ஷாங்காயில் கோவிட்-19 பூட்டுதல்களும் உலகளாவிய வைரஸ் ஒழிப்புக்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, 26 மில்லியனுக்கும் அதிகமாக அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவின் நகர்ப்புற பகுதியான ஷாங்காயில் அதிகாரிகள், இரண்டு கட்ட பூட்டுதலைத் தொடங்கினர். அதாவது, ஷாங்காயைப் பிரிக்கும் ஹுவாங்பு ஆற்றின் கிழக்கே வசிப்பவர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரையிலும், அதைத் தொடர்ந்து ஆற்றின் மேற்கே உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் ஏப்ரல் 1-5 தேதிகளில் என இரண்டு கட்டங்களாக கடுமையான ‘முழுமையான’ பூட்டுதலின் கீழ் இருப்பார்கள்.

மார்ச் 23, 2022, புதன்கிழமை, சீனாவின் பெய்ஜிங்கில், வெளிப்புற கொரோனா வைரஸ் பரிசோதனை தளத்தில் பாதுகாப்பு உடை அணிந்த ஒரு சுகாதாரப் பணியாளர் குடியிருப்பாளர் ஒருவருக்கு தொண்டைத் துடைப்பு மாதிரி எடுக்கிறார். (AP Photo/Andy Wong) [AP Photo/Andy Wong]

இந்த பூட்டுதல்களின் போது, ஒட்டுமொத்த போக்குவரத்தும் நிறுத்தப்படும், அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மூடப்படும், மேலும் பள்ளிகள் தொலைநிலை கற்பித்தலுக்கு மாறும். அனைத்து கோவிட்-19 நோய்தொற்றுக்களையும் அடையாளம் காணும் ஒரு முயற்சியாக ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் பல்வேறு PCR பரிசோதனைகள் செய்யப்பட்டு, நோய்தொற்று பரவுவதற்கான ஒவ்வொரு சங்கிலித் தொடரும் துண்டிக்கப்படும். அறிகுறிகளுடன் நோய்தொற்று ஏற்பட்டுள்ள அனைத்து நோயாளிகளும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள், அதேவேளை அறிகுறியற்ற தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பாதுகாப்பாக கண்காணிக்கப்படுவார்கள்.

உலக முதலாளித்துவத்தின் முக்கிய நிதி மற்றும் தொழில்துறை மையமான ஷாங்காயின் பூட்டுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கோவிட்-19 இன் மோசமான வெடிப்பைக் கட்டுப்படுத்த சீனா தீவிரமாக போராடி வரும் நிலைமைகளின் கீழ், இப்போது மிகவும் தொற்றக்கூடிய, நோயெதிர்ப்பு சக்தியை எதிர்க்கக்கூடிய மற்றும் மிகுந்த வீரியம் உள்ளதான ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாட்டால் தூண்டப்பட்டு தற்போதைய நோய்தொற்று எழுச்சி அங்கு நடக்கிறது.

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, சீனாவின் பெரும்பகுதிகளில் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளன, அதாவது மார்ச் 1 அன்று புதிய நோய்தொற்றுக்களின் 7-நாள் சராசரி 119 ஆக இருந்தது மார்ச் 28 அன்று 5,203 ஆக கடுமையாக உயர்ந்தது, மொத்தத்தில் இந்த மாதத்தில் 75,037 நோய்தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, மார்ச் 20 அன்று இரண்டு பேர் வைரஸூக்கு பலியாகினர், இது இந்த வருடத்தில் சீனாவில் நோய்தொற்றால் நிகழ்ந்த முதல் இறப்பாகும்.

இந்த மாதம் சீனாவின் கோவிட்-19 நோய்தொற்று பற்றிய தரவைக் காட்டும் விளக்கப்படம் (WSWS Media)

உலகின் பிற பகுதிகளை துடைத்தெறிந்துள்ள நோய்தொற்றின் கொடூரமான அலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த புள்ளிவிபரங்கள் மிகக் குறைவானவையே, என்றாலும் மே 2020 தொடக்கத்தில் கோவிட்-19 ஐ முதன்முதலில் நீக்கியதில் இருந்து சீனா அனுபவித்த துயரம் மிக மோசமானது.

சீனாவின் தற்போதைய நோய்தொற்று வெடிப்பானது முற்றிலும் அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் தவறால் நிகழ்ந்ததாகும். அவர்கள், 2020 இல் தொற்றுநோயைத் தடுக்கத் தேவையான கொள்கைகளை அமல்படுத்திய சீனா மற்றும் பிற ஆசிய-பசிபிக் நாடுகளின் வழியை பின்பற்ற மறுத்து, அதற்கு மாறாக உலகம் முழுவதும் வைரஸை பரவ அனுமதித்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பில்லியன் கணக்கான மக்களை நோய்தொற்று பாதிப்புக்குள்ளாக்கி உள்ளனர். அதாவது, அவர்கள் தடுப்பூசி தேசியவாதத்தை அமல்படுத்தி, மருந்துகளுக்கான ஏகபோக உரிமையாளர்களின் இலாப நலன்களை நிலைநிறுத்தியுள்ள நிலையில், குறைந்த வருமான நாடுகளின் ஒட்டுமொத்த மக்களில் 85 சதவீதத்தினருக்கு முற்றிலும் தடுப்பூசி வழங்கப்படவில்லை.

எக்னாமிஸ்ட் இதழின் அதிகப்படியான இறப்புக்களின் கண்காணிப்பு பிரிவின்படி, இந்த கொலைவெறிக் கொள்கைகள் உலகளவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்களை கொன்றுள்ளன, அதேவேளை இன்னும் அதிக ஆபத்துள்ள மாறுபாடுகளும் உருவெடுக்கும் நிலையில், அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதும் பெரிதும் கடினமாக உள்ளது.

இதுவரை உருவாகியுள்ள SARS-CoV-2 இன் மாறுபாடுகளில் BA.2 மிகவும் அபாயகரமான மாறுபாடாகும். இது, மனிதனுக்குத் தெரிந்த மிகவும் தொற்றக்கூடிய நோய்க்கிருமியான தட்டம்மையைப் போல தொற்றக்கூடியது என்றும், ஓமிக்ரோனின் BA.1 துணை மாறுபாட்டை விட அதிக நோயெதிர்ப்பு தவிர்க்கும் தன்மையுடையது என்றும், மேலும் SARS-CoV-2 இன் டெல்டா மாறுபாட்டைப் போன்று வீரியம் மிக்கது என்றும் நம்பப்படுகிறது.

உலகின் பெரும்பகுதிகளில் BA.1 துணை மாறுபாட்டால், மற்றும் பல நாடுகளில் BA.2 துணை மாறுபாட்டால் நோய்தொற்றுக்கள் பரவி வரும் நிலையில், BA.2 இன் அதிவேக வளர்ச்சியை சீனா தடுத்துள்ளமை, அவர்கள் பராமரித்து வந்ததான ‘தீவிர பூஜ்ஜிய’ ஒழிப்பு உத்தியின் வலிமைக்கு சான்றாகும் என்பதே உண்மை.

இருப்பினும், தற்போதைய வெடிப்பானது சீனாவில் மட்டும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை பராமரிப்பதற்கான வரம்புகளை சோதித்து வருகிறது, மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சி இந்த மூலோபாயத்திலிருந்து விலகி ஒருவித மாற்றத்தைக் கொண்டுவர விவாதித்து வருவதாக அதிகரித்து வரும் அறிகுறிகள் காட்டுகின்றன. BA.2 வெடிப்பை நிறுத்துவதற்கான புறநிலை சவால்களுக்கு கூடுதலாக, சீனாவிற்கு உலகளாவிய நிதிய மூலதனத்தால் கணிசமான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது, அத்துடன் சீன முதலாளித்துவ மற்றும் உயர் நடுத்தர வர்க்கப் பிரிவுகளின் நிதிய நலன்கள் பூட்டுதல்களால் பாதிக்கப்படுகின்றன.

அனைத்து நோய்தொற்றுக்களும் கண்டறியப்பட்டு, பரவல் முழுமையாக நிறுத்தப்படும் வரை நகரம் முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதான முன்னைய பூட்டுதல்களுக்கு மாறாக, தற்போதைய ஷாங்காய் பூட்டுதல் இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டு வெறும் 9 நாட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் நடுப்பகுதியில் இருந்து நகரில் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், இது தாமதமானது, குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே இதைத் தொடங்கியிருக்க வேண்டும். மார்ச் 16 அன்று, ஷாங்காய் 158 புதிய நோய்தொற்றுக்களைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து மார்ச் 23 அன்று 983, மார்ச் 27 அன்று உச்சபட்சமாக 3,500 நோய்தொற்றுக்களை பதிவுசெய்தது. கடந்த இரண்டு நாட்களில், சீனா முழுவதும் பதிவான ஒட்டுமொத்த கோவிட்-19 நோய்தொற்றுக்களில் முற்றிலும் பெரும்பகுதி ஷாங்காய் நகரில் தான் பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென நிகழ்ந்த மாற்றத்திற்கு முன்பு வரை, ஷாங்காய் அதிகாரிகள் பரந்தளவிலான பூட்டுதல் இருக்காது என்றே பலமுறை கூறி வந்தனர். அதற்கு பதிலாக, அவர்கள் ‘துல்லியமான தொற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகள்,’ என்று நம்பிய பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், நோய்தொற்றாளர்களும் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தனிமைப்படுத்துதல், மேலும் தனிப்பட்ட சுற்றுப்புறங்களை மட்டும் வரையறுத்து பூட்டுதல் ஆகிய நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும் எனக் கூறினர்.

இந்த கொள்கையை நியாயப்படுத்துவதில், பொருளாதார வளர்ச்சியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வெளிப்படையாக மேற்கோள் காட்டினர். மார்ச் 20 அன்று, கோவிட்-19 தொடர்பான ஷாங்காய் அரசாங்க நிபுணர் குழுவின் உறுப்பினரான வூ ஃபேன், “ஷாங்காய் சீனாவின் பொருளாதாரத்தில் ஈடுசெய்ய முடியாததாகும். … முழு நகரமும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு முழுமையாக பூட்டப்பட்டால், அது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சிறுதொழில் செய்பவர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இந்த நஷ்டம் தாங்க முடியாததாக இருக்கும்” என்று கூறினார்.

நாட்டின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான CCP இன் அரசியல் நிரந்தரக் குழுவின் (CCP’s Politburo Standing Committee) குறிப்பிடத்தக்க கூட்டம் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன, அந்த கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அவர்கள் “குறைந்த செலவில் அதிகபட்ச தடுப்பையும் கட்டுப்பாட்டையும் அடைவதற்கும் மற்றும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் தொற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதற்கும் கடுமையாக பாடுபட” வேண்டும் என்று தெரிவித்தார்.

CCP நடத்தும் செய்தித்தாள் குளோபல் டைம்ஸில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, இதுவரை பூட்டுதலை மேற்கொள்ளாத ஷாங்காய் முடிவை ஆமோதிக்கிறது. மேலும், “கடந்த ஆண்டுகளில் கோவிட்-19 வெடிப்புகளை நாடு கையாள்வதை உன்னிப்பாக கவனித்து வரும் சில மூத்த சீன வல்லுநர்கள், குறிப்பாக சீனாவில் தொற்றுநோயியல் நிபுணர்கள் அதிகரித்தளவில் பரிந்துரைக்கின்ற நிலையிலும், மற்றும் வழமையான தொற்றுநோய் எதிர்ப்பு பணிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தி, மிகத் திறமையான வழியில் சமூக மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான செலவுகளைக் குறைப்பதில் சீனாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை மூலோபாயத்தை வெளிநாடுகளுடன் சரிக்கட்ட வேண்டிய நிலையிலும், ஷாங்காய் ஆய்வை ஒரு தைரியமான மற்றும் அவசியமான ஒரு நடவடிக்கையாகக் கருதுகின்றனர்” என்று குறிப்பிட்டது.

சீனாவின் ஆளும் உயரடுக்கு பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்பதற்கான பெருகிவரும் அறிகுறிகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. சீனாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அனைத்து மேற்கத்திய ஊடகங்கள், சீன தொற்றுநோய் கொள்கைகளை சித்தரிப்பதற்கு மாறாக, இந்த கொள்கைகள் சீனாவில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் மிகவும் பரந்த ஆதரவை கொண்டுள்ளது.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் அடிப்படை பலவீனம் அதன் தேசிய தன்மை ஆகும், இது CCP இன் தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு அரசியலில் இருந்து எழுகிறது. வைரஸை முடிவின்றி வெடித்துப் பரவ அனுமதிப்பதில் உறுதியாகவுள்ள உலக அரசாங்கங்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், CCP உம் ‘வைரஸூடன் வாழ்வது’ என்ற கொலைகாரக் கொள்கையை ஏற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறது.

உண்மையில், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை எந்த வகையிலும் குறைப்பது மற்றும் ஒரு விரிவான ‘தணிப்பு’ அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது கூட சீன மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் (CDC) மார்ச் 11 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கை, குவாங்டாங் மாகாணத்தில் பல்வேறு தொற்றுநோய் சூழ்நிலைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை மாதிரியாகக் காட்டுகிறது.

தொற்றுநோய்க்கு முந்தைய பயணங்களில் 50 சதவீதம் மற்றும் மிதமான பொது சுகாதார நடவடிக்கைகளை உள்ளடக்கிய 'தணிப்பு' மூலோபாயம், குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 2022 இல் மொத்தம் 55,205 வழக்குகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனா முழுவதையும் விரிவுபடுத்திப் பார்த்தால், 2022 இல் மட்டும் 600,000 க்கும் அதிகமானோர் நோய்தொற்றால் பாதிக்கப்படலாம், மேலும் 5,500 க்கும் அதிகமானோர் இறக்கக்கூடும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியில் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மூலோபாயம் பின்பற்றப்படுவது போன்ற ‘சகவாழ்வு’ சூழ்நிலையில், சீனாவில் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மட்டும் சுமார் 1.35 மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயால் இறந்து போவார்கள்.

சுருக்கமான விளைவுகளை முன்கணிக்க முயற்சிப்பதில் இத்தகைய மாதிரிகள் பயனுள்ளதாக இருந்தாலும், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை கைவிடும் மற்றும் ‘தணிப்பு’ நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையில் அவை காரணியாக முடியாது. இந்த அபாயகரமான நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன், வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும், மேலும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” முகாமிற்குள் நுழைவதற்கான அழுத்தங்கள் பெருகும்.

பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை கைவிடுவதற்கான அழுத்தங்களை சீன தொழிலாள வர்க்கம் முறியடிக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டு கோவிட்-19 ஆல் ஏற்படும் தேவையற்ற துன்பங்களையும் இறப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவர பாடுபட வேண்டும். தொற்றுநோய்க்கு தேசிய தீர்வு இல்லை என்ற அடிப்படை யதார்த்தத்தை சீனாவின் அனுபவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பெப்ரவரி 2020 முதல், உலக சோசலிச வலைத் தளம் (WSWS), தொற்றுநோயை நிரந்தரமாக நிறுத்துவதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த இயக்கத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு மூலோபாயத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வந்துள்ளது. இப்போது, மனிதகுலம் அணுசக்தி மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் நிற்கும் சூழ்நிலையில், உலகளாவிய வைரஸ் ஒழிப்புக்கான போராட்டமானது ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த ஒருங்கிணைந்த போர்-எதிர்ப்பு, கோவிட்-19-எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசரத்தை மிகைப்படுத்த முடியாது. மனிதகுலத்தின் ஆரோக்கியம் மட்டுமல்ல, அதன் உயிர்பிழைப்பும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்காலம் என்பது, முதலாளித்துவ அமைப்பு முறையை புரட்சிகரமாக தூக்கியெறிந்து உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதில் தான் தங்கியுள்ளது.

Loading