ஏகாதிபத்திய சக்திகள் புச்சாவில் ரஷ்ய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளால் உக்ரேன் போரை தீவிரப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்

இந்த வார இறுதியில், கியேவின் வடமேற்கே சுமார் 28,500 மக்கள் வசிக்கும் புச்சா நகரில் ரஷ்ய துருப்புக்கள் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய ஒரு பெரிய பிரச்சாரம் மேற்கத்திய பத்திரிகைகளில் பரவலாக காணப்பட்டது.

இந்த பிரச்சாரம் உக்ரேனில் போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிப்பதுடன் மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டு உக்ரேனிய வானூர்திகள் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து பெலோகோரோடில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் குண்டுவீசித் தாக்கியதாக ரஷ்யா அறிவித்ததைத் தொடர்ந்து வருகிறது.

வெள்ளி, மார்ச் 25,2022 உக்ரைனின் கியேவின் புறநகரில் ரஷ்ய குண்டுவீச்சுக்குப் பிறகு கடுமையான புகை மூட்டம்(AP Photo/Vadim Ghirda)

புச்சாவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ரஷ்ய துருப்புக்கள் ஏராளமான பொதுமக்களை சித்திரவதை செய்து கொலை செய்ததாக உக்ரேனிய அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பிரச்சாரம் அமைந்துள்ளது. அதில் சில டஜன் முதல் 400க்கும் அதிகமான எண்ணிக்கையளவில் பத்திரிகை கட்டுரைகளில் புள்ளிவிவரங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பல உடல்கள் குழிகளில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், புச்சா மற்றும் பிற நகரங்களில் உள்ள நேரில் கண்ட சாட்சிகளுடனான நேர்காணல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது கற்பழிப்பு மற்றும் சித்திரவதையின் வடிவங்களை விவரித்து மற்றும் ரஷ்ய துருப்புக்களின் 'போர்க்குற்றங்கள்' பற்றிய விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்களை 'உக்ரேனிய தீவிரவாதிகளின் ஆத்திரமூட்டல்' என்று கிரெம்ளின் கண்டித்துள்ளதுட்டன் மற்றும் திங்களன்று ஐ.நா பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கியேவில் தனது படைகளை பாரியளவில் குறைப்பதாக சமாதானப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா உறுதியளித்த ஒரு நாளுக்குப் பின்னர், மார்ச் 30 புதன்கிழமைக்குள் ரஷ்ய துருப்புக்கள் புச்சாவிலிருந்து வெளியேறியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மார்ச் 31 முதல் புச்சாவின் நகரத் தலைவரின் வீடியோ செய்தியில் எந்த அட்டூழியம் பற்றிய தகவலும் இல்லை என்றும், ஏப்ரல் 2, சனிக்கிழமையன்று உக்ரேனிய துருப்புக்கள் மற்றும் தொலைக்காட்சி நகருக்குள் நுழைந்த பின்னர்தான் படங்கள் மற்றும் அறிக்கைகள் பரவ ஆரம்பித்தன என்றும் கிரெம்ளின் குறிப்பிட்டது.

அனடோலி ஃபெடோருக்கின் ஒளிப்பதிவுச்செய்தியில்உண்மையில், நகரத் தலைவர் பெரும்களிப்புடன் இருப்பதைக் காட்டுகிறது. அவர் அட்டூழியங்கள் அல்லது போர்க்குற்றங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் 'ரஷ்ய தீய உருவங்கள்' என்று அவர் அழைக்கும் அனைத்து ரஷ்ய துருப்புக்களும் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்தார்.

புச்சாவில் என்ன நடந்தது மற்றும் யார் என்ன குற்றங்களைச் செய்தார்கள் என்ற உண்மைகள் தெளிவற்றதாக இருக்கும் அதே வேளையில், இரண்டு விஷயங்கள் தெளிவாக உள்ளன: முதலாவதாக, இந்தப் பிரச்சாரம் போர்க்குற்றங்கள் மீதான ஏகாதிபத்திய சக்திகளின் இழிந்த பாசாங்குத்தனத்தை ஒரு புதிய நிலைக்குக் கொண்டுவருகிறது மற்றும் இரண்டாவதாக, போரை கணிசமாக தீவிரப்படுத்த இது பயன்படுகிறது.

ரஷ்ய இராணுவத்தின் கொலைகள் பற்றிய நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளால் இப்போது 'அதிர்ச்சி' மற்றும் 'அச்சம்' என்று அழும் அதே ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் பெரும் பகுதிகளை இடிபாடுகளாக மாற்றியுள்ளன. 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கப் போர்கள் மட்டும், மேலெழுந்தவாரியான மதிப்பீடுகளின்படி, 3 முதல் 4 மில்லியன் பொதுமக்கள் உயிரிழப்பைக் கோரியுள்ளன.

உண்மையில், புச்சா மீதான பத்திரிகை பிரச்சாரத்தின் வார்த்தையாடல்களும் மற்றும் 'இனப்படுகொலை' மற்றும் 'அட்டூழியங்கள்' பற்றிய கூற்றுக்கள் 1991 இலிருந்து யூகோஸ்லாவியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா உட்பட 'மனித உரிமைகள்' எனக் கூறப்படுவதை பாதுகாப்பது என்ற போர்வையில் போர்களை நடாத்திய அல்லது தீவிரப்படுத்தியஏகாதிபத்திய பிரச்சாரத்தின் அடையாளத்தை தாங்கி நிற்கின்றன.

கடந்த தசாப்தங்களில் அமெரிக்கா, பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய, பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியம் செய்த போர்க்குற்றங்களின் முழுமையான பட்டியலை நெருங்கிவரக்கூடிய எதையும் வழங்க இயலாது. எதிர்கால வரலாற்றாசிரியர்கள் இவர்களால் செய்யப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தவும் பகுப்பாய்வு செய்யவும் பலதொகுதிகளை நிரப்ப வேண்டியிருக்கும்.

இருப்பினும், சில சமீபத்திய நிகழ்வுகளை நினைவுபடுத்த வேண்டும்:

  • 2009 இல் குண்டூஸ் படுகொலை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மன் இராணுவத்தின் மிகப்பெரிய போர்க் குற்றமாகும். இதன் விளைவாக குறைந்தது 90 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  • 2014 இல் ஈராக்கின் மொசூல் நகரின் மீதான அமெரிக்க முற்றுகை 40,000 உயிர்களைக் கொன்றது.
  • 2017 இல் சிரியாவின் ரக்காவை அமெரிக்கப் படைகள் அழித்ததில் 1,600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதுவரை ஏராளமான ஆவணப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வுகள் எதிலும், அதனை நிகழ்த்தியவர்கள் அவற்றிற்கு பொறுப்பேற்க செய்யப்படவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகக் கொடூரமான குற்றங்களில் சிலவற்றை அம்பலப்படுத்திய ஜூலியன் அசான்ஜ், வாஷிங்டனின் கட்டளையின் பேரில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் இப்போது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவார் என்றும் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

வியாழன் அன்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ரஷ்ய போர்க் கைதிகளின் கால்களில் சுட்டு, அதை படம்பிடித்ததன் மூலம் உக்ரேனிய துருப்புக்கள் போர்க்குற்றங்களை செய்திருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உக்ரேனிய இராணுவம் உண்மையில் இதுபோன்ற போர்க்குற்றங்களைப் பகிரங்கமாக அறிவித்து, பல வாரங்களாக சமூக ஊடகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கொல்லப்பட்ட ரஷ்ய துருப்புகளின் படங்களைப் பகிர்ந்து கொள்கிறது. இதுவே போர்க் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவதற்கான ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாகும். இருப்பினும், இது பற்றி மேற்கத்திய பத்திரிகைகளில் கிட்டத்தட்ட எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.

புச்சா மீதான பிரச்சாரம் இப்போது உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோவின் பினாமிப் போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு அடிப்படையாக உள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் சமாதான பேச்சுவார்த்தைகளை 'சாதகமான' முறையில் நிகழ்வதாக மதிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் இது நிகழ்கின்றது.

ஜேர்மனியின் பிரதிபலிப்பு குறிப்பாக வெறித்தனமானது. ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், புச்சாவில் இறந்த உடல்களை 'ஒரு போர்க் குற்றம்' என்று விவரித்தார். மேலும் உக்ரேனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்கப்படுவதையும், எதிர்வரும் நாட்களில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ பொருளாதாரத் தடைகளையும் அறிவித்தார்.

தாராளவாத Süddeutsche Zeitung பத்திரிகைக்கு எழுதுகையில், ஸ்ரெபான் கோர்னேலியுஸ் புச்சாவில் இறந்த உடல்களின் 'வெளிப்பாடுகள்' உக்ரேன் ஒரு 'அழிவுப் போருக்கு' உட்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது என்று ஆவேசப்பட்டார். இது நடந்துகொண்டிருக்கும் போரை, 1941 இல் சோவியத் ஒன்றியத்தின் மீது ஹிட்லரின் படையெடுப்புடன் நேரடியாக ஒப்பிடுகிறது. இது இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை நனவானமுறையில் குறைத்துக்காட்டுவதும் மற்றும் பெரிதுபடுத்த்தாமல் விடுவதுமாகும். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஹிட்லரின் அழிவுப் போரின் ஒரு பகுதியாக, நாஜிக்கள் சோவியத் உக்ரேனை ஆக்கிரமித்து, 1.5 மில்லியன் யூதர்கள் உள்ளடங்கலாக 5 மில்லியன் உக்ரேனியர்களைக் கொன்றனர்.

உக்ரேனிய தேசியவாதிகளும் மற்றும் அசோவ் படைப்பிரிவின் முன்னோடிகளும், இப்போது ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் கியேவ் அரசாங்கத்தின் அதிர்ச்சித் துருப்புக்களாக செயல்படும் மற்ற துணை இராணுவப் படைகளும் இந்தக் குற்றங்களில் பங்கேற்று, யூதர்கள், போலந்துகள் மற்றும் பாசிசத்தை எதிர்த்த பொதுமக்களுக்கு எதிராக படுகொலைகளை அப்போது நிகழ்த்தினர்.

இப்போது, ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் இந்த தீவிர வலதுசாரி சக்திகளை நம்பி, 100 பில்லியன் யூரோ போர் வரவு-செலவுத் திட்டத்தைமுன்னெடுப்பதற்கான வாய்ப்பாகப் போரைப் பயன்படுத்திக் கொள்கிறது. 1933 இல் ஆட்சிக்கு வந்தபோது ஹிட்லர் கூட செய்யத் துணியாத ஒன்றான நாட்டின் பாதுகாப்புச் செலவீனத்தை மூன்று மடங்காக உயர்த்துகிறது.

உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமைர் செலென்ஸ்கி, புச்சாவில் உள்ள இறந்த உடல்களை வெளிவரும் 'இனப்படுகொலை'க்கான ஆதாரம் என்று அழைத்து மற்றும் சமாதானப்பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்று கூறி, 'நாங்கள் சண்டையிடுவதன் மூலம் மட்டுமே சமாதானத்தைப் பெற முடியும்' என்று கூறினார். அவரது வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, உக்ரேனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவதில் தயக்கம் இருக்க முடியாது என்று கூறி, 'எங்களுக்கு ஆயுதங்கள் இப்போதே தேவை!' என்றார்.

உண்மையில், உக்ரேன் நேட்டோவால் ஆயுதங்களால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இப்போது ஜேர்மனி, டாங்கிகள், ட்ரோன்கள் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்புகிறது. வாஷிங்டன் போஸ்ட்டின்படி, பைடென் நிர்வாகம் உக்ரேனுக்கான 'பாதுகாப்பு ஆதரவிற்காக' 2.3 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. இவற்றில் 1.6 பில்லியன் டாலர்கள் போரின் முதல் ஐந்து வாரங்களில் வழங்கப்பட்டன.

கடந்த வாரம், உக்ரேனுக்கான மற்றொரு 500 மில்லியன் டாலர்கள் 'நிதி உதவி'யை பைடென் அறிவித்தார். சனிக்கிழமையன்று, ட்ரோன்கள், கவச வாகனங்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களுக்காக பென்டகன் மேலும் 300 மில்லியன் டாலர்கள் வழங்க உறுதியளித்தது.

இந்த பாரிய ஆயுத விநியோகம் ஏற்கனவே போரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரெம்ளின் வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கூட, ரஷ்ய இராணுவ உயிரிழப்புகள் (1,351) உக்ரேனிய பொதுமக்களின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையான 1,232 இனைவிட அதிகமாகும். இருப்பினும், ரஷ்ய படையினர்களின் உண்மையான இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. பென்டகன் 7,000 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.

Economist இன்கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரஷ்ய தளபதிகள் இறக்கின்றனர். பல தளபதிகள் உட்பட 18 உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் போரில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Economist ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத்தின் கூடிய ஆபத்திற்கு மோசமான ஆயுதங்கள், விநியோகம் மற்றும் துருப்புக்களிடையே உள்ள மன உறுதி உட்பட பல சாத்தியமான காரணங்களை மேற்கோள் காட்டியது. ரஷ்ய இராணுவத் தொடர்பை இடைமறித்து துருப்புக்களைக் கண்டறிவதில் உக்ரேனுக்கு நேட்டோ உதவக்கூடும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. மேலும், தொலைவிலிருந்து குறிபார்த்து சுடுவது (Snipers)உட்பட உக்ரேனிய துணை இராணுவப் படையினருக்கு அமெரிக்கா பல ஆண்டுகள் பயிற்சி அளித்ததை வெளிப்படுத்திய Yahooசெய்தியின் அறிக்கையை Economist குறிப்பிட்டுள்ளது. ஒரு முன்னாள் அமெரிக்க அதிகாரி Yahooசெய்தியிடம், 'தொலைவிலிருந்து குறிபார்த்து சுடுபவர்களிடமிருந்து ஒரு பெரிய தாக்கத்தை நாங்கள் காண்கிறோம் என நான் நினைக்கிறேன் ... பயிற்சி உண்மையில் பலனளித்தது' என்றார்.

Loading