முன்னோக்கு

ரஷ்யாவிற்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனை ஆயுதபாணியாக்குவது பாரிய மோதலின் விரிவாக்கத்தை அர்த்தப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்

ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் தொடுத்து வரும் உக்ரேன்போரின் ஏகாதிபத்திய தன்மை பெருகிய முறையில் தெளிவாகி வருகிறது.உக்ரேனிய அரசாங்கம், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளால் வழங்கப்பட்ட இராணுவ தளபாடங்களுடன் ஆயுதம் ஏந்திய நிலையில், போரின் முதல் ஆறு வாரங்களில் ஆரம்ப தந்திரோபாய வெற்றிகளை பெறத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் இப்போது ரஷ்யாவை இராணுவ ரீதியாக தோற்கடித்து, ஒரு பாரிய அரசியல் நெருக்கடியைக் கொண்டு வந்து, மாஸ்கோவில் ஒரு ஆட்சி மாற்றத்தைத் தொடங்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தி வருகின்றன.

'அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையான சோவியத் காலத்து S-300 வான் பாதுகாப்புப் பிரிவை உக்ரேனுக்கு வழங்க ஸ்லோவாக்கியா எடுத்த முடிவு, போரில் ஒரு புதிய கட்டத்தை பிரதிபலிக்கிறது' என நியூ யோர்க் டைம்ஸ் சனிக்கிழமை எழுதியது. 'பாதுகாப்பு பிரிவு' என்பது உண்மையில் ஒரு தரையிலிருந்து வானில் தாக்கும் அமைப்பாகும். இது ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படும்.

பிரித்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் வெள்ளியன்று உறுதியளித்த 130 மில்லியன் டாலர்கள் கூடுதல் ஆயுதங்களுக்கு மேல், 120 கவச வாகனங்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புடன் உக்ரேனுக்கு அனுப்பவும் வார இறுதியில் பிரித்தானியா உறுதியளித்தது. இந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கருங்கடலின் உக்ரேனின் கடற்கரையில் ரஷ்ய போர்க்கப்பல்களை நேரடியாக குறிவைக்க உக்ரேனிய இராணுவத்தை அனுமதிக்கும். உக்ரேனிய அரசாங்கத்திற்கு வரம்பற்ற ஆதரவை உறுதியளிப்பதற்காக சனிக்கிழமையன்று ஜோன்சன் கியேவுக்கு முன்அறிவிக்கப்படாத பயணத்தை மேற்கொண்டபோது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

2022ஏப்ரல் 7, வியாழன், ஒரு உக்ரேனிய சிப்பாய்,புச்சாவில் அழிக்கப்பட்ட ரஷ்யபோர் வாகனத்தின் மீது நடந்து செல்கிறார் (AP Photo/Vadim Ghirda)

உக்ரேனைமேலும் ஆயுதமயமாக்கல் ரஷ்ய மண்ணில் அதன் நேரடித் தாக்குதல்களை சாத்தியமாக்கும். 'ரஷ்ய இராணுவ விமான நிலையங்களை சேதப்படுத்துவது உக்ரேனின் மீதான புதுப்பிக்கப்பட்ட தாக்குதலை எதிர்க்கும் வாய்ப்புகளை மேம்படுத்தும் என சில நிபுணர்கள் கூறினாலும் இதுவரை, பைடென் நிர்வாகம் உக்ரேனை ரஷ்யாவிற்குள் ஊடுருவி தாக்க அனுமதிக்கும் ஆயுதங்களை வழங்க தயாராக இல்லை' என டைம்ஸ் எழுதியது.

'ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன்' அதாவது ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை தாக்குவது ஒரு 'முக்கியமான இடைவெளி' என்றும் அதை கடக்க வேண்டும் என்றும் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முக்கிய அமெரிக்க அதிகாரிகளில் ஒருவரான ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் கேர்னல் அலெக்சாண்டர் விண்ட்மன் கூறியதாக செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவை இடைவிடாமல் விரிவாக்கம் செய்தல், உக்ரேனை நேட்டோ ஆயுதக் களஞ்சியமாகவும், ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கான அரங்கமாக மாற்றுதல்மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்யாவின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததன் மூலம் உக்ரேன் போர் ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டப்பட்டது.

அமெரிக்காவும் நேட்டோவும் போர் தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. பைடென் தனது வார்சோ உரையில் வெளிப்படுத்தியதைப் போல, இலக்கு ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஆகும். ரஷ்ய இராணுவத்திற்கு ஏற்பட்ட ஆரம்ப பின்னடைவுகள், நேட்டோ ஒரு பெரிய இராணுவத் தோல்வியை ஏற்படுத்தும் என பைடென் நிர்வாகத்தை நம்புவதற்கும், இது புட்டின் ஆட்சியை பேரழிவுதரும் முறையில் சீர்குலைத்து ரஷ்ய தன்னலக்குழுவிற்குள் நேட்டோ சார்பான சக்திகளின் தலைமையில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடாத்தலாம் எனவும் நம்பவைத்துள்ளது.

அதுதான் நடக்குமாய் இருந்தால், அதன் அரசியல் விளைவாக, ரஷ்யா அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள நம்பிக்கையாளர்களின் கீழ் வைக்கப்படும், நாடு உடைக்கப்படுவதற்கு வழி வகுத்து, அதன் பரந்த நிலப்பரப்பு அமெரிக்காவினதும் ஏனைய நேட்டோ சக்திகளினதும் தங்குதடையற்ற கட்டுப்பாட்டுக்கும் சுரண்டலுக்கும் திறக்கப்படும்.

நேட்டோவின் தீவிரமடைந்து வரும் மூலோபாய நோக்கங்கள், அதன் படைகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு வெளிப்படையானஇராணுவ மோதலின் சாத்தியத்தை பெருமளவில் அதிகரிக்கின்றன. மோதல் விரிவாக்க போக்கானது அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டுள்ளது. பினாமிப் போரை ஒரு முழு அளவிலான மோதலாக மாற்றும், அணுவாயுத பரிமாற்றத்தின் அளவிற்கு கூட பல காட்சிகளை கற்பனை செய்வது கடினம் அல்ல.

எடுத்துக்காட்டாக, உக்ரேன் நேட்டோ வழங்கிய நவீனஇராணுவ தளபாடங்களைப் பயன்படுத்தி ரஷ்ய துருப்புக்களிடையே பெரும் இழப்பை ஏற்படுத்தினால் மற்றும் ரஷ்யப் பகுதிக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினால், கொடிய ஆயுதங்களை விநியோகித்த அல்லது அதனை அங்கு கொண்டுசெல்ல உதவிய நேட்டோ நாடுகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா பதிலடி கொடுக்கும் வாய்ப்பு பெருமளவில் உள்ளது.

அணு ஆயுதப் போர் ஆபத்தை ஏற்படுத்துவதற்கான பைடென் நிர்வாகத்தின் விருப்பம், பாரிய குற்றம்மிக்க பொறுப்பற்ற தன்மையைக் காட்டிலும் குறைவானதல்ல. ஆனால் இது அதனால் கட்டுப்படுத்தமுடியாத பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளால் உந்தப்பட்ட ஒரு பொறுப்பற்ற தன்மையாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி பயன்படுத்திய சொற்றொடரை இரவல் பெற்றுக்கூறுவதானால், முதலாளித்துவ வர்க்கம் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு பேரழிவை நோக்கிச் சறுக்கிக்கொண்டிருக்கிறது.

அடிப்படை வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளும் மற்றும் இன்றைய சமூக பொருளாதார நெருக்கடிகளும் ஒன்றுடன் ஒன்று இணைவது இந்த பேரழிவை நோக்கிய போக்கிற்கு அடித்தளத்தை அமைக்கின்றது. உலகப் பொருளாதாரத்தில் அதன் மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்து விரக்தியும் உறுதியும் கொண்ட அமெரிக்கா, சீனாவுடனான தவிர்க்க முடியாத மோதலுக்கான முக்கிய தயாரிப்பிற்கு ரஷ்யாவை ஒரு பிராந்திய மற்றும் புவிசார் அரசியல் தடையாக கருதுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் முனையும் உலகின் புதிய பங்கீட்டு போக்கில், யூரேசிய நிலப்பரப்பின் பரந்த வளங்கள் அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது.

உலக மேலாதிக்கத்தின் இந்த அரை பைத்தியக்கார இலக்கை அடைவதற்கான உந்துதல் அமெரிக்காவின் தீவிர உள்நாட்டு நெருக்கடியால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பகுத்தறிவான தீர்வுகள் இல்லாத சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளால் துண்டாடப்படும் ஒரு சமூகத்தை ஒன்றிணைக்கும் இரும்புக் கவசத்தை இந்த போர் வழங்கும் என அமெரிக்க ஆளும் வர்க்கம் தன்னைத்தானே நம்பிக் கொண்டுள்ளது.

ரஷ்யாவைப் பொறுத்தவரையில், அமெரிக்காவும் நேட்டோவும் அமைத்த வலையில் விழுந்து, போரைத் தொடங்குவதற்கான அதன் பேரழிவுகரமான முடிவு, 30 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதில் வேரூன்றிய ஒரு தவறான கணக்கீடாகும்.ரஷ்யாவில் அதன் பேராசை, மூலோபாய குறுகிய பார்வை மற்றும் அரசியல் திவால்தன்மைக்கு மட்டுமே பொருந்தும் ஒரு ஊழல்மிக்க நிதியத்தன்னலக்குழுவின் தயவில் பெருந்திரளான தொழிலாளர்களை வைத்துள்ளது.

மேற்கின் அதிகப்படியான தலையீடு இல்லாமல் தன்னலக்குழு ஆட்சியின் பலன்களை கிரெம்ளின் அனுபவிக்க அனுமதிக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களை ரஷ்யாவிற்கு வழங்குவதற்கு நேட்டோவை அழுத்தம் கொடுக்க முடியும் என புட்டின் நம்பினார். ஆனால்மார்க்சிசத்தினதும்அக்டோபர் 1917 புரட்சியினதும்தீவிர எதிர்ப்பாளரான புட்டின், உலக ஏகாதிபத்திய அமைப்பின் உந்து சக்திகள் பற்றிய முழுமையான புரிதல் இல்லாததை இதன் மூலம்வெளிப்படுத்தினார்.

போரைத் தொடங்கிய பின்னர், புட்டின் ஆட்சி மேலும் மேலும் அதன் இருத்தலுக்கான மோதலுக்கு போராட இழுக்கப்படுவதைக் காண்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்தது, ரஷ்யா ஏகாதிபத்திய சுற்றிவளைப்பை எதிர்கொள்கிறது மற்றும் நவகாலனித்துவக் கட்டுக்குள் தள்ளப்படுகின்றது என்ற உண்மையை நாங்கள் மறைப்பதற்காக அல்ல, மாறாக ரஷ்ய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான இராணுவ சாகசம் மற்றும் தேசிய பேரினவாதத்தின் மூலம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்பதாலாகும்.

வர்க்கப் போராட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மட்டுமே, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் போரை முடித்து ஏகாதிபத்தியத்தை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் முதலாளித்துவ உயரடுக்குகளை அகற்றி, தேசிய-அரசு அமைப்பை ஒழித்து, உலக சோசலிச கூட்டமைப்பை உருவாக்க முடியும்.

மே 1, 2022, க்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன, இந்த ஆண்டு, உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கு எதிரான சர்வதேச போராட்டத்திற்கான அழைப்புக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் பினாமிப்போரை கண்டிக்க வேண்டும் மற்றும் நேட்டோ மோதலைத் தூண்டுவதையும் அதன் உக்ரேனிய பினாமிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோர வேண்டும்.

ரஷ்ய தொழிலாள வர்க்கம், கிரெம்ளினின் படையெடுப்பை உறுதியாக நிராகரிக்க வேண்டும். நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பானது, ரஷ்யாவிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் அக்டோபர் புரட்சிக்கு உத்வேகம் அளித்த சோசலிச சர்வதேசிய லெனினிச-ட்ரொட்ஸ்கிச கொள்கைகளின் மறுமலர்ச்சியில் தங்கியுள்ளது.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஏகாதிபத்திய போருக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கு தேவையான அனைத்து புறநிலை நிலைமைகளையும் உருவாக்கியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பின் விளைவாக இரண்டு வருட பாரிய மரணம் மற்றும் சமூக இடப்பெயர்வு ஆகியவற்றை தொடர்ந்து போரின் நேரடித் தாக்கத்தினால் இப்போது வாழ்க்கைச் செலவு விரைவாக அதிகரித்து வருகின்றது.

உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் இருந்து உணவு மற்றும் உரங்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டிருப்பது ஏற்கனவே மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் பேரழிவு நிலைமைகளை உருவாக்கி வருகிறது. நான்கு தசாப்தங்களில் காணப்படாத பணவீக்க அளவை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இது வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தை தூண்டுகிறது.

எவ்வாறாயினும், இந்த எதிர்ப்பு சோசலிசத்திற்கான ஒரு நனவான அரசியல் இயக்கமாக வளர்க்கப்பட வேண்டும். இதன் அர்த்தம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்புவது ஆகும்.

இந்த முன்னோக்கின் அடிப்படையில் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் சர்வதேச மேதின இணையவழி பேரணியைநடத்துகிறது. இந்த பேரணியில் பதிவு செய்து கலந்து கொள்ளவும், சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக ஒரு உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்கவும் எங்கள் வாசகர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

Loading