ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: நெருக்கடியிலிருந்து பேரழிவை நோக்கி செல்லும் ஏழை நாடுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரம் வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் அரையாண்டுக் கூட்டங்களுக்கு முன்னதாக, உலகளாவிய உதவி நிறுவனமான ஆக்ஸ்ஃபாம், உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு கோவிட்-19 தொற்றுநோயின் பேரழிவு விளைவுகளை தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் பயங்கரமான தாக்கத்தை விவரிக்கும் அறிக்கையை தயாரித்துள்ளது.

ஏப்ரல் 2022 ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் அட்டைப் பக்கம்

தீவிர சமத்துவமின்மை மற்றும் பாரிய உணவு மற்றும் எரிசக்தி பணவீக்கம் ஆகியவற்றின் நெருக்கடிகள், உக்ரேன் மற்றும் கோவிட்-19 போரினால் துரிதப்படுத்தப்பட்டு, உலகின் ஏழ்மையான மக்களுக்கு அவர்களின் 'வாழ்க்கை நினைவின் முன்னோடியில்லாத' பேரழிவை உருவாக்க ஒன்றிணைகின்றன.

'முதல் நெருக்கடி, பின்னர் பேரழிவு' என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை, குறைந்தபட்சம் கால் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படலாம் என மதிப்பிட்டுள்ளது. இவர்கள் நாள் ஒன்றுக்கு 1.90 டாலருக்குக் கீழே பெறுவதாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் மொத்த எண்ணிக்கை 860 மில்லியனாக உள்ளது.

நாளொன்றுக்கு 5.50 டாலர் என்ற வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியளவான 3.3 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பில்லியனர்களின் செல்வம் 'எப்போதும் இல்லாத அளவுக்கு அதன் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது' என்று அது குறிப்பிட்டது.

'நுகர்வோரின் இழப்பில் இலாபத்தை அதிகரிக்க பெரிய நிறுவனங்கள் பணவீக்கச் சூழலை சுரண்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது: எரிசக்தி விலைகளின் மட்டங்கள் எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்தை சாதனை அளவுகளுக்குத் தள்ளிவிட்டன. அதே நேரத்தில் உணவு விலைகள் அதிகரிக்கும்போது விவசாய நிறுவனங்கள் விரைவாக அதிக இலாபம் ஈட்டும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்' என்று ஆக்ஸ்ஃபாம் கூறியது.

பணவீக்கம் வேகமாக அதிகரித்து, இந்த ஆண்டு ஊதிய வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும்.

சர்வதேச வங்கிகள், சர்வதேச நாணய நிதியம் உட்பட பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகள் வெறுமையாக்கப்படுகின்றன.

அறிக்கையின்படி, உலகின் அனைத்து ஏழ்மையான நாடுகளுக்கான கடன் வழங்கல் இந்த ஆண்டு 43 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உணவு இறக்குமதி கட்டணங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அவர்கள் செலவழித்ததில் கிட்டத்தட்ட பாதிக்கு சமமானதாகும்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில், கடன் கட்டணம் மற்றும் திருப்பிச் செலுத்துதலுக்காக செலவிடப்பட்ட தொகை, சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அவர்களின் ஒருங்கிணைந்த செலவினத்தில் 171 சதவீதமாகும்.

தொற்றுநோயின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிக மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளான, கடன் சுமையைக் குறைக்கும், கடன் கட்டண இடைநிறுத்த முயற்சி மற்றும் G20 அறிமுகப்படுத்திய பொதுவான கட்டமைப்பு ஆகியவை 'பெரும்பாலும் பயனற்றவை என்பதை நிரூபித்துள்ளன' என்று அறிக்கை தெளிவுபடுத்தியது.

அதேபோல், சர்வதேச நாணய நிதியத்தின் மிகவும் பெருமைப்பட்ட முடிவான ஆகஸ்ட் மாதத்தில் 650 பில்லியன் டாலர்கள் மேலதிக சிறப்பு பெற்றுக்கொள்ளல் உரிமைகளை (SDRs) கிடைக்கச் செய்தது. இது நிபந்தனைகள் இல்லாமல் வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிக அணுகலை வழங்குகிறது. மேலதிக SDR கள் தேவைக்கு ஏற்ப ஒதுக்கப்படவில்லை. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, இதனால் பணக்கார நாடுகள் முக்கிய பயனாளிகளாக இருக்கும் என அர்த்தப்படுகின்றது.

100 பில்லியன் டாலர்களை மறுஒதுக்கீடு செய்வதாக G20 உறுதிமொழிகள் அளித்தன, ஆனால் இதுவரை 36 பில்லியன் டாலர்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

உயரும் பணவீக்கத்திற்கு மத்தியில் வட்டி விகிதங்களை அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைமையிலான உலகின் முக்கிய மத்திய வங்கிகள் உயர்த்துவதற்கான நகர்வுகளின் காரணமாக, ஏழ்மையான மற்றும் அதிக கடன்பட்ட நாடுகள் எதிர்கொள்ளும் நிதி நிலைமை எதிர்வரும் காலத்தில் மோசமடையப் போகிறது.

இது தங்கள் எரிசக்தி, உணவு மற்றும் மருத்துவ இறக்குமதிக்கு செலுத்த டாலர்கள் தேவைப்படும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நிதிக் கொந்தளிப்புக்கான ஒரு வழிமுறையாகும்.

இந்த அறிக்கை “பல வளரும் நாடுகள் வரும் மாதங்களில் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கக்கூடும். மேலும் இவை முக்கிய இறக்குமதிகளைப் பராமரிக்க முயற்சித்து திவால்நிலைக்குத் தள்ளப்படுவதை தடுக்க முயற்சிக்கும். இது உலகளவில் செலவழிப்பதில் கடுமையான வெட்டுக்களைக் குறிக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாடுகள் எடுக்கத் தொடங்கிய சிக்கனத்தை நோக்கி ஏற்கனவே ஆபத்தான பாதையை அதிகப்படுத்துகிறது” என எச்சரித்தது.

ஆக்ஸ்ஃபாம் பிரதிநிதிகளின் கூற்றுப்படி, 2020 இல் சர்வதேச நாணய நிதியத்தின், கடந்த காலங்களின் கடன்களுடன் பிணைக்கப்பட்டிருந்த நிபந்தனைகளான சமூக செலவினங்களில் வெட்டுக்கள் மற்றும் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை விதிக்காமல் தொற்றுநோய்களின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு பணத்தை செலவிடுமாறு நாடுகளை வலியுறுத்தியது. இந்த நிபந்தனைகள் இப்போது பெருந்தொகையான கடன்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுடன் திரும்புகின்றன.

கடன் நெருக்கடியின் மையத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இந்த வாரம் வாஷிங்டனில் அதன் அதிகாரிகளைச் சந்திப்பதால், சர்வதேச நாணய நிதியம் இத்தகைய நிபந்தனைகளை விதிக்கிறது.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, நெருக்கடியைச் சமாளிக்கப் போதுமான அளவு பணம் இருப்பதாகக் காட்டும் புள்ளிவிவரங்களை வழங்கியது.

'5 மில்லியன் டாலர்களுக்கும் மேலான தனிப்பட்ட சொத்துக்களை கொண்டவர்களுக்கு வரிகளை வெறும் 2 சதவிகிதமும், 50 மில்லியன் டாலருக்கு மேல் கொண்டுள்ளவர்களுக்கு 3 சதவிகிதமும் மற்றும் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டுள்ளவர்களுக்கு 5 சதவிகிதம் என உயர்த்தப்பட்டால், உலகம் முழுவதும் 2.52 டிரில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கும்' என்று அது கூறியது.

அந்தத் தொகையானது '2.3 பில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கவும், உலகிற்கு போதுமான கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்கவும், குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வாழும் 3.6 பில்லியன் மக்கள் அனைவருக்கும் உலகளாவிய சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்கவும்' போதுமானதாக இருக்கும்.

அனைத்து நாடுகளின் அரசாங்கங்களையும் உள்ளடக்கிய நிதிய உயரடுக்குகள், பல பில்லியனர்கள் மற்றும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் பிரதிநிதிகளின் கைகளில் பொருளாதாரத்தின் கட்டுப்பாடு இருக்கும்போது அத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படமாட்டாது. உண்மையில், அவர்கள் எதிர்த்திசையில் நகர்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், ஜனாதிபதி பைடெனால் அறிமுகப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட 'பில்லியனர் வரி' ஏற்கனவே கண்காணாமல் மறைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில், ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில், லிபரல் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மக்கள்தொகையில் பணக்கார பிரிவினருக்கு வரிக்குறைப்புகளை ஆதரிப்பதாக எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வேலையில்லாதவர்களுக்கு கொடுப்பனவுகளில் எந்த அதிகரிப்பையும் நிராகரிக்கிறது.

முன்னைய அதன் அறிக்கைகளைப் போலவே, முதலாளித்துவ அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய பேரழிவு தரும் நிலைமையை ஆக்ஸ்ஃபாம் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் எப்பொழுதும் போல, அதன் குற்றச்சாட்டின் அளவு என்ன செய்ய வேண்டும்? என்ற முக்கிய கேள்வியை அணுகும் போது அதன் அரசியல் திவால்தன்மையின் ஆழத்துடன் மட்டுமே பொருந்துகிறது.

அறிக்கையின் ஒரு பத்தி இதைப்பற்றி அனைத்தையும் கூறியது:

“கோவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலும் மக்களையும் நாடுகளையும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் அதே வேளையில், உக்ரேன் நெருக்கடியின் கூட்டு விளைவுகள் நாம் இப்போது பேரழிவை நோக்கிச் செல்லும் அபாயத்தைக் குறிக்கிறது. ஆனால் தைரியமானதும், ஒருங்கிணைந்த சர்வதேச மற்றும் தேசிய நடவடிக்கை மூலம் இதைத் தவிர்க்க முடியும்”.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விஞ்ஞானரீதியானதும் பகுத்தறிவுமிக்க முயற்சியால் மட்டுமே பேரழிவைத் தடுக்க முடியும். ஆனால் அனைத்து அரசாங்கங்களும் சேவை செய்யும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு இந்த அடிப்படையில் செயல்படவில்லை. கோவிட்-19ஐ ஒழிப்பதற்கான விஞ்ஞான அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அரசாங்கங்களும் மறுத்திருப்பது அந்த உண்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

அதன் புறநிலை தர்க்கத்தின் மூலம், அவ்வமைப்பு முறை ஒரு துருவத்தில் தன்னலக்குழுவுக்கு அற்புதமான செல்வத்தை உருவாக்கி, மறுமுனையில் வறுமை, மரணம் மற்றும் துயரம் ஆகியவற்றை உருவாக்குகிறது. அதனிடம் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மேலும், முன்னொருபோதுமில்லாதளவு நெருக்கமாக இணைக்கப்பட்ட உலகில் சர்வதேச ஒத்துழைப்பு எவ்வளவு பகுத்தறிவுமிக்கதும் மற்றும் அவசியமானதாகவும் இருந்தாலும், முதலாளித்துவத்தின் கீழ் அதை அடைய முடியாது. ஏனெனில் இலாப அமைப்புமுறை போட்டி மற்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தேசிய அரசுகள் மற்றும் பெரும் சக்திகளில் வேரூன்றியுள்ளது.

அறிவியல்ரீதியானதும் பகுத்தறிவுமிக்க தீர்விற்காகப் போராடுவதற்கு அதன் பொருளாதாய மற்றும் சமூக நலன்கள் அதை நடைமுறைப்படுத்துவதில் தங்கியிருக்கும் ஒரு சமூக சக்தியால் மட்டுமே அடைய முடியும்.

அந்த சக்தியானது சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இது இலாப அமைப்புமுறையை தூக்கியெறிவதை அடித்தளமாக கொண்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச மே தின இணையவழி பேரணியில் இந்த முன்னோக்கு விரிவுபடுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும்.

Loading