"ரஷ்ய கலை மற்றும் கலைஞர்கள் மீதான தாக்குதல் பேரினவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட பிற்போக்கு பிரச்சாரமாகும்" -லொஹான் குணவீர

ரஷ்ய கலை மற்றும் கலைஞர்கள் மீதான தாக்குதல்களை இலங்கையின் கட்புல மற்றும் அரங்கேற்றல் கலைஞர் கண்டனம் செய்துள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் கட்புல மற்றும் அரங்கேற்றல் கலைஞரும் மொழிபெயர்ப்பாளருமான லொஹான் குணவீர, பின்வரும் அறிக்கையை உலக சோசலிச வலைத் தளத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ரஷ்ய கலை மற்றும் கலைஞர்கள் மீதான தாக்குதல்கள், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும் என்று அவர் கண்டனம் செய்கின்றார்.

'ஸ்டாலின்கிராட் 1942' (2017) இல் லொஹான் குணவீரவின் நடிப்பு. இது போரின் வரவிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் அதனால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை பற்றிய தொடர்ச்சியான படைப்புகளின் ஒரு பகுதியாகும். 20 ஆம் நூற்றாண்டின் உலகப் போர்கள் மற்றும் இலங்கையில் நடந்த இனவாதப் போர் ஆகியவற்றின் வரலாற்றை வாசிப்பதன் மூலம் இந்தத் தொடர் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் ரஷ்ய கலைஞர்கள், கண்காட்சிகள் மற்றும் கலைத் திட்டங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தணிக்கைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பாரம்பரிய இசை, 20 ஆம் நூற்றாண்டின் ரஷ்ய முன்னணி கலை முதல் டொல்ஸ்டோய் வரையிலான சிறந்த கலாச்சார சாதனைகளை தணிக்கை செய்வதால் நல்லது எதுவும் ஏற்பட முடியாது. மூச்சுத்திணறல் ஆயுளை நீட்டிக்கும் என்று சொல்வது போல் இது ஒரு அமைதியான விளைவுக்கு வழி வகுக்கும் என்ற எண்ணம் மருட்சியானது. தனிப்பட்ட முறையில், ரஷ்ய இலக்கியம் மற்றும் கலை இல்லாது ஒருவரின் சொந்த வளர்ச்சியையும் வாழ்க்கையையும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒருவர் என்ற முறையில், இதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. உலக அரசியலின் சூழலில், இது வரவிருக்கும் பேரழிவு பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாகும்.

பிரகடனப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கு மாறாக, இந்த தாக்குதல் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஏகாதிபத்திய போர் உந்துதலுடன் கைகோர்த்து செல்கிறது. இந்த மோதலில் நுழையவும், அதிகரிக்கவும் துடிக்கும் நாடுகளின் பட்டியலைப் பற்றிய ஒரு பார்வை, அவர்களின் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை அதிகரித்து, உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவதும், இரண்டாம் உலகப் போரின் மிகப்பெரும் துயரங்களை அறிந்த எவரையும் எச்சரிக்கும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான் அந்தப் போரில் பெரும் அழிவையும் நாசப்படுத்திய அதே ஏகாதிபத்திய சக்திகளாகும். கடந்த 30 ஆண்டுகளில், உலகம் முழுவதும் நடந்த பல போர்களில், அமெரிக்கா முன்னணி அழிவுகரமான செயற்பாட்டாளராக இருந்து வருகிறது. உயிரியல் ஆயுத ஆய்வகங்களின் செயல்பாடு உட்பட உக்ரேனுக்குள் அதன் இராணுவ ஈடுபாட்டின் அளவு இப்போதுதான் முழு வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த ஏகாதிபத்திய உந்துதல் எப்பொழுதும் அதன் பரந்த வளங்கள் மற்றும் சந்தைகளுக்கு நேரடி பிரவேசத்தைப் பெறுவதற்காக யூரேசியப் பிராந்தியத்தை (மற்றும் உலகின் பிற பகுதிகளை) மறு-பங்கீடு செய்வதை நோக்கி இயக்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிச்சயமாக ஒரு ஈவிரக்கமற்ற, பிற்போக்கு செயலாகும், அது அந்த நாட்டை ஒரு பாரிய மனிதாபிமான பேரழிவை நோக்கி தள்ளுகிறது. எவ்வாறாயினும், இந்த போருக்கான வரைபடத்தை உருவாக்குவதில் நேட்டோ ஆற்றிய வகிபாகத்துக்கு ஓரங்கட்டிவிடாது. 90களில் இருந்து கிழக்கு நோக்கி அதன் தொடர்ச்சியான விரிவாக்கம், 2014ல் உக்ரேனில் ஆட்சி மாற்றத்தின் மூலம் ஒரு புதிய உச்சத்தை எட்டியது. இந்த செயல்பாட்டில் தீவிர வலதுசாரி மற்றும் நவ-நாஸி சக்திகளுடன் சேர்ந்து வாழ்வதில் அதற்கு எந்த கவலையும் கிடையாது.

அதன் அவப்பெயருக்கு ஏற்றவாறு, நேட்டோ விரிவடைந்து வரும் நெருக்கடிக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் தொடர்ந்து எண்ணெய்வார்த்து வருகிறது. உலகெங்கிலும் நடக்கும் போர்களில் நிரந்தர அங்கமாக இருக்கும் மிகப்பெரிய இராணுவ அமைப்பு இவ்வாறு நெருப்புடன் விளையாடி, அணு ஆயுதப் போரின் அபாயத்தை அதிகரிக்கிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோவின் பின்னால் ஆதரவை அள்ளி வீசுவது எந்த அமைதியான, ஜனநாயக விளைவுகளுக்கும் பங்களிக்காது.

ரஷ்ய கலை மற்றும் கலைஞர்களைத் தடுப்பதற்கான பிரச்சாரம், ரஷ்ய-விரோத உணர்வுகளால் பொதுக் கோளத்தை விஷமாக்குகிறது. வாழும் அல்லது இறந்த ரஷ்ய கலைஞர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள், விளாடிமிர் புடின் மற்றும் அவரது இராணுவப் படையெடுப்புடன் சமமாக வைக்கப்படுகின்றன. அதன் உண்மையான செயல்பாடு, கலைப் படைப்புகள் மற்றும் கலைஞர்கள் மீதான பரவலான உயர் மதிப்பைப் பயன்படுத்தி, போருக்கு ஆதரவாக பொதுக் கருத்தை திருப்புவதாகும்; சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ரஷ்ய-விரோத மனநிலையை இயல்பாக்குவதற்கும், ரஷ்ய மொழியில் உள்ள அனைத்தையும் மக்களை வெறுக்க வைப்பதற்குமானதாகும். இன்று நமக்குத் தேவை அதற்கு நேர்மாறானதாகும். தேச எல்லைகளுக்கு அப்பால், கோடிக்கணக்கான மக்களுக்கு உரையாற்றும், ஒருங்கிணைக்கும் உள்ளார்ந்த சக்தியாக செயல்பட கலைகள் விடுவிக்கப்பட வேண்டும்.

ஜூலியன் அசாஞ்ச் கூறியது போல், 'கடந்த ஐம்பது ஆண்டுகளில் தொடங்கிய ஒவ்வொரு போரும் ஊடக பொய்களின் விளைவாகும்... மக்கள் விருப்பத்துடன் மற்றும் திறந்த கண்களுடன் ஒரு போருக்குச் செல்வதில்லை.' பொய்களை தோற்கடிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு உண்மையான, நிலையான சமூக சக்தியின் அடிப்படையில் ஒரு பரந்த போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த சக்திதான் உலக தொழிலாள வர்க்கமாகும், அது நாடு இல்லாத வர்க்கமாகும்.

லொஹான் குணவீரவின் போர் எதிர்ப்பு படைப்பு நிர்மானிப்பில் இருந்து ஒரு விவரம் 'பொரளை நடந்தபோது, லாகூரில் நடந்தபோது, பெர்லினில் நடந்த போது, மாஸ்கோவில் நடந்த போது?' (2016) [படம்: தீர்த்த நிகழ்ச்சி மேடை, கொழும்பு, இலங்கை]

உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் மற்றும் முற்போக்கான கலை அமைப்புகளை இந்தப் படையின் பின்னால் அணிதிரளுமாறும், இந்தத் தாக்குதலுக்கு எதிராக ரஷ்ய கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்குமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன்; உங்கள் போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டை பலவீனப்படுத்தாதீர்கள்; நேட்டோவின் பிற்போக்கு பாத்திரம் பற்றிய உங்கள் சரியான புரிதலை கைவிடாதீர்கள். ரஷ்யாவின் படையெடுப்பு இதையெல்லாம் மறுக்கவில்லை. தாமதமாகும் முன், போர் உந்துதல் நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மார்ச் 20 அன்று ஏற்பாடு செய்திருக்கும் இணையவழி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். உலக சோசலிச வலைத் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இக்கூட்டத்தில் போரின் பொருளாதார, அரசியல் மற்றும் வரலாற்று பின்னணியை மீளாய்வு செய்து, உலகளாவிய அணு ஆயுத பேரழிவைத் தடுக்க, தொழிலாள வர்க்கம் போராட வேண்டிய சோசலிச முன்னோக்கை கோடிட்டுக் காட்டப்படும். அனைவரும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Loading