முன்னோக்கு

வெறித்தனமான ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரமும், ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த கால ஏகாதிபத்திய போர்களை நியாயப்படுத்துவதான கருத்தியல் பரப்புவாத பிரச்சாரங்கள் திரிபுகள், புனைவுகள் மற்றும் அப்பட்டமான பொய்களில் தான் எப்போதும் தங்கியிருந்தன. எழுத்தாளர் ஸ்ரெஃபான் ஸ்வைக் (Stefan Zweig) முதலாம் உலகப் போர் வெடிப்பை நினைவுகூர்ந்தது போல், “போரிடும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே கடும் உற்சாகத்தில் இருந்தன மற்றும் மிக மோசமான வதந்தி உடனடியாக உண்மையாக மாற்றப்பட்டது, மேலும் மிக அப்பட்டமான அவதூறு நம்பப்பட்டது.”

மே 27, 2016 வெள்ளியன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள Dvortsovaya (அரண்மனை) சதுக்கத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கின் 313வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு ஓப்பேரா கச்சேரியின் போது Soprano Anna Netrebko, வலது மற்றும் டெனர் Yusif Eyvazov. [புகைப்படம்: AP Photo/Dmitry Lovetsky].

அதாவது, புட்டின் உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து ஒரு வார காலமாக, அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலை சட்டபூர்வமாக்கும் நோக்கத்துடன் பெருநிறுவன ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளும் முடுக்கிவிட்டுள்ள வெறித்தனமான ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரம் கொடூரமான பங்கை ஏற்றுள்ளன. பாடகர்கள், கலைஞர்கள், வழிநடத்துநர்கள், தயாரிப்புகள், மற்றும் பூனைகள் கூட தேசியம் அல்லது பூர்வீகத்தின் காரணமாக மட்டுமே விலக்கப்படுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர்.

செவ்வாயன்று, முனிச் மேயர் டெய்டெர் ரெய்டெர் (Dieter Reiter), Munich Philharmonic இசைக்குழுவின் தலைமை வழிநடத்துநராக இருந்த ரஷ்யாவைச் சேர்ந்த வலேரி கெர்கிவ் (Valery Gergiev) ஐ உடனடியாக பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். ஒரு சமூக ஜனநாயகவாதியான ரெய்டெர், புட்டின் உக்ரேன் மீது படையெடுத்த சிறிது நேரத்திலேயே கெர்கிவ்வுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்தார்: ஒன்று ரஷ்ய அரசாங்கத்தை அவர் பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும், அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று மிரட்டுகிறார். கெர்கிவ் இதற்கு பதிலளிக்கத் தவறியதை அடுத்து, ரெய்டெர் உலகப் புகழ்பெற்ற வழிநடத்துநருடனான அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இரத்து செய்தார்.

நட்சத்திர சோப்ரானோ அன்னா நெட்ரெப்கோ (Anna Netrebko) உம் நியூயோர்க்கில் உள்ள பெருநகரம் ஒபேராவில் இதேபோன்ற விதியை எதிர்கொண்டார். நெட்ரெப்கோவின் ‘புட்டின் உறவுகள்,’ அதாவது, அவரது ரஷ்ய தேசியம் பற்றிய நியூ யோர்க் டைம்ஸின் தொடர் பிரச்சாரத்திற்குப் பின்னர், நெட்ரெப்கோ, Met மற்றும் பேர்லினின் Staatsoper அரங்குகளில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளிலிருந்து விலகிக் கொண்டார். மேலும், போருக்கு எதிராக தான் விடுத்த அறிக்கையில், நெட்ரெப்கோ, “கலைஞர்களையோ, அல்லது வேறு எந்த பிரமுகர்களையோ அவர்களின் அரசியல் கருத்துக்களை பொதுவில் வெளிப்படுத்தவும், அவர்களின் தாயகத்தை கண்டிக்கவும் வற்புறுத்துவது நியாயமில்லை” என்று கூறினார்.

இதேபோல், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க முடியாமல் கடுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ள ரஷ்ய திரைப்பட தயாரிப்பாளர்களும், மற்றும் பாராலிம்பிக்ஸ், கால்பந்து உலகக் கோப்பை மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தடைவிதிக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களும் மிருகத்தனமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் ரஷ்ய தயாரிப்புகளை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டனர். இத்தாலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) மற்றும் கரமாஸோவ் சகோதரர்கள் (The Karamazov Brothers) போன்ற உலக இலக்கிய சின்னமாகத் திகழும் படைப்புகளை எழுதியதன் பின்னர் 1881 இல் மறைந்த ரஷ்ய நாவலாசிரியரான ஃபியோடர் தோஸ்தோயெவ்ஸ்கியின் (Fyodor Dostoevsky) நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலக்கியப் பாடத்தைத் தடைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டது. மிலானோ பிகோக்கா பல்கலைக்கழகம் ஒரு கடுமையான பொது எதிர்ப்புக்குப் பின்னர் அதன் கடுமையை தணித்துக் கொண்டது.

இந்த பேரினவாத பிரச்சாரம் போர்க் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட உயர் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினரால் வழிநடத்தப்படுகிறது. பெப்ரவரி 24, 2022 அன்று கொடிய சூழ்ச்சியாளரான விளாடிமிர் புட்டின் உக்ரேனுக்கு ரஷ்ய துருப்புக்களை அனுப்பும் வரை, இந்த உலகம் அமைதியான சொர்க்கமாக இருந்ததை ஊடகங்களும், கல்வியாளர்களும், மற்றும் விஞ்ஞானிகளும் கருத்தில் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோ வல்லரசுகளின் போர்-ஆதரவு பிரச்சாரங்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். பொருளாதாரப் போரைத் தூண்டி மக்களை பேரழிவிற்கு உட்படுத்தக்கூடிய ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நேட்டோ சக்திகள் பாரிய இராணுவக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதை பாராட்டினர்.

வலதுசாரி ரஷ்ய பேரினவாதத்தைத் தூண்டி அதனை நியாயப்படுத்தி உக்ரேன் மீது புட்டின் பிற்போக்குத்தனமாக படையெடுப்பதை எதிர்க்க ஒரு கொள்கை ரீதியான, இடதுசாரி அடிப்படை உள்ளது என்பது அவர்கள் எவருக்கும் தோன்றியதாகத் தெரியவில்லை.

உக்ரேன், ரஷ்யா மற்றும் சர்வதேச அளவில் ஒரு உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தில் வேரூன்றியுள்ள இந்த எதிர்ப்புக்கு, ஏகாதிபத்திய சக்திகளின் கொள்ளையடிக்கும் நலன்களை ஏற்பதோ அல்லது உக்ரேனில் பாசிசத்தின் பங்கை மூடிமறைப்பதோ அவசியமில்லை. மேலும், ‘ஜனநாயக மற்றும் சுதந்திரமான உக்ரேனுக்கான’ நேட்டோ சக்திகளின் கூட்டாளிகளின் போரில், இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளுடன் ஒத்துழைத்த அரசியல் முன்னோர்களைக் கொண்ட தீவிர வலதுசாரி தேசியவாதிகளும் பாசிஸ்டுகளும் உள்ளனர் என்ற உண்மையைப் பற்றி வெட்கங்கெட்ட மௌனம் சாதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இந்த மனநிறைவான நடுத்தர வர்க்கங்களில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரினால் எழுப்பப்பட்ட இந்த வரலாற்று மற்றும் அரசியல் கேள்விகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்வது அனுமதிக்கப்படுவதில்லை. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) நேற்று குறிப்பிட்டது போல், “மோதல் பற்றி அறிக்கையிடுவதில், இதழியல் மற்றும் பிரச்சாரத்துக்கு இடையேயான வேறுபாடு அழிக்கப்பட்டுள்ளது. அனைத்து செய்திகளும் மேம்போக்காக வெளியிடப்படுகின்றன, அறிவுபூர்வமான வேலைக்கு செய்தி ஊடகங்கள் இடம் கொடுக்கவில்லை. சதாம் ஹூசைன், ஒசாமா பின்லேடன் மற்றும் ஸ்லோபோடன் மிலோசேவிக் போன்ற அரக்கர்களைப் போல, புட்டின் என்ற அசுரன் இருப்பதால் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தது என்பதாக உலகளாவிய கதை உள்ளது.

“கற்றறிந்த கல்வியாளர்கள் —பல தசாப்தங்களாக வரலாற்று காரணங்களின் சிக்கலான பிரச்சினையுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் கூட— அறிவுபூர்வமாக சிந்திப்பதில் தாழ்ந்த நிலையில் உள்ளனர், மேலும் CNN, MSNBC மற்றும், நிச்சயமாக, நியூ யோர்க் டைம்ஸ் போன்ற ஊடகங்களை சிந்திக்க அனுமதித்து திருப்தியடைகின்றனர்.”

ரஷ்யா தொடர்புபட்ட அனைத்தையும் வெளியேற்றுவதை நியாயப்படுத்த முயற்சிக்கும் ஒப்பேரா நிறுவன மேலாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களின் விரிவுரைகளைக் கேட்கும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் கடந்த மூன்று தசாப்தங்களாக ஓயாத போரை நடத்தி வருகின்றன என்பதை ஒருவர் ஒருபோதும் அறியமாட்டார் என்பது தெரிகிறது. சேர்பியா மீதான காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சுத் தாக்குதல், ஈராக் மீதான படையெடுப்பு, கறுப்பு தள சித்திரவதைத் திட்டங்கள், ‘பயங்கரவாத செவ்வாய்’ படுகொலைகள், மற்றும் ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்ட பொதுமக்கள் படுகொலை உட்பட, கிளின்டன், புஷ் அல்லது ஒபாமா நிர்வாகங்களின் கொடூரமான போர்க்குற்றங்களுக்கு பதிலளிக்குமாறு அமெரிக்க இசைக் கலைஞர்களையோ அல்லது கலைஞர்களையோ இந்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் எவரும் கேள்வி கேட்கவில்லை.

வெள்ளை மாளிகையில் பணியாற்றி, அல்லது அரசாங்கத்திற்கு ஒரு கல்வி அல்லது விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகராகப் பணியாற்றி அமெரிக்க அரசாங்க விருதை ஏற்க மறுத்த எவரும், பழமைவாத மதிப்பீடுகளின்படி சுமார் நான்கு மில்லியன் மக்களின் மரணத்திற்கு வழிவகுத்ததான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் போர்களின் காரணமாக வெளியேற்றப்படவோ, மற்றும் அவர்களது தொழில்முறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ அச்சுறுத்தப்படவில்லை.

ரஷ்ய-எதிர்ப்பு வெறியைத் தூண்டுவதில் ஈடுபட்டுள்ள அதே நபர்களில் பலர், பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச ஆட்சியின் மிருகத்தனமான அடக்குமுறையை எதிர்த்த இஸ்ரேலிய கல்வியாளர்களுக்கு எதிரான தடைகளை கண்டனம் செய்வதற்கும் தீவிரமாக குரல் கொடுத்தனர். காசா பகுதியில், வறிய மக்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் கண்மூடித்தனமான வன்முறையை எதிர்கொள்கின்ற சூழ்நிலையில், உதவி அமைப்புக்கள் அதை ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒப்பிட்டுள்ளன. ஆயினும்கூட, புறக்கணிப்பு, பங்கு விலக்கல் மற்றும் பொருளாதாரத் தடைகள் (Boycott, Divestment and Sanctions-BDS) பிரச்சாரத்தின் ஆதரவாளர்கள், இஸ்ரேலிய கல்வியாளர்கள் உடனான உறவுகளை நிறுத்திவைக்க மற்றும் இஸ்ரேலிய தயாரிப்புக்களை தடை செய்ய அழைப்பு விடுக்கையில், அவர்கள் வழமைபோல் ‘யூத எதிர்ப்பாளர்கள்’ என இழிவுபடுத்தப்படுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, 27 அமெரிக்க மாநிலங்கள் இஸ்ரேலை புறக்கணிப்பதை ஆதரிப்பவர்களுடன் அரசு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் வணிகம் செய்வதைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றியுள்ளன.

உயர் நடுத்தர வர்க்கத்தின் போர்-ஆதரவு அடுக்குகள் இந்த முரட்டுத்தனமான இரட்டை நிலைப்பாட்டில் எந்தத் தவறையும் காணவில்லை, ஏனென்றால் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் சமாதானம் செய்து கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மன் விமானப்படை பங்கேற்ற முதல் போரான, 1999 இல் சேர்பியாவிற்கு எதிராக நடந்த நேட்டோவின் விமானப் போரின் போது, ‘மனித உரிமைகளை’ பாதுகாக்கும் நேட்டோவின் போர்விமானங்கள் பற்றி பாசாங்குத்தனமான வெறித்தனத்துடன் சேர்பிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை நியாயப்படுத்த தயாராக இருந்த புத்திஜீவிகள் மற்றும் முன்னாள்-ரடிக்கல் அரசியல்வாதிகளுக்கு பஞ்சமில்லை.

இந்த நிகழ்வின் அடிப்படை வேர்களை பற்றி விளக்கமளித்து, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் 1999 இல் இவ்வாறு எழுதினார்:

அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளின் சமூக கட்டமைப்பு மற்றும் வர்க்க உறவுகள் 1980 களின் தொடக்கத்தில் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்றத்தால் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் சந்தை மதிப்பீடுகளில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து, தொடர்ந்து அதிகரித்து வரும் பங்கு மதிப்புகள், நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவினருக்கு –குறிப்பாக தொழில்முறை உயரடுக்கினருக்கு மத்தியில்– அவர்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வத்தை அணுக வாய்ப்பளித்தது. ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த சதவீத மக்களே உண்மையில் பணக்காரர்களாக வளர்ச்சியடைந்தனர். ஆனால் எண்ணிக்கை அடிப்படையில், ‘புதிய பணக்காரர்கள்’ ஒரு கணிசமான மற்றும் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த சமூக அடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். [“படுகொலைக்குப் பின்னர்: பால்கன் போரின் அரசியல் படிப்பினைகள்,” என்பது, ஒரு கால் நூற்றாண்டு காலப் போர்: உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதல், 1990-2016 என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது].

இந்த சமூக அடுக்கு இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நேட்டோ கூட்டணிக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான ஒரு பேரழிவுகரமான போர் —அணு ஆயுதப் போராக உருவெடுக்கக்கூடிய ஒரு மோதல்— பற்றி கருத்தியல் நியாயத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளது. உண்மையில், அவர்கள் வழிநடத்தும் ரஷ்ய விரோத பிரச்சாரத்தின் காட்டுமிராண்டித்தனத்தை, ஒரு போரில் எதிரி நாடுகளின் அரக்கத்தனத்துடன் மட்டுமே ஒப்பிட முடியும்.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் உந்துதலை உறுதியாக ஆதரிக்கும் வலதுசாரி கனேடிய நாளிதழான நேஷனல் போஸ்ட் கூட வெள்ளிக்கிழமை சற்று பதட்டத்துடன் இவ்வாறு எழுதியது, 'கனடாவும் பரந்த பிரிட்டிஷ் பேரரசும் தீவிர வேகத்துடன் எந்தப் பெயரையும் மாற்றிய முதல் உலகப் போரின் ஆரம்ப மாதங்களைப் போல் தெரிகிறது. அது ஜேர்மனியுடன் கூடுவதற்கான ஒரு குறிப்பைக் கொண்டிருந்தது. பேர்லின், ஒன்டாரியோ கிச்சனர் என மறுபெயரிடப்பட்டது. பிங்கென் (Bingen), கார்ல்ஸ்டாட் (Carlstadt), மற்றும் டுஸ்ஸெல்டோர்ஃப் (Dusseldorf) ஆகிய ஆல்பெர்ட்டா சமூகங்கள் அனைத்துக்கும் மிகுந்த தேசபக்தி நிறைந்த பெயர்கள் வைக்கப்பட்டன. அரச குடும்பம் அதன் பெயரை ஹவுஸ் ஆஃப் சாக்ஸ்-கோபர்க் மற்றும் கோதாவிலிருந்து பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் வின்ட்சர் என்று மாற்றியது.

ஆனால், போர்க் காய்ச்சல் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற அடுக்குகளை உறுதியாக பீடித்துள்ள போதிலும், தற்போதைய நெருக்கடியானது பரந்தளவில் பெரும்பகுதி மக்களால், அதாவது தொழிலாள வர்க்கத்தால் மிகவும் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. முப்பது வருட கால முடிவில்லாத போர் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரங்களில் எதிர்கொண்ட ஒரு நிலையான வீழ்ச்சிக்குப் பின்னர் கூட, ஒரு பேரழிவுகரமான உலகளாவிய கிளர்ச்சியில் தாம் முத்திரையிடப்படுவதற்கு தொழிலாளர்களுக்கு பேரார்வம் எதுவும் இல்லை. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் பெருநிறுவன இலாபங்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதான தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்திற்குப் பின்னர், அவர்கள் ‘ஜனநாயகம்’ மற்றும் ‘சுதந்திர உலகத்தின்’ சார்பாகப் போராடுவதாக அரசியல் உயரடுக்கு மற்றும் அவர்களின் உயர் நடுத்தர வர்க்கத் தொண்டர்களின் கூற்றுக்களை சந்தேகத்துடன் நடத்துகின்றனர் அல்லது முற்றிலும் தூற்றுகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தினரிடையே மறைந்திருக்கும் இந்த போர் எதிர்ப்பை சோசலிசத்திற்கான நனவான அரசியல் போராட்டமாக மாற்றுவதே இப்போது முக்கியமான பணியாகும்.

Loading