைகளது விளைபொருளாய் உள்ளது. இந்த பெருந்தொற்று ஒவ்வொரு வாரமும் பத்தாயிரக்கணக்கான உயிர்களைத் தொடர்ந்து பலிகொண்டு வருகிற நிலையிலும் கூட, கோவிட்-19 பரவலை மட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் வெளிப்பட மறுதலிக்கப்பட்டிருக்கின்றன. உலகெங்குமான அரசாங்கங்கள் –இதில் முன்னிலையில் நிற்பது வாஷிங்டனில் உள்ள அரசாங்கம்- பெருந்தொற்றுக்கு இப்போது தினமும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு நிகழ்வதை சர்வசாதாரணம் என்பதைப் போல் அணுகுவதோடு தொற்றுஎண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு பற்றி தகவல் தெரிவிக்கும் அவசியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

22. இந்த பெருந்தொற்று முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் உள்நாட்டு நிதி, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இன்னும் சொன்னால், மிக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் தான், நெருக்கடியானது அதன் மிகவும் நச்சுத்தனமான வடிவத்தை எடுக்கின்றது.

23. முழுமையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் செயலிழப்பை நோக்கி அமெரிக்கா துரிதமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. பணவீக்கம் உச்சநிலையை அடைந்து வருகிறது, பெரும்பகுதி பணத்தை வங்கிகளுக்கும் வோல் ஸ்ட்ரீட்டுக்கும் பாய்ச்சியதால் ஏற்பட்ட அமெரிக்காவின் கடன் மலைப்பூட்டும் 30 டிரில்லியன் டாலரைத் தொட்டிருக்கிறது. தொழிலாள வர்க்கம் வெளிப்படையான மற்றும் வெடிப்பு சாத்தியமுள்ள போராட்டத்திற்குள் வருகிறது. அமெரிக்கா 2021 ஜனவரி 6 அன்றான ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் அதன் அரசியல்சாசன அரசாங்கம் தூக்கிவீசப்படுவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையிலிருந்து ஒரு ஆண்டு தான் கடந்திருக்கிறது.

24. சென்ற மாதத்தின் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பைடென், அமெரிக்க ஜனநாயகம் இந்த தசாப்தத்திற்கு தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறி தான் என்று கருத்துக் கூறியிருந்தார். வேறு எந்த நாட்டிலும் இந்த மட்டத்திற்கான சமூக சமத்துவமின்மை கிடையாது, அல்லது ஆளும் வர்க்கம் இந்த மட்டத்திற்கு மக்களின் மிக அடிப்படைத் தேவைகளுக்கு மிகவும் அலட்சியம் காட்டும் நிலை கிடையாது. அமெரிக்கா ஒரு சமூக வெடிமருந்துக் கிடங்காக உள்ளது. செயற்கையாக ஒற்றுமையை உருவாக்குவதற்கும், நெருக்கடிகளை வெளியே திசைதிருப்பி விடுவதற்கும் போர் ஒரு வழிவகையாக இருக்கிறது.

25. போருக்கான காரணங்கள் குறித்த ஆய்வுகளில், கவனத்துக்குரிய பல வரலாற்றாசிரியர்கள் உள்நாட்டு முரண்பாடுகளது முக்கியத்துவத்தினை பற்றி வலியுறுத்தியிருக்கின்றனர். பிரபலமான அமெரிக்க வரலாற்றாசிரியரான, ஆர்னோ மையர், அரை நூற்றாண்டுக்கு முன்பாக எதிர்ப்புரட்சியின் இயக்கவியல் (Dynamics of Counterrevolution) என்ற ஆய்வில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

இறுக்கமான மற்றும் ஸ்திரமற்ற உள்நாட்டு நிலைமைகள், உயரடுக்கினரை குறிப்பிடத்தக்க வகையில் உறுதியற்றவர்களாகவும், விதிவிலக்காக கடுமையானவர்களாகவும் மிகவும் அபாயகரமானவர்களாக என்பதைக் கூறத்தேவையில்லை முன்னெச்சரிக்கையான தீர்வுகளை நாடவைக்கின்றது. பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய அரசாங்கங்கள் மற்றும் அரசியல் வர்க்கங்கள் இதற்கு எதிராக அதிகரித்துவரும் வெளிப்புற மோதல்கள் அல்லது போரினை நோக்கி திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு பொதுவான மற்றும் உடனடி வெளிப்புற அச்சுறுத்தல் மற்றும் எதிரியை எதிர்கொண்டவுடன், தீவிரமாக கிழிபட்டிருக்கும் அரசியல் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று தமது பிரதிபலிப்பிலும் மற்றும் கணக்கீட்டிலும் அவர்கள் கருதுகின்றனர். இத்தகைய அரசாங்கங்கள், கிளர்ச்சி, புரட்சி, உள்நாட்டுப் போர் அல்லது பிரிவினைக்கு எதிரான மருந்தாக, உள் சமூக ஒற்றுமைக்கான கருவியாக உயர்ந்த வெளிப்புற மோதல் அல்லது போரைப் பயன்படுத்த முனைகின்றன. அதிகரித்த வெளிப்புற மோதல் அல்லது போரை உள்நாட்டு சமூக ஒற்றுமைக்கான ஒரு கருவியாகவும், கிளர்ச்சி, புரட்சி, உள்நாட்டுப் போர் அல்லது உடனடி ஆபத்தாய் நிற்பதாகச் சொல்லப்படும் பிரிவினை ஆகியவற்றுக்கான ஒரு முறிப்புமருந்தாகவும் பயன்படுத்த இத்தகைய அரசாங்கங்கள் நாட்டம் கொள்கின்றன. ஒரு அதிரடியான இராஜதந்திர அல்லது இராணுவ வெற்றியை, உள்முகமாய் பலவீனமான ஆட்சிகள், அரசாங்கங்கள் மற்றும் உயரடுக்கினரின் மறைந்துகொண்டுபோகும் அதிகாரம் மற்றும் கவுரவத்தை மீட்சி செய்வதற்கும், இன்னும் முடிந்தால் மேம்படுத்துவதற்கும், பயன்படுத்திக் கொள்வதே இறுதி நோக்கமாய் இருக்கிறது.

16. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கங்கள், இரண்டு உலகப் போர்களின் பேரழிவில் இருந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கிற நிலையில், பெரும் எச்சரிக்கையுணர்வு காட்டவே நாட்டம் கொண்டுள்ளன. எனினும், இயற்கை எரிவாயுவுக்கும் மற்ற வளங்களுக்கும் ரஷ்யாவையே அவை நம்பியுள்ள நிலையில், உக்ரேன் விவகாரத்திலான போர் அவற்றின் சொந்த நலன்களுக்கு பெரும் அழிவைக் கொண்டுவரக் கூடும் என்கிற உண்மையையும் தாண்டி, வாஷிங்டனின் போர் முனைப்புக்கு அவை இசைந்து செல்கின்றன. அவை முகம்கொடுத்திருக்கும் பாரிய உள்நாட்டு நெருக்கடி அவற்றை அதே நாசகரமான பாதையில் தள்ளுகிறது. தவிரவும், அமெரிக்காவின் திட்டநிரலுக்கு நேரடியான எந்தவொரு சவாலும் அழிவுகரமான பதிலடியைக் கொண்டுவரும் என்பது அவற்றுக்குத் தெரியும். 2003 இல், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பை ஆதரிக்க ஜேர்மனியும் பிரான்சும் உத்தியோகபூர்வ தயக்கத்தை வெளிப்படுத்தின. அமெரிக்கா அதன் நீண்டகால கூட்டாளிகளை பகிரங்கமாக தாக்கியதோடு ஐரோப்பாவில் அதன் உறவுகளை “பழைய ஐரோப்பா”வின் மையத்தில் உள்ள நாடுகளுக்கு எதிரான விதத்தில் நேட்டோவில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கியதாக மறுநோக்குநிலை செய்யவிருப்பதாகக் கூறி மிரட்டியது. அமெரிக்காவை எதிர்த்தால், ரஷ்யா பின்னாளில் மறுஒழுங்கமைப்புக்கு உட்படுத்தப்படும்போது கிடைக்கும் பங்குகளிலிருந்து தாம் ஒதுக்கப்பட்டு விடக் கூடும் என்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கங்கள் அஞ்சுகின்றன. ஒழுங்குமரியாதையாக வழிக்குக் கொண்டுவரப்பட்ட அவை, போருக்கான முனைப்பில் சேர்ந்து கொள்கின்றன.

27. வாஷிங்டனிலும் ஐரோப்பியத் தலைநகரங்களிலும் உள்ள மூலோபாயவாதிகள் என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம், ஆனால் போருக்கு மீண்டும் திரும்புவதென்பது அவர்களது பிரச்சினைகளில் எதுவொன்றையும் தீர்க்கப் போவதில்லை. அத்தகைய பிரளய சம்பவங்களை சுற்றில் விடும் குற்றவாளிகள் காற்றை விதைத்தவன் சூறாவளியை அறுவடை செய்வான் என்ற பழமொழியின் உண்மையை அசௌகரியத்துடன் கண்டுணர்வார்கள்.

28. உக்ரேனில் ரஷ்யாவுடனான ஒரு போர், அது எப்படி தொடங்கினாலும் அல்லது ஆரம்ப கட்டங்களில் என்ன பாதையை எடுத்தாலும், அது கட்டுப்படுத்த முடியாததாக ஆகும். அது கட்டுப்பாடற்ற விரிவின் தர்க்கத்தின் பின்செல்லும். பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு அரசும் அந்த மோதலுக்குள் இழுக்கப்படும். ஏழு நாடுகளைத் தொடும் கடற்கரைப் பரப்பைக் கொண்ட கருங்கடலானது, ககாசியா கடந்த பகுதி, காஸ்பியன் கடல் பகுதி பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் அதனைத் தாண்டி விரிந்து செல்கின்ற, அதிகரித்துச் செல்லும் மோதலின் ஒரு கொதிகலனாக மாற்றப்படும்.

29. தனது நலன்கள் நேரடியாக அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவதைக் காணுகின்ற சீனா போருக்குள் இழுக்கப்படும். மோதல் தைவானையும் சூழும். ஈரானும் இஸ்ரேலும் போருக்குள் இழுக்கப்படும். ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் துரிதமாய் பின்தொடரும். ஏதோவொரு புள்ளியில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் தான் வெளியேறும் வழியிருப்பதாகத் தெரியும். அத்துடன் இந்த மோதலின் ஒவ்வொரு அரங்கிலும், அமெரிக்கா முக்கியமாக சம்பந்தப்பட்டதாய் இருக்கும். உலுக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையும் பாரிய அளவுகளிலான சமூக புலப்பெயர்வுகளும் நடைபெறும்.

30. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு சற்று அதிகமான காலம் தான் கடந்திருக்கிறது. 1992 இல், மாஸ்கோவிலும் கியேவிலும் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகள் முதலாளித்துவத்தின் மீட்சியானது முன்கண்டிராத செழுமையின் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கிவைக்கும் என்று கூறினர். ரஷ்யா உக்ரேன் இரண்டுமே, மார்க்சிசக் கோட்பாடுகளைக் கைகழுவிவிட்ட பின்னர், சமாதானம்-விரும்பும் முதலாளித்துவ நாடுகளது மகிழ்ச்சியான குடும்பத்திற்குள் அவை வரவேற்கப்பட்ட நிலையில், முன்கண்டிராத செழுமையை அனுபவிக்கவிருந்ததாக அவர்கள் கூறினர்.

31. தனியொரு நாட்டில் சோசலிசம்” மற்றும் ஏகாதிபத்தியத்துடன் “சமாதான சகவாழ்வு” ஆகிய 1991க்கு முந்தைய ஸ்ராலினிச சர்வரோக நிவாரணிகளில் வேரூன்றியதாய் இருந்த இந்த வரலாற்றுமுறைசாராத மற்றும் கற்பனாவுலக கனாஇன்பம் முற்றிலுமாய் தகர்க்கப்பட்டு விட்டிருக்கிறது. மார்க்சிசத்திற்கும் 1917 அக்டோபர் புரட்சியுடன் தொடர்புபட்ட அனைத்திற்கும் கடுமையான எதிரியாக இருக்கும் ரஷ்ய அரசாங்கம் இப்போது ஏகாதிபத்தியத்தால் கீழ்ப்படுத்தப்படும் யதார்த்தத்திற்கு முகம்கொடுத்திருக்கிறது.

32. ஒரு ஊழலடைந்த சிலவராட்சியின் சார்பாக ஆட்சி செய்கின்ற புட்டினின் அரசாங்கத்திடம், இந்த அச்சுறுத்தலுக்கான, முற்போக்கான என்றெல்லாம் கூட வேண்டாம், சாத்திமான பதிலிறுப்பு கூட ஏதுமில்லை. அமெரிக்கா மற்றும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளினால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்புகளுக்குள்ளாக அமைதியான வழியில் ஒருங்கிணைந்து கொள்வதற்கான சாத்தியம் என்பது ஒரு பிரமை என்பது எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. உலக நிதி ஒழுங்கில் ஒரு முக்கியத்துவமற்ற பங்கை கொண்டிருக்கும் ரஷ்யப் பொருளாதாரம் அமெரிக்காவால் விதிக்கப்படும் தடைகளில் இருந்து தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழிருக்கிறது.

33. பிற்போக்குத்தனமான தேசியவாதத்தினை வழிபடுவதானது ரஷ்யாவின் எல்லைகளில் உள்ள மக்களுக்கு அழைப்புவிட திறனற்றதாய் இருக்கிறது; ரஷ்யாவின் தனிமைப்படலை ஆழப்படுத்துகிறது. மேலும், புட்டின் அணுஆயுத பிரயோக மிரட்டல்களில் இறங்கியிருப்பதானது உலகளாவிய அழிவுயுத்தத்தின் சாத்தியத்தைத் தவிர வேறெதனையும் வழங்கவில்லை. முடமாக்கப்பட்ட சோவியத்துக்கு-பிந்தைய சமூகத்தின் அத்தனை முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தியிருக்கும் பெருந்தொற்றினால் நொறுக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் ஆபத்தான நிலையில் அமர்ந்தபடி அவர் ஆட்சி செய்கிறார். முதலாளித்துவ உயரடுக்கில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தின் கீழான தரகு முதலாளிகளாக தங்களது அந்தஸ்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும், கீழ்ப்படிவானது தமது நலன்களை இக்கட்டுக்குள்ளாக்கும் என்று அஞ்சுபவர்களுக்கும் இடையில் சமநிலைப்படுத்திக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் புட்டின் இருக்கிறார். இரண்டாவது கூறிய கூறுகளுக்குள் அதிதேசியவாத மற்றும் அதி-வலது சக்திகள் திரண்டுள்ளன. தேசிய பாதுகாப்பு குறித்த இவர்களது கருத்தாக்கமானது இறுதியில் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட ஒரு தற்கொலைக் கொள்கையின் மீது தங்கியிருக்கிறது.

34. அனைத்துலகக் குழு ஏகாதிபத்தியப் போருக்கான அதன் எதிர்ப்பின் அடித்தளத்தை, தேசியவாதத்தின் எந்தவொரு வடிவத்திற்குமான ஆதரவின் மீது அமைப்பதில்லை, மாறாக முதலாளித்துவத்தை தூக்கிவீசி உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கு அத்தனை நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் மீதே அமைத்துக் கொள்கிறது. இந்த அடிப்படையான கோட்பாடு இப்போதைய சூழ்நிலையில் அசாதாரண ஆற்றலுடன் பொருந்தி நிற்கிறது.

35. உக்ரேன் மற்றும் ரஷ்யத் தொழிலாள வர்க்கம் ஒரு பொதுவான வரலாற்றை பகிர்ந்து கொள்கின்றன. ஒரு சகோதர யுத்தம் நடத்துவதற்கான எந்த விருப்பமும் அவற்றுக்கு இல்லை. உக்ரேனிலான புரட்சிகர இயக்கமானது, லியோன் ட்ரொட்ஸ்கி உள்ளிட சோசலிசத்திற்கான போராட்டத்திலான மாபெரும் தலைவர்கள் பலரையும் உருவாக்கியிருக்கிறது. ஜாரிசத்தை தூக்கிவீசுவதற்கும் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்கும் உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் தொழிலாளர்கள் தோழர்களாய் கைகோர்த்து போராடினர். ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர்கள் ஒன்றுபட்டு சண்டையிட்டனர். ரஷ்யா மற்றும் உக்ரேன் இரண்டின் தொழிலாளர்களுமே ஸ்ராலினிச ஆட்சியின் குற்றங்களுக்கு பலியாகியிருந்தனர், முதலாளித்துவ மீட்சியின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு நாடுகளிலும் உள்ள பாசிச தேசியவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் இல்லை பேசவுமில்லை.

36. ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்கான முன்நோக்கிய பாதை ஒரு உலகளாவிய முன்னோக்கை அவசியமாக்குகிறது. புட்டினுக்கான எதிர்ப்பு என்பது, ஏகாதிபத்தியத்துடன் அணிவகுத்து நிற்பதல்ல என்பது வலியுறுத்திக் கூறப்பட்டாக வேண்டும். ரஷ்ய மற்றும் சீன “ஏகாதிபத்தியம்” மீதான போலி-இடது கண்டனங்கள் இருபதாம் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டுகளது வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பற்றவையாக உள்ளன. மாறாக குட்டி-முதலாளித்துவ சக்திகள் வாஷிங்டனின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே அவை வெளிப்படுத்துகின்றன. ரஷ்ய தேசியவாதத்திற்கு தகவமைத்துக் கொள்ளாமல் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதும், ஏகாதிபத்தியத்திற்கு தகவமைத்துக் கொள்ளாமல் ரஷ்ய தேசியவாதத்தை எதிர்ப்பதும் அவசியமாகும்.

37. நடப்புப் பதட்டங்களின் உடனடி விளைவு என்னவாயிருந்தாலும், இந்த நெருக்கடிக்கு அமைதியான தீர்வு ஏதும் கிடையாது. 1914 முதலாம் உலகப் போரின் வெடிப்புக்கும் 1939 இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கும் முந்தைய காலகட்டம் பல “போர் திகிலூட்டல்”களைக் கண்டது. எனினும் ஒரு நெருக்கடி தீர்ந்தால் அது இன்னொன்றுக்கு வழிவிட்டு, இறுதியாக போர் வந்தே விட்டிருந்தது.

38. இப்போதைய ஒரு நெருக்கடி ஒரு அபாய எச்சரிக்கையாகும். ஏகாதிபத்தியம் நாசத்தை நோக்கி வழுக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உக்ரேனில் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு அணிதிரட்டப்பட்டாக வேண்டிய சமூக சக்தியாக சர்வதேசத் தொழிலாள வர்க்கம் உள்ளது. போருக்கு எதிரான போராட்டமானது சுரண்டல் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் கொலைபாதக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. ஏகாதிபத்தியமும் நிதி மூலதனமும் தமது கொள்ளைகளையும் இலாபங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக எத்தனை மரணங்களையும் ஏற்றுக்கொள்ளும். பெருந்தொற்றில் மில்லியன் கணக்கானோர் இறந்திருக்க அவர்களுடன் சேர்த்து போரிலும் மில்லியன் கணக்கானோர் இறக்கக் கூடாது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான போர்-எதிர்ப்பு இயக்கத்தை தொழிலாளர்கள் கட்டியெழுப்புவது மிகவும் அவசரமானதாக இருக்கிறது.

39. ஏகாதிபத்தியத்திற்கும் உலகப் போரை நோக்கிய செலுத்தத்திற்கும் எதிரான போராட்டத்தை வழிநடத்த வேண்டி, அனைத்துலகக் குழுவின் 2016 அறிக்கையில் பட்டியலிடப்பட்ட, கோட்பாடுகள் இப்போதைய நெருக்கடியில் மிகப்பெரும் அவசரஅவசியமாய் ஆகின்றன:

  • போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மிகப்பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், தனக்குப் பின்னால் மக்களின் அத்தனை முற்போக்கான கூறுகளையும் அணிதிரட்டி நிற்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும் சோசலிசத் தன்மையுடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டவும் இராணுவவாதம் மற்றும் போரின் அடிப்படைக் காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குமான போராட்டத்தின் மூலமாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.
  • ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் மற்றும் குழப்பத்திற்கு இடமளிக்கா வகையிலும் சுயாதீனமானதாகவும் மற்றும் குரோதமானதாகவும் இருக்க வேண்டும்.
  • அனைத்திற்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் அணிதிரட்டுவதாக இருக்க வேண்டும்.

40. போர் முனைப்புக்கு எதிராக இந்தக் கோட்பாடுகளது அடிப்படையில் போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களது அத்தனை பிரிவுகளுக்கும், அத்துடன் நடுத்தர வர்க்கத்தின் மிகக் கோட்பாடான மற்றும் துணிச்சல்மிக்க பிரிவுகளுக்கும் நாங்கள் அழைப்புவிடுகின்றோம்.

41. இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கோட்பாடுகளது அடிப்படையில், போருக்கு எதிரான ஒரு சர்வதேச வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவசரத் தேவையை அங்கீகரிக்கின்ற, உலகெங்கிலுமான அரசியல் போக்குகள் மற்றும் தனிமனிதர்களுடன் சகோதரத்துவத்துடனான கலந்துரையாடலை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் வரவேற்கின்றன.

Loading