போரிலிருந்து வெளியேறி வரும் ஆபிரிக்கர்களை உக்ரேனிய பாதுகாப்புப் படைகள் நடத்தும் விதத்தினால், கோபம் அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்யப் போருக்கு எதிரான நேட்டோவின் தலையீடு, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கே என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தி ஊடகம் கூறி வருகிறது. அதே வேளையில், உக்ரேனிய பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள் நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆபிரிக்கர்களை, இனவெறியில் குறிவைக்கின்றனர் என வெளிவரும் அறிக்கைகளால் ஆபிரிக்கா முழுவதும் கோபம் அதிகரித்து வருகிறது. தென்னாபிரிக்காவுக்கான உக்ரேனின் தூதுவரின் கூற்றுப்படி, ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் சுமார் 16,000 ஆபிரிக்க மாணவர்கள் உக்ரேனில் கல்விகற்று வந்துள்ளனர்.

மார்ச் 5, 2022 சனிக்கிழமை, உக்ரைனின் கியேவ் புறநகர் பகுதியில் கவச இராணுவ வாகனத்தில் உக்ரேனிய துருப்புக்கள் (AP Photo/Emilio Morenatti)

டஜன் கணக்கான ஆபிரிக்க குடிமக்கள் உக்ரேனை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. மேற்கு உக்ரேனில் உள்ள லிவிவ் இரயில் நிலையத்தில் பல ஆபிரிக்க மாணவர்களை பிரான்ஸ் 24 என்ற செய்தி நிறுவனம் நேர்காணல் செய்தது. இந்த மாணவர்கள் போலந்திற்குள் கடக்க முயன்றபோது உக்ரேனிய எல்லைக் காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறினார்கள்.

“அவர்கள் எங்களை எல்லையில் நிறுத்தி, கறுப்பர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினார்கள். ஆனால் வெள்ளையர்கள் செல்வதை எங்களால் பார்க்க முடிந்தது,” என கினியா நாட்டை சேர்ந்த மாணவர் முஸ்தபா பாகுய் சில்லா, France24 க்கு தெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடங்கியபோது, உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள தனது பல்கலைக்கழக குடியிருப்பில் இருந்து அவர் தப்பிச் சென்றதாகக் கூறினார்.

போலந்து எல்லைக் கிராமமான மெடிகாவை நோக்கி, பாகிய் சில்லா என்ற மாணவர் உறைபனியில் மணிக்கணக்கில் நடந்து சென்றார். அங்கு அவர் திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்டார். உக்ரேனிய எல்லைக் காவலர்கள், தங்கள் போலந்து சகாக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதாகக் கூறியதாக இந்த மாணவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், வார்சோவில் உள்ள அதிகாரிகள் இந்த கூற்றை மறுத்தனர்.

உக்ரைனின் தேசிய விமானப் பல்கலைக்கழகத்தில் சிம்பாப்வேயைச் சேர்ந்த விண்வெளி பொறியியல் மாணவி பார்லனே முஃபரோ குரூர், பிப்ரவரி 24 அன்று ரஷ்யா இராணுவத் தலையீட்டைத் தொடங்கிய பின்னர், கியேவில் இருந்து தப்பிச் சென்றார். அவர் நான்கு நாட்கள் சோர்வுற்ற பயணத்திற்குப் பின்னர், உக்ரேனின் மேற்கு எல்லையான கிராகோவெடஸை அடைந்தார். அங்கு ஒன்பது மணி நேரம் வரிசையில் நின்ற பின்பு, வரிசையின் முன்புறத்தை அவர் இறுதியாக அடைந்தாக அல் ஜசீராவிடம் கூறினார்.

இந்த மாணவி எல்லையை கடக்கும் முறை வந்தபோது, எல்லைக் காவலர் ஒருவர், அவரையும் இதர நான்கு ஆபிரிக்க மாணவர்களையும் எல்லையில் மணிக்கணக்கில் தடுத்து, உக்ரேனியர்களுக்கு முன்னுரிமை அளித்தார். 'நாங்கள் விலங்குகளைப் போல நடத்தப்பட்டதாக உணர்ந்தோம். நாங்கள் உயிர்வாழ்வதற்காக, தலைநகர் கியேவை விட்டு வெளியேற முயற்சித்தோம்,” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார். 'அவர்கள் எங்களை அப்படி நடத்துவார்கள் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை ... நாங்கள் அனைவரும் சமம் என்று நான் நினைத்தேன், நாங்கள் ஒன்றாக நிற்க முயற்சிக்கிறோம்,' என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து 2 மில்லியன் மக்கள் உக்ரேனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா. கணித்துள்ளது. எல்லையில் மக்களின் வரிசைகள் டஜன் கணக்கான கிலோமீட்டர்கள் நீளம் செல்கிறது. சில ஆபிரிக்க மாணவர்கள் அல் ஜசீராவிடம், உறைபனிக்கு மத்தியில் உணவு, போர்வைகள் அல்லது தங்குமிடம் இல்லாமல் கடக்க பல நாட்களாக காத்திருப்பதாக கூறினார்கள்.

போலந்தின் அதி வலதுசாரி தேசியவாதிகள் உக்ரேனிய எல்லையைத் தாண்டி போலந்திற்குள் நுழைந்த ஆபிரிக்க, தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு மக்களைத் தாக்குவதாக அதிகமான செய்திகள் வருகின்றன. Przemyśl இல், இத் தாக்குதலை நடத்தியவர்கள் கறுப்பு உடையில் இருந்ததோடு, வெள்ளையர் அல்லாத அகதிகளைக் கண்டுபிடித்து தாக்கினர். போர் தொடங்கிய பின்னர், உக்ரேனில் இருந்து போலந்தில் உள்ள இரயில் நிலையத்திற்கு வந்த மாணவர்களே இதில் முதன்மையாக தாக்கப்பட்டனர். இத் தாக்குதலில், ஐந்து பேர் கொண்ட குழுவால் மூன்று இந்தியர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

'இரவு 7 மணியளவில், இந்த குண்டர்கள் இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு அகதிகளுக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினர்' என்று OKO பிரஸ் ஏஜென்சியின் இரண்டு போலந்து பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். 'அவர்கள் அகதிகளை நோக்கி: 'இரயில் நிலையத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள்! உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்’’ என்று கூச்சலிட்டனர்.

'Przemyśl always Polish' என்று கோஷமிட்டபடி குண்டர்கள் வந்த பின்னரே காவல்துறை மற்றும் கலகத் தடுப்பு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

உக்ரேனில் இருக்கும் 22 வயதான எகிப்திய மாணவி சாரா கூறுகையில், “சாப்பிட ஏதாவது வாங்கிக் கொள்வதற்காக வெளியே நான் என் நண்பர்களுடன் இருந்தேன். “இந்த ஆட்கள் வந்து நைஜீரியாவிலிருந்து வந்த ஒரு குழுவைத் துன்புறுத்தத் தொடங்கினர். ஒரு ஆபிரிக்கரை உணவு உண்பதற்கு ஒரு இடத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் எங்களை நோக்கி வந்து, ‘உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று கூச்சலிட்டார்கள்.

உக்ரேனில் இருந்து வெளியேறும் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு மக்கள் குற்றங்கள் புரிந்ததாக அதி வலதுசாரிக் குழுக்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக போலந்து போலீசார் எச்சரித்துள்ளனர். ட்விட்டரில், Przemyśl போலீசார் கூறியது: “ஊடகங்களில், Przemyśl மற்றும் எல்லையில் கடுமையான குற்றங்கள் நடந்ததாக தவறான தகவல் உள்ளது: கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் கற்பழிப்பு. அது உண்மை இல்லை. எல்லையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக காவல்துறை அதிக எண்ணிக்கையிலான குற்றங்களை பதிவு செய்யவில்லை.

உக்ரேனிய மற்றும் போலந்து அதிகாரிகள் எல்லையில் இனப் பாகுபாடு இருப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளனர். உக்ரேனிய எல்லைக் காவலர்களின் செய்தித் தொடர்பாளர், ரஷ்யாவிற்கு எதிரான போரில் சேர வேண்டியிருப்பதால், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட உக்ரேனிய ஆண்களை மட்டுமே அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்தியதாகக் கூறினார். இருப்பினும், சமூக ஊடகங்களில் உள்ள காட்சிகள், உக்ரேனின் எல்லையில் இருந்து வெளியேறும் ஆபிரிக்க மற்றும் பிற வெளிநாட்டு குடிமக்களுக்கு எதிரான பாகுபாடு, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் செயல்களைக் காட்டுகின்றன.

ஆபிரிக்காவில் அதிகரித்துவரும் கோபத்தின் மத்தியில், ஆபிரிக்க அதிகாரிகள் தங்கள் குடிமக்களுக்கு எதிராக பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். #AfricansinUkraine என்ற ஹேஷ்டேக்கின் கீழ் வீடியோக்கள் மற்றும் ட்வீட்கள் சமூக ஊடகங்களில் பெருக்கெடுத்து வருகின்றன, எல்லையில் உள்ள மாணவர்களுக்கு உதவ டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏராளமான நிதி திரட்டும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை, ஆபிரிக்க ஒன்றியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. 'ஏற்றுக்கொள்ள முடியாத, பாகுபாடான நடத்தைக்காக ஆபிரிக்கர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற அறிக்கைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இனவெறி மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இருக்கிறது.' இதேபோல், நைஜீரியர்கள் குழு ஒன்று போலந்துக்குள் நுழைய மறுக்கப்பட்டதாக நைஜீரிய அரசாங்கம் கூறியது. தென்னாபிரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், போலந்து-உக்ரேனிய எல்லையில் தென்னாபிரிக்க பிரஜைகள் மற்றும் பிற ஆபிரிக்கர்கள் 'மோசமாக நடத்தப்பட்டதாக' கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பிற்போக்குத்தனமான உக்ரேன் படையெடுப்பின் விளைவாக உக்ரேனில் இருந்து வெளியேறும் மில்லியன் கணக்கான மக்களுக்காக நேட்டோ ஊடகங்கள் சிந்தும் முதலைக் கண்ணீரின் பாசாங்குத்தனத்தை, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அதி வலதுசாரி குண்டர்களால் பல ஆபிரிக்கர்கள் மோசமாக நடத்தப்படுவது அம்பலப்படுத்துகிறது.

1991ல், ஸ்ராலினிஸ்டுக்களால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிற்குப் பின்பு, நேட்டோ சக்திகள் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவைத் தாக்கி, உள்கட்டமைப்பை அழித்து, எண்ணற்ற ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளன. மக்கள் இந்த நாடுகளில் இருந்து வெளியேறி, தரை மற்றும் கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு, ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்ததால், ஐரோப்பிய ஒன்றியம் பெருகிய முறையில் கடுமையான குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, ஐரோப்பாவிற்கு தப்பிவர முடிந்தவர்களுக்கு புகலிடம் வழங்க மறுத்தது. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் படகுகள் மத்தியதரைக் கடலில் அல்லது ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் இறந்துள்ளனர்.

உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகள் மற்றும் நேட்டோ சக்திகள் ஐரோப்பா முழுவதும் அதி வலதுசாரி அரசியலை நீண்டகாலமாக சட்டபூர்வமாக்கியது. குறிப்பாக, உக்ரேனில் நேட்டோ சார்பு அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்த பிப்ரவரி 2014 கியேவ் சதி ஆட்சிக் கவிழ்ப்புக்கான இவர்களின் ஆதரவு, அகதிகளுக்கு எதிரான வெறுப்பை தூண்டுவதற்கு எண்ணெய் ஊற்றியது. நேட்டோ சக்திகள் அகதிகளின் தலைவிதியைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை. மாறாக, ரஷ்யாவிற்கு எதிரான மேலும் போர்வெறியை நியாயப்படுத்த அகதிகளின் துன்பத்தை சுரண்டிக் கொள்கின்றன.

சர்வதேச அளவில், ரஷ்யப் படையெடுப்பிற்கு மட்டுமின்றி, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் பிரச்சாரத்திற்கும் எதிர்ப்பு பெருகி வருகிறது. தென்னாபிரிக்கா, செனகல், உகண்டா மற்றும் மாலி உட்பட பதினேழு ஆபிரிக்க நாடுகள் ரஷ்யாவின் 'உக்ரேனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை' கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் வாக்களிக்கவில்லை. அவர்களில் பலர் லிபியா மற்றும் மாலி போன்ற அருகிலுள்ள நாடுகளில் நேட்டோ சக்திகளால் தொடங்கப்பட்ட படையெடுப்புகளின் போது பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

கடந்த வாரம், செனகல் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் ஆபிரிக்காவில் உக்ரைனின் கொள்கையை அது கடுமையாக கண்டித்தது. செனகலில் உள்ள உக்ரேனின் தூதரகம், ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் அதி வலதுசாரி உக்ரேனிய தேசியவாதக் குழுக்களில் சேர Facebook வழியாக தன்னார்வலர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முயற்சியைத் தொடர்ந்தே இந்த அறிக்கை வெளிவந்தது. உக்ரேனிய தூதரகம் 36 செனகல் குடிமக்கள் பட்டியலிடப்பட்டதாகக் கூறியது. இருப்பினும், செனகல் சட்டத்தின் கீழ் செனகல் மண்ணில் கூலிப்படைக்கு ஆட்சேர்ப்பு செய்வது சட்டவிரோதமானதாகும்.

மார்ச் 3 அன்று, செனகலின் வெளியுறவு அமைச்சகம், ஃபேஸ்புக் இடுகையைப் பற்றி 'திகைப்புடன்' அறிந்த பின்னர், தலைநகர் டாக்காவில் உள்ள உக்ரேனிய தூதரை வரவழைத்ததாகக் கூறியது. 'அரசின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிக்க வேண்டிய கடமையை மீறும் இந்த நடைமுறையை' அமைச்சகம் 'உறுதியாக' கண்டித்ததோடு, உக்ரேன் தூதரகம் தனது முகநூல் பதிவை நீக்குமாறு கூறியுள்ளது.

Loading