முன்னோக்கு

ஐக்கிய நாடுகள் சபையில் பிளிங்கென்: ஒரு கொலின் பவல் தருணம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்காக பேசும் பைடென் நிர்வாகம், ஓர் உலகப் போரைத் தூண்டும் வரையிலும் கூட, ரஷ்யா உடனான மோதலைத் தீவிரப்படுத்த உறுதியாக இருப்பதை கடந்த 24 மணி நேர நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

வியாழன், பிப். 17, 2022, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் உரையாற்றுகிறார் (AP Photo/Richard Drew)

பைடென் நிர்வாகம் ஒரு சமரசத் தீர்வை விரும்பவில்லை: அது, இராணுவ வழிவகைகள் மூலமாகவாவது, ரஷ்யா முழுமையாக அடிபணிய வேண்டுமென விரும்புகிறது அல்லது உடைக்க விரும்புகிறது. கடந்த கால் நூற்றாண்டில் யூகோஸ்லாவியாவை உடைத்து, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் லிபியாவை அழித்துள்ள அமெரிக்கா மீண்டுமொருமுறை போர் பாதையில் இறங்கி உள்ளது.

முற்றுமுதலான போர் அபாயம் தீவிரமடைந்து வருகிறது. வியாழக்கிழமை, சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து, உக்ரேனிய இராணுவம் டொனெட்ஸ்கின் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளின் நிலைகள் மீது குண்டுவீசத் தொடங்கியது, இது ரஷ்ய-ஆதரவு படைகள் மீண்டும் குண்டுவீச்சுப் பகுதிக்குத் திரும்புமாறு செய்கிறது. இந்த தாக்குதல் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கிழக்கு உக்ரேன் துருப்புகளைச் சந்தித்து வந்த அடுத்த நாள் நடந்தது.

கடந்த சில வாரங்களாக, அமெரிக்க ஊடகங்கள் முடிவின்றி உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு 'உடனடியாக' நடக்கவிருப்பதாக தம்பட்டம் அடித்தன, அதுவும் புதன்கிழமை, பெப்ரவரி 16 என்று தேதியும் குறித்தன. அந்த தேதி வந்து சென்றுவிட்டது, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு எதுவும் நடக்கவில்லை. அதற்கு பதிலாக கிரிமியா மற்றும் பெலாருஸில் திட்டமிடப்பட்டிருந்த இராணுவ ஒத்திகைகளை முடித்து விட்டு ரஷ்யா அங்கிருந்து அதன் துருப்புகளின் ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றது.

துருப்புகள் திரும்பப் பெற்றப்பட்ட அந்த நடவடிக்கைக்கு விடையிறுப்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் ரஷ்யாவைக் கண்டிப்பதற்காக அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனை அனுப்பியது.

பிளிங்கெனின் நடவடிக்கையோ, பெப்ரவரி 2003 இல், ஈராக் போருக்கு முன்னதாக அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல் வழங்கிய இழிவார்ந்த உரையை வேறு வார்த்தைகளில் வழங்குவதாக இருந்தது. ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் என்று மதிப்பிடப்படுபவர்களின் உயிரைப் பறித்துள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்த பவல் அவரே தேசிய தொலைக்காட்சியில் அப்பட்டமாக பொய்யுரைத்தார்.

பொய்கள் மற்றும் பாசாங்குத்தனத்தின் காட்சிப்படுத்தலில், பிளங்கெனின் செயல்பாடு அவரின் முன்னோடியை விட இன்னும் அதிகமாக வெட்கமில்லாமல் இருந்தது.

'இரண்டு உலகப் போர்கள் மற்றும் பனிப்போரை அடுத்து உள்பொதியப்பட்ட சமாதானம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான அடிப்படைக் கோட்பாடுகள் அச்சுறுத்தலில் உள்ளன' என்று பிளிங்கென் அறிவித்தார். “ஒரு நாடு மற்றொரு நாட்டின் எல்லையை பலவந்தமாக மாற்ற முடியாது என்ற கொள்கை; ஒரு நாடு மற்றொரு நாட்டின் விருப்பங்கள் அல்லது கொள்கைகளை, அல்லது அது யாருடன் சேர வேண்டும் என்பதை ஆணையிட முடியாது என்ற கொள்கை; தேசிய இறையாண்மையின் கொள்கை' என்றார்.

பிளிங்கென் யாரை ஏமாற்ற நினைக்கிறார்? உலகெங்கிலுமான நாடுகளை குறி வைத்து பல தசாப்தங்களாக தொடர்ச்சியான தலையீடுகள், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள், போர்கள் மற்றும் சிஐஏ ஆதரவுடன் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஓர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக அவர் பேசி இருந்தார்.

1990 களில், கிளின்டன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா, அதன் நேட்டோ கூட்டாளிகளுடன் சேர்ந்து, யூகோஸ்லாவியாவின் 'எல்லைகளை' வலுக்கட்டாயமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தது, இது உச்சக்கட்டமாக கொசோவோவின் பிரிவினையைச் சேர்பியா ஏற்றுக்கொள்ள நிர்பந்திப்பதற்காக அதன் மீது 78 நாள் குண்டுவீச்சில் போய் முடிந்தது.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 'அவர்களின் விருப்பத்தெரிவுகள் மற்றும் கொள்கைகளை ஆணையிடும்' நோக்கில் எண்ணற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை அமெரிக்கா தூண்டியது, குவாத்தமாலா ஜனாதிபதி ஜாகோபோ ஆர்பென்ஸை (Jacobo Árbenz) தூக்கி எறிந்தமை (1954); சிலி ஜனாதிபதி சால்வடார் அலெண்டே (Salvador Allende) தூக்கியெறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை (1973); கிரனாடா படையெடுப்பு (1983); ஹைட்டியில் 1994 இல் அமெரிக்க இராணுவ நிலைநிறுத்தல்கள் மற்றும் 2004 இல் சிஐஏ-ஆதரவு சதி உட்பட அங்கே மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட தலையீடுகள்; இன்னும் இதர செயல்பாடுகளும் உள்ளடங்கும்.

கடந்த 30 ஆண்டுகளாக, ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் படையெடுப்பு, குண்டுவீச்சு அல்லது உள்நாட்டுப் போரைத் தூண்டியதன் மூலம் அமெரிக்கா திட்டமிட்டு 'தேசிய இறையாண்மைக் கொள்கை' மற்றும் அடிப்படை சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது. 2020 ஜனவரியில் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமான் உட்பட அது தேர்ந்தெடுக்கும் யாரொருவரையும் படுகொலை செய்வதற்கும், எந்தவொரு நாட்டின் மீதும் டிரோன் தாக்குதல் நடத்துவதற்கும் அதற்கு உரிமை இருப்பதாக பிரகடனப்படுத்தி உள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பு பற்றி குற்றஞ்சாட்டும் வடிவத்தில், ரஷ்யாவுடன் ஒரு மோதலைத் தூண்ட அமெரிக்கா எவ்வாறு திட்டமிடுகிறது என்பதை பிளிங்கென் விளக்கினார். 'முதலில், ரஷ்யா அதன் தாக்குதலுக்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது ரஷ்யா உக்ரேன் மீது பழிசுமத்தும் ஒரு வன்முறை சம்பவமாக இருக்கலாம், அல்லது உக்ரேனிய அரசாங்கத்திற்கு எதிராக ரஷ்யா சுமத்தும் ஒரு மூர்க்கமான குற்றச்சாட்டாக இருக்கலாம், இதில் 'ரஷ்யாவுக்குள் பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பு என்று அழைக்கப்படும் ஜோடிக்கப்பட்ட சம்பவம்', 'பொதுமக்கள் மீது நடத்தப்படும் ட்ரோன் தாக்குதல்' அல்லது 'இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தும் ஒரு போலியான தாக்குதல், உண்மையான தாக்குதலும் கூட' உள்ளடங்கும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்ய-சார்பு பிரிவினைவாதிகளுக்கு எதிராக அல்லது ரஷ்யாவுக்கு உள்ளேயே கூட ஏதோ விதத்தில் குற்றத்தை நடத்த, பிளிங்கென், உக்ரேனிய அரசு மற்றும் இராணுவத்துடன் ஒருங்கிணைந்துள்ள பாசிச துணை இராணுவக் குழுக்களுக்கு வரம்பிலா அதிகாரத்தை வழங்குகிறார். ரஷ்யாவின் எந்த விடையிறுப்பும் அது 'தவறாக' நடந்து கொண்டதற்கான ஆதாரமாக மேற்கோள்காட்டப்படும்.

உண்மையில் சொல்லப் போனால், துல்லியமாக இந்த விதத்தில் தான் வியாழக்கிழை டொனெட்ஸ்கில் ரஷ்ய-சார்பு பிரிவினைவாதிகள் மீது உக்ரேனிய இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலுக்கு அமெரிக்க ஊடகங்கள் விடையிறுத்தன. நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது, 'கடுமையான பீரங்கிக் குண்டுவீச்சு… படையெடுக்க அது சாக்குபோக்கை எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்கா கூறும் சாக்குபோக்கை இது இப்போது மாஸ்கோவுக்கு வழங்கக்கூடும்.”

ரஷ்யாவின் ஆக்ரோஷமான நோக்கங்களுக்கான அதன் ஆதாரத்தை அமெரிக்கா 'மிக விரிவாக முன்வைக்கிறது' என்று அறிவித்து, உக்ரேன் மீதான ஒரு படையெடுப்பை ரஷ்யா எவ்வாறு நியாயப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய அவர் விபரங்களை பிளிங்கென் நிறைவு செய்தார். உண்மையில், பிளிங்கென் எதையும் குறித்து எந்த 'விவரங்களும்' வழங்கவில்லை. அவரது பேச்சு முழுவதும் 'அமெரிக்க உளவுத்துறை' தீர்மானங்களைக் குறித்த ஆதாரமற்ற கூற்றுகளே நிரம்பி இருந்தன.

போரை நியாயப்படுத்த பொய் சொல்வதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்வரலாறு மிகவும் இழிவானது, பிளிங்கெனே கூட மறைமுகமாக இதை ஒப்புக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டார். 'இப்போது, சிலர் எங்கள் தகவல்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள் என்பது என் மனதில் உள்ளது,' என்று கூறிய அவர், 'முடிவாக உளவுத்துறை உறுதிப்படுத்திய முந்தைய நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. ஆனால் நான் தெளிவாக கூறுவது இது தான்: இன்று நான் இங்கே ஒரு போரைத் தொடங்குதவற்காக அல்ல, மாறாக அதைத் தடுப்பதற்காக வந்திருக்கிறேன்,” என்றார்.

மரணித்த ஈராக்கியர்களின் ஆவிகள் ஐநா பாதுகாப்பு அவைக் கூட்டத்தை ஆட்டிப்படைத்தன. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முந்தைய பொய்கள் ஏற்படுத்திய இரத்தத்தை —'முடிவாக [அது] உளவுத்துறை உறுதிப்படுத்தியவை' அல்ல— அவ்வளவு எளிதில் கை கழுவி விட முடியாது. அவர் 'ஒரு போரைத் தொடங்குவதற்காக அல்ல, மாறாக ஒரு போரைத் தடுக்க' வந்ததாக பிளிங்கெனின் அறிவிப்பு, அவரின் மொத்த உரையில் மிகவும் அப்பட்டமான பொய்யாக நின்றது.

அமெரிக்கா, முற்றிலும் பொறுப்பில்லாமல், உலகை ஒரு புதிய உலகப் போருக்குள் தள்ள அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பைடென் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் பைத்தியக்காரத்தனத்தின் ஓர் அம்சம் உள்ளது, ஆனால் ஒரு திட்டவட்டமான தர்க்கமும் உள்ளது.

விஷமப்பிரச்சார போர்வெறிக்கு அடிப்படையான மற்றும் ஒன்றோடொன்று பிணைந்த இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, புவிசார் அரசியல் கணக்கீடுகள் உள்ளன. இப்போது கட்டவிழ்ந்து வரும் இராணுவ நடவடிக்கை பல ஆண்டுகளாக அல்லது பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டு வந்தவை ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை, அமெரிக்கா அதன் உலகளாவிய இராணுவ நடவடிக்கைகள் மீதிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிடுவதற்கான ஒரு வாய்ப்பாக பார்த்தது. ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், ரஷ்யாவை சுற்றி வளைக்க முற்படும் நேட்டோவின் தொடர்ச்சியான கிழக்கு நோக்கி விரிவாக்கத்தை அமெரிக்கா மேற்பார்வையிட்டுள்ளது. 1941 இல் ஹிட்லர் செய்தது போலவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் ரஷ்யாவில் கொள்ளையடிப்பதற்கான பரந்த அரங்கைக் காண்கின்றன.

இரண்டாவது, இன்னும் தீர்க்கமாக, அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்குள் வெடிப்பார்ந்த சமூக மற்றும் உள்நாட்டு நெருக்கடி அதிகரித்து வருகிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கோவிட்-19 பெருந்தொற்று ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அமெரிக்கர்களின் உயிர்களைப் பறித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சுமார் 15,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

சோவியத் ஒன்றியத்திற்கான கடைசி அமெரிக்கத் தூதர் இரண்டாம் ஜாக் F. மாட்லாக் (Jack F. Matlock, Jr) புதன்கிழமை Consortium News இல் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, 'ஓர் உள்நாட்டு அரசியல் தரப்புக்கு சேவை செய்வதற்காக, அமெரிக்க ஊடகங்களின் முக்கிய கூறுபாடுகளால் ஒட்டுமொத்தமாக பெரிதுபடுத்தப்பட்ட ஒரு விரிவான கேலிக்கூத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகத்தை என்னால் நிராகரிக்க முடியவில்லை. அதிகரித்து வரும் பணவீக்கம், ஓமிக்ரோன் சீரழிவுகள், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதற்கு (பெரும்பாலும் நியாயமற்ற) பழிசுமத்தல், அத்துடன் Build Back Better சட்டமசோதாவுக்கு அவர் சொந்தக் கட்சியின் முழு ஆதரவைப் பெறத் தவறியமை ஆகியவற்றை முகங்கொடுத்துள்ள பைடென் நிர்வாகம் இந்தாண்டு காங்கிரஸ் சபை தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்ற நிலையில் செல்வாக்கு விகிதம் குறைந்து தத்தளித்து வருகிறது.

மாட்லாக் பனிப்போரின் போது முக்கிய வெளியுறவுக் கொள்கை பதவிகளை வகித்தார் மற்றும் ரஷ்ய சார்பு அனுதாபங்களைக் குற்றம் சாட்ட முடியாது. நெருக்கடிக்கு அமெரிக்காவின் தூண்டுதல் பற்றிய அவரது குற்றச்சாட்டு இன்னும் பேரழிவு தரக்கூடியது.

தீர்க்க முடியாத நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ள அமெரிக்க ஆளும் வர்க்கம், அதற்கு முந்தைய எண்ணற்ற திவாலான ஆளும் வர்க்கங்களைப் போலவே, இவற்றிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழியாக போருக்குத் திரும்புகிறது. இருப்பினும், இந்த பெருந்தொற்றால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கையில், அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை ரஷ்யாவுடனான ஒரு போர் ஏன் தீர்க்கும் என்பதை விளக்குவதற்கு ஆளும் வர்க்கம் அக்கறை கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அதன் பொய்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பரப்ப உடந்தையான ஊடகங்களை நம்பி, நாட்டையும் மொத்த உலகையும் வெகுகாலத்திற்குப் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு போருக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்வெறி அடிப்படையில் பலமான நிலைமையில் இருந்து எழவில்லை, மாறாக பலவீனம் மற்றும் விரக்தியிலிருந்து எழுகிறது. இது தொழிலாள வர்க்கத்திடையே சமூக கோபம் மற்றும் எதிப்பின் பாரிய வெடிப்பை உருவாக்கி வரும் ஓர் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைமைக்கு அதன் விடையிறுப்பாகும்.

இந்த புறநிலை நிகழ்வுபோக்கை சோசலிசத்திற்கான ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக மாற்றுவதே அவசர பணியாகும். இதற்கு, வேறெதையும் விட மேலாக, போர், சமத்துவமின்மை, சர்வாதிகாரம், மற்றும் இந்த முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிராக ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பது அவசியமாகும்.

Loading