முன்னோக்கு

2022 மே தினத்தின் சவால்: முதலாளித்துவம், தேசிய பேரினவாதம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெப்ரவரி 24, 2022 இல் வெடித்த போர், உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். எல்லா பெரிய மோதல்களிலும் இருப்பதைப் போல், 'முதல் தாக்குதலை யார் தொடங்கியது' என்ற கேள்வி முற்றிலும் இரண்டாம் நிலை முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பொறுப்பற்ற, திறமையற்ற மற்றும் பெரும்பிரயத்தன தன்மையானது புட்டின் ஆட்சியின் அரசியல்ரீதியில் திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றாலும், அது இந்த போரின் ஆழமான காரணங்களை விளக்குவதாக இல்லை.

உக்ரேனில் போர் வெடிக்கும் என நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கம் எப்போதும் ரஷ்யாவுடனான போரை நோக்கியே இருந்துள்ளது. விக்டொர் யானுகோவிச் தலைமையிலான அரசாங்கம், அமெரிக்கா நிதியுதவி செய்து ஒழுங்கமைத்த ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தூக்கியெறியப்பட்டமை, உக்ரேனை நேட்டோவின் சுற்றுவட்டத்தில் கொண்டு வருவதற்கும், ரஷ்யாவுக்கு எதிரான ஓர் எதிர்கால போருக்கான ஏவுதளமாக அதை மாற்றவும் செய்யப்பட்ட ஒரு மூடிமறைப்பற்ற முயற்சியாக இருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) 2014 இல் அதன் மே தின பேரணியில் விளக்கியதைப் போல:

உக்ரேனை அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைக்கும் ஓர் ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் நோக்கமாக இருந்தது. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு வழிவகுக்கும் என்பதை வாஷிங்டன் மற்றும் பேர்லினின் சதிகாரர்கள் புரிந்து வைத்திருந்தனர். உண்மையில் சொல்லப் போனால், ஜேர்மனியும் அமெரிக்காவும் ஒரு மோதலைத் தவிர்க்க முற்படுவதற்குப் பதிலாக, அவற்றின் தொலைநோக்கு புவிசார் அரசியல் நலன்களைக் கைவரப் பெற ரஷ்யாவுடன் ஒரு மோதல் அவசியப்படுவதாக நம்புகின்றன.

அமெரிக்க-நேட்டோ சக்திகளால் தூண்டப்பட்ட இந்தப் போர் இப்போது தான் தொடங்கியுள்ளது. வீடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள், காயங்களுக்கு ஆளானவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களிலும் கூட பெரும் பெரும்பான்மையினர் இந்த போருக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் தீர்மானங்களுக்குப் பொறுப்பாக மாட்டார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட இந்த அப்பாவிகளின் துயரங்கள், போருக்கு வழிவகுத்த அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் அம்பலமாவதைத் தடுப்பதற்காக மட்டுமல்ல, மாறாக எரிச்சலூட்டும் விதத்தில் இந்த மோதலைத் தீவிரப்படுத்துவதற்குத் தேவையான ரஷ்ய-விரோத வெறுப்பைத் தூண்டுவதற்கும் சுரண்டப்பட்டு வருகிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பிரச்சார சாதனங்களது தகவல்களின்படி, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலகின் மனசாட்சியையே உலுக்கி உள்ளதாம், அந்த கதை இவ்வாறு தொடர்கிறது, குற்றமற்ற அந்த அண்டைநாட்டுக்கு எதிராக கிரெம்ளின் முற்றிலும் தூண்டுதலற்ற அதன் தாக்குதலைத் தொடுக்கும் வரையில் அது நிம்மதியாக அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்ததாம்.

என்ன ஒரு பிரம்மாண்டமான, பாசாங்குத்தனமான பொய்! கடந்த முப்பது ஆண்டுகளாக, அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டுள்ளது, உலகம் முழுவதும் மோதல்களைத் தூண்டி விட்டு வருகிறது. அமெரிக்கா —பெரும்பாலும் அதன் நேட்டோ அடிவருடிகளின் நேரடி ஆதரவுடன்— மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, பால்கன் நாடுகள் மீதும் மற்றும் நிச்சயமாக கரீபியன் நாடுகள் மீதும் குண்டுவீசி உள்ளது மற்றும்/அல்லது படையெடுத்துள்ளது.

மத்திய உளவுத்துறை முகமையால் (சிஐஏ) வழங்கப்படும் நாளாந்த குறிப்புகளை அப்படியே கக்கும் ஊழல்பீடித்த அமெரிக்க ஊடகங்களும், பைடென் நிர்வாகமும், கூறும் எல்லா வாதங்களும் உண்மையே என்று ஒருவர் ஏற்றுக் கொண்டாலும் கூட, உக்ரேனில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இரண்டு தரப்பிலும் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, அமெரிக்கா நடத்திய போர்களில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல மடங்கு குறைவாகவே உள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியரான டேவிட் வைன் (David Vine) எழுதிய The United States of War என்ற நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தான் மற்றும் யேமனில் அமெரிக்க படைகள் சண்டையைத் தொடங்கியதில் இருந்து மட்டுமே, அனைத்து தரப்பிலும் இந்த நாடுகளில் 755,000 இல் இருந்து 786,000 அப்பாவி மக்களும் மற்றும் படைவீரர்களும் இறந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவைச் சேர்ந்தவர்களின் மரண எண்ணிக்கையை விட சுமார் ஐம்பது மடங்கு அதிகமாகும்.

ஆனால் இதுவுமே கூட போரில் இறந்த படைவீரர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை மட்டுந்தான். போர்களால் ஏற்பட்ட நோய், பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடாலும், மற்றும் மருத்துவக் கவனிப்பு முறைகள், வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பிற உள்நாட்டு கட்டமைப்பின் சிதைவாலும் இன்னும் பலர் இறந்துள்ளனர். இந்த இறப்புகள் இன்னும் ஆராய்ச்சியாளர்களால் கணக்கிடப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், மொத்த எண்ணிக்கையோ குறைந்தது 3 மில்லியனை எட்டக்கூடும் — இது அமெரிக்காவைச் சேர்ந்தவர்களின் இறப்பு எண்ணிக்கையை விட சுமார் இருநூறு மடங்கு அதிகமாகும். 4 மில்லியன் பேர் இறந்திருக்கலாம் என்று மதிப்பிடுவது, மிதமான எண்ணிக்கையாக இருந்தாலும், மிகவும் துல்லியமாக இருக்கக்கூடும்.

இதற்கிடையே ஒட்டுமொத்த அண்டைப்பகுதிகளும், நகரங்கள் மற்றும் சமூகங்களும் அமெரிக்க தலைமையிலான போர்களால் சிதைக்கப்பட்டுள்ளன. காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை பத்து மில்லியன் கணக்கில் நீள்கிறது. ஆப்கானிஸ்தானில், மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மனநலப் பிரச்சனைகள் இருக்கலாம் என்றும், அதில் பாதிப் பேர் கவலையாலும், ஐந்தில் ஒருவர் PTSD (Post-traumatic stress disorder) நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கணக்கெடுப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. ஈராக்கில் 2007 வாக்கில், 28 சதவீத இளைஞர்கள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டிருந்தனர், பாக்தாத்தில் வசித்த பாதிப் பேர் ஒரு மிகப் பெரிய அதிர்ச்சிகரமான நிகழ்வைக் கண்டனர், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் PTSD பரிசோதனை செய்யப்பட்டனர். 2019 நிலவரப்படி, ஆப்கானிஸ்தான், ஈராக், யேமன் மற்றும் லிபியாவில் இருந்து மட்டும் 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்த்தப்பட்டு, வெளிநாடுகளில் அகதிகளாகவோ அல்லது அவர்கள் நாட்டுக்குள்ளேயே உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தப்பட்டுள்ளனர்.

மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, 2001 க்கு பிந்தைய அமெரிக்க தலைமையிலான போர்களுக்கு மிகப் பெரியளவில் நிதி செலவிடப்பட்டன, அவை கிட்டத்தட்ட புரிந்து கொள்ள முடியாதளவில் உள்ளன. 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க வரி செலுத்துவோர் 2001 க்குப் பிந்தைய போர்களுக்காக குறைந்தபட்சம் 6.4 ட்ரில்லியன் டாலர்களையாவது ஏற்கனவே செலவழித்துள்ளனர் என்றோ அல்லது தவிர்க்கவியலாமல் இறுதியில் செலவழிப்பார்கள் என்றோ எதிர்பார்க்க வேண்டியிருந்தது, இதில் போர்களுக்காக கடன் வாங்கப்பட்ட பணத்திற்கான வட்டித் தொகைகள் மற்றும் எதிர்கால முன்னாள் படைவீரர்களுக்கான சலுகைகளும் உள்ளடங்கும். முடிவற்ற போர்களாக தெரியும் இவை உண்மையில் எப்போது முடியும் என்பதைப் பொறுத்து, உண்மையான செலவுகள் நூறு பில்லியன்கள் அல்லது ட்ரில்லியன்களுக்கும் அதிகமாக இருக்கும். [பக்கம் xvii-xix]

உண்மையில் கண்ணுக்கெட்டிய தூரம் முடிவே இல்லை. ஆப்கானிஸ்தானில் 'என்றென்றைக்குமான போரை' முடிவுக்குக் கொண்டு வருவதாக ஏப்ரல் 2021 இல் பைடென் வெளியிட்ட அறிவிப்பானது, ரஷ்யா மற்றும் சீனாவுடனான நேரடி மோதலுக்கு அமெரிக்க இராணுவப் படைகளை மூலோபாயரீதியில் மீளநிலைநிறுத்துவதற்கான ஓர் எரிச்சலூட்டும் மூடிமறைப்பாக இருந்தது.

கடந்த மூன்று தசாப்தங்களில் நடந்த எல்லா போர்களும் அப்பட்டமாக பொய்களைக் கொண்டு நியாயப்படுத்தப்பட்டுள்ளன —ஈராக் 'பேரழிவுகரமான ஆயுதங்களை' வைத்திருந்தது என்ற வாதம் இதில் மிகவும் இழிவான ஒன்று மட்டுமே ஆகும்— மேலும் அவை நேரடியான சர்வதேச சட்ட மீறலாகவும் இருந்துள்ளன.

1946 நூரெம்பேர்க் போர்க் குற்ற விசாரணையில், நாஜி தலைவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, 'அமைதிக்கு எதிரான குற்றங்கள்' என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர், போர் தொடுப்பதானது உடனடி இராணுவத் தாக்குதலுக்கான அல்லது வரவிருக்கும் அச்சுறுத்தலுக்கான விடையிறுப்பாக அல்லாமல், அரசுக் கொள்கையின் ஒரு கருவியாக இருந்ததாக அது வரையறுத்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்கள் அமைதிக்கு எதிரான குற்றங்களின் குற்றவியல் வகைப்பாட்டுக்குள் இருந்தன — அதாவது, போரானது அரசியல் நோக்கங்களுக்காக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டிருந்தன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த உலகளாவிய வெறித்தனத்தின் வரலாற்று பின்னணி மற்றும் உலகளாவிய அரசியல் பின்னணியைப் புரிந்து கொள்வது, தற்போதைய இந்த போரை ஆழமாக புரிந்து கொள்வதற்குப் பொருத்தமாக இருக்கும்.

கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் கலைப்பும் மற்றும், இறுதியாக, 1989 மற்றும் 1991 க்கு இடையே சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதன் மீதிருந்த மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளைக் கூட நீக்கியது. சோவியத் ஒன்றியம், கலைப்பின் மற்றும் முதலாளித்துவ மீட்சியின் இறுதிக் கட்டத்தில் நுழைந்திருந்த நிலையில், மிக்கைல் கோர்பச்சேவ்வின் ஆதரவுடன், ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வால்கர் புஷ் 1991 இல் ஈராக்கிற்கு எதிராக முதல் போரைத் தொடங்கிய போது அறிவித்ததைப் போல, அமெரிக்கா ஒரு 'புதிய உலக ஒழுங்கை' உருவாக்க தீர்மானகரமாக இருந்தது.

இந்த திட்டம், சக்தி வாய்ந்த புறநிலை பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நிர்பந்தங்ககளால் உந்தப்பட்டிருந்தது. பனிப்போரில் தவிர்க்க முடியாத பெரும் வெற்றியாளராக அமெரிக்காவைச் சித்தரித்த, 1991 க்குப் பிந்தைய சொல்லாடல்களுக்கு நேரெதிர் மாறாக, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு முந்தைய தசாப்தங்கள் வேகமான அமெரிக்க வீழ்ச்சியின் ஒரு காலகட்டமாக இருந்தன.

1945 இல் அமெரிக்கா வசமிருந்த உலகப் பொருளாதார மேலாதிக்கம், 1960 கள், 1970 கள் மற்றும் 1980 களில் கணிசமாக மோசமடைந்தது. அமெரிக்க உலகப் பொருளாதார மேலாதிக்கத்தின் அடித்தளம் —அதாவது, 1944 பிரெட்டென் வூட்ஸ் மாநாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் என்ற விகிதத்தில் தங்கத்திற்கு டாலரை மாற்றிக் கொள்ளும் முறை— அமெரிக்க வர்த்தக சமநிலைகள் வீழ்ச்சி அடைந்த போது நீடிக்க முடியாததாக மாறியது. பின்னர் இந்த முறை ஆகஸ்ட் 1971 இல் அமெரிக்காவினால் தன்னிச்சையாக கைவிடப்பட்டது.

உலகப் பொருளாதார நிலையின் சீரழிவு உள்நாட்டு வர்க்கப் போராட்டத்தின் போர்க்குணமிக்க வெடிப்புகளால் அதிகரித்தது, இதில் உள்நாட்டு உரிமைகளுக்கான கறுப்பினத் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் ஒரு சக்தி வாய்ந்த வெளிப்பாடாக இருந்தது. அதே நேரத்தில், உலகெங்கிலும் பெருந்திரளான மக்களின் காலனித்துவ-எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரத்தந்தோய்ந்த முயற்சி —மிகவும் கொடூரமாக வியட்நாமில்— மாணவர் இளைஞர்களின் பரந்த பிரிவுகள் தீவிரமயமாவதற்கும், ஒரு மகத்தான போர்-எதிர்ப்பு இயக்கம் உருவாவதற்கும் வழிவகுத்தது.

அமெரிக்காவில் 1960 மற்றும் 1990 க்கு இடைப்பட்ட ஆண்டுகள் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சமூக துருவமுனைப்பாடு ஆகியவற்றால் குணாம்சப்பட்டிருந்தன. நகர்ப்புற கலவரங்கள், வெகுஜன எதிர்ப்பு இயக்கங்கள், அரசியல் படுகொலைகள் மற்றும் வன்முறை மற்றும் நீடித்த வேலைநிறுத்தங்கள் ஆகியவையே 1960 மற்றும் 1990 க்கு இடையில் அமெரிக்க யதார்த்தத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தன.

சோவியத் ஒன்றியத்திற்குள் ஸ்ராலினிச ஆட்சியின் நெருக்கடி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிக்கு இணையாக வளர்ச்சியடைந்திருந்தது. பெரும் மனித விலைகளைக் கொடுத்தாவது நாஜி ஜேர்மனியை வெற்றிகரமாக ஜெயித்து மேலெழுந்திருந்த சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குறிப்பிடத்தக்களவில் முன்னேறி இருந்தது என்பது கேள்விக்கிடமற்றது. ஆனால் சோவியத் ஒன்றியத்தின் அடிப்படையான மற்றும் தவிர்க்க முடியாத முரண்பாடு என்னவென்றால், அதன் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வந்த அதன் சிக்கலான தன்மையும் 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த ஸ்ராலினிச அமைப்புமுறையின் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியது.

போருக்குப் பிந்தைய இரண்டு தசாப்தங்களில் சோவியத் ஒன்றியம் ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சி விகிதங்களை ஏற்படுத்தி இருந்தாலும், சோசலிசத்திற்கான ஒரு தேசியப் பாதை என்ற கருத்தாக்கம் உலகச் சந்தையின் புறநிலை யதார்த்தத்துடன் மற்றும் சர்வதேச உழைப்புப் பிரிவினையுடன் முரண்பட்டது. சோவியத் பொருளாதாரத்தைப் பாதித்த ஏற்றத்தாழ்வுகளும் மற்றும் குறைந்த மட்டத்திலான உற்பத்தித்திறனும், உலகப் பொருளாதாரத்திற்கும் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையே, அனைத்து நாடுகளையும் பாதிக்கும் வகையில், மிகத் தீவிரமான வடிவத்தில் இந்த முரண்பாட்டை எடுத்துக்காட்டியது.

சோவியத் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உலகப் பொருளாதாரத்தின் ஆதார வளங்களை அணுக வேண்டியிருந்தது. ஆனால் பின்வரும் இரண்டு வழிகளில் ஒன்றின் மூலமாக மட்டுமே அவ்வாறு அணுகக் கூடியதாக இருந்தது: 1) திட்டமிடல் கொள்கையைக் கைவிடுவதன் மூலம், முதலாளித்துவத்தை மறுஅறிமுகம் செய்தல், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் அதன் உள்ளார்ந்த அம்சங்களை உலக முதலாளித்துவ அமைப்புமுறையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம்; அல்லது 2) எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம், இந்த அடிப்படையில், தேசிய எல்லைகளைத் தகர்த்தெறிந்து, உலகளவில் விஞ்ஞானரீதியாக வழிநடத்தப்பட்ட ஜனநாயகப் பொருளாதாரத் திட்டமிடலை உருவாக்குவதன் மூலம்.

ஸ்ராலினிச ஆட்சியின் கட்டமைப்புக்குள் இந்த இரண்டாவது மாற்றீடு சாத்தியமில்லை. சோவியத் ஒன்றியத்தின் தேசியவாதக் கொள்கையானது பிரிக்கவியலாதவாறு கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் பொருள்சார் நலன்களில் வேரூன்றியிருந்தது. அமைப்புரீதியில் அதன் அதிகார துஷ்பிரயோகமே, சோவியத் ஒன்றியத்தின் ஆதார வளங்களை அணுகி அதன் தனிச்சலுகையைப் பேணுவதற்கான வழிவகையாக இருந்தது. அதன் அதிகாரப் பிடியை அச்சுறுத்திய ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கம், சோவியத் ஒன்றியத்திற்குள்ளும் சர்வதேச அளவிலும், உருவெடுப்பதை கிரெம்ளின் பீதியோடு பார்த்தது.

கிரெம்ளின் ஆட்சி பரந்த சீர்திருத்தங்களைச் செய்யும், அவை சோவியத் ஒன்றியத்திலும் சர்வதேச அளவிலான அதன் வெற்றியிலும் சோசலிசத்தைப் புதுப்பிக்கும் என 1953 இல் ஸ்ராலினின் மரணம் பிரமைகளை உருவாக்கியது. ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகரத் தன்மை மற்றும் ஓர் அரசியல் புரட்சியின் அவசியத்தைக் குறித்த ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தல் மீதான இந்த நிராகரிப்புத் தான், பப்லோவாத திருத்தல்வாதத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடையாளமாகும்.

ஆனால் 1953 இல் கிழக்கு ஜேர்மனியின் எழுச்சிக்கும் மற்றும் 1956 ஹங்கேரிய புரட்சி, 1962 இல் Novocherkassk இல் தொழிலாளர்கள் படுகொலை, மற்றும் 1968 இல் செக்கோஸ்லோவாக்கியா படையெடுப்பு ஆகியவற்றிற்குச் சோவியத்தின் மூர்க்கமான விடையிறுப்பானது, கிரெம்ளின் அதிகாரத்துவம் அதன் ஆட்சிக்கு எதிரான ஒரு புரட்சிகர சோசலிச சவாலைச் சகித்துக் கொள்ளாது என்பதை இரத்தக்களரியோடு எடுத்துக் காட்டியது.

குறிப்பாக (ஆரம்பத்தில் உண்மையான புரட்சிகர சாத்தியக்கூறைக் கொண்டிருந்த) 1980-81 போலந்து சொலிடாரிட்டி இயக்கத்தின் (Polish solidarity movement) போக்கில், அதிகாரத்துவத்திற்கு எதிரான அந்த இயக்கத்தை ஒடுக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்ததும், கிரெம்ளின் சோவியத் பொருளாதாரத்தின் அமைப்புரீதியிலான நெருக்கடிக்குச் செயலூக்கத்துடன் எதிர்புரட்சிகர தீர்வை, அதாவது சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பது மற்றும் முதலாளித்துவத்தை மீட்டமைப்பதை, தொடரத் தொடங்கியது.

1985 இல் கட்சித் தலைவராக கோர்பச்சேவ் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் மற்றும் பெரெஸ்துரோய்கா (Perestroika - புனர்நிர்மாணம்) அறிமுகப்படுத்தப்பட்டமையும், அக்டோபர் புரட்சிக்கு எதிரான ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியின் இறுதிக் கட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தன.

கோர்பச்சேவ் கொள்கையின் இன்றியமையாத ஒரு கூறுபாடு என்னவென்றால், வர்க்கப் போராட்டம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்புடன் சோவியத் ஒன்றியத்தைச் சம்பிரதாயமாக அடையாளப்படுவதைக் கூட அது வெளிப்படையாக மறுப்பதாக இருந்தது. 1989 இல், Perestroika versus Socialism என்ற நூலில், அனைத்துலகக் குழு பின்வருமாறு விளக்கியது:

புதிய சோவியத் வெளியுறவுக் கொள்கையின் பிரத்யேக அம்சங்கள், சோவியத் கொள்கையின் நீண்டகால இலக்காக சர்வதேச சோசலிசத்தை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும், சோவியத் ஒன்றியத்திற்கும் உலகெங்கிலுமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் இடையிலான எந்தவொரு அரசியல் ஐக்கியத்தைக் கைவிடுவதாகவும் மற்றும் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் ஒரு பொருத்தமான காரணியாக வர்க்கப் போராட்டத்தை வெளிப்படையாக நிராகரிப்பதாகவும் உள்ளன. சோவியத் வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள், உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள் இந்த பொருளாதாரத்தை ஒருங்கிணைக்க நடந்து வரும் நிகழ்முறைகளுடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைந்துள்ளன. கிரெம்ளினின் பொருளாதார இலக்குகள், அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் மற்றும் வர்க்க போராட்டம் மற்றும் எந்தவொரு வடிவில் இருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் இடையே நீடித்து வரும் தொடர்பைச் சோவியத் ஒன்றியம் உறுதியாகவும் நிபந்தனையின்றியும் கைவிடக் கோருகிறது. இதனால் தான், 1789 பிரெஞ்சு புரட்சியைப் போலவே 1917 அக்டோபர் புரட்சியும் வேறொரு வரலாற்று சகாப்தத்தைச் சேர்ந்தது என்றும் அது இந்த நவீன உலகிற்குப் பொருத்தமற்றது என்றும் அறிவிக்க, டிசம்பர் 1988 இல் கோர்பச்சேவ் அவரது பிரகடனத்திற்கான அரங்கமாக ஐக்கிய நாடுகள் சபையைத் தேர்ந்தெடுத்தார்.

சோவியத் பத்திரிகைகளில் முந்தைய கிரெம்ளின் தலைவர்களின் வெளியுறவுக் கொள்கையைக் கண்டித்து வரும் கட்டுரைகள், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அவர்கள் காட்டிக் கொடுத்ததற்காக அல்ல, மாறாக அமெரிக்காவுக்கு மிகவும் விரோதமாக இருந்ததற்காக தொடர்ந்து வெளிவருகின்றன. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் வெளியுறவுக் கொள்கை ஏதேனும் விரோதத்தைப் பிரதிபலிக்குமேயானால், அது அரசியல் பகுத்தறிவின்மையின் வடிவமாக கேலிக்குரியதாக உள்ளது. பனிப்போர் வெடித்ததற்கான காரணம் இப்போது ஏகாதிபத்திய ஆக்ரோஷம் என்று கூறப்படுவதில்லை, மாறாக சோவியத் ஒன்றியம் முதலாளித்துவ-எதிர்ப்பு வறட்டுவாத சித்தாந்தத்தைச் கடைபிடித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

மார்க்சிசம் மீது அடிப்படை எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச மறுதிருத்தமானது —அதாவது, சோசலிசத்தை ஒரு தேசிய கட்டமைப்புக்குள் கட்டமைக்கலாம் என்ற கூற்றானது— அதன் சோசலிச பாசாங்குத்தனங்களைக் கூட எப்போதோ கைவிட்டுவிட்ட ரஷ்யாவுக்கு செல்வம் பொழியும், அது சமாதானமான முறையில் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்புகளுக்குள் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும் என்ற மோசடியான மற்றும் அறியாமைக்குக் குறைவற்ற வாதத்துடன் கோர்பச்சேவ் ஆட்சியால் பிரதியீடு செய்யப்பட்டது. மார்க்சிசத்தை ஒரு சித்தாந்தக் கட்டுக்கதையாக கைவிட்டு விட்டதால் ரஷ்யா ஏகாதிபத்தியத்தைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை என்று இந்த தொனியில் மிகவும் உரக்க பேசியவர்களில், சோவியத் அதிகாரத்துவ எந்திரத்தில் இருந்த இளம் உறுப்பினர் Andrei Kozyrev உள்ளடங்குவார், அவர் 1989 இல் எழுதினார்:

அமெரிக்காவின் ஏகபோக முதலாளித்துவத்தை ஒட்டுமொத்தமாக ஒருவர் கவனித்தால், முக்கியமானவர்கள் அல்ல, அதன் குழுக்களில் மிகச் சிலரே, இராணுவவாதத்துடன் தொடர்புடையவர்கள். உதாரணமாக, சந்தைகள் அல்லது மூலப்பொருட்களுக்காக, அல்லது உலகின் பங்கீடு மற்றும் மறுபங்கீடுக்கான இராணுவப் போராட்டம் பற்றி இனி பேச வேண்டிய அவசியமில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் பேரழிவுக்கு மத்தியில், இன்று இந்த வார்த்தைகளை மீண்டும் படிக்கையில், சோவியத் ஒன்றியத்தை அவர்கள் பொறுப்பின்றி துண்டாடிய போது, சோவியத் அதிகாரத்துவத்திற்குள்ளும் மற்றும் அதன் செல்வாக்கான உயர்பதவிகளுக்குள்ளும் (nomenklatura) இருந்த வஞ்சகம் மற்றும் சுய-மாயையின் மட்டத்தைக் கண்டு ஒருவரால் வியக்காமல் இருக்க முடியாது. ஆனால் அந்த வஞ்சகமும் சுய-மாயையும் அதிகாரத்துவத்தின் சடவாத நலன்களில் இருந்து எழுந்தது, அது ஒரு தனிச்சலுகை கொண்ட சாதி என்பதில் இருந்து ஓர் ஆளும் வர்க்கமாக தன்னை மாற்ற முயன்றது. கோஜிரெவ்வைப் பொறுத்த வரையில், அவர் யெல்ட்சின் கீழ் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆகி, அவரின் முன்னாள் பதவியின் (ex officio) விளைவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முகவராக ஆனார்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை, அமெரிக்கா, அதன் நீடித்த பொருளாதாரச் சரிவை ஈடுகட்ட சந்தேகத்திற்கிடமற்ற அதன் இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பாக கருதியது. சவாலுக்கிடமின்றி அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க, அது 'ஒருமுனைத் தருணத்தை' —எந்தவொரு கருதக்கூடிய இராணுவப் போட்டியாளரும் இல்லாத இந்த வாய்ப்பைப்— பயன்படுத்தும்.

ஆனால் இந்த திட்டம் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் மூலோபாயவாதிகள் எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமானதாக நிரூபணமாகி உள்ளது. அமெரிக்கா தூண்டிவிட்ட போர்கள் அவமானகரமான தோல்வியைச் சந்தித்துள்ளன. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் இரத்தக்களரியான மோதல்களில் அமெரிக்காவின் மூலோபாய நோக்கங்கள் எதுவுமே அடையப்படவில்லை. அனைத்திற்கும் மேலாக, அமெரிக்கா அதன் 'என்றென்றும் போர்களில்' சிக்கியிருந்த நிலையில், சீனா அமெரிக்காவின் முக்கிய பொருளாதார போட்டியாளராக மற்றும் சாத்தியமான இராணுவப் போட்டியாளராகவும் உருவெடுத்தது.

மேலாதிக்கத்திற்கான வேட்கை இன்னும் கூடுதலாக தொடர்ந்து அழிவுகரமான பொருளாதார நெருக்கடிகளால் கீழறுக்கப்பட்டுள்ளது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவு ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையையும் சரிவின் விளிம்புக்குக் கொண்டு வந்தது, நிதிய அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலுத்தி ஒரு பெரும்பிரயத்தன பிணையெடுப்பால் மட்டுமே அது தடுக்கப்பட்டது. ஆனால் 2008 முறிவுக்கு வழிவகுத்த அடிப்படை சிக்கல்கள் எதுவும் தீர்க்கப்படாத நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று வெடிப்பால் தூண்டப்பட்ட மற்றொரு சந்தைப் பொறிவைத் தடுக்க 2020 இல் இன்னும் மிகப் பெரிய பிணையெடுப்பு தேவைப்பட்டது.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் இறப்புகள் மற்றும் உலகளவில் சுமார் 20 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்திய இந்த பெருந்தொற்று, ஒரு பெரிய சமூக நெருக்கடிக்கு எந்த முற்போக்கான வழியிலும் விடையிறுக்க திராணியற்ற இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் செயல்பிறழ்வை அம்பலப்படுத்துகிறது. இந்த வகையில், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ ஆட்சிகளுக்கு இடையே எந்த அடிப்படை வித்தியாசமும் இல்லை. உலகிலேயே மிகவும் சமநிலையற்ற அமெரிக்க சமூகத்தின் அழுகிப் போய் சீழ்பிடித்த இந்த புண்கள் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையையும் உடையும் புள்ளிக்குக் கொண்டு வந்துள்ளன. ஜனவரி 6, 2021 இல், அமெரிக்காவின் ஜனாதிபதியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அமெரிக்காவின் தற்போதைய அரசியலமைப்பு கட்டமைப்பே கிட்டத்தட்ட தூக்கியெறியப்பட இருந்தது. அது 'சுதந்திர உலகின்' தலைவர் என்று ஆணவத்துடன் காட்டிக் கொண்டாலும், அதே வேளையில் பைடென் அவரே சமீபத்தில் ஒப்புக்கொண்டது போல், அமெரிக்காவில் ஜனநாயகத்தின் பாசாங்குத்தனம் கூட உயிர்வாழ்வது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

கடந்த காலத் தோல்விகளினால், உலகளாவிய மேலாதிக்கத்திற்கான நடவடிக்கையிலிருந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, அமெரிக்கா இன்னும் தீவிரமான மற்றும் அபாயகரமான நடவடிக்கைகளுக்கு நகர்ந்து வருகிறது. உண்மையில், அதன் உள்நாட்டு சிக்கல்களின் கடுமையே, அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட முன்னர் சிந்திக்க முடியாததாக நிராகரிக்கப்பட்ட நடவடிக்கைகளை நோக்கி அமெரிக்காவை முன்நகர்த்துவதில் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது.

உக்ரேனை ஒரு பினாமியாகப் பயன்படுத்தி, அமெரிக்கா ஏன் ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரைத் தூண்டியது? லெனின், முதல் உலகப் போரை உலகை மறுபங்கீடு செய்வதற்காக நடந்த ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சியாக ஆய்வில் எடுத்துக் காட்டினார். நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அமெரிக்கா, ஏன் ரஷ்யாவுக்கு எதிராக போரை நடத்தி வருகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த வரையறை அடிப்படை தொடக்க புள்ளியாக உள்ளது. தற்போதைய சூழலில், உலகின் மறுபங்கீடு என்பது மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் பரந்த நிலப்பரப்பை நேரடியாக ஏகாதிபத்திய கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதாகும்.

சோவியத் ஒன்றியம் சோசலிசத்துடனும் ஏகாதிபத்திய எதிர்ப்புடனும் கூட சம்பிரதாயமாக எந்தளவுக்கு அடையாளத்தைத் தக்க வைத்திருந்தது என்றால், அது கலைக்கப்பட்டதால் அமெரிக்க மேலாதிக்கத்திலான உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் சித்தாந்த மற்றும் பொருளாதார சட்டபூர்வத்தன்மைக்கு ஒரு சவால் அகன்றுவிட்டது. 1991 க்குப் பிந்தைய ஆட்சி, வெளிநாட்டு முதலாளித்துவ முதலீட்டுக்கு ரஷ்ய பொருளாதாரத்தைத் திறந்து விட்டது. ஆனால் அரசோ அப்போதும் யுரேஷியாவின் உலகளாவிய மூலோபாய விரிவாக்கத்தின் மீது பரந்து விரிந்திருந்தது. அனைத்திற்கும் மேலாக, தேசியப் பொருளாதாரத்தின் மீது கட்டுப்பாட்டை ஏற்ற ரஷ்ய தன்னலக் குழுக்களால் ரஷ்ய ஆதார வளங்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அணுகுவதிலிருந்து மட்டுப்படுத்தி வைக்க முடிந்தது.

அமெரிக்க மேலாதிக்கத்தை அடைவதற்கான திட்டத்தைப் பொறுத்த வரையில், ரஷ்யாவின் மூலோபாய வளங்களை வரம்பின்றி அணுகுவதும் மற்றும் அதன் பிரதேசங்களைக் கட்டுப்பாட்டில் எடுப்பதும் இரண்டு அம்சங்களில் முக்கிய இலக்காகின்றன.

முதலாவதாக, ரஷ்ய ஆதார வளங்களின் உண்மையான செல்வவளம் பத்து ட்ரில்லியன் டாலர் கணக்கில் மதிப்பிடப்படுகிறது. இத்தகைய உலோகங்கள் மற்றும் கனிமங்களின் பண மதிப்புக்கு அப்பாற்பட்டு, இந்த ஆதார வளங்களில் பல இருபத்தியோராம் நூற்றாண்டு முன்னேறிய தொழில்துறை பொருளாதாரத்திற்கு இன்றியமையாத மூலோபாய பொருட்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

ரஷ்யா மதிப்பு மிக்க இயற்கை வளங்களின் ஒரு நடைமுறை பொக்கிஷமாகும், இங்கே எண்ணெய், இயற்கை எரிவாயு, மரம், தாமிரம், வைரங்கள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், துத்தநாகம், பாக்சைட், நிக்கல், டின், பாதரசம், மாங்கனீஸ், குரோமியம், டங்ஸ்டன், டைட்டானியம், பாஸ்பேட் ஆகிய வளங்கள் பரந்தளவில் —சில விஷயங்களில் மிகப் பரந்தளவில்— உள்ளன. உலகின் இரும்பு தாது இருப்புகளில் சுமார் ஆறில் ஒரு பங்கு உக்ரேன் எல்லைக்கு அருகே குர்ஸ்க் காந்த வினோத பகுதியில் அமைந்துள்ளது. கோபால்ட், மாலிப்டினம், பல்லேடியம், ரோடியம், ருத்தேரியம், இரிடியம் மற்றும் ஓஸ்மியம் ஆகியவை ரஷ்யாவில் கணிசமான அளவில் கிடைக்கும் ஏனைய அரிய உலோகங்களாகும். யுரேனியம் மற்றும் அரிய நிலத்தடி கனிமங்களும் ரஷ்யாவில் உள்ள மிகப் பெரிய ஆதாரவளமாகும். இறுதியில் கூறப்பட்டது, உலகளாவிய புவிசார் அரசியல் போட்டியின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

இந்த முக்கியமான ஆதாரவளங்களை அணுகுவதன் மீது தீவிர மோதல் நிலவுகிறது என்ற உண்மை, உலகளாவிய புவிசார் மூலோபாய வல்லுனர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் மூலப்பொருட்கள் மற்றும் ரஷ்யாவின் செல்வவளத்தைக் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான விவாதம் எதுவும் வெகுஜன ஒளிபரப்பு நிறுவனங்கள், இணையவழி மற்றும் அச்சு ஊடகங்களில் வருவதில்லை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், உக்ரேனிய ஜனநாயகத்தின் சார்பாக விருப்பமின்றி ஓர் உன்னதமான மோதலை, எவ்வளவு தான் வருந்தத்தக்கதாக இருந்தாலும், அசோவ் படையணி பாசிசவாதிகளை ஆயுதமயப்படுத்துவது அவசியமானாலும் கூட, அதை செய்து வருவதாக பொது மக்கள் நம்ப வேண்டுமென அவை விரும்புகின்றன.

இரண்டாவதாக, சீனாவுடனான தவிர்க்க முடியாத மோதலாக வாஷிங்டன் எதைக் கருதுகிறதோ அதற்கு ரஷ்ய நிலப்பரப்பின் மீது ஸ்தூலகமாக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது முக்கியமானது. பகிரங்கமான போர் வரும்போது, இன்று ரஷ்யா இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைப் போலவே சீனாவின் 'இனப்படுகொலை' துன்புறுத்தலுக்கு எதிராக வீகர் மக்களின் பாதுகாப்பு கையில் எடுக்கப்படும்.

ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தூண்டுவதில் மூலப்பொருட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது 'கொச்சையான மார்க்சிசத்திற்கான' (vulgar Marxism) ஓர் எடுத்துக்காட்டாக ஏளனம் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எது எப்படியிருந்தாலும், லெனின் ஏகாதிபத்தியம் பற்றிய அவர் ஆய்வில், மூலப்பொருளின் ஆதாரங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் போராட்டம் மீது அளப்பரிய வலியுறுத்தலை நிறுத்தி இருந்தார். அவர் எழுதினார்: “முதலாளித்துவம் எவ்வளவு வளர்ச்சியடைகிறதோ, மூலப்பொருட்களின் பற்றாக்குறையும் அந்தளவுக்கு அதிகமாக உணரப்படுகிறது, ஒட்டுமொத்த உலகம் முழுவதிலும் உள்ள மூலப்பொருட்களது ஆதாரங்களுக்கான போட்டியும் வேட்டையும் எந்தளவுக்குத் தீவிரமாகிறதோ, காலனிகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டமும் அந்தளவுக்கு மிகவும் கடுமையாக இருக்கும்.”

மூலப்பொருட்களை அணுகுவதற்கும் மற்றும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்குமான முனைவை, லெனின், ஏகாதிபத்தியத்தின் இன்றியமையா கூறுபாடாக, பிரதேசங்களைக் கைப்பற்றுவதுடன் இணைத்துக் காட்டியதுடன், நிலப்பரப்புகளை இணைத்துக் கொள்வதில் இருந்த முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

வெளிப்படையாக இணைத்துக் கொள்ளாமலேயே, பிராந்தியக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு நிச்சயமாக பல வடிவங்கள் உள்ளன, இவை அடிபணிய செய்யப்பட்ட நாட்டின் சுதந்திரம் என்ற மாயையைத் தக்க வைக்க ஏகாதிபத்தியவாதிகளை அனுமதிக்கலாம். ஆனால் மாயை யதார்த்தமாகிவிடாது. மோதல், எந்தளவுக்கு நீடித்ததாக இருந்தாலும், அதன் இறுதி விளைவு, ரஷ்யாவை அதன் தற்போதைய வடிவத்தில் இருந்து அழிப்பதாக இருக்கும் என அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளும் எதிர்பார்க்கின்றன.

மிகவும் ஆக்ரோஷமான கொள்கையை நோக்கிய திருப்பம் குறித்து ஏப்ரல் 16 இல் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது:

உக்ரேன் மீதான விளாடிமிர் புட்டினின் மூர்க்கமான தாக்குதல் அண்மித்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், பைடென் நிர்வாகமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் மிகவும் வேறுபட்ட ஓர் உலகைத் திட்டமிடத் தொடங்கி உள்ளனர், அதில் ரஷ்யாவுடன் சகவாழ்வோ அல்லது கூட்டுறவோ ஏற்படுத்தும் முயற்சி இனி இருக்காது, மாறாக நீண்டகால மூலோபாய விஷயமாக அவை செயலூக்கத்துடன் அதை தனிமைப்படுத்தி பலவீனமாக்கவே முயலும்.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலும், மற்றும் வெளியுறவுத்துறை, பென்டகன் மற்றும் அதனுடன் இணைந்த அமைச்சகங்களிலும், பாதுகாப்புத்துறை மற்றும் நிதித்துறையில் இருந்து வர்த்தகம் மற்றும் சர்வதேச இராஜாங்க நடவடிக்கைகள் வரை தோற்றப்பாட்டளவில் மாஸ்கோவை நோக்கிய மேற்கின் தோரணையின் ஒவ்வொரு அம்சத்திலும் புதிய கொள்கைகளைப் பொதிய முன்மாதிரி திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. (“ரஷ்யாவை நீண்டகாலத்திற்குத் தனிமைப்படுத்த அமெரிக்காவும் கூட்டாளிகளும் திட்டம் வகுக்கின்றன”)

'ரஷ்யாவுடன் சகவாழ்வு மற்றும் கூட்டுறவுக்கான' முயற்சிகளைக் கைவிடுவதன் மூலோபாய தாக்கங்கள் என்ன? அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளும் ரஷ்யாவுடனான 'சகவாழ்வு' சாத்தியமில்லை என்று நம்புகின்றன என்றால், அதை அழிக்க அவை தீர்மானித்து விட்டன என்பதே இதைப் பின்தொடர்ந்து வரும் முடிவாக உள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் கற்பனை செய்யும் 'வேறு உலகம்' —இதற்காக அவை அணுஆயுதப் போர் அபாயத்தை ஏற்கவும், நூறு மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைப் பணயம் வைக்கவும் தயாராக உள்ளன— இதில் ரஷ்யா அதன் தற்போதைய வடிவத்தில் இருக்காது.

அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் பேரழிவுகரமான விளைவுகளை உக்ரேனில் நடக்கும் போர் இப்போது முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறது. அந்த காட்டிக்கொடுப்பானது சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை மறுத்தளித்ததுடன் தொடங்கியது, 1917 அக்டோபரில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றவும் மற்றும் அதைத் தொடர்ந்து 1922 இல் சோசலிச சோவியத் குடியரசுகளின் ஒன்றியத்தை அமைக்கவும் லெனினும் ட்ரொட்ஸ்கியும் இந்த வேலைத்திட்டத்தைத் தான் அடித்தளத்தில் வைத்திருந்தார்கள். 1924 இல் ஸ்ராலின் வெளியிட்ட 'தனியொரு நாட்டில் சோசலிசம்' எனும் மார்க்சிச-விரோத வேலைத்திட்டம் மிகப்பெரும் ரஷ்ய பேரினவாதம் மீண்டெழுவதற்கு உதவியது, அது சோசலிச குடியரசுகளின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தி, பிற்போக்குத்தனமான, சோவியத்-விரோத மற்றும் பகிரங்கமான பாசிச கூறுபாடுகளைப் பலப்படுத்தியது, குறிப்பாக உக்ரேனில் — ஜாரிசத்தின் கீழ் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டிருந்த இந்த நாட்டில் இருந்து தான் லியோன் ட்ரொட்ஸ்கி உட்பட புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தின் தலைச்சிறந்த தலைவர்கள் பலர் தோன்றியிருந்தார்கள்.

1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியின் உச்சகட்டமாகும். இப்போது அதன் விளைவுகளை எதிர்கொண்டுள்ள ரஷ்ய, உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம், இந்த மகத்தான வரலாற்று அனுபவத்திலிருந்து அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும்.

ஏப்ரல் 2இல் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ரஷ்ய சோசலிஸ்டுக்கு ஒரு கடிதம் என்பதில், அனைத்துலகக் குழு விவரிக்கையில், அமெரிக்கா இந்த மோதலைத் தூண்டி இருந்தாலும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கோட்பாட்டுரீதியில் அது எதிர்ப்பதைக் குறித்து விவரித்திருந்தது. அந்த கடிதம் குறிப்பிட்டதாவது, ட்ரொட்ஸ்கிச இயக்கம், 'ரஷ்ய முதலாளித்துவ ஆட்சியின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் ஏதோவொரு விதத்தில் தேசியளவில் வேரூன்றிய நடைமுறைவாத கருத்துருக்களை அடிப்படையாக கொண்டதில்லை.” தொடர்ந்து அது பின்வருமாறு குறிப்பிட்டது:

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெருந்திரளான ரஷ்ய மக்களின் பாதுகாப்பை முதலாளித்துவ தேசிய-அரசு புவிசார் அரசியலின் அடிப்படையில் மேற்கொள்ள முடியாது. மாறாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உலக சோசலிசப் புரட்சி எனும் பாட்டாளி வர்க்க மூலோபாயத்தின் மறுபிரவேசம் அவசியப்படுகிறது. ரஷ்ய தொழிலாள வர்க்கம் இந்த பேரிடருக்கு இட்டுச் சென்றுள்ள முதலாளித்துவ மீட்சியின் குற்றகரமான இந்த ஒட்டுமொத்த முயற்சிகளையும் நிராகரித்து, அதன் மாபெரும் புரட்சிகரமான லெனினிச-ட்ரொட்ஸ்கிச மரபுகளுடன் அதன் அரசியல், சமூக மற்றும் புத்திஜீவிதத் தொடர்பை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும்.

இந்த சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டம், அனைத்து ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும் பொருந்தும்.

உக்ரேன் போரானது விரைவில் தீர்க்கப்பட்டு 'இயல்பு நிலைக்கு' திரும்பும் ஓர் அத்தியாயம் அல்ல. இது ஓர் உலகளாவிய நெருக்கடியின் வன்முறை வெடிப்பின் தொடக்கமாகும், இதை இரண்டு வழிகளில் ஒன்றின் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும். இந்த புவியின் தற்கொலைக்கு நிகரான ஒன்றுக்கு “தீர்வு' என்ற வார்த்தை பகுத்தறிவார்ந்தரீதியில் பொருந்தாது என்றாலும், முதலாளித்துவத் தீர்வு அணுஆயுதப் போருக்கு இட்டுச் செல்கிறது. ஆகவே, மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் நிலைப்பாட்டில் இருந்து, ஒரே நம்பகமான விடையிறுப்பு, உலக சோசலிச புரட்சி மட்டுமே ஆகும்.

தவிர்க்கவியலாமல் இந்த கேள்வி எழுகிறது: இரண்டாவது தீர்வு சாத்தியமா?

நவீன உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைப் புரிந்துகொள்வதில் இதற்கான பதில் கிடைக்கும். உலகப் போரைத் தோற்றுவித்த அதே சமூக பொருளாதார முரண்பாடுகள் உலக சோசலிச புரட்சிக்கான தூண்டுதலையும் வழங்கின என்ற தலைச்சிறந்த நுண்ணறிவை, லெனின் 1914 மற்றும் 1916 க்கு இடையே அபிவிருத்தி செய்தார். இந்த நுண்ணறிவு 1917 இல் ரஷ்ய புரட்சியின் வெடிப்பில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

தற்போதைய இந்த நெருக்கடியில், ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் கூடுதலாக அபிவிருத்தி செய்யப்பட்ட லெனினின் கருத்துரு, உலகம் முழுவதிலும் வர்க்கப் போராட்டம் வேகமாக தீவிரமடைவதில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவைத் தனிமைப்படுத்த அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் எடுத்துள்ள பொறுப்பற்ற நடவடிக்கைகள், ஒவ்வொரு முதலாளித்துவ ஆட்சியையும் பாதிக்கும் வகையில் ஏற்கனவே பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை மிகவும் முன்னேறிய நிலைக்கு மிகவும் மோசமாக்கியுள்ளன. வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் உலகெங்கிலும் பரவி வருகின்றன. உலக மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதற்காக குற்றகரமான பித்துப்பிடித்த ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகளின் நலன்களுக்காக தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் வறுமை மற்றும் பட்டினியை ஏற்க மாட்டார்கள்.

ட்ரொட்ஸ்கி விளக்கியது போல, நான்காம் அகிலத்தின் மூலோபாயம், போர் வரைபடத்தை அல்ல மாறாக உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டது.

2022 மே தின நிகழ்வு, ஏகாதிபத்தியப் போருக்கும் அதன் மூல காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான ஓர் உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

இந்த வரலாற்று இயக்கத்தை அபிவிருத்தி செய்து வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்த மூலோபாயமும் வேலைத்திட்டமும் மே 1, ஞாயிற்றுக்கிழமை நடத்தவிருக்கும் இணையவழி பேரணியின் கருப்பொருளாக இருக்கும்.

இந்த சர்வதேச மே தின இணையவழி பேரணிக்கு பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு wsws.org/mayday என்ற பக்கத்தைப் பார்வையிடவும்.

Loading