ஜேர்மனியில் போரும் மறுஆயுதமயமாக்கலும் மற்றும் "பசுமைக் கட்சியின் விழுமியங்கள்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டிசம்பரில் பசுமைக் கட்சியின் அன்னாலெனா பெயபொக் ஜேர்மன் வெளியுறவு மந்திரியாக பொறுப்பேற்றபோது, அவர் 'விழுமியங்களை வழிநடத்தும்' வெளியுறவுக் கொள்கைக்கு உறுதியளித்தார். அது 'பெண்ணியவாத', 'மனித உரிமைகளுடன் இணங்க' மற்றும் 'காலநிலை சார்ந்ததாக' இருக்க வேண்டும் என்றார். இப்போது இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 'பசுமைக் கட்சி விழுமியங்களின்' ஆரம்பகால மதிப்புக்களை பற்றி நமக்கு தெரிகிறது.

பிப்ரவரி தொடக்கத்தில், உக்ரேனிய படையினரும் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளும் ஒருவரையொருவர் எதிர்கொண்ட டொன்பாஸ் போர்முனையில் புகைப்படம் எடுப்பதற்காக பெயபொக் போர் உடைகளுடன் தோன்றினார். நேட்டோவிடமிருந்து ரஷ்யாவிற்கு எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தையும் எதிர்பார்க்க முடியாது என்ற ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நம்பிக்கையை அவரது இராணுவத் தோற்றம் பலப்படுத்தி, அது இறுதியில் உக்ரேனை இராணுவ ரீதியாக தாக்க முடிவு எடுக்க வைத்தது.

போர் தொடங்கிய உடனேயே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பசுமைக் கட்சியினரின் முழு ஆதரவுடன் ஜேர்மனிய அரசாங்கம் மிகப் பெரிய மறுஆயுதமயமாக்கல் திட்டத்தை அறிவித்தது. இராணுவ வரவு-செலவுத் திட்டம் இந்த ஆண்டு 100 பில்லியன் யூரோக்களால் அதிகரிக்கப்பட்டு 150 பில்லியன் யூரோக்களை அடைகின்றது. பசுமைக் கட்சி கடந்த ஆண்டு அவர்களின் தேர்தல் வேலைத்திட்டத்தில் வலியுறுத்திய போர்ப் பகுதிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதற்கான தடை கூட, கூட்டாட்சி அரசாங்கத்தால் சுருக்கமாக நீக்கப்பட்டது. இப்போது ஜேர்மனி உக்ரேனை கொடிய ஆயுத வெள்ளத்தில் மூழ்கடித்து, போரை நீட்டித்து, அதை இரத்தக்களரியாக்கி வருகிறது.

கியேவில் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பெயபொக் (Photo: kmu.gov.ua/CC BY-SA 4.0)

பின்னர், மார்ச் 18 அன்று, சமூக ஜனநாயகவாதிகள் (SPD), பசுமைக் கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகள் (FDP) கூட்டணி அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் அவர் வழிநடத்தும் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் முக்கிய அம்சங்களை கோடிட்டுக் காட்டும் ஒரு நீண்ட உரையை பெயபொக் வழங்கினார்.

'சுதந்திரம்,' 'பாதுகாப்புக்கான ஏக்கம்' மற்றும் 'எங்கள் குழந்தைகளின் எதிர்காலம்' பற்றிய சொற்றொடர்களை பின்னிப்பிணைத்த அவர், 1960 களில் இருந்து குளிர்யுத்தகால படையினரைக் கூட வெளிறச்செய்யும் ஒரு ஓர்வெல்லியன் காட்சியை உருவாக்கினார். இது வெளிப்புற மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு இடையிலான கோட்டை இல்லாமல் செய்து மற்றும் இராணுவத்தை (Bundeswehr) ஐரோப்பாவின் வலிமையான இராணுவமாக மேம்படுத்தப்படுத்துவதற்கும் அப்பால், விஞ்ஞான, சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை பாதுகாப்பு சேவையின் கீழ் வைக்கிறது.

பாதுகாப்புக் கொள்கை 'இராணுவ மற்றும் இராஜதந்திரத்தை விட அதிகம்' என பெயபொக் வலியுறுத்தினார். 'உள்கட்டமைப்பில் முதலீடுகள், வர்த்தகக் கொள்கைகள் நமது பாதுகாப்பின் ஒரு பகுதியாக இருந்தால், பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் வெளியுறவு அமைச்சகம் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தில் மட்டுமல்ல, நிறுவனங்கள், நகராட்சிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் எடுக்கப்படுகின்றன' என்றார்.

பெயபொக் நேட்டோவிற்கு ஒரு தெளிவான பங்களிப்பை அளித்ததுடன், அதன் 'ஐரோப்பிய தூணை' வலுப்படுத்தவும், 'தென்-கிழக்கு ஐரோப்பா நாடுகளில் பிரசன்னத்திற்காகவும்' மற்றும் 'நம்பகமான அணுசக்தி அச்சுறுத்தலையும்' பரிந்துரைத்தார். அணுசக்தி அச்சுறுத்தலை உறுதி செய்வதற்காக, ஜேர்மன் அரசாங்கம் F-35 போர் விமானத்தை வாங்க முடிவு செய்தது. ஏற்கனவே உலகின் நான்காவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக ஜேர்மனி இருக்கையில், 'ஐரோப்பிய பாதுகாப்புத் துறையை' விரிவுபடுத்துவதற்கு ஆதரவாகவும் அவர் பேசினார்.

பசுமைக் கட்சியினர் முன்பு நிராயுதபாணியாக்கம் மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டை ஆதரித்த நிலையில், இப்போது பெயபொக் கூறுகிறார்: 'நிராயுதபாணியாக்கம் மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவை தடுப்பு மற்றும் தற்காப்புக்கு துணையாக இருக்கும் என நாம் நினைக்க வேண்டும். அதாவது கூட்டணியில் தற்காப்புத் திறனாகும். இது நமது செயல் திறனுக்கு முக்கியமானது. என்னைப் பொறுத்தவரை, பாதுகாப்பு என்பது நம்மை தற்காத்துக் கொள்ளும் திறன் மற்றும் விருப்பம் இரண்டையும் விவரிக்கிறது. ... நம்மை தற்காத்துக் கொள்ளும் நமது திறமையே நமது பாதுகாப்பை தீர்மானிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

படைகள் உடனடி அருகாமையிலும் உலகெங்கிலும் போராடக்கூடியதாக இருக்க வேண்டும் என பெயபொக் அறிவித்தார். கடந்த காலத்தில், “இங்கிருந்து வெகு தொலைவில் இந்து குஷ் (Hindu Kush) அல்லது பிற இடங்களில் நமது பாதுகாப்பை நாங்கள் பாதுகாக்கிறோமா? அல்லது எங்கள் வீட்டு வாசலில் எங்கள் பாதுகாப்பை நாங்கள் பாதுகாக்கிறோமா? என்பது மூலோபாயக் கேள்வியாக இருந்தது. “இதுவா அதுவா அல்ல, தொலைவிலா அல்லது அருகிலா' என்பதை அனுபவம் காட்டியதாக அவர் கூறினார். 'எங்கள் படையினர்களின் பணிகள் இனி தானாகவே பிளன்ஸ்பேர்க் (Flensburg) அல்லது பிரைபேர்க் (Freiburg) இலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்காது என்பது தெளிவாகிறது. ஆயினும்கூட, இந்த பணிகளும் முக்கியமானவை” என்றார்.

அரசியலமைப்பு சட்டரீதியாக நங்கூரமிடப்பட்டுள்ள இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் இடையிலான பிரிவினையை ஒழிக்க வேண்டும் என்று பெயபொக் வாதிட்டார். சமீபத்திய ஆண்டுகளில், 'இலத்திரனியல்மயமாக்கப்பட்ட உலகில், உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் முற்றிலும் தெளிவற்றதாகிவிட்டன' என்று அவர் கூறினார். “எங்கள் அரசியலமைப்புச் சட்டத்திலும் பிளவுக் கோடுகள் உள்ளன. எனவே, நாம் நேர்மையாக நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: எதிர்காலத்தில் இந்தப் பழைய பிளவுக் கோடுகளை எவ்வாறு கையாள்வது?”

இணைய தணிக்கைக்கான மெல்லியதாக மூடிமறைக்கப்பட்ட அழைப்பில், பெயபொக் இணையத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார், இது 'நிச்சயமாக மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என்று அவர் கூறினார். இணைய, பாரம்பரிய மற்றும் வழமையற்ற கலப்புப் போர் 'நவீன போரின் மையப் பகுதியாகும்'. 'எங்களுக்கு வலுவான இணைய பாதுகாப்பு திறன்கள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் எங்கள் வேலையின் ஒரு பகுதி, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையில் இராணுவ மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையேயான திறன்களை கையாள வேண்டும்' என்று அச்சுறுத்தல்கள் காட்டுகின்றன.

ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய பெரும் சக்தி நலன்களின் கீழ் சுற்றுச்சூழல் கொள்கையை பெயபொக் வைக்கின்றார்: 'ஒன்று தெளிவாக உள்ளது: புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, புதுப்பிக்கத்தக்க மற்றும் திறமையான எரிசக்தி ஆற்றல்களை நோக்கி வேகமாக செல்லுங்கள். இவை சுத்தமான எரிசக்திக்கான முதலீடுகள் மட்டுமல்ல, இவை நமது பாதுகாப்பு மற்றும் நமது சுதந்திரத்திற்கான முதலீடுகளாகும்” என்றார்.

ரஷ்யாவைத் தவிர, பெயர்பாக் சீனாவை மிக முக்கியமான எதிரியாகக் குறிப்பிட்டார். இதனை ஐரோப்பாவில் மட்டுமல்ல, ஆபிரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் எதிர்கொள்ளப்பட வேண்டும். சீன 'ஒரே இணைப்பு ஒரே பாதை' (“Belt and Road”) முன்முயற்சி, 'குறிப்பாக உள்கட்டமைப்புக்கான முதலீடுகள் பாதுகாப்பிற்கு தேவையானவை' என்பதைக் காட்டுகிறது. ஒருவர் “மற்றவர்களை முழுமையாகச் சார்ந்திருக்கவில்லை என்றால் மட்டுமே சுதந்திரமாக செயல்பட முடியும். ... அதனால்தான் நாங்கள் வரும் மாதங்களில் ஒரு புதிய பாதுகாப்பு மூலோபாயத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், ஒரு புதிய சீன மூலோபாயத்தையும் உருவாக்குவோம்” என்றார்.

அவரது பாதுகாப்பு மூலோபாயம் ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு உதவுகிறது மற்றும் ஜேர்மன் பொருளாதாரத்தின் இலாப நலன்களை கருத்தில் கொண்டுள்ளது என்பதையும் பெயபொக் மறைக்கவில்லை. வர்த்தகக் கொள்கை, உள்கட்டமைப்புக் கொள்கை, வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை, “அவை அனைத்தும் ஒன்று சேர்ந்தவை,” என அவர் கூறினார். 'ஏனென்றால், 21 ஆம் நூற்றாண்டில் பாதிப்பு ஏற்படுவது, சர்வாதிகார நாடுகள் [வெளிப்படையாக சீனா என்று பொருள்] ஐரோப்பிய மோட்டார் பாதைகள், சாலைகள், மின் கட்டங்கள் மற்றும் துறைமுகங்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை முதலீடு செய்வதில் கூட இருக்கலாம்' எனக் கூறினார்.

ஒரு 'விழுமியங்களால் உந்தப்பட்ட வெளியுறவுக் கொள்கை' என்பது 'பொருளாதார நலன்கள் உட்பட அதே நேரத்தில் விழுமியங்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதாகும். ஏனென்றால் ஒன்று மற்றொன்றுடன் நெருங்கிய தொடர்புடையது. ... 21 ஆம் நூற்றாண்டின் பலப்பரீட்சையில் உலகளவில் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், இராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக, சாதாரண மற்றும் இலத்திரனியல் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, நமது அனைத்து கருவிகளையும் புதுப்பித்த நிலையில் கொண்டு வர வேண்டும். முற்றிலும் தெளிவற்றதாக இல்லாமல் பாதுகாப்பைப் பற்றிய விரிவான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

கட்டாரில் ஹாபெக்

பசுமைக் கட்சியினரின் புதிய வெளியுறவுக் கொள்கை விழுமியங்களை நடைமுறைப்படுத்த ரோபர்ட் ஹாபெக் விரைந்தார். இந்த வார தொடக்கத்தில், பசுமைக் கட்சி துணை சான்சிலரும் மற்றும் பொருளாதார அமைச்சருமான இவர் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு Thyssenkrupp, Bayer மற்றும் Siemens Energy தலைவர்கள் உட்பட 22 வணிக முதலாளிகளுடன் பயணம் செய்தார். ஜேர்மனி 'புட்டினின் இரத்தக் கறை படிந்த எரிவாயு மற்றும் எண்ணெய்' ஆகியவற்றிலிருந்து சுதந்திரமாக மாற வேண்டும் எனக் கூறி, வளைகுடா பிராந்தியத்தின் எதேச்சதிகாரிகள் மணலில் போய் விழுந்தார்.

எமிரேட்ஸின் மனித உரிமைகள் பற்றிய வரலாறு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2022 உலகக் கோப்பை கட்டாருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகளில், 15,000 கட்டுமானத் தொழிலாளர்கள் அங்கு இறந்துள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அதாவது, Tagesspiegel பத்திரிகையால் கணக்கிடப்பட்டபடி, “ஒரு உலகக் கோப்பை *ஆட்டத்திற்கு குறைந்தது 234 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன”.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 2 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டாரில் பட்டினி கூலிக்காக சுரண்டப்படுகின்றனர். தொழிற்சங்கங்களை ஒழுங்கமைக்கவோ வேலைகளை மாற்றவோ அவர்களுக்கு அனுமதி இல்லை. கடுமையான வெப்பத்தில் 12 மணிநேரம் வேலை செய்கிறார்கள் மற்றும் பல மாதங்களாக ஊதியம் பெறுவதில்லை. எழுபது சதவீத மரணங்கள் கணக்கில் வராமல் போய்விடுகின்றது. தங்கள் முக்கிய உணவளிப்பவரை இழக்கும் குடும்பங்கள், இழப்பீடு ஒருபுறம் இருக்க, அதுபற்றிய எந்தச் செய்தியையும் கூட பெறுவதில்லை.

கட்டாரில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள், அங்கீகரிக்கப்படாத தகவல்களை பரப்பாதிருப்பதாகவும், சட்டவிரோதமாக செய்திகளைப் பெறாதிருக்கவும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட வேண்டும். அவர்கள் செய்தி ஆய்வில் ஈடுபடும்போது, சில நேரங்களில் பல நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலைமை சிறப்பாக இல்லை. அவர்கள் -சவூதி அரேபியா மற்றும் கட்டாருடன் சேர்ந்து- யேமனுக்கு எதிரான போரை வழிநடத்துகிறார்கள். அவர்கள் அந்நாட்டில் தொடர்ந்து குண்டுகளை வீசுகிறார்கள், தரைப்படைகளையும் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட கூலிப்படையினரையும் அங்கு பயன்படுத்தி, மேலும் ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்கிறார்கள். இந்த போர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளால் ஆதரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி, இந்தப் போரானது இதுவரை பல பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 300,000 உயிர்களைக் கொன்றுள்ளது மற்றும் ஒரு மனிதாபிமான பேரழிவைத் தூண்டியுள்ளது. 30 மில்லியன் யேமன் மக்களில் 80 சதவீதம் பேர் வெளியில் இருந்து வரும் மனிதாபிமான உதவியை நம்பியிருக்கிறார்கள்.

ஆனால் இவையனைத்தும் ஹாபெக்கை தனது புரவலர்களை பயபக்தியுடன் வணங்குவதையும் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதையும் தடுக்கவில்லை. கட்டார் மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானி உடனான சந்திப்பிற்குப் பின்னர், அந்த நாள் 'ஒரு வலுவான வேகத்தைப் பெற்றுள்ளது' என்று அவர் உற்சாகப்படுத்தினார். மன்னரின் ஆதரவு எல்லைக்கு அப்பாற்பட்டது. இது ஒரு நீண்டகால எரிபொருள் கூட்டுழைப்பிற்குள் நுழைய 'பிரமாண்டமான முறையில்' ஒப்புக் கொள்ளப்பட்டது.

இது கட்டாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மூலம் ரஷ்ய எரிவாயு விநியோகங்களை மாற்றுவதுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. சூரிய ஒளி மூலமான ஆலைகளின் உதவியுடன் உற்பத்தி செய்யப்பட்டு ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்படும் 'பச்சை' பிராணவாயுவின் (hydrogen) ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் நெருக்கமான ஒத்துழைப்பை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பசுமைவாதிகளின் 'விழுமியங்களால் உந்தப்படும் வெளியுறவுக் கொள்கை', அந்தக் கைகளின் உரிமையாளர்கள் ஜேர்மன் பொருளாதார நலன்களுக்கு சேவை செய்யும் வரை அவை இரத்தம் தோய்ந்திருந்தாலும் அவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை. பேர்லினில் உள்ள பசுமைக் கட்சியின் தலைமையகத்தின் முகப்பில், போர் உடையணிந்த பெயபொக் மற்றும் கட்டாரில் முழங்காலில் நிற்கும் ஹாபெக்கின் படங்களை ஒருவர் தொங்கவிட வேண்டும். இவை ஆயிரம் வேலைத்திட்டங்களை விட கட்சியின் கொள்கைகள் பற்றி அதிகம் கூறும்.

ஊடகங்கள் இப்போது பசுமைக் கட்சியினரின் யதார்த்த அரசியலைப் போற்றுகின்றன. “பசுமைக் கட்சியினரின் வேலைத்திட்ட உள்மையமானது உருகப் போகிறதா? அரசாங்கப் பங்கேற்பு என்பது உலகத்தை மகிழ்ச்சிப்படுத்தும் திட்டங்களுக்கான வேகமான சலவை சுழற்சியா? என Neue Zürcher Zeitung இன் ஜேர்மனி வலைப்பதிவு கேட்கிறது. அது திருப்தியுடன் பின்வருமாறு குறிப்பிடுகிறது: 'அரசியலில் விழுமியங்களை ஆதரிக்க விரும்புவோர் முதலில் நலன்களை உருவகப்படுத்த வேண்டும்.' இந்த 'கடினமான பாடம்' இப்போது பசுமைக் கட்சியினரால் 'நிரந்தரமாக உள்வாங்கப்பட வேண்டும்'.

Tagesspiegel இதனை பற்றி இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றது: “போர் பல பகுதிகளில் மறுமதிப்பீட்டை கட்டாயப்படுத்துகிறது மற்றும் முன்னுரிமைகளை மாற்றுகிறது. இது ஒரு குழப்பமான விளைவைக் கொண்டுள்ளது. இன்னும் அது அதன் நல்ல விடயங்களையும் கொண்டுள்ளது. நீண்ட காலமாக கேள்விக்குட்படுத்தப்படாமல் இருந்த நம்பிக்கைகள் ஒரு யதார்த்தமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தம்மை நிரூபிக்கப்படாதவை அகற்றப்பட்டு வருகின்றன.

ஒழுக்கநெறிளும் வர்க்கப் போராட்டமும்

உக்ரேன் போர் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்ற உண்மையுடன் பசுமைக் கட்சியினரின் புதிய நோக்குநிலையை பெயபொக் நியாயப்படுத்துகிறார்: “அநேகமாக நம்மில் யாரும் இதை கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. ஐரோப்பாவின் நடுவில் இங்கிருந்து காரில் 10 மணிநேர பயண தூரத்தில் உண்மையான, நெருக்கமான, பயங்கரமான ஒரு மிருகத்தனமான ஆக்கிரமிப்புப் போரை அனுபவித்து வருகிறோம்' என்றார்.

என்ன முட்டாள்தனம்! ஜேர்மன் அரசாங்கத்தில் பசுமைவாதிகள் முதன்முதலில் அதிகாரத்தில் அமர்ந்தபோது, அவர்கள் ஜேர்மனியில் இருந்து எட்டு மணி நேர பயண தூரத்தில் உள்ள பெல்கிராட் மீதான குண்டுவீச்சில் கலந்து கொண்டனர். அது ஏற்கனவே நாஜிக்களாலும் குண்டுவீசப்பட்டது. அதுவும் 'உண்மையானது, நெருக்கமானது, பயங்கரமானது' - 1999 இல் பசுமைவாதிகள் தாக்குதல் நடத்தியவர்களின் பக்கத்தில் இருந்தனர்.

அப்போதிருந்து, பசுமைக் கட்சியினர் கிட்டத்தட்ட நேட்டோவின் அனைத்துப் போர்களையும் ஆதரித்துள்ளனர், அவை மில்லியன் கணக்கான பாதிக்கப்பட்டவர்களைக் கோரியுள்ளன. 2011 இல், லிபியாவை குண்டுவீசி அழித்ததில் பங்கேற்காததற்காக அவர்கள் ஜேர்மன் அரசாங்கத்தை வலதுபுறத்தில் இருந்து தாக்கினர்.

2014 இல், பசுமைக் கட்சியினருடன் இணைந்த ஹென்ரிச் போல் அறக்கட்டளை, உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கியெறிந்து இன்றைய போருக்கு வித்திட்ட சதியில் பெரும் பங்கு வகித்தது. இதன்போது, யானுகோவிச்சை கடைசியில் வெளியேற்றிய பாசிச கிளர்ச்சியாளர்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

அவரது காலத்தின் முன்னணி மார்க்சிஸ்டான லியோன் ட்ரொட்ஸ்கி, இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக, வெற்று மதிப்புகள் மற்றும் காலவரையறையற்ற தார்மீகக் கொள்கைகளின் பெயரில் மிகவும் பிற்போக்குத்தனமான கொள்கைகளை ஆதரிக்கும் குட்டி முதலாளித்துவ ஒழுக்கவாதிகளைப் பற்றி ஒரு தாக்கும் கட்டுரையை எழுதினார்.

'இந்த ஜனநாயக ஒழுக்கநெறிவாதிகள் எல்லாம் யார்?' அவர் கேட்டார். “இரண்டு நெருப்புகளுக்கு இடையில் விழுந்த அல்லது விழுந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கும் இடைநிலை தட்டுக்களின் கருத்தியலாளர்களாவர். இந்த வகை தீர்க்கதரிசிகளின் முக்கிய குணாதிசயங்கள் பெரிய வரலாற்று இயக்கங்களைப் பற்றிய புரிதல் இல்லாமை, கடினமான பழமைவாத மனநிலை, கசப்பான குறுகிய தன்மை மற்றும் மிகவும் பழமையான அரசியல் கோழைத்தனத்தை கொண்டவர்களாவர்.

வர்க்கங்களுக்கு மேலாக நிற்கும் ஒழுக்கநெறி என்று எதுவும் இல்லை என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். மீண்டும் மதத்திற்குள் நுழைய விரும்பாதவர்கள், “அறநெறி என்பது சமூக வளர்ச்சியின் விளைபொருளாகும் என்பதையும்; அதில் மாறாதது எதுவும் இல்லை என்பதையும்; அது சமூக நலன்களுக்கு சேவை செய்கிறது என்பதையும்; இந்த நலன்கள் முரண்பட்டவை என்பதையும்; ஏனைய எந்த வகையான சித்தாந்தத்தையும் விட ஒழுக்கநெறி ஒரு வர்க்கக் குணாம்சத்தைக் கொண்டுள்ளது என்பதையும் உணர வேண்டும்.'

கடந்த 30 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்தின் உக்கிரமான சுரண்டலில் இருந்து பயனடைந்த பணக்கார நடுத்தர வர்க்க அடுக்குகளின் நலன்களை பசுமைவாதிகளின் ஒழுக்கங்களும் விழுமியங்களும் பிரதிபலிக்கின்றன. போரானது வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்திற்கும் இட்டுச் செல்கிறது. பசுமைக் கட்சியினர் இதற்கு பிரதிபலிக்கும் வகையில் வலது பக்கம் ஒரு கூர்மையான திருப்பத்தை எடுத்து மற்றும் அவர்களின் தார்மீக விழுமியங்களை மறுஒழுங்கமைப்பு செய்கின்றனர்.

Loading