முன்னோக்கு

புச்சா அட்டூழிய குற்றச்சாட்டுக்கள்: ரஷ்யாவுக்கு எதிராக தீவிரப்படுத்தப்பட்டு வரும் நேட்டோ போருக்கு ஒரு சாக்குப்போக்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போரைத் தீவிரப்படுத்தும் மற்றொரு முக்கிய முயற்சியாக, புதிய சுற்றுத் தடைகளை விதிக்கவும், போருக்குச் சமாதான தீர்வு காண்பதற்கான எந்தவொரு முயற்சியையும் கீழறுக்கவும், பைடென் நிர்வாகம் கியேவ் புறநகர் புச்சாவில் ரஷ்ய படைகள் மனிதப்படுகொலைகளை நடத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறும் கூற்றுக்களைக் பற்றிக்கொள்கிறது.

'புட்டினை ஒரு போர்க்குற்றவாளியாக குறிப்பிட்டதற்காக நான் விமர்சிக்கப்பட்டேன்' என்று திங்கட்கிழமை கூறிய அமெரிக்க ஜனாதிபதி, “சரி, விஷயத்தின் உண்மையை, புச்சாவில் என்ன நடந்ததென்று நீங்கள் பார்த்தீர்கள். அவர் ஒரு போர் குற்றவாளி,” என்று கூறியதுடன், “சண்டையிடுவதற்கு அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை நாம் தொடர்ந்து உக்ரேனுக்கு வழங்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க அரசாங்கம், ஊடகங்களுடன் சேர்ந்து, முதலில் முடிவு செய்துவிடுவது, பின்னர் விசாரிப்பது என்ற இந்த கொள்கையின்படி செல்கிறது. ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்கு ஒரு வருடத்திற்கு மேலாகியும், ட்ரம்ப் ஒரு குற்றத்தில் குற்றவாளியா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியாத பைடென், புச்சாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 'போர் குற்றங்களில்' குற்றவாளி என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்.

Images from from Ukraine are displayed during a meeting of the UN Security Council, Tuesday, April 5, 2022. (AP Photo/John Minchillo)

ஆனால் நிஜமான உண்மைகள் அந்த தீர்மானத்தை நிரூபிப்பதாக இல்லை. கடந்த செவ்வாய்கிழமை சமாதான பேச்சுவார்த்தைகளுக்காக கியேவை நோக்கிய அதன் படைகளை வேகமாக குறைக்க கிரெம்ளின் வாக்குறுதி அளித்த உடனேயே புச்சாவில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறிவிட்டன. பல நாட்களாக, குறிப்பிடத்தக்க பொதுமக்கள் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சனிக்கிழமை, நவ-நாஜி அசோவ் படைப்பிரிவு உறுப்பினர்கள் உட்பட உக்ரேனியப் படைகள், அந்நகருக்குள் நுழைந்தன, மேற்கத்திய பத்திரிகைகளில் அட்டூழியங்களாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவங்கள் குறித்த செய்திகளின் ஓர் அலை கட்டவிழ்த்து விடப்பட்டது.

பரவலாகக் காட்டப்படும் இந்த படங்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை மட்டுமே காட்டுகின்றன, ஆனால் யார், எப்போது, எந்தச் சூழலில் கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டவில்லை. நிராயுதபாணிகளை மக்களை உக்ரேனிய படைகளே தூக்கிலிடுவது மற்றும் சித்திரவதை செய்வதைக் குறித்த காணொளி ஆதாரங்கள் வெளிவந்துள்ள அதேவேளையில், ரஷ்ய துருப்புகள் சம்பந்தமாக இதுபோன்ற எந்த ஆதாரமும் வெளியாகவில்லை.

உலகெங்கிலும் போர்களை நியாயப்படுத்த அமெரிக்காவினால் அட்டூழியங்கள் பற்றிய பொய்யான குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதையும் வைத்து பார்க்கையில், புச்சாவில் மனிதப்படுகொலை பற்றிய கூற்றுக்களை, இராணுவத் தீவிரப்படுத்தலை நியாயப்படுத்த மக்களைக் கோபமூட்டும் நோக்கில், போர் பிரச்சாரமாக பார்ப்பதைத் தவிர வேறெந்த வகையிலும் பார்க்க அங்கே எந்த காரணமும் இல்லை.

ரஷ்ய துருப்புக்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நிறுவப்பட்டாலும் கூட — அவ்வாறு எதுவும் நிறுவப்படவில்லை — அவை ரஷ்ய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் கீழ் தான் செய்யப்பட்டன என்று அர்த்தமாகாது.

கடந்த 30 ஆண்டு கால—நிச்சயமாக ஒருவர் அதற்கு முன்னரும் செல்ல முடியும்—முடிவில்லா போர்களில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு, திருமண விருந்துகளில் டிரோன் தாக்குதல்கள், மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர் தாக்குதல்கள், ஒட்டுமொத்த நகரங்களையும் படுகொலை செய்தமை என அமெரிக்க இராணுவம் எண்ணற்ற அட்டூழியங்களைச் செய்துள்ளது. இந்த உலகளாவிய மறதி காலக்கட்டத்தில், அபு கிரைப்பில் கைதிகளை மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் சித்திரவதை செய்து, பின்னர் ஆதாரங்களை அமெரிக்கா அழிக்க முயன்றதை, அல்லது இந்த காரணத்திற்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்வதும் கூட இல்லை, ஆனால் அதன் எதிரிகள் அங்கே வழக்கில் இழுக்கப்பட வேண்டும் என அது வலியுறுத்துகிறது இவற்றை ஒவ்வொருவருக்கும் மீண்டும் நினைவூட்டுவது அவசியமா?

இத்தகைய குற்றங்களை அமெரிக்க ஊடகங்கள் எப்போதாவது ஒப்புக் கொண்டாலும், அவை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெரியாமல் நடந்த பிழைகளாக அல்லது 'உள்ளிருக்கும் மோசமானவர்களின் நடவடிக்கை' (bad apples) என்றும் கூறப்படுகின்றன. இதுவரை எந்த முன்னணி அதிகாரிகளும் வழக்கில் இழுக்கப்படவில்லை. இருந்தாலும், இங்கே, ஒரு சில புகைப்படங்களின் அடிப்படையில், புட்டின் போர் குற்றங்கள் புரிந்தவர்கள் என்றும், “இனப்படுகொலை' செய்தவர் என்றும் கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தர்க்கத்தின் கீழ், பைடென் உட்பட ஏன் ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் கம்பிகளுக்குப் பின்னால் இல்லை?

வெளிப்படையான பாசாங்குத்தன அம்சங்களுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான முரண்பாடான குற்றச்சாட்டுக்களை மதிப்பிடுவதில் “Cui bono?” என்ற மற்றொரு சட்ட கருத்துருவும் உள்ளது.

போர் தீவிரமடைந்தால் அது யாருக்கு இலாபம்? அமெரிக்க அரசாங்கத்திற்குத் தான் என்ற பதில் இங்கே தெளிவாக உள்ளது. கிட்டத்தட்ட அபத்தமான முறையில் தீர்மானிக்கப்பட்ட போர் குற்றங்கள் பற்றிய பைடெனின் முடிவு, பேச்சுவார்த்தைகளைத் தடுக்க உத்தேசம் கொண்டுள்ளது. இந்த போர் முடிவுக்கு வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. புட்டின் 'அதிகாரத்தில் நீடிக்க முடியாது' என்று கடந்த மாதம் வார்சாவில் பைடெனின் பிரகடனம், “முன்னுக்குப் பின் முரணான' ஓர் அறிக்கை இல்லை, அமெரிக்க ஊடகங்கள் அதை அவ்வாறு தான் முன்வைக்கின்றன என்றாலும், அது ஆட்சி மாற்றம் என்ற ரஷ்யாவை நோக்கிய உண்மையான அமெரிக்க கொள்கையை வெளிப்படுத்தியது.

போரை 'ஜெயிக்க வேண்டும்' என்று கோரும் ஊடக பிரச்சாரத்திற்கு மத்தியில் இவை எல்லாம் நடக்கின்றன. செவ்வாய்கிழமை பிரசுரித்த ஒரு கட்டுரையில், பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஜெனன் கணேஷ் அறிவிக்கையில், “உக்ரேனிய நெருக்கடியின் இறுதி 'வெற்றியாளராக' அமெரிக்கா இருக்கும்,” என்றார். Economist பத்திரிகை அதன் பாகத்தில், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு 'தீர்க்கமான வெற்றிக்கு' அழைப்பு விடுத்துள்ளது.

அட்டூழியங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் அமெரிக்க போர் பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். அமெரிக்கா இதுவரை தொடுத்த ஒவ்வொரு ஆக்ரோஷ போரும், அமெரிக்க இராணுவத் தலையீட்டின் இலக்குகளால் அட்டூழியங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், முதல் வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான், சிரியா அல்லது லிபியா என எதுவாக இருந்தாலும், கதை இது தான்: அதாவது, அமெரிக்காவால் குறி வைக்கப்பட்ட அரசாங்கம் பொது மக்களைக் கொன்றுள்ளது, அமெரிக்கா தலையிடாவிட்டால் இன்னும் அதிகமானவர்களைக் கொல்ல அச்சுறுத்துகிறது என்று கூறப்பட்டது.

பின்னர், அமெரிக்கத் தலையீடு அந்த நாட்டில் இன்னும் பெரிய அளவில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் போது, அது 'மீட்கப்படுகிறது,” அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடுத்த இலக்குகளின் 'அட்டூழியங்கள்' நோக்கி சர்வசாதாரணமாக பத்திரிகைகள் மூச்சடைக்க செய்திகள் வழங்க நகர்ந்து விடுகின்றன.

அமெரிக்க அதிகாரிகள், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ மோதலைத் தீவிரப்படுத்துவதுடன் சேர்ந்து, ரஷ்யாவுக்குக் குறைவின்றி சீனாவையும் அதன் இறுதி இலக்கில் வைக்கும் பாரியளவிலான இராணுவ கட்டமைப்பை ஊக்குவிக்க தாராளவாத உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தில் ரஷ்ய-விரோத போர் விஷமப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறது. சீனாவை இலக்கில் வைத்து புதிய தலைமுறை அணுஆயுதங்களை உருவாக்குவதற்காக, ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா (AUKUS) பங்காண்மையைக் கொண்டு ஒரு புதிய உடன்படிக்கையை வெள்ளை மாளிகை செவ்வாய்கிழமை அறிவித்தது.

இவ்வாறான நிலைமைகளின் கீழ், ஊடகங்களில் வரும் போர்ப் பிரச்சார பேரலையால் மூழ்கடிக்கப்படாமல் இருப்பது அவசியமாகும். உக்ரேன் மீது ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் அவநம்பிக்கையான படையெடுப்புக்கு ரஷ்ய அரசாங்கத்தைத் தூண்டிவிட்டு, அமெரிக்கா இந்த போரைத் தூண்டிவிட்டது. புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் உந்தப்பட்டு, அமெரிக்க ஆளும் வர்க்கம், இந்த மோதலை தொடங்கிய பின்னர், அது என்ன நாசகரமான விளைவுகள் ஏற்பட்டாலும் அதை இறுதி வரை சென்று பார்க்க உறுதியாக உள்ளது.

அமெரிக்க போர் முனைவின் ஒரு மைய இலக்கு உள்நாட்டில் தொழிலாள வர்க்கமாகும், போர் முயற்சியை ஊக்குவிக்கும் பெயரில் அதன் சமூக நலன்களை 'தியாகம்' செய்யுமாறு அதற்குக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் நாசகரமான படையெடுப்பு மற்றும் அமெரிக்க-நேட்டோ போர் முனைவு இரண்டையும் தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும், போர் மற்றும் சமத்துவமின்மைக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தேசிய எல்லைகளைக் கடந்து அணிதிரள வேண்டும்.

Loading