பாரிய ஆயுத விநியோகத்தை அமெரிக்கா அறிவித்த பின்னர் உக்ரேன் போர் கட்டுப்பாட்டை மீறிச்செல்கின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், கவச வாகனங்கள் மற்றும் வானூர்திகள் உட்பட, உக்ரேனுக்கு அமெரிக்க ஆயுத ஏற்றுமதியை பெருமளவில் விரிவுபடுத்துவதாக பைடென் நிர்வாகம் அறிவித்த மறுநாள், போர் ஒரு ஆபத்தான புதிய திருப்பத்தை எடுத்து நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நேரடி இராணுவ மோதலுக்கு அச்சுறுத்துகின்றது.

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான மோஸ்க்வா என்ற ரஷ்ய போர்க்கப்பல் மூழ்கியது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் மோஸ்வ்காவை தாக்கியதாக உக்ரேன் கூறுகிறது. கிரெம்ளின் இந்த கூற்றுக்களை மறுக்கிறது.

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் முதன்மையான ரஷ்ய ஏவுகணை கப்பல் மோஸ்க்வா, செப்டம்பர் 11, 2008 அன்று கருங்கடல் துறைமுகமான செவாஸ்டோபோலில் நங்கூரமிட்டுக் காணப்பட்டது. கப்பல் வியாழக்கிழமை மூழ்கியது (AP Photo, File) [AP Photo/File photo]

ஏறத்தாழ 500 மாலுமிகளைக் கொண்ட கப்பலின் பணியாளர்கள் மீட்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. ஆனால் ரஷ்ய மாலுமிகள் தாக்குதலில் இறந்ததாக மூத்த ரஷ்ய சட்டமியற்றுபவர் கான்ஸ்டான்டின் ஷாடுலின் கூறினார்.

கப்பல் மூழ்கியதைப் பற்றி பெருமிதம் கொண்ட உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச், 'இது மிகவும் முக்கியமான இராணுவ நிகழ்வும் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷ்ய கடற்படையின் மிகப்பெரிய தோல்வியுமாகும்' என்றார். மொஸ்க்வா மூழ்கியது 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொன் அளவீட்டின்படி மூழ்கிய மிகப்பெரிய போர்க்கப்பலாக இருக்கும்.

முன்னதாக, அமெரிக்கா உக்ரேனுக்கு புதிய இராணுவ ஆயுதங்கள் மற்றும் 'உளவுத்துறைப் பகிர்வின்' பாரிய விரிவாக்கம் ஆகிய இரண்டையும் அறிவித்தது. செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் 'இந்த நகர்வுகள் டொன்பாஸ் மற்றும் கிரிமியாவில் மாஸ்கோவின் படைகளை குறிவைக்க உக்ரேனுக்கு உதவும்' என எழுதியது.

இந்த 'உளவுத்துறை பகிர்வு' எந்த அளவிற்கு மோஸ்க்வாவை மூழ்கடித்ததில் பங்கு வகித்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

போர்க்கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, வியாழனன்று உக்ரேனிய வானூர்திகள் அதன் எல்லையில் தாக்குதல்களை நடத்தியதாகவும், பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள எல்லைக் கிராமமான கிளிமோவோவைத் தாக்கி ஏழு பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யா கூறியது.

வியாழனன்று, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கான தடை இயங்கத் தொடங்கியுள்ளதாகவும், சில வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தனர். முன்னர் ரஷ்ய நிலக்கரி இறக்குமதியை நிறுத்துவதற்கு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்குப் பின்னர் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, கியேவ் மீதான நேரடித் தாக்குதல்களை ரஷ்யா கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகள் மற்றும் மின்சாரத் தடைகள் நகரம் முழுவதும் பதிவாகியுள்ளன. 'ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை இரவு, கியேவின் பல்வேறு பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிப்புகள் கேட்டன. உக்ரேனிய தலைநகரின் குறிப்பிடத்தக்க பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,” என்று ரஷ்ய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாளிதழான Izvestia எழுதியது.

மேலும் பதட்டங்களைத் தூண்டி, வியாழனன்று உக்ரேனுக்கு “300 Switchblade தந்திரோபாய ஆளில்லா வான்வழி அமைப்புகளை வழங்குவதாக பென்டகன் அறிவித்தது. 500 Javelin ஏவுகணைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிற கவச எதிர்ப்பு கருவிகள்; 200 M113 கவச பணியாளர் வாகனங்கள்; 100 நகரும் கவச பல்தேவை சக்கர வாகனங்கள்; 11 எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள்,” அத்துடன் கண்ணிவெடிகள் இதனுள் அடங்கும்.

பென்டகனின் கூற்றுப்படி, அமெரிக்கா இப்போது 'பைடென் நிர்வாகம் பதவியேற்றதில் இருந்து உக்ரேனுக்கு 3.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது. இதில் பெப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் தூண்டுதலற்ற படையெடுப்பு தொடங்கியதில் இருந்து வழங்கப்பட்ட சுமார் 2.6 பில்லியன் டாலரும் அடங்கும்'.

ஒரு சில வாரங்களுக்குள் நேட்டோவில் சேர தமது நாடு முயல்கிறது என பின்லாந்தின் பிரதம மந்திரி அறிவித்த பின்னரே, ஆயுத ஏற்றுமதியின் புதுப்பிக்கப்பட்ட விரிவாக்கம் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு பிரதிபலிப்பாக, ரஷ்ய அதிகாரிகள் ஒரு பெரிய அணுவாயுத ஆயுதமயமாக்கலினால் அச்சுறுத்தியுள்ளனர்.

'சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தால், ரஷ்யாவுடனான நேட்டோ கூட்டணியின் தரைப்பகுதி எல்லைகளின் நீளம் இரட்டிப்பாகும்' என ரஷ்யாவின் பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் கூறினார். மேலும் 'இயல்பாகவே, இந்த எல்லைகள் பலப்படுத்தப்பட வேண்டும்' என்றார்.

நேட்டோ உறுப்பு நாடுகளுடனான அதன் எல்லைகளில் ரஷ்யா, 'Iskanders, hypersonics மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட கப்பல்களை' நிலைநிறுத்த முடியும் என்று மெட்வெடேவ் எச்சரித்தார். Iskanders ஏவுகணைகள் அணு ஆயுதங்களை கொண்டுசெல்லும் திறன் கொண்டவை.

நேட்டோ, அதன் பங்கிற்கு, ரஷ்யாவுடனான அதன் எல்லைகளில் அணு ஆயுதங்களை ஏற்கனவே பாரியளவில் விரிவுபடுத்துகிறது. பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ அணுசக்தி கொள்கை இயக்குநரகத்தின் இயக்குனர் ஜெசிகா கொக்ஸ், Defense News இடம், அமெரிக்க நேட்டோ நட்பு நாடுகள் F-35 போர் விமானத்தின் 'அணுசக்தி பகிர்வு இயக்கவியலை' பயன்படுத்துவதை மேற்கொள்வதாகக் கூறினார். இது நேட்டோவின் எல்லைகளில் தந்திரோபாய அணு ஆயுதங்களை பரவலாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.

கடந்த மாதம் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, புட்டின் 'அதிகாரத்தில் நீடிக்க முடியாது' என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கூறினார்.

உச்சிமாநாட்டைத் தொடர்ந்து பைடென், “இந்த மோதலில் நீண்ட காலத்திற்கு இருக்க நாம் இப்போது உறுதியளிக்க வேண்டும். நாம் இன்றும் நாளையும், நாளை மறுநாளும், இன்னும் பல ஆண்டுகளாகவும், பல தசாப்தங்களாகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.

இந்த வாரம், பைடென் ரஷ்யாவிற்கு எதிரான இந்த வார்த்தை பிரயோகத்தை மீண்டும் விரிவுபடுத்தினார். உக்ரேனில் அந்த நாடு ஒரு 'இனப்படுகொலை' செய்வதாக அறிவித்தார்.

அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் ஒரு பொங்கி எழும் தொற்றுநோய்க்கு மத்தியில், பைடென் நிர்வாகம் உக்ரேனில் போரை பயன்படுத்தி சமூக பதட்டங்களை வெளிநோக்கி திசை திருப்பவும், போரின் அடிப்படையில் தேசிய ஒற்றுமையை உருவாக்கவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பைடென் நிர்வாகம் ரஷ்யாவின் மீது ஒரு தீர்க்கமான இராணுவத் தோல்வியைச் சுமத்துவதற்கும் போரைப் பயன்படுத்த முயல்கிறது. இது அதன் முக்கிய இயற்கை வளங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்காக நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை அமெரிக்கா உலகப் பொருளாதாரம் மீதான தனது ஆதிக்கத்திற்கும் மற்றும் சீனாவுடனான இராணுவ மோதலுக்கான தயாரிப்புகளுக்கு முக்கியமானதாகவும் கருதுகிறது.

எவ்வாறாயினும், மோதல் கட்டுப்பாட்டை மீறி வேகமாக அதிகரித்து வருகிறது. இது நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடி மோதலுக்கான வாய்ப்பையும் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கூறமுடியாத பின்விளைவுகளுடனான அணு ஆயுதங்களை முதன்முதலில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் எழுப்புகிறது.

Loading