எரிமலையின் விளிம்பில் பொறுப்பற்ற அரசியல் விளையாடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 23, 1939 இல், மெக்சிகோவில் நாடுகடத்தப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி, பத்திரிகையாளர்களைச் சந்தித்து சர்வதேச நிலைமையைப் பற்றிய தனது மதிப்பீட்டை வழங்கினார். கொயோகானில் உள்ள ஒரு வில்லாவின் சுவர்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும், உலக அரசியலைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் புரிதல் ஈடு இணையற்றது.

ஆங்கிலத்தில் பேசிய ட்ரொட்ஸ்கி, கூடியிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்: “முதலாளித்துவ அமைப்பு ஒரு முட்டுக்கட்டையான நிலையில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, இந்த முட்டுக்கட்டையிலிருந்து சாதாரண, சட்டபூர்வமான மற்றும் அமைதியான வழியை நான் காணவில்லை. ஒரு மாபெரும் வரலாற்று வெடிப்பினால் மட்டுமே அவ்வழியை உருவாக்க முடியும்.

'வரலாற்று வெடிப்புகள் இரண்டு வகையானவை — போர்கள் மற்றும் புரட்சிகள். இது இரண்டும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” அனைத்து அரசாங்கங்களும் நிறுவனமயப்பட்ட வெகுஜனக் கட்சிகளும் நிகழ்வுகளால் திகைப்பில் மூழ்கியுள்ளன. ஒரு குறிப்பிடத்தக்க உருவகத்தில், ட்ரொட்ஸ்கி அவர்களின் செயல்களை 'ஒரு வெடிப்புக்கு முன்னர் எரிமலையின் சாய்வான பக்கத்தில் குழந்தை விளையாடுவதுடன்' ஒப்பிட்டார்.

ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு விரைவில் நிரூபிக்கப்பட்டது. ஏகாதிபத்திய இரண்டாம் உலகப் போரின் எரிமலை ஐந்து வாரங்களுக்குப் பின்னர் வெடித்தது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக உலகைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் விளக்கம் தற்போதைய சூழ்நிலையில் அசாதாரணமான பொருத்தத்தைப் பெறுகிறது. அனைத்து அரசாங்கங்களும் திகைப்பூட்டும் அளவுக்கு பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்கின்றன.

ஆனால் அனைத்து அரசாங்கங்களிலும் மிகவும் பொறுப்பற்றது அமெரிக்க அரசாங்கமாகும். அதன் தலைவர்கள் எரிமலையின் பக்கவாட்டில் அதன் விளிம்பு வரை ஏறி, எரிமலையின் சூடான சிவப்பு மற்றும் குமிழிகள் எழும் மையத்தில் வெடிமருந்துகளை வீசுகிறார்கள்.

ஜூன் 16, 2021 புதன்கிழமை, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஜனாதிபதி ஜோ பைடென் சந்தித்தார். (AP Photo/Patrick Semansky)

உக்ரைன் மீதான பேரழிவுகரமான படையெடுப்பைத் தவிர வேறு வழியில்லை என்ற நோக்கத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு மூலையில் தள்ளிவிட்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் தன்னால் கட்டுப்படுத்த முடியாத மற்றும் அதன் விளைவுகளை முன்கூட்டி அவரால் கணிக்க முடியாத இராணுவ, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக செயல்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

அமெரிக்காவிற்குள்ளேயே தீவிர சமூகப் பதட்டங்களைக் கட்டியெழுப்புவதில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் அதை எதிர்ப்பதற்கும் ஒரு வழிமுறையாகப் போரை நாடும் ஒரு ஆட்சியின் நடவடிக்கையாக மட்டுமே இந்த அளவிலான பொறுப்பற்ற தன்மையை விளக்க முடியும்.

உள்நாட்டுப் போரின் சகாப்தத்தில் இருந்து இணையற்ற வகையில் உள்நாட்டு நெருக்கடியில் அமெரிக்கா உள்ளது. இந்த நெருக்கடி நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது.

1) நாட்டைப் பேரழிவிற்கு உட்படுத்திய கோவிட்-19 தொற்றுநோயின், உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்குகிறது.

2) உள்நாட்டுப் போருடன் மட்டுமே பொருந்தக்கூடிய அளவிலான அரசியல் நெருக்கடி. ஜனவரி 6, 2021 அன்று, அரசியலமைப்பை வன்முறையால் தூக்கியெறிந்து, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதியின் நுழைவைத் தடுக்கவும் பதவியில் இருக்கும் ஜனாதிபதியால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

3) பெடரல் ரிசர்வ் வரம்பற்ற பணப்புழக்கத்தை உட்செலுத்துவதன் மூலம், ஒட்டுண்ணி ஊகங்களால் ஆதரிக்கப்படும் பொருளாதார அமைப்பின் வளர்ந்து வரும் பலவீனம். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், விலை பணவீக்கத்தை இனி கட்டுப்படுத்த முடியாதுள்ளது.

4) நான்கு தசாப்தங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர், வர்க்கப் போராட்டம் 2021 இல் மீண்டும் எழுந்தது. அதிகாரத்துவ மற்றும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியின் வடிவத்தை எடுத்துக் கொண்ட பெரும் தொழில்துறை வேலைநிறுத்தங்கள் வெடித்தன. தொழிலாள வர்க்கம் தீவிரமயமாகி வருகிறது என்பது வெளிப்படையானது.

இந்த நெருக்கடிகளின் இடைத்தொடர்பு ஆளும் உயரடுக்கிற்குள் அதிக அளவு கவலை மற்றும் நோக்குநிலையற்ற தன்மையை உருவாக்கியது. உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே போரைத் தூண்டும் பைடென் நிர்வாகத்தின் முடிவில் இது ஒரு முக்கிய காரணியாகும். போரானது, 'தேசிய ஒற்றுமை' உணர்வை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

ஆனால் போரைத் தூண்டுவது துல்லியமாக எதிர் விளைவை ஏற்படுத்தும். இது அமெரிக்க நெருக்கடியின் அனைத்துக் கூறுகளையும் தீவிரப்படுத்தும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தை முடுக்கி விரிவுபடுத்தும். இடைவிடாத போர்ப் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தின் மீது சிறிதளவு தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. அது அமெரிக்காவிற்குள் ஒரு சமூக நெருக்கடியின் மத்தியில் சமூக வளங்களைத் திசைதிருப்புவதையும், மற்றொரு இராணுவப் போரில் உயிர்களை செலவழிப்பதையும் எதிர்க்கிறது.

ரஷ்ய-எதிர்ப்பு வெறி, அமெரிக்காவில் சமூக உணர்வின் உண்மையான சூழ்நிலைகள் அல்லது கருத்துக்களில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் ஒன்றல்ல. மாறாக, இது வசதியான மற்றும் பிற்போக்குத்தனமான உயர் நடுத்தர வர்க்கத்தை வாட்டி வதைக்கும் போர்வெறி காய்ச்சலின் வெப்ப அளவீடு ஆகும்.

தொழிலாளர்கள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக வெளிப்படையான போராட்டத்திற்கு உந்தப்படுவதால், சமூக வாழ்வின் அடிப்படைப் போக்குகள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும். இந்தப் போராட்டங்கள் ஒரு சர்வதேச தன்மையைப் பெறும், மேலும் அவை ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தின் சமூக அடித்தளத்தை அமைக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி போருக்கு எதிரான அதன் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு இதுதான்.

Loading