போர் உரையில், ஜேர்மன் சான்ஸ்லர் ஷோல்ஸ் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதமயமாக்க பாதுகாப்புத்துறைக்கான செலவுத்திட்டத்தை மூன்று மடங்கு உயர்த்தினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei, SGP) உலக சோசலிச வலைத் தளமும் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD) நேற்று அறிவித்த போர் முன்னெடுப்பைக் கண்டிக்கிறது.

ஜேர்மன் வரலாற்றின் இருண்ட காலங்களை நினைவூட்டும் உரையில், ஷோல்ஸ் ரஷ்யாவை அச்சுறுத்தி மற்றும் உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் துருப்புக்களின் பாரிய அதிகரிப்பு ஆகியவற்றை அறிவித்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்னரான மிகப்பெரிய மறுஆயுதமமாக்கல் திட்டத்தை அறிவித்ததுடன் இப்பேச்சு அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் (AP Photo/Michael Sohn)

இரண்டு உலகப் போர்களில் அதனது குற்றங்கள் இருந்த போதிலும், ஆளும் வர்க்கம் மீண்டும் போர்ப்பாதையில் உள்ளது என்பதை காட்டுவதில் முழு நாடாளுமன்ற விவாதமும் எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கு, உக்ரேன் மீதான புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை, நீண்டகாலமாக விரும்பப்படும் மற்றும் நீண்டகாலமாக தயாரிக்கப்பட்ட இராணுவமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறது.

'சிறந்த தளபாடங்கள், நவீன தளபாடங்கள், அதிக பணியாளர்களுக்கு நிறைய பணம் செலவாகும்' என்று ஷோல்ஸ் கூறினார். 'இந்த நோக்கத்திற்காக, மத்திய அரசாங்கம் ஒரு ஜேர்மன் இராணுவ சிறப்பு நிதியை அமைக்கும்' மற்றும் அதற்கு '2022 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 100 பில்லியன் யூரோக்களை ஒரே நேரத்தில் வழங்கும். தேவையான முதலீடுகள் மற்றும் ஆயுதமயமாக்கல் திட்டங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்துவோம்” என்றார்.

'அடுத்த தலைமுறை போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள்', 'யூரோட்ரோன்' மற்றும் 'ஆயுதமேந்திய ஹெரான் ட்ரோனை பெறுதல்' ஆகியவை மறுஆயுதமயமாக்கல் திட்டத்தின் முக்கிய இலக்குகளில் சிலவாகும். … ஜேர்மனியின் “அணு ஆயுதப் பகிர்வு” மூலம் காலாவதியான டொர்னாடோ ஜெட் விமானங்களுக்கு பதிலாக நவீன மாற்றீடும் சரியான நேரத்தில் வாங்கப்படும்” என்பது ரஷ்யாவை இலக்காகக் கொண்டதாகும். மேலும் அவர், “யூரோஃபைட்டர் எலக்ட்ரானிக் போருக்கு பொருத்தமானதாக இருக்கும். F-35 போர் விமானம் போக்குவரத்து விமானமாக பயன்படுத்தப்படும்” என்று தொடர்ந்தார்.

ஜேர்மனிக்கு 'பறக்ககூடிய விமானங்கள், பயணிக்கக்கூடிய கப்பல்கள் மற்றும் அவர்களின் பணிகளுக்கு பொருத்தமாக ஆயுதம்தாங்கிய படையினர்' தேவை என்று அவர் உற்சாகப்படுத்தினார். 'இதுதான் முக்கிய பிரச்சினை. நமது அளவு மற்றும் ஐரோப்பாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாட்டினால் இது நிச்சயமாக அடையக்கூடியது. ஆனால், ஒருவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. மற்றும் 'சிறந்த தளபாடங்கள், நவீன தளபாடங்கள் மற்றும் அதிக பணியாளர்களுக்கு நிறைய பணம் செலவாகும்' என்று அவர் கூறினார்.

ஜேர்மன் இராணுவத்தின் 'சிறப்பு நிதி'க்கு மேலதிகமாக, அரசாங்கம் இராணுவ செலவினங்களில் பாரிய அதிகரிப்புக்கு திட்டமிட்டுள்ளது. 'இனிமேல், நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதத்திற்கும் மேலாக எங்கள் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வோம்' என்று ஷோல்ஸ் அறிவித்தார். 'ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற குழுக்களிடமும் நான் இங்கு கேட்டுக்கொள்கின்றேன்: சிறப்பு நிதியை ஜேர்மன் அரசியலமைப்பில் அடிப்படை சட்டமாக எழுதுவோம்' என்றார்.

ஷோல்ஸ் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பிரம்மாண்டமானவை. ஜேர்மன் பாதுகாப்பு செலவினங்களை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக உயர்த்துவது 24 பில்லியன் யூரோக்களாக அதிகரித்து 71 பில்லியன் யூரோக்களை அடையும். இது சுகாதாரத்துறை வரவு-செலவுத் திட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் (2021 இல் €35.3 பில்லியன்). 'சிறப்பு நிதியின்' கூடுதல் 100 பில்லியன் யூரோக்கள் முழு கல்வி மற்றும் ஆராய்ச்சி வரவு-செலவுத் திட்டத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும் (2021 இல் €20.8 பில்லியன்). இதுவரை வரவு-செலவுத் திட்டத்தில் உள்ள 50 பில்லியன் யூரோக்களுடன் சேர்ந்து, இந்த ஆண்டு இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் இது மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்த பைத்தியக்காரத்தனத்திற்கான விலையை யார் பொறுப்பேற்பார்கள் மற்றும் அது என்ன நோக்கத்திற்காக உதவுகிறது என்பது தெளிவாகிறது. கல்வி மற்றும் சமூக சேவைகளில் மேலும் வெட்டுக்கள் செய்யப்படுகின்றன. மேலும் ஒரு கொடிய தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார பராமரிப்பு மற்றும் பராமரிப்பு துறைகளுக்கு போதுமான பணம் கூட இல்லை என்று கூறப்படுகையில் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்திற்கான பாரிய அதிகரிப்பு அடிப்படைச் சட்டத்தில் எழுதப்பட வேண்டும். இதன் மூலம் பிரமாண்டமான ஆயுதமயமாக்கல் திட்டங்களுக்கு நிரந்தரமாக நிதியளிக்க வேண்டும் மற்றும் ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான போருக்குத் தயாராக வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

புட்டினை 'அவரது போர் போக்கிலிருந்து' தடுக்க 'செயல்படுவதற்கான பணி' என்று ஷோல்ஸ் இதனை விவரித்தார். இந்த போர் 'உக்ரேனுக்கு ஒரு பேரழிவு. ஆனால், இந்தப் போர் ரஷ்யாவுக்குப் பேரழிவாகவும் அமையும்” என்று அச்சுறுத்தினார். வேறொரு தருணத்தில், 'புட்டினின் ரஷ்யா என்ன திறன்களைக் கொண்டுள்ளது, இன்றும் எதிர்காலத்திலும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள நமக்கு என்ன திறன்கள் தேவை?' என்று கேட்டார்.

'ஜேர்மனி உக்ரேனுக்கு நாட்டைப் பாதுகாக்க ஆயுதங்களை வழங்கும்' என்று சனிக்கிழமையன்று மத்திய அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அவர் கைதட்டலுக்கு மத்தியில் தெரிவித்தார். கூடுதலாக, ஜேர்மன் இராணுவம் 'ஏற்கனவே கிழக்கு கூட்டணி பங்காளிகளுக்கு அதன் ஆதரவை விரிவுபடுத்தியுள்ளது' மேலும் 'அதைத் தொடரும்.' ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ கட்டமைப்பிற்கு ஜேர்மனியின் பங்களிப்பின் மேலோட்டத்தை ஷோல்ஸ் வழங்கினார். இது போருக்கான நேரடி தயாரிப்புகளின் வடிவத்தை அதிகரித்தளவில் எடுத்து வருகிறது.

'லித்துவேனியாவில், நாங்கள் நேட்டோ பணிக்குழுவை வழிநடத்துகிறோம், நாங்கள் எங்கள் படைகளை அங்கு அதிகரித்துள்ளோம்,' என்று ஷோல்ஸ் கூறினார். 'நாங்கள் ருமேனியாவில் எங்கள் விமானக் காவல் பணியை நீட்டித்து விரிவாக்கியுள்ளோம். ஸ்லோவாக்கியாவில் ஒரு புதிய நேட்டோ பிரிவை உருவாக்குவதில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். வடக்கு மற்றும் பால்டிக் கடல்கள் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக நமது கடற்படை கூடுதல் கப்பல்களுடன் உதவுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளின் வான்வெளியை விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் பாதுகாப்பதில் பங்கேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

ஒரு ஜேர்மன் அதிபரின் வாயிலிருந்து, ரஷ்யாவிற்கு எதிரான இத்தகைய போர் அச்சுறுத்தல்கள் இரட்டிப்பு குற்றவியல் தன்மையுடையதாகும். இரண்டாம் உலகப் போரின்போது, ஜேர்மனி சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்து, அழிப்புப் போரை நடத்தியது. இதில் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் மற்றும் 6 மில்லியன் யூதர்கள் தொழில்துறை ரீதியாக கொல்லப்பட்டனர்.

இந்த குற்றங்கள் ஜேர்மனியின் ஆளும் வர்க்கத்திற்கு போதுமானதாக இல்லைப்போல் தெரிகின்றது. எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், தேவைப்பட்டால், மூன்றாம் உலகப் போரில் மனிதகுலம் முழுவதையும் தியாகம் செய்ய அது தயாராக உள்ளது.

'ஆனால் மற்றும் சிலவேளை என்பது இல்லை. நாங்கள் நேட்டோவிற்கு உதவும் எங்கள் கடமையில் நிற்கிறோம்,' என்று ஷோல்ஸ் கூறினார். 'நேட்டோ கூட்டின் பிரதேசத்தின் ஒவ்வொரு சதுர மீட்டரையும் பாதுகாக்க எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எங்கள் உறுதியை ஜனாதிபதி புட்டின் குறைத்து மதிப்பிடக்கூடாது.' நாங்கள் 'இதனை மிகவும் கவனத்துடன் கூறுகின்றோம். நேட்டோவில் ஒரு நாட்டைச் சேர்ப்பதன் மூலம், எமது நாட்டை பாதுகாப்பதுபோல் ஒரு நட்பு நாடாக அந்த நாட்டையும் பாதுகாப்பது நமது விருப்பமாகும்.

'உதவி செய்ய வேண்டியது எமது கடமை' என்ற ஷோல்ஸின் உறுதிமொழியானது பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும். நேட்டோ உடன்படிக்கையின் பிரிவு 5 இன்படி, 'ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'தரப்பினர்களுக்கு' எதிரான ஆயுதமேந்திய தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்' மற்றும் 'ஆயுதப் பலத்தைப் பயன்படுத்துதல் உட்பட உதவி வழங்குவதற்கு' கூட்டணி கடமைப்பட்டுள்ளது என்கிறது.

உக்ரேன் போர் கிழக்கு ஐரோப்பிய நேட்டோ நாட்டில் பரவினால், அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவிற்கு எதிராக முழு நேட்டோ கூட்டணியுடன் இணைந்து போருக்கு செல்வதற்கு ஷோல்ஸ் உறுதியளிக்கிறார்.

'ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கமைப்பை' தகர்ப்பதற்காக ஒரே இரவில் மீண்டும் ஐரோப்பாவிற்கு போரைக் கொண்டு வந்த புட்டினுக்கான பிரதிபலிப்பே ஜேர்மன் மறுஆயுதமாக்கல் என்ற ஷோல்ஸின் கூற்று ஒரு பிரச்சார பொய்யாகும். 'சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை' பாதுகாப்பதில் மேற்குலகம் அக்கறை கொண்டுள்ளது என்ற கூற்றும் அவ்வாறான ஒன்றே.

உண்மையில், நேட்டோ சக்திகள் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக ஏகாதிபத்திய நலன்களுக்காகப் போரை நடத்தி வருகின்றன. மேலும் ஐரோப்பா உட்பட முழு நாடுகளையும் இந்த செயல்பாட்டில் இடிபாடுகளாக ஆக்கியுள்ளன. 1999 இல், ஜேர்மனியும் இணைந்த வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டணி, கொசோவோவின் பிரிவினையைத் திணிக்க சேர்பியா மீது 78 நாட்கள் குண்டுவீசித் தாக்கியது.

சமீபத்திய ஆண்டுகளில், ஆளும் வர்க்கம் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. 2013 இல், முன்னணி பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், இராணுவப் பணியாளர்கள், வணிக அதிகாரிகள் மற்றும் அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகளும் SWP (Stiftung Wissenschaft und Politik) 'புதிய சக்தி, புதிய பொறுப்பு' என்ற கட்டுரையை உருவாக்கி வெளியிட்டனர். ஒரு 'வர்த்தக மற்றும் ஏற்றுமதி நாடாக' அதன் உலகளாவிய நலன்களை இராணுவரீதியாக வலியுறுத்துவதற்காக ஜேர்மனி ஒரு ஆக்கிரோஷமான வெளிநாட்டு கொள்கையை மேற்கொள்ளவேண்டும் என அறிவித்தனர்.

2014 இல் முனிச் பாதுகாப்பு மாநாட்டில், அப்போதைய கூட்டாட்சி ஜனாதிபதி ஜோகாயிம் கவுக் மற்றும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த முன்னாள் வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்டைன்மையர் (SPD) ஆகியோர் உத்தியோகபூர்வமாக இத்திட்டங்களை அறிவித்தனர். குறிப்பிடத்தக்க வகையில், ஷோல்ஸின் உரையின் போது கவுக் நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் அமர்ந்து உக்ரேனிய தூதரை வெளிப்படையாக கட்டிப்பிடித்தார்.

2014 மாநாட்டிற்கு சில நாட்களுக்குப் பின்னர், பேர்லினும் வாஷிங்டனும், பாசிச சக்திகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் ரஷ்ய-எதிர்ப்பு ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவர கியேவில் ஒரு சதியை ஏற்பாடு செய்தனர். அப்போதிருந்து, நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் அதன் இராணுவ நிலைநிறுத்தங்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி மற்றும் உக்ரேன் மீதான புட்டினின் தாக்குதலை உண்மையில் தூண்டியது.

இந்த தலையீடு இப்போது முழு ஆளும் வர்க்கத்தாலும் ஒரு தீவிர போர்-சார்பு பிரச்சாரத்திற்காக அனைத்து அணிகளை கூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

'எனக்கு இனி எந்தக் கட்சிகளும் தெரியாது, எனக்கு ஜேர்மனியர்களை மட்டுமே தெரியும்,' எனக் கூறி 1914 இல் ஜேர்மனி முதலாம் உலகப் போரில் நுழைந்தபோது கெய்சர் வில்ஹெல்ம் II மகிழ்ச்சியடைந்தார். மேலும் ரைச்ஸ்டாக்கில் இருந்த அனைத்துக் கட்சிகளும் போர் கடன்களுக்கு ஆதரவாக வாக்களித்தன.

நேற்று சான்சிலருக்கு அனைத்து பாராளுமன்ற குழுக்களும் மரியாதை செலுத்தியபோது எழுந்த போர்முழக்கம் இதை நினைவுபடுத்துகிறது. ஷோல்ஸ் பேசியபோது, கூட்டணி அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) எதிர்ப்புப் பிரதிநிதிகள் தங்கள் இருக்கைகளில் மீண்டும் மீண்டும் எழுந்தும் இருந்தும் வரவேற்றனர். இடது கட்சி மற்றும் ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டின் (AfD) பிரதிநிதிகளும் கைதட்டி ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ ஆக்கிரமிப்புக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் பேசினர்.

'புட்டின் ஆக்கிரமிப்பாளர், இங்கே உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவரது பெரும் சக்தி கற்பனைகள் நிஜமாகிவிடக் கூடாது” என்று இடது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அமிரா முகமது அலி கோரினார்.

கிறிஸ்தவ சமூக ஒன்றிய தலைவர் பிரீட்ரிஸ் மெர்ஸ் 'ஒரு நல்ல அரசாங்கப் பிரகடனத்திற்காக' ஷோல்ஸைப் பாராட்டி, மேலும் ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக மறுஆயுதமயமாக்கலைத் திணிக்க தனது ஆதரவை அவருக்கு உறுதியளித்தார். 'எங்கள் ஆயுதப் படைகளின் விரிவான மேம்படுத்தலை நீங்கள் விரும்பினால்-இன்றிலிருந்து வெளிப்படையாக உங்களிடமிருந்தே அதை நாங்கள் விரும்புகிறோம். எதிர்ப்பிற்கு மத்தியிலும் கூட நாங்கள் உங்களுடன் இந்தப் பாதையில் செல்வோம்' என்று மெர்ஸ் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே போர் வெறியை எதிர்க்கும் ஒரேயொரு கட்சியாகும். போருக்கான காரணமான முதலாளித்துவ இலாப அமைப்பை அகற்றி ஒரு உலகளாவிய சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப நாங்கள் போராடுகிறோம். ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் ஆக்கிரோஷமான நிலைப்பாடு மற்றும் அதிகரித்து வரும் ஒரு பேரழிவு தரும் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் ஆகியவை இந்தப் போராட்டத்தினை மிகவும் முக்கியமானதாக்குகின்றன.

Loading