முன்னோக்கு

புட்டின் அரசாங்கத்தின் உக்ரேன் படையெடுப்பையும் அமெரிக்க-நேட்டோ போர்வெறிக் கூச்சலையும் எதிர்ப்போம்! ரஷ்ய, உக்ரேன் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக நிற்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் உக்ரேனில் ரஷ்ய இராணுவத் தலையீட்டைக் கண்டிக்கின்றன. அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு சோசலிஸ்டுகள் மற்றும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட வேண்டும். 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட பேரழிவை விளாடிமிர் புட்டின் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் முற்றிலும் பிற்போக்குத்தனமான கருத்தியலான ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் தடுக்க முடியாது.

2022 பிப். 24 வியாழனன்று, வெளிப்படையாக ரஷ்யாவினுடையதாக அறியப்படக் கூடிய இராணுவ ஹெலிகாப்டர்கள், உக்ரேனின் கியேவ் நகரின் புறநகர்ப் பகுதிகளுக்கு மேலாக பறக்கின்றன. (உக்ரேனிய போலிஸ் துறையின் செய்திச் சேவையால் AP ஊடாக வழங்கப்பட்டது)

2. இப்போது தேவையாக இருப்பது 1917க்கு முந்திய ஜாரிச வெளியுறவுக் கொள்கைக்குத் திரும்புவதல்ல, மாறாக, 1917 இல் அக்டோபர் புரட்சிக்கு ஆதர்சமளித்ததும் ஒரு தொழிலாளர்’ அரசாக சோவியத் ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு இட்டுச் சென்றதுமான சோசலிச சர்வதேசியவாதத்திற்கு, ரஷ்யாவிலும் மற்றும் உலகெங்கிலும் புத்துயிரூட்டுவதே ஆகும். உக்ரேனியப் படையெடுப்புக்கு, புட்டின் ஆட்சியால் கொடுக்கப்படும் நியாயங்கள் என்னவாக இருந்தாலும், அது ரஷ்ய மற்றும் உக்ரேனியத் தொழிலாள வர்க்கம் பிளவுபடுத்தப்படுவதற்கே சேவைசெய்யும் என்பதுடன், அதற்கும்மேலாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கே சேவைசெய்யும்.

3. புட்டின், கடந்த வாரத்தின் போது அவர் விடுத்த இரண்டு முக்கியமான அறிக்கைகளில், அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் குற்றங்களைப் பட்டியலிட்டு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருந்தார். வாஷிங்டனின் கபடவேடத்தின் மீதான அவரது கண்டனத்தில் பெரும்பகுதி தரவுரீதி உண்மைகளைக் கொண்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் முன்னிழுக்கின்ற நச்சுத்தனமான கம்யூனிச-விரோத மற்றும் அந்நியர்-வெறுப்பு சித்தாந்தமும் மற்றும் அவர் பாதுகாப்பதாக கூறிக்கொள்கின்ற நலன்களும் முற்றிலும் பிற்போக்கானவையாக உள்ளன என்பதுடன் உக்ரேனிலுள்ள மற்றும் உலகளாவிய தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடாதது இருக்கட்டும் ரஷ்யாவின் தொழிலாள வர்க்க பரந்த மக்களுக்கே கூட அழைப்புவிட திறனற்றதாக உள்ளன. அக்டோபர் புரட்சியையும் ஒரு பல-இன அரசாக சோவியத் ஒன்றியம் இருந்ததையும் கண்டனம் செய்துகொண்டே, அதேவேளையில் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட தீரமான போராட்டத்தை புட்டின் புகழ்பாடுவதில் உள்ள சிடுமூஞ்சித்தனம் ரஷ்யாவிலும் உக்ரேனிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவினால் வெறுக்கப்படுவதாய் இருக்கும்.

4. பைடன் நிர்வாகமானது, நேட்டோவுக்குள் உக்ரேன் ஒன்றிணைவதற்கு ரஷ்யா கொண்டிருக்கும் ஆட்சேபங்களைக் குறித்து விவாதிக்க மறுத்ததன் மூலமாக, உக்ரேனை ஒரு தூண்டிலாக பயன்படுத்தியது. படையெடுப்பைத் தூண்டி, அப்படையெடுப்பு இப்போது ரஷ்யாவுடன் அதிகரிக்கும் மோதலுக்கான ஒரு போலிக்காரணமாக பயன்படுத்திக் கொள்ளப்பட இருக்கிறது.

5. ”ரஷ்யப் பொருளாதாரத்திற்கு கடுமையான சேதாரங்களை உண்டாக்கும்” நோக்கத்துடனானவை என்று கூறப்பட்டு முடக்கும் ஒரு தொடர் பொருளாதார தடைகளை பைடென் இன்று மாலை அறிவித்தார். புட்டின் தான் இந்தப் போரை தெரிவு செய்தார் என்ற பைடென், “இப்போது அவரும் அவரது நாடும் பின்விளைவுகளைச் சந்திப்பார்கள்” என அறிவித்தார்.

6. “நமது படைகள் உக்ரேனில் ரஷ்யாவுடன் ஒரு மோதலில் ஈடுபடவில்லை மற்றும் ஈடுபட மாட்டா” என்று பைடெனால் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வசனத்திற்கு எந்த நம்பகத்தன்மையும் கிடையாது. மோதல்களை நீட்டித்து ரஷ்யாவுக்கு கணிசமான சேதாரங்களை ஏற்படுத்துகின்ற நோக்குடன் அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் பில்லியன் கணக்கான டாலர்களை உக்ரேனுக்குள் இராணுவத் தளவாடங்களுக்குள் பாய்ச்சியிருக்கின்றன என்பதுடன் அதன் பாசிச துணை இராணுவப் படைகளையும் ஆயுதபாணியாக்கியுள்ளன. “துரிதமாக நிலப்பிரதேசங்களை வெற்றி கொள்வது இறுதியில் எவ்வாறு சீர்குலைக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும், வெகுஜன ஒத்துழையாமை நடவடிக்கைகளுக்கும் மற்றும் மூலோபாய முட்டுச்சந்துகளுக்கும் இட்டுச்செல்கின்றன” என்பதை “வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது” என பைடென் தெரிவித்தார்.

7. மேலும், அமெரிக்காவும் நேட்டோவும், ஆயிரக்கணக்கான துருப்புகளை கிழக்கு ஐரோப்பாவுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கின்றன. அவை நேட்டோ உறுப்பு நாடுகளான பால்டிக்கின் எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் லாத்வியா மற்றும் அவற்றுடன் போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் குவிக்கப்படவிருக்கின்றன. ஐரோப்பாவில் 7,000 படையினர்கள் கூடுதலாக நிலைநிறுத்தப்படுவதற்கு பென்டகன் இன்று உத்தரவிட்டிருக்கிறது.

8. அதிகரித்துச் செல்லும் வெளிப்புற அச்சுறுத்தல்களும், அவற்றுடன் ரஷ்யாவின் பொருளாதாரத்தை கழுத்துநெரிக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளும் சேர்ந்து, போர் உக்ரேனைத் தாண்டி விரிவு காண்பதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்துகின்றன. ஏதேனும் ஒரு நேட்டோ நாட்டுடன் ரஷ்யா ஈடுபடுகின்ற ஒரு மோதலில் அமெரிக்கா, “அமெரிக்க ஆற்றலின் முழு வலிமையையும் பிரயோகிக்கும்” என்று பைடென் மீண்டும் அறிவித்தார்.

9. ஒரு அணுஆயுதப் போர் சாத்தியம் என்பது மட்டுமல்ல, அந்த அபாயம் வரலாற்றில் முன்னெந்தவொரு சமயத்தைக் காட்டிலும் ஆபத்துமிக்கதாகவும் பெரியதாகவும் இருக்கிறது என்று மட்டுமே இது அர்த்தப்படுத்த முடியும். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு முழுமையாக முறிந்து போயிருப்பதாக இன்று கூறிய பைடென், ஒரு பேரழிவுகரமான ஐரோப்பிய மற்றும் உலகளாவிய போரின் அபாயத்திற்கு மத்தியில், புட்டினை அழைத்துப் பேசுவதற்கான எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என்றும் அறிவித்தார்.

10. 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் உறவுகளின் ஒரு முறிவு என்பது, ஒரு போரின் வெடிப்புடன் அடையாளம் காணப்பட்டு வந்திருக்கிறது. பனிப் போரின் சமயத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளின் முறிவு என்பது ஒருபோதும் நடக்கவில்லை. 1962 கியூப ஏவுகணை நெருக்கடியின் போது கூட, அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியும் சோவியத் ஜனாதிபதி நிகிதா குருஷ்சேவும் பரஸ்பர தகவல்தொடர்பினை பராமரித்திருந்தனர். புட்டினிடம் பேசப் போவதில்லை என்ற பைடெனின் கோபாவேசக் கருத்து ஆழந்த பொறுப்பற்றதன்மையுடையதாகும். 1962 நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்க-சோவியத் உறவுகளிலான முக்கிய தொழில்நுட்ப புதுமைகளில் ஒன்றாக வெள்ளை மாளிகையையும் கிரெம்ளினையும் இணைக்கின்ற ஒரு “இருமுனை நேரடி இணைப்பு” (hot line) நிறுவப்பட்டது. எதிர்த் தரப்பின் நோக்கங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு நாசம் உருவாவதைத் தவிர்க்கிற நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

11. அணு ஆயுதப் போரின் அத்தனை பயங்கர பின்விளைவுகளுடனும் அணுஆயுதப் போரின் விளிம்புக்கு உலகத்தைக் கொண்டுசெல்ல அமெரிக்காவும் நேட்டோவும் தயாராகி விட்டன என்பதானது, உலக ஏகாதிபத்தியத்தின் அத்தனை மையங்களிலும் இப்போது நிலவுகின்ற பொறுப்பற்ற தன்மை மற்றும் மூர்க்கத்தனத்தின் மலைப்பூட்டும் மட்டங்களுக்கு சாட்சியம் கூறுவதாய் உள்ளது.

12. இதனை எவ்வாறு விளக்குவது? எப்போதும் போல, அமெரிக்க ஊடகங்கள் தம்முடன் எதிரியாக மோதும் எவர் மீதும் முழுத் தீயசக்தியின் பிம்பத்தை சுமத்துகின்றன. இது எதனையும் விளக்கத் திறனற்றதாகும். ரஷ்யாவுடனான இப்போதைய மோதலானது முப்பதாண்டுகளுக்கு முன்பாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாக அமெரிக்காவினால் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு புவியரசியல் மூலோபாயத்தின் விளைபொருளாகவே இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்வதற்காக இராணுவ வலிமையை பயன்படுத்தி அமெரிக்க உலக மேலாதிக்கத்தைப் பராமரிப்பது தான் அதன் நோக்கமாய் இருந்து வந்திருக்கிறது. ஈராக், சோமாலியா, சேர்பியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா மீதான படையெடுப்பு மற்றும்/அல்லது குண்டுவீச்சு சகிதமாக, அமெரிக்காவால் தொடக்கப்பட்ட எண்ணிலடங்காத மற்றும் முடிவற்ற வரிசையான போர்களுக்கு மூலகாரணமாக இதுவே இருந்து வந்திருக்கிறது. இந்த சட்டவிரோதப் போர்களது வரலாறு இன்று ஊடகங்களில் குறிப்பிடப்படாமலேயே கடந்து செல்லப்படுகிறது என்பதை சொல்லவும் அவசியமில்லை.

13. இந்தப் போர்கள் அனைத்துமே தந்திரோபாய மற்றும் மூலோபாயத் தோல்வியில் முடிந்து, உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பை பலவீனப்படுத்தவே செய்திருக்கின்றன. இந்தத் தோல்விகள் அமெரிக்காவின் விருப்பத்திற்குரிய மூலோபாய முக்கியத்துவமிக்க யூரோஆசியாவின் ஒரு விரிந்த பகுதியை கையில் கொண்டிருக்கும் ரஷ்யா மற்றும் எல்லாவற்றுக்கும் மேல், சீனா ஆகியவை உள்ளிட்ட பெரும் சக்திகளிடம் இருந்து அமெரிக்கா முகம்கொடுக்கும் சவால்கள் தொடர்பாக அதன் கவலையை அதிகப்படுத்தியிருக்கின்றன.

14. எனினும் இந்த நெருக்கடிக்கான தூண்டலுக்கு பிரதான உந்துசக்தியாக இருந்திருப்பது, அமெரிக்காவிற்குள்ளான சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை ஒரு கொதிநிலைப் புள்ளிக்கு கொண்டுவந்து விட்டிருக்கின்ற கோவிட்-19 பெருந்தொற்றாகும். இப்பெருந்தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்குகிறது. ஓமிக்ரோன் வகை அமெரிக்காவின் எந்தவொரு அலையின்போதுமான உயிரிழப்புகளில் இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிக்கைக்கு காரணமாகியிருக்கிறது, கடந்த மாதத்தின் போது அன்றாடம் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

15. உலகளாவிய விதத்தில், கடந்த இரண்டு மாத காலத்தில் மட்டும், 150 மில்லியனுக்கும் அதிகமானோர், உத்தியோகபூர்வ புள்ளிவிவரத்தின் படி, ஓமிக்ரோன் வகை தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்; உலகெங்கும் 500,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்த நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி ஆகியவை அடங்கும். எனினும், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் யதார்த்த நிலையை சித்தரிக்கவில்லை. சுகாதாரக் குறியீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனத்தின் (The Institute for Health Metrics and Evaluation) மதிப்பீட்டின் படி டிசம்பர்-மத்தி முதலாக குறைந்தது 2 பில்லியன் பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாகினர், அதேகாலகட்டத்தில் 2.2 மில்லியன் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்திருந்ததாக Economist மதிப்பிடுகிறது.

16. ஏற்கனவே அதீத சமூக மோதல்களால் கிழிந்துகிடந்த ஒரு சமூகத்தின் மீது பெருந்தொற்றினால் அமர்த்தப்பட்ட தீவிரமான அழுத்தமானது அரசியல் அமைப்புமுறையை முறிவின் விளிம்புப்புள்ளிக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பது, 2021 ஜனவரி 6 அன்று நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியால் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனநாயகம் இந்த தசாப்தத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது போகலாம் என்ற தனது அச்சத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்கும் பைடென் நிர்வாகமானது, போர் எனும் வழிமுறையின் மூலமாக உள்நாட்டு ஒற்றுமையை உண்டாக்கவும் மோதலை வெளிநோக்கித் தள்ளவும் நம்பிக்கை கொண்டிருக்கிறது. பேசுபொருளை மாற்றுவதற்கு அது விரும்புகிறது.

17. அமெரிக்க நெருக்கடியானது உலக முதலாளித்துவ நெருக்கடியின் மிக அதீத வெளிப்பாடு மட்டுமேயாகும். முதலாளித்துவ ரஷ்யாவும், அதனுடன் சேர்ந்து ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகளும், ஒரு ஆழமடைகின்ற அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்பதுடன் உள்முக பதட்டங்களை வெளிநோக்கித் திருப்புவதற்கான ஒரு வழிவகையாக போரை நோக்கித் திரும்புகின்றன.

18. அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகெங்கிலும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே ஒரு பேரழிவின் அபாயம் தவிர்க்கப்பட முடியும்.

19. வரலாற்றுரீதியாக காலாவதியாகிப் போன ஒரு அரசியல் கட்டமைப்பாக உள்ளதும், உலகப் பொருளாதாரத்தின் மேலாதிக்கத்திற்கும் உற்பத்தி சக்திகள் உலகளாவிய அளவில் ஒன்றை ஒன்று பரஸ்பர சார்ந்திருப்பதற்கும் பொருந்தாது முரண்பட்டதாக உள்ளதுமான “தேசிய அரசினை” பாதுகாப்பதை நிராகரிப்பது என்பது இந்த வேலைத்திட்டத்தின் ஒரு அடிப்படைக் கோட்பாடாக இருக்கிறது.

20. மகத்தான ரஷ்யப் புரட்சியாளரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி, முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான நெருக்கடி பீடித்த ஆண்டுகளில், 1934 இல், விளக்கியவாறாக:

எல்லாவற்றுக்கும் முதலில், தேசிய அரசின் பிறப்பிடமான பால்கன்மயப்பட்ட ஐரோப்பாவில் தேசிய அரசினை பாதுகாப்பதென்பது, வார்த்தையின் முழுமையான அர்த்தத்தில் ஒரு பிற்போக்குத்தனமான செயற்பாடாகும். தேசிய அரசானது அதன் எல்லைகள், கடவுச்சீட்டுகள், சுங்க இலாகாக்கள் மற்றும் சுங்கப் பாதுகாப்புக்கான இராணுவப்படைகள் சகிதமாய் மனிதகுலத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார அபிவிருத்திக்கான ஒரு அச்சமூட்டும் முட்டுக்கட்டையாக ஆகியிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் பணி தேசிய அரசைப் பாதுகாப்பதல்ல மாறாக அதனை முழுமையாகவும் இறுதியாகவும் இல்லாதொழிப்பதாகும்.

21. ட்ரொட்ஸ்கி மேலும் கூறினார், “போரின் சமயத்தில் தன்னை தேசிய அரசுடன் பிணைத்துக் கொள்ளாதிருப்பதும், போர் வரைபடத்தை அல்லாமல் வர்க்கப் போராட்ட வரைபடத்தை பின்பற்றுவதும், அமைதிக் காலத்தில் தேசிய அரசின் மீது சமரசமற்ற போரை ஏற்கனவே அறிவித்த ஒரு கட்சியால் மட்டுமே இது சாத்தியமாகக் கூடியதாகும்.” “வர்க்கப் போராட்ட வரைபடத்தை” பின்பற்றுவது என்பதன் அர்த்தம், ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பை, சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை ஆகியவற்றுக்கு எதிராக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தில் வேரூன்றியிருக்கும்படி செய்வது என்பதேயாகும்.

22. போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ICFI அறைகூவல் விடுக்கிறது. உக்ரேன் மீதான படையெடுப்பை எதிர்க்கையில், அமெரிக்கா/நேட்டோ ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை நாங்கள் கண்டனம் செய்கிறோம், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதாக அவை கூறிக் கொள்வதானது இரத்தத்தில் நனைந்த கபடநாடகம் ஆகும்.

23. பொதுமக்களின் மனோநிலை 1990களில் அவை இருந்தது போலில்லை. பாரிய எண்ணிக்கையிலான மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களது முடிவற்ற போர் அனுபவத்தின் வழியாகக் கடந்து வந்துள்ளனர். உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தில் பெரும்பான்மையானோரின் மனோநிலையானது போருக்கு எதிரானதாய் இருக்கிறது. பெருந்தொற்றின் காலத்தில், கிட்டத்தட்ட 6 மில்லியன் பேர் உயிரிழக்க இட்டுச் சென்றுள்ள ஆளும்வர்க்கத்தின் குற்றவியல் கொள்கைகளும், அவற்றுடன் சேர்ந்து சமத்துவமின்மையின் பாரிய வளர்ச்சியும் மற்றும் அதிகரித்துச் செல்லும் பணவீக்கமும், உலகெங்கிலும் சமூக கோபத்திற்கும் எதிர்ப்புக்கும் எரியூட்டிக் கொண்டிருக்கின்றன.

24. எவ்வாறாயினும், இந்த எதிர்ப்பானது சோசலிசத்திற்கான ஒரு நனவான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்புவது என்பதே இதன் அர்த்தமாகும்.

பிப்ரவரி 26 சனிக்கிழமையன்று, “கோவிட்டை எதிர்த்துப் போராடு, உயிர்களைக் காப்பாற்று! மூன்றாம் உலகப் போரை நோக்கிய முனைப்பை தடுத்துநிறுத்து!” என்னும் தலைப்பிலான ஒரு சர்வதேச இணையவழிக் கருத்தரங்கினை உலக சோசலிச வலைத் தளம் நடத்துகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணி உறுப்பினர்கள் இதில் உரையாற்றவிருக்கின்றனர். இந்த முக்கியத்துவமிக்க சர்வதேச நிகழ்வில் பங்குபெற பதிவு செய்வதற்கும் நேரத்திட்டம் வகுத்துக் கொள்வதற்கும் உலகெங்குமான நமது வாசகர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Loading