உக்ரேன் போர் தொடர்பாக ரஷ்யாவுடனான உறவுகளை துண்டிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்புகளை சீனா நிராகரித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்றைய இணையவழி ஐரோப்பிய ஒன்றிய - சீன உச்சிமாநாட்டிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரோதமான கருத்துக்கள், உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோவின் போரால் தூண்டப்பட்ட உலகளாவிய பதட்டங்கள் அதிகரித்து வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ரஷ்யா மீது ஒருதலைப்பட்சமாக விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை பெய்ஜிங் மதிக்கும் என்ற சீன உத்தரவாதத்தை பெற ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் முயன்றனர், ஆனால் பெறத் தவறிவிட்டனர்.

மார்ச் 1, 2019 அன்று பெய்ஜிங்கில் நடந்த கண்காட்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் படத்தைக் காட்டும் வீடியோ திரையை மக்கள் கடந்து செல்கின்றனர் [Credit: AP Photo/Mark Schiefelbein].

உக்ரேனுக்குள் ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக பில்லியன் கணக்கான டாலர்கள் ஆயுதங்களை அவர்கள் கொட்டி, சீனாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க அச்சுறுத்தல்களால் உச்சிமாநாட்டின் போக்கு ஆதிக்கம் செலுத்தப்பட்டது. பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தல்களுக்கு அப்பால், ஐரோப்பிய ஊடகங்களில் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு பல மடங்கு அதிகரித்துள்ளன. இதற்கிடையில், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தலைவர் அட்மிரல் ஜோன் அக்விலினோ வாஷிங்டனையும் அதன் நட்பு நாடுகளையும் தைவான் மீது சீனாவுடன் போருக்கு 'எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும்' என அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் 25 அன்று, பெயரிடப்படாத மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி Politico விடம், 'ரஷ்யாவிற்கு இராணுவ உதவி வழங்குவதை சீனா பரிசீலித்து வருகிறது என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் நம்பகமான ஆதாரங்களைக் கொண்டுள்ளது. … சீனா ரஷ்யர்களுடன் உல்லாசமாக இருப்பது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்”. சீனா ரஷ்யாவிற்கு இராணுவ ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ உதவியிருந்தால் ஐரோப்பிய ஒன்றியம் 'சீனாவிற்கு எதிராக வர்த்தக தடைகளை விதிக்கும்' என்ற அந்த அதிகாரி, 'இதுதான் பெய்ஜிங்கிற்கு புரியும் ஒரே மொழி' என்றார்.

ரஷ்யா, சீனாவிடம் இராணுவ உதவிகளைக் கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே கூறியுள்ளனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியத் தடைகளில் இருந்து ரஷ்யாவை 'ஜாமீன் எடுக்க' வேண்டாம் என சீனாவைக் கோரினார்: 'இந்த இழப்புகளுக்கு சீனாவோ அல்லது வேறு எவரோ ரஷ்யாவை ஈடுகட்ட முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அதைச் செய்வதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளைப் பொறுத்தவரை, மீண்டும், நான் அதையெல்லாம் பொதுவில் வெளியிடப் போவதில்லை, ஆனால் நாங்கள் அதை சீனாவுடன் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்வோம்…”

அமெரிக்காவின் சீனத் தூதர் ஜீன் காங் (Qin Gang) சல்லிவனின் கூற்றுக்களை நிராகரித்தார், போருக்கு இராஜதந்திர தீர்வுக்கு அழைப்பு விடுத்தார் மற்றும் சீனா ரஷ்யாவிற்கு ஆயுதம் கொடுக்கிறது என்பதை மறுத்தார். “உணவு, மருந்து, தூக்கப் பைகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானவை ஆகியவற்றை சீனா அனுப்புகிறது. இது எந்த தரப்பினருக்கும் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை அனுப்பவில்லை” என்று காங் கூறினார். அவர் மேலும்: 'நாங்கள் போர்களுக்கு எதிரானவர்கள், நான் சொன்னது போல்... சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நம்பிக்கை உறவு ஒரு குறைபாடு அல்ல. நெருக்கடியை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் இது ஒரு சொத்தாக உள்ளது.” என்று கூறினார்.

2020 டிசம்பரில், மேர்க்கெல் பதவி விலகுவதற்கு சற்று முன்பு, ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஐரோப்பிய ஒன்றிய - சீன உச்சிமாநாடு ஐரோப்பிய ஒன்றிய-சீனா வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியும் என சீன அதிகாரிகள் சுருக்கமாக நம்பிக்கை தெரிவித்தனர். எவ்வாறாயினும், ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள அதன் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் வீகர் இன சிறுபான்மையினரின் 'இனப்படுகொலையை' சீனா மேற்கொண்டு வருகிறது என்ற தவறான மற்றும் ஆதாரமற்ற அமெரிக்க கூற்றுக்களை ஐரோப்பிய ஒன்றியம் எதிரொலித்த பின்னர், ஒப்பந்தத்தின் ஒப்புதல் இடைநிறுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய-சீனா உச்சிமாநாட்டின் மற்றொரு விடையமாக முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசு லித்துவேனியாவுடனான வர்த்தகத்தை சீனா முடக்கியது இருந்தது. லித்துவேனிய தலைநகரான வில்னியஸில் தைவானுக்கான முறையான வர்த்தக பிரதிநிதித்துவத்தை திறந்ததைத் தொடர்ந்து இது நடந்தது. 'ஒரு சீனா' கொள்கையை நிராகரிப்பதற்கும், தைவான் தன்னை ஒரு முழு சுதந்திர நாடாக அறிவிக்க ஊக்குவிக்கும் ஒரு ஐரோப்பிய அச்சுறுத்தலாக இதைப் பார்க்கிறோம் என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இது, ஜின்ஜியாங், உள்-மங்கோலியா அல்லது திபெத் போன்ற சீனாவின் பிரதான நிலப் பகுதிகளை, சீனாவிலிருந்து பிரிந்து சுதந்திரம் அறிவிக்க ஊக்குவிப்பதற்கும், இந்தக் கொள்கையைப் பயன்படுத்த ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் சில பிரிவுகள் பரிந்துரைக்கின்றன.

இந்தக் கொள்கை, கம்யூனிசத்திற்கும் சீன அரசாங்கத்திற்குமான விரோதத்தால் இயக்கப்படுகிறது என லித்துவேனியாவின் துணைப் பிரதமர் மன்டாஸ் அடோமனாஸ் விளக்கினார். 'கம்யூனிச சீனாவின் விரிவாக்கக் கொள்கைகளில் இருந்து எழும் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துகளை நாங்கள் காண்கிறோம்,' என அடோமனாஸ் CBCயிடம் கூறினார். 'நாங்கள் இதை கட்டுப்படுத்த விரும்பினோம் ... மற்றும் தைவானில் ஜனநாயகத்தை ஆதரிக்கிறோம்.'

வில்னியஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் விஞ்ஞான பீட இயக்குனர் மார்கரிட்டா செல்கிடே, லித்துவேனியாவின் சீன எதிர்ப்புக் கொள்கை, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவ உதவியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். அவர் கூறினார், “எங்களைப் பொறுத்தவரை, ரஷ்யாவின் அருகாமையில் ஒரு சிறிய நாடாக இருப்பது மிகவும் மோசமான சூழ்நிலை. அப்படியென்றால் நாம் எப்படி அமெரிக்காவிற்கு மிகவும் கவர்ச்சியாக மாறுவது? நமது வெளியுறவுக் கொள்கையை விரிவுபடுத்துவதன் மூலமும், ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கக் கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலமும்.”

இந்த வெடிக்கும் மோதல்களுடன், நேற்றைய ஐரோப்பிய ஒன்றிய-சீன உச்சிமாநாட்டின் சுருக்கமான உத்தியோகபூர்வ அறிக்கைகள், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை.

சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரைச் சந்தித்த பின்னர், ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன், உக்ரேன் தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டை விமர்சித்தார்: 'நாங்கள் மிகவும் தெளிவாக எதிர் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இது மோதல் அல்ல. இது ஒரு போர்.' 'சீனா ஆதரிக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் எங்கள் பொருளாதாரத் தடைகளில் தலையிடக்கூடாது [ரஷ்யாவிற்கு எதிராக] ... சம தூரம் போதாது' என்று அவர் கோரினார்.

'ரஷ்யாவிற்கு உதவும் எந்தவொரு முயற்சியிலும் நாங்கள் விழிப்புடன் இருப்போம்' என் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷேல் வொன் டெர் லெயனுடன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்: 'ஜின்ஜியாங் மற்றும் உள்-மங்கோலியாவில் சிறுபான்மையினரயும் திபெத் மக்களையும் சீனா நடத்துவது குறித்து நாங்கள் எங்கள் கவலைகளை எழுப்பியுள்ளோம்.'

சீன அதிகாரிகள் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இடம், உக்ரேன் மீதான பேச்சுக்களில் 'ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய பங்கு வகிக்கிறது' என்பதை ஜி ஆதரிப்பதாகவும், ரஷ்யா உட்பட அனைத்து சக்திகளின் பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். 'உக்ரேனிய நெருக்கடியின் மூல காரணம், ஐரோப்பாவில் நீண்ட காலமாக குவிந்துள்ள பிராந்திய பாதுகாப்பு மோதல்களில் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நியாயமான பாதுகாப்புக் கவலைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதே அடிப்படைத் தீர்வாகும்.

எவ்வாறாயினும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு, ரஷ்யாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் எண்ணம் இல்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தேகத்திற்கு இடமின்றி உக்ரேனில் ஒரு இரத்தக்களரிப் போரை ஆரம்பித்துள்ளார், இது பிற்போக்குத்தனமானது மற்றும் ரஷ்ய, உக்ரேனிய தொழிலாளர்களை பிரிக்கிறது. இருப்பினும், புட்டின் போரைத் தொடங்கி, அதற்கான அரசியல் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில், ரஷ்யா மிகவும் சக்திவாய்ந்ததாகவோ அல்லது இறுதியில் மோதலில் மிகவும் ஆக்ரோஷமான கட்சியாகவோ இல்லை.

உக்ரேனிய துருப்புக்கள் மற்றும் தீவிர வலதுசாரி ஆயுததாரிகள் ரஷ்யாவை இழுக்கும் அதே வேளையில், புட்டினின் படையெடுப்பு ஒரு அவநம்பிக்கையான, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது தெளிவாகிறது, நேட்டோ உக்ரேனை நேரடியாக ரஷ்ய எல்லையில் பெரிதும் ஆயுதம் ஏந்திய தளமாக மாற்றியது.

1991ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்புக்குப் பின்னர், நேட்டோ சக்திகளும், எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவும் வளர்ந்து வரும் பொருளாதார பலவீனத்தை இராணுவ பலத்தால் சமப்படுத்த முயன்றன. வாஷிங்டன் பல தசாப்தங்களாக ஈராக், சோமாலியா, யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவை சிதைத்து மில்லியன் கணக்கான உயிர்களை பலி கொடுத்த நேட்டோ போர்களை நடத்தியது. 2017 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் 'பெரும் சக்தி மோதலை' நடத்துவதே அமெரிக்க இராணுவ நோக்கங்கள், என்று அறிவித்தது.

குறைந்தபட்சம் இப்போதைக்கு மாஸ்கோவுடனான உறவுகளை துண்டிக்க ஜியின் மறுப்புக்கு இந்த மோதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை கோருகின்றனர்: புட்டினை வெளியேற்றுவது மற்றும் கிரிமியா போன்ற பகுதிகளை உக்ரேனுக்கு ரஷ்யா திரும்ப கொடுக்க வேண்டும். ஆனால், நேட்டோ சக்திகள் ரஷ்யாவையும் சீனாவையும் அடித்து நொறுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது பெருகிய முறையில் தெளிவாகிறது. ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ், வாஷிங்டன் 'ரஷ்ய பொருளாதாரத்தையும் ஒட்டுமொத்த ரஷ்யாவையும் அழிப்பது, அடித்து நொறுக்குவது, அழித்தொழிப்பது, கழுத்தை நெரிப்பது' ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என அப்பட்டமாக கூறினார்.

சீனாவில் பணிபுரியும் முன்னாள் சிஐஏ முகவரான கிறிஸ் ஜோன்சன், பைனான்சியல் டைம்ஸிடம், ரஷ்யாவில் அமெரிக்கா தலைமையிலான ஆட்சி மாற்றத்திற்கு பெய்ஜிங் அஞ்சுகிறது எனக் கூறினார். அவரைப் பொறுத்தவரை, '[ரஷ்யாவிற்கு] உதவி வழங்குவதைக் கூட அவர்கள் பரிசீலிக்கிறார்கள் என்றால், அது புட்டின் வீழ்ச்சியைக் கண்டு சீன அச்சம் பற்றி நிறைய கூறுகிறது. அத்தகைய நிகழ்வு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் காணப்படாத அளவுக்கு அவர்களின் வடக்கு எல்லையில் குழப்பத்தைத் தூண்டும்.”

ஏகாதிபத்திய சக்திகளின் பொறுப்பற்ற, ஆக்கிரமிப்புக் கொள்கைகளுக்கு ஒரே முற்போக்கான தீர்வு, ஒரு சர்வதேச, போர்-எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான். ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இராணுவ மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்தி நேட்டோவை அச்சுறுத்த முயற்சிக்கின்றன என்றாலும், பெருகிவரும் போரின் ஆபத்து நேட்டோ சக்திகளைத் தடுக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மாறாக, அவர்கள் ஒரு உலகளாவிய இராணுவ மோதலை எதிர்கொள்கின்றனர், அது அணு ஆயுதப் போராக விரிவடையக்கூடும், அது கொள்ளையடிப்பதற்கான முன்னோடியில்லாத சாத்தியங்களைத் திறக்கும் என பந்தயம் கட்டுகின்றனர்.

வாஷிங்டன் போஸ்ட் பத்தியில் 'உக்ரேன் மீதான புட்டினின் போரில் மேற்கு நாடு பொருளாதாரப் போர்களில் வெற்றி பெறுகின்றன' என வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் உறுப்பினர் செபாஸ்டியன் மல்லாபி (Sebastian Mallaby) மகிழ்ந்துள்ளார். அவர் கூறுகிறார்: 'சீனாவின் பொருளாதாரம் ரஷ்யாவை விட மிகவும் பெரியது மற்றும் அதிநவீனமானது, ஆனால் அது புதிதாக பாதிக்கப்படக்கூடியதாக தோன்றுகிறது.' மாஸ்கோ உலகச் சந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்து சம்பாதித்த ரஷ்ய டாலர் இருப்புக்களைக் கைப்பற்ற அச்சுறுத்துவதைப் போலவே, பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து சீனா சம்பாதித்துள்ள டிரில்லியன் கணக்கான டாலர்களை வாஷிங்டன் கைப்பற்ற முடியும் என்று மல்லாபி ஊகிக்கிறார்.

அவர் எழுதுகிறார்: “மூன்று டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டு நாணய சொத்துக்களை பெய்ஜிங்கின் கையிருப்பு குறைந்த சக்தி வாய்ந்ததாக தோன்றுகிறது. ரஷ்யாவின் இருப்புக்கள் முடக்கப்பட்டால், சீனாவையும் முடக்கலாம். அதேபோல, ரஷ்யா அதன் அதிக செறிவூட்டப்பட்ட ஏற்றுமதியிலிருந்து அந்நியச் செலாவணியை உருவாக்க முடியாவிட்டால் —உக்ரேன் மீது படையெடுக்கும் வரை, ஜேர்மனியின் இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவில் பாதிக்கும் மேலானதை அது வழங்கியது— நுகர்வோர் மின்னணுவியல் ஏற்றுமதியைக் குறைப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் சீனா பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை.' இது சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றில் மிகப்பெரிய ஏகாதிபத்திய திருட்டுச் செயல்களில் ஒன்றாக இருக்கும்.

இத்தகைய மோதல் வெடிப்பைத் தவிர்ப்பதற்கு, பெரு முதலாளித்துவ சக்திகளின் பொறுப்பற்ற போர்க் கொள்கைகளுக்கு எதிரானதும் சோசலிசத்திற்கானதுமான ஒரு இயக்கத்தில் சீனா, ரஷ்யா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.

Loading