இலங்கை அதிகரித்துவரும் கடன் மற்றும் பணவீக்க நெருக்கடியின் மையத்தில் உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்களால் சூழப்பட்டிருக்கும் இலங்கை, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை தாக்கும் ஒரு கடன் புயலின் மையத்தில் உள்ளது. முதலாளித்துவ அரசாங்கங்கள், வங்கிகள், நிதிய ஊகவணிகர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தங்கள் பங்குகளைக் கோருவதால், நூறு மில்லியன் கணக்கான மக்களுக்கு இது சமூகப் பேரழிவைக் கொண்டுவருகிறது.

ஏப்ரல் 7, 2022 வியாழன், இலங்கையின் கொழும்பில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு பல மணிநேரம் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கின்றனர் (AP Photo/Eranga Jayawardena)

இந்த நெருக்கடி பல ஆண்டுகளாக கட்டியெழுப்பட்டு, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரில் இருந்து உருவாகிய உணவுப் பொருட்கள், பெட்ரோல், எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய்கள் உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலைகள் வெடித்து அதிகரித்தன் காரணமாக தீவிரத்தின் ஒரு புதிய உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று, ஐக்கிய நாடுகள் சபை அதன் மார்ச் மாதத்திற்கான உணவு விலைக் குறியீடு உச்சத்தை எட்டியுள்ளது என அறிவித்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 34 சதவீதம் அதிகரித்துள்ளது. பெப்ரவரி மாதத்தை விட இக்குறியீட்டு எண் 12.6 சதவீதம் அதிகமாகும். ஐ.நா. இதை ஒரு 'மாபெரும் பாய்ச்சல்' என்று வர்ணித்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைமையிலான, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், அடுத்த மாதங்களில் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தும் உந்துதலால் நெருக்கடி மேலும் அதிகரிக்கப் போகிறது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய 8.6 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. வியாழன் அன்று, இலங்கை மத்திய வங்கி, மார்ச் மாதத்தில் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 1.93 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளதாகவும், இது பெப்ரவரியில் 2.3 பில்லியன் டாலராக இருந்ததிலிருந்து 16 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தது.

கடந்த தசாப்தத்தில் உருவாகிவந்த உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கின் கூர்மையான வெளிப்பாடே இலங்கையின் நிலைமையாகும். 2010 மற்றும் 2021 க்கு இடையில் வளரும் நாடுகளுக்கான கடன் கொடுப்பனவுகள் 120 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Jubilee Debt Campaign இன் அறிக்கை ஜனவரி மாத இறுதியில் மதிப்பிட்டுள்ளது. சராசரி அரசாங்க வெளிநாட்டுக் கடன் 2021 இல் அரசாங்கத்தின் வருவாயில் 14.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டது. இது 2010 இல் 6.8 சதவீதமாக இருந்தது.

ஜனவரியில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் 2022 இல் உத்தியோகபூர்வ மற்றும் தனியார்துறை கடன் வழங்குபவர்களுக்கு 35 பில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 10.9 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பும் மற்றும் 2020 இல் இருந்து 45 சதவீதம் உயர்வுமாகும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த மதிப்பீடுகள் வெளியிடப்பட்டதிலிருந்து, உக்ரேனில் நடந்த போரினால் பணவீக்கத்தை மேலும் அதிகரித்ததன் காரணமாக, இந்த நாடுகளின் நிதிநிலை வியத்தகு முறையில் மோசமடைந்துள்ளது.

ஏப்ரல் 2020 இல் G20 நாடுகளின் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் சேவை இடைநீக்க முன்முயற்சி (DSSI) கடந்த டிசம்பரில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதால் கடன் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. Financial Times இன் வார்த்தைகளில் DSSI ஒரு “ஏமாற்றுவேலை” என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது 20 பில்லியன் டாலர் கடனை ஒத்திவைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் 12.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டது. மேலும் நாடுகள் இந்த ஆண்டு மீண்டும் பணம் செலுத்த வேண்டும் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் இடைநிறுத்தப்பட்ட கடன்களை அங்கீகரிக்க வேண்டும்.

DSSI இன் மிகப்பெரிய பயனாளிகள் வணிக வங்கிகள், பாவனைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பங்குப்பத்திரம் வைத்திருப்பவர்களாவர். இவர்கள் 14.9 பில்லியன் டாலர்களை பெற்றனர். Jubilee இன் கொள்கையை தீர்மானிக்கும் தலைவர் டிம் ஜோன்ஸ், DSSI 'தனியார் கடன் வழங்குபவர்களுக்கான பிணையெடுப்பு திட்டமாக திறம்பட மாறிவிட்டது' என்றார்.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் திட்டத்தின் ஒரு பகுப்பாய்வு, 'சாம்பியா போன்ற கடன் நெருக்கடியில் உள்ள நாடுகள் தங்கள் சொந்த மக்களின் நல்வாழ்வை பலிகொடுத்துக் BlackRock [உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனம்] போன்ற தனியார் கடன் வழங்குநர்களுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.'

சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் உந்துதலின் ஒரு பகுதியாக, பெருகிவரும் கடன் நெருக்கடிக்கு அதன் கடன்களைக் குறைகூறும் பிரச்சாரம் அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடனில் 47 சதவீதம் தனியார் கடன் வழங்குபவர்களுக்கும், 27 சதவீதம் பலதரப்பு நிறுவனங்களுக்கும், 12 சதவீதம் சீனாவுக்கும், 14 சதவீதம் பிற அரசாங்கங்களுக்கும் செலுத்த வேண்டியுள்ளது என Jubilee அறிக்கை தெரிவித்துள்ளது. சீனக் கடன்கள், சர்வதேச நாணய நிதியத்தினதும் மற்றும் பிற பலதரப்புக் கடன் வழங்குபவர்களின் விதிமுறைகளின் அடிப்படையில் இருந்தன அல்லது சிறப்பாக இருந்தன.

கடன் மறுசீரமைப்பு எனப்படும் கடன் நெருக்கடிக்கு தீர்வு இல்லை. கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே, மக்கள் மீது இன்னும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க, பணத்தின் பெரும்பகுதி உற்பத்தி முதலீடுகள் அல்லது சமூகச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காகப் பயன்படுத்தப்படாமல், கடந்த காலக் கடன்களை கொண்டிருப்பவர்களினால் அதனை அடைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கைவில், நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், மற்ற நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தை நோக்கி ஒரு பொதுவான போராட்டத்திற்கு திரும்புவதற்கும் உடனடி முதல் படியாக, கடனை நிராகரிப்பது மற்றும் வங்கிகள் மற்றும் அதி செல்வந்தர்களின் செல்வங்களை அபகரிக்க வேண்டியதன் அவசியத்தை சோசலிச சமத்துவக் கட்சி எழுப்பியுள்ளது.

நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை பட்டினி கிடக்கவைக்கும் மற்றும் கழுத்தை நெரிக்கும் நிதிய பணவிழுங்கிகளுக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய போராட்டம், கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகள் வெடித்ததன் மூலம் இந்த நோக்குநிலையின் வளர்ச்சிக்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னேற்றங்கள் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள் மத்தியில் அச்சத்தின் நடுக்கத்தை அனுப்பியுள்ளன.

உக்ரேன் போரினால் உருவாகும் 'கடுமையான உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி' 'மில்லியன் கணக்கான மக்களை பட்டினிக்குள் தள்ளும் மற்றும் அமெரிக்காவிற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும்' என்று அச்சுறுத்துவதாக இந்த வாரம் செனட் வெளியுறவுக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி பைடெனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்'.

ஆனால் உணவு நெருக்கடியைத் தணிப்பதற்கான உதவி அமெரிக்காவிடமிருந்து வரப்போவதில்லை. அமெரிக்க அதிகாரிகள் பற்றாக்குறையை போக்க செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களே பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக Politico தெரிவித்துள்ளது. வறட்சியின் விளைவாக அமெரிக்கா உட்பட கோதுமை கையிருப்பு இயல்பை விட குறைவாக வைத்திருப்பதுடன் மேலும் 'தானிய உபரிகளைக் கொண்ட அரசாங்கங்கள் கனடா உட்பட தங்களின் விநியோகத்தில் உபரியாக இருப்பவற்றை வெளியிடத் தயங்குகின்றன.'

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த உணவு நெருக்கடியில் பெரிய நாடுகளின் தடுப்பூசி தேசியவாதத்தால் ஒரு உலகளாவிய கோவிட் தடுப்பூசிகள் விநியோகம் தடைசெய்யப்பட்ட மாதிரியே இவ்விடயத்திலும் ஏழை நாடுகள் அதே மாதிரியான அணுகுமுறையை சந்திக்கும்.

USAID இன் முன்னணி அதிகாரியான சாரா சார்லஸ், காங்கிரஸின் துணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்கையில், 'தற்போதைய நெருக்கடியான வறுமை, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றின் தாக்கங்கள் 2007-2009 உலகளாவிய உணவு விலை நெருக்கடி மற்றும் அதற்குப் பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு அமைதியின்மையின்போது காணப்பட்டதை விட குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். கடைசி நெருக்கடியானது வலுவான பொருளாதார வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைத் தொடர்ந்து வந்தது, அதேசமயம் கோவிட்-19 தொற்றுநோய் ஆரம்பித்ததை தொடர்ந்த ஆண்டுகள் பெருகிய முறையில் மோசமான உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் குணாதிசயப்படுத்தப்பட்டுள்ளன.”

யேமன் நகரமான ஏடனில், பெப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை ஒரு துண்டு ரொட்டியின் விலை 62 சதவீதம் அதிகரித்துள்ளது. லெபனானில், உள்நாட்டு உணவுப் பணவீக்கம் 483 சதவீதத்தை எட்டியுள்ளது.

தென்னாபிரிக்காவில், 'நடந்து வரும் வன்முறை ஸ்திரமற்ற தன்மையின் ஒரு கட்டத்தில் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது' என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நாட்டில் 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1,000 க்கும் அதிகமான போராட்டங்கள் இரட்டிப்பாகியுள்ளது.

வியாழன் அன்று BBC க்கு அளித்த பேட்டியில், Eurasia Group இன் சிந்தனைக்குழாமின் இயக்குனர் டானியல் கெர்னரிடம், 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நடந்தது போன்ற சமூக வெடிப்புகள் இலத்தீன் அமெரிக்காவில் இடம்பெறுமா என்று கேட்கப்பட்டது.

அவர் பதிலளித்தார்: “ஆம், 2019 இல், நாங்கள் பல இடங்களில் அதிக அதிருப்தியைக் கண்டோம். மேலும் தொற்றுநோய் பிரச்சினைகளை இடைநிறுத்தியது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் அது ஒரு ஒரு இடைநிறுத்தம் மட்டுமே, இப்போது நிலைமை மிகவும் வெடிக்கும் நிலையிலுள்ளது”.

ஆளும் வட்டாரங்களில் உள்ள அச்சங்களை சுருக்கமாக, ஜேர்மன் Friedrich Institute அறிக்கை பின்வருமாறு கூறியது: 'பிரெஞ்சு புரட்சியின் நாட்களில் கூறியது போல், மக்களிடம் ரொட்டி இல்லையென்றால், அதிகாரத்தில் இருப்பவர்கள் பேரழிவிற்கு ஆளாக நேரிடும்.'

நெருக்கடி, ஏழை நாடுகளில் மட்டும் அல்ல. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய பொருளாதாரங்களில் உள்ள தொழிலாளர்கள், பணவீக்கத்தை எதிர்கொண்டு ஊதிய உயர்வை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர். இது வருமானத்திற்கு 'வரலாற்றுரீதியான அதிர்ச்சியை' அளிக்கும் என்று Bank of England ஆளுனர் ஆண்ட்ரூ பெய்லி கூறியுள்ளார்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் கூட்டப்படவிருக்கும் இந்த ஆண்டு மே தினப் பேரணியின் மையத்தில் இந்த உலகளாவிய இயக்கத்தின் ஐக்கியமும் அதை ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவதற்கான போராட்டமும் இருக்கும்.

Loading