சீன ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில், பைடென் உக்ரேன் தொடர்பாக சீனாவை மிரட்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் தொடரும் போருக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து விலகி இருக்குமாறு சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நீண்ட தொலைபேசி அழைப்பை நடத்தினார். பெய்ஜிங் மாஸ்கோவிற்கு எந்த வகையிலும் உதவினால் தண்டனைக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பைடென் அச்சுறுத்திய அதேவேளையில், சீனா மிரட்டப்படப் போவதில்லை என்பதை ஜி தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி ஜோ பைடென், நவம்பர் 15, 2021 அன்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இணையவழி முறையில் சந்திக்கிறார். (AP Photo/Susan Walsh, File)

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீடித்த உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான நேற்றைய அழைப்பானது, ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உக்ரேனிய இராணுவத்தை ஆயுதமயமாக்க பில்லியன் கணக்கான டாலர்களைக் கொட்டி அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளால் தூண்டப்பட்ட உக்ரேனில் உக்கிரமான மோதலுக்கு மத்தியில் நடந்தது.

தொலைபேசி அழைப்பின் வெள்ளை மாளிகையின் சுருக்கமான அதிகாரபூர்வ அறிக்கை, பைடென் 'ரஷ்யாவிற்கு சீனா பொருள் ஆதரவை வழங்கினால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகளை விவரித்ததாக' தெரிவித்தது. ஆனால் அச்சுறுத்தல்கள், 'தொடர்பாடல் வழிமுறைகளை' பராமரிக்கவும் 'எங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை' நிர்வகிப்பதையும் தவிர, சீன ஜனாதிபதியிடமிருந்து எந்த சலுகைகளையும் உடன்பாட்டையும் பெறத் தவறிவிட்டன.

பைடெனின் ஒரு மூத்த அதிகாரி 'நேரடியான, நேர்மையான' உரையாடல் என்று விவரித்தது மூடிய கதவுகளுக்குப் பின்னால் மிகவும் சூடாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடிப் போரை அச்சுறுத்தும் உக்ரேனில் நெருக்கடியை பொறுப்பற்ற முறையில் வடிவமைத்துள்ள பைடென் நிர்வாகம், அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதும் சீனாவையும் அதன் பார்வையில் கொண்டுள்ளது என்பதை ஜி (Xi) நன்கு அறிவார்.

பைடெனின் தொலைபேசி அழைப்பிற்கு முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் செய்தி ஊடகத்திடம், அமெரிக்க ஜனாதிபதி 'ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் சீனா பொறுப்பேற்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவார், மேலும் அதற்கான விலையை ஏற்குமாறு சுமத்த நாங்கள் தயங்க மாட்டோம்' என்றார். ரஷ்யாவுடன் அதன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட சீனாவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போரை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு 'ஒரு சிறப்புப் பொறுப்பு' உள்ளது, ஆனால் 'சீனா எதிர் திசையில் நகர்கிறது எனத் தோன்றுகிறது' என பிளிங்கென் அறிவித்தார்.

இதேபோன்ற எச்சரிக்கையுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலர் வெண்டி ஷெர்மன் அழுத்தத்தை குவித்தார். உக்ரேனில் 'இந்த தெரிவு செய்யப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என ஜி புட்டினிடம் சொல்ல வேண்டியிருந்தது. வெண்டி ஷெர்மன் CNN இடம் கூறினார்: 'சீனா வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்க வேண்டும். ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை, நிதி ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ திருப்பி நிரப்பாது என்பதை அது உறுதி செய்ய வேண்டும்.”

தொலைபேசி அழைப்பின் மூலம் வாஷிங்டனில் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்திய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, சீனாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தினார், பெய்ஜிங் மாஸ்கோவிற்கு உதவினால், பொருளாதாரத் தடைகள் உட்பட, 'கருவிகளின் தொகுப்பு' அமெரிக்காவிடம் உள்ளது என்றார். நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 தலைவர்களைச் சந்திக்க அடுத்த வாரம் ஐரோப்பாவுக்குச் செல்லும் போது பைடென் ஒருங்கிணைந்த மேற்கத்திய பதிலைப் பற்றி விவாதிப்பார் என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அனைத்தும் பாசாங்குத்தனத்திலும் சிடுமூஞ்சித்தனத்திலும் மூழ்கியுள்ளன. வலதுசாரி உக்ரேனிய அரசாங்கத்தையும் அதனுடன் தொடர்புடைய பாசிச ஆயுதததாரிகளையும் ஆயுதபாணியாக்கிய நிலையில், 2014ல் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிக் கவிழ்ப்பு நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை வெளியேற்றி ரஷ்யாவை ஒரு மூலையில் தள்ளியது முதல், அமெரிக்காவும் நேட்டோவும் இப்போது உக்ரேனிய இராணுவத்திற்கு பாரிய அளவிலான அதிநவீன ஆயுதங்களை வழங்குகின்றன. ஆயினும்கூட, சீனா ரஷ்யாவிற்கு இராணுவ உதவியை பரிசீலிப்பதாக ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே பைடென் நிர்வாகத்தின் நோக்கம், ரஷ்யாவை தனிமைப்படுத்தி உக்ரேனில் ஒரு போரில் மூழ்கடிப்பதாகும். அது உக்ரேனிய மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவு அல்லது மோதல் அணு ஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு பரந்த போராக விரிவடையும் ஆபத்துகள் பற்றி முற்றிலும் அலட்சியமாக இருந்தது. உக்ரேனை உறுப்பினராக்குவதன் மூலம் நேட்டோ ரஷ்ய எல்லைகளை மேலும் ஆக்கிரமிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் வழங்கத் தவறியது, ரஷ்யாவின் அவநம்பிக்கையான மற்றும் பொறுப்பற்ற படையெடுப்பிற்கு தூண்டுதலாக இருந்தது.

ரஷ்யாவின் படையெடுப்பை சீனா விமர்சிக்கவில்லை மற்றும் மோதலுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் நடவடிக்கைகளை குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், பெய்ஜிங் ரஷ்யாவின் கிரிமியாவை இணைத்ததையோ அல்லது ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனின் இரண்டு பகுதிகளுக்கான புட்டினின் சுதந்திர பிரகடனத்தையோ அங்கீகரிக்கவில்லை. பெய்ஜிங் பலமுறை சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்து, ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய இரு நாடுகளின் நியாயமான பாதுகாப்புக் கவலைகளை அங்கீகரிப்பதன் அடிப்படையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது.

தொலைபேசி அழைப்பின் சீன ஊடக கணக்குகளின்படி, மோதலுக்கு 'குளிர்ச்சியான மற்றும் பகுத்தறிவு' அணுகுமுறைக்கு ஜி பைடெனை அழைத்தார் மற்றும் 'உக்ரேன் நெருக்கடி நாம் பார்க்க விரும்பும் ஒன்று அல்ல' என்று வலியுறுத்தினார். இரு நாடுகள் தொடர்பான வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு அணுகுமுறையின் விளைவாக ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளுக்கு சீனா தள்ளப்பட்டது, ஆனால் உக்ரேனுடன் குறிப்பிடத்தக்க உறவுகளைக் கொண்டுள்ளது. சீனாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் பாரிய உள்கட்டமைப்பு முதலீட்டை உள்ளடக்கிய, பெய்ஜிங்கின் ஒரே இணைப்பு ஒரே பாதை (Belt and Road) முன்முயற்சியினை இந்தப் போர் நேரடியாக வெட்டுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ரஷ்யா மீது சுமத்தப்பட்ட ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை ஜி எதிர்த்தார், மேலும் உலகப் பொருளாதாரத்திற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகள் குறித்து எச்சரித்தார். 'விரிவாக்கம் மற்றும் கண்மூடித்தனமான தடைகள் மக்களைத் துன்புறுத்தவே செய்யும்' என்றார். 'மேலும் அதிகரித்தால், அவை உலகப் பொருளாதாரம், வர்த்தகம், நிதி, எரிசக்தி, உணவு, தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் கடுமையான நெருக்கடிகளைத் தூண்டி, ஏற்கனவே நலிந்து வரும் உலகப் பொருளாதாரத்தை முடக்கி, ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும்' என ஜி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஜி இன் கருத்துகளின் முழுமையும் ஒப்பீட்டளவில் முடக்கப்பட்டிருந்தாலும், மற்ற சீன அதிகாரிகள் பைடெனுடனான தொலைபேசி அழைப்பிற்கு முன்னும் பின்னும் அமெரிக்காவைத் தாக்கினர்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான குளோபல் டைம்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, பெயரிடப்படாத அதிகாரி ஒருவர் எச்சரித்தார்: 'அமெரிக்காவின் அச்சுறுத்தல்களையும் வற்புறுத்தலையும் சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் சீனாவின் நியாயமான நலன்கள் மற்றும் சீன நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தால், சீனா சும்மா இருக்காது. மற்றும் ஒரு வலுவான பதிலைக் கொடுக்கும்.' இதைப் பற்றி அமெரிக்கா எந்தவிதமான மாயையோ அல்லது தவறான கணக்கையோ கொண்டிருக்க தேவையில்லை என்று அந்த அதிகாரி வலியுறுத்தினார்.

குளோபல் டைம்ஸ் இந்த 'பைடென் நிர்வாகம் ரஷ்யாவிற்கு சீனாவின் 'இராணுவ ஆதரவு' பற்றிய தவறான தகவல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதால், வலுவான சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதாக அறிவித்தது மற்றும் சீனாவை 'மோசமான விளைவுகளுடன்' அச்சுறுத்த முயற்சித்தது.'

வெளியுறவுத்துறை துணை செயலாளர் ஷெர்மனின் கருத்துகளுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், 'அமெரிக்கா தான் வரலாற்றின் தவறான பக்கத்தில் உள்ளது' என்று ட்வீட் செய்துள்ளார். அமெரிக்கா 'தொடர்ந்து நேட்டோவை விரிவுபடுத்துவதைத் தவிர்த்து, நேட்டோ உக்ரேனை ஒப்புக்கொள்ளாது என்று உறுதியளித்திருந்தால், மேலும் உக்ரேனுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதன் மூலம் தீப்பிழம்புகளை விசிறிவிடாமல் இருந்திருந்தால், நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும்.'

குறிப்பாக பெய்ஜிங், உக்ரேனில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கும் தைவானின் ஆபத்தான வெடிப்பு புள்ளிகள் மீது பதட்டங்களைத் தூண்டுவதற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது. அமெரிக்க-சீன உறவுகளின் அடித்தளமான 'ஒரே சீனா' கொள்கையை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே நேரத்தில், தீவை ஆக்கிரமிக்க சீனா தயாராகி வருவதாக பைடென் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒரே சீனா கொள்கையின் கீழ், தைவான் உட்பட அனைத்து சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கம் பெய்ஜிங் என்பதை அமெரிக்கா நடைமுறையில் அங்கீகரித்துள்ளது, அதே நேரத்தில் தீவை சீனாவுடன் வலுக்கட்டாயமாக மீண்டும் ஒன்றிணைப்பதை எதிர்க்கிறது. தைபேயின் எந்தவொரு முறையான சுதந்திரப் பிரகடனத்திற்கும் வலுக்கட்டாயமாக பதிலளிப்பதாக பெய்ஜிங் பலமுறை எச்சரித்துள்ளது.

சீன ஊடகங்களின்படி, ட்ரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலிருந்து சீனா-அமெரிக்க உறவுகள் இன்னும் வெளியேறவில்லை என்று ஜி பைடெனிடம் கூறினார். அமெரிக்காவில் உள்ள சிலர் 'தைவான் சுதந்திர' சக்திகளுக்கு தவறான சமிக்ஞையை அனுப்பியுள்ளனர், மேலும் 'இது மிகவும் ஆபத்தானது' என்று ஜி கூறினார்.

தைவான் மீதான அமெரிக்க கொள்கை மாறவில்லை என பைடென் அறிவித்தாலும், வாஷிங்டன் தற்போதைய நிலையில் எந்த ஒருதலைப்பட்சமான மாற்றங்களையும் எதிர்க்கிறது என்று வலியுறுத்தினாலும், அவரது நிர்வாகம் அமெரிக்காவிற்கும் தைவானிய அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பை மட்டுப்படுத்திய ஒரே சீனக் கொள்கைக்கு ஆதரவாக நீண்டகாலமாக நிறுவப்பட்ட இராஜதந்திர நெறிமுறைகளை வீணடித்துள்ளது.

பைடென் - ஜி தொலைபேசி அழைப்பின் விளைவாக எந்த உடன்பாடும் இல்லாதது, உக்ரேனில் அமெரிக்க நடவடிக்கைகளின் பொறுப்பற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் சீனா உட்பட மற்ற சக்திகளை இழுத்துக்கொண்டு போர் மிக பரந்த மோதலாக விரைவாக விரிவடையும் அபாயம் உள்ளது. பைடென் நிர்வாகம் ரஷ்யாவை ஒரு மூலையில் பின்தள்ளியது போலவே, சீனாவிற்கு எதிரான அதன் தீவிரமான விமர்சனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இந்தோ-பசிபிக் பகுதியில் ஏற்கனவே இருக்கும் கடுமையான பதட்டங்களை அதிகரிக்க மட்டுமே முடியும்.

Loading