முன்னோக்கு

அதிக துப்பாக்கிகள், குறைய உணவு: பைடெனின் மூன்றாம் உலகப் போர் வரவு-செலவுத் திட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா/நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பினாமிப் போர் இப்போது அதன் இரண்டாம் மாதத்தில் உள்ள நிலையில், இந்த மோதலின் சமூக விளைவுகள் கூர்மையாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

உலகெங்கிலும், அரசாங்கங்கள் இராணுவ செலவினங்களை பெருமளவில் அதிகரித்து வருகின்றன. ஜேர்மன் இராணுவத்தை ஐரோப்பாவிலேயே மிகப் பெரியதாக மாற்றும் நோக்கத்துடன் ஜேர்மன் அரசாங்கம் அதன் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அனைத்தும் போருக்கான செலவினங்களில் பெரும் அதிகரிப்பை செயல்படுத்தி வருகின்றன அல்லது திட்டமிட்டு வருகின்றன.

US soldiers line up during the visit of NATO Secretary General Jens Stoltenberg at the Mihail Kogalniceanu airbase, near the Black Sea port city of Constanta, eastern Romania, Friday, Feb. 11, 2022 [Credit: AP Photo/Andreea Alexandru]

ஆனால், வேறெங்கையும் விட உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் இந்த நிகழ்வுபோக்கு மிகத் தெளிவாக உள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவுடன் போரிடுவதற்கான தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி, அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய அமெரிக்க இராணுவ வரவு -செலவுத் திட்டத்தை வெள்ளை மாளிகை திங்கட்கிழமை அறிவித்தது.

அமெரிக்க இராணுவத்திற்காக $813 பில்லியன் செலவழிக்க அந்த வரவு-செலவுத் திட்டக்கணக்கு முன்மொழிகிறது, இது 2022ல் 782 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும். படையினர் விவகாரத் துறையின் செலவுகளையும் மற்றும் பாதுகாப்புத்துறையின் முந்தைய செலவினங்களின் கடன் செலவுகளையும் சேர்த்தால், இந்த தொகை 1 ட்ரில்லியன் டாலர்களாக உயர்கிறது. மேலும் கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் பொலிஸ் படைகள் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை எந்திரத்திற்காக செலவிடப்படும் நூற்றுக்கணக்கான பில்லியன்களைக் குறித்து குறிப்பிட வேண்டியதே இல்லை.

அமெரிக்காவுக்கு அடுத்துள்ள 10 நாடுகளின் இராணுவச் செலவுகளின் கூட்டுத்தொகையை விட அமெரிக்கா அதிகமாக செலவிடுகிறது. கொள்கை ஆய்வுகளுக்கான பயிலகத்தின் லிண்ட்சே கோஷ்காரியன், Newsweek இல் எழுதுகையில், “அமெரிக்கா மட்டுமே அதன் இராணுவத்திற்காக ஏற்கனவே ரஷ்யாவை விட 12 மடங்கு அதிகமாக செலவிடுகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவச் செலவாளிகளுடன் சேர்த்தால், அமெரிக்காவும் அக்கண்டத்தில் உள்ள அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவை விட குறைந்தபட்சம் 15 க்கு 1 என்றரீதியில் செலவிடுகிறார்கள்,” என்றார்.

வரவு-செலவுத் திட்டக்கணக்கு முன்மொழிவை அறிவித்து, பாதுகாப்புத்துறை செயலர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், “கூடுதலாக இன்னும் ஒன்பது போர்ப் படைக் கப்பல்களை உள்ளடக்க கடற்படை சக்திக்கு 40.8 பில்லியன் டாலருக்கு அதிகமாகவும், தரைப்படை மற்றும் கடற்படை பிரிவுகளின் சண்டை வாகனங்களை நவீனப்படுத்த அண்மித்து 12.6 பில்லியன் டாலரும் … நாங்கள் கோரி வருகிறோம். வேறெந்த காலத்தை விட அதிகமாக, இந்த வரவு-செலவுத் திட்டக்கணக்கில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக 130.1 பில்லியன் டாலருக்கு அதிகமாக கோரி வருகிறோம்,” என்றார்.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் முதல் குண்டுவீசிகள் மற்றும் ஏவுகணைகள் வரை அமெரிக்க அணு ஆயுதக் கையிருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தவும் மற்றும் நவீனப்படுத்தவும் இந்த வரவு-செலவுத் திட்டக்கணக்கு முன்மொழிகிறது. இது அமெரிக்காவின் அணு ஆயுதங்களை 'அதிகரிக்கவும், கொள்முதல் செய்யவும் மற்றும் நவீனப்படுத்தவும்' $35.4 பில்லியனை உள்ளடக்கி உள்ளது. இதில் பின்வருவனவும் உள்ளடங்கும்:

• கொலம்பியா-ரக பெருந்தொலைவு ஏவுகணைகளை ஏவும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு $6.3 பில்லியன்;

• B-21 நீண்ட தூர தாக்குதல் குண்டுவீசிக்கு $5 பில்லியன்;

• கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் புதிய ரகமான, தரையில் இருந்து ஏவும் மூலோபாய தடுப்புக்காக $3.6 பில்லியன்; மற்றும்

• புதிய தலைமுறை அணுசக்தி கப்பல் ஏவுகணைகளான லாங்-ரேஞ்ச் ஸ்டாண்ட்-ஆஃப் (LRSO) ஏவுகணைக்கு $1 பில்லியன்.

இதற்கும் கூடுதலாக, இந்த வரவு-செலவுத் திட்டக்கணக்கு $11 பில்லியன் விலையில் 61 F-35 கூட்டு தாக்குதல் போர்விமானங்களைக் கொள்முதல் செய்வது உட்பட 'பயங்கர விமானப் படைக்கு' $56.5 பில்லியன் ஒதுக்குகிறது. அது, ஏவுகணை பாதுகாப்புக்கு மற்றொரு $25 பில்லியனும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட 'நீண்ட தூர வெடிகுண்டுகளுக்கு' $7.2 பில்லியனும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் கீழ் உருவாக்கப்பட்ட 'விண்வெளிப் படைக்கு' $27 பில்லியனும் ஒதுக்குகிறது.

ஒபாமா நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட கடைசி வரவு-செலவுத் திட்டக்கணக்கான 2017 பாதுகாப்புத்துறை வரவு-செலவுத் திட்டக்கணக்கு, $583 பில்லியன் ஆகும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களைத் திரும்ப பெற்றுக் கொண்டதற்குத் தலைமை வகித்த போதினும், டொனால்ட் ட்ரம்ப் அவர் ஜனாதிபதி பதவிக்காலத்தின் ஒவ்வொரு ஆண்டும் இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கை அதிகரித்திருந்தார்.

2018 இல், பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் மேற்பார்வையின் கீழ், அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் குறிப்பிடுகையில், 'பயங்கரவாதம் அல்ல—வல்லரசு போட்டியே இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் பிரதான ஒருகுவிப்பாகும்,” என்று அறிவித்தார்.

உண்மையில் சொல்லப் போனால் பென்டகன் திட்டமிடலில் பல ஆண்டுகளாக மேலோங்கி இருந்த கருத்தை அந்த ஆவணம் சூசகமாக அறிவித்தது: அதாவது, ரஷ்யா மற்றும் சீனாவுடன் போரிடுவதற்கான தயாரிப்புகளில் அமெரிக்க இராணுவம் கவனம் செலுத்த வேண்டும் என்றது. இதற்காக, ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தை பல ட்ரில்லியன் டாலரில் விரிவாக்கத் தொடங்கியது, இந்த திட்டம் ட்ரம்ப் மற்றும் இப்போது பைடெனின் கீழ் தீவிரமாக தொடரப்பட்டது.

பைடெனின் முன்மொழிவு வெறும் தொடக்கப் புள்ளி மட்டுந்தான். காங்கிரஸில் நிறைவேற்றப்படும் நிஜமான வரவு-செலவுத் திட்டக்கணக்கு பைடென் மற்றும் பென்டகன் முன்மொழிவதை விட பெரிதாக கூட இருக்கலாம்.

புதன்கிழமை குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜிம் இன்ஹோஃப் கூறுகையில், வரவு-செலவுத் திட்டம் 'நமக்குத் தேவையான நிஜமான வளர்ச்சியைக் கோரவில்லை' என்று குறிப்பிட்டதுடன், “நம் விடாமுயற்சி மற்றும் நம் அரசியலமைப்பு கடமையைச் செய்து' இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் செய்ய காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்தார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் தலையங்கத்தில் இந்த கருத்துரு எதிரொலித்தது, பைடென் வரவு-செலவுத் திட்டக்கணக்கில் 'பாதுகாப்புச் செலவினங்கள் இன்னமும் பொருளாதாரத்தில் சுமார் 3.1% ஆக இருக்கும்' என்று அந்த தலையங்கம் குறைகூறியது. ஜேர்னலின் கூற்றுப்படி, இராணுவ செலவினங்களைப் பொருளாதாரத்தில் குறைந்தபட்சம் 5 சதவீதத்திற்கு—அதாவது, சுமார் மூன்றில் இரண்டு பங்கு—அதிகரிக்க வேண்டுமாம்.

'நேட்டோவுக்குத் துப்பாக்கி அதிகரிப்பும், உணவு குறைப்பும் தேவை,' என்று பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சில் முன்னாள் தலைவர் க்ளென் ஹப்பார்ட் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில், சமூக திட்டங்களில் வெட்டுக்கள் கோரி, வாசகர் தலையங்கம் எழுதினார். இந்த வாசகம், 1936 இல், ஜேர்மனி உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, நாஜி தலைவர் ஹெர்மன் கோரிங், “துப்பாக்கிகள் நம்மை வலிமையாக்கும்; உணவு நம்மை வெறுமே கொழுப்பேற்றும்,” என்ற கருத்தை நினைவுக் கொண்டு வருகிறது.

பாரியளவிலான இராணுவ செலவினங்களின் விளைவாக மற்ற எல்லாவற்றிலும் வெட்டுக்கள் செய்யப்படும். கோவிட்-19 பெருந்தொற்றால் ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்து கொண்டிருக்கையில், இந்த கொழுத்த இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கு அறிவிக்கப்பட்டது. உயிர்காக்கும் முக்கிய திட்டங்களுக்கு பணமில்லை என்று கூறி, அவை அகற்றப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட காப்பீடு இல்லாத நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு பணம் வழங்கும் பெடரல் திட்டத்தில் கடந்த வாரம் பணம் இல்லாமல் போனது, “போதிய நிதி இல்லாததால்,” காப்பீடு இல்லாத நோயாளிகளுக்கான கோவிட்-19 பரிசோதனைகள் இனி இலவசம் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். காப்பீடு இல்லாதவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நிதி அடுத்த வாரம் காலியாக உள்ளது, அதேவேளையில் பெடரல் அனுப்பும் மோனோக்ளோனல் எதிர்ப்பு மருந்துகள் குறைக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் இராணுவத்திற்கு முன்னோடியில்லாத தொகையை செலவழிக்கின்ற நிலையிலும் கூட, பைடென் கூறுகையில், அவர் நிர்வாகம் பட்ஜெட்டை 'சமநிலையில்' வைக்கும் என்றார். 'நாங்கள் நம் நிதி மாளிகையை மறுஒழுங்குபடுத்துகிறோம்' — அதாவது, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இரட்டை இலக்க விகிதத்தில் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாள வர்க்கம் மீதான தீவிர தாக்குதல் மூலம் போர் எந்திரத்திற்கு நிதியளிக்கப்படும்.

இராணுவ-பொலிஸ் எந்திரத்திற்கு நிதியளித்தல் மற்றும் பணக்காரர்களுக்குப் பிணையளித்தல் என்று இந்த இரண்டு இன்றியமையா செயல்பாடுகளைக் கொண்ட ஒரு காவலரண் அரசாக அமெரிக்கா மேலும் மேலும் மாற்றப்பட்டு வருகிறது. உலகப் போருக்கான தயாரிப்புகள் என்பது அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர் தயாரிப்புகளாகும்.

பைடென் 'ரூஸ்வெல்டுக்கு பிந்தைய மிகவும் முற்போக்கான ஜனாதிபதியாக' இருப்பார் என்ற பேர்ணி சாண்டர்ஸின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத வாதங்களை அம்பலப்படுத்தும் விதத்தில், பைடென் நிர்வாகம் சமூக சீர்திருத்தத்திற்கான 'களத்தை' திறந்து விடுவார் என்ற வாதங்கள் எல்லாம் இந்த நிகழ்முறையால் சின்னாபின்னமாக்கப்படுகின்றன. ஜனநாயகக் கட்சி வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கட்சி என்பதை அது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இராணுவச் செலவினங்களுக்காக சமூக வளங்களைத் திசைதிருப்புவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலும் ஒன்றோடொன்று குறுக்கிடுவது அதிகரிப்பதானது, போரை எதிர்க்கும் சமூக வட்டம் தொழிலாள வர்க்கம் என்ற ஒரு விஷயத்தைத் திட்டவட்டமாக தெளிவாக்குகிறது.

உலகெங்கிலும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பது வர்க்கப் போராட்டத்தின் ஓர் உலகளாவிய வெடிப்பைத் தூண்டுகிறது. தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் உலகளாவிய இயக்கம் போருக்கு எதிரான போராட்டத்திற்கு இன்றியமையா சமூக ஆதரவுத் தளத்தை வழங்குகிறது. ஆனால் இந்த இயக்கம் சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணி ஆக்கப்பட வேண்டும். சமத்துவமின்மை மற்றும் போருக்கான மூலவேரான முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பைத் தூக்கியெறிவதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

Loading